குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/பொறுமை ஆக்கம் தரும்!
நிலம் கொத்துதல், உழுதல், தோண்டுதல் ஆகிய செயல்களின் வழி, துன்புறுத்தப்படுவது, உலகில் மாந்தர் வாழ்வியலுக்குரிய செயற்பாடு. ஆனால், நிலம் கொத்தப் பட்டும், வெட்டப்பட்டும் துன்புறுத்தப் படுவதனால்தான் நிலம், நிலத்தின் தன்மையை இழக்காமல் பாதுகாத்துக் கொள்கிறது.
கொத்தி உழப்பெறாத நிலம் மண் அரிப்பு நோய்க்கு இரையாகும். அது மட்டுமின்றி நிலம் உழப்பெற்றாலே வான் மழையின் நீரை-வாங்கித் தன் மடியில் வைத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது; பசுமைப் புரட்சி செய்யும் ஆற்றலைப் பெறுகிறது.
உலகுயிர்க்கெல்லாம் உணவு அளித்துக் காப்பாற்றும் வேள்வியை நிலம் செய்ய முடிகிறது. நிலம் தன்னை அகழ்ந்து தரும் துன்பத்தினையே தனக்கு ஆக்கமாக மாற்றிக் கொள்கிறது; உழுவாரையும் வாழ்விக்கிறது. நிலத்தின் பொறுமை, ஆக்கமாகிறது; உயிர்க் குலத்தின் வாழ்வாகிறது.
மனிதனும் பொறுத்தாற்றும் பண்பு காத்தல் வேண்டும் பொறுத்தாற்றுவோரை, அறியாதார் கோழை என்று ஏளனம் செய்வர். அதனால் என்ன? தீமை வராது; நன்மையே பெருகி வளரும்! கூளம் குப்பைதான் தீக்கு ஆக்கம் - தீமையுடையார் தான் தீமைக்கு ஆக்கம். பொறை யுடையோர் முன் தீமை அழியும். நம்மில் வலியோர் தூற்றினால் பொறுத்துக் கொள்வது போலவே நம்மில் கீழோர் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வதே உண்மையான பொறையுடைமை; பொறுத்தாற்றும் பண்பு.
பிரார்த்தனைக்கு ஈடானது பொறுத்தாற்றும் பண்பு. எல்லை கடந்த நிலையில் நமக்குப் பிறர் இன்னாதன செய்யும் பொழுது காட்டப்படுவதே பொறுத்தாற்றும் பண்பு - ஏன்? பொறுத்தாற்றும் நெறியின் வழி, விதியைக் கூட வெல்லலாம். தீமைக்கும் தீவினைக்கும் வாயில் சினமே!
சினம் தவிர்த்துப் பொறுமை மேற்கொண்டொழுகின் தீயவினையையும் அதாவது போகூழையும் ஆகூழாக மாற்றலாம். பொறுத்தாற்றும் பண்பு வெற்றிகளைத் தரும். நிலத்தினைப் பார்ப்போம். நிலத்தின் பொறுத்தாற்றும் பண்பை நமது அணியாக ஏற்போம்! நமக்கு இன்னாதன செய்வோரையும் ஏற்போம்! வாழ்விப்போம்!
"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை."
(151)