குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10/அக்டோபர்




அக்டோபர் 1


இறைவா, என் வாழ்வை வளமார்ந்த அருட்சோலையாக்கி அருள் செய்க!

இறைவா, நன்னெறியே! நெறியின் பயனே! நின் திருவருள் போற்றி! போற்றி! இறைவா, ஓர்மை! ஓர்மை என்ற சொல் தரும் பொருள், பயனுடையது. என் வாழ்க்கை வாழ்க்கையின் வார்த்தைகள், செயல்கள் நீரில் குமிழியென ஆகாமல் நிலைத்தன்மையுடையனவாக அமைதல் வேண்டும்.

என் வாழ்க்கையின் குறிக்கோளில் ஒருமை வேண்டும். குவிந்த கதிரொளி மிகு ஆற்றலுடையது. மழை நீர்த்துளிகளே திரண்டு பெரு வெள்ளமெனப் பாய்ந்து பயன்படுகின்றன. பல நூறாயிரம் காசுகள் கூடி ஒன்று சேர்ந்தால்தான் செல்வம்.

செல்வமே மனித வாழ்க்கைக்கு முதலாக அமையும். அதுபோல என் ஆற்றல், ஒரு குறிக்கோளில் ஒருமைப்படுத்தப்பெற்றுப் பாடுறுதல் வேண்டும்.

ஒரு மனம் வேண்டும். இறைவா, என்ன சிரிக்கிறாய்? இல்லை இறைவா! எனக்கு இருப்பது ஒரே மனந்தான்! ஆனால் அது அடிக்கடி மாறுபட்டுத்திரிவது ஆற்றொணாத் துயரத்தைத் தருகிறது.

நட்டம்-ஈட்டம் என்ற சுருக்குக் கயிறுகள் என்னை இழுத்து அலைக்கழிவு செய்கின்றன! எவ்வளவு மோசமாகி இருக்கிறேன். ஆதாயம் இருந்தால்தான் நான் செயல்படுகிறேன்.

முறைகேடான ஈட்டம் கருதியே வாழ்தல், பழகுதல் விபசாரம் அல்லாமல் வேறு என்ன? இறைவா, என்னைக் காப்பாற்று.

என் வாழ்க்கை நன்னெறியில் நடைபயிலுதல் வேண்டும். தட்டம்-சட்டம் பற்றிக் கவலையில்லை. என் வாக்கினை வாய்மையாக்கி, வாழ்வை வளமார்ந்த அருட் சோலையாக்கி அருள் செய்க! 


அக்டோபர் 2


அன்பு செய்யும் வரம் தந்தருள்க!


இறைவா! பல்லுயிராய்ப் பரந்து நிற்கின்ற எம் தலைவா! நின்னருள்பெறும் உயிர்க்குலத்திற்கு யாதொரு துன்பமும் என்னால் நிகழக் கூடாது.

இறைவா, எனது பொறிகளில் கொல்லாமை, துன்புறுத்தாமை ஆகிய நோன்புகளை மேற்கொண்டொழுகும்படி அருள் செய்க! யாதோர் உயிருக்கும் என் வாழ்க்கை முறையில் - மனத்தால், வாக்கால், உடலால்-நான் துன்பம் செய்யக்கூடாது! கொல்லாமையே என் வாழ்க்கையாக வேண்டும்.

இறைவா, இம்சையால் உலகம் வளர்வதில்லை. எனக்கு அகிம்சை தேவை. எனது பகைவனுக்கும் நான் அன்பு காட்ட வேண்டும்! யாதோர் உயிருக்கும் மனத்தினால் கூடத் துன்பம் கருதுதல் கூடாது. இறைவா, அருள் செய்க.

கொல்லாமை நோன்பால்-அகிம்சையால் அரசிய லையே நிகழ்த்திப் பெருமை பெற்றவர் அண்ணல் காந்தியடிகள். நான் என் சொந்த வாழ்வில் அகிம்சையைக் கடைப்பிடிக்க இயலாதா? இறைவா, அருள் செய்க!

என் மனம் யார் மாட்டும் அன்பு செய்யும் வரத்தினைத் தா. வாழ்த்தியே பேசும் வாயினைத் தா. அருள் சுரக்கும் நெஞ்சினையே தந்தருள் செய்க! அன்பே ! அன்பே ! என்று அரற்றி அழும் அருள் நலம் சார்ந்த நன்னெஞ்சத்தைத் தந்தருள்க!

அகிம்சையே என் வாழ்க்கையில் அமைவதாக, கொல்லாமை அறம் குவலயம் முழுதும் குடி கொள்வதாக! உலகு, கொலைகளிலிருந்து விடுதலை பெறுக. எங்கும் சமாதானம் - சகவாழ்வு தழைப்பதாக! 


அக்டோபர் 3


இறைவா, அமைதியை அருள் செய்க!


இறைவா, உனது மறு பெயர்கள்-அமைதி, இன்பம் என்பன ஆனால் இறைவா! உன்னை நான் அமைதியாகக் கண்டு ஆராதித்தேனில்லை. இன்பமாக நினைந்து ஏத்திப் புகழ்ந்தேனில்லை.

ஆம், இறைவா! அமைதியின் தரிசனம் கிடைப்பதே இல்லை. எங்கு நோக்கினும் பதற்றநிலை! பழைய காட்டுமிராண்டிகளைப் போலவே அடுதலும் தொலைதலும் நிகழ்கின்றன. இந்த நிலை வீட்டிலிருந்து நாடு வரை உள்ளது!

இறைவா, இந்தக் கலக உலகை மீட்டு அமைதிக்குக் கொண்டு வர வேண்டாமா? ஆம் இறைவா! நிச்சயம் கொண்டுவர வேண்டும்!

ஆழ்ந்த அறிவிலேயே அமைதி தோன்றும். தெளிவான சிந்தனையிலேயே அமைதி தோன்றும். தன்னல மறுப்பிலேயே அமைதி தலைகாட்டும். பிறர்க்கென முயலும் பண்பிலேயே அமைதி வந்தமையும். இதுவே நியதி.

அன்பே இன்பம்! இன்பமே அன்பு! அமைதியே வழி பாடு. இறைவா, அமைதியை அருள் செய்க: உலகில் அமைதி நிலவ அருள் செய்க! 


அக்டோபர் 4


இறைவா, தவறுகளைத் தைரியமாக ஒப்புக் கொள்ளும் மனப்பான்மையைத் தந்தருள்க!


இறைவா! தாயிற் சிறந்த தயாவுடைய தலைவனே! என்னைப் "பயம்" என்ற இருட்டறையிலிருந்து மீட்டுக் காப்பாற்றியருள்க!

இறைவா, என் பயம் என்னைப் பேயாகப் படைத் தாட்டுகிறது! என்னுடைய பயம் எதையும் எதிர்மறையாகவே ஆராயத் துரண்டுகிறது! பயம் என்ற சூழ்நிலையில் சிக்கித் தவிக்கின்ற நிலையில்தான் நான் நல்லவனல்லன்.

இவன் நல்லவனல்லன். தோல்வி வரும். துன்பம் சூழும் என்றெல்லாம் நினைந்து நானே முடிவுகளையும் எடுத்துக் கொண்டு, அரண்ட நிலையில் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் ஏன் பயப்பட வேண்டும். பயம் மனிதனைக் கொன்றுவிடுகிறது. மனிதனின் ஆக்கத்தை அழிக்கிறது. சுற்றத்தை அழிக்கிறது. ஆதலால் பயத்திலிருந்து மீள்வதே என் முதல் பணி.

நான் பயத்தால் இழக்கும் இழப்பே மிகுதி பயத்திற்குப் பதிலாக நான் உண்மையுடன் வாழ்ந்தால் - தவறு நிகழ்ந்து விட்ட நிலையில் அதனை ஒத்துக் கொள்வதில் முன் நின்று மன்னிப்புக் கேட்டால் நான் பிழைத்து விடுவேனே! இறைவா, என்னைப் பயத்திலிருந்து மீட்டுக் காப்பாற்று!

