குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/தமிழ் நெறியும் லெனினியமும்




25


தமிழ் நெறியும்-லெனினியமும்


லெனினியம், எதையும் அறிவின் அடிப்படையில் எதார்த்த உணர்வோடு ஆராய்ந்து முடிவெடுப்பதாகும். இரண்டும் இரண்டும் நாலு என்று விடை வருவதைப் போல் எந்த ஒன்றையும் அறிவில் ஆராய்ந்து அனுபவரீதியாக முடிவெடுக்க வேண்டுமென்பது லெனினியத்தின் அடிப்படை விதி. லெனினியம், “விரிந்தும் பரந்தும் கிடக்கின்ற இந்த உலகம் இயற்கயைானது” என்கிறது. இந்த உலகத்தைப் படைத்த-இந்த உலகத்திற்கு அப்பாற்பட்ட இன்னொரு சக்தி உண்டென்பதை நம்புவதில்லை. இல்லை. நம்ப மறுக்கிறது! அதோடு. “இந்த உலகம் ஒரு மாதிரியாக இல்லை; வேறுபட்டுக் கிடக்கிறது; முற்றிலும் முழுமைபெற்றுப் பக்குவமாக இல்லை; அது வளர்கிறது; மாறி வருகிறது; முற்றிலும் இன்பமாக இல்லை. துன்பக் கலப்பு இருக்கிறது. இந்தக் காரணங்களால் உலகம் இயற்கையோம்.” என்பது லெனினியத்தின் தத்துவங்களுள் ஒன்று.

தமிழிலக்கிய மரபுகளைப் பொறுத்தவரையில் இந்த உலகம் பற்றிய கருத்து ஒரு மாதிரியாக இல்லை. காலத்திற்குக் காலம் மாறுபாடுகிறது. ஒரு நூலுக்குள்ளேயே கூட இரண்டு விதக் கருத்துக்கள் பேசப்படுகின்றன. உலகம் இறைவனால் படைக்கப் பெற்றது என்ற கருத்தும் உதவுகிறது; உலகம் இறைவனுடைய திருவருள் நோக்கால், மாயையில் தோன்றியது என்பாருமுளர். இறைவனே உலகம் என்றும், உலகமே இறைவன் என்றும், பேசப்பட்டு இருக்கிறது. எது எப்படியிருப்பினும், உயிர் வர்க்கங்கள் கடவுளால் படைக்கப்பட்டவையல்ல என்று தமிழ்ச் சமய மரபு அறுதியிட்டுக் கூறுகிறது. இங்ஙனம், தமிழிலக்கிய மரபில் பல குரல் உலகத்தைப் பற்றிய கருத்தில் ஒருமைப்பாடில்லாது போனாலும், உலகம் கடவுளால் படைக்கப்பட்டதன்று. உலகம் தானே தோன்றியது. இந்த உலகத்தின் இயக்க ஆற்றலைக் கடவுளாகவே கருதினார்கள் என்ற கருத்து லெனினியத்துக்குச் சார்பாக அமைந்திருக்கிறது. பொதுவாக இந்தக் கருத்தே, வலிமை பெற்றும் வளர்ந்து வந்திருக்கிறது.

சங்கத் தமிழ் நூல் ஐங்குறுநூறு ஒரு சிறந்த இலக்கியம். ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து ஓர் இனிய பாடல், அந்தப் பாடல்,

“நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே!

என்பது உலக உயிர்கள் பரிணாம வளர்ச்சிக்கு ஆணும் பெண்ணும் இயைந்த கூட்டு வாழ்க்கை இன்றியமையாதது. அவ்வழித் தோன்றும் உயிர்த் தோற்றமே இயற்கை அஃதில்லாத பௌராணிகத் தோற்றங்கள் அறிவியலுக்கும் ஒத்தன அல்ல; இயற்கையோடும் இயைத்தனவாகா. அத்தகைய அநாகரிகப் படைப்புகள் பேதைமைத் தன்மையின் படைப்புகளேயாம். அதனால், உலகிற்குக் கடவுளைத் தந்தையாகக் கருதிய தமிழ், அவனை மங்கை மணாளனாகக் கண்டது. ஆனால், அந்தப் படைப்பு தத்துவப் படைப்பேயாம். பருவுடல் வழிப்பட்ட பால்படைப்புமன்று கூட்டுமன்று.

