குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1/வள்ளுவமும் மார்க்சியமும்

7


வள்ளுவமும் மார்க்சியமும்


மனித உலகம் சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்து தனியுடைமைச் சமுதாயம் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும். காவல் என்ற பெயரில் வேலிகளும் சுவர்களும் முறையே தோன்றியிருக்க வேண்டும். வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பூர்வ காலத்தில் மனித குலத்தில் பொதுவுடைமைச் சமுதாய அமைப்பே நிலவி இருந்தது. அதுவே இயற்கை வழிப்பட்ட சமுதாயம். பிறகுதான் முறையே தனி உடைமைச் சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் என்ற அமைப்பு முறைகள் வளர்ந்து வந்துள்ளன.

நிலப்பிரபுத்துவ சமுதாயம் ஈன்றெடுத்த நஞ்சனைய தீண்டாமை மற்றும் சாதி, குலம் முதலிய இழிவுகள், பல முனைப் போராட்டங்களுக்குப் பிறகும் அகன்ற பாடில்லை. ஏன்? மானுடத்தைப் பற்றியுள்ள வறுமை, சாதிப் பிரிவினை முதலிய இழிவுகளை அரசியலுக்குத் துணையாகக் கொள்ளும் போக்கு அண்மையில் வளர்ந்து வந்திருப்பதை - வளர்ந்து வந்துகொண்டிருப்பதை மறுப்பது எளிதன்று. அதுவும் பண மதிப்பீட்டுச் சமுதாய அமைப்புத் தோன்றிய பிறகு மனிதம் மெள்ள மெள்ள இழிதன்மையை அடைந்து கொண்டு வருகிறது. எங்கும் மனிதன் மதிக்கப்படுவதில்லை. மனிதனின் வளர்ச்சிக்குரிய பணிகள் நடப்பதில்லை. இலவசங்களே நடக்கின்றன! இலவசங்களால், தான தருமங்களால் உள்ளத்தில் ஏற்படும் ஊனங்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஒருபுறம் உடல் ஊனமுற்றோருக்கு உதவிகள் பற்றிய ஆரவாரம்! நடப்பது என்ன? நமக்குத் தெரியாது. ஆனால், நாளும் மனித குலத்தில் பாதிப்பேர் நியாயவிலைக் கடைகளில் முன்னும், வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்னும், அரசு மருத்துவ மனைகளிலும், காவல் நிலையங்களிலும், வட்டிக் கடைகளின் முன்னும், கடவுள் சந்நிதிகளிலும் நின்று அவர்கள் தம் உள்ளம் ஊனப்படுவது பற்றி எத்தனை பேர் கவலைப்படுகின்றோம்.

மனிதன் வாழப் பிறந்தவன். வாழ்வது அவனது உரிமை! மனிதனை வாழவைக்கும் கடமையை நிறைவேற்றவே சமூகம் என்ற கூட்டமைப்பு - கூட்டு வாழ்க்கைமுறை தோன்றிற்று! ஆனால், இன்றோ சமூகம் மனிதனை வாழ வைப்பதில்லை! அவனுடைய தோள்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு அவனுக்கு மேலும் சுமையாக இருக்கிறது. சமயம் மானுடத்தை வாழ்விக்கவே தோன்றியது. கடவுள் சாட்சியாகச் சமயத்தின் முதற் கடமை மானுடத்தை வாழ வைப்பதுதான்! ஆனால், மதங்களோ கடவுளைக் காப்பாற்றப் போரிட்டுக் கொண்டுள்ளன. மதங்கள் மனிதத்தை மறந்தே விட்டன. மதத்தின்பின் மனிதனை வாழ்விக்க, அவனுடைய உரிமைகளைப் பாதுக்காக அரசு தோன்றியது. ஆனால் இன்றைய அரசுகள் அதிகாரத்தையே மையமாகக் கொண்டுள்ளன. தேர்தல் என்ற ஒன்று வந்து தொலைப்பதால் ஆள்கின்றவர்களுக்கு மனிதனைப் பற்றிய கவலை கொஞ்சம் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் பயன்தரத் தக்கவாறு இல்லை .

இந்தச் சூழ்நிலையில் மானுடம் இன்னமும் வறுமையிலிருந்தும் ஏழ்மையிலிருந்தும் விடுதலை பெறவில்லை. அச்சத்திலிருந்தும் விடுதலை பெறவில்லை. ஏன்? தனி மனித நிலையில் இருந்த சுரண்டல்கள், கடன்கள் நாடுகளைத் தழுவியனவாக உலகந்தழீஇயனவாக வளர்ந்துவிட்டன. ஊழல் தேசியமயப்படுத்தப் பெற்றுவிட்டது. இன்றுள்ள நிலையில் நாடு நலம் பெற என்ன செய்யவேண்டும்?

