குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வள்ளுவரின் நகைச்சுவை

3
முத்துமொழிகள்

1. வள்ளுவரின் நகைச்சுவை

உயிரினம் இன்பத்தை நாடி ஏங்குகிறது. பெரும் சிற்றின்பங்களை அனுபவித்து இன்பப்படுவதில் நிறைவு பெறுகின்றது. இன்பம் என்று கருதி அனுபவிக்கும் சிலவற்றால் துன்பம் நேரிடுவதுமுண்டு. எதிர்வரும் துன்பத்தைப்பற்றி எண்ணிப் பார்க்க உயிரினங்கள் நினைப்பதில்லை. எண்ணாமல் செயல் நடைபெறுகின்றது. சிற்றின்ப வேட்கை பெருந்துயரில் கொண்டு போய் நிறுத்துகின்றது. மனிதன் மற்றெல்லா உயிரினங்களிலும் பார்க்க உயர்ந்தவனாக மதிக்கப்படுகிறான். உடைமையைப் பொறுத்தே உணர்ச்சியுள்ளது. பணப்பெருக்குடையவர்களும், கல்விச் சிறப்புடையவர்களும் செல்வாக்குச் சிறப்புடையவர்களும் பதவியுயர்வுடையவர்களும் உயர்த்திப் பேசப்படுவதை நாம் உலகியலில் காணமுடிகிறது.

பொதுவாக-மனித இனம் சிறப்பாக மதிக்கப்படுவதற்கு அதன் சிந்தனா சக்திதான் காரணம். பகுத்தறிந்து, பண்புடன் வாழத் தெரிந்த இனம் மனிதஇனம். தீயதை விலக்கி நல்லதை நாடி-அறத்தைப் போற்றி-மறத்தைக் கடிந்து- அன்பை நாடி-பண்பை அழித்து-அறிவைப் பேணி மடமையை அழித்து- துன்பம் நீக்கி-இன்பமளித்து வாழ மனிதனுக்கு நெறி காட்டுவது அவனது சிந்தனைச் சிறப்புத்தான்.

சிந்தனைச் சிறப்புமிக்க மனித குலத்தில் பண்டு முதலே கற்றோரும்-மற்றோரும் போற்றுமளவுக்கு வாழ்ந்து, வாழ்க்கை நெறிகண்ட இனம் நமது தமிழினம். மனிதன் கண்ட கண்டபடி புலனைச் செலுத்திச் சீரழிந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்வைப் பற்றிச் சிந்தித்துச் சிறப்பு மிகுந்த தத்துவங்களை வாரி வழங்கிய இனம் தமிழினம். காலத்தாலும் கருத்தாலும் மூத்த உலக வரலாற்றில் தனக்கென ஒர் இடத்தைப் புனிதமான ஒரு நிலையைப் பெற்ற பெரும்பேறு நமக்கு உண்டு. ஆனால் இத்தகு தகைமையை நினைந்து இறும்பூ தடைவதில் காலத்தைப் போக்கியதாலே தான் இன்றுள்ள இழிநிலை நமக்கு வந்துள்ளது. முந்தையத் தமிழன் வாழ்க்கையைப்பற்றிச் சிந்தித்தான்; இன்றுள்ள நாம் வாழச் சிந்திக்கின்றோம். எப்படியாவது வாழ்ந்து இந்த வாழ்க்கையை முடித்து விடுவோம் என்று நினைக்கிறோமே தவிர எப்படி வாழவேண்டும் என்று நினைக்கின்றோமில்லை. குறிக்கோள்களோடும், கொள்கைகளோடும் வாழ்வை வரையறுத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ எண்ணுகிறோம், இல்லை, இவ்வாறு எண்ணிய இனத்தின் வழித்தோன்றல்கள் - எப்படி யாவது வாழ-எண்ணாது வாழ முனைவது வருத்தத்தைத் தருகிறது. எண்ணிச் சிந்தித்து வாழும் சமுதாயத்தை உருவாக்க அவாவுறவேண்டும். நமது மொழிவழி வந்த நாகரிகத்தைப் பேணிக்காக்க விரும்புதல் வேண்டும். பேரின்ப நிலைபெற உழைக்கும் உயர்ந்த உள்ளங்களை உருவாக்க வேண்டும். எங்கும் எல்லா உயிர்களிடத்தும் எப்போதும் அன்பு செலுத்தி, அறத்தால் வருவதே இன்பம் என்று கருதி அருள் வாழ்வு வாழவேண்டும்.

