குணங்குடியார் நான்மணிமாலை
குணங்குடி மஸ்தான் சாகிபு
தொகு- அவர்கள் பேரில்
- மகாவித்துவான் திருத்தணிகை
சரவணப்பெருமாளையர் அவர்கள் பாடிய
குணங்குடியார் நான்மணிமாலை
தொகு- காப்பு
(நேரிசை வெண்பா)
- எண்சீர்க் குணங்குடியான் என்னும் குருமணிமேல்
- உண்சீர்த் தமிழ்நான் மணிமாலை - பண்சீர்கொள்
- கற்பனைசே ர்பொற்பினவல் கைக்குள் பலவகையாங்
- கற்பனைதீர் சிற்பரன்றாள் காப்பு.
நூல்
தொகு- (நேரிசை வெண்பா)
பாடல்:1 (பொன்னாதியாம்)
தொகு- பொன்னாதி யாம்பொய்ப் பொருளினுறு புன்சுகத்தை
- மின்னாமென்(று) எள்ளா விரகிலிகே- னின்னே ?
- குணங்குடியா னஞ்செய்த குறிவாளி நல்க
- குணங்குடியா னஞ்செய் வழுத்து. (1)
- (கட்டளைக் கலித்துறை)
பாடல்:2 (விழுத்துந்)
தொகு- விழுத்துந் தொழும்படை யன்பமைந் தோர்தமை மாநிலருள
- பழுத்தும் குணங்குடியான் கரைகாண் டகுபண் புடைத்தாய்
- முழுத்தும் பவக்கட லைக்கடப் பித்திசை முற்றுறவே
- அழுத்தும் கரைபெற லில்லாத வானந்த மாங்கடலே (2)
- (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பாடல்:3 (கடல்சூழ்)
தொகு- கடல்சூழ் புவியி லுளைத்திருளைக் கருணை யொளியி னாற்களைந்து
- விடல்சூழ் பவரிற் குணங்குடியான் மிக்கோ னெனற்கோர் தடையுளதோ
- மிடல்சூழ் புறத்தின் விழிமறைத்து மேவு மிருளை விரிகதிரா
- லடல்சூழ் பொருள்கள் பலவுறினு மலரி லுயர் வாய்த் தோன்றுறுமே. (3)
- (நேரிசை யாசிரியப்பா)
பாடல்:4 (தோன்றுபல்)
தொகு- தோன்றுபல் பாதகத் தொகுதியா மைந்தரை
- ஈன்று வளர்க்குமா வென்னுமிக் கலிதனிற்
- காட்சியிற் புலப்படாக் கடவுளுண் டெனது
- மாட்சியி னவனையா மருவுலுண் டெனது
- முடலமீ தன்றிவே றுயுருள தெனலுந்
- துயிலுண வொழித்துத் தொடர்புல னடக்கிப்
- பயிலு மனோலயம் பண்ணலுண் டெனலுங்
- கண்டவர் யாரிவை கட்டுரை யாமெனக்
- கொண்டரு நூலையுங் குருவையும் பழித்துத்
- தவத்தொழில் சிறிதுந் தழுவாது கைவிட்(டு)
- அவத்தொழில் முழுவது மஞ்சாது புரியுங்
- கொடியவர் கெட்டுளங் குலைத்துடல் விதிர்ப்ப
- ஒடிவரு பத்தியி னுற்றவர் தமக்கெலாங்
- கடவுளை யவனடி காண்டகு றத்தினைச்
- சடமுறு முயிரவன் தன்னின்வே றன்மையை
- வியத்தகும் ஐம்புலன் என்றுமன் னடக்குறு
- நயத்தகு மியோகமெஞ் ஞானநல் லியல்பினை
- ஐயந் திரிபற வருளினா லுள்ளக்
- கையுறு நெல்லிக் கனியென வுணர்த்தும்
- இணங்கு மெய்ப்புகழொடு மிசைந்தான்
- குணங்குடி யானெனக் குலவு மாதவனே (4)
பாடல்:5 (மாதவஞ்சேர்)
தொகு- (நேரிசை வெண்பா)
- மாதவஞ்சேர் மேலோர் வழுத்துங் குணங்குடியான்
- தீதவஞ்சேர் நம்மவித்தை தீர்க்குமெனக்- காதல்
