குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வரலாற்றுப் போக்கில் வள்ளுவம்

2
மண்ணும் விண்ணும்

1. வரலாற்றுப் போக்கில் வள்ளுவம்

இன்றையச் சமுதாய அமைப்பைப் பொறுத்த வரையிலே ‘வரலாற்றுப் போக்கில் வள்ளுவர்’ என்ன கருதுகிறார். நீண்ட நெடுங்காலமாக இந்த நாட்டில் உள்ள பல்வேறு சமயத்தினரும், இங்குள்ள எல்லா அரசியல் தரப்பினரும், பல்வேறு கொள்கைகளையும் தத்துவங்களையும் கொண்டவர்களும் ஏற்றுப் போற்றும் ஒரு பொது நூலாகத் திருக்குறள் திகழ்ந்தாலும் அது எல்லோருக்கும் வழக்கறிஞராக விளங்க முடியுமா? என்பதுதான் ஒரு பெரிய கேள்வி.

தூற்றுகிறவனும் திருக்குறளை ஏற்றுக் கொள்ளுகிறான்-போற்றுகிறவனும் திருக்குறளை ஏற்றுக்கொள்ளுகிறான். சமுதாயத்திற்கு நலன் செய்கிறவனும் திருக்குறளை ஏற்றுக் கொள்ளுகிறான்-தீமை செய்கிறவனும் திருக்குறளை ஏற்றுக் கொள்ளுகிறான் என்று சொன்னால், இருதரப்பினருக்குமே திருவள்ளுவர் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளுகிறார் என்று கூறிவிட முடியுமா? ஒருபோதும் சொல்ல முடியாது.

மனித சமுதாயத்தில் ஏதோ ஒரு தவறு நடந்து கொண்டிருக்கிறது. எங்கோ ஒரு மூலையில்-சிந்தனையில் தொடர்ந்து தவறு நடந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளுகிற பலவீனமான மனோபாவம் பலரிடம் அமைந்திருக்கிறது. அத்தகையவர்கள் மிகச்சிறந்த நூலாக-மக்கட் குலத்தை வாழ்வாங்கு வாழவைக்கும் மறையாக விளங்கும் திருக்குறளைத் தங்கட்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முயல்கிறார்கள் - மாற்றிக் கொள்ளுகிறார்கள். அது நீதியுமாகாது-நேர்மையு மாகாது என்று காட்டுவது நமது பொறுப்பும் கடமையுமாகும்.

வரலாற்றுப் போக்கில் வள்ளுவம் என்று நாம் சொல்லுகின்றபோது, நிறையக் கருத்துக்களைக் கூற முடியும். ஒரு கவிஞன் அல்லது ஒரு புலவன், அல்லது ஒர் எழுத்தாளன் சிந்தித்து ஒரு சிந்தனையைப் படைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது என்பதை நாம் முதலில் ஆராய வேண்டும். வெறும் புலமையினாலே மட்டும் ஓர் இலக்கியம் தோன்றினால் அதை வியந்து போற்ற முடியாது. வெறும் பக்தியினாலே-பாசத்தினாலே ஓர் இலக்கியம் தோன்றினாலும் அதை வியந்து பாராட்ட முடியாது. கவிதை படைக்கும் ஆற்றலினால் மட்டும் ஓர் இலக்கியம் தோன்றுமானால் அதையும் நாம் கையேந்தி வரவேற்க முடியாது. அந்தப் புலவன்-பக்தன்-கவிஞன்-எழுத்தாளன் வாழ்ந்த காலச் சமுதாயத்தில் நடை முறைகளை ஆழமாக-தெளிவாகப் புரிந்துகொண்டு அந்தச் சமுதாயத்திலே-நடைமுறையில் இருந்த தவறுகளை குறைகளை எண்ணிப்பார்த்து அந்தத் தவறுகளை மாற்றி குறைகளைக் குறைத்து நிறையுடைய செழுமையை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்குப் பயன்படும் அவன் பயன்படுத்தும் சாதனமே இலக்கியம் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.

நடைமுறையில் இருப்பதை எடுத்துக் காட்டுவதினால் மட்டும் இலக்கியம் சிறந்துவிடாது. கண்முன்னே காண்பனவற்றைக் கோவையாக எடுத்து விளக்குவது நிறைவான இலக்கியமன்று. வெறும்பொழுது போக்கிற்காகப் புல்லிய உணர்ச்சிகளையும்-ஆசாபாசங்களையும் வளர்ப் பதற்காகப் படைக்கப் பெறுவனவற்றை இலக்கியங்களாக ஏற்றுக் கொள்வதற்கில்லை. தான் வாழும் தலைமுறையில், மனித சமுதாயம் எந்த முறையில் வாழ்கிறது-அந்தச் சமுதாயத்தின் உணர்ச்சிகளும் போக்குகளும் எப்படி இருக்கின்றன? அவற்றில் உள்ள குறை என்ன? நிறை என்ன? என்பனவற்றை யெல்லாம் தெளிவாகப் புரிந்துகொண்டு இலக்கியங்களைப் படைப்பவனே இலக்கிய கர்த்தா-எழுத்தாளன்-கவிஞன். அவன் அவற்றைப் புரிந்து கொள்வது மட்டும் போதாது-அவ்வாறு சிந்தித்து உணர்ந்ததை-புரிந்து கொண்டதை மனித உலகமே கூடி எதிர்த்தாலும் குறையைச் சுட்டிக்காட்டி குறை நீங்கி மனித சமுதாயம் நிறைவை நோக்கி நடைபோடுவதற்கான வழிமுறைகளை அஞ்சாமல் எடுத்துக் காட்டுபவனே சிறந்த கவிஞன்-சிறந்த இலக்கியப் படைப்பாளன். இவற்றை நினைவில் வைத்துக்கொண்டு வரலாற்றுப் போக்கில் வள்ளுவம் என்கிறபோது, திருவள்ளுவர் வாழ்ந்த காலம்-அவருக்கு முன்னர் வாழ்ந்த மூத்த தலைமுறை-அன்றையச் சமுதாயம் எப்படியிருந்தது என்ற பின்னணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் திருக்குறளை-வள்ளுவத்தை ஓர் உயர்ந்த ஒழுக்க நூலாகமட்டும் பார்க்க வில்லை. திருவள்ளுவர் தான் வாழ்ந்த காலத்துச் சமுதாய அமைப்பையும், தனக்கு முந்திய காலத்துச் சமுதாய அமைப்பையும், அந்தச் சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு களையும், மேடுபள்ளங்களையும் நன்றாகப் புரிந்துகொண்டு, தாழ்வுகளை நீக்கி ஏற்றங்காணவும், பள்ளங்களை நிரப்பி மேடுகளாக்கவும் திட்டமிட்டுத்தான் திருக்குறளைச் செய்தார். இதிலே நான் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். வள்ளுவர் வாழ்ந்த காலத்திய மனித சமுதாயம் மேடு பள்ளங்களையுடையதாகவே இருந்தது. ஆம், மேடுகள் குறைவாகவும், பள்ளங்கள் சற்று அதிகமாகவும் இருந்தன. அந்தப் பள்ளங்களை நிரப்பி, மனித ஒழுக்க நெறியில் அந்தச் சமுதாயத்தை ஈடேற்ற வேண்டும்-வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திருவள்ளுவர் திருக்குறளைச் செய்தார்.

திருவள்ளுவர் மனித சமுதாய வரலாற்றில் ஏற்பட்டிருந்த குறையை-வீழ்ச்சியை-ஒழுக்கக் கேடுகளைக் கண்டுபிடித்து, அவற்றை மாற்றியமைத்து ஏற்றமும் எழுச்சியும் உண்டாக்கிச் சமுதாயத்தை நல்வழியில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற தூய நன்னோக்கத்தோடு வள்ளுவத்தைச் செய்தார்-மனிதகுலச் சிந்தனையாளனாக-ஒழுக்க நெறியாளனாக-இவற்றிற்கெல்லாம் மேலாக, சமுதாயத் தலைமைக்குத் தகுதியுடையவனாகத் தன்னை ஆக்கிக் கொண்டு திருவள்ளுவர் திருக்குறளைச் செய்தார் என்ற உண்மையை- முன்னுரையை நாம் இங்கே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு-அந்த முன்னுரையிலிருந்து நாம் சில செய்திகளைக் காணலாம்.

திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மனித சமுதாயத்தில் எண்ணத் தொலையாத-ஏராளமான பிரிவினைகள் இருந்திருக்கின்றன. அந்தப் பிரிவினைகளின் காரணமாக-வேற்றுமைகளின் காரணமாக மனிதனே மனிதனைப் பகைக்கின்ற மிகக்கொடிய சூழல் வளர்ந்துவிட்டது. ஒருவருக்கொருவர் சிரித்துப்பேசி மகிழப் பிறந்த மனித குலம், குளிர்ந்த பார்வையால் ஒருவரோடொருவர் கூடி உறவாடப் பிறந்த மனிதகுலம் தனக்குள் பல்வேறு வேற்றுமைச் சுவர்களை எழுப்பிக் கொண்டது. மனித சமுதாயத்தில் இல்லாத பல்வேறு கற்பனைகளை உருவாக்கிக் கொண்டு எழுப்பிய பிரிவினையுணர்வினைத் திருவள்ளுவர் பார்த்தார். "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்றார். மனித குலத்தில் எத்துணை வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும், எவ்வளவு பிரிவினை யுணர்வுகளைத் தோற்றுவித்தாலும் பிறப்பிலும் இறப்பிலும் வேறுபாடுண்டா? அப்படி வேறுபாடில்லாத, உலகத்தை நீ ஏன் வேறுபடுத்துகிறாய்?-நீ ஏன் வேறு பாட்டுணர்வுகளை வளர்க்கிறாய்? என்று கேட்டது போலத் திருவள்ளுவர் பேசுகிறார்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாச்
செய்தொழில் வேற்றுமை யான்."