தமிழ்த் தந்தை திரு.வி.க. அவர்கள் தமது நூல்களில் கார்ல்மார்க்ஸை 'மாமுனிவர்' என்றார்; இந்தியா திருக்குறளும் மூலதனமும் காட்டும் திசையில் நடந்தால் வளரும் என்று நம்பினார். ஆதலால் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை விரும்புகிறவர்கள் வள்ளுவத்தையும் மூலதனத்தையும் ஒரு சேரக் கற்றுத் தெளிய வேண்டும். உணர்தல் வேண்டும். வள்ளுவமும் மார்க்சியமும் காட்டும் புதியதோர் உலகத்தை அமைக்கும் பணியில் போர்க் குணத்துடன் ஈடுபடவேண்டும்; போரிட வேண்டும். சுகவாழ்வுப் போக்கிலிருந்தும் நுகர்பொருட் சந்தைகளிலிருந்தும் வெளியேறிச் சமூக சிந்தனையைப் பெற்று,

"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்"

என்ற பாரதியின் கனவை நனவாக்கப் போரிட வேண்டும்.

திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் எழுதப் பெற்றது. கார்ல்மார்க்ஸின் மூலதனம் 150 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பெற்றது. இரண்டு நூல்களும் சமூக இயல், பொருள் இயல் துறைகளில் ஒருமைப்பட்டுள்ள மாட்சிமையை உணர முடிகிறது. "பொருள் இல்லார்க்கு. இவ்வுலகம் இல்லை” என்ற திருக்குறள் மூலதனத்தின் பொருள் முதல் வாதத்திற்கு அரண் செய்கிறது. மூலதனம், உழைப்பை, உழைப்பாளியை ஊக்குவிக்கிறது; உழைப்பாளிகளே ஆட்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறது. திருக்குறள்,

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்." (1033)

என்று கூறுகிறது. மீண்டும்,

"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்
தாள்வினை இன்மை பழி.” (618)

என்று கூறுகிறது.

மூலதனம் ஊழை மறுக்கிறது. திருக்குறள் ஊழ்த் தத்துவத்தை உடன்பட்டு மறுக்கிறது. மதவாதிகள் கூறும் ஊழின் வலிமையைத் திருக்குறள் ஏற்றுக் கொள்வதில்லை. மனித குலத்தால் ஊழினை வெற்றி பெறமுடியும் என்பது வள்ளுவத்தின் முடிவு. ஊழ் என்பது நேற்றைய வாழ்க்கையின் தொடர்ச்சி. நேற்றைய பழக்கங்களின், வழக்கங்களின் முகிழ்ப்பே ஊழ். “பழக்கம் தவிரப் பழகினால்” ஊழின் நிலை மாறும்; அகலும், ஆக இரண்டு நூல்களுமே ஊழின் வலிமையால் இந்த உலகத்தில் உள்ள சாதிமுறைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அமைய வில்லை என்ற கருத்தில் ஒத்து நிற்கின்றன.

'மக்கள் பிறப்பில் எந்த வேறுபாடுகளுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் ஊழ் காரணமல்ல. இக்கருத்தினை மார்க்சியம் வலியுறுத்துகிறது. - “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருக்குறளும் வலியுறுத்துகிறது. பிறப்பால் எல்லா உயிர்களும் சம உரிமைகள் உடையன. ஒரோவழி சுற்றுப்புறச் சூழ்நிலையின் காரணமாக, வாய்ப்புகளின் காரணமாகச் சிறப்புடையோராக விளங்கினாலும் அதற்காக எந்தவிதச் சிறப்பினையும் தனி உரிமைகளையும் பெற இயலாது; பெறக்கூடாது, அந்தச் சுற்றுப்புறச் சூழ்நிலையும் வாய்ப்புக்களும்கூட வரலாற்றுப் - போக்கில் சமூகம் படைத்தளித்தவைதாம்.

சுரண்டும் பொருளாதார அமைப்பை மார்க்சியம் அடியோடு மறுக்கிறது. திருக்குறளும் சுரண்டும் பொருளா தார அமைப்பைச் “சலத்தால் பொருள் செய்தல்” “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம்” என்றெல்லாம் மறுத்துரைக் கிறது.

"சலத்தாற் பொருள் செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று”, (660)

என்ற திருக்குறள், சூது செய்து பிறர் பங்கைத் திருடிச் சேர்க்கும் பொருளைக் குறிக்கிறது.

