குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-16/அடிகளார் நினைவலைகள்

2


அடிகளார் நினைவலைகள்

(குமுதம் – 1992 சனவரி அடிகளார் தயாரிப்பு)

சிவகங்கை மன்னர் வருகிறார்


பொதுவாகத் திருமடத்தில் வசதி படைத்தவர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் தனி விருந்து. சாதாரண மக்களுக்கு-கிராமப்புற விவசாய மக்களுக்கு இரண்டாந்தர உணவு வழங்குவது வழக்கம். இந்த முறையை நாம் விரும்பவில்லை. நிர்வாகிகளுக்கு இதனை அறிவிக்க ஒரு யுக்தி செய்தோம்.

ஒருநாள், 'சிவகங்கை மன்னர் வரப் போகின்றார். மதியம் விருந்து தயாரியுங்கள்' என்று உத்தரவு இடப்பட்டது. மடம் சுறுசுறுப்பாக இயங்கியது சுவையான உணவு சமைத்தார்கள். மடத்து முகப்பு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. சிவகங்கை மன்னரை வரவேற்க ஆயத்தம். மணி பகல் 12. ஆனாலும் சிவகங்கை மன்னர் வரவில்லை. நமது மடத்து விவசாயிகள் சிலர் வந்தனர். நாம் விவசாயிகளை வரவேற்று, மடத்து நிர்வாகிகளிடம், “இவர்கள்தான் சிவகங்கை மன்னர்கள். இவர்களை உபசரியுங்கள்” என்றோம். எல்லோர் முகத்திலும் வியப்பு: ஆம்! நாட்டின் மன்னர்கள் விவசாயிகள்தான். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு திருமடத்தில் விசேடங்களில் இரண்டு உணவு தயாரிப்பு இல்லை —ஒரே வகை உணவு —ஒரே பந்தி,

காவிரி பிரச்சனையும் நானும்

நான் காவேரிக்கரையில் பிறந்து வளர்ந்தவன். அதனால் நன்றாய் நீச்சல் தெரியும். ஒருநாள் நீந்திக் கொண்டிருந்தபோது வெள்ளம் கொஞ்சம் அதிகம் இருந்தது. அடுத்தநாள் ஆடி அமாவாசையானதால் காவேரி பூவும் புனலும் நுங்கும் நுரையுமாய் ஒடிக்கொண்டிருந்தாள். நான் பாதி நீந்திக் கொண்டிருந்தபோது என்னையும் அவள் அடித்துக் கொண்டு போய்விட்டாள்.

ஆனால் காவேரி மிகவும் நல்லவள். அவளிடம் ஒரு நல்ல குணம் என்னவென்றால், அவள் நம்புகிறவர்களை அழிக்க மாட்டாள். அதற்காகவே நிறைய மரங்கள் காவேரியின் கரையில் கவிழ்ந்து நமக்குக் கைகொடுக்கக் காத்திருக்கும். அதுபோலத் தாழ்ந்திருந்த ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு நானும் ஜாக்கிரதையாய்க் கரையில் ஏறிக்கொண்டேன். பிறகு காவேரியைப் பார்த்து மெல்லக் கேட்டேன். "ஆமாம். உனக்கு ஏன் இத்தனை அவசரம்? கொஞ்சம் மெதுவாய்த்தான் போவதற்கென்ன?” என்றேன்.

அதற்குக் காவேரியன்னை சற்றும் தயங்காமல் பதில் சொன்னாள். “நாளைக்கு ஆடி அமாவாசை நிறையப் பாவிகள் தங்கள் பாவங்களைக் கழுவுவதற்காக என்னிடம் நீராட வருவார்கள். அவர்கள் வந்து விடுவதற்குள் தப்பித்து ஒடுவதற்காகத்தான் இத்தனை வேகமாய்ப் போகிறேன்.”
இளஞ்சூடு ஆமைக்கு இதமா இருக்கும்.
ஆனால்...

ற்றோரத்துச் சிற்றுார் ஒன்று. அந்த ஊரில் உள்ளவர்கள் ஆமை சமைத்துச் சாப்பிடும் பழக்கமுடைய வர்கள். அடுப்பு மூட்டி உலைப்பானை வைத்து அதில் ஆமை ஒன்றை வேகவைக்க இருக்கின்றான் ஒருவன். ചങ്ങാ பானையில் உள்ள நீர் இளஞ்சூடு அடைகிறது. அந்த இளஞ்சூடு ஆமைக்கு இதமாக இருக்கிறது. அடுப்போ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. என்னாகும்; உலைத் தண்ணிர் கொதி நிலை மாறி ஆமை அழிய நேரிடும். ஆனால் ஆமை எதிர் வரும் துன்பம் அறியாமல் கிடைத்த இன்பத்தில் மகிழ்ந்து விளையாடுகிறது. அதுபோல மனிதர்கள் இவ்வுலக வாழ்க்கையில் கிடைத்த பணம், பதவி, அதிகாரம் இவைகளைச் சதம் என்று எண்ணி இறுமாந்து நடக்கின்றனர். பின்னர் அவர்களின் மகிழ்ச்சிக்குரிய வாயிலாக அமைந்தவையே இறுதிக்கும் காரணமாதலை அறிக.

எது முக்கியம்?

ர் ஊரில் ஒருவனுக்கு விவசாயம் செய்யவேண்டும் என்று திடீர் ஆர்வம் ஏற்பட்டது. முன் பின் அனுபவம் இல்லாதவன். இருந்தாலும் சிரமப்பட்டுத் தன் நிலத்தைக் கொத்திச் சீர் செய்தான். நன்றாய் உழுதான். நிறையத் தண்ணிர் பாய்ச்சினான். பாத்தி கட்டினான். எல்லா வற்றையும் முடித்துவிட்டுப் போய் நிம்மதியாய்ப் படுத்துத் துரங்கி விட்டான்.

கொஞ்ச நாட்கள் கழித்துப் பார்த்தால் பக்கத்து நிலத்தில் அருமையாய்ப் பயிர் விளைந்திருந்தது. ஆனால் இவன் நிலத்தில் மட்டும் எதுவும் விளையவே இல்லை.

கு.XVI.4 அடித்துப் பிடித்து யோசித்த பிறகுதான் புரிந்தது. இவன் விதை போடவே இல்லை!