என்று குறிப்பிடுகிறார். இதைச் சொன்னதோடு திருவள்ளுவர் அமைந்துவிடவில்லை-அமைதிகொள்ள அவரால் முடிய வில்லை. ஒழுக்கத்தைச் சார்பாக வைத்துக்கொண்டு இன்னாருக்கு இன்ன ஒழுக்கம்-இந்த ஒழுக்கமுடையவர் இன்ன சாதியினர் என்று கூறி அகத்தின் வழிப்பட்ட ஒழுக்கத்தை வரையறுத்துக் கொள்ளாமல் வெறும் புறச்சார்பான ஒழுக்கத்தையே பெரிதெனக் கருதி, வெளிநடை முறைகளை-புறச் செயல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றின் வழி நால்வகைச் சாதிகளை உருவாக்கி வளர்த்து வைத்திருந்த சமுதாயப் போக்கையும் திருவள்ளுவர் பார்த்தார். அவ்வாறு, நால்வகைச் சாதிகளுக்குள் பெருஞ்சுவர் எழுப்பிக்கொண்டு மனிதகுலம் வாழ்ந்த கொடுமையைப் பார்த்தார். சாதிமுறைகளை ஏன் ஒழிக்க முடியாது என்று கேட்டார்.

"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்"

என்றார். ஆம், நீ யார் வீட்டிலே பிறந்தாய் என்பது முக்கியமன்று-நீ எந்தத் தெருவிலே வளர்ந்தாய் என்பது முக்கியமன்று-நீ எந்தத் தொழில் செய்யும் பரம்பரையில் தோன்றினாய் என்பது முக்கியமன்று-உன்னிடத்து மனித குலத்தை வாழ்விக்கின்ற-அணைத்து மகிழ்கின்ற அக வொழுக்கம் இருக்கிறதா? அந்த அகவொழுக்கத்தைப் பெற்றவனே பெருங்குடிமகனாவான்-‘ஒழுக்கமுடைமை குடிமை’ என்று சொன்னார். உயர்குடிப்பிறப்பை அளக்கும் அளவுகோலே ஒழுக்கந்தான். பிறந்த வீடும், பேசும் மொழியும், கும்பிடும் கோயிலும், ஓதுகிற வேதமும் உயர்குடிப்பிறப்பை அளக்கும் அளவுகோல்கள் அல்ல என்று கருதினார். இவற்றையே அளவு கோலாகக் கருதிப் பெருமையும் சிறுமையும் பேசிய-கற்பித்த பேதைமையைச் சாடினார். மனித குலத்திலிருந்த சாதி இனவேற்றுமைகளை ஒழித்து மனிதகுலத்தை ஒருகுலமாக்குவதற்கென்றே திருவள்ளுவர் வள்ளுவத்தைச் செய்தார். திருவள்ளுவர் விரும்பிய வண்ணம் சாதி இன வேறுபாடுகளை ஒழித்துக்கட்டி, மனிதகுலத்தை ஒருகுலமாக்க திருவள்ளுவர் வலியுறுத்துவதுபோல நாம் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்.

ஒழுக்கத்தைத் தூண்டி வளர்ப்பன கல்வி, அறிவு, சிந்தனை ஆகியன. இந்த உண்மையையும் திருவள்ளுவர் மிகத்தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார். தமது தவறான பழக்க வழக்கங்களைக்கூட நியாயமானவை என்று பிடிவாதம் பிடிக்கின்றவர் பலர் இருக்கின்றனர் என்பதையும் திருவள்ளுவர் நன்றாக உணர்ந்து கொண்டிருந்தார். மனிதனின் அகக்கண் குருடாகிப் போனதாலேயே அவன் தன்னுடைய வாழ்வியலைப்பற்றி-ஒழுக்க இயலைப்பற்றி - பழக்க வழக்கங்களைப் பற்றித் தானாகச் சிந்தித்துத் தன்னைச் செழுமைப் படுத்திக்கொள்ள முடியவில்லை. செழுமைப்படுத்திக் கொள்ளுகின்ற அளவிற்குக் கல்வியறிவு இல்லை என்பதைக் கண்டார். எனவே, சமுதாயம் முழுமைக்குமாகக் கல்வி கொடுக்கவேண்டும். சமுதாயத்தையே படிப்பிக்க வேண்டும் என்றார். ‘எல்லாரும் படியுங்கள்! எல்லாரும் சிந்தனை செய்யுங்கள்’ என்றார். கல்வியின் இன்றியமையாமையை - கல்வியின் சிறப்பை மிகத் தெளிவாக எடுத்துக் கூறி வலியுறுத்துகிறார்.

இவ்வாறு, கல்வியின் இன்றியமையாமையை-அதன் சிறப்பை வலியுறுத்துகிற திருவள்ளுவர், ‘கற்றிலனாயினும் கேட்க’ என்கிறார். நீ நேரடியாகப் படித்துச் செய்திகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமற் போனாலும் உன்னை வாழ்விக்கின்ற - உன்னைச் செழுமைப்படுத்துகின்ற - உன்னை உருவாக்குகின்ற-உன்னுடைய வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துகின்ற சிறந்த செய்திகளையும், சிந்தனைகளையும் படித்தவர் வாயிலாகக் கேட்டாவது தெரிந்துகொள் - அப்படிக் கேட்டுத் தெரிந்து கொள்வதின் மூலம் உன்னுடைய அகவாழ்வில் புத்தம்புதிய மாறுதலை உண்டாக்கிக்கொண்டு-ஒழுக்கப்பண்புகளை வளர்த்துக் கொண்டு உயர்குடி வரிசையில் நீ உன்னைச் சேர்த்துக் கொள்ள முயற்சி செய் என்கிறார்.

அடுத்து நாடு, மொழி, இனம், மதம் இவற்றிற்கிடையேயுள்ள வேற்றுமைகளைக்கூட ஒழித்துவிட வேண்டும் என்று சொல்கிறார். இதற்கு எல்லா மக்களும் கல்வி அறிவு பெற வேண்டும். கல்வி அறிவு என்று சொல்லுகின்ற பொழுது, மொழியின் மூலமாகப் பெறும் அறிவை மட்டும் சொல்ல வில்லை. மொழியின் மூலமாக மட்டும் பெறுகிற அறிவு பிரிவினைகளை வளர்க்குமே தவிர அவற்றைத் தடுக்காது-குறைக்காது. எனவே மொழியின் மூலமாக மட்டும் பெறும் அறிவை முழுமையான அறிவு என்று ஒத்துக்கொள்ள முடியாது. அறிவு மொழிகளைக் கடந்தது-சமயம் என்பது சடங்குகளைக் கடந்தது-எல்லைக் கோடுகளைக் கடந்தது.

வேறுபடு சமயங்கள் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால்

என்றார் தாயுமானவர்.

பொதுவாக மனிதனுடைய உணர்ச்சிகளை வளர்ப்பதற்காக - அவனுடைய வளர்ச்சி வட்டங்களுக் கேற்றவாறு அவ்வப்போது எல்லைக்கோடுகள் வகுத்துக்

தி.10. கொள்வது இயல்பு. எனினும், அந்த எல்லைக் கோடுகளுக்குள்ளேயே நின்று விடுதல் கூடாது. அதுபோல, அன்பைத் தூண்டி வளர்ப்பதற்கு மொழி ஒரு கருவி. எனினும், மொழியின் எல்லைக் கோட்டுக்குள்ளேயே நின்றுகொண்டு பேசுவது மட்டும் அறிவாகிவிடாது. மனித குலத்தை நேசிக்கின்ற உணர்வும், மனித உலகத்தை வாழ்வித்து வாழும் உணர்வுமே அறிவு எனப்பெறும். திருவள்ளுவர் கூட கல்வி வேறு-அறிவுடைமை வேறு என்றுதான் கருதினார். கல்வியே அறிவு என்று அவர் ஒத்துக்கொண்டிருப்பாரானால், ‘கல்வி’ என்று ஒர் அதிகாரமும் ‘அறிவுடைமை’ என்று இன்னோரதிகாரமும் வைத்திருக்கமாட்டார். கல்வி என்பது அறிவைப் பெறுவதற்குத் துணை செய்யும் ஒரு கருவி-அது மனிதனை அறிவுலகத்திற்கு அழைத்துச் செல்லும். அவ்வளவு தானே தவிரப் படித்தவர்கள் எல்லாம் அறிவுடையவர்கள் என்று ஒத்துக் கொள்ள முடியாது. படித்தவர்கள் எனப்படுவோரில் ‘படிக்காதவர்’களும் இருக்கிறார்கள்-படிக்காதவர்கள் எனப் படுவோரில் 'படித்தவர்’களும் இருக்கிறார்கள். கல்விவேறு - அறிவுவேறு என்ற உண்மையைத்தான் இது நமக்குக் காட்டுகிறது.

இன்று நாம் சாதி, இனம், மொழி, நாடு ஆகிய எல்லாவகையான எல்லைக்கோடுகளையும் வேற்றுமைகளையும் கடந்த ஒரு புதிய சமுதாயத்தை-உலக மனித சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். எனவே, மொழியைப் படிப்பதோடு அறிவியல், பொருளியல், தொழிலியல், சமூக இயல் ஆகிய பல்வேறு துறைகளிலும் அறிவைப் பெற்று நம்மை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்று, திருவள்ளுவர், பரந்துபட்ட அறிவியலைத் தூண்டிவிட்டு-பரந்துபட்ட சிந்தனையைத் தூண்டிவிட்டு, மனித சமுதாயத்தில் பரந்துகிடந்த வேற்றுமைகளைக் களைய வேண்டும் என்ற நோக்கிலேயே திருக்குறளைச் செய்தார்.