தவறுகளுக்குக் காரணமாகிய அறியாமை, அகந்தையிலிருந்து காப்பாற்று! தவறுகள் நிகழ்ந்து விட்டால் தைரியமாகத் தவறுகளை ஒத்துக் கொள்ளும் மனப்பான்மையைத் தா!

தவறுகளை நினைத்து வருந்தி மன்னிப்புக் கேட்கும் இயல்பினைத் தா! இறைவா. என்னைப் பயத்திலிருந்து மீட்டு வீரம் செறிந்த வாழ்க்கையில் செலுத்தியருள்க! இறைவா, அருள் செய்க! 


அக்டோபர் 5


இறைவா, நன்மையே ஒழுக்கமாய் அமைந்திட அருள்க!


இறைவா, எனக்கு எத்தனையோ ஆர்வ நிலைகள். ஆம், இறைவா! எல்லாம் நன்மையைச் சார்ந்த ஆர்வங்கள்தாம். ஆனாலும் அடைவு இல்லை, மகிழ்ச்சி இல்லை. ஏன் இறைவா?

நன்மையை எண்ணினால் போதுமா? எழுதினால் போதுமா? சொன்னால் போதுமா? நன்மை செயல்களாக, ஒழுக்கங்களாக மாறி வளர வேண்டும். அப்போதுதான் நன்மையால் பயன் உண்டு.

அலைகடல் போல் அலையும் மனத்தில்-உள்ளத்தில் நன்மை வேரூன்றி நிற்காதே! அலைக்கழிவு செய்யுமே! இந்த நிலைகளில் வெற்றி பெற வேண்டும்.

ஊன்றிய உணர்வு தேவை. ஒரு நெறிப்பட்ட செயல், நன்மையாகவே அமைந்த ஒழுக்கம்-இவையே வாழ்வின் ஆக்கம். இறைவா, இவற்றை எனக்கு அருள் செய்க!

தீமையை வெற்றி கொள்ள நன்மையாலேயே முடியும். எண்ணத்தில் நன்மை. சொல்லில் நன்மை செயலில் நன்மை. நன்மையே ஒழுக்கம். ஒழுக்கமாய் அமைந்தது நன்மை. இறைவா, அருள் செய்க!

இறைவா, நன்மையே ஒழுக்கமாய் அமைந்திட அருள் செய்க!


அக்டோபர் 6


இறைவா, என் பொதுத்தொண்டில் குறைகள் வாராது காத்தருள்க!

இறைவா, நன்றுடையானே! தீயதில்லானே. நின் திருவடிகள் போற்றி! போற்றி!! நான் எத்தனையோ பணிகள் செய்கின்றேன், பலருடன் கூடிச் செய்கின்றேன். நான் செய்யும் பணிகளில் பொதுப் பணியும் இருக்கிறது.

இறைவா, நான் பொதுமக்களுக்காகத் தொண்டு செய்தாலும் பொது மக்கள் என் எஜமானர்கள். நான் என் பணியை அலட்சியமாகச் செய்யக்கூடாது. நிர்வாகக் குறையும் ஏற்பட்டு விடக்கூடாது.

பணியைக் கவனக்குறைவுடன் செய்யக் கூடாது. ஆம், இறைவா, இவையெல்லாம் உண்மைதான். அதுமட்டுமன்று. அறிந்த செய்திகளும் கூட. ஆயினும் இறைவா பல சமயங்களில் நான் என் பணிகளைச் சரியாகச் செய்வதில்லை. செய்ய முடிவதில்லை.

பணிகளைச் செய்ய முடிவதில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன்! வருந்தி என்ன பயன்? இறைவா, முதலில் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.

நான் என் குற்றத்தை எளிதில் ஒத்துக் கொள்வதில்லை. இனி நான் என் குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன். நான் என்னைத் திருத்திக்கொள்ளவும் முயற்சி செய்கிறேன். இல்லை, இல்லை. என்னைத் திருத்திக் கொள்கிறேன்.

என் குற்றத்தை, நான் ஒப்புக் கொள்ளும் துணிவைத் தந்தருள் செய்க. திருந்திய வாழ்வையும் ஏற்றுக் கொள்ள அருள் செய்க: இறைவா, என்னை ஏற்றருள் செய்க! என் பொதுத் தொண்டில் குறைகள் வாராது காத்தருள் செய்க! காலந் தாழ்த்தாமல் அருள் செய்க! 


அக்டோபர் 7


இறைவா, காரியங்களில் முறைப்பாடுகள் அமையும்படி அருள்க!



இறைவா, குறைவிலா நிறைவே! கோதிலா அமுதே! நின்னருள் போற்றி! போற்றி!! இறைவா, நின் இயல்பில், நின் தொழிலில் சிறப்பான முறைப்பாடுகள் அமைந்துள்ளன.

இறைவா, நின் அமைவு பொருந்திய முறைப்பாடுகள் வியப்பிற்குரியன! ஆனால், நின் தொழிலில் அமைந்துள்ள முறைப்பாடுகளை அனுபவிக்கும் நான், என்வாழ்க்கையில் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்வதில்லை.

முறைப்பாடுகள் இல்லையானால் முன்னேற்றம் ஏது? இறைவா, நான் செய்யவேண்டிய பணி எது? அந்தப் பணியின் பல்வேறு கூறுகள் என்ன? அந்தப்பணி நடைபெற வேண்டிய பல்வேறு காலக் கட்டங்கள் என்ன?

பணிகளைத் தொகுத்தும் வகுத்தும் முறைப்படுத்திக் கொண்டால் நான் ஏராளமான பணிகளைச் செய்ய இயலும். காலத்திலும் செய்யக்கூடும். யாதொரு இழப்பும் வராமல் செய்யக்கூடும். அப்படியா இறைவா?

என் பணிகள் முறைப்படுத்தப்பட்டு விட்டால் பணிகளில் அளவுகூடக் குறையும். என் ஆற்றல் மிஞ்சும். உழைப்பும் குறையும். அதே போழ்து நிறைவு பலவும் கிடைக்கும். இறைவா, நன்றருளிச் செய்தனை!

என் பணிகளில் முறைப் பாட்டினை ஏற்றுக் கொள்ள அருள் செய்க! என் வாழ்க்கையில் அமையும் முறைப்பாடுளே என் வெற்றியை நிர்ணயிக்கின்றன. இறைவா, அருள் செய்க!

இறைவா, நான் மேற்கொள்ளும் சிறிய, பெரிய காரியங்களில் முறைப்பாடுகள் அமையும்படி அருள் செய்க! 


அக்டோபர் 8


இறைவா, உன்னை நினைந்து வாழ்வது என் கடன்!



இறைவா, நேற்று இரவு உறக்கமே இல்லை. இறைவா! உடலில் குறையில்லை! கன்றை, தாய்ப்பசுவிடமிருந்து பிரித்துக் கட்டி விட்டார்கள். கன்று தாயை நினைந்து கத்தியது. இறைவா, ஆறறிவு இல்லாத உயிரால் தாயின் பிரிவைத் தாங்க இயலவில்லை. ஆதலால் அது கத்துகிறது!

இறைவா, நீ எனக்குத் தாய்! இல்லை, இறைவா! தாயினும் சிறந்த தாய். என் பிறவி கெட நீ உருக்கொண்டாய்! இறைவா, நான் ஆணவத்தில் கிடந்த போது- அறியாமையில் ஆழ்ந்து கிடந்த போது என் இரங்கத்தக்க நிலையினை எண்ணி உடல் கொடுத்தாய்.

உடலும் உள்ளமும் தந்து பொன்னோடும் பொருளோடும் புணர்த்தினாய்! இதற்கு ஏது கைமாறு! ஆனால், நின்னைப் பிரிந்து வாழ்கின்றேன்! இல்லை இறைவா, மறந்து வாழ்கின்றேன்!

உன்னை நினைப்பது - உன்னை நினைந்து, நினைந்து உணர்ந்து உணர்ந்து வாழ்வது என் கடன். என் பணி. இறைவா, என்னை மன்னித்துக் கொள். நினைக்கிறேன். நினையாது ஒருபோதும் இருந்தறியேன். இறைவா, மன்னித்து அருள்க!

