குடும்பப் பழமொழிகள்/வாழ்க்கை

வாழ்க்கை

இளந் தளிர்களும் உதிர்ந்த சருகுகளும் எங்குமே காணப் பெறுகின்றன. -இந்தியா

சில சமயம் மூழ்குதல், சில சமயம் மேலெழுதல்: இது தான் வாழ்க்கை. -( ,, )

வாழ்க்கை காற்றின் நடுவிலுள்ள ஒரு தீபம். -ஜப்பான்

வாழ்க்கை என்பது அன்பும் மனைவியும். -( ,, )

உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம். -சீனா

உன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உன் சரித்திரத்தில் ஓர் ஏடாகும். -அரேபியா

சுவர்க்கத்திற்குச் செல்வோரின் பயிற்சி நிலையமே வாழ்க்கை. -( ,, )

வாழ்க்கை இரு பகுதிகளுள்ளது: ஒன்று கழிந்தகாலம் என்ற கனவு, மற்றது வருங்காலம் என்ற விருப்பம். -( ,, )

நீ காலையைக் கண்டிருக்கிறாய், இன்னும் மாலையைக் காண வில்லை . -யூதர்

வாழ்க்கை மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட கடன்தான மரணம் என்னும் கடன்காரன் அதைப் பெற்றுக் கொள்ள ஒருநாள் வருவான். -( ,, )

வாழ்க்கை என்பது இடைவிடாத குடிவெறி-மகிழ்ச்சி மறைந்த பின்பும், தலைவலி இருந்துகொண்டேயிருக்கும். -பாரசீகம்

மூச்சு வருவதும் போவதும் தொட்டிலின் ஆட்டம்; முடிவான தூக்கம் வருமுன் எச்சரிக்கையாயிரு.

-( ,, )

வாழ்க்கை ஒரு வெங்காயம், அதை உரிக்கும்பொழுது கண்ணீர் வரும். - ஃபிரான்ஸ்

வாழ்க்கை என்னவென்று நாம் தெரிந்து கொள்ளுமுன், பாதி வாழ்க்கை கழிந்து விடுகின்றது. -( ,, )

வாழ்க்கையின் முற்பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதில் கழிகின்றது; இரண்டாம் பகுதி முதற் பகுதிக்காக வருந்துவதில் கழிகின்றது. -ஃபிரான்ஸ்

நாம் வருகிறோம், அழுகிறோம், இது தான் வாழ்க்கை ; நாம் அழுகிறோம், போகிறோம், இது தான் மரணம். -( ,, )

நேற்று, இன்று, நாளை ஆகிய மூன்று நாட்களே மனிதனின் நாட்கள். -( ,, )

மரணத்தைப் பற்றிச் சிந்திப்பவன் வாழத் தொடங்குகிறான் .

-ஜெர்மனி

பன்னிரண்டு வயதில் குழந்தைப் பருவத்தைப் புதைக்கிறோம்; பதினெட்டில் வாலிபப் பருவத்தையும், இருபதில் முதற் காதலையும், முப்பதில் மனிதரிடம் கொண்ட நம்பிக்கையையும், அறுபதிலிருந்து சிறிது சிறிதாக ஐம்புலன்களையும் புதைத்து விடுகிறோம். -( ,, )

ஒவ்வொரு மணியும் (நேரமும்) நம்மைக் காயப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது, கடைசி மணி அடித்தவுடன் ஆவி பிரிகின்றது. -( ,, )

வாழ்க்கை நமக்கே அளிக்கபெற்றதன்று, இரவலாக வந்தது. -ஜெர்மனி

இறந்து போனவனின் 'உயில்' அவன் வாழ்க்கையின் கண்ணாடி. -போலந்து ['உயில்' என்பது மரண சாசனம்.]

இருபது வருடம் வளர்ச்சி, இருபது வருடம் மலர்ச்சி, இருபது வருடம் ஒரே நிலை, இருபது வருடம் வாடுதல்.

-பெல்ஜியம்

நாம் அழுதுகொண்டே பிறக்கிறோம், குறை சொல்லிக் கொண்டே வாழ்கிறோம், ஏமாற்ற மடைந்து இறக்கிறோம். - இங்கிலாந்து

நான் பிறக்கும்பொழுதே அழுதேன் ; ஏன் அழுதேன் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். -( ,, )

வாழ்வும் துயரமும் ஒன்றாகத் தோன்றியவை. -( ,, )

வாழ்க்கை வாழ்வதிவதில்லை, நம் விருப்பத்திலிருக்கிறது.

- இங்கிலாந்து

இறக்கும் வரை நாம் வாழத்தான் செய்வோம்.