பலர் படிக்கிறார்கள்-சிந்திக்கிறார்கள். ஆனாலும் சிந்தனை முழுவதுமே தூய்மையானது என்று கருதிவிடுவதற்கில்லை. ஏனெனில் பலரின் சிந்தனைக்கும்-புறச் சூழலுக்கும் தொடர்பிருக்கிறது. சிலருடைய சிந்தனை முதலில் அவர்களுடைய தவறான பழக்க வழக்கங்களில்தான் சென்று படரும். அந்தத் தவறான பழக்க வழக்கங்களை நியாயப் படுத்திக் காட்டவும் அவர்களின் அறிவு முயற்சிக்கும். அதனால்தான், 'உன்னுடைய மனச்சாட்சி மட்டும்-உன்னுடைய சிந்தனை மட்டும் பெரிதல்ல-சமுதாயத்தின் மனச்சாட்சியோடு உன்னுடைய மனச்சாட்சியையும் ஒத்துப் பார்’-என்றான், மாவீரன், மாஜினி. பல தவறுகளுக்கு -பல அநியாயங்களுக்குக் கூட ‘நான் என் மனச்சாட்சியறியப் பொய் சொல்லவில்லை’ என்று சொல்லத் தோன்றும். 'அவனுடைய மனச்சாட்சிப்படி’ தவறில்லைதான். அவன் மனச்சாட்சி அவன் பார்த்த பார்வையிலேதான் சென்று கொண்டிருக்கிறது. பாரமேற்றிய வண்டியை இழுத்துச் செல்லும் எருதுகள் நள்ளிரவில் தூங்கிக்கொண்டே நடந்து செல்லும். அது, அதற்குப் பழக்கத்தால் ஏற்பட்ட பயிற்சி. அதுபோலவே மனிதனும் பழக்கத்தின் அடிச்சுவட்டில் செல்லுவதில் எளிதாய் பயிற்சி பெற்றவன். 'படித்தவர்கள்’ எனப்படுவோர் பலர், ‘பழக்கம்’ என்ற உழுசாலில் செல்லுவதற்கே முயல்கிறார்கள்; தங்களை மாற்றிக்கொள்ள - புதுமைப்படுத்திக்கொள்ள வெட்கப்படுகிறார்கள் - கூச்சப்படுகிறார்கள்-பயப்படுகிறார்கள். தவறு என்று தெரிந்தும்கூட அதைவிட்டு விலகுவதற்கு அஞ்சுகிறார்கள். இந்த நூற்றாண்டில்கூட, உலகின் சமாதானத்திற்கு எந்தயுகம் அணுகுண்டைத் தோற்றுவித்ததோ-அந்த யுகம், அதைத் தடுக்கின்ற வலிமையான கரங்களையும் தோற்றுவித்தது. ஆனால் அப்பாவி உலகம் மீண்டும் அணுகுண்டைத் தடுத்து நிறுத்துகிறவனின் கரத்தை, வெட்டி வீழ்த்தி விட்டது! குண்டை வைத்திருக்கும் கரத்தை என்ன பண்ணப் போகிறதோ தெரியவில்லை. இந்த நிலைமையை நாம் எண்ணிப்பார்க்கின்றபொழுது, மனிதன் பகுத்தறிவில்லாதவனா? அவன் மொழிகளில் உலக இலக்கியங்கள் தோன்றவில்லையா? அதில் புத்தம் புதிய சாத்திரங்கள் தோன்றவில்லையா? அவனுடைய பிரார்த்தனையுலகில் செழுமை படரவில்லையா? எல்லாம் இருந்தும்கூடப் பலர் ‘சிரங்குசொறி பிடித்தவர்கள்போல’ திரும்பத் திரும்பத் தவறுகளைச் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்! எது வளரவில்லை. நம்மைப்புறச் சூழலில் வளர்க்கின்ற சமயம் வளரவில்லை என்று கூற முடியுமா? உலகிலேயே அமெரிக்க நாட்டில்தான் கடந்த பத்தாண்டுகளில் வழிபாட்டில் அதிக நம்பிக்கையுடையவர்கள் பெருகியிருக்கிறார்கள். இந்தப் பத்தாண்டுகளில் அங்கு ஏராளமான மாதாகோவில்கள் தோன்றி யிருக்கின்றன, பைபிளை அதிகமாக ஓதுகிறவர்களை அங்குதான் பார்க்கிறோம். ஆனாலும், அங்கு ஏசுவின் மதம்-கிறித்தவம் கல்லறைக்குப் போய் விட்டது என்பதை மறுக்கமுடியுமா? இந்த உண்மைகளையெல்லாம் நன்றாகத் தெரிந்து கொண்டுதான் திருவள்ளுவர் பேசுகிறார். 'மனித வாழ்க்கையில் அன்பும் அமைதியும் வேண்டும்’ என்றார். அன்பும் அமைதியும் வேண்டுமென்று சொன்னால், உன்னுடைய அறிவுமட்டும் போதாது. நீ எதைக் கேட்கின்றாயோ-எதைச் சார்ந்திருக்கின்றாயோ அந்த அறிவு-மெய்யறிவாக-மெய்ப்பொருளாக இருக்கிறதா என்று பார் என்று சொல்லுகிறார். ‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்கிறார். நாம் வாழுகிற மனித சமுதாயத்தில் எல்லாவகையான ஆதிக்கக் காரர்களும் உண்டு. ஆட்சியில் வீற்றிருப்பவர்கள் மட்டும் ஆதிக்கக்காரர்கள் அல்லர். பொருளாதாரத்தைத் தங்களிடத்தே குவித்து வைத்துக்கொண்டிருப்பவர்கள் மட்டும் ஆதிக்கக்காரர்கள் அல்லர். அறிவுலகத்திலும் ஆதிக்கக் காரர்கள் உண்டு. அவர்கள், மற்றவர்களுக்கு அறிவு வளர்ந்துவிடக் கூடாது என்று கருதுகிற ஆதிக்க உணர்வுடையவர்கள். இத்தகைய, ஆதிக்க உணர்ச்சி பல்வேறு கோலங்களில், எல்லாக் காலங்களிலும் உலவியது. என்றைக்குச் சமய உலகில் ஆதிக்க உணர்ச்சி தோன்றியதோ அன்றே, சமயச் சண்டைகளும், பல்வேறு சமயப் பூசல்களும் முளைத்தன. சமயம் சமயமாகவே இருந்தால் அது பௌத்தமாயினும் சரி, இஸ்லாமாயினும் சரி, சமணமாயினும் சரி, கிறித்தவமாயினும் சரி, சைவ வைணவமாயினும் சரி சமயச் சண்டைகள் தோன்ற மாட்டா.

உலகில் பொதுவாக, சமய உணர்ச்சியைக் கருவியாகக் கொண்டு, ஆதிக்க உணர்ச்சி தோன்றுகின்றபோதுதான் கரும்பே கசப்பதுபோல-சர்க்கரையே புளிப்பதுபோல குளமே சேறாகிவிடுவதுபோல ஆபத்துக்கள் உருவாகின்றன. உடம்பைத் தூய்மைப்படுத்த வேண்டிய தண்ணீரே அழுக்குச் சேர்ந்தாகிவிட்டால் என்னென்ன கொடுமைகள் ஏற்படும்? . வாழ்க்கையை வளமுடையதாக்க- தூய்மையுடைய தாக்கத் தோன்றிய சமயங்களில் ஆதிக்க உணர்ச்சி தலையெடுத்து - அது சமயச் காழ்ப்பாக மாறிச் சமயச் சண்டைகள் தோன்றி மனித குலத்தையே ஆட்டி அலைக்கழிக்கின்ற பல நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம். இவற்றையெல்லாம் தெளிவாகப் புரிந்து கொண்டே திருவள்ளுவர் ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்’ என்றார். யார் யார் வாய் கேட்பினும் என்றால் என்ன? இங்கு தலைமை வகித்திருக்கும் நண்பர் மணலி கந்தசாமி அவர்களே பேசுகிறார்கள் என்றாலும் அவர்களை பொதுவுடைமைக் கட்சிக்காரர் என்ற பார்வையில் அவரைப் பார்க்காதீர்கள். அவர் என்ன சொல்லுகிறார்-அவர் சொல்லுகின்ற கருத்து இந்த நாட்டுக்கும் இந்த நாட்டு மக்கட்கும் நன்மை பயப்பதாக இருந்தால் தைரியமாக-துணிவாக அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நன்மை பயப்பதாக இல்லையானால் அதைத் தைரியமாக எதிர்த்து நில்லுங்கள். இந்த இரண்டிலும் கோழைத்தனம் வேண்டாம்-முதலில் கருத்துச் சரியா தவறா என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கருத்திலேதான் திருவள்ளுவர் பேசுகின்றார்.

திருவள்ளுவர் காலத்திலே தமிழ்நாட்டிலே நிறையப் பேர் கருத்துக் கடை விரித்தார்கள். தமிழகத்திற்குச் சமணர்கள் வந்தார்கள் - பௌத்தர்கள் - மாயாவாதிகள் வந்தார்கள். இந்தப் பல்வேறு சமயவாதிகளும் இந்த நாட்டில் கருத்துக் கடைகளை விரித்துத் தமிழர்களைத் தங்கள் வலையில் இழுக்க முயன்றார்கள். இதைப் பார்த்துத்தான் திருவள்ளுவர், கடை யாருடையது என்றோ, கடையில் யார் வியாபாரம் செய்கிறார்கள் என்றோ கவலைப்படாதீர்கள் - கடையில் விற்கப்பெறும் சரக்கின் தரத்தைப் பாருங்கள் என்றார். சொல்லுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சொல்லுகிற கருத்திலே மெய்ப்பொருள் தன்மை இருக்கிறதா என்று பாருங்கள். உங்கட்கும், உங்கள் நாட்டுக்கும், உங்கள் சமுதாயத்திற்கும், பாரம்பரியத்திற்கும், உலகுக்கும் நன்மை வருமா என்று பாருங்கள்-அதுதான் அறிவு.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்று சொன்னார்.

பொதுவாக, ஒரு செய்தியைச் சொல்லுபவர்கள் யார் என்பதை வைத்துக் கொண்டே அச்செய்தியைப் பற்றிய முடிவெடுக்கிற ஒரு பரிதாப நிலையை-அவல நிலையை இன்று நாம் சமுதாயத்தில் காண்கிறோம். செய்தியைப்பற்றி ஒரு முடிவெடுப்பதற்கு அச்செய்தியைச் சொல்லுகிறவர்களை ஒர் அளவு கோலாகக் கொள்ளலாமே தவிர, முழுமையாகக் கொள்ள முடியாது. அவர்கள் சொல்லுகிற கருத்து எத்தகையது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும்.

