குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/குறிக்கோள் நட்பு

63. குறிக்கோள் நட்பு

இனிய செல்வ,

மனித வாழ்க்கை மகிழ்வுறும் நிலையில் இயக்கும் உறுப்புக்கள் பலப்பல. இந்த உறுப்புக்கள், உயிர்ப்புள்ள உறுப்புக்கள்! காலந்தோறும் வந்து பொருந்தும் உறுப்புக்கள். இனிய செல்வ, தந்தை, தாய், உடன்பிறந்தார், நண்பன், மனைவி என்றெல்லாம் உள்ள வாழ்க்கையின் பருவநிலை தேவை. இவை அடிப்படையில் வந்து பொருந்தும் உறுப்புக்கள்! இந்த உறுப்புக்களை நெறிப்படுத்தி வளர்க்கும் பாங்குடையது சமூகம்.

இனிய செல்வ, இந்த உறுப்புக்கள் அனைத்திலும் நனி சிறந்தது நட்பேயாம். உயிர்த்தோழன் வழங்கும் ஆற்றலைத் தாய், மனைவி, உடன் பிறந்தார், மக்கள் இவர்களில் எவரும் தர இயலாது. ஆம்! தாயினும் தோழன் காட்டும் பரிவும் தியாகமும் வாழ்க்கையை நரக வேதனைக் காளாக்காமல் காத்து இன்புறும் நிலையினை வழங்கும் தன்மையுடையது. இனிய செல்வ, திருவள்ளுவர் நட்பு பற்றி நிறைய பேசுகிறார். திருக்குறள் காட்டும் நட்புநெறி இன்று எங்கு இருக்கிறது? அழுக்காறும் அவாவும் பலகாலும் பழகிய நட்புறவைக் கெடுத்து விடுகிறது. அச்சமும் பேடிமையும் தியாக உணர்வைப் பொசுக்கி, சுயநல மனிதனாக்கி விடுகிறது.

இனிய செல்வ, நோன்பு என்றால் விரதம்! விரதம் என்றால் உண்ணாமை அல்லது வழக்கம் போல் உண்ணாமை. பல ஆகாரம் உண்ணல் என்பது இன்றைய வழக்கு. ஆனால், பிறர் நலத்துக்காக முயற்சி மேற்கொண்டு வாழும் குறிக்கோளை நோன்பு என்றது புறநானூறு.

"தனக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென வாழுநர்”

என்பது புறநானூறு, நட்புக்குரிய அன்பு, தியாக ஊற்றுக் கண்ணாலேயே வளரும். இழப்பும் துன்பமும் இல்லையேல் அன்பு ஊற்றுக்கண் திறக்க வேறு வாயில்கள் ஏது? ஐயமும் நம்பிக்கையின்மையும் உறவுகளின் வாய்க்கால்களைத் தூர்க்கும் கோரைகள்! நட்புவளரும். துளயநட்பு-அன்பில் விளைந்த நட்பு-அர்ப்பணிப்பில் உறுதியான நட்பு-நாளும் வளரும். எதுபோல வளரும்? பிறை நிலா, முழுநிலாவாக வளர்தல் போல வளரும் என்று கூறுகிறது திருக்குறள், ஆம்; பிறை நிலா குறுகிய கால அளவு! ஒளிக்கற்றையும் குறைவு! நிறைநிலா இரவு முழுவதும் ! ஒளிக்கற்றையும் அதிகம்; நல்ல நண்பன் வாழ்நாள் முழுதும் துணை நிற்பான்; வாழ்வுக்கு ஒளியூட்டுவான்; வளம் சேர்ப்பான்!

"நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு"

என்பது குறள். இனிய செல்வ, நல்ல நூல்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்; கற்கும் தொறும் இன்பந்தரும்; கற்கும் தொறும் அறிவு தரும்; ஆக்கம் தரும்; பண்பினை நல்கும். அதுபோல, நல்ல நண்பன் பழகுதலுக்கு எளியனாக இருப்பான்; பழகுந்தொறும் இன்பமளிப்பான்; இத்தகைய நட்பியல்-தோழமையியல் இன்றைய சமூகத்தில் அருகிப் போய்விட்டது. தேடிப்பார்த்தாலும் இல்லை. இனிய செல்வ, இன்றைய அரசியல், சமூகம் அனைத்துத் துறையிலும் சிறந்த தோழமைப் பண்புள்ளவர்கள் கூட்டாளிகளாகச் சேரவில்லை. எல்லாரும் புகைவண்டிப் பயணமே செய்கின்றனர்; சத்திரங்களிலேயே உண்டு உறங்குகின்றனர். அதனால் வரலாற்றுறுப்புக்களிடையே காரியங்கள் நடைபெறவில்லை. இனிமேலும் நடைபெறுமா? உடன் வருவது யார் என்ற ஐயம் வந்தபிறகு, பயணம் எப்படி நடக்கும்? இன்று நமது நாட்டுக்குத் தேவை கெட்டிக்காரர்கள் அல்ல; சாமர்த்திய சாலிகள் அல்ல. கெட்டிக்காரத்தனமும் சாமர்த்தியமும் எளிதில் அடையலாம். நம்பிக்கைக்குரிய தோழமையுடன் நல்லெண்ணத்தில் தோய்ந்த நட்புடன் தியாகம் செய்பவர்கள் தேவை!

இனிய செல்வ, இன்று எங்கும் தியாகத்தையும் காணோம். சேவையையும் காணோம்! எங்கும் கையூட்டு; ஏன், இந்த நிலை? இலட்சியம் உடைய மனிதரையே நம்முடைய உலகம் உருவாக்கவில்லையே! இலட்சியம் குறிக்கோள் இவற்றில் ஒற்றுமை இருந்தால் அபிப்பிராய பேதங்கள் உருவாகா. உருவானாலும் பிரிவினைகளைத் தாரா; இனிய செல்வ, அண்ணல் காந்தியடிகளுக்கும் அமரர் நேருஜிக்கும் இடையில் எவ்வளவு அபிப்பிராய வேற்றுமைகள்! ஆயினும் ஒன்றுபட்டு இருந்தனர். ஏன்? நாடு விடுதலை பெற வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது? இன்று அப்படி உயர் குறிக்கோள் உடைய மனிதரையும் காணோம்! இயக்கங்களையும் காணோம்! அதனால்தான் கட்சிகள் கூடப் பச்சை மண்பானைப் போல நொறுங்குகின்றன. அல்லது எரிமலைக் குழம்பினைப் போல குழம்புகின்றன, சுரண்டலும் ஆதிக்கமும் அன்பின்-நட்பின் ஆக்கத்திற்கு எதிர்பண்புகள்! இன்று எங்கு நோக்கினும் இவைகளே ஆரவாரத்துடன் ஆட்டம் போடுகின்றனர். ஐயோ பாவம்-அன்பு, தொண்டு, தியாகம் இவை பொருளிழந்த சொற்களாயின.
இன்ப அன்பு
அடிகளார்