குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/பஞ்சாயத்து ராஜ்

8. பஞ்சாயத்து ராஜ்

ன்று நாடு முழுவதும் “பஞ்சாயத்து ராஜ்” பற்றிப் பேசப்படுகிறது. ஆனால் விவாதம் செய்திகளுடன் பொருத்தியதாக - விவரமாக இல்லை என்பது வருந்தத்தக்கது. நாட்டின் நாடி நரம்புகள் பஞ்சாயத்துகளே: பஞ்சாயத்துகள் வலிமை பெற்றாலே கிராமங்கள் வளரும்; நாடு வளரும். அண்ணல் காந்தியடிகள் கண்ட கிராம சுயராஜ்யம் தோன்றும். இதில் இரண்டுவிதக் கருத்திருக்க நியாயமில்லை.

இன்றைய பஞ்சாயத்துகள் நிலை

இன்றைய பஞ்சாயத்துகள் எந்தவிதமான பொறுப்புள்ள நிர்வாகமும், இல்லாதவை. துப்புரவுப்பணி மின்விளக்கு எரித்தல் ஆகியவை மட்டுமே இன்றைய பஞ்சாயத்துகள் செய்கின்றன. இவற்றையும் கூடப் பல பஞ்சாயத்துகள் செய்ய நிதி வசதி இல்லை. நிதி நிர்வாகமும் பஞ்சாயத்தினிடம் இல்லை. உண்மையைச் சொன்னால் பஞ்சாயத்துத் தலைவர் பஞ்சாயத்து ஒன்றிய ஆணையருக்கு எழுத்தர் மாதிரிதான். இந்த நிலைமைகள் மாற்றப்பட வேண்டும் என்பதில் நாட்டு வளர்ச்சியில் அக்கறையுடைய அனைவருக்கும் உடன்பட்ட கருத்திருக்கும் என்று நம்புகின்றோம்.

மதிப்பு மிக்க தகுதி நிலை

முதலில் பஞ்சாயத்துக்கு மதிப்புமிக்க தகுதிநிலை வழங்க வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்தையும் நிதிநிலையில் தற்சார்பானதாக்கவேண்டும். பஞ்சாயத்தின் நிதி நிலையை வலிமைப்படுத்த முதலில் திட்டங்கள். வேண்டும். கிராமப் பஞ்சாயத்து எல்லையில் உள்ள நிர்வாகங்களும் பஞ்சாயத்தில் நேரிடையானவையாகவும் ஒரு சில இனங்கள் பஞ்சாயத்தின் கவனத்திற்குரியனவாகவும் அமைய வேண்டும்.

1. கிராம எல்லையில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் பஞ்சாயத்தின் நிர்வாகத்தின் கீழ் வரவேண்டும்.

2. அனைத்துச் சாலைகளும் பஞ்சாயத்தின் நிர்வாகத் தின்கீழ் வரவேண்டும். (நெடுஞ்சாலைகளும் - தேசிய நெடுஞ் சாலைகளும் தவிர) அனைத்து உரிமங்களும் வழங்கும் உரிமை பஞ்சாயத்திற்கே இருக்க வேண்டும்.

(அ) மீன் பாசிக் குத்தகைகள்.

(ஆ) நெடுஞ்சாலை மரக்குத்தகைகள் இன்ன பிறவற்றுக்கும் உரிமம் வழங்கும் உரிமை வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறைக்கும் பொதுப்பணித் துறைக்கும் கிராமம், ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். மீன்பாசிக் குத்தகை, நெடுஞ்சாலை மரங்கள் ஏலம் முதலியவற்றைப் பிரதிநிதிகள் முன் ஏலம் விடவேண்டும் என்ற நியதி வகுக்கலாம்.

4. மேலும் அடியிற் கண்டுள்ள வருவாய் வரக்கூடிய அமைப்புகளை அமைக்கவும் நிர்வகிக்கவும், அதன்மூலம் பஞ்சாயத்தின் நிதி ஆதாரங்களை வளர்த்துக் கொள்ளவும் ஊராட்சி மன்றங்களுக்கு உரிமையும் அதிகாரமும் இருக்க வேண்டும்.