அடுத்து, திருவள்ளுவர் காலத்திற்கு முந்திய தமிழகம், ‘வள்ளல்’களைப் போற்றிப் பாராட்டிய பாரம்பரியம் உடையதாக இருந்தது. முல்லைக்குத் தேர்கொடுத்தான்-மயிலுக்குப் போர்வை கொடுத்தான்-பொன்னும் மணியும் இன்னபிறவும் வாரிக் கொடுத்தான்-பொற்பூ சூட்டினான் என்றெல்லாம் பலவாறாக ‘வள்ளல்’களைப் பாராட்டி மகிழ்ந்தார்கள். இந்த ‘வள்ளல்’ பரம்பரையைப் பாராட்ட திருவள்ளுவருக்கு மனம் வரவில்லை. நாம் எந்தப் புறநானூற்றுக் காலத்தில் வள்ளல்களைப் பார்க்கிறோமோ, அந்தப் புறநானூற்றுக் காலத்திலேயே வெம்பசியால் வாடியவர்கள் வயிற்றுச் சோற்றுக்காகப் ‘பசிப்பிணி மருத்துவன்’ இல்லத்தை நோக்கி எறும்புகளைப்போலச் சாரை சாரையாகச் சென்று கையேந்திய கழிவிரக்க நிலை இருந்ததென்பதையும் பார்க்கிறோம். அப்படியானால், எங்கிருந்து வள்ளல் தன்மை தோன்றுகிறது? பொதுவாக ஒருவர் வாரிக்கொடுக்க வேண்டும் என்றால் அவரிடத்து எஞ்சிய பொருள் நிறைய இருக்கவேண்டும். அவனிடம் அந்தப் பொருள் எப்படி வந்தது? எவ்வாறு குவிந்தது? என்று திருவள்ளுவர் கேட்டாரோ இல்லையோ அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ‘எஞ்சிய செல்வத்தை இன்னொரு வருக்குக் கொடுப்பதில் உனக்கு என்ன பெருமை இருக்கிறது?’ என்று கேட்கிறார். உன்னிடம் செல்வம் எஞ்சிக் கிடக்கிறது. எஞ்சியதை இன்னொருவருக்கு - தேவைப் படுகிறவருக்குக் கொடுப்பதுதானே கடமை? அதுதானே தொண்டு? இதில் உனக்கென்ன சிறப்பான வரவேற்புப் பத்திரம் வேண்டியிருக்கிறது?-இப்படித்தான் திருவள்ளுவரின் கருத்துச் செல்லுகிறது. இதனை ‘ஒப்பரவு’ என்ற ஓர் அதிகாரத்தில் அழகாகப் பேசுகிறார். செல்வம் உடையவர்கள் இல்லாதவர்கள் இதனை ‘ஒப்பரவு' என்ற ஓர் அதிகாரத்தில் அழகாகப் பேசுகிறார். செல்வம் உடையவர்களிடமிருந்து இல்லாதவர்கள் அதனைப் பெறுவது உரிமை. இந்தக் கடமை உரிமை உணர்வுகளுக்கிடையே ஈகை, கருணை, இரக்கம் என்ற சொற்கள் ஏன்? இல்லத்தலைவன் தன் இல்லத் தலைவிக்குத் துணி வாங்கிக் கொடுப்பதைக் கடமையாகக் கருதுகிறானே தவிர அதற்கொரு பாராட்டுப் பத்திரமும், வாழ்த்துரையுமா எதிர்பார்க்கிறான்? நிலத்தின் சொந்தக்காரன் அந்நிலத்தைப் பேணிக்காப்பது கடமை. அதுபோல, செல்வம் உடையவர் எஞ்சிய செல்வத்தை இல்லாதவர்க்கு உதவுவது கடமை. இதனை உணர்த்துகிறார் திருவள்ளுவர். இந்த ஒப்புரவுக் கொள்கையை மூன்று சிறப்பு உவமைகள் மூலம்-மூன்று சிறந்த எடுத்துக்காட்டுக்கள் மூலம் தெளிவாக விளக்குகிறார்.

'ஊருணி நீர் நிறைந்தற்றே’ என்று ஒரு குறள். இந்தக் குறட்பா, வள்ளலையும் ‘வள்ளல் தன்மை’ யையும் பாராட்டுவதாகக் கருதிக்கொண்டே இன்னும் பலர் பேசிக்கொண்டு வருகிறார்கள். உரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வள்ளலையும், வள்ளல் தன்மையையும் பாராட்டுகிற குறளாக இக்குறட்பா எனக்குத் தோன்றவில்லை. ஊருணி இருக்கிறது-ஊரினர் பலர் அதிலே தண்ணீர் எடுத்துக் குடிக்கிறார்கள். நாள்தோறும் அக்குளத்தைப் பயன்படுத்துகிறார்கள். அந்த ஊருணி இந்த ஊருக்கும் உலகுக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற உணர்வோடு கொடுக்கிறதா? அந்த ஊருணியில் அந்த ஊர்மக்கள் தண்ணீர் எடுக்கவில்லையானால் ஊருணி என்னாகும்? அந்த ஊருணி பாசி பிடித்து, ஊற்றுவளம் கெட்டுப் புழு நெளியும் குட்டையாகி அந்நகரின் நகராட்சி மன்றம் அதைத் துர்த்துவிடத் திட்டம் போடுகிற நிலைமை ஏற்பட்டு விடாதா? அந்த ஊருணி ஊர் மக்களுக்குத் தண்ணீர் கொடுப்பது கொடைபோலத் தோன்றினாலும் அது மறைமுகமாகத் தன்னுடைய ஊற்றுவளத்தை-ஊருணி என்ற பெயரை இவற்றிற்கெல்லாம் மேலாகத் தன் தூய்மையைக் காப்பாற்றிக் கொள்ளுகிறது. அதுபோலவே அறிஞன் கொடுப்பான்.

"ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகுவாம்
பேரறி வாளன் திரு”

என்றார். அறிவு கொஞ்சம் திட்டவட்டமாகக் கணக்குப் போடும். ஒன்றைச் செய்தால் அது எப்படித் திரும்பிவரும் - இதனால் என்ன இலாபம் என்று கணக்குப் போட்டுப் பார்த்துத்தான் பேரறிவாளன் ஒன்றைச் செய்வான். ஆனால், சமுதாயத்தோடு-சமுதாய உணர்ச்சியோடு-அன்போடு-அருளோடு-அற உணர்வோடு கலக்காத வெற்றறிவு எப்படிக் கணக்குப் போட்டுப் பார்க்கும்? பேரறிவாளன், தன்னை நம்பிக் கொண்டு, தனக்காக-தன்னுடைய நலனுக்காகவே கொடுப்பான், குறி எதிர்ப்பைக் கொண்ட இந்தக் கொடையையே திருவள்ளுவர் 'ஊருணியோடு ஒப்பிட்டார்.

மனித உலகம் மேலும் வளர்ச்சியுற வேண்டும். அது தனக்காக-தன்னுடைய நன்மைக்காக அல்லாமல் தன்னை மறந்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கு மருந்து மரத்தை உவமையாக-எடுத்துக் காட்டாகக் கொண்டு விளக்குகிறார்.

"பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்"

என்றார். நயனுடையான் என்றால் நெஞ்சுடையவன் என்று பொருள். நெஞ்சுடையவனுக்கு மூளை மேலோங்கி நிற்கவில்லை-இதயம் வேலை செய்கிறது. இவன் எந்த இனத்தைச் சேர்ந்தவன்-இவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் - இவன் எந்த மொழியைப் பேசுபவன் - இவனுக்கு - இவனுடைய ஏழைமைக்குக் கொடுப்போமா? வேண்டாமா? என்றெல்லாம் மூளையால் ஆராய்வதில்லை. இதயம் அவனது ஏழைமையைப் பார்த்து-துன்பத்தைப் பார்த்து உதவ முந்துகிறது. உள்ளூருக்குள்ளே, கனிகளைத்தரும் பயன்மரம் பழுத்துக் கனிந்திருக்கிறது. அது, கனிந்த கனிகளைக் கிழே உதிர்க்கும்போது இது யாருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணிப் பார்ப்பதில்லை. வேலிவைத்துப் பாதுகாத்து வளர்த்தவனின் வீட்டுத் தோட்டத்துக்குள்ளேகூடப் பழம் முழுவதும் விழுவதில்லை. வேறு இடத்திலும் விழலாம். அது, இன்னார் இனி யார் என்று பார்ப்பதில்லை-இவர் உதவினார்-இவர் உதவி செய்தார் என்றுகூடப் பார்ப்ப தில்லை. தன்னுடைய கனிகளைச் சமுதாயத்திற்குக் கொடுப்பது என்ற கடமையுணர்வோடு மட்டுமே கணிகளை உதிர்க்கிறது. இவ்வாறு நட்டவனுக்கா எருவிட்டவனுக்கா, நீர்பாய்ச்சியவனுக்கா, வேலியிட்டவனுக்கா, பட்டாக் காரனுக்கா என்று பாராமல், கனிந்த கனிகளைச் சமுதாயத்திற்குக் கொடுப்பது தன்னுடைய கடமை என்று கடமையுணர்ச்சியோடு மட்டும் கனிகளை உதிர்ப்பதுபோல, நெஞ்சுடையவன் தன்னை மறந்து, மறந்து எதைப்பற்றியும் சிந்தனை செய்யாமல், யாருக்குக் கொடுக்கிறோம் என்பதைப் பற்றிக்கூடக் கவலைப் படாமல் கொடுப்பான். இஃது இரண்டாவது வளர்ச்சி.