இதனை மேற்கூறிய “நீலமேனி” என்ற பாடலில் “தாள்நிழற்கீழ்” என்பதால் அவன் தாளாண்மையில் தோன்றிற்று உலகம் என்றும் கூறலாம். ஆயினும், ஆசிரியர் முகிழ்ந்தன என்று கூறுவதால் அவனுடைய தாளாண்மையால் தோன்றிற்று என்று பொருள்கொள்ள முடியவில்லை. காரணம், 'முகிழ்த்தன' என்ற சொல் தன்வினைச் சொல்லே பிறவினை அன்று. ஆதலால், உலகம் இறைவனுடைய தண்ணளியின் நிழலில் தானே தோன்றிற்று என்று கொள்ளுதலே சிறப்புடைய பொருளாகும். உலகம், தானே தோற்றிற்று என்ற லெனினியத்தோடு இந்தக் கருத்து இசைந்திருக்கிறது. தமிழ் இலக்கண நூலுள் ஒன்றாகிய புறப்பொருள் வெண்பாமாலையும் இந்த அடிப்படையிலேயே உலகத் தோற்றத்தைப் பற்றிப் பேசுகிறது. அதாவது.

“வையகம் போர்த்த வயங்கொளிநீர்-கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”

என்பது பாடல். இந்தப் பாடல் மூலம், உலகம் நீர்ப்பரப்பாக முதலில் இருந்தது. பின்பு பரிணாம வளர்ச்சியில் கல் தோன்றிற்று. கல் கரைந்தும் உடைந்தும் மண்தோன்றுதற்கு முன்பு தமிழினம் தோன்றிற்று என்று விளங்குகிறது. ‘கல்தோன்றி மண் தோன்றி என்ற சொற்களில் மூலம் நானே தோன்றிற்று எனபதே பெறப்படுகிறது. தோன்றுதல் என்ற சொல்லும் தன்வினைச் சொல்லேயாம்.

அப்பரடிகள் “இறைவன் உலகத்தைப் படைத்தான்” என்று ஒரேவழி கூறியிருந்தாலும், மிகுதியாக 'இறைவனே உலகம்' என்ற கருத்தும், உலகமே இறைவன் என்ற கருத்தும் தான் அப்பரடிகள் திருமுறையில் அதிகம் பயிலுகிறது. இறைவன் படைக்கப்பட்டவன் அல்லன். ஆதலால், உலகமே இறைவன் என்ற கருத்தால் உலகம் படைக்கப்பட்ட தில்லை என்பதும் பெறப்படுகிறது. “எல்லா உலகமும் ஆனான்” என்றும், “அனைத்துலகும் ஆனானை” என்றும், “உலகமெல்லாம் ஆயவனை” என்றும், “உலகானானை” என்றும் அப்பரடிகள் அருளிச் செய்துள்ளார்கள். சிவநெறியில் சிவலிங்க வழிபாடே. தொன்மை வழிபாடு. சிவலிங்க வழிபாட்டின் பரிணாம வளர்ச்சி. இறைவன் உலகமாக இருக்கிறான் என்ற அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. சிவலிங்கத் திருமேனியின் பானம் உலகத்தின் சின்னமே யாகும். இறைவன் உலகமாக இருக்கிறான் என்பதைவிட அப்பரடிகள் எல்லா உலகமும் இறைவனானான் என்றே குறிப்பிடுகிறார். ஆனால், உலகத்தை இறைவனாகக் கருதி வழிபாடு தோன்றிற்றென்றும் பொருள் கொள்ள வழியிருக்கிறது. இங்ஙனம் ஆராய்ந்து பார்க்கும்பொழுது உலகம் பற்றிய கருத்தில் லெனினியத்திற்கும், தமிழிலக்கிய மரபிற்கும் மிகுதியும் முரண்பாடில்லை.

