குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வேற்றுமையில் ஒற்றுமை

50. வேற்றுமையில் ஒற்றுமை

இனிய செல்வ,

'சரித்திரம் திரும்பி வருகிறது’ என்பார்கள்! உனக்கு எப்போதுமே சரித்திரம் திரும்பி வருவது பிடிப்பதில்லை. அதுவும் நம்முடைய நாட்டுச் சரித்திரம் பின் தொடரக்கூடாது. ஏன்? நம்முடைய நாட்டுச் சரித்திரத்தில் பெருமைப்படத்தக்க நிகழ்ச்சிகள் பல உண்டு என்பது உண்மையேயாயினும் அதில் பல சந்தர்ப்பங்களில் உயிர்ப்பு இருந்த தில்லை; பரவலாக நாட்டு மக்களிடையே விழிப்பு இருந்ததில்லை. பல தலைமுறைகளுக்கு ஒர் அறிஞன் தோன்றுவான்; ஒரு மேதை தோன்றுவான்; அத்திபூத்தாற்போல ஒரு சில அரசியல் தலைவர்கள் தோன்றுவார்கள். இனிய செல்வ, நமது நாட்டில் மிகப்பழங்காலமே சிறப்புடையது. வரவரக் கெட்டும் போய்விட்டது! இல்லை. நாட்டை நாம் கெடுத்துவிட்டோம்!

இனிய செல்வ, ஆம்! நிலப்பிரபுத்துவம் தோன்றியது. ஜமீன்தாரிமுறை நாட்டில் தோன்றியது; பண்ணையடிமை முறை தோன்றியது; மதங்கள் தோன்றின; சாதிமுறைகள் தோன்றின; மூடத்தனங்கள் முளை விட்டன; புரோகிதர்கள் தோன்றினர்! இந்தத் தீமைகளை ஊக்கமளித்து வளர்த்த அரசுகள் தொடக்கத்தில் அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொண்டன. காலப்போக்கில் நமது நாட்டு அரசர்கள் ஊக்கமளித்து வளர்த்த சக்திகளே அரசர்களை அழித்தன. இனிய செல்வ, அந்நிய ஆட்சிகள் வந்தன! அந்திய ஆட்சிகளும் இந்தியர்களுக்குள் பிரிவினைகளை வளர்த்தே தம் ஆட்சியை நிலைப்படுத்தின. ஆயினும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகள் வரலாற்றுப் போக்கில் படுதோல்வி அடைந்தன.

அண்ணல் காந்தியடிகள் நமது நாட்டின் பொது வாழ்க்கையில் கால் எடுத்து வைத்தார்; குறுகிய புத்திகளால் கூன் விழுந்து கிடந்த இந்திய சமூகத்தை உற்று நோக்கினார்! கூனை நிமிர்த்தார்! சாதிகளை மறந்தோம் மதங்களும் தத்தம் செல்வாக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டன. இனிய செல்வ, எல்லாரும் "இந்திய”ரானோம்! நாடு விடுதலை பெற்றது. இனிய செல்வ, நாடு விடுதலை பெற்றதும் மக்களாட்சி தோன்றியது! மக்களாட்சி தோன்றிய பிறகு நமது வரவாறு பழைய நிலைக்குப் போகிறது! இனிய செல்வ. இது நல்லதா? பழைய வரலாறு திரும்புகிறது! அன்று மன்னர்கள் செய்தார்கள்! இன்று ஆள்வோரே செய்கின்றனர்! இன்றும் சாதிகள் வளர்க்கப்படுகின்றன! வர்க்கப்போருக்குப் பதில் சாதீயச் சண்டை நடக்கின்றன! ஏன்? மக்களிடையே மீண்டும் சாதீய மனோநிலைகளைத் தோற்றுவித்து அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். அரசை, அதிகாரத்தைப் பாதுகாக்கும் உத்தியாக மேற்கொண்டுள்ளனர். இன்று அரசியல் பிரச்சனையே பூதாகரமாகக் காட்டப்படுகிறது. மனித உறவுகளைப் பற்றிச் சிந்திக்கத் தவறுகின்றோம். நம்மால் இன்று அலட்சியப்படுத்தப்படுவது நாட்டின் அடிப்படை பிரச்சனைகளே! அதாவது, மனித நேயத்தை, மனித உறவுகளை அலட்சியப்படுத்துகின்றோம். இனிய செல்வ, நமது நாட்டிலும் சரி, உலக நாடுகளிலும் சரி முற்காலத்தில் மனித உறவுகள் போற்றி வளர்க்கப்பெற்றன. சாதிகள், மதங்கள், அதிகாரங்கள், மரியாதைகள், சம்பிரதாயங்கள் இவைகளைக் கடந்த நிலையில் நமது நாட்டில் ஒரு காலத்தில் மனிதம் மதிக்கப் பெற்றது; சமுதாய உறவுகளில் நிதானம் இருந்தது.

இன்று அந்த நிதானம் எங்குப் போயிற்று? நிதானம் முன்னேற்றத்துக்கு முரண்பட்ட ஒழுக்கமா? இல்லை, பகைத்துத்தான் வாழவேண்டுமா? எதையாவது ஒன்றை இழந்தால்தான் வாழ இயலுமா? இயலாதா? பழைய ஞானத்துடன் விஞ்ஞானம் இணையாதா? பாபர் மசூதியை இழந்தால்தான் இராமர் கோயில் தோன்றுமா? இனிய செல்வ, நாம் போகிற போக்கைப் பார்த்தால் ஞானம்-விஞ்ஞானம் என்ற இரண்டையுமே இழந்துவிட்டு சாதிகளையும் மதங்களையும் சண்டைகளையும் தான் பாதுகாப்போம் போலத் தோன்றுகிறது. இது விரும்பத்தக்க தல்ல.

இனிய செல்வ, உலகில் வேற்றுமைகளே அதிகம். அதிலும் இந்தியாவில் வேற்றுமைகள் ஏராளம்! நாம் வேற்றுமையைத் தேட வேண்டாம். அவை எளிதில் புலனாகின்றன. ஆயினும் வேற்றுமைகளுக்கிடையில் ஒற்றுமையைக் காண்பதை. வளர்ப்பதை விழுமிய குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். எண்ணத் தொலையாத சாதிகள் உள்ளன. மண்டல் குழுப் பட்டியல்படி 3743 சாதிகள்! இந்தியாவில் நூற்றுக் கணக்கான மதங்கள்! அரசியல் கட்சிகள் பலப்பல! இப்படி இந்தியா இன்று பலப்பல குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தக் குழு மனப்பான்மையை அரசுகள் ஊக்கமளித்து வளர்க்கின்றன. எங்கும் உட்பகை! இதனால் இந்தியா இன்று வேந்தமைவு இல்லாத நாடாக ஆகி வருகிறது. எங்கும் கலவரம்! கொலைகள்! தற்கொலைகள்! அரசுடைமைப் பொருள்கள் இழப்பு! ஏன் அரசே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இனிய செல்வ,

"பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு"

என்ற திருவள்ளுவர் வாக்கு உண்மையாகி வருகிறது.

இன்ப அன்பு

அடிகளார்