திருவள்ளுவர் இன்னும் ஒருபடி மேலே செல்லுகிறார் - மூன்றாவது உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். அந்த உலகந்தான் மனித குலத்தை வாழ்விக்கும் என்று சொல்லுகிறார். அது எந்த உலகம்? அது மருந்து மரத்தோடொத்த பெருந்தகையார் உலகம். மருந்து மரம் இருக்கிறதே அது பல்லாற்றானும் நமக்கு உதவுகிறது. அதனுடைய பட்டை வெட்டப்பெறுகிறது-இலைகள் பறிக்கப் பெறுகின்றன. பூக்கள் கொய்யப்பெறுகின்றன. வேர் வெட்டப் பெறுகிறது. இவ்வாறாக மருந்து மரத்தின் எல்லா உறுப்புக்களையும் எடுத்துப் பயன் படுத்துகிறோம். எனினும் அந்த மரம் ஆடாமல்-அசையாமல் உலகிற்கு இன்பந்தந்து வாழ்விக்கிறது. அது தன்னை நினையாது மட்டுமன்று தன்னை மறந்து மட்டுமன்று-தனக்கு இழைக்கப் பெறுகிற தீங்குகளையும் பொறுத்துக்கொண்டு சமுதாயத்திற்கு உதவுகிறது. மருந்து மரம் போன்ற பெருந்தகையார் பலர் வாழும் சமுதாயத்தையே திருவள்ளுவர் விரும்பினார். ‘பிரிய பெருந்தகை’ என்று திருஞானசம்பந்தரைச் சேக்கிழார் பெருமான் பாராட்டுகிறார். பெருந்தகை என்றால் மிகச் சிறந்த பெரிய மனிதர் என்று பொருள். மருந்து மரத்தை எடுத்துக்காட்டாகக் காட்டும் இக்குறட்பாவில் திருவள்ளுவர் பெருந்தகையான் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

திருவள்ளுவர் காலத்தில் வள்ளல் மனோபாவம் தோன்றி, ஒருவர்க்கு ஒன்று உதவினால் பதவிவேண்டும் - பாராட்டு வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பாராட்டு உலகத்திற்கும் செல்வ உலகத்திற்கும் மட்டும் தொடர்பிருந்தது. பாராட்டத் தெரியாதவனுக்கும் பேசத் தெரியாதவனுக்கும், அப்பாவிகளுக்கும் ஒன்றும் கிடைக்க வில்லை. இந்த நிலையைப் பார்த்துத்தான் திருவள்ளுவர் 'கொடுப்பது கடமை’ என்று கருதும் புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக்க விரும்பினார். வள்ளுவர் காலத்தில் கொடுப்பவன் பெரிய மனிதன் என்று பாராட்டப் பெற்றதை நாம் வரலாற்று ரீதியாகப் பார்க்கிறோம். அந்த நிலை மாறவே, கொடுப்பது உன்னுடைய கடமை-உனக்கு வருகிற தீங்கையும் பொறுத்துக் கொண்டு கொடுப்பது பெருந்தகைமை-இந்தப் பெருந்தகைமையை உறுதிப்படுத்திக்கொள்’ என்று வள்ளுவர் கூறுகிறார்.

அடுத்து, திருவள்ளுவர்காலம் பௌத்தம், சமணம், மாயாவாதம் மூன்றும் தலைமயங்கிய காலம். அந்தக் காலத்தில்தான் வாழ்க்கை நிலையில்லாதது-யாக்கை நிலையில்லாதது. பொன் நிலையில்லாதது-பொருள் நிலையில்லாதது என்ற ‘நிலையாமை’த் தத்துவம் அதிகமாகப் பேசப்பெற்றது. இந்தத் தத்துவம் மேலோங்கி நின்றமையாலேயே இடையிலே இந்த நாடு பெரும் அளவிற்கு ஏழைமையில் அமிழ்ந்து போனதைப் பார்க்கிறோம். தீமையைத் தடுத்து நிறுத்துவதற்குச் சக்தியில்லாமல் அவதியுற்றவர்களைப் பார்க்கிறோம். இவ்வாறு எதைப்பார்த் தாலும் நிலையில்லாதது-நிலையில்லாதது என்று சொல்லி மனிதன் உழைக்கும் சக்தியைப் பெருக்குவதையே விட்டு விட்டான். முயற்சி செய்வதையும் விட்டுவிட்டான். எதிலுமே அவனுக்கு ஒரு வறண்ட மனோபாவம் ஏற்பட்டது. எனவேதான் தஞ்சைப் பெருங் கோயிலையும், தில்லை நடராசர் திருக்கோயிலையும் எழுப்பிய பரம்பரை இன்றைக்கு ஓர் ஓராசிரியர் பள்ளியைக் கட்டக்கூட வேறு யாரையாவது எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நமது வரலாற்றில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் திருவள்ளுவர் மிக நன்றாகப் புரிந்து கொண்டார். ‘இந்த உலகத்தில் நீ இன்பம் பெற வேண்டும் என்றால்-இறைவனின் திருவருளைப் பெறவேண்டும் என்றால் நீ முதலில் இந்த உலகத்தில் வாழக் கற்றுக்கொள்’ என்றார். இந்த உலகத்தில் வாழ்கிற வாழ்க்கை ஒன்றும் பெரிதல்ல-இங்கு எப்படி வாழ்ந்தாலும் மறு உலகத்தில் இடம் பிடித்து விடலாம் என்ற போலி நம்பிக்கை மக்களிடத்தில் மிகுந்திருந்தது. இந்த உலகில், சேற்றைப் பூசிக்கொண்டு வாழ்ந்தால், மறு உலகத்தில் சந்தனப் பூச்சுக் கிடைக்கும் என்று நம்புகிற அளவிற்குத் தத்துவம் பரவிக்கிடந்தது. இந்த உலகில் பட்டினி கிடந்தால் மறு உலகில் தேவாமிர்தம் சாப்பிடலாம் என்ற நம்பிக்கை வளர்ந்து கிடந்தது. இந்தப் போலி உணர்வுகளின் காரணமாக, பரந்துபட்ட சமுதாயம் காலப்போக்கில் கூனிக்குறுகி, அலுத்துச் சலித்து இளைத்து வறுமைத் துன்பத்திற் சிக்கி அவதிப்படுமே என்று கவலைப்பட்டார் திருவள்ளுவர். எனவே, அவர் 'நீ மறு உலகத்திற்குப் போவதைப்பற்றி இப்போது கவலைப்படாதே! நீ இந்த உலகில் வாழ்வாங்கு வாழு; வீட்டின்பத்தை இறைவனே பார்த்து உனக்குக் கொடுப்பான் என்றார். தவறுதலாக இப்பொழுது யாரோ சிலர் குறளுக்கும் குறளைக்கும் வேறுபாடு தெரியாமல் பேசியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நாம் வருத்தப்படுகிறோம். இவ்வாறு குறளுக்கும் குறளைக்கும் வேறுபாடு தெரியாமல் பேசியவர்கள், அவ்வாறு குறிப்பிட்டதில் ஒரளவு உண்மை இருக்கிறது என்பதை நாம் முற்றிலும் மறுக்கவில்லை. அறம் பொருள் இன்பம் என்ற மூன்று மட்டுமே திருக்குறளில் சொல்லியிருக்கிறது-இறுதி இலட்சியமான ‘புருஷார்த்தம்' என்ற ‘வீடுபேறு’ பற்றித் திருக்குறள் பேசாமையினாலே அந்த நூல் முழுமை பெற்ற நூல் அன்று’ என்று சொன்னார்கள். உண்மைதான். தமிழனின் பாரம்பரியம் கடமை செய்தலைப் பெருமையாகக் கருதியதே தவிர, பலனை எதிர்பார்த்த தில்லை. அது அந்த சாதிக்கே இல்லாத ஒன்று, மேலும், அறமும் பொருளும் இன்பமும் கூடிய நல்வாழ்வு இயைந்து விடுமானால் இறைவனே பார்த்து நமக்குக் கொடுக்க வேண்டிய வீடு பேற்றைக் கொடுப்பான். நம்மிடமுள்ள தகுதி-நம்மிடமுள்ள யோக்கியதை-நம்மிடமுள்ள வாய்ப்பு அனைத்தும் அறத்தோடும் பொருளோடும் இன்பத்தோடும் சேர்ந்த மனித உலகிற்கு நலன் தருகிற செழுமையான வாழ்க்கையை நம்மிடத்து அமைத்து விடுமானால், இறைவன் தானே இறங்கி வந்து வீடுபேற்றை-மோட்சத்தைக் கொடுக்கத் தவறமாட்டான் என்பது தமிழ்ப் பாரம் பரியத்தின் கருத்து. எனவேதான் திருவள்ளுவர் தனியாக வீடுபேற்றைப் பற்றிப் பேசவில்லை. பலனை எதிர்பார்த்துப் பணி செய்வது மாற்றார் கருத்து. ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை' என்பது வேற்றவர் கொள்கை. நாம் இன்னும் கோயில்களிலே பார்க்கிறோம். தட்சிணை எங்கே என்று கேட்டுக்கொண்ட பிறகுதான் அருச்சனை உலகம் வருகிறது. தட்சினையை மையமாக வைத்து அருச்சனை உலகம் வருவதனாலேதான் சமயம் தனது உள்ளீட்டை இழந்துவிட்டது போலத் தோன்றுகிறது. எந்த உலகம் கணக்கு வழக்குகளைக் கடந்து - தன்னலத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டுமோ அந்த உலகிலேயே தவறு நிகழ்வதைப் பார்க்கிறோம். குட்டை குழப்பப் பெற்றுச் சேறாகிக் கிடப்பதைப் பார்க்கிறோம்.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் அறம்' என்பது திருவள்ளுவரின் கருத்து. மனிதன் அறமுடையவனாக-அற உணர்வுடையவனாகிப் பொருளைப் போற்றி இன்பியல் வாழ்க்கை வாழ்ந்தால் இறைவன் வீடுபேற்றைத் தருவான் என்று திருவள்ளுவர் கருதினார். ‘வாழ்க்கை ஒறுத்துச் சாவதற்கே’ என்று இந்நாட்டு மக்களிடையே நிலவிய கருத்தை மாற்றி வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற கருத்தை வலியுறுத்த எண்ணினார். எனவே,

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்."

என்றார்.

அடுத்து, ஊழைப் பற்றித் திருவள்ளுவர் கூறிய கருத்துக்கள் மிக உயர்ந்தன-சிறந்தன. திருவள்ளுவருக்கு முந்திய காலத்துத் தமிழகத்தில், ஊழ் வலியது-மாற்ற முடியாதது என்ற கருத்து வேரூன்றியிருந்தது. இன்றும் ஊழின் வலிமையைப் பற்றிப் பேசுகிற-எழுதுகிற இலக்கியப் பேச்சாளர்கள் - எழுத்தாளர்கள் - பேராசிரியர்கள் - இலக்கிய கர்த்தாக்கள் எல்லோருமே ஊழின் வலிமையைச் சிறப்பித்தே பேசுகிறார்கள். அவர்கள் இதற்குச் சான்றாக கீழ்க்கண்ட புறநானூற்றுப் பாடல் ஒன்றைக் காட்டுவார்கள்.