சுண்டலும் சுரண்டலும்

புரட்டாசி சனிக்கிழமை. பஜனை மடத்தில் கூட்டம் மிகுதி.}} ஆனால் பஜனை முடிந்தவுடன் கொடுப்பதற்குரிய சுண்டல் மிகவும் குறைவாக இருந்தது. நிர்வாகிகள் சுண்டலைச் சீராக விநியோகம் செய்து வந்தனர். ஆயினும் பின்வரிசையில் இருந்த ஒருவருக்குத் திடீரென்று ஐயம் ஏற்பட்டுவிட்டது. சுண்டல் நாம் இருக்கும் இடம்வரை வருமா? உடனே எழுந்தார். முண்டியடித்துப் பலரையும் நெருக்கிக்கொண்டு சுண்டல் சட்டியை நோக்கி ஓடினார். தமது இரண்டு கைகளாலும் சுண்டலை அள்ளிக் கொண்டு ஓட முயன்றார். அங்கிருந்த பலர் அவரைப் பிடித்து, பத்துப் பேருக்கான சுண்டலை அவர் அள்ளிக்கொண்டு ஒடுவதைக் கண்டித்துச் சுண்டலைத் திரும்ப வாங்கிவிட்டனர். இந்தப் பஜனை மடத்தில் புரியும் நியாயம் கூட நாட்டு வாழ்க்கையில் யாருக்கும் தெரிவதில்லையே!

ஐந்தாண்டுத் திட்டங்களால் விவசாயம் செழித்தது. தொழிற்புரட்சி ஏற்பட்டது. நாட்டின் வருவாய் உயர்ந்தது. ஆனால் பல தனி நபர்களின் வருவாய் உயரவில்லையே. ஏன்? பலருடைய பங்கு சிலரிடம் போவதால்தானே! வாழ முடியும் என்ற நம்பிக்கை வழங்கப்படாவிட்டால் சமூகக் குற்றங்களை எப்படிக் குறைக்க இயலும்?

ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?

ரு சமயம் செஞ்சிக்குப் போய்விட்டுப் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். பஸ்ஸின் ஜன்னல் வழியே அகஸ்மாத்தாய்ப் பார்த்துக் கொண்டு வந்தபோது, ஓர் எல்லைக் குடியிருப்பில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் எல்லோரும் உதவிக்கு விரைந்தோம். மேற்குப் பகுதிக் குடியிருப்பில்தான் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. எங்களால் கிழக்குப் பகுதி வழியாகத்தான் அங்கு துழைய முடிந்தது. நுழைந்தால், பெரிய அதிர்ச்சி. கிழக்குப் பகுதி ஆட்கள், எரியாமல் நன்றாய் இருந்த தங்களின் வீடுகளின் கூரையில் அவசரம், அவசரமாய்த் தண்ணீரை எடுத்து ஊற்றிக்கொண்டிருந்தனர். "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று, விசாரித்தேன். அதற்கு அவர்கள் "அந்தத் தீ எங்கள் பகுதிக்கும் பரவிவிட்டால் எங்கள் வீடுகள் தீப்பற்றிக் கொள்ளுமே! அதற்காகத்தான் இப்படிச் செய்கிறோம்," என்றார்கள். "அடக் கடவுளே! இங்கே கொட்டும் தண்ணிரை அங்கே போய்க் கொட்டினால் அவர்கள் வீடும் பிழைக்கும். உங்கள் வீடும் பிழைக்கும், இடையில் உள்ள வீடுகளும் பிழைக்கும் அல்லவா?" என்று கேட்டேன். இன்று பலர் இப்படித்தான் செய்கிறார்கள். தங்களை மட்டுமே காப்பாற்றிக் கொள்வதில் குறியாய் இருக்கிறார்கள், அடுத்த வர்களைப் பற்றிக் கொஞ்சமும் அக்கறை இல்லாமல்!

என் வயது 171/2

நான் பதினேழரை வயதிலேயே ஆசிரமம் வாங்கி விட்டேன்.

அந்தச் சமயத்தில் என் சொத்துக்களைச் சரியான முறையில் என் பெற்றோருக்கு உதவுகிற மாதிரி ஏதாவது செய்துவிட்டு வர வேண்டும் என்று என் மனதுக்குள் ஒர் எண்ணம் இருந்தது.

அது விஷயமாய் என் அண்ணன் தம்பிகளை அழைத்துக் கேட்டேன்.

அவர்கள், “நீ சன்யாசியாய்ப் போய்விட்டதால் உனக்குச் சொத்தில் உரிமை இல்லை” என்று சொல்லி விட்டார்கள். அதனால் வக்கீலைக் கலந்து ஆலோசித்தேன்.

வக்கீல், “நீங்கள் சன்யாசியாய்ப் போயிட்டீங்க. தவிரவும் நீங்க இன்னும் மேஜர் ஆகலை. அதனால் நான் ஒண்ணுமே பண்ண முடியாது” என்று சொல்லிவிட்டார். அதனால்தான் நான் சன்யாசம் வாங்கிக் கொண்டபோது என் வயது என்ன என்பதை என்னால் என்றைக்குமே மறக்க முடியாது.

மூளைச் சோம்பல் கொள்ளாதீர்

ர வரப் பட்டிமன்றங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகிக் கொண்டு வருகின்றன. எப்போதுமே ஒரு விஷயம் ஜனங்களிடையே பிரபலமாகத் தொடங்கினால் அதன் தரம் தாழ்ந்துவிடுவது இயல்பு. இதைச் சரி செய்ய வேண்டுமென்றால் படித்தவர்கள் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். .

ஆனால் படித்தவர்களுக்கே இப்போது மூளைச் சோம்பல் ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து படிக்கவேண்டும், சிந்திக்க வேண்டும் என்ற எண்ணமே இருப்பதில்லை. அதனால் கையில் கொஞ்சமாய்ச் சரக்கு வைத்துக் கொண்டு. நிறையக் கதை விடுகிறார்கள்.

ஒரு சமயம் மயிலை கபாலி கோயிலில் ஒரு பட்டி மன்றம் ஏற்பாடு செய்திருந்தார்கள். ‘தந்தது வந்தன்னைக் கொண்டது என் தன்னை யார்கொலோ சதுரர்..’ என்ற திருவாசகத்தை மையமாய் வைத்து, சதுரர் சிவபெருமானா, மாணிக்கவாசகரா என்று பட்டி மன்றம். முதல் ரவுண்டு முடியப் போகும் நேரத்திலேயே பட்டி மன்றத்தின் தரம் கொஞ்சம் தாழ்ந்த மாதிரி தோன்றியது. மாலைநேரம், அருமையான கோயில் சூழ்நிலை. எப்போதுமே மைலாப்பூர் ரசிகர்கள் தரமான நிகழச்சியைக் கைதட்டி வரவேற்று ரசிப்பார்கள். அவர்களுக்குப் போய் இப்படி ஒரு நிகழ்ச்சியா என்று எனக்கே கூச்சமாய் இருந்தது. நான் சொல்லி விட்டேன்- "நம் ரசிகர்கள் நத்தையைப் பொறுக்க வர வில்லை. முத்தைப் பொறுக்க வந்திருக்கிறார்கள். கொஞ்சம் உழைத்துப் பேசுங்கள்.” என்று. ஆக, பட்டிமன்றங்கள் பாதை மாறும்போது வழிநடத்த வேண்டியது நடுவர் கடமை.