உலகம் படைக்கப் பட்டதன்று இயற்கையானது என்ற செய்தியை முன்னால் ஆராய்ந்தோம். அந்த வகையில் லெனினியத்துக்கும் தமிழ் மரபுக்கும் முரண்பாடின்மையையும் கண்டோம். ஆயினும், இந்த உலகத்தின் இயக்கம் - மாறுதல்-வளர்ச்சி ஆகிய தொழிற்பாடுகளைப் பற்றி நாம் ஆராய வேண்டியதிருக்கிறது. இந்த உலகத்தின் தொழிற்பாட்டில் ஓர் ஒழுங்கும் முறை பிறழாத நிகழ்ச்சியும் இருப்பதைக் காண்கிறோம். இந்த ஒழுங்குமுறை உலகத்திற்கு எப்படி கிடைத்தது: அஃதும் இயற்கையா? உலகம் சடப் பொருளா? அல்லது உயிர்ப் பொருளா? அல்லது இரண்டும் கலந்த பொருளா? சடப் பொருளுக்கு மாறுதலும் வளர்ச்சியும் உண்டா? என்ற ஏராளமான வினாக்களுக்கு விடை காண்பதில் உலகிடை நிலவும் தத்துவங்கள் அனைத்தும் முரண்படுகின்றன. சிசரோ என்ற பேரறிஞன், இந்த உலகத்தின் நிகழ்வு முறைகளில் மனிதனுடைய சக்திக்கு அப்பாற்பட்ட செயல் முறைகளைப் பார்க்கிறோம். உலகத்தின் நிகழ்வுகளில் ஒரு மாறா முறைவழிப்பட்ட நிகழ்ச்சியையும் (order), ஒழுங்கு பெறாத நிகழ்ச்சியையும் (In Consistent) பார்க்கிறோம். நிச்சயமாக இவைகளுக்கு மனிதன் காரணமாக இருக்க முடியாது. மனிதனை விட மேம்பட்ட தொன்றாகத்தான் இருக்க வேண்டும். அது கடவுளையன்றி வேறு யாதாக இருத்தல் கூடும்? என்று கூறுகிறார்.

பகுத்தறிவு படைத்த மனிதனை விட இயற்கை ஒரு வகையில் ஒழுங்காகவே இயங்குகிறது. அதிதமாகச் சில சந்தர்ப்பங்களில் இயற்கையின் சிற்றத்தால் துன்பங்கள் விளையினும், பொதுவாக, இயற்கை அழகாக இருக்கிறது. ஆக்கப்பாடுடையதாக இருக்கிறது. உயிரினங்கள் பலவற்றிற்கும் வாழ்வளிக்கிறது. இயற்கையின் எழில் தோற்றத்திலும் அதன் விளைவுகளை நுகர்தலிலும் உயிரினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்காட்டிகள் கடிகாரங்கள் முதலியன வைத்தறியாத இயற்கையுலகம் காலத் தவறாது செயற்படுகிறது! கதிரொளி தெரிகிறது! மரங்கள் பூக்கின்றன; காய்க்கின்றன; கனி தருகின்றன! இவை நிகழ்வதில் ஒரு குறிப்பிட்ட காலவமைப்பு முறையிருக்கிறது. இந்த முறைகளும் மாறுபடவில்லை. காலந்தாழ்த்தி அலுவல்கள் செய்யும். அதுவும் கடிகாரம் கட்டிய மனிதனைப் பார்க்கிறோம் ஆனால் ஞாலத்து நிகழ்வுகளில் காலத் தாழ்ச்சியில்லை. இத்தகைய வியத்தகு முறைகளுக்கு எது அடிப்படை ? இயற்கையின் இயல்பா? உலகத்தின் உள்ளிடமா? அல்லது உலகத்திற்கு உயிர்ப்புத்தன்மை யுண்டா? அல்லது மனிதன் இயக்குகின்றானா? அல்லது கடவுள் இயக்குகின்றானா என்பதைத் தொடர்ந்து ஆராய்வோம்.

நம்முடைய ஆய்வில் மிகவும் சிக்கல் நிறைந்த பொருள் ஆன்மா. அதாவது உயிரைப் பற்றியதாகும். லெனினியம் உயிர் சம்பந்தப்பட்ட செய்தியில் நம்முடைய தமிழ் மரபோடு முரணி நிற்கிறது. உடலுக்கு அப்பாற்பட்ட உயிர் ஒன்று இல்லையென்பது லெனினியத்தின் கோட்பாடு. ஆனால் தமிழ்மரபு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உயிர் என்ற தனிப்பொருளை ஒத்துக் கொண்டே வந்திருக்கின்றது. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய திருவள்ளுவர் உடம்பும் உயிரும் வெவ்வேறானவை என்றே குறிப்பிடுகிறார். காதலன் - காதலி இடையே இருக்கும் உறவுக்கு உவமை கூறவந்த திருவள்ளுவர் உடம்பொடு உயிரிடை நட்டை உவமை காட்டினார்.