(அ) சந்தை, (ஆ) பேருந்து நிலையம், (இ) ஆடடி கூடம், (ஈ) இடுகாடு, (உ) திருமணமண்டபம், (ஊ) கால்நடை அடைப்புக் கூடம் (பவுண்டு).

5. ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் செயலராக, கிராம நல அலுவலர் (RWO) அயல் வழிப் பணியில் அரசு தர வேண்டும்.

6. செயலரின் நியமனம், மாறுதல், ஊராட்சி மன்றத்தின் இசைவுடனே செய்யப்படவேண்டும். அரசு கொடுக்கின்ற நால்வர் கொண்ட பட்டியலிலிருந்து ஒருவரை ஊராட்சி மன்றம் நியமித்துக் கொள்ள வேண்டும்.

அ. ஊராட்சி மன்றம் தனக்கு ஒத்திணைந்து வரக் கூடிய ஒருவரை நியமித்துக் கொள்ளும் உரிமை பெற்று இருக்கவேண்டும்.

ஆ. அப்படி நியமித்துக் கொள்ளும் அலுவலரின் மாறுதல் ஊராட்சி மன்றத்தின் இசைவைப் பொருத்ததாக அமைய வேண்டும்.

இ. மற்றும் ஒரு முழு நேர எழுத்தர் ஊராட்சி மன்றத்திற்கு நியமனம் செய்யவேண்டும்.

ஈ. மேலும் ஒரு கடைநிலை ஊழியர் பல்துறைப் பணியாளராகப் பணி செய்யக் கூடியவர் தேவை.

மைய-மாநில அரசுகளின் உதவி

7. பஞ்சாயத்தின் நிதி ஆதார வளர்ச்சிக்கு, முதலில் மைய அரசும், மாநில அரசும் பங்களிப்புத் தொகை மான்யமாகத் தரவேண்டும்; நீண்டகாலக் கடனும் தந்து உதவ வேண்டும். நிதி ஆதாரங்களைப் பெருக்கிக் கொள்ளும் இனங்களுக்கு மதிப்பீட்டின் அடிப்படையில் 75% தந்து உதவ வேண்டும். (50% மான்யம், 25% நீண்டகாலக்கடன்) 25% ஊராட்சி மன்றத்தின் பொறுப்பாக அமையவேண்டும்.

8. ஊராட்சி மன்றங்கள் தற்சார்பான நிதி ஆதாரங்களை அடையும் வரையில், ஊராட்சி மன்றங்களுக்கு மாநில அரசு நடைமுறைச் செலவுக்கு மான்யமாக ஊராட்சியின் வருவாய் அடிப்படையில் 1:2 தந்து உதவ வேண்டும். இவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்குத் தந்து உதவவேண்டும்.

பஞ்சாயத்தின் நிர்வாகத்தில் வரவேண்டியவை

9. பஞ்சாயத்துகளின் நிர்வாகப் பொறுப்பில் வரவேண்டியவை:

1. கிராமத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்.

அ. தனியார் பள்ளியாக இருந்தாலும் அந்தப் பள்ளியின் ஆட்சிக் குழுவில் பஞ்சாயத்துத் தலைவர் அலுவல் ரீதியாக இடம் பெறவேண்டும்.

ஆ. பஞ்சாயத்து தலைவருக்கு, பள்ளியைப் பார்வையிட்டு வழிகாட்ட உரிமை இருக்க வேண்டும்.

2. மருத்துவ மனைகள் (கல்விக்குக் கூறியது இதற்கும் பொருந்தும்.)

3. நூலகம், 4. குடி தண்ணீர் வழங்கல், 5. சுகாதாரம், 6. மின் விளக்குகள் எரித்தல், 7. கிராமப்புறச் சாலைகள்.