இறைவா, உன்னை நினைந்து வாழ்ந்திட அருள் செய்க!


அக்டோபர் 9


என் இதயத்தை உன் கோயிலாக்குகிறேன்! இறைவா, அருள் செய்க!


இறைவா, இந்த மனிதன் உனக்கு எத்தனை கோயில் களைக் கட்டியிருக்கிறான்! எத்தனை “கும்பாபிஷேகங்களை” நடத்தியிருக்கிறான்! எத்தனை கோடி மந்திரங்களை ஜெபித்திருக்கிறான்! ஏன் இறைவா, இன்னும் மக்களைச் சுற்றித் துன்பங்கள்?

மனிதன் செய்யும் செயலெல்லாம் மனிதனின் புகழ் வேட்டைக்கும் பொருள்வேட்டைக்கும்தான் பயன்படுகின்றனவா? இறைவா, அப்படியானால் நீ கோயிலில் எழுந்தருளவில்லையா?

"சாதிப் பிரிவுகளின் ஆணவம், பண வியாபாரம், ஏழை மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளியின் கொலு விருக்கை, பெருமை-சிறுமைப் போராட்டங்கள் முதலியன கோயிலை ஆட்சி செய்யும் வரை அங்கு எனக்கு என்ன வேலை" என்றா கூறுகிறாய்? இறைவா, மன்னித்து விடு. என் இதயத்தை உன் கோயிலாக்குகிறேன்!

அன்பால் என் இதயத்தை மெழுகி நீ எழுந்தருளும் திருக்கோயிலாக்குகிறேன்! தொண்டால் நின்னை வழிபடுகின்றேன்! உயிர்க்குலத்தின் மகிழ்வை உனக்கு நிவேதனமாகப் படைக்கின்றேன்.

இறைவா, நின்னைக் காட்டும் மந்திரம் அன்பு! இறைவா, நின்னை அடையும் வழி, தொண்டு! இறைவா, நின்னை அனுபவிக்கும் முறை அர்ப்பணிப்புணர்வுடன் செய்யும் பணி. தெளிவு பிறந்தது. இந்த வாழ்க்கைக்கு என்னை ஆளாக்கு.

நான் நின் நெறிவழி நிற்பேன். அறியாமையாலும் பழக்க வாசனையாலும் தவறுகள் செய்தால் என்னை அடித்துத் திருத்து. மறந்து விடாதே! இறைவா, பிரிந்து விடாதே! உன் பிரிவு எனக்குத் தாங்கொணாத் துயரம் தரும். இறைவா, என் இதயம் உன் கோயிலாக அருள் செய்க!

அக்டோபர் 10


இறைவா! பாராட்டில் மயங்காத பண்பாட்டைத் தா!

இறைவா, ஆயிரம் தடவை எண்ணுகிறேன், நல்லன பற்றி! ஆனால், ஒரு தடவை கூட வாழ முயலுகின்றேன் இல்லையே! இறைவா, ஏன் இந்தத் தீயூழ்? உனக்கு இரக்கமில்லையா? என்னைத் திருத்தக் கூடாதா?

பொல்லாத தன்னல நயப்பிலிருந்து விடுதலை பெறாத வரையில் நல்லவனாகவாழ இயலாதா, இறைவா. நானும் தன்னல நயப்பிலிருந்து முற்றாக விடுதலை பெறவே விரும்புகிறேன்! அதற்காகவே பேசுகிறேன். எழுதுகிறேன். கூட்டுறவாளனாகத் தொண்டு செய்கிறேன். இறைவா, என்ன சொல்கிறாய்?

நான் இவ்வளவு பணி செய்தும், பாராட்டில் மயங்குவதும், பெருமைபடப் பேசப்படுவதைக் கேட்பதிலும் இச்சை இருக்கிறதே!

இறைவா, இந்த இச்சைகளிலும் எனக்குப் பெரு விருப்பம் இல்லையே! விருப்பத்தில் பெருவிருப்பம் என்ன? சிறு விருப்பம் என்ன? கூரையில் பெரு நெருப்பு விழுந்தால் தான் தீப்பிடிக்குமா? சிறு நெருப்பு விழுந்தால் தீப்பிடிக்காதா? கவனத்தில் கொண்டேன்.

என்னைப் பாராட்டுபவர்கள் பக்கம் மறந்தும் சார்ந்து இருக்க மாட்டேன். ஆம், இறைவா, எனக்கு வேண்டியவர்கள், உதவி செய்பவர்கள்-பாராட்டுபவர்கள் அல்லர்.

உடனிருந்து உழைப்பவர்களே! உதவி செய்பவர்கள். இத்தகையோரைத் தோழமையாகக் கொள்வேன். கிடைக்காதுபோனால் தன்னந்தனியனாக உழைக்கும் உறுதியைத்தா! சோர்ந்தால் நீ தெம்பு கொடு. ஆற்றுப்படுத்து! இறைவா, அருள் செய்க!

அக்டோபர் 11


இறைவா, என் வாழ்க்கையில் மனித நேயத்தை அருள்க!

இறைவா, வள்ளற்பெருமான், ஒருமையுடன் நினது திருவடி நினைக்கும் வரம் வேண்டினார். இறைவா, ஒருமை உணர்வு எளிதில் வர மறுக்கிறதே. ஆம், இறைவா! பொறிகளின் அராஜகம் ஒரு புறம். புலன்களின் சேட்டை ஒரு புறம்.

"நான்”, “எனது” என்று நஞ்சேறிய நாணயமற்ற செயல்கள், ஆணவத்தின் அட்டகாசம், மொழி, இனம், மதம் என்பவற்றின் பெயரால் வளரும் பகைகள், இத்தனையும் என்னை நிலைகுலையச் செய்கின்றன.

இறைவா, ஒருமை உணர்வு அரும்பவில்லை. அரும்ப மறுக்கிறது. ஒருமைப் பாட்டுணர்வினைத் தந்து ஆட்கொள். ஆம், இறைவா, நீ சொல்வது முற்றிலும் உண்மைதான். வேற்றுமையில் ஒற்றுமை காணும் உயர் பண்பாடு தோல்வி கண்டுள்ளது - ஏன், இறைவா?

ஒருமைப்பாட்டின் ஆதாரசுருதி மனிதநேயம்தான். எல்லாரையும் மனிதர்களாக மதிப்பதுதான். மனிதர்களிடம் அன்பு காட்டுவதுதான். "உன்னைப் போல் பிறரை நினை.” இறைவா, நல்லமந்திரம் கற்றுக் கொடுத்துள்ளனை!

இனி, என் வாழ்க்கையின் ஆதார சுருதி மனித நேயமாகத்தான் இருக்கும். புற நிலையில் ஒருமை நிலை கண்டு விட்டால் அகநிலை ஒருமை தானே வந்தமையும். ஆம் இறைவா, என் வாழ்க்கையில் மனித நேயத்தை அருள் செய்க!

அக்டோபர் 12


இறைவா, அழுக்காறு அகல அருள் நயக்கும் வாழ்வினை
அருள் செய்க!

இறைவா, உயர் மலைகளில் எழுந்தருளியுள்ள இறைவா! படிகளைக் கடந்து நின் சந்நிதிநோக்கி ஏறி வரும்பொழுது கால் கடுக்கிறது. ஆனாலும் ஏறியபிறகு உன் அழகிய திருக்கோயிலில், நீ வழங்கும் அருள், உடல் நலம், உயிர் நலம், உணர்வு நலம் அனைத்தும் கிடைக்கின்றன.

வாழ்க்கை, பள்ளத்தில் கிடக்கிறது. குணம் என்னும் குன்று ஏற வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி என்னும் பள்ளங்கள், பொச்சாப்பு, பொய்ம்மை, அறியாமை ஆகிய பள்ளங்கள், வறுமை எனும் படுகுழி ஆகியவைகளிலிருந்து கரையேறிக் குணம் என்னும் குன்றேறுதல் வேண்டும்.

