குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/பொதுத்துறை பேணுக!
இனிய செல்வ;
உனக்கு வேதனை தரக்கூடிய செய்தி ஒன்றினை எழுத நேரிட்டிருக்கிறது. வருத்தப்படாதே! செயல் செய்யத் துணிந்து நில்! வறுமையை எதிர்த்துப் போராடும் களமாக வாழ்க்கையை ஆக்குக!
இனிய செல்வ,
மானுடம் உய்வதற்காக அளிக்கப் பெற்ற இந்தப் பரந்த உலகில் ஒவ்வொரு நிமிடத்திலும் 24 பேர் பட்டினியால் உணவின்றிச் செத்து மடிகின்றனர். உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் உண்டும் - உண்ணாமலும் பசியால் வாடுகின்றனர். இனிய செல்வ, எப்படி இருக்கிறது நமது உலகம், பார்த்தாயா? சற்றுப் பொறு! நமது நாட்டைப் பற்றியும் தெரிந்துகொள். நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் 27.1 கோடி மக்கள் வாழ்கின்றனர். இந்தத் தகவல் நமது நாடாளுமன்றத்தில் திட்ட அமைச்சரால் தரப்பெற்ற செய்தி (indian Express-25.3.88). வறுமைக்கோடு என்றால் என்ன என்று கேட்கிறாயா? உயிர்வாழ்வதற்குரிய உணவு கிடைக்காதது வறுமைக் கோடு. இனிய செல்வ, இந்தியாவில் வாழ்பவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒருபகுதி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள். என்ன மனச் சங்கடப்படுகிறாயா? ஆம்! நீ சொல்வதிலும் ஒருவகையில் உண்மை இருக்கவே செய்கிறது.
விஞ்ஞானம் வளர்கிறது! தொழிற்புரட்சி வளர்ந்து வந்துள்ளது. கோயில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெறுகின்றன. கோயில் திருவிழாக்களுடன் போட்டி போடும் வகையில் அரசியல் ஆரவார விழாக்கள்! இவ்வளவுக்கும் மத்தியில் வறுமை வளர்கிறது. இனிய செல்வ, இன்னும் ஒரு வேடிக்கை கேள்! சிரிக்க முடிந்தால் சிரிப்பாயாக! நமது நாட்டில் தனிநபரின் சராசரி வருமானம் ரூ. 56, 64 ஆம்! மாட்சிமைமிக்க இந்தியக் குடிமகன் உடல் தேய உழைத்து ஈட்டும் சராசரி வருமானம் மாதம் ரூ 56, 64 இனிய செல்வ, இதிலும் ஒரு வேடிக்கை! இல்லை விநோதம்! இந்தச் சராசரி வருமானக் கணக்கில் பலநூறு கோடி ஈட்டுகின்ற முதலாளிகளின் வருவாயும் சேர்ந்திருக்கிறது என்பதை மறந்து விடாதே! இந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்தால் நாம் இருப்பது நாடா? அல்லது வேட்டைக்காரர்கள் வாழும் காடா? என்று கேட்கத் தோன்றுகிறது!
நமது திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வறுமையைத் திட்டுகிறார். வறுமையைப் "பாவி' என்று திட்டுகிறார்.
"இன்மை யெனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்”
என்பது திருக்குறள். ஆம்! இனிய செல்வ, மதத் தலைவர்கள், மதப்புரோகிதர்கள், எல்லோரும் சேர்ந்து செத்தபிறகு சிவலோகம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அந்தச் சிவலோகம்-வைகுந்தம் கூட வறுமையாளருக்குக் கிடைக்காதாம். ஆம்! வறுமையால் மனித மதிப்பீட்டுக்குரிய இனிய பண்புகள் எல்லாம் இழக்கப்படும். அப்புறம் எப்படி வீடுபேறு கிடைக்கும்? சிவலோகம் வேண்டாம். வைகுந்தமும் வேண்டாம். வாழ்ந்தால் போதும், என்றால் "சீச்சி! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு, என்று பாரதி பேசினானே! அந்த ஏச்சுக்கு ஆளாகி விடுவர். ஆக, வறுமையுடையவர்கள் இந்த உலகத்திலேயும் வாழ இயலாது! இனிய செல்வ, நாட்டின் நடப்பைப் பார்த்தாயா? என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறாயா? திருவள்ளுவர் இதற்கும் வழி சொல்கிறார். எந்த ஒரு மனிதனும் சுரண்டப் படுதல் கூடாது. நாட்டில் கூட்டுறவுத்துறையும் பொத்துறையும் வளர வேண்டும். புதிய சொத்துரிமைகள் தோன்றாதபடி கண் காணிக்க வேண்டும். "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்"
என்ற திருக்குறள் நெறியில் அரசுகள், முறை கேடான செல்வத் தொகுப்பாளர்கள் தோன்றாவண்ணம் கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும். வாணிகம் நாட்டுடைமையாக்கப் பெறுதல் வேண்டும்; வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் வேண்டும். சில ஆண்டுகளுக்கு ஆடம்பரமான - ஆரவாரமான விழாக்கள் அடியோடு நிறுத்தப் பெறுதல் வேண்டும். இப்போது, இந்த நூற்றாண்டில் நாம் அனைவரும் வறுமையை எதிர்த்துப் போராடி வெற்றிபெறத் தவறிவிட்டால் வரலாறு பழி தூற்றும். ஆதலால், இனிய செல்வ! உடன் வறுமையை எதிர்த்துப் போராட முயற்சி செய்வோமாக!இன்ப அன்பு
அடிகளார்