“உடம்போ டுயிரிடை யென்னமற் றன்ன
மடந்தையோ டெம்மிடை நட்பு”

என்பது குறள், காதலன் - காதலி இவ்விருவரிடையே ஏற்படுகிற உறவுக்கு, உடம்புக்கும் உயிருக்கும் இருக்கும் நட்பை உவமையாகக் காட்டினார். இதிலிருந்து உடலும், உயிரும் வெவ்வேறு என்பது தெளிவாகிறது. அது போலவே,

“குடம்பை தனித்தொழியப் புட்பறத் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு”

என்ற திருக்குறளும் உடம்பையும் உயிரையும் வேறு வேறாகக் காட்டுகிறது. ஆதலால் உடம்பே உயிரல்ல; உடம்பின் இயங்கு சக்தியும் உயிரல்ல. உடம்பில் தங்கியிருந்து பணிகளைச் செய்வது உயிர்.

உயிர்கள் நிலை பெற்றவை. உயிர்களுக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை. உயிர்களைக் கடவுள் படைக்கவும் இல்லை. உயிர்கள் என்றும் நிலைபேறான தன்மையுடையன என்பது தெளிவாகிறது. புறநானூற்றுக் கவிஞர்,

“மன்னா வுலகத்து மன்னுயிர்”

என்று பாராட்டுகிறார். திருவள்ளுவரும்,

“மன்னுயி ரோம்பி அருளாள்வார்க் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை”
.

“தம்மில் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது”

என்று கூறியுள்ள குறள்களில் மன்னுயிர் என்றே குறிப்பிடுகிறார் மன்னுயிர் என்றால், நிலை பேறான தன்மையுடைய உயிர் என்றே பொருள்படும். ஆதலால், உயிர்கள் உடம்பைக் கருவியாகக் கொண்டே வாழ்ந்து கடமைகளைச் செய்கின்றன என்பது பெறப்படுகிறது. உடம்பு என்ற சொல்லினும் “உடு” என்ற முதனிலைச் சொல் உயிர் எடுத்துக் கொண்ட உடையே உடம்பு என்பதைத் தெளிவாக விளக்குகிறது. உயிர் உடம்பினைக் கொண்டு தன்னுடைய மேம்பாட்டுக்குரிய கடமைகளைச் செய்கின்றது என்பதே தமிழ்க் கருத்து. உயிர் என்றும் உள்பொருள் என்றே தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் ஒரு முகமாகக் கூறுகின்றன. தாயுமானவரும்.

 :“என்று நீ அன்று நான்”

என்றார். அதாவது தோற்றத்தால் உயிரும், கடவுளும் ஒன்றற்கொன்று பிந்தியதுமல்ல; காலத்தால் ஒத்த இயல்புள்ளவை என்று கூறுகிறார்.

ஆதலால், உயிர் என்றும் உள்பொருள். அதற்குப் பிறப்புமில்லை; மறைவுமில்லை என்பது தெளிவாகிறது. அந்த உயிர், கடவுளைப் போல கால எல்லைகளைக் கடந்தது. அந்த உயிர் உடலைக் கருவியாகக் கொண்டு இயங்குகிறதே தவிர உடலுக்கு உயிர்த் தன்மை இல்லை. உடலுக்கு உயிர்த் தன்மை உண்டெனக் கூறும் நெறி, தமிழ் நெறியல்ல. உயிர் பிரிந்த வழி உடல் உயிர்ப்பின்றி-பேச்சின்றிப் பிணமாகக் கிடப்பதைப் பார்க்கிறோம். உடலே உயிராக இருக்குமாயின், இந்த அவல நிலை ஏன்? ஆதலால், உயிரை உள்பொருள் என்று ஒத்துக் கொண்டு அந்த அடிப்படையில், மேலும் லெனினியத்தை ஆராய்வோம். உயிரைப் பற்றிய தெளிவான முடிவு ஏற்பட்டாலே, லெனினியத்தின் முழு வடிவத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

உயிர் பற்றிய கொள்கையில் பௌத்த நெறி சற்று வளர்ந்த கொள்கையைக் கண்டது. அதாவது, இவ்வுடம்பின் வேறாய் எல்லாவற்றையும் அறிவதாகிய அறிவு உண்டு எனக் கொண்டு, அறிவை ஒத்துக் கொண்டது. ஆனால் உயிர் உண்டென்ற கொள்கை பௌத்தத்திற்கு இல்லை. அறிவு என்பது ஐம்பொறிகளுக்கும் புலப்படுவதில்லை. அறிவு, ஓர் அனுபவத்தின் மையம். “யான் இதனைக் கண்டறிந்தேன்” என்றும், “கேட்டறிந்தேன்” என்றும், “சுவைத்தறிந்தேன்’ என்றும், “நுகர்ந்தறிந்தேன்” என்றும், “தொட்டறிந்தேன்’ என்றும் கூறுவதனால், அறிவதை அனுபவமாகவும், அந்த அனுபவத்தைக் கொண்ட உயிர் ஒன்று தனியே உளது. என்பது பெறப்படுகிறது. “யான்” என்றும், “எனது” என்றும் உரிமை கொண்டாடுவதே உயிர்தானே : “யாம் அறிவதில்லை. அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற” என்று திருக்குறளில் “யாம்” என்று சுட்டிக் கொண்ட ஓர் உயிர்க்கு, அறிவு என்ற அறிதற்கருவி துணை நின்று தொழிற்படுவதே பெறப்படுகிறது.