உடல்வருந்த உழைத்தல், பிறர் மகிழத் தாம் மகிழ்தல் என்ற நெறிகள் வழி அழுக்காற்றினைக் கடக்கலாம். பிறர் வாழ்க்கையைக் கண்டு தன் தகுதிக்குமேல் அவாவுறுதலைத் தவிர்த்தல் மூலம் அவாவினைக் கடக்கலாம்.

அவா- அழுக்காற்றினைக் கடந்தாலே வெகுளி, இன்னாச் சொல்லினைக் கடக்கலாம். நல்லன நினைந்து பழகுதல் மூலம் பொச்சாப்பினைக் கடக்கலாம். யாருக்கும் தீங்கு செய்யாதிருத்தல் என்ற நெறி வழி பொய்ம்மையைக் கடக்கலாம்.

கல்வி- அனுபவங்கள் மூலம் அறியாமையைக் கடக்கலாம். பொருளினைச் செய்தல் மூலமும் வரவுக்கு மேல் செலவைத் தவிர்ப்பதன் மூலமும் வறுமையைத் தவிர்க்கலாம்.

இறைவா, அழுக்காறு முதலியன அகல, அருள் நயக்கும் வாழ்வினை அருள் செய்! வாய்மை தவறா வாழ்க்கையை அருள் பாலித்திடுக! வறுமையால் சிறுமை தப்பி வளமாக வாழ்ந்திடத் திருவுளம் பற்றுக. குணமென்னும் குன்றேறி நின்று நின் திருவடிக்குத் தொழும்பாய் ஆட் செய்யும் பேற்றினை அருள் செய்க!

அக்டோபர் 13


உழைப்பு ஒரு வேள்வி! இதை முழுமனத்துடன் இயற்றிட
அருள் செய்க!

இறைவா, என்னை இந்த உலகக் கவர்ச்சிகளிலிருந்து காப்பாற்று! துரண்டில்வாய்ப் புழுப்போல நான் இருக்கின்றேன். எனக்குச் சில சுவைகளைக் காட்டுகின்றனர். சில சலுகைகளைக் கூடத் தருகின்றனர். ஆனால், இவற்றால் என்ன பயன்? இறைவா, நான் வாழ வேண்டும். "பிழைக்க” விரும்பவில்லை.

வாழ்வாங்கு வாழ வேண்டும். ஆம் இறைவா. தெளிந்த அறிவு, அசைவிலா உறுதி, பழுதிலா உழைப்பு, பழியிலா ஆக்கம், ஊரவருடன் ஒப்புரவு - இவையே என்னை வாழ்விக்கும். இவைகளை அருள் செய்க.

இன்று அறிவில் நிறைய குழப்பம். நன்றும் தீதும் எளிதில் துணிய முடியாத அளவுக்குப் பொய்ம்மைகளிடையில் வாய்மை. உழைப்பு, பழுதிலா உழைப்பு. உழைப்பு ஒரு வேள்வி. இதை - முழுமனத்துடன் இயற்றுதல் வேண்டும்.

ஆக்கம், செல்வம் தேவை. நிறையத் தேவை! ஆனால், பிறர் உழைப்பைச் சுரண்டிவரும் செல்வம் வேண்டாம். பழிகளைச் சுமந்துவரும் செல்வம் வேண்டாம். அன்பு, நாண், ஒப்புரவு ஆகிய வண்டிகளில் வரும் செல்வமே வேண்டும்.

இறைவா, ஊரவர்களுடன் கூடி வாழ்தல் வேண்டும். கொண்டும் - கொடுத்தும் வாழ்தல் வேண்டும். இறைவா, அருள் செய்க! வாழ்வாங்கு வாழ அருள் செய்க!

அக்டோபர் 14


இறைவா, பொறிகளின் மீது தனியரசாணை புரிந்திட அருள்க!

இறைவா! "தண்ணீர் அண்டாவில் விழுந்த தவளை போலத் தவிக்கும்” என்னைக் கரையேற்றக் கூடாதா? தவளைக்குத் தண்ணீர் தேவைதான். ஆனால், தண்ணீருக்குள்ளேயே எப்போதும் கிடக்க முடியாதே.

தண்ணீர் ஆசையினால் தவளை அண்டாவினுள் விழுந்து விட்டது. தண்ணீர், அண்டாவில் அடிமட்டத்தில் கிடக்கிறது. அதனால் தவளையால் தாவி வெளியேற முடியவில்லை. ஏறினால் வழுக்குகிறது. ஐயோ பாவம்! நான்துய்க்கலாம்-உய்யலாம் என்ற பெருவேட்கையின் காரணமாகவே வீழ்ந்தேன்.

ஆனால், நான் வீழ்ந்த சமூகம் வளர்ச்சியில்லாத சமூகம். பிரிவினைகளாலும் அழுக்காறு வயப்பட்ட போட்டி களாலும் அலமந்து அழிந்து கொண்டிருக்கும் சமுதாயம். என் தகுதியோ எவற்றிலும் நிறைவில்லாதது! அரைகுறை.

தாவி வளர்ந்து உய்யுமாறு அறியேன். நான் தொடங்கும் முயற்சிகளில் எல்லாம் வழுக்கி வீழ்கிறேன். தவளைக்கு நான்கு கால்கள் இருந்தும் ஏறமுடியவில்லை! எனக்கு மூன்று கால்கள் முழுதாகக் கிடைத்தால் போதும். அறம், பொருள், இன்பம் என்ற கால்களில்தானே, நான் நிற்க வேண்டும்.

அறம், உழைத்து வாழ்தல், வாழ்வித்து வாழ்தல். பொருள், துய்த்தல், பொறிகளார, புலன்களாரத் துய்த்தல். இதில் பொறி களும் புலன்களும் செய்யும் சேட்டைகள் தாங்கொணாதவை. இன்பம் - உள்ளவாறு அனுபவத்தில் இல்லை. எதை எதையோ இன்பம் என்று மயங்கித் துய்க்கிறேன். அந்த இன்பங்களே எனக்குத் துன்பமாய்ப் பின் அமைவதையும் கண்டிருக்கிறேன்.

இறைவா, எனக்கு உண்மையான அன்பு தேவை. தண்ணீர் அண்டாவுள் வீழ்ந்த தவளையானேன். உழைத்து வாழ்வித்து வாழும் வாழ்வினைத்தா! தேவையான பொருள்களை வழங்கு. என் பொறிகளின் மீது தனியரசு செலுத்தும் உரத்தினைத் தா! துன்பமில்லா இன்பத்தினை அருள் செய்க!

அக்டோபர் 15


முறைப்படுத்திச் செய்தால் எல்லாப் பணிகளும் செய்யலாம்!
இறைவா, அருள் செய்க!

இறைவா! குலச்சிறையார் போற்றி வணங்கிய இறைவா! இன்று நீ எனக்கு இடும் பணி யாது? இன்றைய சமூக அமைப்பு நான்குபுறமும் கலகலத்து வருகிறது. நோக்குந் திசைதோறும் அமைதி இல்லை.

நான், நான்கு திசையிலும் ஒடி அலைகிறேன். எல்லாம் அவசியம் போலத் தெரிகிறது. ஆனால், ஒன்றையும் உருப்படியாகச் செய்ய முடிவதில்லை. நின்னருளிச் செயலில் யாதொரு குறையுமில்லை. என் முயற்சியிலும் குறையில்லை.

இப் பிறப்பில் யானறிந்து பணி செய்யாத நாள் இல்லை. ஆயினும், சமூகம் எழுந்திருக்க முடியாத அளவுக்குப் பிரிவினை வாதம் பிடித்தும், ஆணவம் பிடித்தும், படுத்துக்கிடக்கிறது.

நின் சந்நிதியில் தொழும்பாய்க் கிடந்து தொண்டு செய்ய வேண்டும். இது என் ஆசை. நின்னருட் பேற்றிற்குரிய மக்களுக்குப் பணி செய்ய வேண்டும். படிக்க வேண்டும். எழுத வேண்டும். இத்தனை ஆசைகள் இறைவா, நான் என்ன செய்ய?