மற்றும் கிராமத்தில் எந்தவிதமான அரசு நிறுவனம் இருந்தாலும் அதில் ஊராட்சிமன்றத் தலைவர் பங்குபெறும் உரிமை இருக்கவேண்டும்.

கிராமத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவன அலுவலர்களும் ஊராட்சி மன்றத்தின் (பஞ்சாயத்தின்) ஆட்சிக்கு இணங்கி ஒத்துழைக்க வேண்டும்.

(மின்சார வாரியம், வேளாண்மை துறை, கால்நடைத் துறை, நெடுஞ்சாலைத் துறை, கிராம நிர்வாகம் முதலியன).

10. கிராமங்களில் எந்த ஓர் உடமையும் விற்பனை முதலியவை செய்வதைப் பதிவு செய்யும்போது, பதிவுத்துறை ஊராட்சி மன்றத்தின் சான்று கேட்டுப் பெற்றுச் செய்ய வேண்டும்.

11. மற்ற அதிகாரங்கள்:

1. கிராமத்தில் நடைபெறும் கள், சாராயம் தொடர்புடைய குற்றங்கள், விபசாரக் குற்றங்கள், சில்லறை விஷமங்கள், சில்லறைச் சச்சரவுக் குற்றங்கள், சுற்றுப்புறச் சுகாதாரக் கேடு செய்தல். இவைகளுக்கு ஊராட்சி மன்றங்களே விசாரித்துத் தண்டம் விதிக்கும் அதிகாரம் இருக்கவேண்டும்.

2. மிகக் கடுமையான குற்றங்களைக் காவல் துறைக்கு Refer பண்ணும் உரிமையும் பஞ்சாயத்தில் இருக்க வேண்டும்.

3. ஊராட்சி மன்றத்தின் தேர்தல் நிர்வாகம் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டதாக அமையவேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி. அதன் பிரதிநிதியை அந்தக் கட்சியே பஞ்சாயத்து அமைப்பிற்குத் தேர்ந்தெடுத்து அனுப்புவதன் மூலம் பஞ்சாயத்தைக் கட்சிச் சார்பற்றதாக ஆக்க இயலும். இந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, மக்களால் தேர்ந்தெடுக்கப் பெறும் எண்ணிக்கையில் 4:1 என்ற விகிதத்தில் இருத்தல் நல்லது. அல்லது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந் தெடுக்கப் பெற்ற பிரதிநிதிகளாக இருத்தல் வேண்டும்.

அரசியல் சட்ட அந்தஸ்து

12. பஞ்சாயத்து சபைக்கு, அரசியல் சட்ட (Constitutional status) அந்தஸ்த்து கொடுக்க வேண்டியது அவசியம்.

தேர்தல்கள்

13. பஞ்சாயத்துக்களின் தேர்தலை எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒத்தி வைக்கக் கூடாது. பஞ்சாயத்துத் தேர்தல் முற்றிலும் மறைமுகத் தேர்தலாக இருத்தலே நல்லது. அதாவது, வாக்களிப்பது மட்டுமல்லாமல் வாக்குகளை எண்ணுவதிலும் மறைமுகம் நடைமுறைப் படுத்தப்பெறுதல் வேண்டும். அதாவது, வார்டு வாரியாக வாக்குகளை எண்ணாமல் எல்லா வார்டு வாக்குகளையும் ஒன்றாகக் கொட்டி கலந்து எண்ணுதல் வேண்டும். பஞ்சாயத்தின் தேர்தல் ஐந்தாண்டுக்கு ஒருமுறை கட்டாயம் நடத்த வேண்டும். பஞ்சாயத்துத் தேர்தல், தேர்தல் கமிஷனின் கண்காணிப்பில் நடப்பதில் தவறில்லை.

நிதிக் கழகம்

14. பஞ்சாயத்துகள், தங்களுடைய தேவைக்கேற்பவும், வசதிக்கேற்பவும் நிதி உதவிகள் கடனாகப் பெற்று, நிதி ஆதாரங்களை வளர்த்துக் கொள்ள "நிதிக் கழகம்” ஒன்று அமைப்பதும் அவசியமானது.