திருவள்ளுவர் நமது திருக்குறளில் அறிவை உடைமையாகப் பேசுகிறார். “அறிவுடையார் எல்லாம் உடையார்” என்பது குறள். உடைமை என்றதனாலேயே, உடையவன் ஒருவன் உண்டென்பது வெளிப்படையான உண்மை. உயிர்க்குரிய பண்பாகும். “நான் அறிந்தேன்” “என்னறிவு” என்னும் வழக்கில் “நான்” என்பதொரு பொருளும், அதனோடு ஒற்றுமைப்பட்ட அறிதற் பண்பும், உணரத்தக்கன. அறிவு ஒரு பண்பேயன்றிப் பொருளாகாது. உடம்புடன் பொறிகளும், வளமுமே உயிர். “உயிரெனத் தனியே வேறொரு பொருளில்லை” என்பது பௌத்தம். உடல் உறக்கத்தில் கிடக்கும் பொழுது, அறிவு விளங்குவதில்லை. உறக்கத்தின் போது, அறிவு செயற்படுதலுமில்லை. ஏன்? பல சமயங்களில் அறியாமையோ என்று கருதக் கூடிய சில செயல்களும் திகழ்கின்றன. உடலும் பொறிகளும் அவை தம்முள் முரண்பட்டு, ஒன்று அறிந்ததைப் பிறிதொன்று அறியாது குழப்பத்தை விளைவிக்கின்றன. கண், ஒளியை அனுபவிக்கிறது.

ஆனால், அதே ஒளியைச் செவி அனுபவிப்பதில்லை. செவி, இசை ஒலியைக் கேட்டு அனுபவிக்கிறது. கண், அந்த ஒலியைக் கேட்டு அனுபவிப்பதில்லை. இந்தப் பொறிகள் நுகர்தலிலும் சரி, தமக்கு ஒதுக்கப்பட்ட களங்களிலும் சரி, ஒரு வழிபட்ட குறையுடைய அறிவையே பெற்று விளங்குகின்றன; பூரணத்துவம் இல்லை. உயிர், மனத்தினும் மாறுபட்டது. உயிர் ஒன்றே, இந்த ஐம்பொறிகளாலும் பெறும் இன்பத்தை முற்றிலும் முழுவதுமாக ஈடுபட்டு அனுபவிக்கிறது. ஒரு விளக்கு, தன்னைச் சூழ்ந்திருக்கின்ற பொருள்களைக் காட்டித் தன்னையும் காட்டிக் கொள்வது போலச் சித்தத்தையும், பிறிது உண்டாயவற்றையும் அறிவித்துத் தன்னையும் அறிவித்து நிற்கும் என்று கூறின், உருவங்கள் முதலிய பொருள்களையும் அவற்றைக் காட்டி நிற்கும் விளக்கையும் கண்டு நிற்கும் கண்போல சித்தத்தையும் விடயத்தால் அறியும் இந்திரியங்களையும் உணர்வான் ஒருவன் தனியே உண்டென்று அறிதல் வேண்டும்.

