மூன்றாம் பகுதி


1. திருமணம்


வேடப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு

வில்லியனூர் மாவரசு, மலர்க்குழல், நாவரசு, நகைமுத்து
ஆகியோர் மணவழகன் வீட்டுக்கு விருந்தினராய் வந்தபோது
மணவழகன் மகனான வேடப்பனின் உள்ளங் கவர்ந்து
சென்றாளன்றோ நகைமுத்து?-இங்கு...

ப·றொடை வெண்பா


புதுவை மணவழகன் பொன்னின் பரிதி
எதிரேறு முன்னர் இனிய உணவருந்திப்

பட்டுக் கரைவேட்டி கட்டி,நீளச் சட்டையிட்டுச்
சிட்டைமுண்டு மேல்துவளச் சென்று கடைச்சாவி

ஓர்கையால் தூக்கி ஒருகை குடையூன்றி
ஆரங்கே என்றழைத்தான் தங்கம் அருகில்வந்தாள்.

'ஆளும் கணக்கருமோ அங்குவந்து காத்திருப்பார்
வேளையடு சென்று கடைதிறக்க வேண்டுமன்றோ?

பாடல் உரைகேட்கப் பச்சைப் புலவரிடம்
வேடப்பன் சென்றுள்ளான் வந்தவுடன், வில்லியனூர்

சின்னா னிடம்அனுப்பித் தீராத பற்றான
ஐந்நூறு ரூபாயை அட்டியின்றிப் பெற்றுவரச்

சொல்' என்று சொல்லிநின்றான் தூய மணவழகன்.
'நல்லதத்தான்' என்று நவின்றாள் எழில் தங்கம்!

காலிற் செருப்பணிந்து கைக்குடையை மேல்விரித்து
மேலும் ஒருதடவை மெல்லிமுகம் தான்நோக்கிச்

சென்றான் மணவழகன். செல்லும் அழகருந்தி
நின்றாள், திரும்பினாள் நெஞ்சம் உருகித்தங்கம்!

கன்னலைக் கூவிக் கடிதழைத்தாள்! சின்னவனாம்
பொன்னப்பன் மேல்முகத்தைப் போட்டணைத்தாள்

........................... அன்னவர்க்குப்
பாங்காய் உடையுடுத்திப் பள்ளிக் கனுப்பிவைத்தாள்.
தாங்கா விருப்பால் தலைப்பிள்ளை வேடப்பன்

இன்னும் வரவிலையே என்றே எதிர்பார்த்தாள்.
பொன்மலைபோல் வந்திட்டான் பூரிக்கின் றாள் தங்கம்!

'பச்சைப் புலவர் பகர்ந்தவை என்'என்று
தச்சுக் கலைப்பொருளாம் தங்கம் வினவிடவே,

'நல்லபுற நானூற்றில் நான்கும், திருக்குறளில்
'கல்வி' ஒருபத்தும் கடுந்தோல் விலக்கிச்

சுளைசுளையாய், அம்மா சுவைசுவையாய் உண்டேன்.
இளையேன்நான் செந்தமிழின் இன்பத்தை என்னென்பேன்?

என்றுரைத்தான் வேடப்பன். 'என்னப்பா வேடப்பா
உன்அப்பா சொல்லியதை உற்றுக்கேள்' என்றாள்தாய்:

'சின்னானை வில்லியனூர் சென்றுநே ரிற்கண்டே
ஐந்நூறு ரூபாயை அட்டியின்றி வாங்கிவா'

என்றுபுகன் றார்தந்தை இப்போதே நீ செல்வாய்'
என்றுதன் பிள்ளைக்கு இயம்பினாள் தங்கம்.

அகமும் முகமும் அலர்ந்தவனாய், "அம்மா
மிகவும் மகிழ்ச்சி" என்று வேடப்பன் சென்றான்.

அமைய அவர்கட்கே ஆனகறி எண்ணிச்
சமையலுக்குத் தங்கம்சென் றாள்.

2. அவள் அண்டையில் அவன்

அறுசீர் விருத்தம்

தன்கடை மீத மர்ந்து
சரக்குகள் நிறுத்தி ருந்த
சின்னானை வணங்கி, என்ன
செய்திஎன் றினிது கேட்டுப்
பின்; அவன் 'அமர்க' என்னப்
பேசாமல் ஒருபால் குந்திப்
பன்மக்கள் அகன்ற பின்பு
வேடப்பன் பணத்தைக் கேட்டான்.

'இளகிப்போ யிற்று நீவிர்
ஈந்திட்ட நல்ல வெல்லம்;
புளிநல்ல தாய்இ ருந்தால்
பொதிஐந்து வேண்டும் தம்பி;
மிளகென்ன விலை கொடுப்பீர்?
வெந்தயம் இருப்பில் உண்டோ?
களிப்பாக்கு விலைஎவ் வாறு?
கழறுக' என்றான் சின்னான்.

'இளகிய வெல்லம் மாற்றி
நல்லதாய் ஈவோம் இன்றே;
புளியோகை யிருப்பி லில்லை;
பொதிக்கொரு நூறு ரூபாய்
மிளகுக்கு விலைஏ றிற்று;
வெந்தயம் வரவே யில்லை;
களிப்பாக்கு நிறம்ப ழுப்புக்
கணிசமாய் இருப்பி லுண்டு.

'சரக்குவந் தெடுத்துப் போவீர்
தவணைக்குத் தருகின் றோமே!
இருக்கின்ற பற்றை மட்டும்
இன்றைக்குத் தீர்த்தால் போதும்;
வரத்திய சரக்குக் காக
வாணிகர் வந்து குந்தி
விரிக்கின்றார் கணக்கை' என்று
வேடப்பன் இனிது சொன்னான்.

ஐந்நூறு ரூபாய் எண்ணி
அளித்தனன் சின்னான்; யாவும்
இன்னொரு முறையும் எண்ணி
இடுப்பினில் வாரிக் கட்டிச்
சின்னானை வணங்கி, 'அண்ணா
சென்றுநான் வருவே' னென்று
முன்னுற நடந்தான் அந்த
மொய்குழல் வீட்டை நோக்கி.

