குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-16/பின்னிணைப்பு - 2







பின்னிணைப்பு
'‘பொன்’னுரை
தவத்திரு பொன்னம்பல அடிகளார்

நேரு பெருமகனாரின் பொது வாழ்க்கையில் மகாத்மாவின் தாக்கம் இருந்தது. ஒரு படைப்பாளியின் படைப்புகளில் தாம் ஏற்றுக்கொண்ட இலட்சிய புருஷரின் தாக்கம் இருப்பது இயல்பு வெகுசிலருக்கே தாம் ஏற்றுக்கொண்ட இலட்சியத் தலைவர் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவது உண்டு. பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு விண்பழித்து மண்ணில் கால்பதித்து இறைவன் திருவடி தீட்சை தருவது உண்டு. இறைவனின் உய்விக்கும் பணியில் சில நேரங்களில் பக்குவப்படாத ஆன்மாக்களுக்கும் அவன் அருட்பார்வை அமைந்து விடுவதுண்டு.

'தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!'

என்று குருவருள் வழியே திருவருளும் துணை நிற்க, சில ஆன்மாக்களுக்கு இன்ப அன்புப்பேறு வாய்ப்பதுண்டு. மணிவாசகப் பெருமானுக்குக் குருந்தமரத்தடியில் இறைவனின் திருவடி தீட்சை வாய்க்கப் பெற்றது. கடைக்கோடி ஆன்மாவாகிய நம்மை எப்படி இறைவன் இறைபணிக்குக் குருவருளின் வழியே ஆட்படுத்தினான்? என்னே, அவன் எளிவந்த கருணைப் பெருவெள்ளம்

போகங்களைத் துய்த்து மகிழவேண்டிய சித்தார்த்தர் எப்படி போதிமரத்தடிப் புத்தராக மாறினார்? கண்ணியம் மிக்க ஆங்கிலக் கனவானாக லண்டன் மாநகரில் உலா வந்த மோகனதாஸ் கரம்சந்த், ஆசைகள் துறந்ததன் அடையாளமாய் ஆடைகள் துறந்து அரைநிர்வாணப் பக்கிரியாய், மகாத்மாவாய் உலா வந்தாரே இப்படி மகத்தான மனிதப் புனிதர்களைப் போல் அல்லாமல் கனவுகளையும் கற்பனைகளையும் சுமந்து திரியும் ஒரு சராசரி இளைஞனைத் துறவுப் பாதைக்கு மாற்றியது எது? காந்தம் கண்ட இரும்புபோல் நம்மைக் கவர்ந்து இழுத்தது எது? குருமகாசன்னிதானத்திடம் பிறைநிலாவாகத் தொடங்கிய உறவு நிறைநிலாவாக வளர்ந்தது. பின்னோக்கிய நிகழ்வுகள் நம்மைக் கரைத்து இழுத்துச் செல்கின்றன.

பூர்வாசிரம நாள்கள்!

நம் அருள்நெறித் தந்தை குருமகாசந்நிதானம் மதுரைக் கிளைத் திருமடத்திற்கு எழுந்தருளும்போது சிறிய வயதில் வணங்கி அருட்பிரசாதம் பெற்றதுண்டு. நகர வளர்ச்சி நெருக்கடியால் மகாசன்னிதானம் பயணியர் விடுதியில் தங்கும் நிலை ஏற்பட்டது. நாமும் கல்வி பயின்ற காலத்தில் மகாசன்னிதானத்தைத் தரிசிக்கின்ற வாய்ப்பு நமக்குக் குறைந்து போனது.

‘புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்’'

என்ற குறளுக்கு ஏற்ப, சேய்மையிலிருந்து மகாசன்னிதானத்தின் செயல்களைச் செய்தித் தாள்கள், வானொலி வழியே உற்றுநோக்கி உள்ளக்கிழியில் உரு எழுதி வந்தோம். கல்லூரியில் பயிலத் தொடங்குகின்ற காலத்தில் மதுரையில் நடைபெறும் மகாசன்னிதானத்தின் ஆன்மீக, இலக்கிய சொற்பொழிவுகளைத் தொலைவிலிருந்து கேட்கும் தொண்டர் ஆனோம்.

