குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/மார்க்சியம் தோற்றுவிட்டதா?

57. மார்க்சியம் தோற்றுவிட்டதா?

இனிய செல்வ,

சோவியத் நாட்டில் கவலை தரத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆம்! கொர்பசேவின் மறுசீரமைப்புக் கொள்கைக்குச் சோதனை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமா? மனித குலத்தின் சிக்கல்களுக்குத் தீர்வுகாண வழிகாட்டும் மார்க்சியத்துக்கும் சோதனை ஏற்பட்டுள்ளது. இனிய செல்வ, இவையெல்லாவற்றையும் நாம் வியப்புடனோ அல்லது வருத்தத்துடனோ பார்க்கவில்லை! மனித குலத்தின் கடந்தகால வரலாற்றை நோக்கின் இது வரலாற்றின் நிகழ்வு தான்! அதிசயம் ஒன்றும் இல்லை! என்று எண்ணுகிறோம்.

ஆம்! மனிதகுலம் எப்போதும் ஒன்று பட்டதில்லை; ஓரணியாக நின்றதில்லை! மனிதன் குழு மனப்பான்மையுடையவன். எப்பொழுதும் ஓரமைப்பில் உள்ளவர்கள் கூட ஒன்றாக இருக்கமாட்டார்கள். ஏன்? "புகழ் வேட்டை”யே காரணம். குழுச் சண்டைகளில் ஈடுபடுவோருக்குச் செல்வாக்கு அதிகம். வரவேற்பு இருக்கும். இரத்த வேட்கையுடைய கழுகு சும்மா இருக்காது அல்லவா? இனிய செல்வ, கூடிச் சிந்தனை செய்தல், தனிக்கருத்துக்கு மதிப்பளித்தல், கலந்து பேசுதல், கருத்துப் பரிமாற்றம் செய்தல், தெளிந்த நிலையில் ஒரு முடிவுக்கு வருதல், அந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ளல் என்பன சமூக வாழ்வியலின் நீதி! இந்த நீதிக்கு இன்று யார் உடன்படுவர்? உள்ளம் செத்தால் என்ன? உண்மை ஒளிந்து கொண்டால் என்ன? "தான்" ஒரு விளம்பரப்பொருளாக வேண்டாமா? தன்னுடைய தகுதியின்மையை-நிறையின்மையை வெளிச்சம் போட்டு மறைக்க வேண்டாமா? ஆதலால். ஒன்று சேர மாட்டார்கள்! உட்கார்ந்து பேசி உறவை வளர்க்க மாட்டார்கள்! இது மாந்தரின் இயல்பு!

இனிய செல்வ, அதனால் சோவியத் ஒன்றியம் உடைகிறது! ஏன்? “தனிமனித வேட்டைக்காரர்கள் தோன்றி விட்டனர். மறந்தும் சிந்தனைத் தெளிவில் ஒன்றாகி விடக்கூடாது என்பதற்காகப் பகைமையை வளர்த்துக் கொள்வார். இனிய செல்வ, மக்கள் பல குழுக்களாக உள்ளனர். அந்தப் பல குழுக்களிடையே உட்பகை, ஒருவருக்கொருவர் அடுதலும் படுதலும் நிகழ்வதால் அரசியல் நடைபெறுவதில்லை; ஆட்சி நடைபெறுவதில்லை.

இன்று இந்த நிலை!

எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வாழ்வியலை மார்க்சியத்தைக் கண்டு வாழ்ந்த நாடு - சர்வதேசீயத்தை எல்லையாக உடைய ஒரு நாடு, இன்று சிறுசிறு மாநிலங்களாகச் சிதறுகிறது. ஏன்? இனிய செல்வ, இதனால் மார்க்சியம் வாழ்வியலுக்கு ஒவ்வாதது என்று கொக்கரிக்கின்றனர் சிலர். இனிய செல்வ, மார்க்சியம் வரலாற்றுப்போக்கில் வெற்றி பெற்றே தீரும். வடிவங்கள் மாறுபடலாம்; உள்ளீடு மாறாது. இன்று சோவியத்தில் நடப்பது என்ன? சோவியத்தில் மனிதப் போராட்டங்கள் நடக்கின்றன. சித்தாந்தப் போராட்டம் நடக்கவில்லை. கோர்ப்பசேவின் மறு சீரமைப்பு மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பெற்றது உண்மை. ஆனால், பூரணமாக விவாதிக்கப் படவில்லை. இன்று உலகந் தழீஇய நிலையில் "தலைமை வழிபாடு” நடைபெறுகிறது. ஆதலால் கருத்தைச் சொல்லத் தயக்கம்! இந்தத் தயக்கம் சோவியத் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தது. மனிதர்கள் மாறினார்கள். ஆனால், கொள்கைகள் மாறவில்லை. அல்லது ஏற்றுக் கொள்ளப்படவும் இல்லை! இந்தத் ‘தனிமனி’தப் பிறவிகளின் அட்டகாசம் இன்று எங்கும் இருக்கிறது. அது சோவியத்திலும் இருக்கிறது. ஆயினும், ‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம்-மறுபடியும் வெல்லும்’ என்று காத்திருப்போமாக!

சோவியத்தில் நடந்த ஒரு பெரிய தவறு என்ன? பொதுவுடைமை அரசாங்கம் ஆதலால் "பொதுவுடைமை விதிகளில் உழைக்க வேண்டாம்" என்ற ஒரு சித்தாந்தம் தலைதூக்கியது. இந்தத் தவற்றை, சோஷலிசப் பொன் விழாவின்போதே அன்றைய தலைவர் பிரஷ்னேவ் கூறியிருந்தார். உரிமைகள், உழைப்புக்கு ஊற்றுக்கண்ணாக அமைய வேண்டுமேயல்லாது உரிமை உழைப்புக்குத் தடையாக அமைவது பொருந்தாது; கொஞ்சமும் பொருந்தாது. ஆளும் கட்சியினர் என்ற அடிப்படையில் ஏதாவது உரிமை இருக்குமானால் அது உழைப்பதேயாகும். இதனை, சோவியத் மக்கள் மறந்தனர். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். நமது நிலையில் இன்று புத்திக்கொள்முதல் செய்யாவிடில் எதிர்காலம் நம்முடையதல்ல.

இன்ப அன்பு

அடிகளார்