‘ஒரு பேராறு-அதிலே வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. அந்த வெள்ளத்திலே ஒரு படகு, அந்தப் படகு எங்கே போகும்? வெள்ளம் போகிற போக்கில்தானே போய்ச் சேரும்? இதுதான் அவர்கள் எடுத்துக்காட்டும் உவமை.

சிந்தித்துப் பாருங்கள். படகு உயிரற்றது-அதற்குப் பகுத்தறிவுண்டா? சிந்தனை யுண்டா ? எதுவுண்டு? உயிரும், பகுத்தறிவும், சிந்தனையும் தன்னாற்றலும்-செயல் திறனும் இல்லாத அந்தப் படகு வெள்ளத்தின் போக்கிலே போவது தவிர வேறுவழி என்ன? மனிதனும் அந்தப் படகும் ஒன்றா? மனிதன் உயிரற்றவனா? செயல்திறனற்றவனா? சிந்தனையும் பகுத்தறிவும் இல்லாதவனா? எனவே இந்த உவமையை எங்ஙணம் ஒப்பமுடியும்? அந்தப் படகிலே சிந்தனையும் செயல் திறனும், பகுத்தறிவும் உடைய ஒரு மனிதன் இருந்து படகை இயக்கினால் படகு வெள்ளத்தை எதிர்த்துப் போகுமா? வெள்ளத்தின் போக்கிலேயே போகுமா? எண்ணிப் பாருங்கள். இந்தக் கருத்திலேதான் திருவள்ளுவர், 'கூற்றம் குதித்தலும் கைகூடும்’ என்று குறிப்பிடுகிறார். ஆம், எதிர்நோக்கி வருகிற எமனையும்கூட எதிர்த்து நிற்கமுடியும்.

‘நாளென்செயும்? வினை
தான் என் செயும்?
எனே நாடி வந்த
கோளென் செயும்? கொடுங்
கூற்றென் செயும்?

என்று கேட்டார் அருணகிரியார். மார்க்கண்டேயர் வரலாறு நமக்கு எதையுணர்த்துகிறது? பதினாறாண்டிலே ஒருவன் மரணமடைவான் என்றால்-அதுதான் விதி என்றால் அந்த மரணத்தையும் வெல்ல முடியும் என்பதை யுணர்த்த அந்தக் காலத்துச் சமுதாய அமைப்பிற்கேற்றவாறு-‘பௌராணிக’ முறையிலே தோற்றுவிக்கப் பெற்றது மார்க்கண்டேயர் வரலாறு. ஊழினால் சாகத்தான் வேண்டுமென்றால், அந்த விதியை எப்படி இறைவன் மாற்றினான்? ஆளுக்கு ஏற்றாற் போல் இறைவன் விதியை மாற்றுவானா? அப்படி ஆளுக் கேற்ற வண்ணம் இறைவன் நீதியை மாற்றக் கூடியவனானால் அவனுக்கு, நீதி என்ற பெயர் எப்படிப் பொருந்தும்? ‘நடுவுநிலையாளன்' என்ற பெயர் எப்படிப் பொருந்தும்? 'ஆதியும் நடுவும் அந்தமும் ஆனான்’ என்பது எப்படிப் பொருந்தும்? விதியின் ஆற்றலை-ஊழின் வலிமையை வலியுறுத்த,

"பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.

என்ற ‘நாலடியார்’ பாடலொன்றை எடுத்துக்காட்டுவார்கள். அதுவும் அவர்கள் காட்டும் புறநானூற்றுப் பாடல் போன்றதுதான்.

‘ஒரு பெரிய பசுமந்தை அதற்குள் ஒரு கன்றை அவிழ்த்துவிட்டால் அது போய்த் தன் தாய்ப் பசுவைப் பிடித்துக் கொள்வதுபோல, ஊழும் இந்த மனிதசமுதாயத்தில் தனக்கு உரியதனை வந்து பற்றிக்கொள்ளும்’ என்பது நாலடியார் பாடலின் கருத்து. கன்றுக்குப் பகுத்தறிவும் சிந்தனையும் உண்டா? ஊழின் வலிமையை வலியுறுத்துவதற்கு பகுத்தறிவும் சிந்தனையும், செயலாற்றலும் இல்லாத வற்றையே எடுத்துக் காட்டி வந்திருக்கிறார்கள்.

இனி, ஊழைப் பற்றித் திருவள்ளுவர் கொண்ட கருத்தென்ன? ஊழை அவர் முழுக்க முழுக்க மறுத்தாரா? முற்றிலும் முரண்பட்டாரா? என்றால் இல்லை. ஊழில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் மனிதன் அதனை எதிர்த்து எதிர் நீச்சல் போட வேண்டும் என்றார்.

'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்'

என்கிறார். ஆற்று வெள்ளம் வேகமாகத்தான் போகிறது-மிகக் கடுமையாகத்தான் செல்லுகிறது. மணிக்கு 100 மைல் வேகத்தில்தான் போகிறது. ஆனாலும், படகிலிருந்து துடுப்புப் போடுகிறவன் நல்ல திறமைசாலியாக இருப்பானானால்-ஆற்றலுடையவனாக இருப்பானானால் அவன் ஆற்றின் வேகத்தைத் தடுத்து எதிர் திசையிலேயே செல்ல முடியாதா? ஆற்றின் வேகம் அதிகம் என்றால், அதிலே எதிர்த்துப் போகிறவனின் சக்தி பெரிதில்லையா?

பொதுவாக, மண்ணிலிருந்து விண்ணோக்கிச் செல்லுகிற பொருளெல்லாம் மீண்டும் மண்ணுக்கே இழுத்தெறியப் படும் என்பது ஈர்ப்பாற்றல் விதி ‘ஆகர்ஷண தத்துவம்’ ஆனாலும், மண்ணின் ஈர்ப்பாற்றலைத் தடுத்து நிறுத்தி, மனிதன் விண்ணில் மிதக்கிக் கற்றுக் கொள்ள வில்லையா? வானில் பறக்கவில்லையா? ‘ஈர்ப்பாற்றல்’ ஓர் ஒழுங்குதான்- சக்திதான். ஆனாலும், மனிதன் தன் சக்தி கொண்டு அதனை வெற்றி கண்டு விடுகிறானே! அதுபோல, ஊழ், மனிதனின் நெடுநாளையத் தவறான பழக்கவழக்கங்கள் அவனைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்ல முயலும். மனிதனுடைய சிந்தனை-செயற்பாடு முயற்சி ஆகியன ஒழுங்காக இருக்குமானால் நேற்றைப் பழக்க வழக்கங்களை இன்று மாற்றிக் கொண்டு விடுவான். ஊழ் என்பதென்ன? நேற்றைக்கு முந்தின செயலின் விளைவு நெடுநாளைக்கு முந்தின காரியத்தின் விளைவு, சிந்தனைத் திறனும் செயலாற்றலும் இருக்கும்ானால், அவ்வினையின் விளைவை-புதிய சிந்தனை-செயல்களின் மூலம் மாற்றிக் கொள்ளமுடியும். ஊழினால் வருகிற உணர்வை-ஊழினால் வருகிற பழக்கத்தை மனிதன் மாற்றிக் கொள்ள முடியும். எனவே, ஊழை எண்ணிக் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டிருந்து அழிந்து போகாதே என்று திருவள்ளுவர் பேசுகிறார்.

ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்

என்னும் ஒரு குறட்பா ஊழ் என்ற அதிகாரத்தில் வருகிறது. இதில் வருகிற ‘முந்துறும்’ என்ற சொல்லை ஆராய்ந்தால் அதில் ஒர் உறுதிப்பாடு-திண்மை ஒலிக்கவில்லை. ‘முன்வந்து நிற்கும்’ என்று தான் கூறுகிறார். ஆனால் முயற்சியைப் பற்றிச்

தி.11. சொல்லும்போது அப்படி யல்ல. மனிதன் என்ன முயற்சி பண்ணினாலும் ஊழ் முன்வந்து நிற்கும். ஆனால், முயற்சியால் அதனை வென்று விடலாம் என்கிறார்.

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துளுற்று பவர்"

"தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய் வருந்தக் கூலிதரும்"

