குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/இனிய நெறி
வாழ்க்கை மிக நுடபமானது. உயிர் வாழ்க்கையில் தனிமை எங்கும் இல்லை; எப்பொழுதும் இல்லை. உயிர் வாழ்க்கை என்பது இயல்பில் கூட்டு வாழ்க்கையே. ஓர் உயிர் இன்னோருயிரோடு சார்ந்து, இணைந்து, பிணைந்து வாழு தலைத் தவிர வேறு வழியில்லை. சார்ந்து வாழ்தல் என்பது பொதுத் தன்மையது. இணைந்து வாழ்தல் என்பது சார்ந்து வாழ்தலினும் வளர்ந்தது; சிறப்புடையது. இணைந்து வாழ்தலினும் சிறந்தது; பிணைந்து வாழ்தல் ஓருயிர் பிறிதொரு உயிரோடு பிணைந்து வாழும் வாழ்க்கையே பெருமைக்குரியது. சார்ந்து வாழ்தல் என்பது பொதுவான உறவினர்களை - சுற்றத்தைக் குறிக்கும். இணைந்து வாழ்தல் என்பது, குருதித் தொடர்புடைய சுற்றத்தைக் குறிக்கும். பிணைந்து வாழ்தல் என்பது நட்பு, காதல் வாழ்க்கையைக் குறிக்கும். இணைந்தும் பிணைந்தும் வாழ்தல் அருமைப் பாடுடைய கலை. ஏன்? உயிர்க்குரிய பேறுகளில் அதுவும் ஒன்று. நட்பில்லாத வாழ்க்கை, நாகரிகம் இல்லாத வாழ்க்கை தோழமை இல்லாத வாழ்க்கை தொல்லுலகில் துன்பம் தரும் வாழ்க்கை, கடவுள், உயிர்களைப் பதப்படுத்திப் படிமுறையில் வளர்க்கவே இத்தகைய இணை வாழ்வியல் முறையை வகுத்துத் தந்தருளினன். தன்னை நோக்கிக் கவலைப்படுதல் ஆண்மையை அழிக்கும்; வாழ்க்கையை நரகமாக்கும். தம்மைச் சார்ந்தாரை நோக்கிக் கவலைப்படுதல் அறிவைத் தூண்டி வளர்க்கும். ஆற்றலைப் பெருக்கும்; ஆள்வினையை வளர்க்கும்; வாழ்க்கையைச் சொர்க்கமாக்கும். வாழ்க்கையில் இந்த நுண்ணிய கலைத்திறன் இன்று நம்மில் பலருக்கு இல்லை. இன்று அவரவர்கள் அவரவர்களுக்காகவே கவலைப்படுகிறார்கள்; அழுது சாகிறார்கள். இணைந்தும் பிணைந்தும் வாழும் வாழ்க்கையில் குற்றங்களே இல்லை. அஃது எப்படி? குற்றங்களே இல்லாத வாழ்க்கையா இருக்க முடியும்? குற்றங்கள் உண்டு. குற்றங்கள் இல்லாத மானிட வாழ்க்கை இல்லை. ஆனால், இணைப்பிலும் பிணைப்பிலும் ஏற்பட்டுள்ள அன்பின் பெருக்கம் குற்றங்களைக் காண முடியாமல் மறைத்து விடுகிறது. குணங்களே தெரிகின்றன. இந்த ‘ரசவாதம்’ நடவாது போனால், அன்பு பூரணத்துவம் அடையவில்லையென்பது பொருள். இணைப்பும் பிணைப்பும் நிறை நலமுடையதாக வளரவில்லை என்பதே கருத்து.
சிறந்த தலைமகனாவதற்குரிய இலக்கணங்களைக் குறமகள் இளவெயினி எடுத்துக் கூறுகின்றார். அதில் தலையாய பண்பு, தனக்குச் சிறந்தோர் - தன்னிடத்தில் நட்புக்கிழமை கொண்டோர் தனக்குப் பிழைகள் செய்தாலும், தானறியச் செய்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். குறமகள் இளவெயினி மிகச் சதுரப்பாட்டுடன் இந்தப் பாடலை அருளிச் செய்துள்ளார்.