"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்"

(169)

என்ற திருக்குறள், கெட்டவன் பொருளாளி யாதலும் நல்லவன் உழைத்துப் பிழைப்பவன்) வறுமையாளி யாதலும் சமூகத்தின் குற்றம்; ஆட்சியின் குற்றம். நம்பாமல் ஆராய்க: மாற்றுக என்று வழி நடத்துகிறது.

பொருள் உற்பத்தி செய்யும் தொழிலே சிறந்த தொழில் என்பது மார்க்சியம். திருக்குறளும் செய்க பொருளை என்று கூறுகிறது.

பல்வேறு உடைமைகளைப் பற்றி வள்ளுவம் எடுத்துக் கூறுகிறது. ஆயினும் தனியுடைமை பற்றித் திருக்குறள் எதுவும் கூறவில்லை. உடைமையைப் பற்றிக் கூறவரும் பொழுது திருக்குறள், உழைப்பிற்குரிய ஊக்கத்தையே உள்ளம் உடைமை உடைமை என்று கூறுகிறது.

ஏழ்மையையும் வறுமையையும் மனித குலத்தின் சாபக்கேடு என்று மார்க்சியம் கூறுகிறது. திருக்குறளும்

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்,"

(1062)

என்று கூறுகிறது.

மார்க்சியம் கடவுளை நம்பவில்லை. ஏன்? மனிதன் தன்னுடைய வாழ்க்கையை உருவாக்குவது தன்னைவிட மேலானவராக இருக்கும் கடவுள் பொறுப்பு என்று நம்பினால் மனிதன் முன்னேற்றத்திற்குரிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளமாட்டான் என்பது மார்க்சியம். திருக்குறள் கடவுளை ஒத்துக் கொள்கிறது. ஆனால் கடவுள்தான் மனித வாழ்வின் மேம்பாட்டுக்குப் பொறுப்பு என்ற மதவாதத்தை மறுக்கிறது. கடவுள் உலகத்திற்கு முதல், அவ்வளவுதான்! அவன் படைப்பாளியும் அல்ல. மானுடத்தின் வாழ்வியல் அமைவுகளுக்குக் கடவுள் பொறுப்பேற்பதில்லை; பொறுப்பேற்கவும் மாட்டார். இந்த வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வது மனிதன் பொறுப்பு; கடமையுமாகும்.

மார்க்சியம் உலகம் தழீஇயது. ஒவ்வொரு நாடும் தற்சார்புடையதாக விளங்கவேண்டும். நாடுகளுக்கிடையிலும் சுரண்டல் கூடாது என்று கூறுகிறது. “பன்னாட்டு மூலதனம்” என்ற பெயரில் சில நாடுகளின் பொருளாதார ஆதிபத்தியம் வளர்வது மார்க்சியத்திற்கு உடன்பாடன்று. திருக்குறளும் "நாடென்ப நாடா வளத்தன" என்று கூறுகிறது. இன்று நமது பாரதத்தைப் பன்னாட்டு மூலதனம் விழுங்கப் பார்க்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தனி உடைமைகளாக்கப்படுகின்றன. நாட்டையே சுரண்டும் தீய குணம் பரவி வருகிறது. ‘காட்’ ஒப்பந்தம் நம்மை மேலும் பலவீனமாக்குகிறது. இந்தச் சூழ்நிலையில் பாரதநாட்டு மக்கள் விழித்தெழ வேண்டும்.

பாவேந்தன் கூறியபடி நாம் - மக்கள் இந்தப் புவியை நடத்த வேண்டும்! பொதுவில் நடத்தவேண்டும்! புவியை நடத்துதல் எளிய பணியன்று. புவியை நடத்த முதலில், கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்க்க வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதான உலகத்தை நோக்கி இந்த உலகத்தை நடத்த வேண்டும். எட்டுத் திசையும் சென்று பொதுவுடைமைக் கொள்கையைச் சேர்க்க வேண்டும். அதைப் புனிதமுடன் உயிர் போலக் காக்கவேண்டும். சோவியத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை-சரிவுகளைப் படிப்பினையாக ஏற்றுக்கொண்டு மார்க்சியத்தை வாழ்வாக்க வேண்டும். மார்க்சியம் தோற்காது! மார்க்சியம் தோற்றால் மானுடத்திற்கு எதிர்காலம் ஏது? மார்க்சியம் தோற்க அனுமதிக்கமாட்டோம். வள்ளுவமும் மார்க்சியமும் மலர்க.