குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4/ஏன் திருக்குறள் பேரவை?

15
ஏன் திருக்குறள் பேரவை?

மனிதகுலத்தின் மேம்பாடு அறிவின் வழிப்பட்டது; ஆள்வினையின் வழியது. மனித குலத்தின் அமைதி, நீதியைச் சார்ந்தது. மனித குலத்தின் உயிர்ப்பு, விழுமிய கடவுள் நெறி. இத்தகு உயர்நெறியில் மனித குலத்தை உய்த்துச் செலுத்த ஒரு நூல் தேவை. அந்த நூல் எதுவாக இருக்கக்கூடும்? நூல்கள் காடுகள் போல் பல்கி உள்ளன. அவற்றுள் பல, நூலின் இலக்கணத்திற்கு மாறுபட்டவை. நூல்கள் மனக் கோட்டத்தைத் தவிர்க்க வேண்டியவை. ஆனால் இந்த நூல்களில் பெரும்பான்மையான நூல்கள் மனக் கோட்டத்தை உண்டாக்குவனவாக அமைந்துள்ளன. இலக்கியக் காட்டில் ஒரே ஒரு நூல் உயர்ந்து விளங்குகின்றது. சர் ஆல்பர்ட் சுவைட்சர், சிந்தைக்கினிய செவிக்கினிய வார்த்தைகளால் அந்த நூலைப் பாராட்டுகிறார். “உயர்ந்த நீதி இலக்கியங்களில் திருக்குறளே சிறந்தது. மனிதராகப் பிறந்தோர் பேசும் வேறு எம் மொழியிலும் திருக்குறளை யொப்ப ஒரு நூல் இல்லை” என்று அவர் பாராட்டியுள்ளார். திருவள்ளுவர் தந்த திருக்குறளுக்கு என்ன சிறப்பு?

திருக்குறள் ஒரு முழுநூல்; வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் தழுவி வளர்க்கும் வாழ்க்கை நூல்; அறநூல்; அரசியல் சாத்திர நூல்; அரசியல் உண்மைகளைச் சதுரப்பாட்டுடன் காட்டும் பெருநூல்; மெய்யுணர்வினை நல்கும் ஞானநூல்; மனித வளர்ச்சியின் பருவம் தோறும் துணைநின்று வழிநடத்தும் வாழ்வு நூல்; உலகப் பொதுநூல். திருக்குறள் கடவுளை நம்புகிறது. ஆனால் கடவுளுக்காகச் செய்யப்பட்ட நூலன்று; மதச்சார்பான நூலன்று. திருக்குறள் அரசனை நம்புகிறது. ஆனால், அரசனுக்காகச் செய்யப்பட்ட நூலன்று. திருக்குறள் ஓர் அரசியல் நூலே. மக்களின் உரிமைகளுக்கு அரண் செய்து நிற்கும் நூலே. கடவுளையும் அரசனையும் முன்னிலைப்படுத்தி, அவர்களுக்காகவே தோன்றும் இலக்கியங்கள் மக்களை மறந்து விடுவனவாக அமைந்து விட்டன. திருக்குறள் மனிதனை முன்னிலைப்படுத்துகிறது. ஆதலால், திருக்குறள் புதுமை நிறைந்தது; பொதுமை தழுவியது.

திருக்குறள் மனித சமுதாயத்தைச் சீருற வளர்த்து அவ்வழி அந்தச் சமுதாயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் குடும்பத்தைச் செழுமைப்படுத்தி அதன் பயனாகத் தனிமனிதனைச் செழுமையாக வளர்த்து மீண்டும் சமுதாயம் பயனுறும் வகையில் சமுதாயத்தை இயக்கும் நூல். மனித குலத்தை வேறுபடுத்திப் பகைவளர்க்கும் எந்த ஒரு கொள்கையையும், கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ளாதது. திருக்குறளுக்குரிய ஒரே பெருமை. நாடு, மொழி, இனம், சமயம் ஆகிய வேறுபாடுகளைத் திருக்குறள் தழுவவில்லை. மாறாக, முற்றாக ஒதுக்கியிருக்கிறது. நாட்டுப்பற்றும் கூட எல்லை கடக்கும்பொழுது பகையை வளர்க்கிறது. என்நாடு சிறந்தது எனப் போராடத் தொடங்குகின்றனர். திருக்குறள் நாட்டின் இலக்கணம் பேசுகிறது. ஆனால், அது தமிழ்நாட்டைப் பற்றிப் பேசவில்லை. திருக்குறள் உலகம் தழீஇய ஒட்பம் உடையது.

