குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/அறிவே ஆன்மாவின் அனுபவம்

2. அறிவே ஆன்மாவின் அனுபவம்

இனிய தமிழ்ச் செல்வனுக்கு,

"வள்ளுவர் வழி” வழியாகப் புத்தாண்டு வாழ்த்துகள்! திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துகள்! உனக்கு எழுதிப் பல திங்கள்கள் ஆயின “வள்ளுவர்வழி” நாயகர் தே.கண்ணன் அடிக்கடி கேட்பார். கடிதம் யாதொன்றும் வரவில்லையே என்று! நீண்ட இடைவெளிக் காலம் கழிந்து போனதற்காக வருந்துகின்றோம். இனி, கூடுமானவரை தொடர்ந்து எழுதுகின்றோம்.

சென்ற கடிதத்தில் "வாழ்வாங்கு வாழ்க!" என்று எழுதியிருந்தோம். ஆம்! வாழ்தலைப் பொருளும் பயனும் உடையதாக ஆக்க வேண்டும். "பிழைத்தல்" "காலம் கழித்தல்” ஆகியன உயிர்ப்புள்ள வாழ்க்கையன்று. வாழ்க்கை அறிவுச் சேகரிப்பு வழியாலும் சங்கிலித் தொடரனைய செயல்களாலும் நிரப்பப்படுதல் வேண்டும். அறிவறிந்த ஆள்வினை வாழ்க்கையின் கருவி. அறிவு எளிதில் கிடைப்பதா? அறிஞர் ஆகலாம் என்று கற்கின்றோம். ஆனால், கற்போர் எல்லாராலும் அறிஞராக முடிவதில்லை. கீறல் விழுந்த வெறும் இசைத் தட்டுகள் போலப் புலம்பித் தவிக்கின்றனர் சிலர். அறிவு, பட்டறிவின் வழி வருவது.

பட்டறிவுக்கு ஆற்றுப்படுத்துவது கல்வி. உந்துசக்தியாக அமைவது சான்றோர் வாய்கேட்ட சொல். அறிவு துன்பத்தினின்றும் பாதுகாக்கும் கருவி. அறிவு தன்மையைப் படைப்பது. இனிய தமிழ்ச் செல்வ, ஆக்கம் நிறைந்த படைப்பின் வழியின்றித் துன்பம் நீங்காது. துன்பம் இயற்கையுமன்று, செயற்கை. அஃதாவது செயற்கையின் காரணமாக வருவது துன்பம். அறிவு அற்றம் காக்கும் கருவி என்று வள்ளுவர் வழி கூறுகிறது. அறிவினாலன்றி வாழ்க்கை முழுமையாவதில்லை. பயனுடையதாகவும் அமைவதில்லை; பண்பாடுடையதாகவும் அமைவதில்லை.

இனிய தமிழ்ச் செல்வ, அறிவுக்கு வாயில் நல்ல நூல்களைக் கற்றல். கற்றல் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமை. கசடறக் கற்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக நாம் சுமந்து வந்திருக்கிற மூடநம்பிக்கைகள் என்ற கட்டுகள் ஒன்றா? இரண்டா? தலைமுறை மரபு நம்பிக்கைகள் அறிவுக்குப் பகை. அதனால் வழிவழி வந்த சில உயர்ந்த மரபுகளை இழந்துவிட வேண்டும் என்பது அவசியமில்லை. அந்தப்பழைமைகள் கூட காலத்திற்கேற்பப் புத்துருவம் பெறவேண்டும் வளர்ந்து வரும் புதுமையுடன் அடையாளமின்றிக் கலக்க வேண்டும். சமுதாய வாழ்க்கையில் பழைமை, புதுமை என்ற பிரிவினை கூடாது. எந்த ஒரு பழைமையும் பின்னைப் புதுமையை ஏற்றுக் கொள்ளத் தவறிவிட்டால் பழைமை மலடாகிவிடும். அது போலவே, வளர்ந்துவரும் புதுமை, பழைமை, உணவை எடுத்துக் கொள்ள மறுத்தாலும் புதுமை ஊட்டமில்லாத சவலையாகிவிடும். இனிய தமிழ்ச் செல்வ, "முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே" என்ற திருவாசக அடிகளை நினைந்துபார்! இன்று உலகில் வளர்ந்த நாடுகளில் சப்பானும் ஒன்று. சப்பானியர்களின் வளர்ச்சி வியப்பைத் தரக்கூடியது. அத்ற்குக் காரணம் சப்பானியர்கள் பழைமைக்கும் புதுமைக்கும் சிறந்த இணைப்பை உண்டாக்கி வாழ்க்கைக்குப் பயன்படுத்துகின்றனர். அதனால் அந்த நாடு முன்னேறியிருக்கிறது. நம்முடைய நாட்டிலோ பழைமை புத்துருக் கொள்ள மறுக்கிறது. இளமையை ஏற்க மறுக்கிறது. பழைமை கிழடுதட்டிப்போய் பிரேத ஊர்வலமாக வந்து கொண்டிருக்கிறது. புதுமை என்ற பெயரில் சிலசிந்தனைகள் வறட்சித்தன்மையுடையனவாய் ஊட்டமின்றித் தேவாங்கு போல நடமாடுகிறது. இது வளரும் தமிழகத்திற்கு நன்றன்று.

இனிய தமிழ்ச் செல்வ, நல்ல நூல்களைக் கற்க வேண்டும். புதிய உணர்வுடன் கற்க வேண்டும்; அறிவு பெற வேண்டும். அறிவு, ஆற்றல் மிக்க கருவியாக வாழ்க்கையில் செயற்பாடுறுதல் வேண்டும். கற்கின்ற நூல்களின் கருத்தை வாழ்க்கையில் சோதனை செய்தல் வேண்டும். கற்ற நூற்கருத்துக்குச் செயலுருவம் தரவேண்டும். இம்முயற்சியில் பெறுவதே அறிவு. அறிவு ஆன்மாவின் இணையற்ற கருவி, அனுபவம், செல்வம். ஆதலால் இனிய தமிழ்ச் செல்வ, "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்பதை நினைந்து அறிவைத் தேட முயல்க! வாழ்வாங்கு வாழ அறிவைப் பெறுதலே முதற்கடமை. முயற்சியைத் தொடங்குக! திருவள்ளுவரைப் பழுதறக் கற்பாயாக! எதிர் வரும் இருபத்தோராம் நூற்றாண்டின் தேவை உணர்வுடன் கற்பாயாக! கற்கும் பாங்கே அறிவைத் துரண்டும் சக்தி! கற்றதைச் செயற்பாட்டுக்குக் கொணர்தலே வாழ்க்கை! வாழ ஆசைப்படுக! வாழ்ந்திடுக! பிற பின்! வாழ்த்துகள்!

இன்ப அன்பு

அடிகளார்