குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/குடிசெய்வார் இயல்பு
இனிய செல்வ,
திருக்குறள் பொது மறை! உலகப் பொது மறை! ஆயினும் ஒருவன் தான் பிறந்த குடியை வளர்க்க வேண்டும்; காக்கவேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது. நிலப்பரப்பு அளவில் பெரியது. வேளாண்மை செய்யும் பொழுது பாத்தி பிரித்து வரப்பெடுத்துக் கட்டி நீர் கட்டினால் தான் வேளாண்மைத் தொழில் வெற்றி பெறும். அதுபோல் உலகம்-மக்கள் தொகுதி அளவில் கூடியது. நாடும் கடலும் இடையில் கிடப்பது. எனவே மக்களையும் பகுதியாய் பிரித்து எடுத்து வளர்த்தலே எளிது; நடைமுறைக்குரியது. மக்கள் தொகுதியின் அடிப்படை பகுப்பு குடி! குருதிச் சார்புடையது! அதற்கு அடிப்படை குடும்பம், சுற்றம்! குடி என்பது மொழியின் அடிப்படையிலானது என்றும் கொள்ளலாம். இனிய செல்வ, குருதி வழி அமைவது என்று கொண்டாலும் தவறில்லை.
இனிய செல்வ, ‘குடி செயல் வகை’ என்று திருக்குறளில் ஒர் அதிகாரம் உள்ளது. இனிய செல்வ, ஏதாவது ஒரு காரியம் செய்ய நாள் பார்த்துக் காத்திருத்தல் பருவம் பார்த்தலாகும். இந்த உலகில் விரைந்து செல்லக்கூடியது காலம்! காலம் யாருக்காகவும் காத்திருக்காது. இழந்தாலும் திரும்பி வராது; கிடைக்காது. இனிய செல்வ, இளமை எத்தனை நாளைக்கு? நம் ஒவ்வொருவருக்கும் வரையறுத்த வாழ் நாள் எவ்வளவு? அதோ பார்! நமக்கு முன்னால் போய்க் கொண்டிருக்கிறார்கள்! நெடுந்தூரம் போவானேன்? தமிழ்க்கொண்டல் அருளரசு கிருபானந்தவாரியார் பம்பாய்-சென்னை விமானத்தில் ஏறினார்! சென்னையில் இறங்கவில்லை! அவருடைய பூதவுடல் இறக்கப்பட்டது. கடிகாரம் டிக், டிக் என்ற ஒலியுடன் நகர்கிறது! இல்லை! நமது உயிரை மரணத்தை நோக்கி நகர்த்துகிறது! நாம் பேருந்து, விமானப் பயணத்திற்குச் சுறுசுறுப்பாக இருப்பது போலவே கடைசிப் பயணத்திற்கும் சுறுசுறுப்பாய் இருப்பது நல்லது. இனிய செல்வ, என்ன பொருள்? “காலம் போற்று! கடமைகளைச் செய்!” என்பதே. நீ பிறந்த குடிக்கு நன்மை செய்! நீ பிறந்த குடியை வளர்ப்பாயாக! உன் மொழியை வளர்த்திடு! கடமையை வேள்வியாகச் செய்! நாளை நாளை என்று ஒத்திப் போடாதே! நல்ல நாள் என்று ஒன்று இல்லை! கடமை வேள்வியை, உழைப்பு நோன்பை இயற்றுபவருக்குப் பிறந்த குடிக்குரிய பணிகளைச் செய்பவருக்கு ஒவ்வொரு நாளும் நல்ல நாளே! பருவம் பார்க்காதே!
இனிய செல்வ, வாழும் வாழ்நாள் சிலவே! பாலப் பருவம் தாயின் மடியில் கழிகிறது! விளையாட்டில் போகிறது! கற்பதில் கரைகிறது! நாம் மனிதனாகிச் செயல் செய்வதற்குரிய காலம் - சுதந்திரமான காலம் பதினெட்டு வயதில் வருகிறது! இது உலக நியதி! வாழும் காலம்-செயல் செய்யும் காலம் பொதுவாக 40 வயது வரை தொடர்கிறது. இந்த காலமே இளமைக் காலம் ! ஒரு சிலருக்கு 50-60 வயது வரையில் கூடச் செயல் செய்யும் காலம் தொடரலாம். இனிய செல்வ, பதினெட்டு முதல் நாற்பது வயதுக்குட்பட்ட இடைக்காலம் ஒவ்வொருவர் வாழ்விலும் பொற்காலம்! ஆவேசமாகச் செயல் புரியும் காலம் ! புவியை நடத்தக்கூடிய பொற்காலம்!
