குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4/திருக்குறள் காட்டும் நீதி

8
திருக்குறள் காட்டும் நீதி

திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. ஆயினும் உலகில் தோன்றிய அரசியல், சமூக சமய நூல்கள் பலவற்றுள்ளும் சிறந்து விளங்குவது. கிரேக்க நாட்டுச் சிந்தனையாளன் சாக்ரடீஸின் மறு பிறப்போ என்று எண்ணக்கூடிய அளவுக்குச் சாக்ரடீஸின் சிந்தனையுடன் திருவள்ளுவர் சிந்தனை ஒத்துள்ளது.

அதுமட்டுமல்ல. சாக்ரடீஸ் முடியரசை ஆதரித்தார். முடியரசை அரசின் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அரசனுக்கு ஆலோசனை கூறினார்.

மக்களைக் கேளிக்கைகளிலும் திருவிழாக்களிலும் ஈடுபடும்படி செய்து அரசைப் பற்றி, அரசியலைப் பற்றி, அரசின் நடைமுறைகளைப் பற்றிச் சிந்திக்கின்ற வாய்ப்பை வழங்காதிருக்கும்படி ஆலோசனை கூறினார்.

ஆனால், திருவள்ளுவர் முடியாட்சியைச் சார்ந்து எழுதினாலும் அரசனின் ஆட்சி மக்களைத் தழுவியதாக அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.’

544

என்பது வள்ளுவம்.

அரசனின் இறையாண்மை, முறை செய்து காப்பாற்றுவதாக இருந்தால்தான் இறை என்று வைக்கப்படும் என்றும் கூறினார். இதனால், அரசனின் அதிகாரத்திற்கு எல்லை சுட்டினார். அரசனின் அதிகாரம் குடிகளின் நலன் தழீஇயதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.’

388

என்று கூறினார்.

மேலும், அரசன் நெறிமுறை பிறழின் அரசை இழப்பான் என்றும் எச்சரித்தார். அரசனின் முறை என்ன? நெறிமுறை என்ன?

அரசன் தனது குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்தவேண்டும் சாதி, குலம், கோத்திரம், மதம், உற்றார் உறவினர், வேண்டியவர் வேண்டாதவர் என்று பிரிக்கக் கூடாது. மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்க்க வேண்டும். பிறப்பில் அனைத்துயிர்களும் ஒன்றே. பிறப்பில் சாதியும் இல்லை. மதங்களும் இல்லை. பணக்காரனும் இல்லை; ஏழையும் இல்லை. பிறப்பில் வேறுபாடுகளைக் கற்பிப்பது தமிழர் வழக்கல்ல; மரபும் அல்ல!

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.’

(972)

என்பது திருக்குறள்.

அரசு, பிறப்பின் அடிப்படையில் மனிதன் என்ற அடிப்படையில் மக்களை நடத்த வேண்டும்; உரிமைகளை வழங்க வேண்டும். மனித உரிமைகள் இயற்கையாயமைந்தவை. கடவுளால் நியதி செய்யப் பெற்றவை. பிறப்பிலேயே அமைந்த உரிமைகளை யாரும் பறிக்கக்கூடாது.

இன்றைய உலக நாடுகள் சபை கூட, மனித உரிமைகள் சாசனம் கூட, மனித உரிமைகளை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஒரு அரசு, மனித உரிமைகளை மீறிக் கொடுமைப்படுத்தினால் ஐ.நா. சபை தலையிடலாம். தடா சட்டம் போன்றவை வரவேற்கத்தக்கவையல்ல. தக்க விசாரணையின்றிச் சிறையில் வைத்தலாகாது.

மனிதனின் உரிமைகள், அவன் பிறப்புடன் இயற்கையாகவே அமைந்தவை. நமது அரசியல் சட்டப் பிரிவுகள் பல செயற்பாடே இல்லாது உள்ளன. செயற்பாடில்லாதவற்றைச் செயலிழந்தவை என்று கூறுவதில் தவறு இல்லை. இந்த நிலையில் 100 தடவைக்கு மேல் சட்டம் திருத்தப் பெற்றுள்ளது.

இதில் செய்யப் பெற்ற திருத்தங்களில் மக்கள் நலம் கருதிய திருத்தங்கள் ஒன்றிரண்டுதான். இந்த வகையில் 17ஆவது அரசியல் சட்டத் திருத்தம் மிக முக்கியமானது. 17ஆவது அரசியல் சட்டத் திருத்தம் நில உடைமை பற்றியது. இந்தத் திருத்தத்தைக் கொண்டு வரும்பொழுது காங்கிரஸ் ஆட்சி செய்தது.