- விரைந்து புகழ்ந்தோ ரிகழ்ந்தோர் மேவுவர்மெய்ப் போதம்
- வரைந்து பிழைக்கும் வழி (5)
பாடல்:6 (வழிசேர்)
தொகு- (கட்டளைக்கலித்துறை)
- வழிசேர் குணங்குடியானெனு மாரியன் மல்கருள்கூர்
- விழிசேர் திருமுகத் திங்கள்கண் டார்க்கன்றி மேவலுண்டோ
- பழிசேர் மனவிந்து காந்த முறுகுபும் பண்பினோடு
- மொழிசே ரஞ்ஞான மெனுமிருள் நீங்கு முறைமையுமே (6)
பாடல்:7 (முறைமுறை)
தொகு- (எண்சீ்ர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
- முறைமுறைவந் தரசரெல்லாம் வணங்கச் சீர்சான் முடிபுனைந்து புடலி?முழு தாளும் பேறு
- மறைதருமோர் வீட்டினுக்கே யவாவுன் மேவி யரைக்கருங்கோ சிகமொழித்துக் கந்தை சூழ்ந்து
- பொறையுறுநின் திருவருள்பேற் றைய மேற்றுண் புண்ணியரா லொருபொருளென் றெண்ணற் காமோ
- குறைவறுநற் புகழ்பரம யோகி யெனனுங் குணங்குடியா னேவிளங்கக் கூறுவா யே. (7)
பாடல்: 8 (வாயினாற்)
தொகு- (நேரிசை ஆசிரியப்பா)
- வாயினாற் பலநூல் வகைதெரிந் துரைத்துங்
- காயமேல் வெண்பொடி கவினுலம் பூசியுஞ்
- செய்யகல் லாடையைத் திகழ்ந்திட உடுததுஞ்
- துய்ய சடைமுடி துதைதர முடித்துத்
- தண்டுக மண்டலஞ் சால்புறத் தாங்கியு
- மண்டல மிசைவிரி மான்றோலி னிருந்தும்
- பலர்புலச் சூறையிற் படுசிறு துரும்பென
- விடர்கெழு மனத்தரா யிரு்க்கின் றனர்பலர்
- நெளிதிரைக் கடல்சூழ் நெடு்ம்பெரும் புவிமிசை
- அளிவளர் குணங்குடி யானெனு மமல
- சாற்று மச்சாதனந் தானொன் றிலாமலும்
- போற்று முனதருள் பொருந்திய ஒருசிலர்
- ஒருதன தியல்புணர் திருவினை யகற்றி
- மூவா சைத்திற மேவாது விடுத்து
- நாற்கதி நணுகுறா மேற்கதி விரும்பி
- ஐம்பொறிக் கெதிர்வற வெம்புல னடக்கி
- அறுசம யங்களி னெறிநிலை தேறி
- எழுபிறப் பிகந்ததென் விழுமிய செருக்கிற்
- பத்தியாற் படரெலா மொருவி
- நித்தியா நந்த நிலையரா யினரே (8)
பாடல்: 9 (ஆயுங்கால்)
தொகு- (நேரிசை வெண்பா)
- ஆயுங்கால் அன்பின் அழியாத் துணையாகுங்
- காயுங்கால் அன்படர்ந்து காதவுடன்?- மாயுங்கால்
- நீதிக்கும் போயதனை நேராங் குணங்குடியான்
- போதிக்கும் போதப் பொருள். (9)
பாடல்: 10 (பொருட்செல்வம்)
தொகு- (கட்டளைக் கலித்துறை)
- பொருட்செல்வம் புல்லிய தென்றே விடுத்துஇந்தப் பூதலத்தின்
- அருட்செல்வம் எய்தும் குணங்குடி யான்அரு ளாதரித்தோர்
- தெருட்செல்வம் நன்கெய்தி ஐம்புலன் மாளச் செகுத்தினியாம்
- இருட்செல்வம் அல்ல லெனவே மகிழ்வுற் றிருப்பர்களே. (10)
பாடல்: 11 (கள்ளுண்டும்)
தொகு- (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
