குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/இளங்கோவடிகள் எண்ணம் ஈடேறுமா?






14


இளங்கோவடிகள் எண்ணம்
ஈடேறுமா?


இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம். சிலப்பதிகாரம் தோன்றுவதற்குச் சிலம்பு ஒரு கருவியே! சாதனமே! ஆனால் சிலப்பதிகாரம் எழுதப் படுவதற்குச் சிலம்பு மட்டுமே காரணம் அல்ல! அல்லது சிலப்பதிகாரம் பதிகம் கூறும்,

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறட் கூற்றாவதூ உம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூ உம்”

மட்டும் காரணங்கள் அல்ல. வேறு சில காரணங்களும் உண்டு. சில காரணங்கள் சிலம்பின் அடிகளிலே புலப்படுகின்றன. ஒரு சில காரணங்கள் உய்த்தறியக் கூடிய காரணங்களாகும்.

இளங்கோவடிகள் சேர அரச மரபில் தோன்றியவர். அன்றைய தமிழகத்தினுடைய அரசியல் சூழல்கள் அடிகள் அறிந்தவையே. அதாவது, தமிழ்நாடு பல பகுதிகளாகப் பிரிந்து கிடந்தது. தமிழரசர்கள் தம்முள் போரிட்டுக் கொண்டு நாட்டை அழித்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில் இளங்கோவடிகள் தமிழகத்தை ஒன்றுபடுத்த எண்ணியிருத்தல் வேண்டும். தமிழின ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கத்துடனேயே சிலப்பதிகாரத்தை இயற்றினார் இளங்கோவடிகள். அதனால், மூன்று நாடுகளையும் தழுவிய ஒரு காப்பியத்தை இயற்றினார் என்று எண்ணுவது முறையே.

தமிழ் நாட்டில் மூன்று பேரரசுகளையும் இணைத்துச் செய்யப்பெற்ற காப்பியம் சிலப்பதிகாரம். சோழ நாட்டுப் பூம்புகாரில் தொடங்கி, பாண்டிய நாட்டு மதுரையைக் கடந்து, சேர நாட்டு வஞ்சி நகரில் காப்பியம் நிறைவு பெறுகிறது. இந்த மூன்று நாடுகளையும் உள்ளடக்கிய பரப்பளவில் வளர்ந்த தமிழ் மரபுகளை இளங்கோவடிகள் விளக்கியுள்ளார்.

வஞ்சிக் காண்டத்தில் தமிழ் இன மானம் பேசப்படுகிறது. செங்குட்டுவன் அரசவை மண்டபத்தில் வீற்றிருந்தபோது கூறிய வார்த்தைகளை செங்குட்டுவன் கேட்டு

“இமையத் தாபதர் எம்க்கீங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவதாயின் ஆங்கு அஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்”

என்று சினங் கொள்கின்றான். வடபுலம் நோக்கிப் படையெடுக்க எண்ணுகின்றான்.

‘வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக்
கடவுள் எழுதவோர் கற்கொண்டு அல்லது
வறிது மீளும் என் வாய்வாள் ஆகின்
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற்
குடி நடுக் குறூ உம் கோல னரசு”

(வஞ்சிக் கால்கோள்

என்று சூளுரைக்கிறான். உடன் அவைக்களத்திலிருந்த புரோகிதன் செங்குட்டுவனை நோக்கி, “வடபுலத்து மன்னர்கள் நின்கொற்றத்தைப் பழித்திலர் மற்ற பாண்டிய சோழ அரசர்களையே” என்று கூறுகின்றான்.

“ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும்
சீர்கெழு மணிமுடிக்கு அணிந்தோ ரல்லால்
அஞ்சினர்க்கு அளிக்கும் சுடுபோர் அண்ணல்! நின்
வஞ்சினத் தெதிரும் மன்னரும் உளரோ?
இமைய வரம்ப நின் இகழ்ந்தோர் ரல்லர்
அமைய நின் சினமென ஆசான் கூற.”

