குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/நல்ல நாடு
நாடு-எது நாடு? சேக்கிழார் அமைச்சுப் பணி செய்தவர். நல்ல நாட்டைப் பற்றி அவர் ஒரு சித்திரமே தருகிறார். நாட்டில் நல்ல நீர்வளம் இருக்க வேண்டும்.
சோழநாட்டைக் காவிரி வளப்படுத்தி வாழ்விக்கிறது. பொன்னனைய கதிர்மண்ணிகளைத் தருவதால் ‘பொன்னி’ என்று காவிரி பெயர் பெற்றது. காவிரியின் ஆற்றொழுக்கு அன்னை பராசக்தியின் கருணை போன்றது. ஆம் ! அன்னையின் கருணை அனைவரையும் காக்கும்! அதுபோல், சோழநாடு-அதனில் ஒரு பகுதியாகிய இன்றைய தஞ்சைத் தரணி கோடானு கோடி மக்களுக்கு உணவை வழங்குகிறது. உயிர்க்கொடை அளிக்கிறது. காவிரி நாட்டில் காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்போர் அன்றும் இல்லை! இன்றும் இல்லை!
காவிரி நாடு முழுதும் கழனிகளில் சுறுசுறுப்பாகக் கடமைகள் நிகழும். உழுதசாலில் தெளிந்த சேற்றின் இழுது செய்யினுள் இந்திர தெய்வத்தைத் தொழுது நாற்று நடுவர் என்று சேக்கிழார் கூறுகிறார். உழுத சேறு, கட்டிகளற்றதாக நெய் இழுதுபோல இருந்தது என்று சேக்கிழார் கூறுவது காவிரி நாட்டு உழவர் திறம் காட்டுகிறது. அஃது இன்றைய உழவர்களுக்கொரு பாடம்.
கழனிகளில் கதிர்கள் விளைந்து கிடக்கின்றன. எங்ஙனம்? பக்தியென்பது முனைப்பை முற்றாக அழிப்பது. ஊனினை-உயிரினை உருக்கி உணர்வளிப்பது. அத்தகு பக்தியுடையவர்களிடத்தில் அன்பு உண்டு. எதன் மீது? பலவற்றிலா? பலவற்றின் மீதும் அன்பு–அதாவது ஆண்டவன் மீதும் அன்பு; அரண்மனை மீதும் அன்பு! சங்கரன் மீதும் அன்பு சாதியின் மீதும் அன்பு; கங்காளன் மீதும் அன்பு; காணிகள் மீதும் அன்பு-என்று சிலர் சொல்வர். இது பக்தர்களுக்கு இலக்கணமல்ல; திருத்தொண்டர்களுக்கும் இலக்கணமல்ல.
பக்தர்கள் பரமனுக்கு மட்டுமே அன்பு பூண்பர்; ஆட்செய்வர். கதிர்மணி தாளை இடமாகக் கொண்டு உணவெடுத்துத்தான் வளர்ந்தது. ஆனால், அந்தக் கதிர்மணி தன்னைத் தாங்கும் தான் நிற்கும் நிலத்திடைக் கிடைக்கும் உரம், தண்ணீர் ஆகியவற்றின்மீது மாளா அன்பு கொள்ளின் மனிதனுக்கு ஏது உணவு? அதுபோல் பரமனுக்கு ஆளாம் அன்பர்கள் வாழத் துடிப்பவர்கள் அல்லர், - வாழ்விக்கத் துடிப்பவர்கள்.
முற்றிய கதிர் பல ஒன்றோடொன்று இணைந்து தழுவித் தலை வணங்கி நிலத்திடைக் கிடக்கும் காட்சி, ஊன்றிய கருத்துடையோருக்கு ஒரு தத்துவப் பல்கலைக் கழகம். பத்திமையிற் சிறந்த அடியார்களின் வாழ்க்கையில் தனிமை! இருத்தல் கூடாது; இருத்தல் இயலாது. அடியார்கள் தத்தமில் அகந்தழிஇக் கூடுவர். யார் வணங்கினார் என்று அறிந்து கொள்ள முடியாத வண்ணம் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு தொழுவர்; வணங்குவர். மெய்ப்பாட்டு மிகுதியால் வணங்கக் கிடைத்த தம்மையும் வணங்கிக் கொள்வர்.