இன்னும் ஓருயிர் நெறியினர் (ஏகான்ம வாதிகள்) உயிரைப் பற்றி விசித்திரமாக விளக்கம் கூறுவர். அறிவுடைய உயிர் ஒன்றே, உடம்புகள் தோறும் வேறு வேறாய்க் காணப்படுகின்றது என்பது அவர்தம் கொள்கை. குடங்கள் தோறும் வேறு வேறாய்த் தோன்றும் திங்களின் வடிவு, அக்குடங்கள் உடைந்த வழி குடங்கள் தோறும் இருந்த திங்கள்கள் இல்லையாகித் திங்கள் ஒன்றுமே நிலைபெறுகிறது. அது போல, இவ்வுடம்புகளெல்லாம் போய விடத்து, உயிர் ஒன்றேயாக இருக்கும் என்பதும் ஒரு கொள்கை இந்தக் கருத்தும் உவமையும் நேரியதன்று. திங்களினிடத்துக் காணப்படும் ஒளி வடிவும், வட்ட வடிவும் அதன் நிழல்கள் எல்லாவற்றிலும் காணப்படுதல் போல, ஓருயிரினிடத்துக் காணப்படும் அறிவும் செயலும் ஏனைய உயிர்களிடத்தும் காணப்படுதல் வேண்டும். இங்ஙனமின்றி அவை. ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொன்றாகப் பல தரப்பட்டு நிகழக் காண்டலால், “உயிர் ஒன்றே” என்னும் முறை சிறிதும் பொருந்தாது. தண்ணீரின் அசைவால், தண்ணீரில் தெரியும் திங்களின் நிழலும் அசைவது போல் தோன்றிலும் திங்களுக்கு அந்த அசைவில்லை. அதுபோல உடம்பின் வினைகளால் உயிருடம்பின் உள்ளிருக்கும் உயிர், துன்புறுதல் தோன்றினும் ஒன்றே யாய அவ்வுயிர்க்கும் இயற்கையில் அவ்வினைத் தொடக்கு இல்லை. ஆயின், இந்த உவமை பொருந்தாது. உயிரின் சேர்க்கையின்றி உடம்பு ஒரு வினை செய்ய இயலாது.

உயிரைப் பொருத்தவரையில் நமது நாட்டு உலகாயுத வாதம் கூறுகின்ற கொள்கைகளும், லெனினியத்தின் கொள்கைகளும் உடன்பாடுடையன. அதாவது, உடலின் வேறாய் உயிர் என்ற ஒன்று இல்லை யென்பதாகும். இங்ஙனம் அவர்கள் கூறுவதற்கு அடிப்படைக் காரணம். அல்லது அடிப்படையானது. “கண்ணால் காணக் கூடியனமட்டுமே உண்மை, மற்றைய எல்லாம்-பொய்” என்ற கோட்பாடாகும். ஆய்வுக்கு அடிப்படையான இந்த அடிப்படைக் கோட்பாட்டிலேயே தவறு இருக்கிறது. உலகம் பரந்துபட்டது. அனைத்துலகத்தையும் அல்லது அனைத்துலக இயல்புகளையும், ஒரு பொறியால் கண்டு அனுபவித்தல் அல்லது உணர்தல் என்பது அருமை. அது எளியதல்ல என்பது மட்டுமன்று, இயலாததுமாகும்.

அதோடு, உலகிடை நிலவும் பல்வேறு பொருள்களுக்கும் ஓரியல்பு மட்டும் உரிமையன்று பல்வேறு இயல்புகளுண்டு. அப்பல்வேறு இயல்புகளையும் ஒரே நேரத்தில்-ஒரு பொறியால் அனுபவித்தல் இயலாது. அப்பொருளின் பல்வேறு இயல்புகளில், பல்வேறு பொறிகளும் தனித்தனியே தன்னியல்புக்கேற்றவாறு கலந்து, ஒரே பொருளில் ஒன்றிக்கலந்து அனுபவிக்கும் பொழுதே, அனுபவம் தோன்றுகிறது. வாழ்க்கை சிறக்கிறது. இருவகைப்பட்ட இன்பத்திற்கும் இந்த இயல்பு உண்டு என்று, பெருமக்கள் கூறியுள்ளனர்.

“கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.”

என்பது திருக்குறள்.

பெண் ஒரு பொருள்தான். ஆனால், வேறுவேறு இயல்பு பெண்ணுக்கு உண்டு. ஐம்பொறிகளும், தனித்தனியே அந்தப் பெண்ணின் ஓரியல்பைத்தான் அனுபவிக்க முடிகிறது. ஒரு பொறிக்கு ஒரியல்பு அனுபவத்திற்கு வராமையின் அந்த இயல்பு இல்லையென்றோ. பொருளில்லை என்றோ கூறமுடியாது. ஏன்? அறிவையே கூட நேரடியாகக் காண முடியாது. அறிவை, செயற்பாடுகளிலேயே காணமுடியும். மணம், கண்ணால், பார்க்கக் கூடிய ஒன்றன்று. மூக்கால் நுகர்ந்து அனுபவிக்கக் கூடியதே. மணம். கண்ணால் பார்க்கக் கூடிய தின்மையின் காரணமாக இல்லையென்று கூற முடியாது. ஏன்? உயிரியலில் இன்றியமையாத் தேவையாகிய காற்றே கண்ணின் காட்சிக்கு வருவதன்று. ஒரு பொருள் உள்பொருளா? இல்பொருளா? என்பதை ஒரு பொறியினைக் கொண்டு அளந்து கூறுதல் கூடாது.