நீ பணித்திடும் பணியைச் செய்ய மனம் ஒருமைப்படுகிறது. அனைத்துப் பணிகளும் தேவைதானா? முறைப்படுத்திச் செய்தால் எல்லாம் செய்யலாம் என்பது நின் அருட்பாலிப்பு.

குலச்சிறையார் அமைச்சுப் பொறுப்பிலும் இருந்தார். நின்றசீர் நெடுமாறனின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார். மங்கையர்க்கரசியாரின் குறிக்கோளையும் அடைவித்தார். தமிழ் வழக்கு அயல்வழக்கினை வெற்றிபெறத் தொண்டு செய்தார்.

இறைவா, குலச்சிறையார், மங்கையர்க்கரசியார் போல, நானும் உனக்குப் பணி செய்ய மனமிருக்கிறது. ஆனாலும், நின்னருள் துணை தேவை. எடுக்கும் காரியம் யாவினும் வெற்றி பெறத் தொடர்ந்தருள் செய்க! சிந்தையில் தெளிவாக நின்றருள் செய்க!

அக்டோபர் 16


தாயிற்சிறந்த தயாபரனே, அருள் செய்க!

இறைவா, நீ ஆணுமல்லன்! பெண்ணுமல்லன்! அலியும் அல்ல. இவைகளைக் கடந்த பேராற்றல் நீ! நின்னை தாய் என்றே நாங்கள் பாராட்டுகின்றோம் ஆம், இறைவா! தந்தை நிலை பெரியதுதான்!

ஆனால், தாயிடம் அனுபவிக்கும் அன்பு-பரிவு தந்தை யிடம் இல்லை! ஏன், பொறுப்புகூட இல்லை. தாய்தான் சுமந்து, நொந்து பெற்று வளர்க்கிறாள்! இறைவா! நான் குழந்தையாக இருக்கும் பொழுது என் தாயே எனக்காக மருந்துண்டாள்! பத்தியம் இருந்தாள்! நீயும் அப்படித்தான்!

எங்கள் பிறவிகெட, நீ மண் மேல் தோன்றினாயே. நின் தயவு தாயினும் சிறந்த தயவு! எனக்கு உடல் தந்து துய்க்கச் செய்தனை. பொன்னும் பொருளும், போகமும் தந்தரு ளினை துய்க்கும் பொருள்களை எல்லாம் வழங்கியுள்ளனை!

உய்யும் நெறியெல்லாம் உய்த்துணரச் செய்தனை: ஒரோவழி என் மீதுள்ள பாசத்தால் கட்டுண்டு துரிசுகளுக்கும் கூட உடந்தையாக இருந்தனை! நின் கருணை அளப்பரிது! என்னைத் தொடர்ந்து வந்து வளர்க்கும் நின்னருளுக்கு கைம்மாறு ஏது?

இறைவா, தாயிற் சிறந்த தயவுடைய தயாபரனே, அருள் செய்க! வற்றாத அன்பு ஊற்றினை அருள் செய்க! கோடி கோடியாகப் பொருள்களை வழங்கு!

இறைவா, தளர்வறியாத மனத்தினைத் தா. நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தா. என்னை மன்னித்தருள். எனக்கு வேண்டுவன எவை என்று உனக்குத் தெரியாதா? எனக்கு வேண்டியதை அருள் செய்க, இறைவா! 

அக்டோபர் 17

இறைவா, திருவாசகம் ஒதி நின் திருவருள்பெற அருள்க!

இறைவா! பண் சுமந்த பாடலுக்காகப் புண் சுமந்த புண்ணியனே! ஏழை வந்திக்கு, உண்ணும் பிட்டுக்காகக் கொற்றாளாக வந்த கோவே! மாணிக்கவாசகருக்காக குதிரைச் சேவகனாய் வந்த வள்ளலே!

அருமையில் எளிய நின் திருவிளையாட்டு நெஞ்சை உருக்குகிறது; நெகிழ்வினைத் தருகிறது! இறைவா, இன்று ஏன் எனக்காக இந்தத் திருவிளையாட்டைச் செய்யக் கூடாது? மாணிக்கவாசகர் பாடியதுபோல ஊனெலாம் நின்றுருகப் பாட எனக்குத் தெரியாது.

"உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்” என்று சொல்லத் தெரியவில்லை. ஆயினும் இறைவா! ஏழைப் பங்காளா. என்னைக் கைவிடலாகாது. என்னைக் காப்பாற்று.

என்னை ஆட்கொள்ள நீ குதிரைச் சேவகனாக வரவேண்டியதில்லை. புண்ணும் சுமக்க வேண்டியதில்லை. இறைவா, நீ அன்று பெற்ற பரிசு-பண் சுமந்த பாடல்-திருவாசகம் என் கைவசம் இருக்கிறது. திருவாசகம் ஒதும் நினைவினைத் தந்தருள் செய்க! நான் கலந்து பாட அருள் செய்க!

திருவாசகத்தில் நின்றுருகச் செய்யும் அருட் பேற்றினை வழங்குக! திருவாசகம் ஒதி, ஒதி அதன் பயனாக நின்னை என் உடலிடத்தில் பெறுவேன். இதற்கு மேல் யாது வேண்டும்.

"வேண்டத்தக்கது அறிவோய் நீ! வேண்டமுழுதும் தருவோய் நீ!" இறைவா, திருவாசகத்தை நினைந்து நினைந்து அன்பில் நனைந்து நனைந்து ஒத அருள் செய்க!

அக்டோபர் 18

ஆசைகளற்ற வாழ்க்கையை இறைவா, அருள் செய்க!

இறைவா, உடல் அரிப்புப் போன்றது அவா! ஆசை! அரிப்புக்குச் சொறிந்தால் முதலில் இதம்! அரிப்பு நிற்குமா? நிற்காது. தொடர்ந்து சொறிந்தால் புண்! ஆம், இறைவா! அதுபோல ஆசையை நிறைவேற்ற முயன்றால் ஆசை வளரும்!

மேலும் மேலும் வளரும், வெள்ளம் போல் புதிய புதிய ஆசைகள்! இந்த ஆசைகளை நிறைவேற்ற முயன்றால் உடல் வருத்தம்! அவமானம்! துன்பம்! இப்படித்தான் போகும்!

இறைவா, ஆசைகள் இல்லாத அருள் வாழ்வை உன்னிடம் யாசிக்கின்றேன். என்னுடைய நல் வாழ்க்கைக்குப் பகையாகிய ஆசை வேண்டாம். சின்னதில் கூட ஆசை வேண்டாம். வேண்டவே வேண்டாம்.

துரும்பைக் கூட நான் ஆசைப்பட்டு அடையக் கூடாது. இறைவா! ஏன் உன்னிடத்திற்கூட எனக்கு ஆசை கூடாது. ஆம், இறைவா! ஆசையற்ற வாழ்வைக் கொடு.

அன்பு செய்ய ஆசைப்படுகிறேன்! நினக்கு ஆட்செய்ய ஆசைப்படுகிறேன்! ஆசையை ஒழிக்க வேறொரு ஆசை தேவைப்படுகிறது. ஆனால், அவல ஆசைகள் வேண்டாம். இறைவா, அருள் செய்க!

ஆசைகளற்ற அருள் வாழ்க்கையை, பாசங்கள் நீங்கிய புகழ் வாழ்க்கையை, அன்பே நிறைந்து வழியும் புண்ணிய வாழ்க்கையை அருள் செய்க! இறைவா, அருள் செய்க! 

அக்டோபர் 19


ஞானம் வழங்கிய வள்ளலே! வாழ்க, நின் கருணை!


இறைவா, குருவாக எழுந்தருளிக் காட்டாமற் காட்டியும், சொல்லாமற் சொல்லியும் ஆட்கொண்டருளும் இறைவா! நின் கருணையை எங்ஙனம் வாழ்த்துவேன்.

இறைவா, ஆலமர் செல்வா! தெய்வ சிகாமணித் தேவனாய் எழுந்தருளிய என் ஞானமுதலே! "நான் யார்” என்றுணர்த்திய நாயகமே!