(வஞ்சிக் கால்கோள் 19-24)

எனும் அடிகளைக் காண்க. செங்குட்டுவன் இந்த நிலையில் நல்ல தமிழனாக தமிழின மானம் காக்கும் தலைமகனாக விளங்குகின்றான். ஆதலால், மற்றவர் இகழ் கேட்கப் பொறுத்தானில்லை. நாங்கள் எல்லோரும் தமிழர்கள் தமிழர்க்கு வந்த பழி எனக்கும் வந்த பழியேயாம் என்று நினைக்கின்றான். தமிழருள் ஒருவனாக மூவேந்தருள் ஒருவனாக விளங்கிய செங்குட்டுவன் வடபுலம் நோக்கிப் படை நடத்துகிறான். தமிழினத்தின் மானம் காக்க! வடபுலத்து மன்னர்களான கனக விசயர்களை வெற்றி கொள்கின்றான். அவர் தம் தலையில் இமயத்தின் கல்லை ஏற்றி அக்கல் கங்கையில் நீராட்டப் பெற்றுத் தமிழகத்திற்குக் கொண்டு வரப்படுகிறது கண்ணகிக்குச் சிலை எடுக்க! வடபுலத்து மன்னர்கள் கனக விசயர் தலையில் சுமந்து வந்த கல் வந்து சேர்ந்துவிட்டது. பின் செங்குட்டுவன் தமிழர் பெற்ற வெற்றியை மற்ற சோழ பாண்டிய அரசர்களும் கண்டு, கேட்டு மகிழட்டும் என்று எண்ணி போர்க் கைதிகளை அவர்களுக்குக் காட்டிவர அனுப்பினான். ஆனால் அவர்கள் சோழ பாண்டிய அரசர்கள் அதை வேறு வகையாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். அதாவது, சேர மன்னன் செங்குட்டுவன் தனது பெருமிதத்தை அவர்கள் முன் கட்டுவதன் மூலம் தங்களை அலட்சியப்படுத்துவதாக எண்ணிவிட்டனர். காப்பியத்தின் நோக்கம் தமிழின ஒருமைப்பாடு-அடையாநிலை உருவாகிறது. செங்குட்டுவன்,


“ஏனை மன்னர் இருவரும் கூறிய
நீன்மொழி எல்லாம் நீலன் கூறத்
தாமரைச் செங்கண் தழல்நிறம் கொள்ள”

(நடுகற் 108-110)

நேரிடுகிறது.

ஆதலால், இளங்கோவடிகள் எண்ணிய ஒருமைப்பாடு கை கூடவில்லை. தமிழின ஒருமைப்பாடு என்றும் இருந்ததில்லை. சங்க காலத்தில் இரு அரசர்கள் இணைந்திருந்ததைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்,

“ஒருவீர் ஒருவீர்க் காற்றுதி ரிருவீரும்
உடனிலை திரிய ராயின் இமிழ்திரைப்
பௌவ முடித்த விப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே”

(புறம் 58 : 20-23)

என்று பாடினார்.

மேலும் தமிழர் கூடி வாழும் ஒருமை நிலையை அயலவர் புகுந்து பிரித்து விட முயல்வர் என்றும் கூறுகிறார்.

“நல்ல போலவும் நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறிய போலவும்
காதல் நெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்க நும் புணர்ச்சி”

(புறம் 58 : 24-28)

என்பதறிக.

இந்த நிலை இன்று வரை தொடர்ந்து வருகிறது. அறிஞர் அண்ணா மட்டும் இன நலம் காப்பதில், இன மானம் போற்றுவதில் ஓரளவு வெற்றி பெற்றார். அறிஞர் அண்ணா தம்மை முற்றிலும் வெறுத்த தலைவர் பெரியாரைத் தலைவராகவே கடைசி வரையில் மதித்தார்; போற்றினார். அதுபோலவே பெருந்தலைவர் காமராசரை பொற்காப்பு என்று போற்றினார். அறிஞர் அண்ணா தமிழரில் யாரையும் பகைத்துக் கொண்டதில்லை; வெறுத்தது இல்லை; பழி தூற்றியதுமில்லை.

ஒரு இனம் வளர்ந்து நிலை பெற வேண்டுமாயின் இன உணர்வும், இன மானமும் தேவை. இன ஒருமையுள்ள இனத்தின் மொழி வளரும்; வாழும் தமிழினத்திற்கு இல்லாத இனமான உணர்வும், இன நலம் காக்கும் முயற்சியும் இன ஒருமைப்பாடும் என்று தோன்றும்? இளங்கோவடிகள் எண்ணம் என்று ஈடேறும்?