ஒரு கேரோ

குன்றக்குடியில் ஒரு நாளிரவு ஒருவர் தன் மனைவியை மனம் போன போக்கில் அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

நான் ஒரு யோசனை சொன்னேன். அதன்படி குன்றக்குடி மாதர் சங்கத்தினர் பதின்மர் சேர்ந்து, வீதியில் மனைவியை அடித்த அந்தக் கணவரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கேரோ செய்து, 'இனி மனைவியை அடிப்பதில்லை' என்று அவரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டுதான் கேரோவிலிருந்து அவரை விடுவித்தனர்.

பதிவு செய்யாதீர்கள்

ரசு என்பது வேலை வாய்ப்புத்தரும் ஒர் எந்திரம் என்ற நம்பிக்கை இளைஞர்களிடம் இருக்கிறதே, அதை முதலில் மாற்ற வேண்டும். எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்து கொண்டால் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை யாருக்குமே இருக்கக்கூடாது. அரசாங்கம் தன்னுடைய எல்லையை ரொம்பவும் சுருக்கிக் கொண்டு, வேலை வாய்ப்புக்களைக் கூட்டுறவுமுறை, சமூகமே வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளும் முறை என்ற மாதிரியான திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். அரசாங்க வேலை கிடைத்தால் மிகவும் சுலபம் என்ற மனோ நிலை மாறவேண்டும். நல்ல உழைப்பு, நல்ல திறம், இவை வளரவேண்டும். கல்வி என்பதே மாணவர்களிடம் சிந்தனைத் திறனும் செயல் திறனும் உருவாக்கும் விஷயமாக அமைய வேண்டும்.

என் சவால்! யார் தயார்?

ப்போதைய இளைஞர்கள் ஸ்போர்ட்ஸை வாழ்க்கையின் ஒர் அங்கமாய் எடுத்துக் கொள்ளாமல் ஒரு வெறியுடன் பார்க்கிறார்கள். கிரிக்கெட்டில் ஏற்பட்ட மோகத்தில் டி.வி.க்கு முன்னால் எத்தனை மணி நேரம் வீணாய்க் கழிக்கிறார்கள்! அதில் அவர்களுக்கு ஒரு ஆவேசம் வந்து விடுகிறதே? நம் இளைஞர்களுக்கு வாலிபால், ஃபுட்பால் ஆகியவற்றில்தான் நிறையப் பயிற்சி கொடுக்க வேண்டும். அதில்தான் அதிக உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

நான் நன்றாக நீச்சல் அடிப்பேன். வாலிபால் மிகவும் நன்றாய் விளையாடுவேன். இப்போதும் கூட விளையாடத் தயார்தான். என்னுடன் ஆட யார் தயாராய் இருக்கிறார்கள்? இங்கே எல்லோருக்கும் வயதாகிவிட்டது!

கணவர்களைப் பிடியுங்கள்!
பெண்கள் வேலைக்குப் போவதில் எனக்கு உடன் பாடே கிடையாது. அப்படிப் போனால், நம் நாட்டில் உள்ள சிற்றுண்டிச் சாலை, பேருண்டிச்சாலைகளின் தரம் கூட வேண்டும். நல்ல ஆரோக்யமான உணவு கிடைக்க வேண்டும். ஆர்டர் செய்தால் பத்தே நிமிடங்களில் உணவு வந்து சேரும்படி இருக்கவேண்டும்.

நம் நாட்டில் பெண்கள் வேலைக்குப் போவதால் இரண்டு கஷ்டங்கள். ஒன்று குழந்தைகளுக்காகச் செலவிட போதிய அவகாசம் இல்லை. அடுத்து, பெண்கள் இரண்டு பங்கு உழைக்க வேண்டி வருகிறது. ஏனெனில் எந்த ஆணும் வீட்டுக்குப் போய் மனைவியின் வேலையில் பங்கேற்பதே கிடையாது; நம் நாட்டில்!

இரண்டு சம்பாத்தியங்கள் மட்டும் வேண்டும் என்று இருக்கிறதல்லவா? அப்போது இரண்டுபேரும் வீட்டு வேலைகளைச் செய்யவேண்டியதுதானே? நான் தாஷ்கண்ட் போயிருந்தேன். தாஷ்கண்ட் யூனிவர்சிடியின் போஸ்ட் கிராஜுவேட் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல், தாஷ்கண்ட் யூனிவர்சிடியின் வைஸ் சான்சலர் என்னை விருந்துக்கு அழைத்திருந்தார். . அவருடைய மனைவி டைரக்டர் ஆஃப் மெடிக்கல்ஸ், அப்போது அவர்களிடம் நான் கேட்டேன்: “இரண்டு பேரும் இப்படி முக்கியமான வேலை பார்க்கறீங்களே... வீடு என்ன ஆகிறது?”

அவர் சொன்ன பதில் எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

"எங்கள் இரண்டு பேரில் யார் முதலில் வீட்டுக்குப் போகிறோமோ, அவர்கள் சமையல் வேலையை ஆரம்பித்துவிடுவோம்,” என்றார்.

இதுபோன்ற முன்னேற்றம் நம் நாட்டிலும் வந்தால் எத்தனை நன்றாய் இருக்கும்!

ஏன் வந்தீர்கள்?

சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்குள் நுழைவதற்குப் பாஸ்போர்ட் வைக்கலாமே என்பது என் கருத்து. ஏன் நகரத்துக்குள் நுழைகிறான் என்று கேள்வி கேட்க வேண்டும். கிடுக்கிப் பிடி போடவேண்டும். அப்போதுதான் நகரங்களில் அனாவசியமாக ஜனத்தொகை பெருகாது.

என்னால் முடியாதது எது?

நான் நேரந் தவறாமையை மிகவும் ஒழுங்காய்க் கடைப் பிடிப்பவன். ஆனால் நம் இந்தியாவில் இந்தச் சமாச்சாரம் ரொம்ப கஷ்டம். எவ்வளவுக்கெவ்வளவு காலதாமதமாய் ஒரு பிரமுகர் வருகிறாரோ, அவர் அவ்வளவுக்கவ்வளவு பெரிய மனிதர் என்று நினைக்கிறார்கள். இதுமாறி, பெரிய மனிதர்கள் எல்லாம் நேரம் தவறாமையைக் கடைப் பிடிக்க ஆரம்பித்து விட்டார்களென்றால் இளைஞர்களுக்குத் தானாக அந்தப் பழக்கம் தொற்றிக் கொள்ளும்.

