குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/அமெரிக்கா எண்ணிப்பார்க்குமா?

53. அமெரிக்கா எண்ணிப்பார்க்குமா?

இனிய செல்வ,

வளைகுடாப்போர், தற்காலிக ஓய்வு பெற்றிருக்கிறது. போர் நிலையாக நிற்க உலக நாடுகள் அவை துணை செய்ய வேண்டும். துணை செய்யும் என்று நம்புவோமாக.

இனிய செல்வ, வளைகுடாப்போர் இரண்டு அநியாயங்களுக்கிடையில் நடந்த போர். அமெரிக்காவின் அநியாயம் 35 விழுக்காடு ஈராக்கின் அநியாயம் 25 விழுக்காடு உலக நாடுகள் சபையின் அநியாயம் 40 விழுக்காடு இப்படித்தான் அநியாயத்தைப் பங்கு போட வேண்டியிருக்கிறது. ஆம்; குவைத்தை ஈராக் ஆக்கிரமித்தது குற்றம் குற்றமே! ஆக்கிரமிப்புக்குப்பின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பைக் காரணங்காட்டியது. காரணத்தில் உண்மை இருக்கிறது. சொன்ன ஈராக் அதிபரிடத்தில் தான் உணமை இல்லை. இனிய செல்வ, அமெரிக்காவுக்கு இந்த உலகில் குவைத் ஆக்கிரமிப்பு மட்டுந்தானே தெரிந்தது. பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நடந்து எத்தனை ஆண்டுகளாயிற்று. அமெரிக்காவின் கண்ணை உறுத்துவது ஈராக்கின் ஆக்கிரமிப்பு அல்ல. குவைத்தின் எண்ணெய் வளம்! ஆம்; குவைத்தின் எண்ணெய் வளம் இனி அமெரிக்காவின் ஆஸ்தி போல! உலகநாடுகள் பேரவை! இல்லை, இல்லை? வல்லாளர்கள் கை ஓங்கும் பேரவை! அமெரிக்காவின் எடுபிடிகளாகச் சில நாடுகள் உலக நாடுகள் பேரவையில் இடம் பெற்றுள்ளன! இவை கை தூக்கிகள்! இனிய செல்வ, கொரியாவில் -வியத்நாமில் சண்டை நடந்தபோது உலக நாடுகள் பேரவை தனது படையை அனுப்பியது. அதுபோல உலக நாடுகள் பேரவை இன்று செய்யாதது ஏன்? இந்த அநியாயம்தான் உலக நாடுகள் பேரவை செய்தது! நமது நாட்டில் ஆட்சிகள் இல்லாத தனி நபரைக் கட்சியில் சேர்த்துக்கொண்டு "சர்வ கட்சி” என்று சொல்வார்கள் அல்லவா? அதுபோலத் தான் பன்னாட்டுப் படை!

இனிய செல்வ, உலக நாடுகளின் பந்தோபஸ்து சபை குவைத்தை மீட்கத்தான் பன்னாட்டுப் படைக்கு அனுமதி தந்தது. ஆனால் தாக்கி அழிக்கப்பட்டவரோ ஈராக் மக்கள்! ஏன் இந்தக் கொடுமை? தட்டிக் கேட்க உலக அரங்கிலேயே யாரும் ஆள் இல்லையா? அந்தோ பரிதாபம்! இனிய செல்வ, வளைகுடாப்போர் ஓய்ந்து விட்டது. ஆனால் போரின் விளைவுகள் என்ன? ஈராக்கையும் குவைத்தையும் திரும்ப எடுத்துக் கட்ட பல்லாயிரம் கோடி தேவை. எண்ணற்ற குடும்பங்கள் நிராதரவாக உள்ளன. இவற்றிற்கெல்லாம் தீர்வு காண வேண்டும்.

இனிய செல்வ, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விளைவு தோன்றினால் என்ன செய்வது? இனிய செல்வ, விளங்க வில்லையா? ரௌடிகள் முதலில் இளைத்தவனைத் தான் தாக்குவார்கள். பின் வாழ்க்கையாகிவிடும். எல்லாரையும் தாக்குவார்கள். ஈராக்கைத் தாக்கி வெற்றி கண்ட அமெரிக்கா, நாளை ஆசிய ஆப்பிரிக்க நாடுகளாகிய வளர்முக நாடுகளிடத்தில் எப்படி நடந்து கொள்ளும்? ஏன் நமது இந்தியாவிடமே எப்படி நடந்து கொள்ளும்? 'சண்டித்' தனத்தைக் காட்டாது என்று நம்புவதற்கு என்ன உத்தரவாதம்? இனிய செல்வ, இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாடுகள் தனித்தனியே படைவைத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான்! ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடாது! உலக நாடுகளின் பேரவை மட்டுமே படைவைத்துக் கொள்ள வேண்டும். உலக நாடுகள் பேரவை கூட வைத்திருக்க அனுமதிக்கப் பெற வேண்டியது அமைதிப்படையே தவிர, ஆக்கிரமிப்புப்படையல்ல. இனிய செல்வ, இந்த ஒரே வழிதான் உலகத்திற்குத் தீர்வு! அமெரிக்கா ஒத்துக்கொள்ளுமா? அமெரிக்காவின் தொழிலே போர்க் கருவிகள் செய்து சந்தையில் விற்பது தானே! அமெரிக்காவின் அணுகுமுறை அடியோடு மாறினால்தான் உலகத்திற்குப் பாதுகாப்பு; சமாதானம்!

அமெரிக்கா எண்ணிப்பார்க்குமா? அமெரிக்காவை மற்ற நாடுகள் நிர்பந்தப்படுத்துமா? அமெரிக்க மக்கள் தங்கள் அரசைப் போர் அற்ற அரசாக அமைக்க முன்வருமா? வளைகுடாப் போரில் அமெரிக்க வீரர்கள் இறக்க வில்லையா? அமெரிக்காவிற்கு இழப்பு இல்லாமலே ஈராக்கிற்கு இழப்பு உண்டாக்க முடிந்ததா? முடியுமா? போர் ஆயுதம் செய்தலைத் தொழிலாகக் கொண்ட நாடு, போர் மூலம் தீர்வு காண முயலும் ஒரு நாடு எப்படி அழியாமல் இருக்க முடியும்? இன்றில்லையானாலும் எதிர்காலத்தில் போரைச் சாதனமாக உடைய நாடு, நடுவுநிலை பிறழ்ந்து போனால் உலகத்தை ஆட்டிப்படைக்கும் நாடுகள் வரலாற்றில் நிலை நின்றதில்லை. அவைகளுக்கும் அழிவு வரும்.

இனிய செல்வ நமது திருக்குறள்,

"கெடுவல்யான் என்பதறிக தன்நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்”

(116)

என்றருளிய திருக்குறளை எண்ணுக! அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இந்தத் திருக்குறளை - திருக்குறளின் பொருளை எண்ணிப்பார்த்துத் திருந்த வேண்டும்.

இன்ப அன்பு

அடிகளார்