பொறியாளர் நியமனம்

15. (அ) பஞ்சாயத்துகளின் பணிகளுக்கு மதிப்பீடுகள் அளவை செய்ய மாநில அரசு, ஒரு பொறியாளர் பட்டியல் தயாரித்து அறிவிக்க வேண்டும்.

(இந்தப் பட்டியலில் உள்ள ஒருவர் மூலம் பஞ்சாயத்து தனது பணிகளை நிறைவேற்றும்)

கணக்குத் தணிக்கை

(ஆ) பஞ்சாயத்துக் கணக்குத் தணிக்கைக்கு மாநில அரசு ஒரு தணிக்கையாளர் பட்டியலை அறிவிக்க வேண்டும்.

(இந்த பட்டியலில் இருந்து ஒருவரை பஞ்சாயத்து தேர்ந்தெடுத்துத் தனது பணிக்குப் பயன்படுத்தும்)

தலைவர் மீது நடவடிக்கை

(இ) தணிக்கை அறிக்கை, மாவட்டப் பஞ்சாயத்து உயர் அலுவலராக இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவரின் நடவடிக்கைக்கு உரியது. பஞ்சாயத்துகளின் மீது, பஞ்சாயத்துத் தலைவரின்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உண்டு.

படிப்பணம்

16. ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர்களுக்குக் கூட்ட இருக்கைக்குரிய படிப்பணம் (Sitting Fees) ரூ. 20/தரவேண்டும்.

17. பஞ்சாயத்தின் தணிக்கை அறிக்கைகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தால் மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பஞ்சாயத்தே அடிப்படை

நாட்டில் மக்களாட்சி முறையின் வளர்ச்சிக்குக் கிராமப் பஞ்சாயத்து ஆட்சியே அடிப்படை, அது போலவே கிராமப் பஞ்சாயத்து ஆட்சி முறையின் சிறப்பே, நாட்டின் கலசமாகவும் அமைய வேண்டும். கிராமங்கள் நல்ல மக்களாட்சி மரபுகளைப் பேணி, தற்சார்பான வளத்தைப் பெற்றுப் பொலிவுடனும் வளத்துடனும் விளங்கினால்தான் குடியரசுத் தத்துவம் வெற்றி பெறும். இம்முயற்சியில் அனைவரும் ஈடுபடுதல் வேண்டும்.

நிர்வாக அமைப்புகள்

வளமெல்லாம் இன்று உருப்படியாகப் பயன்படவில்லை. நாட்டின் நிர்வாக ஆட்சி அமைப்பில் மைய மாநில அரசுகள் என்ற இருநிலைகள் மட்டுமே உள்ளன. அல்லது இவை இரண்டு மட்டுமே என்று எண்ணுவது பிழை. உண்மையில் நாட்டின் நிர்வாக மையங்கள் மூன்று. கிராமம், மாநிலம், மையம். இவை மூன்றும் அதனதன் எல்லைக்கேற்ப அதிகார உரிமங்களைப் பெறுவதே சிறந்த மக்களாட்சியின் சிறந்த நடைமுறை. மூன்றும் ஒரே சங்கிலியில் உள்ள கணைகள். இவற்றிற்குள் முரண்பாடுகள் அதிகாரச் சண்டைகள் வரக்கூடாது.

காலத்தின் கட்டாயம்

கிராமப் பஞ்சாயத்துகளே மாநில அரசுகளையும் மைய அரசினையும் தாங்கும் நிலையினவாக வேண்டும்; தாங்க வேண்டும். மைய அரசைத் தாங்க வேண்டும். இது அரசியல் சார்ந்த கடமை; பொறுப்புகள் வழிப்பட்ட பரிணாம வளர்ச்சி. கிராமப் பஞ்சாயத்துகள் கிராமக் குடியரசுகளாக விளங்குவது காலத்தின் கட்டாயம்.