இரண்டு மாதங்களுக்குமுன் பேராவூரணியில் ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். முதலில் அரை மணி நேரம் தாமதமாய்த் துவங்க அனுமதி கேட்டார்கள். சரியென்று கொடுத்தேன். சம்பந்தப்பட்டவர்கள் வரவில்லை. பிறகும் வந்து இன்னொரு அரை மணிநேரம் வேண்டும் என்று கேட்டார்கள். நான், 'என்னால் அப்படியெல்லாம் காத்திருந்து நேரத்தை வீணாக்கிக் கொள்ள முடியாது' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு ஊருக்கு வந்துவிட்டேன்.

குடும்பக் கட்டுப்பாடு!
ன்மீக மனமகிழ் பொழுது போக்கெல்லாம் நம் கிராமப்புறங்களில் பெருகாத வரையில், அது ஏழை ஜனங்களை எட்டாத வரையில், அவர்களுடைய வாழ்க்கைத் தரம் கொஞ்சமும் கூடாத வரையில், குடும்பக் கட்டுப்பாடு அங்கே சாத்தியமில்லை. ஏனெனில், ஆண் பெண் உறவைத் தவிர வேறு மகிழ்ச்சி எதுவுமே அவனுக்கு இல்லை. மகிழ்ச்சி, களிப்பு என்பது மனிதனுக்குத் தவிர்க்க முடியாத தேவை.

அதனால் குழந்தைகளைப் பெற்றுப் பொழுதைக் கழிப்பதைத் தவிர வேறு வழி? கள், சாராயமெல்லாம் அதிகமானால் குடும்பக் கட்டுப்பாடு கொஞ்சம் இருக்கும். இவன் பாட்டுக்குச் சாராயத்தை ஊற்றிக்கொண்டு எங்காவது கிடப்பான். மனைவியைத் தொந்தரவு செய்யமாட்டான்.

வறுமை நீக்கப் போராட்டத்தில் ஈடுபடுவது பயன் தருமா?

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகம் (சிக்ரி) இயக்குநர் பேராசிரியர் எஸ்.கே. ரங்கராஜன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.

அடிகளார்: அறிவியல் ஆய்வு மனப்பான்மையும் கடவுள் நம்பிக்கையும் முரண்பாடானவையா? அல்லது ஒத்திசைந்து செல்லக்கூடியவையா?

ரங்கராஜன்: அடிப்படை முரண்பாடு ஏதும் இல்லை. நம்பிக்கைகள் அறிவியலிலும் உண்டு. உதாரணமாக, இயற்கையில் ஒரு நியதி இருப்பதாக அறிவியல் நம்புகிறது, அதைத் தேடுகிறது- அனுபவ அடிப்படையில்.

உணர்வுகள், தேவைகள், நெறிமுறைகள் போன்ற வற்றைச் சார்ந்தே வந்த நம் அனுபவம், தொடர்ச்சியாகக் காலத்தில் மாறி, விரிவடைகிறது. இத்தகைய நீடித்த மாறுதலின் ஊடே, மாறாதிருப்பது எது என்பதைப் புரிந்து கொள்வதே அறிவியலின் குறிக்கோள். கடவுள் நம்பிக்கையின் அடிப்படையும் அதுவே. ஆகவே, இரண்டும் ஒத்திசைந்து செல்லக்கூடியவைதான்.

அடிகளார்: சமயத் தத்துவங்கள் ஒருவருடைய இன்ப துன்பத்திற்கு ஊழே என்று கூறுகின்றன. அப்படியிருக்க, வறுமை நீக்கப் போராட்டத்தில் ஈடுபடுவது பயன் தருமா? முயற்சி, சமயத் தத்துவங்களுக்கு முரண்பட்டதல்லவா?

ரங்கராஜன்: பொருளீட்டலிலோ, பதவி தேடுவதோ, குடும்பத்தில் ஈடுபடுவதோ ஊழிற்கு முரண்பாடு இல்லை யெனில், வறுமையை நீக்குவது மட்டும் எப்படிப் பொருந்தா திருக்கும். வறுமைக்கு நம்மை ஆளாக்கிய அதே ஊழ், அதை நீக்க நம்மை அழைப்பதாகக் கொள்ளலாமே!

நாளைய நடப்புதான் இன்றைக்கு வித்திடப்படுகிறது. இதைத்தான் எதிர்காலத்தின் விதி முன்னதாகவே எழுதப் படுகிறது என்று கூறுகிறோம். அதாவது, இன்றைய அனுபவம், நேற்றைய சிந்தனைகளின் நிகழ்ச்சிகளின் விளைவுகள். இந்தக் காரண, காரிய பின்னலைத்தான் அறிவியலும் ஆராய்கிறது. சமயமும் ஊழ் என்ற சொற்கொண்டு குறிப்பிடுகிறது.

அடிகளார்:அறிவியல் வளர்ச்சிக்கும் உலகத் தொடர்புக்கும் ஆங்கில வழிக் கல்விதான் ஏற்றது என்று தாங்கள் கருதுகிறீர்களா? அல்லது தாய்மொழிவழி அமைய வேண்டுமா?

ரங்கராஜன்: நிச்சயமாகத் தாய்மொழி வழிதான் ஏற்றது. ஆனாலும், ஆங்கில மொழிவழி ஓர் தற்காலிக உத்தியாக அவசியமாகிறது. ஆங்கிலத்தில் முழுங்குவதை விட்டு, தாய் மொழியில் 'சுவைத்து உண்ண' நாம் தயாரானவுடன், ஆங்கிலம் கையாளுவதை அளவுடன் கொள்ளலாம்; நிறுத்தலாம்.

அடிகளார்: தெற்காசியப் பகுதியை ஆயுதக் கருவிகள் இல்லாத மண்டலமாக்குதல் பற்றித் தங்கள் கருத்து என்ன?

ரங்கராஜன்: தெற்காசியப்பகுதி மட்டுமல்ல, உலக முழுவதிலுமே அணு ஆயுதம் அறவே ஒழிக்கப்பட வேண்டும். நடை முறையில் இதைக் கொணர விவேகம் வேண்டும். நாடு, இனம், ஆக்கிரமிக்கும் ஆசை ஆகியவைகளுக்கப்பால் செயல்படும் திண்மை வேண்டும்.

அடிகளார்: இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் அறிவியல் துறையில் சார்ந்த தொழிற்புரட்சியிலும் வேளாண்மைத் துறையிலும், ஏன், கால்நடை வளர்ப்புத் துறையிலும்கூட நிறைய சாதனை செய்திருக்கிறது. அப்படியிருந்தும் இந்தியாவில் வறுமை இருப்பதற்குக் காரணம் என்ன ?

