குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/கூட்டாளி ஏன்?

76. கூட்டாளி ஏன்?

இனிய செல்வ,

இன்று முயன்றாலும் ஒருவராய் வாழ முடிவதில்லை. இந்த உலகின் பரந்த எல்லைகளோடு தொடர்பு வந்தாய் விட்டது. நுகர்வன பலப்பலவாயின. அதனால் பொருள் தேவை அளவற்றதாகிறது. அது மட்டுமா? பொருள் இருந்தால் மட்டும் போதாது. சொத்தும் வேண்டும். தனி உடைமைச் சமுதாய அமைப்பு தோன்றிய பின் சொத்து தோன்றிற்று. காலப் போக்கில் சொத்தின் மதிப்பு, பலவாகக் கூடி, இன்று சொத்து மனித மதிப்பீட்டின் அடிப்படை ஆயிற்று. இஃது ஒரு எதிர்மறை வரலாறு, ஆயினும் நடந்துவிட்டது. நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பலரோடு கூடிவாழ்வது போல ஒரு தோற்றம்;

இனி செல்வ, உணர்வு ஒத்தவர்கள் பலர் கூடி வாழ்ந்தால் அற்புதங்கள் நடக்கும். அதிசயங்கள் நடக்கும். பலர் கூடித் தொழில் செய்துவாழும் பொழுது அறிவின் தெளிவு இருக்கும். ஆற்றல் மிகு விளங்கும். ஆனால், இன்று எண்ணிக்கையில் பலர்! வாழ்நிலையில் பலரின் சிந்தனையும் செயலும் கூடுவதில்லை. சில சமயங்களில் சிந்தனை குழம்பிப் போகிறது. நெப்போலியன் சொன்ன கழுதைக் கதைபோல் ஆகிவிடுகிறது. ஆம்! நம்முடன் ஓரிருவர் கூட்டு வாழ்க்கை நடத்த முன்வந்தாலே போதும். இந்தக் கூட்டு வாழ்வின் அறிவு, உணர்வு, செயல் அத்தனையும் இணைந்திருக்க வேண்டும். ஒருவரின்றேல் ஒருவர் இல்லை என்றிருக்க வேண்டும். இதுவே நட்புத் தோழமை!

நண்பன் ஏன்? கூட்டாளி ஏன்? அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்! ஆக்கத்திற்குத் துணை செய்ய வேண்டும். இதற்காகவே நட்பு தோழமை கூட்டாளி அலுவலர்! எந்தப் பெயரால் கூறினால் என்ன? நம்முடன் நம்மைச் சார்ந்து வாழ்பவர்கள், நமக்கும் சார்பாக இருப்பவர்கள் இவர்கள்தான் அழிவிற்கும் பொறுப்பு! ஆக்கத்திற்கும் பொறுப்பு! இனிய செல்வ, அழிவிலிருந்து காக்க முடியவில்லை, ஆக்கமும் தரமுடியவில்லை என்றே வைத்துக் கொள்! அப்போது தப்பித்து ஓடுபவன் ஒருவருள் ஒருவராய் வாழ்ந்தது உண்மையல்ல. அது வெறும் நடிப்பு. ஒதுங்கி நிற்கிறான் என்றால் அவன் நண்பனாய்க் காட்டியதெல்லாம் தோல்பாவைக் கூத்தாட்டம் போலத்தான்! பின் யார் உண்மையான கூட்டாளி? நண்பன்? தோழன்? கேடு வந்தவிடத்தும் அக்கேட்டினை நாம் அனுபவிக்கும் பொழுதும் நம்முடன் இருந்து துன்பத்தை அனுபவித்து உழல்கின்றானே அவன் தான் நண்பன்! தோழன்! கூட்டாளி! சுந்தரர்-பரவையின் பிரிவு தவிர்க்க முடியாததாயிற்று! ஆயினும் அப்பிரிவினைத் தவிர்க்க சுந்தரருடன் இருந்த திருவாரூர் வீதியில் நள்ளிரவில் நடந்து உழன்றானே சிவபெருமான்! அது நட்பு தோழமை!