- கள்ளுண்டும் கொலைபுரிந்தும் கபடம் செய்தும் கணிகையர்தம் புணர்ப்பினுறு காம நோயால்
- எள்ளுண்டும் திரிகொடும்பா தகத்தோர் தாமும் இணையில்குணங் குடியானே இறைவா உன்றன்
- வி்ள்ளுண்ட கமலவடி படுந்தூள் ஒன்று மேற்படப்பெற் றிடினவர்வெவ் வினைக ளெல்லாம்
- தள்ளுண்டு சிறுசிலையொன் றெடுத்து வீசத் தருநிறைபுட் குழாமெனவே பறந்து போமே. (11)
பாடல்: 12 (மேதருநிலையினை)
தொகு- (நேரிசை ஆசிரியப்பா)
- மேதரு நிலையினை மேவிவாழ் வித்தக
- ஓதக விருள்தனை ஒழிக்கு மாமணியே
- அன்பினர் மகிழ்கொள அருள்பொழி முகிலே
- இன்பநன் குதவுறு மணியதெள் ளமுதே
- துகளற வோங்கிய துறவினர்க் கரசே
- திகழறந் தாங்குபு சேர்குணங் குடியாய்
- நின்னை வணங்கினோர் நெஞ்சா லயந்தொறு
- முன்னை யிருத்திவே றுறைகின் றனையால்
- ஒருவனோ பலரோ ஒருநீ
- தெரிதரப் புகல்நின் திருவுள மகிழ்ந்தே. (12)
- (நேரிசை வெண்பா)
- தேவருக்கும் எய்தரிய சிற்சுகத்தைத் தற்புகழ்ந்தோர்
- யாவருக்கும் பாரினொழி யாதெளிதின்- ஈவனயந்து
- ஒப்பில் பெருந்தவத்தின் ஓங்கு குணங்குடியான்
- செப்பும் வினையகத்துந் தீர்த்து. (13)
- (கட்டளைக் கலித்துறை)
- துதியும் பழியும் அமுதமும் பற்கையுந் துப்புமப்பி
- நிதியுஞ் சிலையுங் கலவையுஞ் சேறு நிகருறவே
- வதியுந் திறத்திற் குணங்குடி யானருள் வாய்த்தவன்பாற்
- பதியுங் கருத்துடை யார்கள் கருத்துடைப்பார்க் கண்மெய்யே (14)
- (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
- மெய்யுறுசீர்க் குணங்குடியா னெனும்பவனோ பாரினில் விரிநீர் வைப்பின்
- அரியுறுபித் தொடுவாத மல்கிஐய மேலிடினும் நாடி நோக்கி
- உய்யுறுநன் னிலைபெறவோர் மாத்திரைதன் னுளமிரங்கி யுரைத்தல் செய்யும்
- பொய்யுறுமிப் பவநோயை யொழித்திணையி லாதசுகம் பொறுத்து மாறே. (15)
- (நேரிசை ஆசிரியப்பா)
- மாறுகொண் டென்மன மாகிய பரியை
- வீறுகொண் டவாவெனும் வீரனிங் கொருவன்
- அழுக்கா றெனுங்கல் கணைமிசை யார்த்தாங்கு
- இழுக்கா றுடைசின மெனுங்கலி னஞ்சேர்த்து
- அளியறு செருக்குமிக் காகிமே லிவர்ந்து
- வளியெனும் வாதுவன் வாய்ந்துடன் தொடர்தரப்
- பொற்பெனுங் கொடுவழி புகுந்திடச் செய்தலும்
- நெறிபிறழ்ந் தப்பரி நீள்புலக் கான்புகுந்து
- அரிவையர் மயக்கெனும் குளத்தினுள் வீழ்ந்துந்
- தெரிபொன் னெனும்வனத் தீமிதித் தழுங்கியும்
- பகர்மண் ணெனுங்கொடும் பாறைதாக் குற்று
- மிகுபெருந் துன்பொடு மெலிந்துழல் கின்றதால்
- இன்குணங் குடியான் எனுந்தவர்க் கரசே
- நன்குமற் றதனைநீ நல்வழி திருப்பியே
- அருளெனும் வாளினவ் வீரனைத் துமித்துக்
- கருதமக் கல்லனை யாதிகள் களைந்தொழித்து
