குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/தேவரனையர் கயவர்

42. தேவரனையர் கயவர்

இனிய செல்வ,

நமது மரபில் தேவர், தேவலோகம் என்றெல்லாம் பேசக்கேட்டிருக்கிறாய் அல்லவா? அண்மையில் ஒரு கூட்டத்தில் தேவர்கள் வாழும் கோட்டை என்று ஒருவர் பேசினார்! கூட்டத்தில் தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள் பலர் இருந்தார்கள். நாம் தேவர்கள் வாழும் கோட்டையல்ல என்று வாதாடினோம் ஏன்? இனிய செல்வ, தேவர்கள் புராண இலக்கியங்களின்படி கூடப் பாராட்டப்படக் கூடியவர்கள் அல்லர். தேவர்கள், பலரோடு கூடி ஒன்றாக வாழ மாட்டார்கள்! தேவர்களுக்கிடையில் நடந்த சண்டைகள் பற்றிப் புராணங்கள் நிறைய பேசுகின்றன. தேவர்கள் இந்திரன் மனைவி இந்திராணிக்காகக் கூடச் சண்டை போட்டுக் கொள்வார்கள். தேவகோட்டையில், கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பகத்தரு உண்டு; காமதேனு உண்டு. அப்புறமும் ஏன் சண்டை என்றா கேட்கிறாய்? அதுதான் புரியாத புதிர்! தேவர்கள் மற்றவர்களுடன் உயர் பண்புடன் நடந்து கூடிவாழக் கற்றுக்கொண்டவர்கள் அல்லர். மற்றவர்களுடைய அறிவுரைகளும் இவர்களிடையே விலை போகாது. தேவர்கள் தாம் நினைத்தபடியெல்லாம் காரியங்களைச் செய்வர். தேவர்களை அவர்களுடைய விருப்பங்களே ஆட்டிப்படைக்கும். அவர்களிடத்தில் ஆய்வும் இல்லை! மற்றவர் ஆய்ந்து சொல்வதையும் கேட்க மாட்டார்கள். இனிய செல்வ, ஒரோவழி கேட்பர்கள் இல்லை, இல்லை! கேட்பதுபோல ஆசாரம் காட்டுவார்கள். வணங்குவது போல வணங்குவார்கள். அந்த வணக்கம் தீமை வருமோ என்ற அச்சத்தின் பாற்பட்டது. அல்லது தாம் விரும்பியது கிடைக்கும் என்பதற்காகவும் வணங்குவர். தேவர்களை ஆட்டிப்படைக்கும் குணங்கள் இரண்டு. ஒன்று அச்சம்! பிறிதொன்று ஆசை! இவ்விரண்டின் காரணமாகத் தாம் விரும்பியவாறெல்லாம் தேவர்கள் நடப்பார்கள்! கயவர்களும் கீழ்மக்களும்கூடத் தேவர்களைப் போன்றவர்களே! கயவர்களுக்கு - கீழ்மக்களுக்கு நன்மை தெரியாது; நல்லது தெரியாது. நல்லவர்களின் அருமையும் தெரியாது. கயவர்கள் தாம் நினைத்தபடியெல்லாம் நடப்பார்கள். இவர்களுடன் நட்புச் செய்தல் உறவு கொள்ளுதல் இயலாத ஒன்று. இவர்களைப் பயமுறுத்தினால், உதைத்தால் அடங்குவர்; அடங்குவது போல நடிப்பர். இது எல்லாராலும் இயலாத ஒன்று. கயவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றினால் ஒரளவு சரியாக நடப்பர். அதுவும் சில காலத்திற்குத்தான்! ஆசைக்கு அளவேது? இனிய அன்ப, ஆதலால் தேவர்கள் என்னும் வகையினர் ஆரியப்புராணங்களால் உயர்வாகப் பேசப் படுவர்களாயிருப்பினும் தேவர்களும், கயவர்களும் ஒரே நிலையினர். அதாவது தேவர்களும் கயவர்களே! இத்தகைய தேவர்களில் பலர் இன்று பூதேவர்களாக நம்மிடையில் வாழ்கின்றனர். அவர்கள் தாம் விரும்பியவாறெல்லாம் நடக்கின்றனர். நாட்டை நடத்த ஆசைப்படுகின்றனர். நாட்டின் வளர்ச்சி பாதிக்கிறது! இந்த நிலை என்று தணியுமோ! என்ன செய்வது? உறவுதான் ஆழம்படவில்லை!

"தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்”

இன்ப அன்பு

அடிகளார்