மாவர சான தந்தை,
மலர்க்குழல் என்னும் அன்னை,
நாவரச சான தம்பி,
உடன்வர நகைமுத் தென்னும்
பாவையும் விருந்தாய் வந்தாள்;
என்னுளந் தனிற்ப டிந்தாள்;
ஓவியம் வல்லாள்; என்றன்
உருவையும் எழுதி னாளே!

என்னையே தனியி ருந்து
நோக்குவாள்; யான்நோக் குங்கால்
தன்னுளம் எனக்கீ வாள்போல்
தாமரை முகம்க விழ்ந்து
புன்னகை புரிவாள்; யானோர்
புறஞ்சென்றாள் அகந்து டிப்பாள்;
பின்னிய இரண்டுள்ளத்தின்
பெற்றியும் அறிந்தார் பெற்றோர்.

வீட்டைவிட் டகலு தற்கு
மெல்லியோ உள்ளம் நைந்தாள்!
பூட்டிய வண்டி தன்னில்
பலர்ஏறப் புறத்தில் குந்தி
வாட்டிய பசிநோ யாளி
வட்டித்த சோற்றி லேகண்
நாட்டுதல் போல்என் மேல்கண்
நாட்டினாள் இமைத்த லின்றி!

தலைக்குழல் மேற்செவ் வந்தி!
தாமரை, முகமும் வாயும்!
மலைக்கின்ற மூக்கெள் ளின்பூ!
வாய்த்தசெங் காந்தள் அங்கை!
குலுக்கென இடைகு லுங்கச்
சிரித்தென்னைக் கொல்லு முல்லை!
மலர்க்காட்டை ஏற்றிச் சென்ற
வண்டியை மறந்தே னில்லை!

என்நிலை அறிய வில்லை
என்பெற்றோர்; மங்கை நல்லாள்
தன்னிலை அறிய வில்லை
தனைப்பெற்றோர்! ஏனோ பெற்றார்
முன்நிலை வேறு நாங்கள்
முழுநீளக் குழந்தை அந்நாள்;
நன்னிலை காண வேண்டும்
நான்அவள், மணவ றைக்குள்!

வேடப்பன் நகைமுத் தாளின்
நினைவொடு விரைந்து சென்றான்.
வீடப்பு றத்தே தோன்ற
வீட்டுக்குப் பின்பு றத்தில்
மாடப்பு றாவைக் கண்டான்
மாமர நீழ லின்கீழ்!
தேடக்கி டைத்த தேஎன்
செல்வமென் றருகிற் சென்றான்.

பழந்தமிழ்ச் சுவடித் தேனைப்
பருகுவான் எதிரிற் கண்டாள்;
இழந்ததன் பெருஞ்செல் வத்தை
'இறந்தேன் நான் பிறந்தேன்' என்றாள்
'தழைத்தமா மரநி ழற்கீழ்
எனக்கென்றே தனித்தி ருந்தாய்
விழைந்தஉன் பெற்றோர் மற்றோர்
வீட்டினில் நலமோ' என்றான்.

'தந்தையார் புதுவை சென்றார்;
தாயாரோ அண்டை வீட்டிற்
குந்தியே கதைவ ளர்ப்பார்;
குப்பத்துப் பெருமாள் தாத்தா
வந்தனர் அவர்தாம் வீட்டு
வாயிலில் தூங்கு கின்றார்;
செந்தமிழ்ப் பள்ளி சென்றார்
சிறியவர்! ஆத லாலே;

கருமணற் கடலோ ரத்தில்
பிறர்வரக் கண்ட நண்டு
விரைந்தோடு வதுபோல் ஓட
வேண்டிய தில்லை, சும்மா
இரும்;மணம், காற்று, நீழல்
இவற்றிடை ஒன்று கேட்பேன்;
திருமணம் எந்நாள்? நாம்,மேல்
செயத்தக்க தென்ன?' என்றாள்

'நகைமுத்தை விரும்பு கின்றேன்
நாளைக்கே மணக்க வேண்டும்
வகைசெய்க அப்பா என்று
வாய்விட்டு நானா சொல்வேன்?
நிகரற்றாய் உன்பெற் றோர்பால்
நீசொன்னா லென்ன?' என்றான்;
'மகளுக்கு நாண மில்லை
என்பார்கள்; மாட்டேன்' என்றாள்.

இல்லத்துள் தாய்பு குந்தாள்;
'எங்குள்ளாய் நகைமுத்' தென்றே
செல்வியை அழைத்தாள்; மங்கை
திடுக்கிட்டு வீடு சென்றாள்.
வில்லினின் றம்பு போல
வேடப்பன் கொல்லை நீங்கி
நல்லபிள் ளைபோல் வீட்டு
வாயிலுள் நடக்கலானான்.

மலர்க்குழல் கண்டாள் 'ஓ!ஓ!
வேடப்பா வாவா' என்றாள்.
'நலந்தானே அப்பா அம்மா?
நலந்தானே தம்பி தங்கை?
அலம்புக கைகால் வந்தே
அமரப்பா சாப்பி டப்பா
இலைபோட்டா யிற்று வாவா
வேடப்பா' எனப்ப கர்ந்தாள்.

'தண்டலுக் காக வந்தேன்;
அப்படி யேஇங் கும்மைக்
கண்டுபோ கத்தான் வந்தேன்;
கடைக்குநான் போக வேண்டும்
உண்டுபோ என்கின் றீர்கள்
உண்கின்றேன்' எனவே டப்பன்
உண்டனன்; உண்ணக் கண்ட
நகைமுத்தோ உவப்பை உண்டாள்.

'குப்பத்துப் பெருமாள் தாத்தா
குறட்டைவிட் டுறங்கி னாரே;
எப்படிச் சென்றார்? நீயிங்
கிருந்தாயே நகைமுத் தாளே!
அப்படி அவர்சென் றாலும்
நீயன்றோ அழைக்க வேண்டும்
தப்புநீ செய்தாய்' என்று
தாய்மலர்க் குழலி சொன்னாள்.

இவ்வாறு சொல்லும் போதே
கொல்லையி லிருந்த தாத்தா
'எவ்விடம் சென்று விட்டேன்
இங்குத்தான் இருக்கின் றேனே;
செவ்வாழை தனில்இ ரண்டு
சிற்றணில் நெருங்கக் கண்டேன்
அவ்விரண் டகன்ற பின்னர்
வந்தேன்நான்' என்று வந்தார்.