வயிற்றுக்கும் மூளைக்கும் போராட்டம் எப்பொழுதும் வயிறுதானே வெற்றிபெறும். நம் வாழ்விலும் அதுவே வெற்றி பெற்றது. வாழ்க்கைக்கு வழிகாட்டவேண்டிய கல்வியைத் தேர்ந்தெடுக்கும்பொழுது வயிற்று ஊருக்குப் போகின்ற பாதைதானே என்று பலமுறை சரிபார்த்துவிட்டுப் பலரும் வழிதவறிப் போகின்றார்கள். அறிவியல், பொறியியல், மருத்துவஇயல் பயின்றால் தங்கத்தட்டில் வேலை கிடைக்கும் என்றும் தமிழ் இலக்கியம் பயின்றால் வாழ்வில் எதிர்காலமே இல்லை என்றும் கருதும் வழக்கமான மாயையில் நாம் சிக்கிக் கொண்டோம். எந்தத் துறையினைத் தேர்ந்தெடுத்தாலும் தேர்ந்தெடுத்த துறையில் கடுமையான உழைப்பு விடாமுயற்சி, தன்னார்வம், அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் முன்னேறலாம் என்பதை இளைய தலைமுறைக்குச் சுட்டிக் காட்டும் வழி காட்டுதல்கள் எப்பொழுதும் குறைவு. அறிவியல் அமிலத்திற்குள் நம் தமிழ் இலக்கியத்தாகம் அவிந்து போனது. இலக்கிய மேடைகளில் உலாவந்த சுதந்திரச் சிறகுகள் வெட்டப்பட்டன. ஆய்வுக்கூடமே தவச்சாலை ஆனது. அமிலத்தில் வெந்து போன இலக்கிய இதயத்தின் இலக்கியத் தாகத்தைத் தீர்க்கும் அமுத ஊற்றாய் அருள்நெறித் தந்தையின் மேடைகள் நம்மை ஈர்த்தன. அருள்நெறித் தந்தையின் இரவு நேரப் பல்கலைக்கழகங்களில் தூர இருந்து அகரம் வாசிக்கும் ஏகலைவனாய் நாம்.

குருநாதருக்குக் கட்டை விரலைக் காணிக்கையாய்த் தந்த ஏகலைவன்போல் அன்றி நம்மையே காணிக்கையாய் ஒப்படைக்கப் போகின்றோம் என்பதை அந்நாளில் நாமும் எவரும் அறிந்திடவில்லை. கல்லூரியில் பட்ட வகுப்பு இரண்டாம் ஆண்டு பயின்று கொண்டிருந்த நேரம். மதங்களின் வலிமையை மண்டை ஓடுகளின் எண்ணிக்கையால் மதவெறியர்கள் எண்ணிக் கொண்டிருந்த நேரம்: மீண்டும் ஒரு நவகாளி! குமரி முனையில் கருங்கடலுக்கு அருகே செங்கடல்! மனிதக் குருதியால் மண்டைக் காடுப் பகுதி முழுவதும் செங்கடல்.

உயிர்ச்சேதம்! பொருட்சேதம்! மதவெறித் தீயை அணைக்க முடியாது. அரசு நிர்வாக இயந்திரம் கூட ஸ்தம்பித்தது. குமரிமுனையில் தோன்றிய 'நவகாளி'யை அடக்க எந்த மகாத்மாவைத் தேடுவது? என்று பரிதவித்துக் கொண்டிருந்த வேளையில் குன்றக்குடியில் இருந்து அமைதியின் தூதுவர் குமரிமுனைக் கலவரத்தை அடக்கப் புறப்பட்டார், உயிரைப் பணயம் வைத்த பயணம்.

