குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/சங்கத் தமிழர் வாழ்வியல்




1


சங்கத் தமிழர் வாழ்வியல்


தமிழர் வாழ்வியலில் சங்க காலம் புகழ் பூத்த காலமாகும். சங்க காலத் தமிழர் சிந்தனையில், செயலில் சிறந்து விளங்கி வாழ்ந்தனர். சங்க காலத் தமிழர் கருத்து, வளம் செறிந்தது. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூட்டுச் சிந்தனை, கருத்துப் பரிமாற்றம் ஆகியவற்றில் தமிழர் வளர்ந்திருந்தமை மகிழ்றற்குரிய செய்தி.

சங்க காலத் தமிழர், சங்கம் அமைத்து மொழியை வளர்த்தனர்; சிறந்த இலக்கியங்களைக் கண்டனர்; கடவுளையும் மன்னனையும் தமிழ் ஆய்வுக்குப் பயன் படுத்தினர்; அதனால் பண்பட்டனர். தமிழர்கள் வாழ்வாங்கு வாழும் நெறியில் ஆர்வலர்கள்.

“எப்படியும் வாழ்வது” என்பது தமிழர் கொள்கை யன்று. வாழும் நெறியில் வாழ்தலும் பயன்பட வாழ்தலும் தமிழர் குறிக்கோள், கோட்பாடு. தமிழர்கள் வாழ்க்கைக்கு இலக்கணம் கண்டவர்கள். தமிழரின் வாழ்க்கை வரிச் சட்டங்களை ஆட்சி படைக்கவில்லை; புலமைச் சான்றோர்களே படைத்தனர். தமிழர், வாழ்க்கையின் செம்மைகளை வாழும் பயிற்சியில் காண முற்பட்டனர்; அரசின் ஆணை வழியல்ல. தமிழர், வையத்து வாழ்க்கையை விரும்பி ஏற்று மகிழ்ந்து வாழ்ந்தனர். தமிழர் வாழ்வியலில் காதல் இருந்தது; வீரம் விளங்கியது: அறம் இடம் பெற்றிருந்தது. சங்க காலத் தமிழர் எத்துறையிலும் எல்லை இகந்து செல்லாநெறி மேற்கொண்டொழுகினர்.

காதலிற் சிறந்து விளங்கிய தமிழர்கள் செருகளத்திலும் சிறந்தே விளங்கினர். செருகளத்தில் சிறந்து விளங்கிய வீரர்கள் காதற்களத்தில் தோல்விகளைத் தழுவத் தவறியதில்லை. சங்க காலத் தமிழர் வாழ்வியலில் தலைவன், தலைவி, சமுதாயம், ஊரவர், அரசு என உறுப்புக்கள் அனைத்தும் படிமுறையில் முழுமையுற வளர்ந்திருந்தன. சங்க காலத் தமிழர் வாழ்க்கை இன்றைக்கும் ஏற்புடையது.

ஆனால், நம்முடைய நல்லூழின்மையின் காரணமாக அயல் வழக்கின் தலையீடுகளால் தமிழர்கள் இன்று மொழியால் தமிழர்களாக வாழ்கின்றனரேயன்றி, தமிழியல் தழுவிய வாழ்க்கை வாழ்கின்றாரில்லை.

மனித வரலாறு முன்னோக்கிச் செல்வது என்றாலும், தமிழர்களைப் பொறுத்த வரையில் தடம் புரண்டு விட்டதால், திரும்பச் சென்று சங்க காலத் தமிழர் வாழ்க்கையை மீண்டும் தொடங்கினாலும் அது சிறப்புடையதாகவே அமையும். சங்க காலத் தமிழர் வாழ்வியலில் சிலவற்றைக் காண்போம்.

இன்று இந்தியத் துணைக் கண்டம் ஒரு நாடாக இல்லை; ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியத் துணைக் கண்டம் முழுதும் ஒரு நாடாக விளங்கியது. ஆங்கிலேயராட்சிக்கு முன்பு அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் இந்தியா முழுவதும் ஒரு நாடாக இருந்ததென்று சொல்வர். ஆயினும் அப்பொழுதும் தமிழ்நாடு அசோகர் ஆட்சிக்குக் கீழ் இருந்தது என்று வரலாற்றுக் குறிப்பில்லை.

ஆங்கிலேயர் ஆட்சியில்தான் இந்தியா ஒரு நாடாக உருப்பெற்றது என்பது வரலாற்று நூற் கருத்து. ஆயினும், சங்க காலத்தில் இந்தியா என்ற ஒரு நாடு வலிமை சான்ற ஆட்சி அமைப்பில், தோன்றாது போனாலும் உறவில், கருத்தில் உதவி செய்து கொள்வதில் இந்தியா ஒரு நாடாகிவிட்டது.

“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை
குன்றுமலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி
படுவ துண்டு பகலாற்றி
இனிது ருண்ட சுடர் நேமி
முழுதாண்டோர் வழி காவல்”

(புறம்-17)

என்ற பாடல் குறுங்கோழியூர் கிழார் பாடியது. இப்பாடல் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையைப் பாடியது.