உணவினை முடித்த பின்னர்
'ஊருக்குச் செல்ல வேண்டும்
மணிஒன்றும் ஆயிற்'றென்று
மலர்க்குழ லிடத்திற் சொன்னான்.
'துணைக்குநான் வருவேன் தம்பி;
தூங்குவாய் சிறிது நேரம்
உணவுண்ட இளைப்புத் தீரும்
உணர்'என்றார் பெருமாள் தாத்தா.

'இளைப்பாறிச் செல்க தம்பி'
எனமலர்க் குழலும் சொன்னாள்.
ஒளிமுத்து நகையோ, ஓடி
உயர்ந்தஓர் பட்டு மெத்தை
விளங்குறு மேல் விரிப்பு,
வெள்ளுறைத் தலைய ணைகள்
மளமள வென்று வாரி
வந்தொரு புறத்தில் இட்டாள்.

படுக்கையைத் திருத்தம் செய்து
வேடப்பன் படுத்தி ருந்தான்;
இடைஇடை நகைமுத் தாளும்
இளநகை காட்டிச் செல்வாள்;
சுடுமுகத் தாத்தா வந்து
'தூங்கப்பா' என்று சொல்வார்;
கடைவிழி திறந்த பாங்கில்
கண்மூடிக் கிடந்தான் பிள்ளை.

3. தந்தையார் இருவருக்கும் சண்டை

எண்சீர் விருத்தம்

மணவழகன், கடையினிலே வணிக ரோடு
வரவிருக்கும் சரக்குநிலை ஆய்ந்து பார்த்துக்
கணக்கெடுத்துக் கொண்டிருந்தான். அந்நே ரத்தில்
கருப்பண்ணன் எனும்ஒருவன் குறுக்கில் வந்து
'மணவழக ரே,ஆயிரத்தைந் நூறு
மாவரசர்க் கேநீவிர் தருதல் வேண்டும்
பணமுழுதும் வாங்கிவரச் சொன்னார்' என்றான்;
பதைத்திட்டான் மணவழகன் மானம் எண்ணி!

'சீட்டேதும் தந்தாரோ? உன்னி டத்தில்
செலுத்துவது சரியில்லை அறியேன் உன்னை;
கூட்டத்தின் நடுவினிலே குறுக்கிட் டாயே
கூறுகநீ மாவரச ரிடத்தில்' என்றான்;
'கேட்கின்றோம் கொடுத்தபணம் எரிச்சல் என்ன?
கெட்டநினைப் புடையவர்நீர்' என்று கூறி
நீட்டினான் தன்நடையைக் கருப்பண் ணன்தான்
நீருகுத்தான் மணவழகன் இருகண் ணாலும்.

வந்திட்டான் மாவரசன் எதிரில் நின்று
'வைகீழே என்பணத்தை' என்று சொன்னான்;
நொந்திட்டான் மணவழகன்' நொடியில் எண்ணி
நூற்றுக்கு முக்காலாம் வட்டி போட்டுத்
தந்திட்டான்; மாவரசன் பெற்றுக் கொண்டான்;
'தகாதவரின் நட்பாலே மானம் போகும்'
இந்தமொழி சொன்னமண வழகன் தன்னை
ஏசிமா வரசன்தான், ஏக லானான்.

'மாவரசன் தன்னைநான் பணமா கேட்டேன்
வைத்துவைப்பாய் என்றுரைத்தான் வாங்கி வந்தேன்;
யாவரொடும் பேசிநான் இருக்கும் போதில்
எவனோவந் தெனைக்கேட்டான் பணங் கொடென்று
நோவஉரைத் திட்டானே தீயன் என்னை
நூறாயிரம் கொடுக்கல் வாங்கல் உள்ளேன்
நாவால்ஓர் வசைகேட்ட தில்லை என்று
நனிவருந்தி மணவழகன் அழுதி ருந்தான்.

மணவழகன் வழக்கறிஞ னிடத்திற் சென்றான்
மானக்கே டிதற்கென்ன செய்வ தென்று
தணிவற்றுப் பதறினான்; பொய்வ ழக்குத்
தான்தொடங்க வழக்கறிஞன் சாற்ற லானான்.
இணங்கமறுத் தவனாகி நண்பர் பல்லோர்
இடமெல்லாம் இதைச்சொல்லி வருந்த லானான்;
துணைவியிடம் சொல்வதற்கு வீடு வந்தான்;
தொடர்பாக நடந்தவற்றைச் சொல்லித் தீர்த்தான்.

4. எதிர்பாராத இடைஞ்சல்

அகவல்

"நண்புளார் தீமை நாடினும் அதனைப்
பண்புளார் பொறுப்பர்; பகைமை கொள்ளார்
தாவுறும் உங்கள் தகைமையை அந்த
மாவர சாலோ மாற்ற முடியும்?
தீதுசெய் தார்க்கும் நன்மை செய்வர்
மூது ணர்ந்தவர் முனிவு செய்யார்;
அத்தான் மறப்பீர்; அகம்நோ காதீர்"
என்று தேறுதல் இயம்பினாள் தங்கம்.

மகன்வே டப்பன் வந்து சேர்ந்தான்;
தந்தை யாரிடம் சாற்று கின்றான்;
"சின்னான் தந்தான் ஐந்நூறு ரூபாய்
மணிபத் தாகிற்று மாவர சில்லம்
அருகில் இருந்ததால் அங்குச் சென்றேன்;
மலர்க்கு ழலம்மையார் வற்புறுத் தியதால்
உண்டேன்; சற்றே உறங்கினேன்; என்னுடன்
பெருமாள் தாத்தா வருவா ரானார்."

மகன்சொல் கேட்ட மணவழ கன்தான்
முகங்கன லாக "முட்டாள்! முட்டாள்!
செல்ல லாமோ தீயன் வீடு?
மதியார் வீடு மிதியார் நல்லார்!
பொல்லாப் பிள்ளை நில்லா தேஎதிர்
போபோ!" என்று புகல லானான்.