திருக்குறள், வாழ்க்கையில் பிறந்த வாழ்வியல் நூல்; திருக்குறள் வாழ்க்கையோடிசைந்த அறநூல். திருக்குறள் சமய நூல். ஆனால் உலகப் பொதுச் சமயநூல்; சமயங்களைக் கடந்த பொதுநெறி நூல். திருக்குறள் மானுடத்தின் வெற்றியைக் குறிக்கோளாக உடையது. திருவள்ளுவத்தின் வழி வையகம் இயங்கும் போது இன்பம் மலரும்; துன்பம் நீங்கும்.

திருக்குறள் தமிழிலே தோன்றியிருந்தும் தமிழர்களின் வாழ்வியல் திருக்குறள் வழியதாக அமையவில்லை. பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்டோ, ரூசோ, சோவியத் புரட்சிக்கு வித்திட்ட லெனின் ஆகிய மாமேதைகளுக்குத் திருவள்ளுவர் ஒப்பானவர்; காலத்தால் நோக்க உயர்ந்தவர். திருக்குறள் காட்டும் சமுதாய அமைப்பில் உயர்வு தாழ்வு இல்லை. ஆயினும் இன்றைய தமிழகத்தில் வாழும் நெறி எப்படி இருக்கிறது? வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் தடுமாற்றங்கள்! முறை பிறழ்வுகள்! ஒரு கடவுள் வழிபாடு இல்லை! பல நூறு ஆண்டுகளாகக் கடிந்து ஒதுக்கப் பெற்ற சிறு தெய்வ வழிபாடுகள் இன்னும் மறைந்தபாடில்லை.

மேட்டுக்குடி மதத்தலைவர்கள் சாதிமுறைகளைப் பத்திரமாகப் பாதுகாக்கச் சிறுதெய்வ வழிபாடுகளை ஊக்கப்படுத்துகின்றனர். வாலறிவு-ஞானம் வளர்வதற்குத் தடையாகச் சடங்குகளிலேயே மக்களை ஈடுபடுத்தி அலைக் கழிவு செய்கின்றனர்; ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று பெரு நெறிகாட்டிய தமிழ் நாட்டில் எண்ணத் தொலையாத சாதிகள்! இன, மத வேற்றுமைகள்! பிரிவினைகள்! பகைமை வழிப்பட்ட மோதல்கள்! அவ்வழியிலாகிய அழுக்காறு! இவை அகன்ற பாடில்லை. ‘இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு’ என்று திருவள்ளுவர் வருந்திக் கோடிட்டுக் காட்டிய வறுமை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. ஏன்? அன்பினால் இணைக்கப்பெற்று ஒருமையுணர்வுடன் வாழ வேண்டிய உயிர்க்குலம் உட்பகையால் உள்ளீடு அழிந்துவருகிறது. இந்த அவல நிலையிலிருந்து தமிழகத்தை-மனிதகுலத்தை மீட்பதற்குரிய ஒரேவழி திருக்குறளின் அறத்தை வாழ்வியலறமாக, வாழ்வியற் சட்டமாக ஏற்றுக் கொள்வதுதான்.