இனிய செல்வ, இன்று எங்கு பார்த்தாலும் கூட்டம்! கூடி வாழ்வது போலத் தெரிகிறது! ஆனால், பரஸ்பரம் நம்பிக்கையில்லை. கட்சி என்றாலே கூட்டாய்வு என்று பெயர். ஆனால், இன்றைய கட்சிகளின் வடிவம் ஜனநாயகம். ஆனால், நடைமுறையில் தனி நாயக நாகரிகம்! பண நாகரிகம்! எல்லாம் ஒருவரே! இது! இன்றைய அரசியல் போக்கு! ஆளுங்கட்சிக்கு ஒரு தலைவர். இதுதான் நடைமுறை! இந்த நடைமுறைக்கு இன்று ஓய்வு கொடுத்தாகி விட்டது. ஏன்? பரஸ்பரம் நம்பிக்கையில்லை. நாற்காலிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம்! அதுமட்டுமா? இன்று கட்சிகளில் பொருளாளர்கள் உண்டு. ஆனால், பொருள் இல்லாத பொருளாளர்கள். பொருள் முழுவதும் தலைவர் வசம்! பலராய்க் கூடி இருப்பதாகக் காட்சி! ஆனால், தனி ஒருவர்தான் எல்லாம்! ஏன் இந்த நிலை! நிறுவனங்கள், கிராமங்களில் கூட பார்க்கலாம்! கூட்டமாக வாழ்கிறார்கள். ஆனால் கூட்டுணர்வு இல்லை! கூட்டம்! அஃது ஒரு கும்பல்! கூட்டம் கூட்டுவது எளிது! ஆனால், அந்தக் கூட்டத்தினை உணர்வால், உயிர்ப்பால் செயலால் ஒன்றுபடச் செய்தல் எளிதன்று. இனிய செல்வ, அதுவும் இந்தியர்களுக்கிடையில் சாத்தியமல்ல. இந்தியர்கள் தனியே இருந்தால் நல்லவர்கள். கூட்டமாக கூடிவிட்டால் அராஜகம்தான்! நாம் கூட்டு வாழ்க்கைக்கே தகுதியற்றவர்கள். பூமியில் தானே வாழ்கின்றோம். பூமி தன்னைத்தானே சுற்றி வருவது போல நாமும் நம்மை நாமே சுற்றி வருகிறோம். நாடு, ஊர், பாராளுமன்றம், சட்டசபை, பஞ்சாயத்து என்றெல்லாம் அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் அனைத்தம் பலர் கூடி வாழ்வதற்குத்தான்; கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்வதற்காகத்தான்! நடப்பு அப்படியல்ல.

இனிய செல்வ, எங்கே உண்மையான கூட்டுறவு இல்லையோ, அங்கே ஒரு கும்பல்தான் இருக்கும், இந்தக் கும்பல் பயனற்றது! உண்மையான நட்பு, தோழமை இருந்தால் சிந்தனையில், செயலில் பெருக்கம் இருக்கும்; ஒரோவழி அல்லற்பட்டு ஆற்றாது உழல வேண்டியிருப்பினும் நம்முடன் நமது துன்பத்திலும் பங்கேற்று உழல்வார்கள். 'இதனால் துன்பத்தின் தாக்கம்-பாதிப்புக் குறையும்! கவலை குறையும்’ போர்க்குணம் தோன்றும்! வளரும்! வாழும் துடிப்புத் தோன்றும்! இதற்கே கூட்டு! நட்பு! தோழமை! இன்று எங்கே தேடுவது கூட்டாளியை? சமூகத்தின் மாற்றங்கள் ஏற்பட்டாலே நட்புக் கிடைக்கும்! தோழமை கிடைக்கும்! பிழைப்பு நடத்தக் கூடாது, வாழ்தல் வேண்டும் என்ற உணர்வு சிறக்க வேண்டும். ‘இரண்டு நல்லது; இரட்டை வடம் நல்லது! ஆனால் இரட்டைப் போக்கு உள்ளவரை நட்பு வளராது! தோழமை தோன்றாது! மனிதனும் உருவாக மாட்டான்!

உடன்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று

(890)
இன்ப அன்பு
அடிகளார்