தங்கம் மகனைத் தன்கையால் அணைத்து
"மாவர சின்று மதிப்பிலா வகையில்
நடந்ததால் அப்பா நவின்றார் அப்படி;
கடைக்குப் போயிரு கண்ணே" என்றாள்;
அடக்க முடியாத் துன்பம்
படைத்த வேடப்பன் சென்றான் பணிந்தே.

5. பகை நண்பாயிற்று


ப·றொடை வெண்பா


தாழ்வாரந் தன்னிலொரு சாய்வுநாற் காலியிலே
வாழ்வில் ஒருமாசு வந்ததென எண்ணி


மணவழகன் சாய்ந்திருந்தான். மாற்றுயர்ந்த தங்கம்
துணைவனுக்கோர் ஆறுதலும் சொல்லி அருகிருந்தாள்.

தங்கம்என்று கூவித் தடியூன்றி அப்பெருமாள்
அங்குவர லானார்; அகமகிழ்ந்தார் அவ்விருவர்.

சாய்ந்திருக்க நாற்காலி தந்தார்; பருகப்பால்
ஈந்து, நலங்கேட்டே எதிரில் அமர்ந்தார்கள்.

"வேடப்ப னோடுதான் வில்லிய னூரினின்று
வாடகை வண்டியிலே வந்தேன்; கடைத்தெருவில்


வெண்காயம் என்ன விலையென்று கேட்டுவந்தேன்
சுண்டைக்காய் வாங்கிவரச் சொன்னாளென் பெண்டாட்டி.

வில்லிய னூரில்ஓர் வேடிக்கை கண்டேன்உம்
செல்வனைப் பற்றிய செய்திஅது! சொல்லுகிறேன்:

'பத்து மணிஇருக்கும் பாவை நகைமுத்தாள்
புத்தகமும் கையுமாய் வீட்டுப் புறத்தினிலே

உள்ளதொரு மாமரத்தின் நீழலிலே உட்கார்ந்து
தெள்ளு தமிழில் செலுத்தியிருந் தாள்கருத்தை;

வேடப்பன் வந்தான் விளைந்தவற்றை என்சொல்வேன்!
'தேடக் கிடைத்தஎன் செல்வமே' என்றான்.

மறைந்துநான் கேட்டிருந்தேன் வஞ்சியின் பேச்சை!
'இறந்தேன் நான்இன்று பிறந்தேன்' எனப் புகன்றாள்

அன்பின் பெருக்கத்தை அன்னவர்பால் நான்கண்டேன்;
'என்று மணம் நடக்கும்?' என்றுகேட் டாள்பாவை.

'பெற்றோர்பால் நீநமது பேரன்பைக் கூறிமணம்
இற்றைக்கே ஈடேற ஏற்பாடு செய்'என் றாள்.

'நீதான்சொல்' என்றுரைத்தான் வேடப்பன்! நேரிழையாள்,
'ஓதுவேன். நாணமில்லா ஒண்டொடிஎன் பார்'என்றாள்.

இவ்வாறு பேசி இருந்தார்கள் அன்னவற்றை
அவ்வாறே சொல்ல அறியேன்; அதேநேரம்

வீட்டினின்று தாயழைத்தாள் மெல்லி மறைந்தாளே.
ஓட்ட மெடுத்தானே வேடப்பன் உட்சென்றான்.

'வா'என் றழைத்தாள் மலர்க்குழலி சோறிட்டாள்,
பாவையவள் வேடப்பன் பார்க்க உலவியதும்,

மெத்தையைத் தூக்கிவந்து தாழ விரித்ததுவும்,
முத்துச் சிரிப்பை முகத்தில் பரப்பியதும்

வேடப்பன் தூங்குவது போலே விழிமூடி
ஆடுமயில் வந்தால் அழகைப் பருகுவதும்,

எவ்வாறு ரைப்பேன்காண் யானோர் கவிஞனா?
இவ்வேளை இந்தநொடி ஏற்பாடு செய்திடுக!

இன்றே செயத்தக்க இன்பமணத் தைநாளைக்
கென்றால், துடிக்கும் இளமைநிலை என்னவாகும்?"

என்றார் பெருமாள். இவையனைத்தும் கேட்டிருந்த
குன்றொத்த தோளானும் தங்கக் கொடியும்

மயிர்கூச் செறிய மகிழ்ச்சிக் கடலில்
உயிர்தோயத் தங்கள் உடலை மறந்தே

கலகலென வேசிரித்தும் கைகொட்டி ஆர்த்தும்
உலவியும் ஓடியும் ஊமை எனஇருந்தும்

பேசத் தலைப்பட்டார் "எங்கள் பெரியபிள்ளை
யின்காதல் நெஞ்சினிலே வாழுகின்ற வஞ்சியைஎம்

சொத்தெலாம் தந்தேனும் தோதுசெய மாட்டோமா?
கத்தினான் மாவரசன் கண்டபடி ஏசிவிட்டான்.

என்பிள்ளை தன்மகள்மேல் எண்ணம்வைத்தான் என்னில், அவன்
பொன்னடியை என்தலைமேல் பூண மறுப்பேனா?

என்பிள்ளை உள்ளம், அவன் ஈன்றகிளிப் பிள்ளையுள்ளம்
ஒன்றானால் எங்கள் பகையும் ஒழியாதோ!"

என்றான் மணவழகன், ஏதுரைத்தாள் தங்கம்எனில்,
"இன்றேநீர் வில்லியனூர் ஏகுகதாத் தாதாத்தா!

எங்கள் மகன்கருத்தை எம்மிடம்சொன் னீர்அதுபோல்
திங்கள்முகத் தாள்கருத்தை அன்னவர்பால் செப்பி

மணத்தை விரைவில் மணமகன் வீட்டில்
பணச்செலவு நேர்ந்தாலும் பாங்காய் நடத்த

உறுதிபெற்று வந்தால்எம் உள்ளம் அமையும்.
அறிவுடையீர் உம்மால்தான் ஆகும்இது" என்றாள்.

சிற்றுண வுண்டு சிவப்பேறக் காய்ச்சியபால்
பெற்றே பருகிப் பெரியதொரு வண்டியிலே

ஏறினார் தாத்தா 'இசைவார் அவர்' என்று
கூறிச்சென் றார்மகிழ்ச்சி கொண்டு.