எனது உள்ளம் எத்தகையது? யாருக்கு, எதற்கு உரிமைப்படுத்தப் பெற்றுள்ளது? என்று உணர்த்தி-முன்னைச் சார்பு விட்டகன்று நின் திருவடியே சார்பு என்று அடைக்கலமாகி நிற்கும் எளியேனை-ஒரு சொல்லில் ஆட்கொள்!

ஞானம், எதுவென அறியாது கிடந்த என்னை, எடுத்தாண்டு ஞானத்தினை வழங்கும் ஞானத்தின் திருவுருவே! நின் கருணைக்கு ஏது கைம்மாறு?

இறைவா, நான் அறிந்தேன், 'நான்' கெட ஒழுகுவேன். இனி என் உள்ளம் உன் வசமே. என் வசமன்று. ஞானம் - திருவடி ஞானம்! நன்றே செய்யும் ஞானத்தினை வழங்குக. இன்ப அன்பினை வழங்கும் ஞானத்தினை அருள் செய்க!

"நான்” அறியச் செய்த குருவே போற்றி உள்ளங்கவர் தலைவா, போற்றி! ஞானத்தின் தலைவனே! எளியேனுக்கு ஞானம் வழங்கிய வள்ளலே! வாழ்க நின் கருணை! போற்றி, போற்றி!

அக்டோபர் 20


இறைவா, உடலைப் போற்றுதல் என் கடமை என்ற
அறிவினைத் தந்தருள்க!


இறைவா, மூலநோய் தீர்க்கும் முதல்வா! மருந்தீசன், வைத்தியநாதன் என்றெல்லாம் திருநாமம் கொண்ட இறைவா! நோயற்ற உடல் தந்தருள் செய்க!

உடல் ஒரு உழைப்புக் கருவி! நுகர்வுக் கருவி! எனது உயிரின் வளர்ச்சிக்கு உற்ற துணையாய் அமைந்த கருவி. இந்த உடல் வாழ்க்கை, பூரணமாய்ப் பயன் பெற வேண்டும்! இறைவா, கழிபிணியில்லா யாக்கையை அருள் செய்க!

இறைவா, நோயில்லாமல் வாழ்ந்தால் மட்டும் போதாது. எப்போதும் என் உடல், உழைப்பிற்கு ஆயத்தமாய் இருத்தல் வேண்டும். எனது பொறிகள் எப்போதும் விழிப்பு நிலையில் இருந்து உயிருக்கு ஆக்கம் சேர்க்க வேண்டும்.

இறைவா, உடலை நோயனுகாது தடுத்தருள் செய்ய வேண்டும். இறைவா, அருள் பாலித்திடு! நல்லுடல் நயந்தருள் செய்க! எப்போதும் விழிப்பு நிலையில் உள்ள உடலினை அருள் செய்க!

ஓயாது உழைத்திடும் வலிமையை உடலினுக்கு அருள் செய்க! உழைத்தல் தவம்! உழைத்தல் நோயணுகாப் பாதுகாப்பு நெறி!

உடல், நீ எழுந்தருளும் திருக்கோயில்! உடலைப் போற்றுதல் என் கடமை என்ற அறிவைக் கொடு.

இறைவா, நோயணுகா வாழ்க்கை முறையில் என்னைப் பழக்கு என் ஆக்கமும் அழிவும் உடல் நலத்தில் இருக்கிறது இறைவா, உடலைப் போற்றும் அறிவினைத் தந்தருள் செய்க!

அக்டோபர் 21

இறைவா, உழைத்தலே தவமாகும் உத்தம வாழ்வினை
அருள்க !

இறைவா, பல்லூழிக்காலமாக ஐந்தொழில் இயற்றிடும் தலைவா! நாளும் ஒயாது உழைத்திட வேண்டும். படைப்பாற்றல் மிக்க தொழில் செய்யவேண்டும். இறைவா, அருள் செய்க!

இறைவா, எப்போதும் உழைப்பிற்குரிய விழிப்பு நிலையில் வாழ்ந்திடுதல் வேண்டும்! உழைப்பிற்குரிய ஆயத்த நிலையில் வாழ்தலே வெற்றிகளைக் குவிக்கும்! ஊக்கம் உடையோனாக வாழ்ந்தாலே போதும். எல்லாப் பொருள்களையும் நுகரலாம்!

உழைப்பில்-பணியில் வேற்றுமை பாராட்டாமல் உழைக்கும் உளப்பாங்கு தேவை! உடலுழைப்பே உயர்வுடையது என்றருள் செய்யும் இறைவா. உழத்தல் போன்று உழைத்தலே உழைப்பு.

கழனியில் சேறு ஆவதற்கு மாடு திரும்பத் திரும்ப உழைத்தலைப் போல உழைத்திடும் மனப்பாங்கினை அருள் செய்! இறைவா, உழைத்து உண்ணும் ஒழுக்கத்தினை அருள் செய்க!

உளமார உழைத்தலே யோகமாகும். உடல் வருந்த உழைத்தலே தவமாகும்! உழைப்பில் மகிழும் வாழ்க்கையைத் தா!

இறைவா, காலங்காட்டும் கடிகாரத்தைப் போலச் சுழன்று சுழன்று சுறுசுறுப்பாக உழைக்கும் வரத்தினைத் தந்திடுக. உழைப்பால் மண்ணகத்தை விண்ணகமாக்கிடும் ஆற்றலைத் தந்தருள் செய்க! 

அக்டோபர் 22

சொல்லும் சொல்லில் அன்பு விளைய, இன்பம் நிறைய
அருள் செய்க!

இறைவா, பேச்சிறந்த பூரணமே! சொல்லாமற் சொல்லும் இறைவா! சொல்லும் சொல்லில் சிக்கனம் தேவை!

சொல்லும் சொல், அன்பில் நனைந்திருக்க வேண்டும். சொல்லும் சொல் பயனுடையதாக அமைதல் வேண்டும். இறைவா, சொல்லப் பெறும் சொற்களுக்கு இவ்வளவு இலக்கணம் உண்டு.

சொல் இலக்கணம் அறிந்து சொல்லும் - பேசும் அறிவினைத் தந்தருள் செய்! பொய்ம்மை பேசாதிருக்க வேண்டும். வாய்மை வழாது பேச வேண்டும். தீமை பயக்கும் சொற்களைச் சொல்லவே கூடாது.

நன்மை பயக்கும் சொற்களையே சொல்ல வேண்டும். அன்பை விளைவிக்கும் சொற்களையே பேச வேண்டும். அறிவினை வழங்கக்கூடிய சொற்களையே கூறவேண்டும். பயன் மிகுதியும் விளையும் இனிய சொற்களைக் கூறவேண்டும். இறைவா, அருள் செய்க!

சொல்லும் சொற்களை எண்ணிப் பார்த்து தந்திட வேண்டும். இன்ப அன்பினை வழங்குதல் வேண்டும். அறம் விளைக்கும் சொற்களைச் சொல்லக் கற்றுத் தா!

இறைவா, சில சொல்லிப் பல கேட்கக் காமுறும் பாங்கைத் தந்தருள் செய்க! சொல்லும் சொல்லில் அன்பு விளைய, இன்பம் நிறைய அருள் செய்க!

அக்டோபர் 23

தாயாக வந்திருந்து என்னை வளர்த்திடு தயாபரனே!

இறைவா! பெண்ணின் நல்லாளொடு வீற்றிருக்கும் பெருந்தகையே! தாயாக இருந்து வளர்க்கும் தயாபரனே! ஆம், என்னை வளர்க்க ஒரு தாய் தேவை! என் உடலினை வளர்க்க, என் உயிரினை வளர்க்க, என் உணர்வினை வளர்க்க ஒரு தாய் தேவை. ஆம் இறைவா, திருத்தமுற வளர்க்க ஒரு தாய் தேவை!

தாய்க்கே, என் மீது தணியாத அன்பு. குறிக்கோளற்ற அன்பு! என் தகுதிகளைக் கடந்த அன்பினைத் தாய்தான் பொழிவாள். இறைவா, தாயன்பு இணையிலாதது! என் தாயை எனக்குத் தா!