உயிரியற்கை சுறுசுறுப்பேயாம். மனிதனே சோம்பலைப் படைப்பவன்! விதி, வினை, நல்லநாள், கெட்டநாள், சூழ்நிலை என்றெல்லாம் பல காரணங்கள் கூறிக் கடமைகளை ஒத்திப் போடுதலே சோம்பல்! பொழுது போக்கு அரட்டை அடித்தல் முதலியன சோம்பலை வளர்ப்பன. புகழ், இலாபம், கடினம், ஒத்துழைப்பில்லை என்ற சொற்கள், இச்சொற்கள் வழி உணர்த்தப்பெறும் பொருள் முதலியன சோம்பலுக்கே சுருதி கூட்டுவதாகும். சோம்பல் மானத்தின் பகை! ஆக்கத்தின் பகை! வாழ்க்கைக்கு ஒரு புற்றுநோய்! இனிய செல்வ, சோம்பல் என்றால் ஒன்றுமே செய்யாதிருத்தல் என்று கருதிவிடாதே! இந்த உலகில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைச் செய்வர். சிலர் இரண்டு, மூன்று கூடச் செய்யலாம், அதுவல்ல கருத்து! நம் ஒவ்வொருவருடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் இசைந்தவாறு பொருந்தும் அளவுக்குப் பணி செய்தல்வேண்டும், நம்முடைய நேரத்தில் ஒரு நொடிப் பொழுதோ அல்லது ஆற்றலோ வறிதே கழியக்கூடாது. எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டும். எல்லை, மனம் அல்ல! இலட்சிய நோக்கு! இலட்சிய நோக்கு விரிவடைந்தால் அறிவு அகண்டமாகும்! ஆற்றல் ஊற்றெனப் பெருகும். இனிய செல்வ, சோம்பலை உதறித் தள்ளி எழுந்து நில்! விழிப்புடன் நில்! உன் வாழ்நாளைக் களவு கொடுத்து விடாதே! உன் முறுக்கேறிய தசைகள் தளரும் முறையில் அறிவறிந்த ஆள்வினை செய்! நீ, பிறந்த குடியின் மேம்பாட்டுக்குரிய பணியைச் செய்க!
இனிய செல்வ, நாம் பிறந்த குடியை வளர்த்தாக வேண்டும்! நாம் பிறந்த குடி என்ன நம்மை வரவேற்கப்போகிறதா? அம்மம்ம, ஒரு குடிப்பிறந்தாருள்ளும் அழுக்காறு புகுந்து நடத்தும் திருவிளையாடல்! கொடுமை! கொடுமை ! மண்டையை உருளச் செய்து வருகிறது! பகைமை! உட்பகை! புறங்கறல்! சிறுமை செய்தல்! இனிய செல்வ, அழுக்காற்றின் காரணமாக நாம் எடுக்கும் குடி செயல் பணிகளுக்கு - நற்பணிகளுக்குக் கூடத் தடைசெய்தல், இடையூறு விளைவித்தல் இவையெல்லாம் நடக்கும்! பெருமை பார்ப்பர்! இவைகளால் குடி செயல் கெடும்! இனிய செல்வ! நீ பிறந்த குடியை வளர்ப்பதற்குரிய பணியைச் செய்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டாயா? உண்மையாக வந்து விட்டாயா? உறுதியாக நீ பிறந்த குடிக்கு உன் பணியைச் செய்வதை நோன்பாக ஏற்க உறுதி கொண்டுவிட்டாயா? அப்படியானால் யாரிடமும் நீ பெருமையை எதிர்பார்க்காதே! மானம், மரியாதை, மதிப்பு, அவமதிப்பு ஆகிய சொற்கள் இலட்சிய வாழ்க்கையைக் கெடுக்கும்! நாளும் நல்ல பணிகள் பல செய்வதைக் கெடுக்கும்! ஏச்சா? பேச்சா? பழியா? தாங்கிக்கொள்! அன்புகாட்டு! அன்புசெய்! அப்போதுதான் தமிழ்க் குடிக்கு ஏதாவது செய்ய இயலும்! எவரையும் யாரையும் நிலம் போலத் தாங்கு! இனமானத்தை இழந்து தன்மானத்தைக் காக்காதே! இனமானத்திற்குத் தன்மானம் முரண்படக்கூடியது!
இனிய செல்வ, உன்னோடு உடன்படாதவரோடும் உடன்பாடு காண முயலுக! உன்னைப் பழிதூற்றுவோரிடமும் நீ அன்பைப் பொழி! அப்போதுதான் நீ பாதுகாப்பு எல்லையைக் கடந்து பணி செய்யும் எல்லைக்குள் நுழைய முடியயும்! மேவ முடியயும்! இனிய செல்வ, இன்று தமிழ்க்குடி வாழ்வாங்கு வாழவில்லை! தமிழ் மொழி வளரவில்லை! ஆங்கிலமும், இந்தியும், ஆரியமும் தமிழின்மீது ஆட்சி செலுத்த முயலுகின்றன. தமிழ்க் குடும்பங்களில் சரிபாதிக் குடும்பம் வறுமைக் கோட்டுக்கு கீழ்! காவிரித் தண்ணீர் கிடைக்கவில்லை! இந்நிலையில் தமிழர் குடி ஒன்றுபடவில்லை! ஒன்றாக வாழக் கற்றுக் கொள்ளவில்லை, இன்று தமிழ்க்குடி பல குழு வயப்பட்டுள்ளது. குடி செய்யும் முயற்சியாண்டும் இல்லை! குழுக்கள் போராட்டம் நடக்கின்றது. இனிய செல்வ, தமிழ்க் குடியை வளர்க்க வேண்டும். நடக்குமா?
இனிய செல்வ, நமக்குதெரிந்து பிறந்து மொழி பயின்ற காலத்திலிருந்து தமிழ் நாட்டு வரலாற்றைக் கூர்ந்து நோக்கினால் தமிழ்க் குடியினர் ஒன்றுபட்டு நின்ற காட்சியில்லை! இனிய செல்வ, யார் வந்தால் என்ன? வராது போனால் என்ன? நாம் ஒத்துப்போவோம்! ஒத்துழைப்போம்! தமிழ்க் குடியைக் காப்போம்!
"குடி செய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்”
இன்ப அன்பு
அடிகளார்