குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வள்ளுவரும்-கார்ல்மார்க்சும்

4. வள்ளுவரும்-கார்ல்மார்க்சும்

திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மலர்ந்தது. வரலாற்றுக்கு எட்டியவரையில் வள்ளுவத்தைப் போல் செப்பமான ஒரு வாழ்வியல் விஞ்ஞான நூல், வள்ளுவம் தோன்றிய காலத்தில் எந்த மொழியிலும், தோன்றவில்லை. ஏன்? மாமுனிவர் கார்ல்மார்க்சு தந்த 'மூலதன’த்தைத் (Capital) தவிர இன்னமும் எந்த நூலும், தோன்றவில்லை. திருக்குறள் தோன்றிய பின் பல நூறாண்டுகள் கழித்து கார்ல்மார்க்சின் ‘மூலதனம்’ முகிழ்த் திருக்கிறது. சிந்தனையில் ஒருமைப்பாடு, தத்துவப் பார்வையில் ஒரு நோக்கு, திருக்குறளுக்கும், ‘மூலதன’த்துக்குமிடையே இருப்பதை அறிந்தோர் அறியலாம். ஆயினும், அவற்றுக்குள் வேறுபாடு இல்லையென்று யாரும் கருத வேண்டாம். கார்ல்மார்க்சு தந்த மூலதனத்திற்கும் முதற் பாவலர் திருவள்ளுவர் தந்த திருக்குறளுக்கும் இடையில் முரண்பாடுகள் உண்டு. ஆயினும் முரண்பாடுகளைக் கடந்த விழுமிய ஒருமைப்பாடும் உண்டு. காலத்தால் பிந்தியதால் ‘மூலதனம்’ செய்த கார்ல்மார்க்சு, வள்ளுவம் தத்துவமாக சொன்னதை விரிவாக்கி விளக்க உரை தந்துள்ளார். லெனின், அந்த ‘மூலதன’த்தையும் விரிவாக்கி விளக்கினார். காலம் வளர வளரக் கருத்து வளர்தலும், தெளிவு தெரிதலும் இயற்கை.

மார்க்சீயம்; அறிவு நிலையானது என்று கூறுவதல்ல. அறிவு, வளர்ச்சிக்குரியது. அறிவு, மேன்மேலும் வளராமல் தேக்க நிலை எய்துமானால் மனித சமுதாயம் பாழ்படும் என்பது மார்க்சீயத்தின் மெய்ஞ்ஞானம். ஆம்! ஊற்றுவளம் இல்லாத நீர்நிலை கெட்டுத்தானே போகும்? ஒடும் இயல்பில்லாத ஒன்றுக்கு ஆறு என்று பெயருண்டோ? அதுபோல வளரும் இயல்பில்லாத ஒன்றுக்கு அறிவு என்று பெயர் சொல்ல முடியாது. திருக்குறளும் ‘அறிதோறு அறியாமை’ என்றது.

மனிதன், அவன் வாழும் சூழ்நிலைகளால் உருவாக்கப் படுகின்றான். அவனுக்கென்று தனியே ஒரு குணம் இல்லை. மனிதனுடைய எண்ணம், கருத்து ஆகியவை கூட அவன் சார்ந்துள்ள புறச் சூழ்நிலைகளின் பிரதிபலிப்பேயாகும் என்பது மார்க்சீயத் தத்துவம். நமது திருவள்ளுவம் இதனையே.

"மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு”

என்றது.

மார்க்சீயம், சொற்களுக்குக் காணும்பொருளே வேறு. மார்க்சீய அகராதியில் ‘பொருள்’ என்றால் தங்கம்- நாணயம் ஆகியவற்றை ஒரு பொழுதும் குறிக்காது. மனிதக் குலத்திற்குப் பயன்படும் தகுதி குறித்தே பொருளுக்கு மதிப்பு என்பது மார்க்சீயத்தின் சித்தாந்தம். திருக்குறளும் ‘பொருள்’ என்ற சொல்லுக்கும் பொருளாகக் காட்டியது; மனிதகுலம் துய்த்து மகிழ்ந்து அனுபவித்து வாழக்கூடிய, வாழவைக்கக் கூடிய பொருள்களையே. "பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லை" என்ற திருக்குறளுக்கு இதுவே கருத்து. உடல்-உயிர்ப் பிணைப்பில் நடமாடும் மனித உலகம் நெடிதுநாள் வளர வாழ உண்பனவும், தின்பனவும் ஆகிய துய்ப்புப் பொருள்கள் தேவை. அத்தகைய பொருள்களே பொருள்கள் என்பது வள்ளுவத்தின் செழுமையான கருத்து.