மகாத்மா நவகாளியில் மதக் கலவரத்தை ஒடுக்கியதைப் போல, மனித நேய மகாத்மா மண்டைக்காட்டுக் கலவரத்தை அடக்கியதை மனித நேயம் விரும்பும் எவரும் எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. நமது உள்ளத்து உணர்வுகள் ஒருங்கே திரள மகாசன்னிதானத்தை எண்ணி அழுத உணர்வுகள் வரிகளாயின. கவிதை இலக்கண வரம்புக்குள் வராத அந்த வரிகளை என்ன பெயரிட்டு அழைப்பது? தெரியவில்லை! நம்து உள்ளத்து உணர்வுகளை ஏட்டில் பதிவு செய்து அன்றாடம் அடைகாத்து வந்தோம். பின்னாளில் அந்தக் கவிதை நாம் ஆசிரியர் பொறுப்பில் இருந்த மணமலர் இதழில் வெளிவந்தது, அனுமன். இராம நாமம் செபித்ததைப் போல மணமலர் ஆசிரியர் பொறுப்பில் இருந்து நாம் எழுதிய முதலும் கடைசியுமான. எழுத்து, மகாசன்னிதானத்தைப் பற்றிய கவிதை மட்டும் தான் மனித நேய மகாத்மாவே என்று தலைப்பிட்டுத் தொடங்கிய வரிகள் இவைதான்;

'மண்டைக் காட்டில்'
மதங்களின் வலிமையை
மண்டை ஓடுகளின் எண்ணிக்கையால்
மத வெறியர்கள் எண்ணிக்கொண்டிருக்கையில்
உம்மால்தான்
பல மனிதப் படுகொலைகள்
தடுத்து நிறுத்தப்பட்டன!
கபால ஓடுகளையும் மனிதக் குருதியையும்
அடையாளச் சின்னமாய் அணிந்த
ஆயுதம் ஏந்திய வன்முறையாளர்களை
அமைதி வழிக்குத் திருப்பிய
புதிய அகிம்சாமூர்த்தி நீர்தான்
அனல் பறக்கும் கந்தகக்காட்டின்
வெப்பத்தைத் தணிக்க
கற்பக விருட்சமே!
மனிதப் புனிதரே!
மனித நேய மிகுதியால்
நீர்விட்ட கண்ணீர்த்துளிகளே
மதவெறித் தீயை அணைத்த
'புனித நீர்'!
இரும்புப் பெட்டிகளில் சிறையிருந்த
இலக்கியத்தை எடுத்து
ஏழைகளுக்குப் பரிமாறியவரே!
பாமரனையும்
பைந்தமிழ் இலக்கியத்தேன் பருகச்
செய்த பாரிவள்ளலே!
வெறும் கையில் விபூதிகுங்குமம்
வரவழைக்கும்
மாயத்துறவியல்ல நீர்!
ஆனாலும்
ஏமாற்றங்களிலே வாழ்கின்ற
மக்களின் வாழ்க்கையில்
மாற்றங்களை நிகழ்த்துகின்ற
மந்திரவாதி நீரே!
உம்பார்வை பட்ட பின்தான்
பாலைகள் எல்லாம்
பசுஞ்சோலைகளாயின!
நடக்க இயலாத நெருஞ்சிக் காடுகளும்
நந்தவனங்களாயின!
சஹாராக்களைக் கூடச் சமவெளிகள்
ஆக்கிய சாதனையாளரே!
ஆட்டுப்பாலும் நிலக்கடலையும்
தின்றவாறே
ஏகாதிபத்தியத்தை எஃகு குரலில்
அதட்டினாரே காந்தியடிகள்!
அவர்,
மறைந்து விட்டார் என்றிருந்தோம்!
இல்லை! இல்லை!
சிந்தனைச் சிற்பி சாக்ரடீஸின் பகுத்தறிவு,
பேரறிஞரின் பேச்சாற்றல்,
விவேகானந்தரின் ஆன்மீகப் பணி,
நேருவின் சோசலிஸம்
மகாத்மாவின் மனிதநேயம்
ஆகிய அனைத்தின் ஓர் உருவாய்
தவக்கோலத்தில்
தமிழ்மாமுனிவராய் அவதரித்தவரே!
காந்தியின் காலம் ஏசுவின் காலம்
என்பதுபோல்
அடிகளாரின் காலம் என்பதை
வருங்கால வரலாற்று ஏடுகள்
எழுதி வைக்கும்.
அவர் காலத்தில் நாமும் வாழ்கிறோம்
என்ற பெருமையுடன்
அவரின் தூய மனிதநேயப்
பணியினைப்
பலப்படுத்தும் அரணாய் அமைவோம்!"


தொலைவிலிருந்து ஆன்ம நாயகராக மகாசன்னிதானத்தின்பால் கொண்ட வளர்பிறை என வளர்ந்த வண்ணம் இருந்தது. நவீனத்தை ரசிக்கின்ற இளைஞனின் ஆன்மத் துடிப்பினை மகாசன்னிதானம் உசுப்பி விட்டார்கள்.

