குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/கவரிமான்

69. கவரிமான்

இனிய செல்வ,

கவரிமான் என்று மான் வகையில் ஒரு சாதி. இந்த கவரிமான் காடுகளில் ஓடித் திரிந்து வாழும். அப்படி ஓடித் திரிந்து வாழும் அந்தக் கவரிமான் ஒரு வேலியைத் தாண்டும்பொழுது வேலியில் கவரிமான் உடம்பிலுள்ள ரோமம் ஒன்று உதிர்ந்துவிட்டாலும் கவரிமான் பொறுத்துக் கொள்ளாதாம்! உடனே செத்துப் போகும் என்று திருக்குறள் கூறுகிறது.

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்”

(969)

என்பது திருக்குறள்.

இனிய செல்வ, நமது நாட்டில் நடந்த பங்குச் சந்தை ஊழல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய்! செய்தித் தாள்களிலும் படித்திருப்பாய்! பங்குச் சந்தை (Share Market) என்பது நமது நாட்டில் ஒரு பெரிய தொழில்! பங்குச் சந்தை என்றால் என்ன? நமது நாட்டில் நடக்கும் பெரிய தொழில் நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் விற்பனைக்கு வரும். அந்தத் தொழிற்சாலையின் நடைமுறை, ஸ்திரத்தன்மை, இலாபம் ஆகியவற்றிற்கு ஏற்ப பங்கின் விலை கூடும் அல்லது குறையும். கூடினால்-ஒரு பங்கின் விலை ரூ.1000 என்றால் பங்குச் சந்தையில் ரூ.2000 விலை போகும். சந்தைகளுக்கு ஏற்பக் கூடவும் கூடும்; குறையவும் குறையும். ஹர்ஷத்மேத்தா என்பவர் எடுத்த பங்குகள் பல மடங்கு கூடுதலாகப் போயிருக்கிறது. இந்தப் பங்கு உயர்வு கேடுதரும் என்பது நாடறிந்த உண்மை. இவர், தான் விரும்பியவாறு எல்லாப் பங்கு விலையையும் கூட்டியிருக்கிறார். பங்குகளை வாங்கியிருக்கிறார். பங்குகளில் ஒரு சில பங்குகளை வைத்துக்கொண்டு வங்கிகளின் பணத்தை திறமையாகப் பயன்படுத்தியுள்ளார்.

இனிய செல்வ, நமது மாண்புமிகு அமைச்சர் ப.சிதம்பரம் அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்து விட்டார், தெரியுமா? ஏன் ராஜிநாமா செய்தார்? இந்தப் பங்குச் சந்தையில் ப.சிதம்பரம் பங்கு வாங்கியுள்ளார். ஒருவர் தாம் சம்பாதித்த பணத்தில் பங்கு வாங்குவது தவறில்லை. இன்று பல இடங்களில் நாடே விலை பேசப்படுகிறது. இன்று நடந்து வருகிற ஒரு பெரிய காரியம் அது. கையூட்டை வெளிச்சம் போட்டுக்கொண்டு வாங்குகிறார்கள். இன்றைக்குக் கையூட்டை தேசிய மயப்படுத்திய பெருமையும் நமது தலைமுறைக்கு உண்டு. இவ்வளவும் நாட்டில் நடக்கும்பொழுது ப.சிதம்பரம் பங்குச் சந்தையில் பங்கு வாங்கியது எப்படி ஊழலாக முடியும்? என்ன சிக்கல் என்றால் நடைமுறையில் இருந்த விலையைவிடக் கூடுதலாக விலை கிடைத்துள்ளது. அவ்வளவு விலை கூடுதல் அமைச்சர் என்பதற்காகக் கிடைத்ததா? அல்லது அமைச்சர் பொறுப்பிலிருந்து ப.சிதம்பரம் அவருக்கு ஏதாவது உதவி செய்திருப்பாரா? என்றெல்லாம் ஐயம் பிறக்கிறது.

தி.29. ப.சிதம்பரம் இந்தத் தவறுகளையெல்லாம் செய்யவில்லை. பங்குகளைச் சந்தையில் வாங்கியதுதான் அவர் செய்தது! ஆயினும் ராஜிநாமா செய்துவிட்டார். அன்று ஓ.வி.அளகேசன், லால்பகதர் சாஸ்திரி! இன்று ப.சிதம்பரம்! மிகமிக உயர்ந்த மரபு!

ஆம்! மாண்புமிகு ப.சிதம்பரம் நல்ல சிந்தனையாளர். செயல்திறம் உடையவர்! அவர் ஏன் இந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டார்? புரியாத புதிர்! நாடு தழுவிய நிலையில் பத்திரிகைகளில் ப.சிதம்பரம் பற்றிய செய்திகள் வெளிவந்தன. ஒன்றும் கண்டிக்கவில்லை. விதி முறைப்படி தவறில்லை. அறநெறிப்படி தவறு என்று இதழ்கள் எழுதின. யார் எதைச் சொன்னால் என்ன? ப.சி. ராஜிநாமா செய்து விட்டார். தமது நிலையை மிகமிக உயர்த்திக் கொண்டு விட்டார்! பம்பாய் இதழ் ஒன்று கூறியதுபோல ப.சி. ராஜிநாமாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெற்றுக் கொள்வாரா, என்ன? ஒருபோதும் மாட்டார்!

நாம் ப.சி. அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்; தாங்கள் அடுத்து நாட்டுக்கு நல்லது என்று எதை நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள் என்று! இனிய செல்வ, இன்றைய அரசியலில் ப.சி. ஒரு குறிஞ்சி மலர், திருவள்ளுவர் கூறிய கவரிமான் சாதி! வளர்க ப.சி.!
இன்ப அன்பு
அடிகளார்