ரங்கராஜன்: வறுமை ஒழிப்புப் போராட்டத்தில் அறிவியல், தொழிற்புரட்சி ஆகியவைகளின் பங்கு முக்கிய மானாலும், முழுமையானதல்ல. சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகளும் இந்தச் சவாலுக்கேற்ப வளர்ச்சி கண்டிருந்தால் வெற்றி இதைவிட இன்னும் அதிகம் இருந்திருக்கும்.

சேர்ந்து வாழுவிரோ - உங்கள் சிறுமைக் குணங்கள் போச்சோ?

சோர்ந்து வீழ்தல் போச்சோ- உங்கள் சோம்பரைத் துடைத்திரோ!

என்ற கேள்விகளுக்கு இன்னமும் விடை இல்லை.

அடிகளார்: தாங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கூறும் செய்தி என்ன?

ரங்கராஜன்: விவேகானந்தர்களாக மாறுங்கள்! "உழைத்தல் வேண்டும், அயராது அன்போடு உழைத்தல் வேண்டும். சுயநலத்தோடு உழைப்பது அடிமையின் வேலை. பிறருக்காக உழைப்பதே தலைவனின் வேலை."

பிரபலங்களுடன் ஏற்பட்ட சில அனுபவங்கள் பற்றி.

தந்தை பெரியார்:

கறுப்புக்கொடி காட்டாதீங்க

ப்போது ஜஸ்டிஸ் பார்ட்டி, நான்பிராமின் இயக்கம் என்றெல்லாம் இருந்ததால், தமிழ் இனமே பிளவுபட்டு விடுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன். அந்த அளவுக்குத் தீவிரமாய்ப் போய்க் கொண்டிருந்தது. சில உயர் தலைவர்கள் அடங்கிய ஜஸ்டிஸ் கட்சியும் நாங்களும் ஈரோட்டில் சந்தித்துப் பேசுவதாய் ஏற்பாடானது. அந்தச் சந்திப்பில்தான் ஒரளவு எங்களுக்குள் இணக்கம் ஏற்பட்டது.

பெரியாரை எனக்கு இன்னமும் பிரியமானவராய்ச் செய்தது ஒரு நிகழ்ச்சி. திருச்சியில் ஜீவாவின் மகள் கல்யாணம் ஏற்பாடாகியிருந்தது. ஜீவா பெரியாருக்கும் வேண்டியவர், எனக்கும் வேண்டியவர். நானும் பெரியாரும் தான் அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் ஏற்பாடு செய்து வைத்தோம். பெரியார் மாளிகையில்தான் கல்யாணம் வைத்திருந்தோம். நான், பெரியார், அப்போது முதலமைச்சராய் இருந்த அறிஞர் அண்ணா எல்லோரும் கல்யாணத்துக்குப் போயிருந்தோம்.

பெரியாரின் சீடர்கள் கறுப்புக் கொடியை, கையில் வைத்துக்கொண்டு, "கடவுள் இல்லை. கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன், கடவுளை நம்புகிறவன் காட்டு மிராண்டி,” என்பது போன்ற வாசகங்களையெல்லாம் எழுதிக்கொண்டு வந்திருந்தார்கள்.

பெரியார் எப்போதும் என்னைச் சந்நிதானம் என்றுதான் அழைப்பார். தன் சீடர்களைக் கூப்பிட்டு, "டேய் சந்நிதானம் வந்திருக்காருடா. இங்கே எதுக்குக் கறுப்புக் கொடியும் இன்னொன்றும்?" என்று அதட்டுப்போட்டு அடக்கிவிட்டார். கறுப்புக்கொடி வேண்டாம் என்று சொன்னதோடு நில்லாமல் எல்லாவற்றையும் எடுத்து உள்ளே போட்டுவிட்டார். அந்த அளவுக்கு அவர் மனிதர்களின் மனங்களை மதித்தவர்.

கலைஞர் கருணாநிதி:

தென்னரசு ஒரு முறை, "அடிகளார் தி.மு.க. ஆதரவாளர் அல்ல" என்று கலைஞரிடம் கூறினார். கலைஞர், "அடிகளார். அவர்களிடம் நாம் காட்டும் மரியாதை தி.மு.க. என்பதற்காக அல்ல. அடிகளார். தமிழார்வலர். சமூக நெறியாளர் என்பதற்காகத்தான்", என்று பதில் கூறினார்.

எம்.ஜி.ஆர்:

ண்டைக்காடு கலவரத்தின்போது, முதலமைச்சர் என்ற முறையில் சமாதானம் செய்து வைக்க எம்.ஜி.ஆர். சென்றார். நிலைமையைக் கட்டுப்படுத்த அவரால் முடியவில்லை. திரும்பி விட்டார். பிறகு நான் சென்றேன். ஒரு மாதத்துக்குக் கிட்டத்தட்டத் தங்கிச் சமாதானம் செய்து வைத்துவிட்டுக் கிளம்பி வந்தேன். அதை, வெளிப்படையாய், சட்டசபையிலேயே மனம் திறந்து பாராட்டினார். "அடிகளார் சமாதான முயற்சிகளை நல்ல முறையில் செய்தார். ஒரு மடாதிபதி என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று என்னை ஓர் எடுத்துக்காட்டு போலப் பேசினார்.

நேரு:

டெல்லி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாரதி விழா அது. நேரு தொடங்கி வைத்தார். நான் தலைமை தாங்கினேன். அதன்பிறகு நம் மாவட்டத்துக்கு ஒரு முறை வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். பள்ளிக்கூட விழாவுக்கு வந்திருந்தார். பொதுவாகவே பொலிட்டிகல் எகானமி விஷயத்தில் அவரைத்தான் நான் மிகவும் அட்மயர் செய்வேன். லெனின், மார்க்ஸ், விவேகானந்தர், திருவள்ளுவர், அப்பர் சுவாமிகள் இவர்களுக்கு அடுத்தபடி எனக்கு நேருதான் வழிகாட்டி.