ஐம்பொறிகளாலும் கண்டு ஆராய்ந்து, ஐம்புலன்களாலும் கண்டுணர்ந்து, அவைகளுக்கும் மேலாய அறிவாலும் ஆராய்ந்து முடிவெடுத்தலே ஏற்புடையதாகும். கட்புலனுக்கும் பகுப்பொருள்கள் மட்டுமே காட்சிக்கு வரும். அடுத்து, வண்ணமும் ஒளியும் காட்சிக்கு வரும். சில மெய்ப்பாடுகளும் கட்புலனுக்கு வருதல் கூடும். நுண்பொருள்களும் பெரும்பாலான தன்மைகளும் அல்லது குணங்களும், உணர்வுகளும் கட்புலனுக்கு வாரா. ஆதலால், கண்ணால் காண்பன மட்டுமே, உண்மையென்ற அடிப்படையே குறைவுடையதாகும்.

உலகாயத அடிப்படையில் உடலுக்கு வேறாக உயிரை நம்புவதில்லை. இந்த உடலுக்கு முந்தியதாகவோ, அல்லது பிந்தியதாகவோ யாதொன்றும் இல்லை. அதாவது உயிர் இல்லை என்பதே அவர்கள் கோட்பாடு. உயிரும், உடலும் ஒன்றே என்பது இக்கொள்கை “ஐம்பூதக் கூட்டினாலாகிய (நிலம், நீர், தீ, வளி, ஆகாயம்) இந்த உடம்பு தோன்றும் பொழுதே, அந்தக் கூட்டின் விளைவாக, உடலுக்கு உணரும் சக்தியும், சிந்திக்கும் சக்தியும் கிடைக்கிறது. அந்த இயக்கத்திற்கு அறிவு உண்டு: உணர்வு உண்டு” என்பதே இக்கொள்கை. “இந்தப் பொருட் சார்பு வலிமை குறையும் பொழுது, அந்த ஆற்றலும் குறைந்து போகின்றது. பின் மரணம் வருகிறது” என்பதும் அக்கொள்கை. அதற்கு அவர்கள் எடுத்துக் காட்டும் உதாரணம் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றின் கூட்டு ஏற்படும் பொழுது ஏற்படும் சிவப்பு வண்ணம் போல இந்தப் பூதங்களின் கூட்டால் உணர்வு ஏற்படுகிறது என்பதே. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இவற்றின் கூட்டால் ஏற்படும் வண்ணம் நிலத்திற்கு நிலம், இனத்திற்கு இனம், மொழிக்கு மொழி வேறுபாடுடையதாக இருப்பதில்லை என்பதை உணராதது ஏனோ ? வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு குப்பன் கூட்டினாலும், குப்புசாமி சாஸ்திரி கூட்டினாலும் குயின் கூட்டினாலும் குயின்டாங் கூட்டினாலும் வண்ணம் ஒரு தன்மைத்தே வேறுபாடுகள் இல்லை. அது போலவா, மனிதனின் சிந்தனை இருக்கிறது? உணர்வு இருக்கிறது? ஓரிடத்தில் பத்துப்பேர் இருந்து வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போட்டால், வண்ணம் ஒன்றேயாம். ஆனால், அந்தப் பத்துப்பேரின் உணர்வு ஒன்றல்ல; அது மட்டுமன்றிக் காலத்திற்குக் காலம் இந்த வண்ணம் வேறுபட்டதாகவும் - வரலாறு இல்லை. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பைக் கூட்டக் கற்றுக் கொண்ட காலம் முதல், இன்று வரையில் வண்ணத்தில் வளர்ச்சியுமில்லை மாறுதலுமில்லை. மனிதவுயிர்கள் அப்படியா வாழ்ந்து கொண்டிருக்கின்றன? என்ற வினாவுக்கு இதுவரையில் விடை கிடைக்கவில்லை.

மேலும், உயிர்த் தொகுதிகளுக்கிடையில் எண்ணத் தொலையாத வேறுபாடுகள் இருக்கின்றன. நாம் இங்கு வேறுபாடுகள் என்று சொல்லும் பொழுது, இயற்கையில் உள்ள வேறுபாடுகளையே குறிக்கின்றோம். செயற்கை வேறுபாடுகளையல்ல. ஆண் பெண் என்ற பால் வேற்றுைைம இயற்கை புழு-பூச்சி என்ற வேறுபாடு இயற்கை பறவை-விலங்கு என்ற வேறுபாடு இயற்கை மாடு-மரம் என்ற வேறுபாடு இயற்கை. இத்தகைய வேறுபாடுகளுக்கு அடிப்படை என்ன? மேலும் அறிவு, ஆற்றல் இவைகளில் வேறுபாடுகள் இருப்பதைக் காண்கிறோம். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன? பிறந்த நாள் தொட்டுப் பெருநெறி பற்றி ஒழுகியவர்கள் துன்புறவும் சிறுமையே செய்தவர்கள் மகிழவும் காண்கின்றோம். இதற்குக் காரணம் என்ன?

