குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/மண்ணும் விண்ணும்




14


மண்ணும் விண்ணும்

அருள்நெறியும் பெண்களும்


பெண்ணிற் பெருந்தக்க யாவுள?’ என்று திருவள்ளுவர் வினா எழுப்பவில்லை. விடையையே வினாப் போல எழுப்புகிறார். பெண்ணினம் பாராட்டுதலுக்கும் பெருமைக்கும் உரிய இனம். பெண்கள் எதையும் அதிகமாக விவாதிக்காமல் ஏற்றுக் கொள்வார்கள்-நம்புவார்கள் வாழ்ந்தும் காட்டுவார்கள். அதனாலன்றோ, சேக்கிழார் பெருமான் பரவையாரைப் பாராட்டுவது போலப் பெண் இனத்தையே பாராட்டுகிறார். சேக்கிழார் பெருமான் சுந்தரர் வாயிலாகப் பரவையாரைப் பாராட்டும் பொழுது, ‘கற்பகத்தின் பூங்கொம்போ’ என்று வருணிக்கிறார். கற்பகத் தரு கருதியவை அனைத்தையும் தரும் என்பது மரபு. அதுபோல பெண் தன் கணவன் கருதிய அனைத்தையும் தரவல்ல ஆற்றல் உடையவனாக இருப்பாள் என்பது பெறப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டில் சமய வாயிலாகச் சமுதாயப் புரட்சியை நிகழ்த்திய நமது அப்பரடிகளும், திருஞான சம்பந்தரும் பெண்ணினத்தின் பெருமையை, மனையறத்தின் மாட்சியை விளக்கப் பெரிதும் தொண்டாற்றியுள்ளனர். அவர்கள் கருத்தில் வடபுலத்திலிருந்து வந்த பெளத்தமும் சமணமும், தமக்கென நாடும் மொழியும் இறையும் இல்லாத-சுழன்று திரிந்த மாயாவாதமும் பெண்ணினத்தை இழிவுபடுத்தின. மனையறத்தைச் சிற்றின்பம் என்றும், விலங்கென்றும் இழித்தும் பழித்தும் கூறியுள்ளன. இயற்கை நெறிக்கு மாறாகத் துறவு நெறியை வலியுறுத்தின. இக் கொள்கையைக் கடிந்து நாளும் இனிய தமிழால் அகனைந்திணை ஒழுக்கத்தின் பெருமையை முழக்கினர் நாயன்மார்கள். ஈருருவும் ஓருருவமாய அம்மையப்பன் வழிபாடு கூட ஏழாம் நூற்றாண்டிலேயே முதன்மைப்படுத்தப் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

வாழ்க்கை இனியது-இலட்சிய நோக்குடையது; வாழ்க்கையை மகிழ்ந்து நோக்கி இனிமைப் பண்புடையதாக்கி இலட்சிய நிறைவுடையதாக்கிக் கொள்ளும் முயற்சி வேண்டும். இங்ஙனம் வாழும் துறையையே திருவள்ளுவர் ‘வாழ்வாங்கு வாழ்தல்’ என்று குறிப்பிடுகின்றார். அவ்வாறு வாழ்வாங்கு வாழும் நெறியே அருள் நெறியாகும்.

திருஞானசம்பந்தர் அருளிய தமிழ் அருள் நெறித் தமிழ். அப்பரடிகள் வளர்ந்த நெறி நன்மை பெருகு அருள் நெறி. அண்ணல் காந்தியடிகள் நின்று வாழ்ந்த நெறி அருள் நெறி.

அருள் நெறியின் முதல் ஒழுக்கம் அன்பு செய்வது. வாழ்க்கையின் முன்னும் பின்னுமாய முழு இலட்சியம் அன்பு செய்தலேயாகும். இவ்வுடம்பின் அகத்துறுப்புக் களையும் புறத்துறுப்புக்களையும் கூர்ந்து நோக்குவோமாயின் அன்பு செய்தற்கென்றே அவை அமைந்திருத்தலைக் காணலாம். அன்பின் வழியது உயிர்நிலை என்பது குறள். பண்பாளர்க்குக் கட்டும் அன்பு பண்பை வளர்க்கும். பகைவனுக்குக் காட்டும் அன்பு பகையை குறைக்கும். அன்பு செய்யும் ஒழுக்கத்தை ஆண்மகன் முயன்று பெறுகின்றான். பெண்ணோ இயல்பிலேயே பெற்றிருக்கிறாள். அதனாற்றான் அன்பிற்குவமையாகத் தாயே பேசப்படுகிறாள். இலக்கியங்களில் பெண் பருவந்தோறும் அன்பு காட்டுவதில் முதிர்ச்சியடைகிறாள். பருவத்திற்குரிய அன்பையும் தியாகத்தையும் அள்ளிச் சொரிகிறாள். சுருக்கமாகக் கூறப்போனால், அன்புப் பாடம் கற்றுக் கொடுக்கும் தலையாய ஆசிரியர் குலமே பெண்குலம்தான்.