என் குரு சுவாமி விபுலானந்தர்

வர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புரொபசராய் இருந்தார். அவர் வீட்டுக்கு அடிக்கடி போவேன். அப்போது நான் சின்னப் பையன். அவருக்கு நிறையப் பணிவிடைகள் எல்லாம் செய்வேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் சேரிக்குப் போவார். கொஞ்சம் பொட்டுக்கடலையும் சர்க்கரையும் மடித்து எடுத்துக் கொள்வோம். அங்கே போய்ப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருவார். பிறகு அந்தப் பொட்டுக்கடலை சர்க்கரையை விநியோகம் செய்வார். பிறகு வீட்டுக்கு நடந்து வருவோம். அப்போது அவருக்குப் பாதை தெரிவதற்காக நான் அரிக்கேன் லைட் எடுத்துக் கொண்டு வருவேன். சுவாமி விபுலானந்தா எங்கே போனாலும் அவருடன் நானும் போவேன். இப்படியெல்லாம் பழக்கம் நெருக்கமானது. கடைசியில் அவர் யாழ்ப்பாணத்துக்குப் போகிறேன் என்று கிளம்பியபோது எனக்கு ஏற்பட்டிருந்த நெருக்கத்தின் காரண மாய்ப் பிரிவு தாங்க முடியாமல் நானும் வருகிறேன் என்று கத்தினேன். இந்தச் சின்னப் பயலைக் கூட்டிப்போய் என்ன செய்வது என்று நினைத்திருப்பார் போலும். நான் துங்கிக் கொண்டிருந்த நேரமாய்ப் பார்த்துக் கிளம்பிப் போய் விட்டார். இத்தனைக்கும் அவருடன் போக வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் வீட்டிலேயே போய்ப் படுத்துக் கொண் டிருந்தேன்!

1992–ல் வறுமையின்
குரல் வளையைப் பிடித்துவிடுவேனா?

நtiம் அண்மையில் படித்த, படித்துக் கொண்டிருக்கிற புத்தகம் ஸ்காண்டிநேவியாவின் சமூகவியல் பேராசிரியர்கள் கோரான் ஜூர்ஃபெல்ட் - ஸ்டஃபான் லிண்டர்பர்க் ஆகியோர் எழுதிய 'வறுமையின் பின்னணி' என்ற புத்தகம். இந்தப் புத்தகம் செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தையூர் என்ற கிராமம் பற்றிய ஆய்வு. கிராமத்தில் வறுமை எப்படித் தோன்றுகிறது, வளர்கிறது, சமுதாய வளர்ச்சிப் பணிகளையும் தாண்டி எப்படிக் கிராமங்களில் வறுமை நிலைபெறுகிறது என்பதை விளக்கும் புத்தகம். இந்தப் புத்தகம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற வறுமை நீக்கப் பணியை மேலும் ஆழமாகச் செய்யவேண்டும் என்ற உணர்வைத் தந்துள்ளது.

அரசாங்கத்தின் விலைவாசிக் கொள்கைகள், பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவை சரியாக இல்லாததால் நம்முடைய வாழ்க்கைத் தரம் மனநிறைவாய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதனால் 91-92 இல் என்னுடைய பயணங்களைக் குறைத்து எங்கள் கிராமத்தைத் தன்னிறைவுக் கிராமமாக்கி, எந்தப் பண்டமுமே வெளியில் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது என் ஆசை, விலைவாசி உயர்வினால் எங்கள் கிராமம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் வறுமையின் குரல் வளையை நெறிக்க முடியும். இல்லை யென்றால் என்னாகும்?

இன்றைக்குக் கிலோ அரிசி ஆறு ரூபாய் விற்கிறது. நகர்ப்புறத்தில் பணப் புழக்கம் இருப்பதுபோல் இன்று கிராமப்புறத்தில் புழக்கமும் கிடையாது.

இந்த நிலையில், அப்படி ஒருவன் தன் நிதி நிலைமைக்குள் தனது தேவைகளைக் கவனிக்க முடியாத நிலைமை ஏற்படுமானால், கிராமத்துக்கென்று ஒரு பொது நிதியை உருவாக்கவேண்டும். அந்த நிதியிலிருந்து அவனுடைய தேவைகள் கவனிக்கப்பட வேண்டும்.

எங்கள் கிராமக் குழந்தைகளுக்குச் சத்துணவு சரியானபடி கிடைக்கவில்லை. ஒரு குழந்தைக்குப் பத்துக்காசுதான் கொடுக்கிறார்கள். ஒரு கத்தரிக்காய்கூடக் கிடைக்காது அந்தத் தொகைக்கு அதனால் நாங்கள் ஒரு குழந்தைக்கு 150 கிராம் காய்கறி கொடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டு அதற்கான உற்பத்தித் திட்டமும் போட்டு நிறைவேற்றத் துவங்கியிருக் கிறோம். நாங்கள் அரசுக்கு என்ன சொல்லிக் கொள்ள விரும்புகிறோம் என்றால், தரிசு நிலங்கள் வீணாய்ப் போவதைக் காட்டிலும் விவசாயிகளை வைத்துக் காய்கறி களைப் பயிர் செய்யுங்கள். அதில் வருவதைக் குழந்தைகள் சத்துணவுக்குச் செலவிடுங்கள். அப்படிச் செய்தால் குழந்தை களும் பலன் பெறுவார்கள். தரிசு நிலங்களும் உபயோகப் படும். அப்படிச் செய்யாமல் காசாகக் கொடுக்கிறீர்களே, அந்தக் காசுக்கு அவர்கள் காய்கறிகள் வாங்குகிறார்களா என்று யார் கவனிப்பது?

எல்லோருமே ஒரு விஷயம் புரிந்துகொள்ள வேண்டும். நான் சுயநலமாய் என் கிராமத்தை மட்டும் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை. என் ஊரை மட்டுமல்லாமல், பசும்பொன் மாவட்டத்தையும், தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகில் ஒரு சிறிய ஊரையும் எங்கள் திட்டத்தின் கீழ்கொண்டு வரவிருக். கிறோம். தஞ்சை மாவட்டத்தில் நாங்கள் தேர்ந்தெடுத் திருக்கும் ஊர், கீழ்ப்பழையாறை என்பது. அது மங்கையர்க்கரசி பிறந்த ஊர். ஏழாம் நூற்றாண்டில் சமண சமயத்தோடு போராடியவர் மங்கையர்க்கரசி. பாண்டியன் நெடுமாறனுடைய மனைவி.

அடுத்தபடியாய், நாயன்மார்கள், ஆழ்வார்கள் இவர்கள் பிறந்த ஊர்களுக்கும் வாழ்ந்த ஊர்களுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் தர வேண்டும் என்பது என் விருப்பம். .

அதேபோல் நந்தனார் என்னும் திருநாளைப்போவார் பிறந்த மேலாதனுர் எடுத்துச் செய்துகொண்டிருக்கிறேன்: அதுவும் தஞ்சை மாவட்டத்தில்தான் இருக்கிறது. ராமானுஜர் மதில் மேல் ஏறி உபதேசம் செய்த திருக்கோஷ்டியூரையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆகவே, என் பணிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முடங்கிவிடப் போவதில்லை. இனிமேல் செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேச்சுக்கு இரண்டாம் இடம் கொடுப்பது என்று தீர்மானித்திருக்கிறேன்.