முதன்முறையாகப் பட்டம் பெற்ற கையோடு மகா சன்னிதானத்தை, குன்றக்குடியில் தரிசித்தோம். குன்றக்குடி மேல்மாடிக் கொட்டகையில் மகாசன்னிதானத்தின் தரிசனம்! மகாசன்னிதானத்தின் நம் முதற் சந்திப்பு நமது விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்துவிட்டு நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினோம். மகாசன்னிதானம் பார்த்த முதற்பார்வை ஆழமான அர்த்தம் நிறைந்ததைப் போல் இருந்தது. நமக்குப் புரியவில்லை. நம்மிடம் சில நிமிடம் பேசினார்கள். விடைபெற்ற நாம் கீழே இறங்கும்பொழுது அருகிலிருக்கும் ஊழியரிடம் "இவரைத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “மதுரை மணிமகன் என்பது மட்டும் தெரியும்; நமக்குப் பழக்கம் இல்லை” என்று அவர்கள் கூறியது படியில் இறங்கும் நம் செவிகளில் விழுந்தது. பார்த்த முதற்பார்வையின் பொருள் பின்னர்தான் நமக்குப் புரிந்தது.

மகாசன்னிதானத்தின் மதுரைப் பயணங்களின் பொழுது நாம் உடனிருந்து தொண்டு செய்வது பழக்கம். மகாசன்னிதானம் புறப்பட்டுச் செல்லும்வரை உடனிருந்து இட்டபணி நிறை வேற்றுவோம். மகாசன்னிதானம் நிறைய விஷயங்களை நம்மோடு விவாதமுறையில் கேட்பார்கள். மதுரையில் ஒரு கூட்டம் முடிந்ததும் சின்னாளப்பட்டியில் பட்டிமன்றம். மகாசன்னிதானம் மகிழ்வுந்தில் ஏறச் சொல்லி உத்தரவு. மகிழ்வுந்தில் ஏறிவிட்டோம். பயணத்தின்போது பல வினாக்கள் கேட்கப்பட்டன. பட்டிமன்றம் முடிந்து திரும்பி வரும்பொழுது பட்டிமன்றத்தின் தீர்ப்பைப் பற்றிக் கருத்துக் கேட்டார்கள். கூறினோம். மகிழ்ந்து பாராட்டினார்கள். மதுரையில் நடந்த திருக்குறள் பேரவை மாநில மாநாட்டில் “திருக்குறள் காலம் கடந்த நூலா? காலத்தை வென்று விளங்கும் நூலா?” என்ற பட்டிமன்றத்தில் அவர்கள் வழங்கிய அருமையான தீர்ப்பு "திருக்குறள் காலம் கடந்து விளங்குகின்றது. ஆனால் காலத்தை வென்று விளங்கவில்லை” என்று கூறிய தீர்ப்பில் நாம் உறைந்து போனோம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட கறுப்புதினம் சரித்திரம் தன் மதவெறித் தீயை மீண்டும் பதிவு செய்து கொண்ட துக்க நாள். எந்தச் சமய பீடமும் அதைப்பற்றி அக்கறை காட்டவில்லை. மதுரை வீதியில் மதவெறியை எதிர்த்து மகாசன்னிதானம் குரல் கொடுத்தார்கள். மதுரையில் மிகப் பிரமாண்டமான சமய நல்லிணக்கப் பேரணி மகாசன்னிதானம் ஒரு வாரம் முகாமிட்டு நல்லிணக்கப் பேரணிப் பணி ஆற்றினார்கள். மகாசன்னிதானம் இட்ட கட்டளையை நாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தோம். பேரணிக்கு இருதினங்களுக்கு முன்பு:நாம் மகாசன்னிதானத்திடம் நமது கருத்தை விண்ணப்பித்தோம். “சமய நல்லிணக்கம் ஒருதரப்பாய் இருந்து விடக் கூடாது" என்றும், “சிறுபான்மை மக்கள் பெறும் சலுகைகள், உரிமைகள்” பற்றியும் பேசினோம். மகாசன்னிதானம் நம்மோடு மிக நீண்ட நேரம் பேசினார்கள். நிறைவில் நல்லிணக்கத்திற்கு நாம் இணங்கினோம். பேரணிப் பணிகள் மிக விரைவாகவும் நிறைவாகவும் சிறப்பாகவும் நிகழ்ந்தன. பிரமாண்டமான பேரணி மிகச் சிறப்பாக நடந்தேறியது. பலரும் பாராட்டினார்கள்.