6. மணமகன் வீட்டில் மணம்


அகவல்

"காயா பழமா கழறுக" என்றாள்.
"கனிதான்" என்று கழறினார் தாத்தா.
வண்டிவிட் டிறங்கி வந்தார் உள்ளே
தங்கம் "நடந்ததைச் சாற்றுக" என்றாள்.

"என்மேல் மாவரசுக் கெரிச்சல் இருந்ததா?
மறைந்ததா?" என்றான் மணவழ கன்தான்.
"ஒப்பி னாரா? ஒப்பவில் லையா?
செப்புக" என்று செப்பினாள் தங்கம்.

"இருந்தா ரன்றோ வீட்டார் எவரும்?
கொல்லையில் காதலர் கூடிப் பேசிய
எல்லாம் அவரிடம் இயம்பி னீரா?
மறந்தீரா?" என்றான் மணவழ கன்தான்.

"குறுக்கே பேச்சேன்? பொறுக்க வேண்டும்.
உரைக்க மாட்டேனா? உட்கா ருங்கள்"
என்றார் தாத்தா. இருவரும் அமர்ந்தார்.


"நான் கிளம்பினேன் நாலு மணிக்கே
ஐந்து மணிக்கெல்லாம் அவ்விடம் சேர்ந்தேன்.
மாவர சிருந்தான். மலர்க்குழல் இருந்தாள்.
நகைமுத் திருந்தாள். நடந்ததைச் சொன்னேன்.
"வேறே எவனையும் விரும்பேன்" என்றும்,
"வேடப் பனைத்தான் விரும்பினேன்" என்றும்,
சட்ட வட்டமாய்ச் சாற்றினாள் மங்கையும்.
"திருமண முடிவு செப்புக" என்றேன்.
ஒருபேச் சில்லை, ஒப்புக் கொண்டார்.
"மணமகன் வீட்டில் மணம்நடக் கட்டும்"
என்றேன் 'சரிதான்' என்றார் அவர்களும்.
"கருப்பண்ணன் என்பவன் கடைக்கு வந்து
வெறுப்பாய்ப் பேச வேண்டிய தில்லை.
ஆயினும் அவன்என் அன்புறு நண்பன்
நம்பலாம் அவனை, நம்ப வில்லை;
மணவழ கவனை மதிக்க வில்லை;
அதனால் என்மனம் கொதித்த துண்டு.
மணவழ கன்தன் மகனும், என்றன்
இணையிலா மகளும் இணைந்தார் என்றால்
பெற்றவர்க் கிதிலும் பேரின்ப மேது?
நாளைக் கவர்களை நான்எதிர் பார்ப்பேன்.
மணவழகு, தங்கம், மைந்தன், மக்கள்
அனைவரும் வரும்படி அறிவிக்க வேண்டும்!'
மாவரசு, மலர்க்குழல், வாயால் இப்படி
ஆவலோடு கூறினார். அறிக" என்று
பெருமாள் தாத்தா பேசி முடித்தார்.
பெரும கிழ்ச்சி! பெரும கிழ்ச்சி!

இரவெல்லாம் பயண ஏற்பாடு செய்தனர்.
விடியுமா? இரவின் இருட்டு
விடியுமா? காலை மலர்கஎன் றனரே.

7. மணமக்கள் கருத்துரைகள்


நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா

திண்ணையிலே மாவரசன் சிற்றானைக் குட்டிபோல்
கண்ணை எதிர்அனுப்பிக் காத்துக் கிடக்கின்றான்
வண்ண மலர்க்குழலி வந்திடுவாள் உட்செல்வாள்
பெண்ணாள் நகைமுத்தோ பேசா துலவினளே.

கழுத்து மணிகள் கலகலெனக் கொஞ்ச
இழுக்கும் எருதுகள் எக்களித்துத் தாவப்
பழுப்புநிற வண்டியன்றும் பச்சையன்றும் ஆக
முழுப்பளுவில் வீட்டுக்கு முன்வந்து நின்றனவே!

மணவழகன், தங்கள் மகன், சிறுவன், தாத்தா
தணியா மகிழ்ச்சி தழுவும் முகத்தால்
அணியாய் இறங்கிவர மாவர சங்கே
பணிவாய் வரவேற்கப் பாங்காய்உட் சென்றாரே.

'அம்மா வருக;என்று அன்புமலர்க் குழலும்
கைமலர் தாவக் கனிவாய் வரவேற்றாள்.
செம்மைநகை முத்தும்எதிர் சென்று 'வணக்கம்' என்றாள்.
மெய்மை, மகிழ்ச்சி, அன்பு வீடெல்லாம் ஆர்த்தனவே!

தூய்மைசெய நீரளித்துக் கூடத்தில் சொக்கட்டான்
பாய்விரித்து நல்லாவின் பாலும் பருகவைத்து
வாய்மணக்கும் வெள்ளிலைகாய் வட்டில் தனிலிட்டே
ஓய்வாய் நலம்பேசி உள்ளம் மகிழ்ந் தாரங்கே.

"வேடப்பன் உள்ளம் நகைமுத்தை வேண்டிற்றே
ஆடும் மயிலும் அவன்மேல் உயிர்வைத்தாள்.
நாடு நகரறிய நாளன்றில் இங்கிவரை
நீடூழி வாழ்க" என்றார் நெஞ்சார வேதாத்தா!

ஈன்றார் கருத்தென்ன? இன்பத் திருமணத்தை
மூன்றுநாட் பின்னே முடிக்க நினைக்கின்றேன்.
ஆன்ற பெரியோர்க் கழைப்பனுப்ப வேண்டுமன்றோ
தோன்றியஉம் எண்ணத்தைச் சொல்வீர்"என் றார்தாத்தா.

மகிழ்ச்சியுடன் ஒப்புவதாய் மாவரசன் தானுரைத்தான்.
புகழ்ச்சியுறும் "வேடப்பன் பூவை மணத்தை
இகழ்ச்சியா செய்திடுவேன்?" என்றாள் மனைவி.
நகைப்போடு நன்றென் றுரைத்தான் மணவழகே!