என் வாழ்வினின்றும் என் தாயைப் பிரிக்காதே! என் பசியை நினைந்து சோறூட்டுவாள். நோய் வராமல் பாதுகாப்பாள். அணைத்து அமுதூட்டுவாள். அடித்துத் திருத்துவாள்.

இறைவா, எனக்குத் தாய் தேவை. எப்போதும் தேவை. என் தாயை எனக்கு அருள் செய்! இல்லையேல் இறைவா, நீயே தாயாக வந்தருள் செய்!

இறைவா, தாயுமானவன்தானே நீ! அன்று தாயான உனக்கு, இன்று தாயாக வந்தருள் செய்வது அரிதா? இன்றும் தாயாக வந்திருந்து, என்னை வளர்த்திடு! வாழ்வித்திடு! இற்றைக்கும் ஏழேழ் பிறப்புக்கும் உனக்காட் செய்வேன்! அருள் செய்க!

அக்டோபர் 24


இறைவா, என் கால்கள் சிறந்திட அருள் செய்க!

இறைவா, நின்னையடைதலே திருவடிப்பேறு என்கின்றனர்! நின் திருவடிகள் - தாள்கள் தாங்குந்தகையன! இறைவா, எனது கால்களுக்கு வலிமையைக் கொடு உழைக்கும் பண்பைக் கொடு.

உற்பத்திப் பணிகளைச் சிறப்புடன் செய்து, வழி வழி வரலாற்றுக்குக் கால் கொடுத்து நிறுத்தும் பெற்றிமையை என் கால்களுக்குக் கொடு.

நடை என்றால் காலால் நடப்பது மட்டுமன்று. அது நல்லொழுக்கத்தையும் குறிக்கும். ஆம்! என் கால்களின் வலிமையில் - உழைப்பில்தான் ஒழுக்கம் கால் கொள்கின்றது.

இறைவா, என் கால்கள் எனது நல்லொழுக்கத்திற்குத் துணையாக அமைந்த கால்களாக விளங்க அருள் செய்க!

என் கால்கள் நாடெல்லாம் நடந்து வந்து நல்லன அறிய அருள் செய்க! இறைவா, என் கால்கள் வழுக்கல் நிலங்களிலும் இழுக்கலாகா வண்ணம் நடந்திட அருள் செய்க! நின் திருக் கோயிலில் வலம் வரும் வாய்ப்பினை அருள் செய்க! நின் சந்நிதியில் நின்றே தவம் செய்யும் பேற்றினை அருள் செய்க!

இறைவா, என் கால்கள் சுறுசுறுப்பாக இயங்கி, என் வாழ்வை இயக்கமாக்கிட அருள் செய்க! என் கால்கள் சிறந்து, வழி வழிக் கால்களாக விளங்கிட அருள் செய்க!

அக்டோபர் 25


வாழ்வாங்கு வாழ்தல் உண்மையாக வேண்டும்! இறைவா,
அருள் செய்க!

இறைவா, எல்லா உலகமும் ஆனாய் நீயே! என்னைச் சுற்றியுள்ள பூத, பௌதிக உலகமனைத்தும் நீயே! என்னைச் சுற்றியுள்ள இயற்கை உலகத்தில் எவ்வளவு அறிவுச் செறிவு! ஆற்றலின் அடைவு! ஆக்கத்தின் தேக்கம்!

இறைவா, நான் இயற்கையோடிசைந்த வாழ்வினை வாழ்ந்திட அருள் செய்க! என்னைச் சுற்றியுள்ள அனைத்துலகத்திடமிருந்தும் ஆற்றலை ஈர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்! புகழ்மிக்க வாழ்வு வாழ்ந்திடுதல் வேண்டும்!

இந்த உலகை, நான் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இந்த உலகில் நான் முழுமையாக வாழ்ந்திடுதல் வேண்டும். இறைவா, அருள் செய்க!

காய் கதிர்ச் செல்வனின் ஆற்றலும், தண் நிலவின் தண்ணளியும் எனக்குத் தேவை. இறைவா, அருள் செய்க! அறியாமை, வறுமை, பிணி, துவ்வாமை என்றின்னவை இந்த வையகத்திலேயே இல்லாமல் செய்தாக வேண்டும்.

"இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்ற வாக்கு உண்மையாக வேண்டும். வாழ்வாங்கு வாழ்தல் உண்மையாக வேண்டும். இறைவா, அருள் செய்க!

அக்டோபர் 26


இறைவா, வெற்றிகள் நிறைந்த வாழ்வை அருள் செய்க!

இறைவா, ஒங்கி உயர்ந்த திருவுருவில் எழுந்தருளியுள்ள தஞ்சைப் பெரிய திருவுடையவரே! மாமன்னன் இராசராசன் "தேவாரதேவர்” என்று புகழ்ந்து போற்றிய இறைவா!

இறைவா, நீ நடுவுநிலையுடையோனாய் இருத்தல் வேண்டாமா? ஆம் இறைவா! மாமன்னன் இராசராசன் ஆட்சி செய்த முப்பத்திரண்டு ஆண்டுகளில் மாபெரும் காரியங்கள் சாதித்துள்ளானே நின்னருளால்! தனது அரசை "சாம்ராஜ்ய" மாக்கியுள்ளான்! நினக்குத் தஞ்சையில் உலகமே வியக்கும் மாபெரும் கலைக்கோயில் எழுப்பியுள்ளான்! ஆண்ட ஆண்டுகளில் அளப்பரிய காரியங்கள், வாழ்ந்த நாள்களில் விழுமிய பணிகள் செய்து புகழ்மிக்க வாழ்வு வாழ்ந்திட அருள் செய்திருக்கிறாய்!

நானுந்தான் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துள்ளேன்! ஒரு திருப்பணி கூடச் செய்து முடிக்க முடியவில்லையே! எடுத்த செயலில் எல்லாம் இடையீடுபட்டு எய்த்து நிற்கின்றேனே! இறைவா, இது நீதியாகாது. இறைவா, எனக்கும் முற்றாக அருள் செய்! நின் கோயில் திருப்பணிகள் செய்து முடித்திடுதல் வேண்டும்; நீ மகிழ்ந்து கேட்கும் தேவாரத்தை, நின் பூஜைக்குப் பயன்படுத்தும்படி செய்திடுதல் வேண்டும்.

தமிழினத்தை ஒருகுலமாக்குதல் வேண்டும். இறைவா அருள் செய்க! வெற்றிகள் நிறைந்த வாழ்வை அருள் செய்க!

அக்டோபர் 27


இறைவா, ஒன்றேகுலம்! அதுவே உயிர்க்குலம் என்ற
ஒழுக்கத்தில் என்னை நிறுத்துக!

இறைவா, எந்நாட்டவர்க்கும் இறைவா! நான் மிகச் சின்னஞ்சிறு வட்டத்திற்குள்ளிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கின்றேன். குடை ராட்டினத்தில் ஏறிச் சுற்றும் குழந்தைகளைப் போல என் நிலை பரிதாபமாக இருக்கிறது.

இறைவா, நான், சிறு வட்டத்திலிருந்து வெளியே வர அருள் பாலித்திடுக! ஆம், இறைவா! மனிதகுலம் என்ற பெரிய வட்டமே எனது அன்புக்கு இலக்காக அமைய வேண்டும்.

சாதி, குலம், கோத்திரம், இனம், மதம் என்ற சின்னச் சின்ன வட்டங்களுக்குள்ளேயே சுழலுகிறேன். கிணற்றுத் தவளைபோல, கிணறே கடல் என்று கருதி ஆசைப்படுகிறேன். அமைவு கொள்கிறேன்! இறைவா, மானிடனாகிய எனக்கு ஏன் இந்த வட்டங்கள்!

"யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று வாழ்ந்திட அருள் செய்க! "ஒன்றே குலம், அதுவே உயிர்க்குலம்" என்ற மேலாய ஒழுக்கத்தில் என்னை நிறுத்துக.

ஆன்மநேய ஒருமைப்பாடு காணும் தவத்தினைப் பயில அருள் செய்க! இறைவா, "எல்லா உலகமும் ஆனாய் நீயே" என்ற உண்மையை நான் உணர்ந்து உலகந்தழுவிய ஒழுக்கத்தில் நின்று வாழ்ந்திட அருள் செய்க!

