குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வன்முறை தவிர்ப்போம்!

66. வன்முறை தவிர்ப்போம்!

இனிய செல்வ,

அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் நாடெங்கும் அமைதியாக நடத்தப்பெற்றது. அது மட்டுமல்ல, அமரர் ராஜீவின் உயிரைக் குடித்த வன்முறையை எதிர்த்தும் வன்முறை எதிர்ப்புணர்வு காட்டப்பெற்றது. வன்முறையை எதிர்த்து நாடெங்கும் உறுதி மொழியும் எடுத்துக் கொள்ளப்பெற்றது. இனிய செல்வ, எது வன்முறை? வெட்டுதலும் சுடுதலும், கொலை செய்தலும் மட்டுமல்ல வன்முறை. சிந்தனையிலும் சொல்லிலும், ஒருவரைப் புண்படுத்துவது கூட வன்முறையே என்று அண்ணல் காந்தியடிகள் கூறினார்.

இனிய செல்வ, வன்முறையும் ஜனநாயகமும் நம்முள் முரணானவை! நல்ல பண்பட்ட ஜனநாயக ஆட்சிமுறையை - மக்களாட்சி முறையைப் பின்பற்றுபவர்கள், ஒழுக்கமாகக் கொண்டவர்கள் ஒருபொழுதும் வன்முறையாளர்களாக இருக்க மாட்டார்கள்! ‘வன்முறை’யை அங்கீகரிக்கமாட்டார்கள்!

இனிய செல்வ,

"செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்பு"டை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு"

"இணர் எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று”

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்றுள்ளக் கெடும்!”

என்ற திருக்குறளைச் சிந்தனை செய்க! இனிய செல்வ, இந்த திருக்குறள்கள் வன்முறைக்கு எதிரானவை!

மக்களாட்சி வாழ்க்கை முறையில் கருத்துப் பரிமாற்றம் தான் முதன்மையான செயற்பாடு! கருத்துப் பரிமாற்றம் முறையாக நடைபெறத் தொடர்ந்து கலந்து பேசுதல், விவாதித்தல் ஆகியன நிகழ்ந்து தெளிவுண்டாகும் நிலையில் ஒரு கருத்து உருவாக வேண்டும். அங்ஙனம் ஒரு கருத்து உருவாகாது போனால் தொடர்ந்து, உள் நோக்கமும் பகைமை உணர்வுமின்றி விவாதம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். கருத்துப் பரிமாற்றத்திற்குரியத் தற்சார்பும் தன் முனைப்பும் இன்றி, மற்றவர் கருத்து சரியெனப்பட்டால் உடன்படுதல் வேண்டும். இந்த நிலையில் தான் கருத்துப் பரிமாற்றம் வெற்றி பெறுகிறது. ஜனநாயக வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்தில் பங்கேற்போர் ஒரு கருத்துக்குரியவர்கள் யார் என்று காணல் ஆகாது, கூடாது. கருத்துள் உள்ள நல்ல கூறுகளையே எண்ணுதல் வேண்டும். பூனையைப் பார்த்தால் புனுகின் மணத்தை அனுபவிக்க இயலுமா? புனுகுதான் அனுபவத்திற்குரியது. ஒன்றுக்கும் ஆகாத நத்தைச் சிப்பியில்தான் முத்து தோன்றுகிறது. முத்தையே முதலாகக் கொள்க! இதனைத் திருவள்ளுவர்,

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்று கூறி விளக்குகிறார்! இந்தக் குறள் ஜனநாயக வாழ்க்கையின் அடிப்படையாகும். ஜனநாயக வாழ்க்கையில் சொல்பவர் யார் என்பது முக்கியமல்ல. சொல்லப்படும் கருத்துக்களே கவனத்திற்குரியன, கருதுதற்குரியன.

கருத்துலகில் தாக்குப்பிடித்து நிற்க இயலாதவர்கள் பிடிவாதம் கொள்வர். மாற்றுக் கருத்துக் கூறுவோர்களைப் பகைவர்களாகக் கருதுவர். இதனில் சிந்தனை உலகத்தில் - கருத்துலகத்தில் தேக்கம்! வளர்ச்சி இல்லை.

இன்று நமது பாராளுமன்றம், சட்டமன்றங்களில் கூட ஜனநாயக மரபுகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. இந்த வளாகங்களிலேயே வன்முறைகள் இடம்பெறத் தொடங்கிவிட்டன. இது வருந்தத் தக்கது! நாடு முழுதும் இலட்சிய நோக்குடைய வாழ்க்கையோடு தொடர்பில்லாத நிலையில் அரசியல் போனநிலையில் இன்று நாம் வாழ்கின்றோம். எங்கும் வன்முறை பெருவழக்காகிவிட்டது. இந்த நிலை எங்கும் மாற வேண்டும். அறமல்லாதவற்றை அகற்றவும் கூட அன்பே கருவி! இதுவே திருக்குறள் நெறி!

"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை"

இனிய செல்வ, வன்முறையைத் தவிர்ப்போம்! மனித குலத்தைக் காப்போம்.

இந்தியாவில் - சிற்றூர் முதல் பேரூர் வரையிலும் வன்முறைக் கலாசாரம் நாளும் பெருகி வளர்கிறது. பொது வாழ்க்கையின் தரம் குறைகிறது, நல்லவர்கள் அப்பாவிகளாகின்றனர். இது தான் இன்றைய இந்தியா? உலகம் என்ன வாழ்கிறது? சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இனக்கலவரம். இனக்கலவரத்திற்குரிய அடிப்படையை ஆராயும்பொழுது மனித குலம் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது. "நீதி” நீதியாக இல்லாமல்-இனம் கருதி சாய்ந்து கொடுக்கிறது. இது நியாயமா, சாதி, இனம், கட்சி? மதம் என்ற பிடிப்புகளிலிருந்து நீதி - சமூக நீதி மீட்கப்பட்டால்தான் உயிர்க் குலத்திற்கு நன்மை உண்டு. பாதுகாப்பு உண்டு. வாழ்க்கையில் நடுவு நிலைமைப் பண்பு கடைப்பிடியாக ஒழுக்கமாக இடம் பெற வேண்டும். இனிய செல்வ! திருவள்ளுவர் நடுவுநிலைமை என்று ஓர் அதிகாரமும் எடுத்துக் கூறினார். இனிய செல்வ! ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் கூடி உலகியல் நடத்த வேண்டும். எங்கும் எந்தச் சூழ்நிலையிலும் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். மற்றவை அடுத்த கடிதத்தில்.

இன்ப அன்பு

அடிகளார்