- என்வசம் ஆக்குவை யெனின்யான்
- நின்வச மாக்குவன் நினதியல் புகழ்ந்தே. (16)
- (நேரிசை ஆசிரியப்பா)
- புகழ்ந்து குணங்குடியான் பொங்கிசையை நெஞ்சந்
- திகழ்ந்துபுல வீர்பாடல் செய்யி- னிகழ்ந்து
- மலத்திருக்கை மாற்றிநிலை மாறாவின் பெய்தி
- நலத்திருக்கை நல்கு நயந்து. (17)
- கட்டளைக் கலித்துறை
- நயமேவு கஞ்ச முகமுங் கருணை நயனமுஞ்சீர்
- பயமேவு செம்பொ னுறமேனி யும்மெழிற் பாதுகைசேர்
- சயமேவு தாளுந் தலைவிரி கோலமுஞ் சார்ந்தன்பரி (சார்ந்து+அன்பர்+இதயம்+மேவும்)
- தயமேவு மென்றுங் குணங்குடி யானெனும் சற்குருவே. (18)
- அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- குருவாய் அடுத்தோர்க் கருள்சுரக்குங் கோதில் குணஞ்சேர் குணங்குடியான்
- உருவாய் அருவாய் உபயமுமாய் ஒன்றாய்ப் பலவாய் அறிஞர் விழை
- திருவாய் விளங்கும் பரநிலையைத் தெரிக்கு மெனின்மற் றவன்பெருமை
- ஒருவாய் உடையோ னும்புகழ்வேன் ஓரா யிரம்வா யுறினொருங்கே. (19)
- நேரிசை ஆசிரியப்பா
- ஒருங்கிய மனத்தொடும் ஒருகாசும் இலனாய்க்
- கருங்கடற் புவிமிசைக் காதன் மீதூர
- வழுத்தி யன்புடை வந்திறக் கின்றவன்
- எழிற்குணங் குடியான் எனுமருட் செல்வன்
- தன்னையும் இழப்ப தல்லால்
- என்ன யவன்பெறல் இயம்பருள் சுரந்தே. (20)
- (நேரிசை வெண்பா)
- சரக்குமணற் கேணியினீர் தோண்டுந் தொறுமைந்
- தரக்குங் குணங்குடியா னன்பர்க்- கிரக்கமொடு
- ஆனந்தத் தேறல் வரப்புகல்வ தால்தோறும்
- ஆனந்தத் தேறல்சுரப் பாம். (21)
- (கட்டளைக் கலித்துறை)
- ஆந்துணை நாடிற் குணங்குடி யானென் றழிந்தவன்பாற்
- போந்துணை யோடன்பு செய்தவர் செய்தவர் பூதலத்திற்
- சாந்துணை யுங்கை வருடிச்செவ் வாச்சியர் தாட்கமலப்
- பூந்துணை யூடல் ஒழித்தாங்கு புல்லினர் புல்லினரே. (22)
- (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
- புல்லியும் அல்லி சேர்ந்து பொலிவுறு மணத்த தாகுந்
- தொல்லியல் வழுவா வண்மை தொடர்குணங் குடியான் என்னும்
- நல்லியல் ஞானமூர்த்தி நாமமுற் றிடுத லாலே
- சொல்லிய வெனது சொல்லும் தோன்றுறுஞ் சிறப்பின் உற்றே. (23)
- (நேரிசை ஆசிரியப்பா)
- உற்றுளங் கெழுமிய நற்றிற வன்பொடுங்
- குணங்குடி யான்அருட் கிணங்கினோர் யார்க்கும்
- பகைமையுங் கேண்மையும் புகனிலை யெனலென்
- நெடுங்கா லந்தமை நீங்காது பழகிய
- கொடுங்கோன் மாயையைக் கொல்பெரும் பகைவராய்க்
- கதுவிய கேண்மையிற் கலப்பர்
- புதிதென வெய்திய போதந் தனக்கே. (24)
- (நேரிசை வெண்பா)
- தனக்குத்தா னேநிகராந் தத்வத் துவனா
- மினக்குத்தா னன்றியெவர்க் குண்டு- நினைக்குங்காற்