பிரதமர் ஜவாஹர்லால்நேரு காலத்தில் ஆளுங்கட்சிக்குப் பெரும்பான்மையிருந்தும் இந்த அரசியல் சட்டத் திருத்தம் தோற்றது. அதாவது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களிலே பலர், நிலச் சீர்திருத்தத்திற்கு உடன்பாடு காட்டவில்லை. நவ இந்தியாவின் சிற்பி பண்டித ஜவாஹர்லால் நேருவின் உயிரினை விலையாகக் கொண்டு பிறந்தது 17ஆவது சட்டத் திருத்தம்.

இத்திருத்தம் இந்திய சமுதாயத்தில் நில உடைமை அடிப்படையில் மாற்றங்களைச் செய்யக்கூடியது. ஆயினும், இந்த அரசியல் சட்டத்திருத்தம் கூட இன்னமும் நடை முறையில் வெற்றி பெறவில்லை. இன்றைய சூழ்நிலையில் வெற்றி பெறாது என்று கருத இடமிருக்கிறது.

இந்தியா புகழ்மை பொருந்திய பழைய நாடு. இந்தியா ஒரு நாடாக இருந்ததில்லை. இந்தியாவை ஆண்ட அரசர்கள் பலர். இந்தியாவை ஒரு நாடாக வெற்றி கொண்டு ஆள விரும்பியவர் பலர்.

அசோக சக்கரவர்த்தி இதில் ஓரளவு வெற்றி பெற்றார். ஆயினும் முழு வெற்றி பெறவில்லை. தமிழகத்தை வெற்றி கொள்ள இயலவில்லை.

பிரிட்டிஷ் அரசுதான் முதன் முதலாக இந்தியாவை ஒரு நாடாக “இந்தியா” என்று ஆக்கியது. இந்தியாவை உருவாக்கிய பெருமை பிரிட்டிஷாருக்கே உண்டு.

பிரிட்டிஷார் உருவாக்கிய இந்தியாவில் கூட ஆங்காங்கு பிரிட்டனின் ஆதிக்க வரம்புக்குக் கட்டுப்பட்ட தன்னாட்சி சமஸ்தானங்கள் இருந்தன. நாடு சுதந்திரம் பெற்ற பிறகுதான் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று புகழ் பெற்ற வல்லபாய்படேலின் அரிய வரலாற்றுப் புகழ் மிக்க முயற்சியால் இந்தியா ஒரு நாடாயிற்று.

இன்று இந்தியா ஒரு நாடுதான். ஆயினும் இந்தியாவில் வாழ்கின்றவர்கள் அனைவரும் இந்தியர் ஆகவில்லை. நமது நாட்டு மதங்கள் அனைத்தும் தன்னிலைப் பராமரிப்பு என்ற பெயரில் சாதி, மத உணர்வுகளையே பாதுகாத்து வருவது ஒரு காரணம். இந்து சமயம் இதில் முதல் நிலை வகிக்கிறது.

பிற சமயங்களிலும் சாதி முறைகள் வெளிப்படையாக இல்லையானாலும் அகநிலையில் பேணப்படுகின்றன. பேசப்படுகின்றன என்பதே உண்மை. ஆதலால், இந்தியன் என்ற உணர்வை விட இந்து என்ற உணர்வும், இந்தியன் என்ற உணர்வைவிட கிறிஸ்துவர் என்ற உணர்வும், இந்தியன் என்ற உணர்வைவிட இஸ்லாமியர் என்ற உணர்வுமே மேலோங்கி நிற்கிறது.

இந்த மூன்று சமுதாயத்தினரும் சம நிலையில் ஓரிடத்தில் கூட்டமாகக் கூடி அமர்ந்து சமுதாய நலன்களை நாட்டு நலன்களைப் பற்றிப் பேசும் பழக்கமே உருவாகவில்லை.

அண்மைக் காலமாக மேடைகளில் பேசி வருகிறார்கள். இது போதாது. இந்த வகையில் திருவருட் பேரவை மேலும் விரிவாகவும் விரைவாகவும் பணி செய்ய வேண்டும். எந்த ஒரு சிந்தனையும் நினைப்பும் இந்தியன் என்ற சிந்தனை அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும். அவ்வாறே பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண முயல வேண்டும்.

இந்தியர் எவரும் யாருடனும் எந்தக் காரணத்திற்காகவும் அந்நியராகக் கூடாது. ஒருமையுடையவராகவே வாழ்தல் வேண்டும்.

அடுத்து மொழி; மொழியின் தோற்றம் மனிதர்களுக்குள் உறவு உண்டாக்கவே. காலம், இடம் காரணமாகப் பல மொழிகள் உருவாயின. ஆயினும் எல்லா மொழிகளுக்கும் நோக்கம் கருத்துப் பரிமாற்றமும் உணர்வுப் பரிமாற்றமுமேயாம்.