-( ,, )

பிறப்பில் அழுகிறோம், இறப்பில் ஏன் என்பதைக் காண்கிறோம்.

-பல்கேரியா

வாழ்க்கை வேண்டுமானால், நாட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும். -( ,, )

பிறக்கும் பொழுது அழுதுகொண்டு வந்தோம், போகும் பொழுதாவது சிரித்துக்கொண்டு செல்லும்படி வாழ வேண்டும். -எஸ்டோனியா

வாழ்க்கை ஒரு போராட்டம். -( ,, )

வாழ்க்கை என்பது அடித்தல், அல்லது அடிபடுதல்.

- ரஷ்யா

மரணத்திற்கு அஞ்சவேண்டாம், வாழ்க்கைக்கு அஞ்சு.

-( ,, )

மனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையிலுள்ள முட்டை போன்றது.

- ருமேனியா

மனிதர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் இறக்கும் பொழுது விழிப்படைகிறார்கள். - குர்ஆன்

பூமியில் மனிதனின் வாழ்க்கை ஒரு போராட்டம்.

-ப.ஏற்பாடு

நீண்ட வாழ்வு நெடுந் துயரங்களுள்ளது. -இங்கிலாந்து

எவ்வளவு காலம் நாம் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை, எவ்வளவு நேர்மையாக வாழ்ந்தோம் என்பதே முக்கியம். -( ,, )

வாழ்க்கை ஒரு தறி, அதில் மாயை (என்ற துணி) நெய்யப்படுகின்றது. -( ,, )

சிந்தனை தான் வாழ்க்கை. -காலரிட்ஜ்

வாழ்க்கை, இருமுறை சொன்ன கதையைப்போல், சலிப்பாயுள்ளது. -ஷேக்ஸ்பியர்

வாழ்க்கை (தறியிலுள்ள) ஓர் ஓடம். -ஷேக்ஸ்பியர்

நல்லதும் கெட்டதுமான நூல்களைக் கலந்து நெய்தது தான் வாழ்க்கை. -( ,, )

எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை........

-வோர்ட்ஸ்வொர்த்

நாம் வாழ்கிறோம், மடிகிறோம்: இரண்டில் எது நல்லது என்று எனக்குத் தெரிந்ததைவிட உங்களுக்கும் தெரியாது. -பைரன்

மனிதன், காற்றை (மட்டும்) உட்கொண்டு வாழ்ந்திருக்க முடியாது. -ஃபிரான்ஸ்

வாழ்க்கை ஒரு கோட்டை, அதைப்பற்றி நம் அனைவருக்கும் ஒன்றும் தெரியாது. -( ,, )

சிறந்த வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், பழக்கம் அதை இன்பமாக்கும். -கிரீஸ்

வாழ்க்கையில் திருப்தியை விட அதிருப்தியே அதிகம். -( ,, )

வாழ்க்கை அபாயகரமான கடல் யாத்திரை. -( ,, )

வாழ்க்கை ஒரு மேடை, உங்கள் பாகத்தை , நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். - கிரீஸ்

சந்தோஷமாயிருப்பவர்களுக்கு வாழ்க்கை சுருக்கம், துக்கமாயிருப்பவர்களுக்கு வாழ்க்கை நீண்டது.

-( ,, )

இன்று வாழுங்கள், பழமையை மறவுங்கள். -( ,, )

வாழ்க்கை தீமையில்லை, தீமையாக வாழ்வதிலேயே தீமை உள்ளது. -( ,, )

நல்லதோ, கெட்டதோ நாம் அனைவரும் வாழத்தான் வேண்டும். -இதாலி

நன்றாக வாழ்வதற்குச் சொற்ப வாழ்வே போதுமானது.

-லத்தீன்

நீ வாழ்ந்திருக்கும் வரை, எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டே யிரு. -( ,, )

வாழ்க்கை பயன்படுத்தப் பெறுவதற்காகவே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

-லத்தீன்

நாளையே மரிக்க வேண்டியவனைப் போல வாழ்ந்து கொண்டிரு. -( ,, )

நாம் வாழத் தொடங்கிக்கொண்டே யிருக்கிறோம், ஆனால் வாழ்வதில்லை. -( ,, )

நாம் வாழ்க்கையைச் சிறு துண்டுகளாக்கி வீணாக்குகிறோம்.

-( ,, )

செத்துக் கிடக்கும் சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.

-ரஷ்யா

மரணம் வரும் வரையில் எல்லாம் வாழ்க்கைதான்.

- ஸ்பெயின்

தலைசிறந்த மரணத்தைவிட, மட்டமான வாழ்க்கையும் மேலானது. -யூதர்