அருள் நெறியின் இரண்டாவது ஒழுக்கம் அறநெறி நிற்றல், அறத்தின் பாற்பட்ட ஒழுக்கக் கூறுகள் பற்பல. எனினும் பிறருக்கு உதவி செய்தலும், அங்ஙனம் உதவி செய்யும் ஆற்றல் கைகூடாதபோது துன்பம்-கெடுதல் செய்யா திருத்தலுமே சிறந்த அறப் பண்பு. மனித குலத்தில் வளர்த்தால் சட்டங்களும் திட்டங்களும் இல்லாமலே சோஷலிசச் சமுதாய அமைப்பை நாம் கண்டுவிட முடியும். இத்தகு அரிய பண்பைப் பெண்குலம் இயல்பாகவே பெற்றிருத்தல் பாராட்டுதலுக்குரியது. ஒரு பெண் தாய்மையை அடைகின்றபோது அவள் செய்யும் தியாகத்திற்கு ஒப்பான ஒரு தியாகத்தைக் காட்டமுடியுமா? அவள் தன் செங்குருதியையே பாலாக மாற்றிக் குழந்தைக்கு ஊட்டி வளர்ப்பது எவ்வளவு கருணை!

இதனாலன்றோ நமது மாணிக்கவாசகர் இறைவனைப் பாராட்டும்போது, ‘தாயாய் முலையைத் தருவானை’ என்று குறிப்பிடுகின்றார். அது மட்டுமா? குழந்தையின் நோய்க்குத் தான் மருந்துண்டு பத்தியங்காக்கும் பண்பும் தாய்மையி லிடத்திலேயே உண்டு. இத்தகு சிறந்த இயல்புகளை மற்றவர்களுக்கும் அவர்கள் கற்றுக் கொடுப்பார்களானால் வையகம் முழுவதும் வெய்துயர் நீங்கி வானுற ஓங்கும்.

அருள் நெறியின் மூன்றாவது ஒழுக்கம் இறைவழிபாட்டு நெறி. நமது உடலுக்குத் தேவை இறைவழிபாடு. இரைப்பைக்குத் தேவை சோறு-அகப்பைக்குத் தேவை அருளியல் சிந்தனை.

பெண்களிடத்தில் இயல்பாகவே, கடவுள் வழிபாட்டுணர்ச்சி மிகுந்திருக்கிறது. அதன் காரணமாகவே, அவர்களிடத்து நில்லியல்புகள் பெருகிக் காணப்பெறுகின்றன. சமய வரலாறுகளைப் பார்த்தாலும் ஆண்மக்கள் தடம்புரண்ட பல்வேறு செய்திகளைக் காண்கிறோம். ஆனால் பெண்களோ தாம் தடம் புரளாததோடு தடம் புரண்டவர்களையும் தகுதிப்படுத்தித் தரமுடையவர்களாக்கி அருள் நெறிக்கு ஆற்றுப் படுத்தியிருக்கிறார்கள். இந்தச் சிறப்பியல்புகளுக்குத் திலகவதியார், மங்கையார்க்கரசியார் வரலாறுகளை நாம் எடுத்துக் காட்டலாம். இத்தகு பெருமைக்குரிய பண்பியல்புகளைப் பண்புக் கூறுகளை இயல்பிலேயே பெற்றிருக்கிற பெண்மைக் குலம், தாய்க் குலம், சுழன்றடித்துவரும் புதுமைக் காற்றின் பேரால் தடம்புரளாமல் நிலைபெற்றிருப்பார்களானால் அருள் நெறி வளரும்! அவர்கள் மனித குலத்தை நேசிக்க-அன்பு செலுத்த நமக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்யும் நல்வாழ்க்கையை நமக்குக் காட்டவேண்டும். குறைவிலா நிறைவாகக் கோதிலா அமுதாக விளங்கும் திருவருளை வாழ்த்த-இன்ப அன்பு கலந்த நல்வாழ்வு வாழ வழி நடத்திச் செல்ல வேண்டும்.