எங்கும் அன்பைச் செலுத்த மனத்திற்குப் பக்குவம் வேண்டும். மனோபக்குவம் இல்லாது அன்பை செலுத்துவதென்பது முடியாத காரியம். அப்படி அன்பு செலுத்துவதாக இருந்தாலும் அது வெறும் நடிப்பாகவே முடியும். நிறைந்த நடிப்பு வாழ்க்கை வாழ்வதிலும் குறைந்த நல்ல வாழ்க்கை வாழ்வது சிறப்பு. மனத்தைப் பக்குவப்படுத்துவதற்கு மனத்தில் உள்ள குழப்பங்கள் குறையவேண்டும். சினம், பொறாமை, பொச்சரிப்பு, சந்தேகம், சபலம் முதலியன நீங்கத் தொடங்கினால் மனோபக்குவத்திற்கு வேண்டிய அடித்தளம் அரும்ப ஆரம்பிக்கும். மனோபக்குவ அடித்தளத்தைப் பெற ஒரேயொரு வழிதான் உண்டு-அதுவே வழிபாடு. வழிபாடு மனத்தை நல்வழியில் ஆற்றுப்படுத்த எழுந்த சாதனம். இலட்சியமற்று இங்குமங்கும் அலைந் தலைந்து அல்லலுறும் ஆன்மாவை உருக்கிக் கசியவைத்து நன்னெறிப்படவைக்கும் பேராற்றல் வழிபாட்டிற்குண்டு.

இறைவழிபாடு இன்பங்கள் எல்லாவற்றிற்கும் மேலான இன்பத்தை-பேரின்பத்தை நல்குகின்றது. கவலை தோய்ந்த கருத்தைக் களிப்படைய வைக்கிறது. பைத்திய நிலையைப் பக்குவப்படுத்திப் பயனடையச் செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சிரித்துவாழவும்-கொடுத்து மகிழவும் போதிக்கிறது. சிரிப்பதற்காக மனிதன் பலதுறைகளை நாடியோடித் திரிகிறான். நாடகத்திலும் திரைப்படத்திலும் கால்கடுக்க நின்று ஒன்றேகால் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிச் சிரிப்பை அனுபவிக்கிறான். சினிமாவிலே டணால் தங்கவேலுவின் சிரிப்பை, இராதாவின் சிரிப்பைக் கண்டு ஆனந்திக்க மழையிலும் வெய்யிலிலும் நின்று உழல்பவர்கள் எத்தனைப் பேர்! காசில்லாமல்-செலவில்லாமல் கருத்தைக் கனிய வைத்துச் சிரிப்பிலாழ்த்திப் பேரின்பத்தை நல்கும் வழிபாட்டு நெறியினைப் பின்பற்ற மனிதராகிய நாம் நினைக்க வேண்டும்.

உலகியலிலே சிரிப்பதற்கு எவ்வளவோ நிகழ்ச்சிகள் உண்டு. நாள்தோறும் நடைபெறும் சம்பவங்கள் நம்மைக் கைகொட்டி நகையாட வைக்கின்றன. நம்மிற் சிலர் உலகத்தைப் பார்த்துச் சிரிக்கத் தெரியாதிருக்கிறோம். தலைசிறந்த தத்துவப் பேராசிரியர்கள் உலகவாழ்க்கையிலிருந்தே சிரிப்புக்கிடமானவைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் காட்டிய சிரிப்புக்கிடமான நிகழ்ச்சிகள் சிந்தனைக்கும் விருந்தளிக்கின்றன். வாழ்வைப் பார்த்து-வாழ்க்கையைப் பார்த்துச் சிந்தித்த வள்ளுவப் பெருந்தகை ஒரு தத்துவக் குயில். அவரொரு நிகழ்ச்சியை நமக்குக் காட்டி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்வதைப் பாருங்கள்.