- கூறு மளிசேர் குணங்குடியா னேவிமலா
- தேறுதவ யோகமுயல் சீர். (25)
- கட்டளைக்கலித்துறை
- சீரை விரும்பினர்க் கின்றாமு லோபமெய் சேருநசை
- போரை விரும்பினர்க் கின்றா மனநிலை பூவையர்தம்
- மோரை விரும்பினர்க் கின்றாங் குணங்குடியா னிடஞ்செய்
- நாரை விரும்பினர்க் கின்றா முலகர் நவிலவரே. (26)
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- நவிலுமிள மையுமதனு றுமுடலு மதனையுள நயந்து காக்கக்
- குவிபொருளும் புனற்குமிழி போலநிலை யல்லவெனுங் குணத்தை யோர்ந்து
- புவிபுகழு மெஞ்ஞானக் குணங்குடியான் றிருவருளைப் பொருந்தற் கெண்ணார்
- தவலறுசீ ரகண்டபரி பூரணமாஞ் சிற்பரன்றாள் சார்த லுண்டே (27)
- (நேரிசை ஆசிரியப்பா)
- உண்டும் உடுத்தும் உறுபொருள் ஈட்டியும்
- எண்டகு வாழ்நாள் யாவையுங் கழித்தே
- அணங்குசெய் வினைமுயல் அசடருக் கறிவருங்
- குணங்குடி யானருட் குரிசி லிசையிசை
- நாவாய் நாவா யாகு
- மேவாப் பவக்கட லொழிந்து கரைபெறற்கே. (28)
- (நேரிசை வெண்பா)
- பெறற்கரும்பே றொன்றுளதோ பேருலகில் யார்க்குந்
- தெறற்கருமா யைக்கழிவுசெய்யும்- விறற்கிசைந்த
- மன்னருளங் கொண்டு மதிக்குங் குணங்குடியான்
- தன்னருளங் குற்றார் தமக்கு (29)
- (கட்டளைக் கலித்துறை)
- குவலைய மெங்கும் ஒருசாண் வயிற்றின் குழிநிறைப்பைக்
- கவலை யடைந்திரைக் கேயுழல் வீர்பயன் கண்டதுண்டோ
- நுவலைய நீக்குங் குணங்குடி யானரு ணோக்கிவிழித்
- திவலைய றவன்பிற் ஞேரினுண் டாங்கடைதீர் சிறப்பே (30)
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சிறக்கும் புகழு மடுத்தோங்குஞ் செறிதீ வினைகளெல்லாம் விடுத்தும்
- பறக்கும் வித்தை யிருணீங்கும் பக்தி யுளத்தின் மேன்மேலும்
- பிறக்கு மதிகப் பெருவாழ்வு பெருகும் உலகிற் பேதநிலை
- துறக்கு முறவோன் குணங்குடியான் சொல்லும் நெறியைத் துன்னினர்க்கே (31)
- (நேரிசை ஆசிரியப்பா)
- துன்னுறு திரைக்கடல் சூழ்பெரும் புவிமிசை
- பன்னுறு நிலைகெழு பலசம யங்களுள்
- எச்சம யத்தவர் எவ்வாறு கருதினும்
- அச்சம யத்தவர்க் கவ்வா றிருந்தருள்
- பலவடி வங்களும் பலநா மங்களும்
- நலமுற மருவிய நாயக னாகியும்
- உருவும் பெயரும்ஒன் றுறாதுவே றாகிச்
- செருவளர் சமயா தீதமுற் றொளிரும்
- சிற்பரம் பொருளினத் தெரிக்கும்
- நற்குணங் குடியா னெனு நாயகனே (32)
- (நேரிசை வெண்பா)
- நாயகனார் நல்வரவை நாடுங் குலமகள்போற்
- றாயகமாந் தற்பரனைத் தாங்காண- நேயமுளங்
- கொண்டோர்க் கலது குணங்குடியான் கண்ணருட்பே
- றுண்டோவிப் பூதலத்தி னுள். (33)
- (கட்டளைக்கலித்துறை)