குன்றக் குடியின் உற்பத்திப் பொருள்களின் சந்தை வாய்ப்பிற்கான விற்பனை மையம் ஒன்று மதுரையில் தொடங்க வேண்டும் என்று ஆணை இட்டார்கள். நாமே விற்பனை மையத்தைத் தொடங்குவதாக ஒப்புக் கொண்டு, “குன்றக்குடிச் சிறப்பங்காடி” என்ற பெயரில் பல்பொருள் அங்காடி தொடங்கப் பெற்றது. சிவகங்கை பிரியதர்சினி' தொலைக்காட்சிப் பெட்டி முதல் குன்றக்குடியில் தயாரான ஊறுகாய், ஜாம் வரை அனைத்தும் விற்பனை செய்யும் விற்பனை நிலையம் தொடக்க விழா மகாசன்னிதானம், தலைமை ஏற்று அங்காடியைத் திறந்து வைத்தார்கள். மண்டல இணைப்பதிவாளர், காவல்துறைக் கண்காணிப்பாளர், தொழில் வணிகக்கழகத் தலைவர் சோலன்கி முதலியோர் பங்கேற்றனர். விழாவில், நாம் வரவேற்றுப் பேசினோம். மகாசன்னிதானம் நம் வரவேற்புரையைக் கூர்ந்து கேட்டார்கள். நமது வரவேற்புரைக்கு அரங்கில் மிகுந்த வரவேற்பு! எல்லாப் பெரியவர்களும் நம் பேச்சைக் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசினார்கள். தொழில் வணிகத் தலைவர் ஜெட்டலால் சோலன்கி "புதிய நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி[1] கணேசனை எங்களுக்குத் தாருங்கள்," என்றும் மேடையில் பேசினார். விழா நிறைவாக அமைந்திருந்தது. விழா முடிந்த பின்பும் நாமே பேசப்பட்டோம். ஆண்டுகள் இரண்டு ஓடுகின்றன. ஒருநாள் மதுரை தமிழ்நாடு தங்கும் விடுதியில் இருந்து மகாசன்னிதானத்திடமிருந்து தொலைபேசி அழைப்பு! எப்பொழுதும் பயணத்திட்டம் பற்றிய அஞ்சலட்டை. மதுரைப் பயணமாய் இருந்தால் மதுரை அலுவலகத்திற்கு வந்து விடும். அப்படி அஞ்சலட்டை எதுவும் வரவில்லை. நெல்லையில் இருந்து திரும்பி வரும்பொழுது மகாசன்னிதானத்தின் இடைத்தங்கல், அப்படித் தங்குவதாகப் பயணத்திட்டத்தில் இல்லை. உடன் பயணம் செய்தவர்களுக்கும் புரியவில்லை. காலையில் 10 மணிக்கு மகாசன்னிதானத்தின் அறைக்குள் நமக்கு அழைப்பு அறைக்குள் சென்று வணங்கி ஆசி பெற்றோம். மகாசன்னிதானத்தின் உரையாடல் தொடர்ந்து மாலை 6 மணி வரை நீண்டது. நம்மிடம் பல வினாக்கள் தொண்டு வாழ்க்கைக்கு, துறவு வாழ்க்கைக்கு நமக்கு அழைப்பு உலகியல் வாழ்க்கையில் சராசரி நிலையில் உள்ள நாம் பக்குவ வாழ்வுக்குப் பழக்கப்பட இயலுமா? என்று நமது மறுப்பு. மகாசன்னிதானம் நவீனத்தை நேசிக்கின்ற, நம்முள் மறைந்திருந்த ஆன்மத் தேடலை அடையாளம் காட்டினார்கள். நீண்ட மெளனம் சம்மதமாய் ஏற்கப்பட்டது. ஆசி வழங்கினார்கள்.