‘தமர்’ என்பதற்குத் ‘தம்மில்’ பிரிவில்லாதவர் என்பது பொருள். எண்ணம், உணர்வு, உறவு, உடைமை, இன்ப துன்பந் துய்ப்பு வாழ்க்கையின் நோக்கம் ஆகிய அனைத் திலும், வேறெனக் கருதாது ஒன்றுபட்டு உழல்வோர் தமராவர். இன்றைய சமுதாய அமைப்பில் இத்தகைய தமரைக் காண்பது அரிது. இல்லையென்றே கூறலாம். இன்று ‘தமர்’ என்று கூறப்படுபவரெல்லாம் பெரும்பாலும் உடல் தொடர்புடையவரேயாம். அவர்களுடைய நாட்டமெல்லாம் தன்னலமே! ஒன்றுதலல்ல! கண்டவரும் கேட்டவரும் தமராகார். உடம்பிடை உயிரன்ன ஒன்றித்து உடனிற்போரே தமர். அத்தகைய தமர், தனக்குப் பிழை செய்யின் அப்பிழையைப் பொறுத்தாற்ற வேண்டும். எப்பிழையைப் பொறுத்தாற்றல் வேண்டும்? இருவர் கூட்டில் இயங்கும் பணிகளில் தோன்றும் பிழையையா? கடமைகளில் தோன்றும் கவனக்குறைவையா? இல்லை! கடமைகளில் தோன்றும் பிழைகள் மன்னிக்க முடியாதன. ஆதலால், “தற்றப்பின்” என்றார் ஆசிரியர். தன்னை நோக்கி மரியாதை மரபில் செய்யும் பிழை. இருவர் ஒன்றாகிப் பழகித் தமர் தகுதியை அடைந்தாலே தீங்குதரும் பிழை தோன்றாது. ஒரோவழித் தோன்றினாலும் அஃது அற்பமாகிவிடும். ஒரோவழித் தன்னுடைய சிறப்புக்கு எதிரான பிழை செய்தாலும் அதைப் பொறுத்தாற்ற வேண்டும். தன்னை நோக்கிச் செய்யும் பிழையைப் பொறுக்க வேண்டுமென்று ஆசிரியர் கூறுகிறாரே தவிரக் கடமைகளின் பாற்பட்ட பிழையைப் பொறுக்கும்படி ஆசிரியர் சொல்லவில்லை. தமர் செய்யும் கடமைகளின் பாற்பட்ட பிழை தண்டனைக் குரியதல்ல; திருத்தத்திற்குரியது. ஆகத் தம்மைச் சார்ந்து நட்புறப் பயின்று தமரானோர் தனக்கு யாதேனும் பிழை செய்தாலும் அதனைத் தாங்கிக் கொள்ளாது - பொறுத்தாற்றாது ஒறுத்தல் அல்லது வெறுத்தொதுக்கல் சிறந்த தலைமைக்கு ஆகாது. குற்றங்காணப் புகின் குற்றங்கள் குறையா. குற்றங்கள் பெருகி வளரும். கடுகனைய குற்றமும் மலைபோலத் தெரியும். நிறை தெரியாது. இந்தச் சூழல் உருவாகுமானால் நஞ்சொடு கலந்த பாலைப்போல நட்புக் கெடும். தமர் தன்மை வளராது. ஆதலால், பழகியோரிடத்தில் பிழை காணற்க! தற்சார்புடைய பிழையைத்தான் ‘காணற்க’ ‘ஒறுத்தற்க’ என்கிறார். ஆனால், கடமை தொடர்பான பிழைகளைக் காண்க. ஏன்? தண்டனை வழங்கவா? இல்லை! திருத்தி வளர்க்கவே.