- உள்ளினுங் கண்முன் எழுதினும் காதின் ஒருவர்சொலக்
- கொள்ளினு நாவினிற் கூறினும் இன்பங் கொளிக்குமுன்பேர்
- கள்ளினு நெஞ்சை அழிக்கின்ற காமக் கரிசிலரைத்
- தள்ளினுஞ் சூழும் குணங்குடி யானெனுந் தற்பரமே (34)
- (கலிவிருத்தம்)
- பரம யோகியைப் பற்றொன்றி லான்றன்னைக்
- கரவி லாத கருணைக் கடலினைக்
- குரவ னாகுங் குணங்குடி யான்றனைப்
- பரவி னார்க்குப் பவப்பிணி யில்லையே (35)
- (நிலைமண்டில ஆசிரியப்பா)
- இல்லையோ உளதோ இடையென மருண்டும்
- முல்லையின் அரும்பே முறுவலென் றுரைத்தும்
- கொங்கையைச் செம்பொனிற் குடமென வியந்துஞ்
- செங்கையைக் காந்தள் செழுமலர் என்றும்
- விழியைக் கூர்நெடு வேற்படை யென்றும்
- மொழியை நறுஞ்சுவை முதிரமிழ் தென்றும்
- இதழினைக் கொவ்வையின் எழிற்கனி யென்றும்
- நுதலினைப் பிள்ளைப் பிறையென நுவன்றும்
- வனிதையர் மயக்கிடை மயங்கிவீழ்ந் தழுதும்
- துணிவுறு வோர்மனச் சோர்வினை யொழித்திட
- மறைபுகன் ஞான வளமினி தருளும்
- குறைவரும் நற்குணங் குடிகொண் டிருத்தலால்
- உன்பெயர்க் காரணத் துறுபொரு ளுணர்ந்தனம்
- கொன்பெறு புகழ்வளர் குணங்குடி யானே. (36)
பாடல்: 37 (யானெனதென்னுஞ்)
தொகு- நேரிசை வெண்பா
- யானென தென்னுஞ் செருக்கற் றியாவுமொரு
- தானெனவே கொள்ளுந் தகையாகும்- நானிலத்திற்
- கூறுங் கருணைக் குணங்குடியான் சந்நிதியில்
- நேருங் கருத்தோர் நிலை. (37)
பாடல்: 38 (நிலையுறு)
தொகு- கட்டளைக் கலித்துறை
- நிலையுறு சத்துச்சித் தாநந்த மாக நிறைபொருளைக்
- கலையுறு மாட்சியுற் றானுற்றி யாரையும் கட்டவல்லோன்
- புலையுறு மியாக்கை வருந்துற நோக்கும் புனிதர்புகழ்
- தலையுறு சீ்ர்கொள் குணங்குடி யானெனுஞ் சற்குணனே (38)
பாடல்: 39 (குணங்குடியானருள்)
தொகு- (கலிவிருத்தம்)
- குணங்குடி யானருள் கூடி னலத்தின்
- இணங்கிய சிந்தையர் ஏதம் அகற்றி
- அணங்கறும் இன்பின் அமர்ந்துல கத்தோர்
- வணங்கி வழுத்தறு வாண்பொடு வாழ்வார் (39)
பாடல்: 40 (வார்தருங்)
தொகு- (நிலைமண்டில ஆசிரியப்பா)
- வார்தரும் கூந்தலார் வரிவிழிக் கண்ணையும்
- ஏர்தரு மதனவேள் எறிமலர் கணையும்
- ஊறு செயப்பொறா தொளிர் திருமேனியோய்
- கூறுபல் புகழ்வளர் குணங்குடி யானே
- இயலுறும் அன்புகொண் டெய்தினோ ரியார்க்கும்
- யாவரு மதிநிலை யருள்செய நின்று
- மண்ணுல கந்தனில் வழங்குகின் றனைநீ
- விண்ணுல கந்தனில் விளங்குபொன் னெனவே (40)
- குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் பேரில்
- மகாவித்துவான் திருத்தணிகை சரவணப்பெருமாளையர் அவர்கள் பாடிய
- 'குணங்குடியார் நான்மணிமாலை' முற்றிற்று.