குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/நுனிமரம் ஏறி அடிமரம் வெட்டற்க

16. நுனிமரம் ஏறி அடிமரம் வெட்டற்க

இனிய செல்வ!

திருக்குறள் தோன்றிய காலம், பலர் கருதுவது போன்று பொற்காலமன்று. திருக்குறள் தோன்றிய காலத்திலும் நமது சமுதாயம் இன்றிருப்பதைப் போலத்தான் தரமிழந்த நிலையில் இருந்திருக்கிறது. தரமிழந்த நிலையில் கிடந்த சமுதாயத்தைத் தரத்திலும் தகுதியிலும் வளர்த்து உயர்த்தவே திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். ஆயினும் என்ன? செல்வ, திருக்குறளைப் பலரும் படித்தனர்; உரைகள் எழுதினர். ஆனால் யார் ஒருவரும் திருக்குறள் நெறியில் வாழ்ந்திட ஆர்வம் காட்டவில்லை. அதனால் திருக்குறள் நெறியில் சமுதாயம் வளரவில்லை. வளராதது மட்டுமல்ல. மேலும் மோசமாகிவிட்டது. நாளுக்கு நாள் நமது நிலை மோசமாகிக்கொண்டிருக்கிறது. இந்த வார்த்தைகளை வழக்கம் போலப் புழுதிப் போரில் புலம்பம் என்று ஏளனம் செய்துவிடவேண்டாம். இது ஒரு அறிவார்ந்த உண்மை.

இனிய செல்வ! இன்று தென் இலங்கையில் தமிழினம் அழிக்கப்படுகிறது! யாரால் அழிக்கப்படுகிறது? செல்வ, உன் வார்த்தை உண்மையல்ல. சிங்களர்களால் அழிக்கப் பெறவில்லை. தமிழர்களாலேயே அழிக்கப் பெறுகிறது. இதற்குத் துணையாக வேறு வழியின்றி இந்திய அமைதிப்படையும் துணை செய்ய வேண்டியதாயிற்று. ஆம். செல்வ! தமிழர் நலம் காக்க-சிங்களர்-தமிழர் நலம் காக்க-இலங்கையின் நலம் காக்க இந்தியாவிலிருந்து அமைதிப்படை சென்றது. இலங்கை அரசு இந்திய அமைதிப்படையை வரவேற்கிறது. சிங்களர்கள் தொடக்கத்தில் எதிர்த்தாலும் இப்போது அமைதியாகி விட்டனர். எதிர்ப்பும் இல்லை. மகிழ்ச்சி வரவேற்பும் இல்லை. முற்றாக வரவேற்பை எதிர்பார்க்க இயலுமா? ஒரு நாட்டில் அயல்நாட்டுப் படை இறங்குவதை எந்தக் குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்? ஆனாலும் மிக உயர்ந்த அரசியல் தந்திர அடிப்படையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் இயற்றப்பெற்று இலங்கையில் மனித வாழ்வின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் உத்தரவாதம் செய்யப்பெற்றது. இது வரவேற்கத்தக்க மகிழ்வான செய்தி. விடுதலைப் புலிகளும் தொடக்கத்தில் விருப்பத்துடன் வரவேற்காது, போனாலும் யாழ்ப்பாணத்தில் ஒரு பகிரங்கப் பொதுக் கூட்டம் நடத்தி உடன்படிக்கையை வரவேற்றார்கள்; ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். ஆனால் நடந்தது என்ன? இனிய செல்வ, விடுதலைப் புலிகளின் நடவடிக்கையில் உண்மையில்லாமல்

தி.20. போய்விட்டது. அதாவது ஆயுதங்களை ஒப்படைப்பது போலக் காட்ட-சில ஆயுதங்களை மட்டும் ஒப்படைத்து விட்டு பெரும்பான்மையான ஆயுதங்களை வைத்துக் கொண்டு விட்டனர். பேரரசுகள் மதித்த ஒரு தலைவர்-சுதந்திரத்திற்காகப் போராடும் தலைவர் இங்ஙணம் செய்யலாமா? இனிய செல்வ, நீயே எண்ணிப்பார்! ஆயுதங்களை முடக்கி வைத்துக் கொண்டது மட்டுமல்ல. தனக்கு உடன்பாடிலாத-தன்னை எதிர்க்கின்றவர்களைக் கொன்று குவிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தினர். இது சரியா? நியாயமா? இதுதான் தமிழ்ச் சாதியின் குணமா? இலங்கைத் தமிழர் என்றால் வேலுப் பிள்ளை பிரபாகரன் தலைமையில் உள்ள விடுதலைப் புலிகள் மட்டும்தானா? பாரதி வாசகத்தில் கேட்டால், "சீனத்தராய் விடுவாரோ?” இதுமட்டுமா, செல்வ! இலங்கையில் இதுவரையில் வாழும் இருவேறு இனங்களாகிய சிங்களருக்கும் தமிழர்க்கும் சண்டை வரவில்லை. வந்தால் தமிழ்ச்சாதி இலங்கையில் வாழாது. இதையெல்லாம் எண்ணிப் பார்க்காது விடுதலைப் புலிகள் சிங்களக் குடும்பங்களைக் கொல்லத் தொடங்கி விட்டனர். என்ன செய்வது! இந்திய அமைதிப்படை வேடிக்கை பார்க்கவா இலங்கைக்குச் சென்றது? இல்லையே! விடுதலைப் புலிகளால் தமிழர்களும்-சிங்களர்களும் கொல்லப்படாமல் தடுக்க முயன்றபோது விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப் படையினருடன் போர்ப் பிரகடனம் செய்து போர் செய்து கொண்டிருக்கிறார்கள். இது நியாயமா? எந்த அடிப்படையில் நியாயம்? சாத்தியமற்ற ஒரு காரியத்திற்காக வலிந்து தற்கொலை செய்து கொள்வதைத் தியாகம் என்று சொல்ல இயலுமா?

விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப் படையுடன் போராடுகிறார்களா? அல்லது அவர்களுக்குப் பின் ஏதாவது அந்நிய சக்தி வேலை செய்கிறதா? இனிய செல்ல, எது எப்படியாயினும் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவர் தலைமையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளும், இந்திய அமைதிப்படையினருடன் போர் செய்வதை வரவேற்க இயலாது. வீரம் இருக்கிறது; விவேகம் இல்லை, என்பதே முடிவாகும். இந்த விடுதலைப் புலிகளை நினைத்துத்தான் போலும் திருவள்ளுவர்,

"நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் துரக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும்”

என்றருளிச் செய்தார். இந்தியா ஒரு வல்லரசு நாடு. இந்தியப் படை வலிமை வாய்ந்த படை. இந்தப் படையை எதிர்த்துப் போராடுவது சாத்தியமல்ல என்பதை விடுதலைப் புலிகள் உணராதது தவக்குறைவே. இனிய செல்வ, இன்று என்ன செய்யவேண்டும்?

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நான நன்னயம் செய்து விடல்"

என்ற குறள் நெறிப்படி உடனடியாக இந்திய அமைதிப்படை போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பைத் தரவேண்டும். இலங்கை அரசும் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு தமிழர்களை இலங்கை குடிமக்களாக ஏற்று அனைத்து அரசியல் உரிமைகளையும் வழங்கி வாழ்வளிக்க வேண்டும். இனிய செல்வ, இவை நடக்க வேண்டும்! நடந்தேயாக வேண்டும்! இதுவே நமது பிரார்த்தனை!
இன்ப அன்பு
அடிகளார்