வணக்கம், உள்ளீடு நிறைந்தது. முற்றிய கதிர்மணி இல்லாப் பதர் வணங்காது. உள்ளீடற்ற பதர், கழனியில் தலை நிமிர்ந்து நிற்கும்; ஆடும்; சுழன்று ஆடும், காற்று ஆட்டிய வகையிலெல்லாம் ஆடும். அதுபோல, உள்ளிடற்றவர்கள் அபாரமாக ஆட்டம் போடுவர்; செருக்குடன் ஆடுவர்; ஆசைக் காற்று அலைக்கும் வழியெல்லாம் ஆடுவர்.
அடியார் வணக்கம் உள் நிறைந்து புறத்தே வெளிப்படுவதேயாம். அவர்கள் வயிற்றுக்காக வணங்குபவர்கள் அல்லர், முகமனுக்காக வணங்குபவர்கள் அல்லர்.
ஞானத்தின் முதிர்ச்சியிலேயே உண்மையான வணக்கம் முகிழ்க்கிறது. இத்தகைய ஞானிகள் நாட்டின் மழைக்கு உதவுவார்கள்; மாண்பினைச் சேர்ப்பார்கள். இவர்களே சான்றோர்கள். இத்தகு சான்றோர்கள் பல்கி வளரும் நாட்டிலேயே நரையிலா வாழ்க்கை கிடைக்கும்.
நாட்டிலுள்ள உழவர்கள் உழைத்துப் பொருள் சேர்க்கின்றனர். அரசுக்கு உரிய கடமையைச் செலுத்துகின்றனர். பழந்தமிழகத்தில் அது வரியல்ல. கடமை உணர்வுடன் செலுத்தப் பெறும் கடன். அரசுக்குத் தருவதை மகிழ்வுடன் முந்தித் தருவது முன்னோர் வழக்கம். அரசுக்குரிய வரியைக் குறைத்துக் காட்ட இரட்டைக் கணக்குமுறை இருந்ததில்லை - இருக்கக்கூடாது.
காவிரி நாட்டு மக்கள் அரசுக்குரியனவற்றைக் கடமையெனக் கருதித் தந்தனர்; அறங்கள் பலசெய்தனர்; கடவுளைப் போற்றினர்; ஆசிரியர்களுக்கு அளித்தனர்; விருந்திற்கு வழங்கினர்; உற்றார் உறவினரைப் பேணி பாதுகாத்தனர். ஏன்? ஆட்சித் தலைவன் அநபாயனின் கொற்றக்குடை வெய்யில் மறைக்கும் குடையன்று. சமுதாயத்தைக் காப்பதில் தாய் குழந்தையைக் காப்பது போன்ற தண்ணளிக் குடையாக விளங்கியது. இஃது ஒரு சிறந்த நாட்டின் சமுதாய வாழ்க்கை.
இத்தகைய வாழக்கை சமுதாயத்தில் கால் கொள்ளுமானால், அங்கு இயல்பாகவே இன்றைய சோஷலிசத் தத்துவம் விளங்கித் தோன்றும். இந்த வாழ்க்கை முறையில் மாறுபாடுகள் தோன்றியதால் வளம் குறைந்துள்ளது. வறுமை பெருகியுள்ளது. அரசு, வரியை ஏவலர் வைத்து அச்சுறுத்தி கட்டாயப்படுத்தி வாங்குகிறது. திருக்கோயில்கள் கட்டாயமான கட்டணம் வைத்து வசூலிக்கின்றன. ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்குகிறது; சமுதாயம் நேரிடையாக வழங்கவில்லை.
விருந்தினர்கள் வீட்டுக்கு வருவதில்லை. ‘லாட்ஜ்’ களுக்குப் போய் விடுகின்றனர். உற்றார்-உறவினர் ‘ஒப்பு’க்குரியவராகி விட்டனர். நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் பழகுகின்றனர். ஆதலால், அரசும் செயற்கை முறையில் சோஷலிசம் படைக்க முயலுகிறது. அதற்கு மாறாகப் பழந்தமிழக வாழ்க்கை முறை-சேக்கிழார் காட்டியநெறி வாழ்க்கையாக மலருமானால் இயற்கையில் சோஷலிசம் மலரும்.
- ↑ சிந்தனைச் செல்வம்