குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/இகல்இன்றி இரு

14. இகல்இன்றி இரு

இனிய செந்தமிழ் செல்வ!

கடந்த பல ஆண்டுகளாகத் தமிழினத்தின் ஒருபகுதியினரை வகுத்திவந்த துன்பம் ஒருவாறாக மறைந்தது. ஆம் செல்வ! இலங்கைத் தமிழர்களின் துன்பத்தைத்தான் கூறுகின்றோம். வீரகாவியங்கள் செய்த பாரதிதாசனே "கெட்ட போரிடும் உலகம்" என்று போரிடும் உலகத்தினைச் சாடுகின்றான். வழக்கம்போல சமாதானத்தின் காவலனாக உள்ள நமது பாரதநாடு இலங்கையில் சமாதானத்தைத் தோற்றுவித்துள்ளது. இனிய அன்ப! இந்த ஈழத்தமிழர்களில் சிக்கலில் நமது திருக்குறள் பேர்வையின் 19-1-85 பொதுக்குழு எடுத்தமுடிவுகளே இலங்கை இந்திய உடன்பாட்டின் நெறிகளாக அமைந்துள்ளன எனில் அதுவியப்பன்று! திருக்குறளின் சிறப்பு அது.

திருவள்ளுவர் ‘படைச்செருக்கு’ முதலிய அதிகாரங்கள் கூறினாரேனும் ‘இகல்’ என்று ஒர் அதிகாரம் அமைத்து, மாறுபடுதலையும் மாறுபாட்டின் வழி பொருதுதலையும் தவிர்க்கும்படி அறிவுறுத்துகின்றார். இனிய செல்வ! திருவள்ளுவர் இகல் அதாவது மாறுபாடு கொள்ளுதல் தவறு என்று மட்டும் கூறவில்லை. மாறுபாட்டின் காரணமாக அமையும் பிரிவினை உணர்வை கூடிவாழாமையை நோய் என்றே கூறுகின்றார். கூடி வாழ்தலே மானுடத்தின் இயற்கை இயற்கை நியதிகளுக்கு மாறானது எல்லாம் நோய்தானே! தீமைதானே!

"இகலென்ப வெல்லாவுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை
பாரிக்கும் நோய்”

என்பது குறள்,

இனிய செல்வ! மாறுபடுவதால் பிரிவினை உணர்வு பெறுவதால் வெற்றி கிடைக்கிறது! புகழ் கிடைக்கிறது! பொருள் குவிகிறது! என்றெல்லாம் சிலர் கருதுகின்றனர். இது ஒரோவழி உண்மையும் கூட. ஆனாலும் இவை நிலையானவையல்ல. பிரிவினைகளால் போர்களால் பெற்ற வாழ்வு விரைவில் நிலை தாழும்! முடிந்தும் போகும்! அலெக்சாந்தரின் வெற்றிகளும் நெப்போலியனின் வெற்றிகளும் என்னாயின! அந்த வெற்றி வீரர்களின் வாழ்க்கை எப்படி முடிந்தது? துன்பமாக அல்லவா முடிந்தது? ஏன், அசோக சக்கரவர்த்தியின் போர்க்கால வாழ்க்கையை வரலாறு பாராட்டவில்லை? போரின் முடிவில் அவர் மனம் ஏற்றுக்கொண்ட சமாதான வாழ்க்கையை உலக வரலாறு போற்றுகிறது. அசோகர் அரசின் நியதிகளுக்கு அடங்காத வரைக் கூட, அன்பு நெறியிலேயே திருத்த முயன்றார். சமாதானத்தையும் பொறுத்தாற்றும் பண்பையும் (சகிப்புத்தன்மை) கருவிகளாகக்கொண்ட "சீலத்தினால் வெற்றி" என்ற நெறி வழியே கிரேக்கரையும் சிங்கள நாட்டினரையும் தாம் கவர்ந்து வெற்றி கொண்டதாக அசோகர் குறிப்பிட்டுள்ளார். இனிய செல்வ! இன்று அசோகர் வழி வந்த பாரத நாட்டு மக்கள், இலங்கைக்குச் சமாதானத்தைப் பரிசாக வழங்கியுள்ளனர். அந்தப் பரிசே இந்திய இலங்கை ஒப்பந்தம். "துன்பத்துள் துன்பம் இகல்" என்பது திருக்குறள். மாறுபாடுகளும் பிரிவினையும் துன்பமே! இலங்கை, இலங்கையருக்கே! இலங்கையில் வாழும் தமிழர்களும் பேசும் மொழியால் தமிழர்கள்; நாட்டால் இலங்கையர்களேயாம். இந்த உண்மையினைச் சிங்களவர்களும் மறத்தல் கூடாது தமிழர்களும் மறத்தல் கூடாது. வாழ்விலும் தாழ்விலும் ஒன்றாகவே கூடி வாழ்தல் வேண்டும்! பிரிவினை தீது! மாகாணப் பிரிவினைகள் வசதிக்காகவேயாம்! இந்தப் பிரிவினை நெடுஞ்சுவராகி விடக்கூடாது. வீட்டில் அறைகள் அறைகளின் சுவர்கள் பிரிவினைத் தன்மை உடையன அல்ல. அவை வசதிகளைக் குறிக்கோளாகக் கொண்டவை. இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனைக் காத்தலே பெளத்த சமய நெறி - கோட்பாடாக விளங்க முடியும்! இலங்கையில் உள்ள சிங்கள நலன்களைக் காப்பதிலேயே தமிழர் சமயம் பண்பாடு ஒளிவிட முடியும்! இதுவே அசோகர் போர் முடிவில் கண் "தர்ம விஜயக் கோட்பாடு” இந்தத் தர்ம விஜயக் கோட்பாடு வெல்க! வளர்க!

என்றும் வேண்டும்
இன்ப அன்பு
அடிகளார்