பொங்கல் நாள்

நாங்கள் எங்கள் பண்ணையில் பொங்கல் கொண்டாடுவதைப் பார்க்கவே மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கும். பெரிய திடலில் பொதுப் பொங்கல் போடுவோம். அன்று சிறந்த விவசாயிகளுக்குப் பரிசு கொடுப்போம். இதற்காகவே ஒரு தேர்வுக் கமிட்டி உள்ளது. கதிர் விடும் சமயத்திலே கமிட்டி போட்டு விட்டோமென்றால், அவர்கள் கதிரை எடுத்து நெல்மணிகளை எண்ணி, எந்த விவசாயியின் கதிரில் அதிக நெல்மணிகள் இருக்கின்றனவோ, அவர் களுக்குப் பரிசு என்று அறிவிப்பார்கள்.

பொங்கல் தினமாதலால் எல்லோருக்கும் பிரசாதம், திருநீறு எல்லாம் கொடுப்பேன்.

காலணா கொடுத்தால் திருக்குறள்

திரு. பரமகுரு

சின்ன வயதில், அடிகளாரின் பூர்வாசிரம அண்ணன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டி ருந்தார். அப்போது அடிகளார் அங்கு இருந்த புரொபசர் களுக்குப் பால் கொண்டு போவாராம். விபுலானந்தர், ரா.பி. சேதுப்பிள்ளை இவர்கள் அந்த வரிசையில் இருந்தவர்கள்.


கு.XVI.5. ரா.பி. சேதுப்பிள்ளைக்குப் பால் கொண்டு போகும் போது, அவர் அடிகளாரைத் தினந்தோறும் ஒரு திருக்குறள் சொல்லச் சொல்லுவாராம். அப்படி மனப்பாடமாய்ச் சொன்னால் காலணா தருவாராம். அந்தக் காலணாவை வாங்குவதற்காகவே அடிகளார் தினமும் ஒரு திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்பிப்பாராம். அதனாலேயே அவருக்குத் திருக்குறளில் ஆழ்ந்த பற்றும் ஆர்வமும் ஏற்பட்டது என்று அடிக்கடி சொல்லுவார்.

இலக்கிய சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நான் 23 வருடமாய் அடிகளாரின் உதவியாளன்.

நாங்கள் எப்போதெல்லாம் கூப்பிடுகிறோமோ அப்போதெல்லாம் உடனே சாமி வருவார்

செல்வராஜ் (அடிகளாரின் உதவியாளர்):

நான் இங்கு அறுபத்தைந்தாம் வருடத்திலிருந்து வேலை செய்கிறேன். அடிகளார் (சாமி) பட்டத்துக்கு வரும் போது நான் பள்ளி மாணவன். சாமி பட்டத்துக்கு வந்த போது ஏழ்மை நிலையில்தான் கிராமம் இருந்தது. அவர் வந்தபோது மடத்தில் கஞ்சித்தொட்டி ஊற்ற வேண்டிய நிலை! அதாவது, ஊர்க் குழந்தைகளுக்கெல்லாம் மதியம் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் கஞ்சி ஊற்றுவார்கள். அந்த நிலையில் இருந்த பள்ளிக்கூடத்தை எடுத்துச் சீர்திருத்தியவர் சாமிதான்.

சாமி ரஷ்யாவுக்குப் போய்வந்த பிறகு கூட்டுறவு நிறுவனங்களை நிறுவ வேண்டும் என்று தீர்மானித்தார் அப்போது 1975இல் நெருக்கடி நிலை பிரகடனம் ஆனது. 1977இல் கிராமத்தை மிகவும் நன்றாய் மேம்படுத்த நினைத்தார். அப்போது சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் சென்ட்டர் எனப்படும் சிக்ரியின் உறவு கிடைத்தது. அந்த விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடன் கிராமத் திட்டக்குழு ஒன்றை அமைத்தார்கள். யோசனைகளை அவர்களிடமும், நிதியுதவிக்கு பாங்கையும் அணுகினார் அடிகளார். திட்டங்களுக்கு அரசின் உதவியை நாடினார்.

அப்போதுதான் கூட்டுறவு நிதி நிலைமையில் மேம்பாடு எல்லாம் ஏற்பட்டது. கிராமத்து விவசாயிகளுக்கு வருமானம் மேம்பட்டது. பிளாஸ்டிக் தொழிற்சாலை, முந்திரிக் கொட்டையின் ஓட்டிலிருந்து பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை, கார் பாட்டரிகள் தயாரிக்கும் தொழிற்சாலை, பொட்டாசியம் குளோரைடு தொழிற்சாலை ஆகியவை ஏற்பட்டன. கடைசி இரண்டு ஐட்டங்களும் ஹைடெக்னாலஜி. அதுகூடக் கிராமத்தை எட்டியதற்குச் சாமிதான் காரணம்.

படித்தவர்களுக்கு, படிக்காதவர்களுக்கு, பெண்களுக்கு எல்லோருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கிற மாதிரி செய்து விட்டார். எதுவுமே செய்ய லாயக்கில்லாதவர்களுக்குக் கூடக் கல் உடைக்கும் தொழில்!

எங்கள் கிராமத்து இளைஞர்கள் நன்கு படித்து, பொறியியல் போன்ற துறைகளில் மேற்கொண்டு படிக்க விரும்பினால் சாமியே சீட் வாங்கித் தருவார்.

இங்கு 544 குடும்பங்கள் உள்ளன. அனைத்திலும் உள்ள ஒவ்வொருவரையும் சாமி தனித்தனியாய் நன்கு அறிவார் குழந்தைகளைக்கூட நன்றாய்த் தெரியும்.

டாக்டர் கே. பாலகிருஷ்ணன் (சிக்ரி சேர்மன்):

1976 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் எங்களை இந்த ஊரில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். முன்பு பாலித்தின் பைகள் வாங்கி ஒட்டுவது மட்டும் செய்து கொண்டிருந்தார்கள். 1976இல் சிக்ரி இந்த ஊரைத் தத்து எடுத்துக்கொண்ட பிறகு, ஒவ்வொன்றையும் எவ்வாறு முன்னேற்றலாம் என்று ஆராய ஆரம்பித்தார்கள். திட்டக்குழு என்ற ஒன்றை அமைத்தார்கள். சிக்ரியின் விஞ்ஞானிகள், வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள், கிராமவாசிகள் ஆகியோர் அதில் இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் இந்தக் கிராமத்துக்கு என்னென்ன தொழில்கள் பொருத்தமாய் இருக்கும் என்று ஆய்வு செய்து சொல்லுவார்கள். சூழ்நிலையும் கெடாமல் குறிப்பிட்ட அளவில் வேலைவாய்ப்பும் கிடைக்கிற மாதிரியும் ஒரு அறிவியல் தொழில் நுட்பக் கண்ணோட்டம் வரும் வகையிலும் சொல்வார்கள். ஏற்கனவே இருந்த கதர் கிராமத்தொழில் போன்றவற்றில் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும் ஆய்வுகள் செய்வார்கள்.

