குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/நலமுற வாழ்வோம்!
உடல் ஒரு அற்புதமான கருவி. உடம்பில் உயிர் இயங்குகிறது. உடற்கருவி வாய்க்காது போனால் உயிர் இயக்கம் இல்லை. நுகர்வு இல்லை. அறிவு இல்லை. உயிர் வாய்ப்பாக அமையாது போனால் உடல் பயனற்றது. உடல் உயிருடன் இணைந்திருக்கும் பொழுதுதான் பெயர். உடலை விட்டு உயிர் பிரிந்துவிட்டால் பெயர் போய்விடுகிறது. பிணம் என்ற புதுப்பெயர் வருகிறது.
வாழ்வதற்கு இந்த வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும். முழுமையாக வாழ்தல் வேண்டும். உடல்-உயிர் சார்ந்த வாழ்க்கைக்குப் புலன்கள் முதன்மையானவை.
புலன்கள் மூளையின் சார்புடையன. மூளையின் இருப்பு தலை, "எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்" என்பர். உடலுக்கு வாய்த்துள்ள கருவிகள் இரு வகையின. ஒன்று அறிவுக்கருவிகள், இவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியன. பிறிதொன்று செய் கருவிகள். இவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன.
மனம் ஆற்றல் வாய்ந்த கருவி. காற்றைவிட வேகமாகச் செல்லும் தன்மையது. ஆனால், எங்கு, ஏன் போகிறோம் என்று அதற்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசைப் படுவதில்லை. இந்தப் பணியை புத்திதான் செய்கிறது. மனம் பற்றும் செய்திகளை ஆய்வு செய்து எடுத்துக் கொள்வதுதான் புத்தியின் வேலை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர், புத்தி அளவுக்கு வளர்வதில்லை. மனத்தளவிலேயே நின்று விடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப் படுவார்கள்; வாழத் தெரியாதவர்கள்.
சித்தம் சிந்திப்பது. சிந்தனை மனிதரின் சிறந்த அகநிலைத் தொழிற்பாடு! சித்தம் மிக மிக நுண்மையான பகுதியைக்கூட ஆய்வு செய்து, உண்மைகளைக் கண்டு பிடிக்கும்; ஆழமான உண்மைகளைக் கண்டு பிடிக்கும். அகங்காரம் என்பது முடிவு செய்யும் உறுப்பு. எடுக்கப்பெறும் முடிவுகள் மெய், வாய், கண், மூக்கு, செவிகள் வாயிலாகச் செயற்பாடுறும். இது உடலியக்கம்.
உடலியக்கத்திற்கு உடலோடு கூடி வாழ்தலுக்கு இயற்கை, கால எல்லை நியதி செய்திருக்கிறது. மிகப் பெரிய சாதனைகள் செய்யக்கூடிய ஆற்றல் உடையது இந்த வாழ்க்கை. இந்த வாழ்க்கையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மானுட வாழ்க்கையின் காலம், ஆற்றல் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
புத்தி, ஆழமான உண்மைகளைக் காணுதல் வேண்டும். கண்கள் அறிவார்ந்த நெடிய தொலைநோக்குப் பார்வை பெறவேண்டும். கைகள் உழைக்கும் கரங்களாக விளங்க வேண்டும். இந்த உடல் நோய்களால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப் பெற வேண்டும். கதிரொளியில் தோய்தலும், காற்றில் உலாவுதலும் உடலுக்கு நல்லது.
உடல், ஒரு உழைப்புச் சாதனம்-கருவி. இந்த உடலுக்குப் போதிய உழைப்புத் தராது போனாலும் நோய் வரும். உடல், உழைப்பில் ஈடுபடுத்தப் பெறுதல் வேண்டும். உடலுக்கு இசைந்த உழைக்கும் ஆற்றலைத் தரக்கூடிய நல்ல உணவு தேவை. இவையெல்லாவற்றுக்கும் மேலாக நல்ல எண்ணங்கள் வேண்டும். நல்ல எண்ணங்கள் - நல்ல நினைவுகள் இல்லாத வாழ்க்கை நச்சுத்தன்மை அடைந்து விடும்.
மேலும் சிறப்பாக உயிருக்கு உயிராக விளங்கும் கடவுளிடம் பேசி மகிழ வேண்டும். இவையெல்லாம் அமைந்து நலமுற வாழ்தல் அறிவியல் சார்ந்த வாழ்க்கை. வாழ்வாங்கு வாழ்வோம்! வையகத்திற்கு அணியாக வாழ்வோம்!