அடுத்து, அறிவு வளர்ச்சி; அறிவு, கருத்து எல்லா மொழிகளுக்கும் பொதுவானவை. ஆதலால், மொழி வேற்றுமை பாராட்டுவதும், மொழி வேற்றுமை அடிப்படையில் இன வேற்றுமைகளைப் படைத்துக் கொண்டு முரண்படுவதும் மோதுவதும் கூடாது. அறவே கூடாது.

ஒவ்வொருவரும் பல மொழிகளையும் விரும்பிக் கற்க வேண்டும். குறைந்தது ஐந்து மொழிகளாவது கற்றால்தான் மனிதன் முழு மனிதனாவான் என்று ரஸ்கின் கூறுகின்றான்.

ஆனால் இந்திய மொழிகளில் செறிவான கலாச்சாரம் மிக்க சமஸ்கிருதம், இந்திய மக்கள் பெரும்பான்மையினரையும் இணைக்கும் இந்தி மொழி, உலக மொழி ஆங்கிலம் இவற்றைக் கற்க கூச்சப்படக்கூடாது.

தமிழ், நமது தாய்மொழி. எளிதில் கற்கலாம். பிற மொழிகளைக் கற்பது அறிவு வளர்ச்சிக்கும் மற்றவர்களுடன் கலந்து உறவாடிப் பழகுவதற்காகவுமேயாகும். ஆதலால் பிற மொழிப் பயிற்சியால் தாய் மொழியாகிய தமிழ் வளர வேண்டும். கலப்பு மொழியில் பேசக்கூடாது. எழுதக்கூடாது. தமிழ் மொழியை வடபுலத்தினர் விரும்பி ஏற்றுக் கற்க வேண்டும்.

அதற்குரியவற்றை வடபுலத்தில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் செய்ய வேண்டும். நடுவண் அரசும் தமிழ் நாடு அரசும் செய்ய வேண்டும்.

ஒரு மொழியைப் பேசவும் எழுதவும் ஆறு மாதத்திற்குள் கற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளை உண்டாக்க வேண்டும். நாடு முழுவதும் பன்மொழிப் பயிற்சியகங்களை மாலை நேரக் கல்வி நிலையங்களைத் தொடங்க வேண்டும்.

ஒருபுறம் சாதிகளின் தீமைகள் பற்றிப் பேசப்படுகிறது; பிறிதொருபுறம் சாதிகளை இறுக்கமாக்கும் வகையில் நடைமுறைகள் இருந்து வருகின்றன. பகுத்தறிவாளர்கள் சாதிகளின் தோற்றம், வளர்ச்சிக்கு மதங்களே காரணம் என்று கூறுகின்றனர்.

இது முற்றும் உண்மையன்று. வரலாற்று அடிப்படையில் நோக்கினால் நிலப் பிரபுத்துவத்தில் பிறந்து வளர்ந்ததுதான் சாதி முறை. இந்தச் சாதிமுறையை நிலப் பிரபுத்துவத்திற்கு அனுசரணையாக அங்கீகரித்த பாவத்தை மதம் செய்தது உண்மை.

ஆனால், சமய நெறியாளர்கள் தொடர்ந்து தீண்டாமையையும் சாதி வைப்புக்களையும் எதிர்த்து வந்துள்ளனர். திருவள்ளுவர், அப்பரடிகள், திருப்பாணாழ்வார், இராமாநுஜர் வள்ளலார், பாரதியார் ஆகியோர் இவர்களில் முன்னணியில் நிற்பவர்கள்.

பழங்காலத்தில் சாதி முறைகள் இருந்தாலும் நெகிழ்ந்து கொடுத்தன. சாதி வேறுபாடுகளின்றிப் பழகினர்; உறவு கொண்டு வாழ்ந்தனர். உறவு கலந்து பழகி ஒன்றாக உண்டு வாழ்ந்தனர். கலப்புத் திருமணங்கள் சந்தடியின்றி நடந்தன.

‘யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எவ்வழி கொல்லோ
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே’

என்ற அகத்திணைப் பாடல் இதற்குச் சான்று.

ஆதிசைவ மரபில் தோன்றிய நம்பியாரூரர், சிவ பெருமான் துணையுடன் குலமரபுத் திருமணம் தவிர்க்கப்பட்டுக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்.

ஆதலால் சாதி முறைகள், குலம், கோத்திர முறைகள் தவிர்க்க இயலாதவை அல்ல. மனித நேயமே முக்கியம். ‘மனிதம்’ போற்றலே இன்று தேவை, சாதிகள் பார்க்காமல், மதங்களைப் பார்க்காமல் எல்லாரும் இந்தியராக வேண்டும்.

எல்லாரும் இந்தியராதற்குத் தடையாகவுள்ள எதையும் இந்தியராகிய தாம் சிந்தனை செய்யலாகாது; நடை முறைப்படுத்தவும் கூடாது. இதுவே சமூக நீதி, அரச நீதி.