அக்டோபர் 28


இறைவா, மற்றவர் மகிழும் பணிகளில் ஈடுபடும்
வரத்தினைத் தா!

இறைவா, மூலநோய் தீர்க்கும் முதல்வா! அழுக்காற்றிலிருந்து என்னைக் காப்பாற்று. அழுக்காறு அன்புக்குப் பகை, நட்புக்குப் பகை, ஆக்கத்திற்குப் பகை. இந்த அழுக்காறு ஏன் எனக்கு?

பிறர் வாழ மகிழும் மனம் கிடைத்தால் போதும்! இறைவா, நீ அன்பின் திருவுரு! மனித குலத்தை நேசிக்கும் அன்பினை வழங்கு! பிறர் இன்புறுவது. தான் இன்புறுவது என்று கருதி வாழ்தல் வேண்டும்.

நான் பிறர் நலம் நாடுவதையே உயிர்நோன்பாக ஏற்றுக் கொள்ள அருள் செய்க! நீலமணிமிடற்றிறைவனே! சமூக வாழ்க்கை வாழ்தல் என்ற நிலை அழுக்காற்றைத் தராது. இன்புற்று வாழும் சிறப்பினை நல்கும்! இறைவா அருள் செய்க!

சமூக வாழ்க்கையை ஏற்று ஒழுகுதலே அழுக்காறுக்கு மருந்து! அழுக்காறற்ற வாழ்க்கை ஆக்கத்தைச் சேர்க்கும்; சுற்றத்தை நல்கும்; இந்த உலக வாழ்க்கையில் சொர்க்கத்தைப் படைக்கும்.

இறைவா, பிறரை வாழவைக்க அறிவறிந்த ஆள்வினையைத் தா! அனைத்துலகமும் எனது உலகம் என்று அணைத்துச் செல்லும் அறப்பண்பினைத் தந்தருள் செய்க!

அழுக்காறற்ற நெறி நயந்த அருள் வாழ்வை அருள் செய்! பிறர் மகிழ்வுறும் செயல்களில் ஈடுபட்டு, உளமாரச் செய்யும் வரத்தினைத் தந்தருள் செய்க!

அக்டோபர் 29


இறைவா, என்தரத்தை உயர்த்திக் கொள்ளும் இயல்பினை
அருள்க!

இறைவா, வித்தின்றியே விளைவு செய்யும் இறைவா! எனக்கு ஆசைகள் அதிகம். ஆம்! நிறைய பொருள் வேண்டும். ஆம்! பொருள் வேண்டும்.

ஆனால், முயற்சியின்றியே நிறையபொருள் கிடைக்க வேண்டும். அதுவும் நீயே கொடுத்துவிட்டால் முழுநிறைவு. இப்படி என் மனம் எண்ணுகிறது! இது தவறு என்பதை உணர்கிறேன். நடவாதது, நடக்கக் கூடாதது என்பதையும் உணர்கிறேன்.

ஆனால், கடின உழைப்பினை ஏற்க மனம் மறுக்கிறது! இறைவா, என்னைத் திருத்து. எங்குக் கடின உழைப்பில்லையோ அங்குச் செல்வம் சேராது. சேர்ந்தாலும் நிற்காது. என்ற தத்துவத்தை என் வாழ்க்கையின் அனுபவமாக்கும் அறிவினைத் தந்தருள் செய்க!

உழைப்பே தவம்! உழைத்தல் மூலமே உரிமை கால் கொள்கிறது என்ற உண்மைகள் என் வாழ்க்கையின் உண்மைகளாக விளங்க அருள் செய்க!

பொருளைப் போற்றி வாழ்தலினும் என்னுடைய தரத்தை நான் உயர்த்திக் கொள்ளுதல் சிறப்புடையது. இறைவா அருள் செய்க!

அக்டோபர் 30


இறைவா, என் செவிகளுக்கு நற்செய்திகளை வழங்கி அருள்க!


இறைவா, கேளாதனவெல்லாம் கேட்பித்து ஆட்கொள்ளும் இறைவா! நின் கருணை என்பால் விழ வில்லையே! ஏன் கால தாமதம்?


நான் எளிதில் கேட்க இயலாத மந்திரங்களை, மந்திரங் களின் உட்பொருளை, மந்திரங்கள் அனுபவமாகும் மெய் யுணர்வு வாழ்க்கையைப் பற்றிக் கேட்டது எப்போது? நீ வந்தருளிச் சொல்லக் காலம் தாழ்த்தினால் அதுவரை என் காதுகள் காத்திராதுபோல் இருக்கின்றன!


அம்மம்ம, உன் படைப்பில் என்ன விசித்திரம்! திறந்த காதுகள், ஒன்றுக்கு இரண்டு! நாள்தோறும் நான் கேளாதன கேட்க முடியவில்லை. கேட்கக் கூடாதன கேட்டு விகாரப்பட வேண்டியிருக்கிறது.


இறைவா, என் காதுகளுக்கு நான் அழைக்காமலே செவி உணவு பரிமாறுகிறவர்கள் வந்து விடுகிறார்கள்! இறைவா, அபசாரம்! பரிமாறப் பெறுவது செவியுணவன்று.


நெருப்புத் துண்டுகளனைய தீய சொற்கள்! புறங் கூறுதல், தீக்குறள்கள் இன்னோரன்ன உள்வடு ஏற்படுத்தும் தீயசொற்கள்! இறைவா, தீய சொற்களை இனிமேல் நான் கேட்கக் கூடாது.


இறைவா, நல்லவையே கேட்க வேண்டும். மற்றவர் அருங்குணங்களைப் பற்றிய செய்திகளையே கேட்க வேண்டும்! இறைவா, பிறர் புகழே, என் செவிச் செல்வம்! நின் புகழே எனக்கு உய்தி தருவது! இறைவா, இந்தப்படி என் செவிக்கு நற்செய்திகளை வழங்கி அருள் செய்க!

அக்டோபர் 31


நாளும் நின்வழியில் கொல்லாமைநோன்பு ஏற்க அருள் செய்க!


இறைவா, இந்தப் பொல்லாத மனித சாதியொடு எத்தனை கோடி ஆண்டு காலமாகப் போராடி வருகின்றனை! நின் போர்க்குணம் வளர்க! வாழ்க!


இறைவா, நோன்பில் எல்லாம் உயர்ந்த நோன்பு எது? "ஒன்றாக நல்லது கொல்லாமை!” உலகம் முழுதும் கொலை தவிர்க்கப்பெறுதல் வேண்டும். கொலை! அதுவும் நிராயுத பாணியை, பெண்ணை, நல்லவர்களைக் கொலை செய்வது என்பது கொடுமை.


இன்றைய உலக அரசியலிலேயே, அணுகிப் பழகி நம்பிக்கையைப் பெற்று, கொன்று விடுதல் என்பது அரசியல் புத்தியாகிவிட்டது. இது கேவலம், இறைவா! உயிர்க் குலத்தைக் காப்பாற்றுக கொலையிலிருந்து குவலயத்தைக் காப்பாற்றுக.


இறைவா, என் உள்ளத்தில் "கொலை” எண்ணம் வேண்டாம்! இறைவா, அருள் செய்க! என்னுடைய பகைவனைக் கூட கொலை மூலம் சந்திக்க நான் விரும்பவில்லை! இறைவா, இந்த வண்ணமே அருள் செய்க!


கொலை கொடிய மனத்தில் தோன்றுவது. என் மனம் கொலை தழுவும் மனமாக மாறாமல் காப்பாற்றி அருள்க! கொலை செய்பவர்கள் ஏழேழ் பிறப்பிலும் நரகத்தில் ஆட்படுவார்கள். எங்கு வாழ்ந்தாலும் நரக வேதனையை அனுபவிப்பார்கள்.


இறைவா, கொலை' என்ற சொல்லே இல்லாமல் போக வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் யாரையும் கொல்லா மனம் தந்தருள்க! நாளும் நின் வழியில் கொல்லாமை நோன்பு ஏற்க அருள்செய்க!