உழைப்பாற்றலே மனிதனுக்குரிய ஒரே உடமையாக இருக்க வேண்டும், என்பது மார்க்சீயம். "உழைக்காதவனுக்கு உண்ண உரிமை இல்லை" என்றே மார்க்சீயம் ஐயத்திற்கு இடமின்றித் தெரிவிக்கிறது. நமது திருக்குறளும்.

"உள்ளம் உடைமை உடைமை" என்றும்
"உடைய ரெனப்படுவ துரக்க மஃதிலார்
உடைய ருடையரோ மற்று"

என்றும் கூறியுள்ளது. வள்ளுவம் உடைமை வர்க்கத்தினருக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்திருக்கிறது.

மார்க்சீயம் உழைப்பாளிகளின் பாற்பட்டது. உழைப்பாளர் உலகத்தை உயர்த்துவது. மார்க்சீய தத்துவப்படி உழைப்பவர்களுக்கே எல்லாம்! அவர்களுக்கே மரியாதை! வள்ளுவத்தின் வழி என்ன?

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"

என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குரல் கொடுத்தது. உழுபவரே உயர்ந்தோர்! உழுபவரே வாழ்பவர்! உழுபவரே தொழத் தக்கவர்! ஆனால், வள்ளுவம் பிறந்த நாட்டில் இன்னமும் உழுவோரைத் தொழத்தக்க சூழ்நிலை உருவாகவில்லை.

மார்க்சீயத்தின் உயிரனைய கொள்கை, உழைப்புக்குத் தகுந்த ஊதியம் என்பது. உழைப்போர் செல்வத்தை, யாரும் கொள்ளை கொள்ளக் கூடாது. இதனை வள்ளுவம் மிக நாகரிகமாக எடுத்தோதிற்று; ‘தாழ்விலாச் செல்வர்’ என்று பிறரைத் தாழ்த்தாத செல்வரே தாழ்விலாச் செல்வர். அது மட்டுமா? துலாக் கோலில் எடைகாண இடப்புெறும் பொருளும், எடை காட்டும் கல்லும் சமநிலையில் இருக்க வேண்டும். துலாக்கோலில் எடைக் கல்லோடு பொருளிடும் தட்டு சமநிலையில் நிற்காமல் தாழுமானால் பொருள் அதிகமாகும். அல்லது இடைக்கல் தாழுமானாலும் அப்படியே! சில சூது வணிகர்கள் பொருளிடும் தட்டின் அடியில் புளியை ஒட்டவைத்து வஞ்சனை செய்து பொருளைக் குறைப்பர். அதுபோல ஒருவர் பெற்றிருக்கும் பொருளைக் குறைப்பர். அதுபோல ஒருவர் பெற்றிருக்கும் பொருளை அல்லது செல்வத்தை அவருடைய உழைப்பாற்றலோடு எண்ணி எடையிட்டுப் பார்க்கும் பொழுது அவர் உழைப்பும் ஆற்றலும் அவர் பெற்ற பொருளும் சமநிலையில் இருக்க வேண்டும். அங்ஙனமின்றி நியாயமில்லாத ஒன்றை நியாயமென்று சொல்லி, வளைந்த கோலைச் செங்கோல் என்று செப்பி, மற்றவர் பொருளை வஞ்சித்தெடுத்த செல்வம் தாழ்வுடைச் செல்வமாகும். தாழ்விலாச் செல்வர் என்று வள்ளுவம் வகுத்ததே, மார்க்சீய சிந்தனையினுடைய தொடக்க காலமாகும்.

வள்ளுவம், மார்க்சீயத்திற்கு முன்னே தோன்றியது. வள்ளுவம் தமிழகப் பழமையில் பூத்த புதுமைநெறி; பொதுமை நெறி. வள்ளுவத்தின் வழி பொதுமை மலருமானால் நம்முடைய மரபுகள் தடம்புரளா, அங்ஙனம் பொதுமை மலராது போனால் வரலாறு எந்தத் திசையில் திரும்பும் என்று இப்போதைக்குக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. வள்ளுவம் வையகத்தின் வாழ்க்கையாக மலரப் பணி செய்வதே இன்று நமது கடமையாகும். தலையாயப் பணியாகும்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு...நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி
    ஆரம்படைத்த தமிழ்நாடு

- பாரதியார்