நல்குரவு, வறுமை, மிடிமை ஆகியன தரித்திரத்தின் படி முறைகளைக் காட்டும் சொற்கள். ஒரு பொருட் சொற்கள் என்று சொன்னாலும் சொல்லலாம். ஆனால், அது சிறப்பன்று. மீண்டும் மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பதை நினைவு கூர்க, வாடிய பயிர், பயிரை வளர்ப்பவனின் பொறுப்பின்மையை - திறமையின்மையைப் பறை சாற்றும். கிராமத்தின் ஏரிகளுக்குத் தண்ணீரை அள்ளி வந்து சேர்க்கும் வாரிகள் தூர்ந்திருப்பது அங்கு வாழும் மனிதர்க்குக் கேவலத்தைக் கொடுக்கும். குச்சி போன்ற உடம்பு, பரட்டைத் தலை, சளி சிந்தும் மூக்கு, களையற்ற முகம் - குழந்தையின் இந்த அவல நிலை அக்குழந்தையின் தாயினுடைய மானத்தை வாங்குவனவாம். கோப்பில் தாள்கள் பல்கிப் பெருகி வளர்ந்து விட்டன. கோப்பில் உள்ள தாள்கள் அழுக்கேறி ஒளி மங்கிவிட்டன. கோப்பில் உள்ள தாள்களின் ஓரங்கள் மடங்கிக் கிழிந்துவிட்டன. கோப்பின் இந்தக் காட்சி, கோப்புக்குரிய எழுத்தரின் மானத்தை வாங்குவதாகும். கோயிலில் இங்கு மங்கும் குப்பைகள்; ஒட்டடைத் தோரணங்கள்; மண்ணில் வளர வேண்டிய செடிகள் மதில்களில் வளர்கின்றன. இவை அந்தத் திருக்கோயிலின் நிர்வாகி மானத்தை வாங்குவன. கருவறையில் நாற்றம். மூர்த்தியின் மீது கசடேறிய எண்ணெயின் மெழுக்கு - பாலாடை திருவருட் பொலிவு இல்லை. இஃது அந்தத் திருமேனி அருச்சகரின் மானத்தை வாங்குவது. இவை போலப் பழங்காலத்தில் நம்முடைய முன்னோர், மற்றவர்களுடைய வறுமைக்கு நாணினர். இன்று நம்மில் சிலர் கருதுவதைப்போல அவரவர்கள் வறுமைக்கு அவரவர்களே காரணம் என்றும் அல்லது அவரவர்களுடைய தலைவிதி காரணமென்றும் கருதியதில்லை. மற்றவர்களுடைய வறுமைக்குத் தான் நாணி, அந்த வறுமையை மாற்ற முயல்வது தகுதியுடைய தலைமைக்கு இலக்கணம். இதனை இளவெயினி, பிறர் கையறவு தான் நாணுதலும் என்று கூறுகின்றார். உயர்ந்த சமூக வாழ்க்கையில், மற்றவர் ஏழையாக இருப்பது ஏழையாக இருப்பவர்க்குக் கேவலமில்லை. அவர்களை ஏழைகளாக வைத்துப் பார்த்துக் கொண்டு வாழுகிறவர்களுக்குத்தான் கேவலம். மனிதன் வாழப் பிறந்தவன் மட்டுமல்ல. மனிதன் வாழுதல், உடலைச் சார்ந்த நிழல் போன்றது. அவன் வாழ்விக்கவே பிறந்தான், அவனுடைய வாழ்விக்கும் கடமை, உடலனையது. இன்று நம்மில் பலர் உடலை மறந்து விட்டு நிழலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆதலால், வாழ்வாங்கு வாழ்பவரைக் காண முடியவில்லை. தகுதியுடைய தலைமையையும் காண முடியவில்லை. குறமகள் இளவெயினி கூறிய இனிய நெறி, வையகத்தின் வாழ்க்கை நெறியாக வேண்டும். அன்றே தலைமைப் பண்பு சிறக்கும். தரணி வாழும்.
நமக்குச் சிறந்தார் நம்முடன் பழகுபவர். பிழை செய்யின் பொறுத்தாற்றும் பண்பைப் பெற்றிடுவோமாக. நம்மைச் சுற்றிலும் வாழ்வோரின் வறுமையை எண்ணி நாணி நாளும் உழைத்து வறுமையற்ற வளமான சமுதாயம் அமைக்க உழைத்திடுவோமாக.
“தமர்தற் றப்பி னதுநோன் றல்லும்
பிறர்கை யறவு தான்நா தகுமே
...............தகுமே.”
- புறம் 157