திருக்குறள் பேரவை இந்த முயற்சிக்காகத் தொடங்கப்பெறுகிறது. திருக்குறளுக்குப் பல உரைகள் உள்ளன; எண்ணிலா மொழி பெயர்ப்புகள் உள்ளன. திருக்குறள் இடம்பெறாத நூலகம் உலகில் இல்லை. திருக்குறளைத் தொட்டுக் காட்டாத சொற்பொழிவாளர் இல்லை! இப்பணிகளைச் செய்வது திருக்குறள் பேரவையின் பணியன்று. ஆனால், அவை செய்யக் கூடாதன என்று விலக்கப் பட்டனவும் அல்ல. திருக்குறள் பேரவையின் முதல்நோக்கம் திருக்குறளை முழுதாகக் கற்றலாகும். மேலும் திருக்குறட் கருத்தை, கொள்கைகளை, கோட்பாடுகளை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திச் சோதனைகள் செய்து வெற்றிபெற அறிஞர்கள் ஒரு சில நூறு பேர்களையாவது படைத்திடுவது என்பதாகும். வாழ்க்கையின் அனைத்துச் சிக்கல்களுக்கும் திருக்குறள்வழி தீர்வு காண்பது என்பது திருக்குறள் பேரவையின் குறிக்கோள். திருக்குறளைவிட உயர்ந்த நூலில்லை; திருவள்ளுவரை விடச் சிறந்த ஆசிரியரில்லை என்ற கருத்தில் பேரவை உறுதியாக இருக்கும். நமது சமுதாயம் வாழ்க்கைக்கு ஒத்துவராத-வர இயலாத அயல்வழி கருத்துக்களால் ஊடுருவப் பெற்று உள்ளீடழிந்து உருக்குலைந்து ‘அதிர்ஷ்டத்தை நம்பி ஆள்வினையை இழந்து, அறியாமையே அறிவு என மயங்கி, ஒருமைப்பாட்டை இழந்து களிப்பை நாடி, கடவுளை மறந்து தேவதைகளை நாடிச் செல்லும் இழிநிலை ஏற்பட்டது. இதற்கொரு முடிவுகட்டி எங்கும் கல்வி, அறிவின் வளர்ச்சி, ஆள்வினையின் ஆக்கம், ஒல்காப்பெரும் புகழ் ஒப்புரவுநெறி, குடிதழீஇய செங்கோல், உடம்பொடு உயிரனையராகக் கூடிவாழும் காதலர், உயிர்க்கு உறுகண் செய்யாத உயர்தவத்தோர், நடுவூரில் ஊருணி, பயன்மரம், மருந்துமரம் அனைய சமுதாய நெறி இவைகளை வளர்த்து வையகத்திற்குப் புகழ் சேர்க்க வள்ளுவத்தைக் கருவியாகப் பயன்படுத்துதல் திருக்குறள் பேரவையின் நோக்கம்.

அன்புகர்ந்து திருக்குறள் பேரவையைத் தொடங்குங்கள். நமது மரபின் வழிவந்தவர்களை, திருக்குறளே வாழ்க்கை மறையென நம்பச் செய்யுங்கள். திருப்பித் திருப்பித் திருக்குறளை ஓதச் செய்யுங்கள். திருக்குறள் தெளிவு வகுப்பு நடத்துங்கள்; வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணத் திருக்குறள் சிந்தனைச் சூழல்களை அமையுங்கள்; திருவள்ளுவர் காட்டும் தனக்குவமையில்லாதான் தாள்களை மட்டுமே தொழுங்கள். திருக்குறள் பேரவை தமிழகத்தைத் தழுவிய இயக்கமாக வேண்டும். அஃது உலகு தழுவியதாக மலரவேண்டும். ஆனாலும், ஆரவாரமாக வளரவேண்டாம். இலட்சியப் பிடிப்புடையதாக அமையவேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்! இந்தத் தலைமுறையில் தமிழகத்தின் வாழ்வு திருக்குறள் வழியதாக அமையும் புரட்சியை நாம் செய்து முடிக்கத் திருக்குறள் பேரவை அமையுங்கள்! கருத்துப் புரட்சிக்கு வித்திடுங்கள்! திருக்குறளின் தத்துவங்கள் அனைத்தும் செயலுருவம் பெறப் பணி செய்வோமாக! வையகம் வள்ளுவம் வழியில் நடப்பதாக!