ஒரு கடைவீதியிலே ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கிறான். தேநீர்க்கடை ஒன்று குறுக்கிடுகிறது. வைத்திருந்த பணத்துக்கு ஏதோ பலகாரம் வாங்குகிறான். வழிநெடுக அதைக் கொறித்துத் தின்று கொண்டே போகிறான். இடையில் வள்ளுவர் எதிர்ப்படுகிறார். அவர் அவனை மறித்து "தம்பீ! உனக்கு உயிர் இருக்கிறதா?” என்று கேட்டார். அவன் திகைத்து - வெலவெலத்து - வேர்த்துக் கொட்ட விழித்தபடி நின்றான். சற்று நேரம் பொறுத்து "என்ன ஐயா கேள்வி இது? நான் நடக்கிறேன், மூச்சு விடுகிறேன். முறுக்குத் தின்கிறேன் என்னைப் பார்த்து - உனக்கு உயிர் உண்டா? என்று கேட்கிறீர்களே" என்றான். "சரியப்பா, நீ அந்தக் கடையிலே முறுக்கு வாங்கியபொழுது, இரண்டு வேளையாகச் சாப்பிடாமல் வாடிய வதங்கிய நிலையில் நின்றானே ஒரு ஏழை! நின்றதோடல்லாமல் பசிக்கிறது என்று கெஞ்சிக்கேட்டானே! நீ வைத்திருந்த முறுக்கில் பாதித் துண்டையாவது அவனுக்குக் கொடுத் திருக்கக்கூடாதா? நீ அப்படிக் கொடுக்காது வந்ததுதான் என்னைச் சந்தேகிக்க வைத்தது" என்றார் வள்ளுவர். இதிலுள்ள நகைச்சுவையையும் பகுத்துண்டு பல்லுயி ரோம்பும் பண்பையும் நாம் நினைத்துச் சிரிப்பதோடு சிந்திக்கவும் வேண்டும்.

நமது சிந்தனை அருளார்ந்த சிந்தனையாக-அன்புவழிச் சிந்தனையாக மிளிர வேண்டும். அப்பொழுதுதான் நமது அகத்திலேயுள்ள ஆத்திரம் கொதிப்புப் போன்றவை அடங்கி-ஆன்மீக வாழ்வு பெற வழி ஏற்படும். அகத்தின் ஆத்திரமும், பொறாமை, எரிச்சல் போன்ற தீய உணர்வுகளும் களையப்பட வேண்டும். உலையிலே வெந்து கொண்டிருக்கும் அரிசி பொங்கினால், ஒரு கரண்டி மூலம் கிண்டிக் கிளறிவிட்டால் அவ்வரிசி நன்றாக நின்று வேகும். இன்றேல் அரிசி வேகஉதவும் நீர் வெளியாவதோடு, சோறாக்க உதவிய நெருப்பையும் அவித்துவிடும். அதேபோல மனிதனின் ஆத்திர உணர்ச்சி பொங்கி வராதபடி தடுக்கப்படல் வேண்டும். இன்றேல் ஆத்திரத்தால் அறிவு மங்க-செயலாற்றத் தகுந்த ஆற்றலும் அழிந்து-காரிய சாதனைக்குரிய அடிப் படைச் சூழலும் கெட்டுவிடும்.

ஆகவே! இனங்களில் உயர்ந்து சிறந்து போற்று தலுக்குள்ளாகி யிருக்கும் மனித இனம் எண்ணிச் சிந்தித்து அருளார்ந்த வாழ்வுவாழ வேட்கைகொள்ள வேண்டும். அன்பு வாழ்வுக்கும் அறவாழ்வுக்கும் வழி வகுத்துத் தர வழிபாடு சாலச் சிறந்தது. வழிபாட்டின் மூலம் அமைதியையும் பேரின்பப் பேற்றையும் பெற்று மனிதரில் மாணிக்கங்களாகத் திகழ முடியும். உலக உத்தமர் காந்தியடிகள் கூட வழிபாட்டினாலும் வழிபாட்டை ஒட்டிய சிந்தனைகளினாலும் சிறப்புற்றார்.

உலகியலில் சிந்தனைக்கு வித்திடக்கூடிய சிரிப்பை அனுபவித்து ஆன்ம நேயத் தொண்டுகளைச் செய்ய முனைய வேண்டும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பு நம் தமிழினத்துக்குப் பழமையானது-அது தொன்றுதொட்டு வழிவழிவந்த ஒரு தன்னிகரற்ற தத்துவம். அந்தத் தத்துவத்துக்கு மதிப்பளித்து - என்றும் அன்பாய் வாழ வேண்டும்.