அன்புநகை முத்தின் அருகில் அமர்ந்திருந்த
தன்துணைவி யானஎழில் தங்கத்தை நோக்கியே
'உன்கருத்தைச் சொல்'என் றுரைத்தான் மணவழகன்.
இன்ப நகைமுத்தும் ஏங்கிமுகம் பார்க்கையிலே;

'நானோ மறுப்பேன் நகைமுத்தே? என்மகனைத்
தேனே, உயிரென்றாய்; சேயவனும் அன்புகொண்டான்.
மானே மயிலே மருமகளே என்வீட்டு
வான நிலாவே மகிழ்"வென்றாள் தங்கமுமே!

"இன்ப நகைமுத்தே உன்கருத்தை யானறிவேன்.
என்றாலும் இங்கே இருப்பார் அறிந்திடவே
அன்பால் உரைத்திடுவாய் ஆணழகும் அப்படியே
பன்னுதல் வேண்டு"மென்று தாத்தா பகர்ந்தனரே.

"கட்டழக னைமணக்கக் காத்திருக்கின் றேனேநான்
அட்டியில்லை அட்டியில்லை ஆனால் ஒருதிட்டம்
மட்டமாய்ச் செலவிடுக எங்கள் மணமுடித்துத்
தட்டா மல்ஈக தனியில்லம்" என்றனளே.

மேலும் நகைமுத்து விண்ணப்பம் செய்கின்றாள்
"ஏலுமட்டும் எங்கள் குடித்தனத்தை யாம்பார்ப்போம்
ஏலாமை உண்டானால் என்மாமி யார்உள்ளார்!"
சேல்இரண்டு கண்ணானாள் செப்பினாள் இப்படியே!

"யானுமதை ஒப்புகிறேன்; என்கருத்தும் அன்னதுவே!
நானோ கடையினிலே நன்றிருப்பேன் அப்பா, ஏ
தேனும்ஒரு நூறுரூ பாய்மாதம் ஈந்திடட்டும்.
தேனோடை எம்வாழ்க்கை." என்றுரைத்தான் செம்மலுமே!

"மாமிகொடு மைக்கு வழியில்லை. மைத்துனர்கள்
தாமொன்று சொல்லும் தகவில்லை. தன்துணைவன்
ஏமாற்றி னான்தன் இளையவனை என்று சொல்லும்
தீமையில்லை. தக்கதென்று" செப்பிமகிழ்ந் தார்தாத்தா.

பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லைஎன்பர் நான்தருவேன்,
கண்ணை இமையிரண்டு காப்பதுபோல் என்மருகர்
பண்ணும் குடித்தனத்தை மேலிருந்து பார்த்திடுவேன்.
உண்மை" என்றான் மாவரசன்; பெற்றவளும் ஒப்பினளே!

"நகைமுத்தின் எண்ணத்தை நான்ஒப்பு கின்றேன்.
மிகஓர் 'குடும்ப விளக்கேற்றல்' நன்றே!
தகும்"என்றாள் தங்கம்! மணவழகன் தானும்
மகனுக்கு மாதமொரு நூறுதர ஒப்பினனே!

மூன்றாநாள் நன்கு மணத்தை முடிப்ப தென்றும்
ஏற்றுக்கொண்டார் எல்லோரும். சாப்பா டினிதுண்டார்.
வான்தோய்ந்த வெண்ணிலவில் வண்டி புறப்படுமுன்
தேன்சுரக்கச் "சென்று வருகின்றோம்" என்றனரே.

8. திருமண அழைப்பு

அகவல்

"விடிந்தால் திருமணம்! விண்ணின் நிலவு
வடிந்தஇன் றிரவு மணப்பெண் வருவதால்,
வாழ்த்தி நீங்கள் வரவேற் பதற்கும்,
காலை மலர்ந்ததும் கவின்மண வறையில்
மாலை யிட்ட மணமக் கள்தமை
வாழ்க என்று வாய்மலர்ந் திடவும்,
உடன்யாம் பரிந்திடும் உணவுண் ணுதற்கும்,
வந்தருள் புரிக, வந்தருள் புரிக!"
என்று, தங்கம் மணவழகு
நின்று வீடுதொறும் நவின்றனர் பணிந்தே!

9. முதல்நாள் இரவு

கட்டளைக் கலித்துறை

அன்றிர வொன்ப தடிக்க முரசம் முழங்குமணி
முன்றிலில் வாழை கமுகுதெங் கின்குலை முத்தின்ஈந்து
நன்று சிறக்க நடுப்பகல் போல விளக்கெரியப்
பொன்துகில் பூண்ட தெருமாதர் ஆடவர் போந்தனரே!

விருப்பந் தரத்தக்க வெண்துகில் கட்டி விளக்கிலகும்
தெருப்பந்தல் வாயிலிற் செந்தூக் கிலேமணித் தேர்இரண்டும்

  • இருப்பங் கெனத்தங்கம் செம்மல் இவர்நின் றிருந்தபடி

வரத்தம் கைகூப்பி வருவார் தமைவர வேற்றனரே!

(*இருப்பு அங்கு எனப் பிரிக்க)


மாடப் புறாக்கள் மயில்குயில் மான்நிகர் மங்கையர்கள்
ஆடவர் பிள்ளைகள் எள்ளிட மின்றி அமர்ந்திருந்தார்.
வீடப் படித்தெருப் பந்தலில் அப்படி! மாடியின்மேல்
வேடப்பன் பார்த்துநின் றான்மங்கை யாள்வரும் வேடிக்கையே!

இசைவந் ததுபொம்பொம் என்றே! விழிகூச வந்ததொளி!
மிசைவண் ணமெருகு கண்ணாடிச் சன்னல்கள் மின்விளக்கம்
அசைகின்ற ஊசலின் முன்பின் இருக்கைகள் ஆகியதோர்
விசைவண்டி வந்தது வந்தாள் நகைமுத்து மெல்லியலே!

மாவர சன்பான மக்கள் மலர்க்குழல் மற்றவர்பின்
ஏவலர் பெட்டிகள் பட்டுப் படுக்கைகள் ஏந்திவரப்
பூவி லிருந்து பெடையன்னம் ஒன்று புறப்படல்போல்
பாவை இறங்கினள் வண்டிவிட் டேதெருப் பந்தல்முன்னே!