இந்த வினாக்களுக்குச் சமயநெறியைச் சார்ந்தோர்கள் முற்பிறப்பின் புண்ணிய பாவத்தைக் காரணமாகக் காட்டுவார்கள். உலகாயத நெறியைச் சார்ந்தவர்கள் முற்பிறப்பு பிற்பிறப்பு இவைகளை நம்புவது இல்லை. அங்ஙனம் கூறுவது சமயநெறியாளர்களின் மயக்கம் நிறைந்த செயல் என்றே கூறுகின்றனர். சமயிகளுடைய இந்தக் வற்று, “முயற்கொம்பி லேறி ஆகாயப் பூவைப் பறித்தால்” என்ற கூற்றில் எவ்வளவு பைத்தியக்காரத்தனம் இருக்கிறதோ அவ்வளவு பைத்தியக் காரத்தனம் இதிலும் இருக்கிறது என்று குற்றம் காட்டுகின்றனர். அவர்கள் திரும்பவும் கேட்கிறார்கள். “நமது கையில் ஐந்து விரல்கள் இருக்கின்றன. இந்து ஐந்து விரல்களும் ஒரு மாதிரியாக இல்லை; ஒன்று நீண்டும் பிறிதொன்று குட்டையாகவும் தம்முள் வேறுபட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன? என்ற இந்த வினாவுக்கு விடை சொல்வது மிகவும் சுலபம். ஐந்து விரல்களும் சடப்பொருள்கள் விரல்களுக்கு உயிர்ப்பில்லை. இயக்கினால் இயங்கும் தன்மையன. ஆனால் உயிரோ, உயிர்ப்பாற்றல் உடைய ஒரு பொருளாக இருக்கிறது. நாம் நீளம், அகலம், எடை போன்ற அளவுகளாலாய வேறுபாடுகளைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படவில்லை. இந்த வேற்றுமைகள், அவர்கள் கூறுவது போல இயற்கையாகவே யானாலும் ஆகட்டும். இங்கு நாம் உயிர்த் தொகுதிகளுக்கிடையே உள்ள வேற்றுமையென்று எடுத்துக் கொண்டது உயிர்ப்பாற்றல். உணர்வில் அறிவில் துய்ப்பாற்றில் உள்ள வேறுபாடுகளேயாம உயிர், தன்னிகரற்ற உயிர்ப்பாற்றல் உடையது. அதற்கொரு சான்று இதோ!

ஒன்றரை, ஒன்றரை ஒன்றரை அடிப்பரப்பளவுள்ளதும் இருபத்தைந்து பவுண்டுக்குக் குறையாத எடையுள்ளதுமான ஒரு பாராங்கல்லை, ஒரு கட்டைவிரல் பரிணாமமேயுள்ள ஒரு வேர் கல்லித் தூக்கித் தள்ளுகிறது; நிச்சயம் உருவக் காட்சியில் பாராங்கல்லே பெரியது. வேரோ சிறியது. ஆனால், இந்த வேர் எப்படிக் கல்லைக்கெல்லித் தூக்குகிறது? இந்த உயிர்பாற்றலும் கூட உயிர்வர்க்கத்தினிடையில் அளவில் கூடியும் குறைந்தும் இருப்பதைக் காண்கிறோம்.

புவிக்கும்-புழுவுக்கு மிடையில் உள்ள உயிராற்றல் தன்மை ஒரு மாதிரியானதல்ல; வேறுபட்டுக் கிடக்கிறது. அது போலவே, ஆணின் ஆற்றல்களும் நுகர்வுப் புலன்களும், உணர்வுகளும் பெண்ணின் இயல்புக்கு முரண்பட்டன. இம்முரண்பாடு இல்லையாயின் கவர்ச்சியுமில்லை; வாழ்க்கையுமில்லை. இந்த வேறுபாடுகளையும் வெறும் சுபாவம் என்று மட்டும் கூறமுடியுமா? என்பது ஆய்வுக்குரியது.