குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/நல்லன எடுத்துக் கூறி நட்பினைத் தோற்றுவிப்பீர்!

36. நல்லன எடுத்துக் கூறி நட்பினைத் தோற்றுவிப்பீர்!

இயற்கையின் நியதி ஒன்றாக வாழ்தல்; ஒருமை நலத்துடன் வாழ்தல். வேறுபட்டவெல்லாம் ஒன்றுபட்ட நிலையிலேயே உலகம் இயங்குகிறது. உலகியற்கையில் காணப் பெறும் வேறுபாடுகள் ஒருமை நிலைக்கு ஈர்க்கும் ஆற்றலுக்கு இசைந்த வேறுபாடுகளேயாம்.

மானுடம் கூடிவாழப் பிறந்தது. ஆனால் அது கூடி வாழ்ந்த காலம் எது? எங்கே என்ற விவரம் அறியப்புகின் விடை எளிதில் கிடைக்காது. இந்த உலகில் மானுடம் சேர்ந்து வாழ்ந்ததை விடக் கலகப்போர் செய்து கொண்டு அழிந்த செய்திகளே வரலாற்றுப் புத்தக ஏட்டில் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. ஏன் இந்த அவலம்? மொழி, சமயம் பெற்றுங்கூட ஒருமையைக் கட்டிக் காப்பாற்ற முடியவில்லை.

ஒருவரிடம் ஒருவர், இல்லாத ஒருவரைப் பற்றிக் குற்றங் குறைகளைக் கூறுதல், வெறுப்பை வளர்க்கும்; பகைமையை வளர்க்கும்; பிரிவை உண்டாக்கும். "மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாய் திறந்தால் நீ உன் காதைப் பொத்திக்கொள்; கேட்காதே!" என்றார் குவாரல்ஸ்.

”Scandal breeds hatred; hatred begets division"

- Quarales.

ஒருவர் ஒருவருக்குச் செய்யக்கூடிய உதவி என்பது அவர் பலரோடு நட்பாக இருப்பதற்குரிய வாயில்களை அமைத்துத் தருவதேயாம். இருவருக்கிடையில் நட்பை உருவாக்கும் பணிக்கு ஈடான அறம் வேறொன்றும் இல்லை. சிவபெருமான், சேரமான் பெருமாளுக்கும், சுந்தரருக்கும் நட்புண்டாக்கிய வரலாற்றை அறிக. ஒருவருடைய சிறந்த அம்சங்களை எடுத்துக் கூறி அறிமுகப்படுத்தப் பழகுவதற்குரிய வாயில்களை உருவாக்கவேண்டும். நல்ல நட்பைத் தேடிக் கொடுத்துவிட்டால்கூட, திருந்த வேண்டியவர் இயல்பாகவே திருந்திவிடுவர்.

ஆதலால், மகிழ்ச்சி நிறைந்த நட்புறவை உண்டாக்கி வளர்த்தலே அறம். இந்த இனிய அறத்தை அறிந்து செய்ய இயலாதார் குற்றங் குறைகளை எடுத்துக்கூறி நண்பர்களைப் பிரிப்பர்; சமூகத்தில் பிரிவினைகளை உண்டாக்குவர். இத்தகையோர் நம்மை நாடி வந்து வாய் திறந்தால் நமது காதைப் பொத்திக் கொள்வது நல்லது. புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்பவர்கள் வல்லவர்கள், நமக்கு நல்லன செய்வது போலக் கூறுவார்கள்; சாத்திர ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவர். காற்று இடைப்புகாது பழகிய நட்பு உடையாரைக் கூடப் பிரித்து விடுவர். எனவே விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

உலகில் உயர்ந்தது நட்பே! உலகில் உயர்ந்த அறம் ஒன்றி நின்று பழகுதலே! ஒன்றுதலுக்கு ஈடான அறம் இல்லை! இந்த அறம் நிகழ்ந்தாலே சமுதாயத்தில் திருத்தங்களும் கூடத் தோன்றும்; தீமைகள் சாயும்; நன்மைகள் பெருகும்.

ஆதலால், ஒருவரைப்பற்றி நன்றாக மட்டும் பேசக் கற்றுக் கொள்க! ஒருவரைப் பற்றிப் பிறிதொருவரிடம் நல்லன எடுத்துக்கூறி நட்பினைத் தோற்றுவித்து வளர்க்க முயல்வீர்! இதுவே வாழும் வழி!

"பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்வி
நட்பாடல் தேற்றா தவர்”

(187)