குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/சலத்தால் பொருள் செய்யற்க

12. சலத்தால் பொருள் செய்யற்க

இனிய செல்வ!

பல மடல்கள் எழுதத் தவறிவிட்டன. அன்பு கூர்ந்து பொறுத்தாற்றிக் கொள்க.

இன்றும் நாடு தழுவிய நிலையில் பேசப்பெறும் ஒரு செய்தி ‘ஊழல்’ ஆகும். இந்த ஊழல், கையூட்டு, (லஞ்சம்) வேண்டியவர்க்குச் சலுகை ஆகிய வழிகளில் கால்கொண்டு வளர்கிறது. கையூட்டு இன்று தோன்றிய வழக்கமல்ல. நம்முடைய நாட்டில் பன்னெடு நாள்களாகவே வளர்ந்து வந்துள்ள ஒரு தீய பழக்கம்-தொற்றுநோய். இது இன்று வளர்ந்து நாட்டளவினதாகிய நோயாக வளர்ந்துவிட்டது. ஊழலும் தேசியமயமாகிவிட்டது.

இந்தக் கையூட்டுப் பழக்கத்தை முதன் முதலில் கண்டு அறிமுகப்படுத்தியமை மதத்தலைவர்களையும் புரோகிதர்களையுமே சாரும். முதன் முதலாகக் கடவுளுக்குக் கையூட்டுக் கொடுத்து வீடு பெற முயலும் வழியை, புரோகிதர்கள் அறிமுகப்படுத்தினர். இதனைச் சங்க இலக்கியம் "அறவிலை வாணிகம்" என்று கேலி செய்கிறது. என்ன செல்வ, சிரிக்கிறாய்? சிரித்து என்ன செய்வது? இன்றும் நமது சமய வாழ்க்கையில்-திருக்கோயில் நிர்வாக அமைப்பில் வணிக வாடையே மிகுதி. மதப் புரோகிதர்களால், மதத் தலைவர்களால் தொடங்கி வைக்கப் பெற்ற கையூட்டு முறை வளர்ந்து ஆண்டவன் சந்நிதிவரை ஆள்பவர்கள் சந்நிதிவரை வளர்ந்து விட்டது. கையூட்டுமூலம் வளரும் பொருள், - வாழ் வளிக்காது; ஆக்கம்போல் காட்டிக் கேட்டினையே தரும். இனிய செல்வ! தவறான வழியில் பொருளீட்டுதலைத் திருக்குறள், "சலத்தால் பொருள் செய்தல்" என்று கூறுகிறது. இனிய செல்வ, திருக்குறள் இந்த மட்டோடு நிற்கவில்லை. சலத்தால் பொருள் செய்தல் நில்லாது என்பதற்கு, "பச்சை மண்ணால் செய்யப்பெற்ற பானையில் தண்ணீர் சேமித்து வைத்து இருப்பதை" உதாரணமாக எடுத்துக் காட்டுகிறது.

இந்தக் கையூட்டு எப்படிக் கால்கொள்கிறது? இனிய செல்வ, மனித உரிமைகள் மதிக்கப் பெறாமல் அவர்களுடைய உரிமைகள் கூட ஆட்சியாளர்களால் மதத் தலைவர்களால் சலுகை எனக் கருதி வழங்கப்பெறும் காலத்தில்தான் கையூட்டுமுறை நுழைகிறது. சலுகையென்றால் வழங்குவோரின் விருப்பு-வெறுப்புக்கள் காரணமாக வழங்கப்பெறாமலும் போகலாம். அல்லது காலம் தாழ்க்கப் பெறலாம். அதனால் வாய்ப்பிழந்தவர்கள், வாழ்விழந்தவர்கள் எப்படியாவது வாழ்ந்திடவேண்டுமே என்று அஞ்சித் தான் கையூட்டுக்கள் வழங்குகின்றனர். அதுவும் மகிழ்ச்சியோடு கொடுப்பதில்லை. அழுதுகொண்டே கொடுக்கின்றனர். "அழக்கொண்ட எல்லாம் அழப்போம்!” "வேலொடு நின்றான் இடு என்றது போலும்” என்ற திருக்குறள்களையும் அறிக.

இந்தச் சூழ்நிலையில் கையூட்டுக்கள், ஊழல்கள் அற்ற சமுதாய அமைப்பு காணவேண்டுமாயின் அடியிற்கண்டுள்ள நடைமுறைகள் தேவை.

1.நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்களுடைய அடிப்படை உரிமைகள் உத்தரவாதம் செய்யப் பெற வேண்டும். (கல்வி, வேலை வாய்ப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், மருத்துவம் முதலியன).

2.நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் யாதொரு தடையுமின்றி உரிய காலத்தில் கிடைக்கத்தக்க வகையில் அரசு இயந்திரம் இயங்க வேண்டும். 3. அசையாச் சொத்து வாங்குவதைத் தடை செய்ய வேண்டும்.

இந்த நெறிமுறைகளை இன்று யாரும் வரவேற்க மாட்டார்கள். ஏன்? அரசுகூட ஏற்காது! இனிய செல்வ, அடுத்து மீண்டும் எழுதுகின்றோம்.
இன்ப அன்பு
அடிகளார்