'வாழி மணப்பெண் நகைமுத்து நல்லபெண்! வாழிஎன்றே
ஆழி முழக்கென யாரு முழக்க, அடியெடுத்தே
யாழின் நரம்பிசை ஏழும் சிலம்பும் சிலம்ப உடன்
தோழி நடத்த நடந்தாள்இல் நோக்கிஅத் தூய்மொழியே!

வானில் துவைத்த முழுநில வேமுகம் வண்கடலின்
மீனில் துவைத்தநீள் மைவிழியாள்அவள் வேடப்பனின்
ஊனில் துவைத்தும் உயிரில் துவைத்தும்தன் வாயில்உண்ணத்
தேனில் துவைத்தநற் செவ்வித ழாள்வீடு சேர்ந்தனளே!

பாலும் பழமும்அப் பாவைக்க ளித்தனர்! பற்பலரும்
மேலும் கமழுநீர் தோளும் கமழ்மாலை வெள்ளிலைகாய்
ஏலும் படிஎய்தி ஏகினர்! வேடப்பன் இங்குமங்கும்
காலும் கடுகத் திரிவான் நகைமுத்துக் கண்படவே!

அம்மா துயின்றன ரோ'என வேடப்பன் அவ்வறைக்குள்
சும்மா வினவித் தலைநீட்ட அங்கொரு தோழி சொன்னாள்:
"எம்மா தரும்துயின் றா"ரென வே! இது பொய்ம்மைஎன்றே
செம்மா துளைஇதழ் சிந்தின ளேவெண் நகைமுத்துமே!

மூடிய கண்களும் மூடாத நெஞ்சுமாய் முன்னறைக்குள்
ஆடிய தோகை அடங்கினள்! அப்படி வேடப்பனும்
பாடிய யாழ்போல் கிடந்தனன் ஓர்புறம்! பால்இரவோ
ஓடிய தே,எதிர் உற்றது கீழ்க்கடல் ஒண்கதிரே!

10. மணவாழ்த்தும் வழியனுப்பும்

அகவல்

எழுந்தது பரிதிக் குழந்தை கடலின்
கெழுநீ லத்தில் செம்பொன் தூவி!
கரிய கிழக்குவான் திரையில், வெளுப்பும்
மஞ்சளும் செம்மணி வண்ணமும் ஒளிசெயும்!
எழும்வளைந்து நெளிந்து விழும்கடல் அலையே.
அழகிய தென்பாங் காடற் கலையே!
புதிய காலையில் புதிய பரிதியின்
எதிரில் அடடா சதிர்க்கச் சேரி!

கிழக்கில் திராவிடற்குக் கிடைத்த கடல்முரசு,
முழக்குவோன் இன்றி முழங்கும் இசையரசு!

திரைகடல் முழக்கெனத் திருமண வீட்டின்
பெருங்கூட் டிசையரங்கு செய்த இசைமழை
தெருத்தொறும் இல்லந் தோறும் தென்றல்
திருத்தேர் ஏறிச் சென்று காதெலாம்
"வருக மணத்துக்" கென்று பெருகிற்று!

மணவீடு நோக்கி வந்தனர். என்னே!
அணிஅணி யாக அணியிழை மங்கைமார்
துணையோடு நன்மலர் முக்கனி சுமந்து!
நகைமுத்தை மலர்பெய்த நன்னீ ராட்டிக்
குறைவற நறும்புகை குழலுக் கூட்டி
மணக்குநெய் தடவி வாரிப்பூப் பின்னி
மணியிழை மாட்டி, எம் கண்ணாட் டிக்கு
ஏலும் சேலை எதுவென எண்ணி
நிலாமுகத் திற்கு நீலச் சேலை
நேர்த்தி ஆக்கி நிலைக்கண் ணாடி
பார்க்கச் சொன்னார்; பார்த்த நகைமுத்தோ
கண்ணாடியில்தனைக் கண்டாள்; தன்மனத்
துள்நாடி வேடனுக் கொப்பு நோக்கினாள்.
காலுக் குச்சிராய், மேலுக்குச் சட்டையடு
சேலுக்கு நிகர்விழித் தெரிவை காணத்
தென்னாட் டுச்சேர சோழபாண் டியரில்
இந்நாள் ஒருவனோ என்ன நின்றான்.

'வருக திருமண மக்கள்!' என்று
திருந்து தமிழப் பெரியார் அழைத்தனர்.
திருமணப் பந்தலின் சிறப்புறு மணவறை,
இருமண மக்களை ஏந்தித் தன்னிடை,
முழுநில வழகொழுகு முகமும், மற்றும்
எழுந்த பரிதிநேர் ஆணழகு முகமும்
இருப்பது காட்டி இறுமாப் புற்றது!
நிறைமணமன் றெலாம் நறுமணம், இன்னிசை
அறிஞர் பெண்டிர், ஆடவர் பெருங்கடல்!
உதிரிப் புதுமலர் எதிருறு மன்றின்
நிறைந்தார் கையில் நிறையத் தந்தனர்.
பெரியவர் ஒருவர், "பெண்ணே நகைமுத்து!
வேடப் பனைநீ விரும்பிய துண்டோ?"
வாழ்வின் துணைஎனச் சூழ்ந்த துண்டோ?"
என்னலும், நகைமுத் தெழுந்து வணங்கி,
"வேடப்பனை நான் விரும்பிய துண்டு;
வாழ்வின் துணைஎன்று சூழ்ந்தேன்" என்றாள்.

"வேடப் பாநீ மின்நகைமுத்தை
மணக்கவோ நினைத்தாய்? வாழ்க்கைத் துணைஎன
அணுக எண்ணமோ அறிவித் திடுவாய்"
என்னலும் வேடன் எழுந்து வணங்கி
"மின்நகை முத்தை விரும்பிய துண்டு;
வாழ்வின் துணையாய்ச் சூழ்ந்தேன்" என்றான்.

மணகமள் நகைமுத்து வாழ்க வாழ்கவே!
மணமகன் வேடப்பன் வாழ்க வாழ்கவே!"
என்றார் அனைவரும் எழில்மலர் வீசியே!

