குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/பிறர்க்கென வாழ்தல் பெருவாழ்வு

23. பிறர்க்கென வாழ்தல் பெருவாழ்வு

இனிய செல்வ,

மாந்தர் வாழ்வதற்கே பிறந்தனர். ஆனால், வாழ்ந்தால் மட்டும் போதுமா? வாழ்க்கையின் குறிக்கோளை அடைய வேண்டாமா? அதாவது பயனடைய வேண்டாமா? இன்றைய மனிதன் தனியே உழைத்து வாழ்ந்திடவில்லை! இன்றைய மனிதன் சமூக உழைப்பில் வாழ்கிறான். இன்று சமுதாயம் அடைந்துள்ள பெரியதொரு வளர்ச்சி, மாந்தர்களுடைய உழைப்பு, சமூக உழைப்பாக - அதாவது சமூகத்திற்குப் பயன்படக்கூடிய உழைப்பாக வளர்ந்து விட்டது. இந்த வளர்ச்சி அறிவார்ந்த நிலையில் ஏற்பட்டதா? அல்லது உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களின் வழி ஏற்பட்டதா? இனிய செல்வ, நீ கேட்டது நல்ல கேள்வி! நமது நாட்டைப் பொறுத்தவரையில் வரலாற்றுப் போக்கில் அடைந்த வளர்ச்சியேயாம்! இந்தச் சூழ்நிலையில் தனி மனிதர்கள் அல்லது வாயுள்ள சிலர் கூடித் தங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ள நினைப்பது, தங்களுக்கு மட்டும் தீர்வு காணும் வகையில் சிந்திப்பது ஆகியன இன்று நடைபெற்று வரும் தீய பழக்கங்கள்!

இன்று மனிதர்களில் பலர் வாழக் கூட ஆசைப்படவில்லை; பிழைப்பு நடத்த விரும்புகின்றனர். பிழைப்பு என்பது என்ன? அறிவு வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவ தில்லை; அன்பு நெறியில் வாழத் தலைப்படுவதில்லை! ஊக்கமில்லாத நசிவு வாழ்க்கை! சமூக ஆர்வம், சமூகச் சிந்தனை, சமூக உழைப்பு ஆகியன இல்லை! மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை! இத்தகையோர் கற்றறிவு இல்லாதவர்களிடத்தில் இருந்தால் கூட மன்னிக்கலாம். படித்தவர்களிடத்திலே கூட இன்று நன்றாக இல்லை. இவர்களைப் பற்றி, பாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது. "படித்தவன் சூது’ என்றான் பாரதி.

வாழும் மாந்தரை மூன்று பிரிவினராகப் பிரித்தார் திருவள்ளுவர். முதல் வகையினர் சுயநலத்திலே நாட்டமுடைய அணியினர். அவர்கள் தமது பிழைப்பைப் பற்றியே கவலைப்படுவர், ஆதாயங் கருதியே செயற்படுவர். இவர்கள் ஊருணி போன்றவர்கள் என்றார். ஊருணி, ஊருக்குக் கொடுப்பது போலத் தோன்றும். ஊருணி ஊருக்குத் தண்ணீர் கொடுப்பதும் உண்மை; ஆனால் ஊருணி ஏன் ஊரார் உண்ணத் தண்ணீர் கொடுக்கிறது? தனது ஊற்று வளத்தை, தூய்மையை, ஊருணி என்ற தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ளும் சுயநலத்துடன் கொடுக்கிறது. கொடுப்பதுகூட இல்லை! மக்களே எடுத்துக் கொள்வதாகும். ஊருணி பயன்படாது போனால் குட்டையாகிவிடும். காலப் போக்கில் ஊருணி பயன்படாத நிலையினதாகித் தூர்க்கப் பெறும். ஆதலால் ஊருணியின் நிலை தற்காப்புத்தான்.

அடுத்த வகையினருக்குத் தற்காப்பு உணர்வு உண்டு. ஆயினும் விருப்பு - வெறுப்பின்றி எல்லோருக்கும் பயன்படுவர். முதலாளித்துவ சமுதாயத்தின், நிலப் பிரபுத்துவ சமுதாயத்தின் நன்றியை விரும்பாத இவர்கள் பயன் மரம் போல் வாழ்பவர்கள்; வளர்ந்தவர்கள்; ஆயினும் முழுமையில்லை.

மூன்றாவது அணியினர் பிறருக்காகவே வாழ்வர். பிறருக்கு வழங்குவதற்காகவே பொருள் ஈட்டுவர். ஈட்டிய பொருளை வழங்குவர். மற்றவர்களுக்காகத் துன்புறுவர். மற்றவர்கள் துன்ப நீக்கமே இவர் தம் வாழ்வு. இனிய செல்வ, இவர்கள் மருந்து மரம் அனையர்.

ஊருணி, மாந்தரிடத்திலிருந்து யாதும் பெறாமல் உண்ணும் நீர் வழங்குகிறது. ஆயினும் தற்காப்பு நிலை. பயன் மரம், சமுதாயத்தினிடமிருந்து கொஞ்சம் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் பல மடங்கு மதிப்புள்ள கனிகளைத் திருப்பித் தருகிறது. மருந்துமரம் சமுதாயத்தினிடத்தில் மிகமிகக் குறைவாகப் பெற்றுக் கொண்டு தாம் பெற்றுக் கொண்டதை விடப் பலமடங்கு சமுதாயத்திற்குத் திருப்பித் தருகிறது. ஏன்? தன்னையே கூட அழித்துக் கொள்கிறது. இவை வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நிலை.

இன்றைய மனிதரோ, சமுதாயத்தின் ஒருங்கிணைந்த ஆக்கத்தை விரும்புவதில்லை; அதற்காக உழைப்பதில்லை! சமுதாயத்தின் நன்மையை நாடாமல் சமுதாயத்திற்கு மாறாக - எதிரான ஒன்றையே நாடுகின்றனர். சமுதாயத்தினிடத்திலிருந்து நிறையப் பெற விரும்புகின்றனர். தங்களுடைய ஆதாயத்திற்காகவே சமுதாயம் என்ற அமைப்பு இருப்பதாகக் கருதுகின்றனர். ஊதிய நிலையில் நாடு தழுவிய ஒரே ஊதியம் கேட்பர்! நாடு தழுவிய ஒரு மொழி விரும்பி ஏற்கமாட்டார்கள்; நாடு தழுவிய ஒரு நெறி ஏற்கமாட்டார்கள். எல்லாருக்கும் நன்மை விளையக் கூடிய வகையில் போராட்டங்கள் கூடப் பொதுமையாக அமைவதில்லை. இது இன்றைய போக்கு!

இனிய செல்வ, குறள்களைப் படித்துப்பார்!

"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகலாம்
பேரறி வாளன் திரு”

"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தாற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்"

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்”.

இன்ப அன்பு
அடிகளார்