அடிகளாரால் எங்கள் கிராமத்துக்கு ஏகப்பட்ட நன்மைகள். எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்புக்கள். டி.வி. அசெம்பிள் செய்யும் யூனிட் போட்டிருக்கிறோம். எலக்டிரானிக் கருவிகள் டிரெயினிங் சென்டர் போட்டிருக் கிறோம். எங்கள் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பாட்டரித் தொழிற்சாலை நிறுவியிருக்கிறோம்.

நாங்கள் தினசரி மாலை வேலைகளிலோ, சனி ஞாயிறுகளிலோ ஒரு மீட்டிங் போடுவோம். ஆரம்பித்த தொழில்கள் எப்படி நடக்கின்றன என்று அதில் அலசி ஆராய்வோம். பொதுவாக, நிர்வாகச் சிக்கல்கள் நிறைய வரும். மூலப்பொருட்கள் கிடைக்காமல் போகலாம். குறிப்பிட்ட நேரத்தில் லைசன்ஸ் கிடைக்காமல் போகலாம். அல்லது மூலப்பொருள்களுக்குப் பணம் கிடைக்காது. சில நேரங்களில் தேவையான அனுமதி கிடைக்காது. அதுபோன்ற சமயங்களில் சாமிதான் தலையிட்டுத் தீர்த்து வைப்பார். கலெக்டரிடம் பேசியோ அல்லது தேவைப்பட்ட பெரிய அதிகாரிகளிடம் பேசியோ நமக்குச் சாதகமாக முடித்துக் கொடுப்பார். தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் அது எங்கள் சம்பந்தப்பட்டதாய் இருந்தால் உடனடியாகத் தீர்த்துக் கொண்டு விடுவோம். அதற்கு வெளியாட்களின் உதவி தேவை என்னும் பட்சத்தில் உடனே டிரங்க்கால் போட்டு வரவழைத்து விடுவார் சாமி. எங்களுக்கு எப்போது தேவை என்றாலும் சாமி வருவார். அவர் எங்கே இருந்தாலும் போனில் அழைத்துப் பிரசினையைச் சொல்வோம்.

கிராமத்துக்கு வேண்டிய முன்னேற்றத்தை அடிப்படை நிலையில் அவர் அருமையாய் ஏற்படுத்தி வைத்திருந்தார். மாதர் சங்கம், சிறுவர் சங்கம், கிராம நலச் சங்கம், என கிராம முன்னேற்றத்திற்கு என்னென்ன கூட்டுறவு அமைப்புக்கள் வேண்டுமோ அவை அனைத்தையும் தயாராய் வைத்திருந்தார். மக்களையும் தயார்ப்படுத்தியிருந்தார். அதனால்தான் இந்த அட்வான்ஸ்டு டெக்னாலஜியை கிராம மக்கள் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றிருக்கிறார்கள்.

வீரப்பன் அம்பலம்:

ங்குள்ள நேருஜி பாலித்தீன் சங்கத்தின் மூலமாக அச்சு இயந்திரம் வாங்கி, பாலித்தீன் பைகளில் அச்சடிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். எங்கள் ஃப்ளுரைடு ஆலையிலும் நாங்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். இதுபோன்ற கூட்டுறவுச் சங்கங்களில் ஏற்றுமதி செய்வது என்பது இந்தக் குன்றக்குடியில் உள்ள சங்கத்தின் மூலமாகத்தான் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே? இதே மாதிரி ஃப்ளூரைடு வேண்டுமென்று வெளிநாடுகளில் கேட்கிறார்கள். அதற்காகவே தற்போதுள்ள கூட்டுறவுச் சங்கங்களை மேலும் மெஷின்கள் வாங்கி விரிவு படுத்தத் தீர்மானித்திருக்கிறோம்.

மேலும் இங்கு முந்திரியின் தோலைக் கொண்டு பெயிண்ட் தயாரிக்கும் ஆலை ஒன்று வைத்திருக்கிறோம். தற்போது ஐயாயிரம் லிட்டர்கள்தான் தயாரிக்கிறோம், மேற் கொண்டு பத்தாயிரம் லிட்டர்கள் தயாரிக்க ஏற்பாடுகள் செய்துவருகிறோம்.

டாக்டர் ஷெனாய் அலுமினியத் தொழிற்சாலை ஒன்றும் இயங்கி வருகிறது. இதை இன்னும் விரிவாக்கி வீடுகளுக்குத் தேவையான பொருட்களும், பஸ்ஸில் போகும்போது நாம் பிடித்துக் கொள்கிறோமே, அந்தக் 'கிளாம்ப் எல்லாம் செய்ய முடியும். அதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இத்தனை சிறிய கிராமத்தில் இவ்வளவு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது என்பது மிகவும் பெருமையளிக்கிறது.

அம்மாவிடம் நான் சொன்ன பொய்
ன் பதினேழாவது வயதிலேயே எனக்கு ஆன்மீக ஆர்வம் தொடங்கிவிட்டது. பிற்பாடு தருமபுரத்தில் அவர்களுக்கே ஒருவர் தேவையாய் இருந்து என்னைக் கேட்டார்கள். துறவுக்கு அனுமதி வாங்கிக்கொண்டு வருவதாய்ச் சொல்லிவிட்டு ஊருக்கு வந்தேன். வீட்டில் பயங்கர எதிர்ப்பு. என் தாயார் பயந்து விட்டார். "அதெல்லாம் ஒண்ணும் வேணாம்டா ரங்கநாதா, (அதுதான் என் பெயர்) நீ வேலை பார்த்துக் கிழிச்சது போதும். இங்கேயே இருந்து காடு கழனியையெல்லாம் பாத்துக்கோ" என்றார். நான் சும்மா தலையாட்டி விடவில்லை. "நான் வேலை பார்க்கும் இடத்தில் மேலிடத்துக்குச் சொல்லாமல் வந்தால் அது தப்பு. நான் ஒரு நடை போய்ச் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன்," என்று அவர்களிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். நான் துறவறம் மேற்கொண்ட பிறகு என் மனதில் சஞ்சலங்கள் வந்ததே கிடையாது.