தன்மலர் மாலை பொன்மகட் கிடவும்
பொன்மகள் மாலையை அன்னவற் கிடவும்
ஆன திருமணம் அடைந்த இருவரும்,
வானம் சிலிர்க்கும் வண்டமி ழிசைக்கிடை
மன்றினர் யார்க்கும், அன்னைதந் தையர்க்கும்
நன்றி கூறி வணக்கம் நடத்தி
நிற்றலும், "நீவிர் நீடு வாழிய!
இற்றைநாள் போல எற்றைக்கும் மகிழ்க!
மேலும்உம் வாழ்வே ஆலெனச் செழித்து
அறுகுபோல் வேர்பெற! குறைவில் லாத
மக்கட் பேறு மல்குக" என்று,
மிக்கு யர்ந்தார் மேலும்வாழ்த் தினரே!
அமைந்தார் எவர்க்கும் தமிழின் சீர்போல்
கமழும்நீர் தெளித்துக் கமழ்தார் சூட்டி
வெற்றிலை பாக்கு விரும்பி அளித்தார்.

மற்றும் ஓர்முறை 'வாழிய நன்மணம்'
என்று, வந்தவர் எழுந்த அளவில்,
எழில்மண மக்களும், ஈன்றார் தாமும்
"நன்றி ஐயா! நன்றி அம்மா!
இலைபோட்டுப் பரிமாறி எதிர்பார்த் திருக்கும்
எம்அவா முடிக்க இனிதே வருக!
உண்ண வருக, உண்ண வருக"
என்று பன்முறை இருகை ஏந்தினர்
நன்மண விருந்துக்கு நண்ணினர் அனைவரும்.

மணமகள் மணமகன் மகிழ்வொடு குந்தினர்;
துணையடு துணைவர் இணைந்திணைந்து குந்தினர்;

வரிசையாய்ப் பல்லோர் வட்டித் திருந்தனர்.
விருந்து முடித்து, விரித்த பாயில்
அமர்ந்தார்க்குச் சந்தனம் அளித்துக் கமழ்புனல்
அமையத் தெளித்தே அடைகாய் அளிக்க
மணமக் கள்தமை வாழ்த்தினர் செல்கையில்
எழில்மண மக்கள் ஈன்றோர்
வழிய னுப்பினர் வணக்கம் கூறியே.

11. சோலையிற் காதலர்

எண்சீர் விருத்தம்


நகைமுத்து வேடப்பன் மகிழ்ச்சி யோடு
நாழிகையை வழியனுப்பிக் காத்தி ருந்தார்;
மிகநல்ல மணிப்பொறியும் ஐந்த டிக்க
விசைவண்டி ஓட்டுபவன் வந்து நின்று
"வகைமிக்க அரசினரின் பூங்கா விற்கு
வருகின்றீரோ?" என்று வணங்கிக் கேட்டான்;
தகதகெனத் தனியறைக்கோர் அழகைச் செய்யும்
தையலினாள் வேடப்பன் "ஆம்ஆம்" என்றார்.

விசைவண்டி ஏறினார் இரண்டு பேரும்;
விரைகின்ற காவிரியின் வெள்ளம் போல
இசைஎழுப்பிச் சோலைக்குள் ஓடி நிற்க
இறங்கினார் மணமக்கள் உலவ லானார்;
அசையும்அவள் கொடியிடையை இடது கையால்
அணைத்தபடி வேடப்பன் அழகு செய்யும்
இசைவண்டு பாடுமலர் மரங்கள் புட்கள்
இனங்காட்டிப் பெயர்கூறி நடத்திச் சென்றான்.

வளர்ப்புமயில் நாலைந்து மான்ஏ ழெட்டு
மற்றொருபால் புறாக்கூட்டம் பெருவான் கோழி
வளைகொண்டை நிலந்தோயக் குப்பைத் தீனி
வாய்ப்பறியும் நிறச்சேவல் கூட்டுக் கிள்ளை
விளைக்கின்ற காட்சியின்பம் நுகர்ந்தே ஆங்கோர்
விசிப்பலகை மேலமர்ந்தார்; வெள்ளைக் கல்லால்
ஒளிசிறக்கும் இரண்டுருவம் காணு கின்றார்;
ஒருபெண்ணின் அருள்வேண்டி ஒருவன் நின்றான்.

"இரங்காதோ பெண்ணுளந்தான் இந்நே ரந்தான்
இன்பத்தில் ஒருசிறிதே ஒன்றே முத்தம்
தரவேண்டும் எனக்கெஞ்சி நிற்கக் கூடும்;
தந்திட்டால் கைச்சரக்கா குறைந்து போகும்?
சரியாக ஆறுமணி, மாலைப் போது
தணலேற்றும் தென்றலினை எவன்பொ றுப்பான்?
தெரிந்தனையோ? எனக்கேட்டான் எழில்வே டப்பன்!
தெரிந்ததென்றாள்." வீட்டுக்குச் செல்ல லுற்றார்.

12. இன்பத் துறை


எண்சீர் விருத்தம்

கட்டிலிட்டார் மெத்தை,தலை யணைகள் இட்டார்
கண்கவரும் வெண்துகிலும் விரித்தார் மேலே
பட்டுப்போர் வைமடித்துப் பாங்கில் வைத்தார்
பட்ட இடம் கமழ்கின்ற பன்னீர் வீசித்
தட்டுகின்ற காம்பகற்றி மலர்கள் இட்டுச்
சந்தனம்பன் னீர்,அடைகாய்த் தட்ட மைத்து
மட்டின்றி முக்கனி,பால் பண்ணி யங்கள்
வைத்தெங்கும், விளக்கங்கள் ஏற்றி னார்கள்.

மிகச்சிறப்புச் செய்திட்ட தனிய றைக்கு
வெளிப்புறத்துத் தாழ்வாரம் நிறையக் கூடி
நகைத்தாடும் குழந்தைகளில் ஒருவன் கேட்டான்
'நாங்கள்விளை யாடும்அறை இதுவோ' என்று
"புகவேண்டாம், புதுமணப்பெண் புதுமாப் பிள்ளை
புலவர்தரு திருக்குறளின் பொருளாய் தற்கு
வகைசெய்து வைத்தஇடம், வாழ்வில் இன்பம்
வாய்க்கும்இடம்!" மணமக்கள் வாழ்க நன்றே..

"https://ta.wikisource.org/w/index.php?title=குடும்ப_விளக்கு/3&oldid=505306" இலிருந்து மீள்விக்கப்பட்டது