மகாசன்னிதானம் ஞானபீடம் ஏறிய நாற்பதாம் ஆண்டு விழா திருமடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் மறுநாள்தான் நம் ஆதீனப்புலவர் மரு. பரமகுரு அவர்களின் இல்லத் திருமண விழா. அந்தத் திருமணவிழாவில் கலந்து கொள்வதே நமது திட்டம். ஆனால் மதுரையில் புதிதாக வணிகம் தொடங்கும் நண்பர் ஒருவர், தான் புதிய கட்டிடத்தை வாடகைக்குப் பெறுவதற்காக நம்மையும் வற்புறுத்தி அழைத்தார். நாம் "மறுநாள் திருமணத்தில் கலந்து கொள்கின்றோம். இணைந்து அந்தப் பணியையும் முடிக்கலாம்" என்று சொன்னோம். அந்த நண்பர் மறுத்து விட்டார். "இந்த நாள்தான் நல்லநாள். அவசியம் வரவேண்டும்” என்று வற்புறுத்தி அழைத்து வந்தார். நாம் வந்தது தெரிந்ததும் மகாசன்னிதானத்திடமிருந்து அழைப்பு "இன்று நல்ல நாள். இன்றைக்கு இங்கே இருக்கலாம்" என்று மகா சன்னிதானத்தின் உத்தரவு. "வீட்டில் சொல்லிவரவில்லை. சொல்லி வருகின்றேன்.” என்று நம்முடைய பதில். "பிறகு சொல்லிக் கொள்ளலாம்”- இது மகாசன்னிதானம் நிகழ்வது யாதும் நமக்குப் புரியவில்லை. எல்லாம் அவன் அருள் அவன் செயல்

“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்;
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்.
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்;
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை;
தன்னை மறந் தாள்தன் நாமம் கெட்டாள்;
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”

என்ற அப்பர் பெருமானின் திருவாக்கு நம் வாழ்வைப் பொருத்தவரையில் முழுமையும் உண்மையாயிற்று உறவுகளைத் தவிர்த்துத் துறவு என்னும் விரிந்த உலகில் உலக உறவுகளை நம் உறவுகளாய்ப் பேணும் பயணம் தொடர்கின்றது.

‘மண்ணும் மனிதர்களும் நம்மைப் பக்குவப் படுத்தியது. இமயத்தின் சுமை இந்தச் சிறிய குருவியின் தலையில் ஏற்றப்பட்டுள்ளது. இருந்த பொழுதும் நம்பிக்கைச் சிறகை நீங்கள் நல்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு உயரப் பறந்து உலகை வலம் வருவோம்! மனித நேய மகாமேரு காட்டிய திசையில் தடம் மாறாத பயணம் என்றும் தொடரும் நம் அருள்நெறித் தந்தை அறியாமை இருள் அகற்ற உதிர்த்த ஞான மொழிகள் பேச்சிலும், எழுத்திலும் வந்தவை. இங்கு நூலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ அரை நூற்றாண்டு கால மேடைத் தவமும், எழுத்துத் தவமும் நூல்வரிசையாக நம் கையில் நூலைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்ட மகாசன்னிதானத்துடன் உடன் உறைந்து, உடன் வாழ்ந்து இன்று நமக்கு மகாசன்னிதானத்தின் தடத்தை அடையாளம் காட்டிவரும் ஆதீனப்புலவர் மரு. பரமகுரு, காரைக்குடி இராமசாமி. தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் தமிழாகரர் தெ. முருகசாமி, காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர் நா. சுப்பிரமணியன், 'எழுத்துச் செம்மல்' குன்றக்குடி பெரிய பெருமாள், ஆதீனப்புலவர் க. கதிரேசன் ஆகியோருக்கும் இந்நூல்வரிசையைச் சிறப்பாகப் பதிப்பித்து முத்திரை பதித்த வித்தகர் பதிப்புச்செம்மல் மெய்யப்பனார் அவர்களுக்கும் நெஞ்சுநிறை நன்றி! வாழ்த்து பாராட்டுக்கள்

தமிழகம் மேம்பாடுற இந்நூல்வரிசை பயன்தரும்!

என்றும் வேண்டும்

இன்ப அன்பு.

(பொன்னம்பல அடிகளார்)

  1. நம் பூர்வாசிரமப் பெயர்