குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/நாள் எனும் வாள்!

49. நாள் எனும் வாள்!

ஒன்றின் தொகுதி தரும் உணர்வினை, படிப்பினையைப் பகுதி தருவதில்லை. பகுதிகள் அற்பமாகக் கருதப் பெறுவது இயல்பாக இருக்கிறது. பல பகுதிகள் தொகுதியாகிறது என்ற உண்மையையும்; பகுதி, தொகுதியிலிருந்து பிரிக்கப்படாதது என்பதையும் நம்மனோர் உணர்வதில்லை. ஏன் தொகுதிகளுக்கு மதிப்புயர்கிறது?

கடற்பரப்பின் தண்ணீர் கணக்கற்ற தண்ணீர்த் திவலைகளின் தொகுப்பேயாகும். அக்கடற்பரப்பிலிருந்து ஒரு திவலை பிரியுமானால் அந்தத் திவலை தன் வடிவத்தைதன்னை இழந்து விடுகிறது. அதுபோலத்தான் பகுதிகளுக்கு மதிப்பீடும் மிக மிகக் குறைவு! ஆயுளும் அற்பமே!

மானுடத்தின் விலை மதிக்க முடியாத தொகுதி, வாழ்க்கை. வாழ்க்கை காலத்தினால் ஆயது. வாழ்க்கையென்பது நூறாண்டாகவும் அமையலாம். கூடுதல், குறைவாகவும் அமையலாம். வயது என்பதும் நம்மீது திணிக்கப்படுகிறது. நாம் விரும்பினாலும் சரி. விரும்பாது போனாலும் சரி வயதுகள் வருதலும் வளர்தலும் தவிர்க்க இயலாதது.

ஆனால், வாழ்க்கை என்ற தொகுதிக்குரிய விபத்தாகிய மரணம் வரும்போது எல்லாரும் பயப்படுகின்றனர்; அழுகின்றனர்; புலம்புகின்றனர். சாவிலிருந்து தப்பிக்க முயல்கின்றனர். ஆனால், இந்த வாழ்க்கை என்ற தொகுதியின் பகுதியாகிய ஒரு வினாடி கடந்து செல்லும்போது யாரும் துணுக்குறுவதில்லை; கவலைப்படுவதில்லை. ஏன்? சாவு என்பது ஒருநாளில் வருவதில்லை. நாள்தோறும் சாவு வருகிறது. நொடி தோறும் சாவு வருகிறது. சாவை நோக்கி மெல்ல மெல்ல நகர்கின்றோம்.

ஆனால், இந்த உணர்வு சாகின்றவர்களுக்கும் வருவதில்லை. சுற்றிலும் இருப்போருக்கும் வருவதில்லை. ஒரு மரம் வாளால் அறுக்கப்படுகிறது. நூல் நூலாகத்தான் அறுக்கப்படுகிறது. அதுபோலத்தான் வாழ்நாளும்! இன்று, நாளை என்று நாள்கள் ஒடுகின்றன. நொடி தோறும், வாழும் பொழுது வாழ்நாள் சுருங்குகிறது. ஆக மொத்தத்தில் சாவு வத்துவிடுகிறது.

ஆனால், வாழ்க்கைப் பயணத்தில் நொடிப் பொழுதுகள் எல்லாம் வாழ்க்கைக்குரியவை. ஒவ்வொரு நொடியும் வாழ்வே! ஒவ்வொரு நொடியிலும் சாகின்றோம் எனறு உணர்ந்தால் வாழ்நாள் வீணாகாது. வாழ்நாள் முழுமையும், பயன்படுத்தலாம்; புகழ்பட வாழலாம். ஆனால் சிலரது உள்ளம் நொடிதோறும் சாகும் சாவிற்குக் கவலைப் படுவதில்லை. இஃது ஒரு வினோதமான உளப்போக்கு!

"நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்"

(334)