குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/தேசிய ஊதியக் குழு
நாடு விடுதலை பெற்ற பிறகு உழைத்து வாழ்வோர் வாழ்க்கை வளராது போனாலும் உயர்ந்திருக்கிறது. அடிக்கடி ஊதிய உயர்வுகள், ஊதியச் சீரமைப்புகள் இவற்றுக்காகப் போராடிப் போராடி வந்துள்ளனர். படிப்படியாக வெற்றியும் பெற்று வந்துள்ளனர். ஊதிய உயர்வில் வெற்றியா? வாழ்க்கையில் வெற்றியா? வெற்றி, வாழ்க்கையில் அல்ல! ஊதிய உயர்வு என்ற பெயரில் பணத்தை எண்ணியதுதான் மிச்சம்! ஏன்? நமது நாட்டின் நிதிநிலையால் பண்டங்களின் விலை மதிப்புக் கூடி வருகிறது. நாணயத்தின் மதிப்புக் கீழிறங்கி வருகிறது. பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. கணக்கில் வாராக் கருப்புப் பணம் கணக்கில்லாமல் நாட்டில் புழங்குவதால் நாணயத்தின் மதிப்பை நிலைநாட்ட முடியவில்லை. விலையேற்றத்தையும் தடுக்க முடியவில்லை. இந்தியப் பொருளாதாரம் தெள்ளிய நீரோடைபோல் அல்லாமல் குழம்பிக்கிடக்கிறது.
இந்த குழப்பத்தினால் மிகுதியும் பாதிக்கப்படுபவர்கள் கிராமப்புறத்து மக்கள். அவர்கள் நிலையான வேலையும் நிலையான-உத்தரவாதமான ஊதியமும் பெறாமல் அல்லலுறுகின்றார்கள். படித்தவர்கள், ஊதிய உத்தரவாதத்துடன் பணிகளில் அமர்ந்திருப்பவர்கள் மேலும் மேலும் ஊதிய உயர்வு கோரிப் போராடிப் பெற்று வருகின்றனர். அரசுகள் அவர்களின் மன நிறைவைப்பெறக் கருதியும் தேர்தல் உத்தியாகவும் ஊதிய உயர்வுகளை அள்ளி வழங்கிக் கொண்டு வந்தன. இப்போதுதான் நடுவணரசுக்கு இந்தச் சீரற்ற நடைமுறை கவனத்திற்கு வந்துள்ளது. உடன் கூடுதல் நேர வேலைக்குரிய ஊதியம் முதலியவற்றைக் கைவிட முன்வந்துள்ளது. அதற்காக ஆயுட்காப்பீட்டுக் கழகத் தொடர்பாக ஓர் அவசரச் சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. இந்தச் சட்டத்தை ஆயுட் காப்பீட்டுக் கழக அலுவலக ஊழியர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். நாடு முழுவதும் இதுபற்றிய விவாதம் நடந்து வருகிறது.
கூடுதல் நேரப் பணி ஊதியம் தருதல் கொள்கையளவில் தவறில்லையானாலும் கடமை உணர்வும் ஒழுக்க நெறிச் சார்பும் இல்லையாயின் தவறாகப் பயன்படுத்தலாம். உரிய வேலை நேரத்தில் பணிகளைச் செய்து முடிக்காமல் தாமதித்துக் கூடுதல் நேர ஊதியம் பெறத் தக்க வகையில் செய்யலாம் அல்லவா? இங்ங்னம் நிகழாது என்று யார் கூற முடியும்? அதோடு பணிகள் கூடுதலாக இருந்து தேக்கமடையுமானால் வேலை பார்த்த அலுவலரையும் கூடுதலாக வேலை வாங்குவது அந்த அலுவலருடைய உடல் நலத்தைப் பாதிக்கும்; குடும்ப மகிழ்வைக் குறைக்கும். தேவையான ஓய்வின்றித் தொடர்ந்து பணி செய்யும். திறன், காலப் போக்கில் சோர்வுபடும். இதனால் கூடுதல் பணி நேரத்தைத் தவிர்ப்பது அலுவலர்களுக்குக்கூட நல்லது. மேலும் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்கிறது. கூடுதல் நேர வேலை வாய்ப்பின் மூலம் புதியவர்களுக்குரிய வேலை வாய்ப்பு குறையும். ஆதலால் கூடுதல் நேரவேலை தவிர்க்கப்பட வேண்டியதே.
இப்படிப் பல்வேறு துறைகளில் மாதந்தோறும் முறையான உத்தரவாதமான ஊதியம் பெறுகின்றவர்கள் அரசின் சலுகைகளைப் பெற்று வருகின்றனர். அதுமட்டுமா? இந்த ஊதியக் கொள்கையிலும் ஒரே மாதிரி அடிப்படையில்லை. நூறாயிரம் வேற்றுமைகள்! ஏற்றத் தாழ்வுகள், இந்த ஏற்றத் தாழ்வுகளைக் காட்டி, தொடர்ந்து நாட்டில் போராட்டங்கள்! வேலை செய்யா நாள்களில் பணிப் பாதிப்பு உற்பத்தி முடக்கம். ஏன்? இந்தியா ஒரு நாடல்லவா? இந்திய நாட்டின் அரசு அலுவலர்களிடையே ஊதிய ஒருமைப்பாடு இருத்தல் கூடாதா? எல்லாருக்கும் எல்லா இடத்திலும் ஒரே ஊதியம் சாத்தியமா? நியாயமான கேள்வி. அடிப்படை ஊதியம் ஒரே மாதிரியாக இருக்கலாம், இருக்க வேண்டும். சில சிறப்பூதியங்கள் படிகள் வழங்கலாம். தொழில் திறன், பணி செய்யும் நிறுவன அமைப்பு, சீதோஷ்ண நிலை, வாழும் ஊர் ஆகிய அடிப்படையில் சிறப்பூதியங்கள் வழங்கலாம். இந்தியாவில் ஊதியக் கொள்கையில் சீரான விதிமுறைகள் காணாத வரையில் நிதிநிலை சிக்கலாகவே இருக்கும்; நெருக்கடியும் தீராது. இப்போது நடுவண் அரசு தேசீய அளவில் ஊதியம் நிர்ணயிக்கும் கொள்கையை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இது வரவேற்கத்தக்க முயற்சி! நாடு முழுவதுக்குமாக நிலையான தன்னாட்சி உரிமையுடைய ஊதியக்குழு இருத்தல் வேண்டும். இந்த ஊதியக்குழு அவ்வப்பொழுதுள்ள விலைப்புள்ளியை அனுசரித்தும் நாட்டின் பொருளா தாரத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டும் ஊதியத்தை நிர்ணயிக்கவேண்டும். ஊதியக் குழுவின் முடிவுகளை அரசும் அலுவலர்களும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
-‘மக்கள் சிந்தனை’ 1-3-81
- ↑ கடவுளைப் போற்று! மனிதனை நினை!