என்று முயற்சியின் வலிமையை-முயற்சியால் ஊழை வெற்றி காண முடியும் என்ற உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்துகிறார். அப்படியானால் 'ஊழிற் பெருவலியாவுள?' என்று வள்ளுவர் ஏன் குறிப்பிட வேண்டும் என்று கேட்கலாம். 'ஊழை நீ அழித் தொழிக்க வேண்டுமானால் உன்னுடைய ஆற்றல் மிகப் பெரிதாக இருக்க வேண்டும்’ என்ற உணர்வை எழுப்புவதற்காகத்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மாற்றான் படையைப் பெருமைப்படுத்திக் கூறினால் அது தன் படையை இழித்துக் குறைத்துக் கூறியதாக ஆகாது. தன்படை வீரர்கள் திறமையாகப் போர் புரியவேண்டும் என்பதற்காக மாற்றான் படையினைப் பெருமைப்படுத்தித் தன் படை வீரர்களுக்குக் கூறியனுப்புவது இயல்பு-மரபு. அதுபோல, ‘ஊழிற் பெருவலி யாவுள?' என்று திருவள்ளுவர் கேட்டது ஊழைப் பெரிது படுத்துவதற்காக அல்ல-நீ எதிரியை-மாற்றானை ஆற்றலற்றவன்-பலவீனன் என்று கருதிப் போய் தோற்றுவிடாதே-என்று உணர்த்துவதற்காகத் தான். ‘ஊழ் பெருவலிவுடையதாக இருக்கலாம்-அது முன்வந்து நிற்கும்-ஆனாலும், உன் முயற்சி, நாணயம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் நீ அதை வெற்றி பெற முடியும் என்று அவர் மனித சமுதாயத்திற்கு நம்பிக்கை யூட்டுகிறார். வள்ளுவர் காலத்தில், மக்களிடையே அதிகப்படியான ஊழ் நம்பிக்கை பரவிக்கிடந்தது. மனிதன் ஏழையாகப் போவதற்கு ஊழ் காரணம்-மனிதன் கெட்டவனாகப் போவதற்கு ஊழ்காரணம்-மனிதன் கொலைகாரனாகப் போவதற்கும் ஊழ்தான் காரணம்! இப்படிச் சமுதாயத்தில் யார் எந்தக் கொடுமையை-தீமையைச் செய்தாலும் ஊழைக் காரணமாகக் காட்டிவிட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் போலத் தோன்றியது. இப்படியே கொலைகாரர்களும் தப்பித்துக் கொள்ள ஊழைக் காரணமாகக் காட்டிய காலத்தில் திருவள்ளுவர் ஊழைப் பெரிது படுத்துவது போலத் தோற்றத்திற்குக் காட்டினாரேயொழிய உண்மையிலேயே அவர் ஊழைப் பெரிது படுத்தவில்லை. மனிதனுடைய அறிவு-சிந்தனை-முயற்சி ஆகியவற்றைப் பெரிதுபடுத்தவே அவர் நூல் செய்தார். அதனால்தான் இந்தச் சமுதாயம் அழிந்து படாமல் இந்த அளவிற்காவது வாழ முடிந்தது. இன்று ஓரளவு மனித முயற்சிகள் தோன்றி வளர்ந்திருப்பதற்குக் காரணம் வள்ளுவர் இட்ட வித்து. வள்ளுவர் இந்த வித்தை இட்டிருக்காவிட்டால், மனிதன் தன்னுடைய சிந்தனை-அறிவு-முயற்சி நடவடிக்கைகள் அத்தனையையும் பற்றிக் கவலைப்படாமல், ஊழின்மீது சுமையைப் போட்டு விட்டுக் கையைக் கட்டிக் கொண்டிருந்து முழுச் சோம்பேறியாகப் போயிருப்பான். இந்த நிலையை நாம் எண்ணிப் பார்க்கிறபொழுது தான் அந்தக் காலத்தில் வரலாற்றில் ஏற்பட்டிருந்த தளர்ச்சியைப் பார்த்துச் சமுதாயம் அழிந்து படுமே என்றஞ்சி, சமுதாயத்திற்குச் சிந்தனை தேவை - செயல் தேவை - முயற்சி தேவை என்பதையுணர்ந்து அவற்றைக் கொடுப்பதற்கே திருவள்ளுவர் திருக்குறளைச் செய்தார் என்று நமக்குத் தோன்றுகிறது.

திருவள்ளுவர் காலத்தில் இன்னொரு பெருங்குறை நிலவியது. சமுதாயத்தில் சாதிப் பிரிவுகளும், வேற்றுமை யுணர்வுகளும் பெருகிக்கிடந்ததைவிட நாட்டுக்கு நாடு வேற்றுமை பெருகிக் காணப்பட்டது. வீட்டுக்குள் வேற்றுமையுணர்விருந்தாலும், நாட்டுக்குள் வேற்றுமையுணர் விருந்தாலும், அது தவறுதான். எனக்கு என்னுடைய மொழி பெரிதுதான். ஆனாலும் என்னுடைய மொழிப்பற்று மனித குலத்திற்குப் பகையாகப் போகுமானால் அதை அனுமதிக்க முடியுமா? என்னுடைய சமயம் எனக்குப் பெரிதுதான். அந்த உணர்வு தேவையானதுதான். ஆனாலும், என்னுடைய சமயப்பற்று மனித குலத்திற்குப் பகையாக மாறிவிடக்கூடாது. என்னுடைய நாடு எனக்குப் பெரிதுதான். ஆனாலும் என்னுடைய நாட்டுப்பற்று, இன்னொரு நாட்டோடு போய் மோதுவதை அனுமதிக்கலாமா? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஆக்கிரமிப்பது-ஒருவன் இன்னொருவனோடு மோதுவது ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டது.

பொதுவாக, சேரநாட்டில் பிறந்தவன் சேரநாட்டின் பெருமையைத்தான் சிறப்பித்துப் பேசுவான்-பாண்டிய நாட்டில் பிறந்தவன் பாண்டிய நாட்டின் பெருமையைத்தான் சிறப்பித்துப் பேசுவான்-சோழநாட்டில் பிறந்தவன் சோழ நாட்டின் பெருமையைத்தான் சிறப்பித்துப் பேசுவான். இந்தக் கூனிக்குறுகிய-தரித்திர புத்தியைத் திருவள்ளுவர் பார்த்தார். இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று விரும்பினார். எனவே, அவர் தமது திருக்குறளில் உலகம், உலகம், உலகம் என்றே முழங்குகிறார் இன்றைக்கு இருப்பதைப்போல வானொலியும் தொலைபேசியும் இல்லாத காலத்தில் இவ்வளவு அதிகமாக உலகத்தைப்பற்றித் திருவள்ளுவர் பேசியதையும், உலகக் கண்ணோட்டத்தோடு பாடியதையும் நாம் பார்க்கிறோம். கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை ஆகியவற்றை ஒழுக்கமென வலியுறுத்தும் வள்ளுவர் அந்த ஒழுக்கங்களையெல்லாம் நீ போற்றாவிட்டாலும் பரவாயில்லை-உலகத்தோடு ஒட்ட ஒழுகல் சிறந்த-பெரிய ஒழுக்கம், அந்தப் பெரிய ஒழுக்கத்தை நீ காப்பாற்று என்கிறார்.

நாம் பல்வேறு நாட்டினரைப் பார்க்கிறோம். அவர்களிடத்து அவர்களுடைய நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிகுந்திருப்பதைப் பார்க்கிறோம். சமயப்பற்றும், இன உணர்ச்சியும் மிகுந்திருப்பதைப் பார்க்கிறோம். எனினும், திருவள்ளுவர் எந்த இனத்தைச் சார்ந்தவர்-எந்த நாட்டைச் சார்ந்தவர்-எந்த மொழியைச் சார்ந்தவர்-எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்று இனம் தெரிந்துகொள்ள இயலாத வண்ணம் திருக்குறளைச் செய்திருக்கிறார். இவ்வாறு உலகக் குடிமகனாத் திகழுதற்குரிய ஒரு நூலைச் செய்த பெருமை திருவள்ளுவருக்கே உண்டு. .

'உன்னுடைய சமயத்தை நீ கால்கொள்ளுகிற இடமாகப் பயன்படுத்திக்கொள்-எனினும், உன்னுடைய அறிவும் ஒழுக்கமும், சிந்தனையும், இதயமும் உன்னுடைய பழைய பழக்க வழக்கமும் உலகத்தைத் தழுவட்டும்’ என்று கூறுவதுபோல உலகத்தோடு ஒட்ட ஒழுகல் சிறந்த கல்வி என்கிறார். எவ்வதுறைவது உலகம் அவ்வதுறைவது அறிவு. உலகம் எங்கே தங்குகிறதோ அங்கே நீ தங்குவது அறிவு என்கிறார். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதைச் சொன்னார். ‘சாதிகளில்-சமயச் சந்தடிகளில் மதிமயங்கிய நாடு. உலகை நோக்கிப் போகாமல் ஒதுங்கிப் போய்விட்டது. நீ ஒதுங்கி விடாதே! உலகம் தழுவிய வாழ்க்கை வாழு’ என்று கூறிய அந்தப் பெருமகனாரின் வானார்ந்த நெறியை நாம் பார்க்க வேண்டும். கவிஞர்கள் தாம் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும், தமது நாட்டு மக்களையும், தங்கள் நாட்டு மன்னர்களையுமே பாடிவந்த நிலையில் திருவள்ளுவர் அந்தக் கவிஞர் உலகத்திற்கு ஒரு பேரிடியாகவே வந்தார். நாட்டை, மொழியை, சமயத்தை மறந்து ‘மனிதாபிமானம்' என்ற ஒன்றை மட்டும் கருவியாக வைத்துக்கொண்டு உலகம் முழுவதுக்குமாக ஒரு நூல் செய்தார்.

திருவள்ளுவருக்குச் சமய நம்பிக்கை கிடையாதா? உண்டு ஆனாலும், அவர் எந்தக் கடவுளைக் கும்பிட்டார் என்று கண்டுபிடிக்க முடியாது. அவர் எந்தக் கடவுளையாவது பாராட்டிப் பேசியிருப்பாரானால் மதக்காழ்ப்பும், மதச் சண்டையும் வந்திருக்கும். ‘நீ எல்லாவற்றிற்கும் அப்பால் இருக்கிற கடவுளை வாழ்த்து’ என்றுதான் திருவள்ளுவர் பேசுகிறார். திருவள்ளுவர் காலத்திற்கு முந்தியும் பிந்தியும் எவ்வளவு சமயச் சண்டைகள்! எவ்வளவு சமயக்காழ்ப்புக்கள்! சமயத்தை-சமய நெறியைக் கடைப்பிடித்தொழுகாதவன் கூட சமயத்தின் பேரால் சண்டைபோடுகிற காலம்! அத்தகைய 'சமயவாதி’யே சமயத்திற்காகப் பரிந்து பேசிப் போராடவும் வந்தான்! காரணம், அன்று அது அவனுக்குத் தொழிலாக இருந்தது. இந்த நிலையைத் திருவள்ளுவர் தெளிவாகப் புரிந்துகொண்டார். எனவே, உலகப்பொதுச் சமயத்தை நோக்கியே அவர் பேசினார்.

திருவள்ளுவப் பெருந்தகை, ‘அறக்கடவுள்’ என்று குறித்தாரே தவிர, சிவனென்றோ, திருமால் என்றோ, முருகன் என்றோ, சக்தி என்றோ பிரித்துச் சொல்லவில்லை. காரணம், மனிதகுல ஒருமைப்பாடே திருவள்ளுவருக்கு இலட்சியமாக இருந்தது. அந்த இலட்சிய உலகை நாம் நோக்கிப் பார்க்கிறபோதுதான், மிகச் சிறந்த உலகப் பொதுச் சமுதாயத்தை-உலக மனித சமுதாயத்தைக் கண்டு பிடிப்பதற் காகத் திருவள்ளுவர் அரிதின் முயன்று இந்நூலைச் செய்தார் என்ற உண்மை நமக்குப் புலப்படுகிறது. அவர் அரிதின் முயன்று அந்நூலைச் செய்த பிறகும்கூட, நமது நாட்டில் சாதி, இன, சமய, மொழி வேறுபாடுகளைப் பெரிதுபடக் காட்டி நாம் சண்டையிட்டுக் கொண்டுதான் வாழ்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது பெரிதும் வேதனையாக இருக்கிறது. நம்முடையதிலே நமக்குப் பற்றிருக்க வேண்டும் -ஆனால் மற்றவர்களுடையதிலே வெறுப்பு இருக்கக்கூடாது. இந்த பொது ஒழுக்கத்தை நாம் வள்ளுவர் வாயிலாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

இனி, அரசியலைப் பற்றி திருவள்ளுவர் என்ன கருதினார்-வள்ளுவரின் அரசியல் சித்தாந்தங்கள் என்ன என்பதையும் நாம் சிறிது காணலாம்.

திருவள்ளுவருக்கு முன்பிருந்த அரசியல் யுகத்தில் அவருக்கு அவ்வளவு பிடிப்பில்லை. அவர் ஒரு புதிய அரசியல் சித்தாந்தத்தை நாட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நமது இலக்கியங்களைப் பார்த்தால், ‘மன்னன் உயிர்த்தே மலர் தலையுலகம்' என்ற கொள்கைதான் நிலவியது. கோடானுகோடி மக்கள் வாழ்ந்து வளரும் உலகம் இது, ஆனால், அதற்கு ஒரேயொரு உயிர்-ஒரேயொரு ஆன்மா, அரசன்தான்! நாம் உடுப்பதுவும், உண்பதுவும், பூசுவதும் உடம்புக்காகவா? உடம்பிலிருந்து உயிர் பிரிந்தபிறகு இந்த உடம்பிற்குப் பூசுவதும், மற்றவையும் ஏதோ உபசாரத்திற்காகவேயன்றி வேறெதற்கு? அப்படியானால், உயிர் பெரிதா? உடல் பெரிதா? உயிர்தானே? அந்த உயிர் பிரிந்தபிறகு பூசுவதும் பிறவும் செய்கிறோம் என்றால் கடைசிக்காலத்தில் ஏதோ உபசாரத்திற்காகச் செய்கிறோம். அவ்வளவுதான்! திருவள்ளுவருக்கு முந்திய யுகம், 'மக்களெல்லாம் உடம்பு-மன்னன் உயிர்’ என்று சொன்னது. மன்னன் என்ற உயிர், நலன் பெறத்தான் மக்கள் வாழுகிறார்கள் என்ற அரசியல் தத்துவம் நிலவியது! மன்னனைப் பார்த்தால் மகேஸ்வரனைப் பார்த்தது போலக் கருதினார்கள். இந்த நிலையைத் திருவள்ளுவர் பார்த்தார்.

அரசனின் ஆதிக்கத்தைத் தடுத்துக் கேட்கக் கூடாது என்று ஐரோப்பிய நாட்டிலே ஒரு சித்தாந்தம் வளர்ந்து வந்திருக்கிறது-ஆம். அரசன் தவறு செய்யமாட்டான் என்ற ஒரு நம்பிக்கை. எனவே, ‘அரசனின் உரிமை தெய்வீக உரிமை. அதை யாரும் தட்டிக் கேட்கக் கூடாது' என்பன போன்ற கருத்துக்கள் பரவியிருந்த உலகில், ‘அரசன் குடி தழீஇக் கோலோச்ச வேண்டும்’ என்று வலியுறுத்திக் கூறியவர் திருவள்ளுவர்தான். ‘மன்னவனே! நீ குடிகளைத் தழுவிக் கோலோச்சத் தெரிந்துகொள்! நீ பிறப்புரிமை உடையவனல்லன்! இந்த அரசுரிமை உனக்குத் தெய்வத்தால் வந்தது என்று நீ நினைத்து விடாதே! மக்களால் உனக்கு வழங்கப் பெறுவது! எனவே, நீ குடிகளைத் தழுவி வாழ்க்கை நடத்த வேண்டும்’ என்ற அரசியல் சித்தாந்தத்தை - மாற்றத்தை உலகில் ‘ஜனநாயகம்’ பிறப்பதற்கு முன்னால் - மக்களாட்சிக்கொள்கை மலர்வதற்கு முன்னால் சொன்ன பெருமை திருவள்ளுவருக்கு உண்டு. அது மட்டுமா? அப்படி நீ குடிதழீஇக் கோலோச்ச வில்லையானால், 'கூழும் குடியும் ஒருங்கிழப்பாய்! நாட்டையும் இழப்பாய்! என்றார். நீ இழந்துவிடுவாய் என்பதுகூடப் பொருளல்ல-நீ குடிதழீஇக் கோலோச்சவில்லையானால், குடிமக்கள் உன்னைப் பதவியிலிருந்து இறக்கிவிடுவார்கள்’ என்ற கருத்துப்பட எச்சரிக்கையும் விடுக்கிறார். திருவள்ளுவருக்கு முன்பு இப்படி ஒரு பாடல் உண்டா? ஒரு பாடல் உண்டு. 'அரசன் தவறு செய்துவிட்டால் புலவர்கள் அவனைப் பாடமாட்டார்கள்’ அதுதான் பெரிய தண்டனை.

'கூழும் குடியும் ஒருங்கிழப்பாய்’ என்று திருவள்ளுவர் மிக அடக்கமாகப் பேசுகிறார். ‘ஒருங்கிழந்து விடுவாய்’ என்பதைச் சற்று ஆத்திர ரீதியான வார்த்தைகளில் போட்டால், ‘மன்னவனே நீ மக்களைத் தழுவி ஆட்சி நடத்த வில்லையானால் உன்னை இறக்கிவிடுவோம்’ என்றாகும். இந்நிகழ்ச்சி இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் ஏற்பட வில்லையா? மன்னவனை அரசு கட்டிலிலிருந்து இறக்கிவிட வில்லையா? அவன் தானாகவே இறங்கிக் கொல்லைப்புற, வழியாக ஓடிவிடவில்லையா; இதற்கெல்லாம் கால்கோள் செய்வதுபோல வள்ளுவர் பேசியிருக்கிறார். திருவள்ளுவருக்கு முன்பு, அரசனுக்கு அறநெறி சொன்னவர்கள்-நீதி சொன்னவர்கள் நிறையப் பேர் உண்டு. ஆனாலும்கூட இப்படி இடித்துக் கூறியவர்களைக் காணமுடியாது. ‘இப்படி செய்தால் நல்லது-உன் அரசு வாழும்-உனக்குப் புகழ் இருக்கும்’ என்று ஒரு மாதிரியாக-நாகரிகமாகப் பேசியிருக்கிறார்கள். நம் நாட்டின் நீண்டகால பாரம்பரியத்தாலேயே அவர்களெல்லாம் அப்படிப் பேசியிருக்கிறார்கள். ‘அரசனை இடித்துக் கேட்கிற அமைச்சன் வேண்டும்.’

இடிப்பாரை இல்லா ஏமறா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.

என்ற முறையில் வள்ளுவர்தான் பேசியிருக்கிறார். வரலாற்றில் மன்னனின் எதேச்சாதிகாரம் பெருகி, அரசன் எண்ணியபடியெல்லாம் செய்கின்ற தன்மை வளர்ந்தது. அப்போதுதான், ‘மன்னவா! இடித்துச் சொல்லும் அமைச்சனை அருகில் வைத்துக்கொள். ஒத்தூதுகிற ஆட்களாகப் பார்த்துப் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதே’ என்று சொல்லுவதுபோலப் பேசுகிறார். அதுமட்டுமா? உனக்குச் சாதகமாகப் பேசுகிறவன்தான் உனது நண்பன் என்று எண்ணி ஏமாந்து விடாதே என்றும் எச்சரிக்கிறார். இடித்துச் சொல்லுகிற அமைச்சனையும் ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை உன்னிடம் அதிகரித்திருக்குமானால், உன் அரசு நெடுநாள் வாழும் என்று உணர்த்துகிறார்.

திருவள்ளுவருடைய காலத்தில்-சமுதாயத்தில் பல வேறுவிதமான தரக் குறைவுகளும் தகுதிக் குறைவுகளும் நிறைந்திருக்கின்றன. திருவள்ளுவர், சென்றகாலப் பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை நீக்கி, நிறைவு படுத்துவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டு ஒரு மாபெரும் கருத்துப் புரட்சியையே தோற்றினார். சிந்தனைப் புரட்சியைத் தோற்றுவித்து குறையுடையதாக இருந்த சமுதாயத்தை நிறையுடையதாக ஆக்க முயன்ற ஒரு சிறந்த எழுத்தாளர் திருவள்ளுவர். அவர் ஒரு சிறந்த கவிஞர். ஒப்புயர்வற்ற வரலாற்றுச் சிற்பி. அந்தப் பெருமகனாரின் நூல் வெறும் இலக்கியப் புலமைச் செறிவோடு மட்டும் தோன்றியதன்று. அது மனிதனின் உணர்ச்சிகளுக்கும் ஆசைகளுக்கும் இரையாக இல்லாமல் வெறும் பொழுதுபோக்குக்குப் பயன்படும் நூலாக இல்லாமல், சமுதாயத்தின் அடி மனத்தைத் தொட்டுச் செழுமைப் படுத்தக்கூடிய ஒரு பெரு நூலாகத் திகழ்கிறது.

வரலாற்றுப் போக்கில் நாம் வள்ளுவத்தைப் பார்க்கிறபோது, அரசியல் துறையில்-சமுதாயத் துறையில்-அறிவுத்துறையில் ஏற்பட்டிருக்கிற குறைகளை நீக்கி, நிறைசெய்யத் தோன்றிய நூலாகவே தோன்றும். சமுதாயத்தில் நிலவும் குறைகளைக் களைந்து நிறைவுடைய வாழ்வு வாழ்வதே திருவள்ளுவருக்கு நாம் செய்கிற கைம்மாறு, நாம் செய்யத்தக்க கடமையுங்கூட.