இப்பாடலில் தென்குமரி என்று தென்எல்லை குறிப்பிடப் பெறுகிறது. அப்பொழுது குமரியாற்றெல்லையில் கடல் வரவில்லை. வடபெருங்கல் என்பது இமயம். கிழக்கும் மேற்கும் கடல் எல்லை. இப்பரந்த கண்டத்தில் இடையிலுள்ள குன்றுகளும் மலைகளும் காடுகளும் நாடுகளும் அவற்றிடையே வாழ்ந்த மக்களும் ஒருங்கிணைந்து அரசை ஏற்றுக் கொண்டனர். அரசும் திருந்திய அரசு. இக்கருத்தினை,

“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப”

(70–73)

என்று மதுரைக் காஞ்சியும் கூறும்.

இந்தியா, கடிதூர்ந்து செல்லும் ஊர்திகளில்லா அக்காலத்திலேயே ஒரு நாடு, ஓராட்சி என்ற அமைவினைப் பெற்றது, பெருமைப்படுதற்குரிய செய்தி.

ஒரு நாடு என்ற உணர்வு இருந்ததால் அன்று வடபுலத்தில் நடந்த பாரதப் போரில் பொருத வீரர்களுக்குச் சேரலாதன் என்ற அரசன் சோறு வழங்கினான். எப்படிச் சோறு வழங்கினான்: பாரதப் போரில் ஒரு பக்கம் சார்ந்து சோறு வழங்கவில்லை. நடுநிலைக் கொள்கையென்பது சங்க காலத் தமிழர் கண்ட கொள்கை.

கெளரவரும் பாண்டவரும் பொருது நின்றனர். அப்போரில் சேரப் பேரரசு நடுநிலைமை வகித்தது; இரண்டு தரப்பினரின் படைக்கும் சோறு வழங்கியது.

இன்றைய அரசியலில் மிகச் சிறந்த கொள்கைகளாக விளங்கும் “நடுநிலை”, ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடாமல் வேறுபாடு இன்றி உதவி செய்தல் ஆகிய கொள்கைகள் சங்க காலத் தமிழர் ஆட்சியியலில் இடம் பெற்றிருந்தன என்பது அறியத்தக்கது. இத்தகைய வரலாற்றுச் சாதனை செய்ததால் இச்சேரலாதனைப் “பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்” என்று முடிநாகனார் பாராட்டுகின்றார்.

சங்க காலத் தமிழர் வாழ்வியலில் ஆட்சிமுறை சிறப்புற அமைந்திருந்தது. மன்பதை காக்கும் அரசாக விளங்கிய சங்க காலத் தமிழரசியல் அறிஞர்களால், அறங்கூறி வழி நடத்தக் கூடியதாகவும் முறை திரிந்துழி இடித்து உரைத்து நெறியில் நிறுத்தும் இயல்புடையதாகவும் அமைந்திருந்தமை உலக வரலாற்றில் காண முடியாத ஒன்று.

மிகச் சிறந்த பேரரசுகளாக விளங்கிய இங்கிலாந்து, ஃபிரான்சு ஆகிய நாடுகளில் ஆட்சியை எதிர்த்து மக்கள் புரட்சி செய்தனர்; அரசர்களைக் கொன்றனர். தமிழக வரலாற்றில் அத்தகைய வரலாறுகள் நிகழ்ந்ததில்லை. ஏன்?

அரசர்கள் நல்லவர்களாகவும், நல்லன கேட்பவர் களாகவும் செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தர்களாகவும் மக்கட்கு, உயிரென விளங்கி உற்றன செய்தும் உறாதன நீக்கியும் நல்லன செய்த கொற்ற முடையவராகவும் விளங்கியதால் அரசை எதிர்த்த கிளர்ச்சிகள் இல்லை.

ஒரோ வழி, சில அரசர்கள் நெறிமுறை பிறழ்ந்தபோது சங்க காலப் புலமைச் சான்றோர்கள் அரசுக்கு எடுத்துக் கூறினர்; அறங்கூறி ஆற்றுப்படுத்தினர்.

சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை வெள்ளைக்குடி நாகனார், அறநெறியில் ஆற்றுப்படுத்து கின்றார். புலவரின் உரையில் அறம் இருக்கிறது; அரசியல் இருக்கிறது; தரமான கேலியும் இருக்கிறது.

அரசனிடம் நீதி வேண்டுவார்க்கு, மழை வேண்டி நிற்கும் உழவர்க்கு உரிய காலத்தில் பெய்யும் மழைபோல நீதி கிடைக்க வேண்டும். “நீதியைக் காலம் கடத்துவது நீதியை மறுப்பதற்கு ஒப்பானதே!” என்பர். நீதி உரிய காலத்தில் கிடைக்க வேண்டும் என்ற நெறியைச் சங்க காலம் பொன்னே போற் போற்றியிருக்கிறது.

அரசன், தன் கொற்றத்தின் அடையாளமாகிய வெண் கொற்றக் குடையின் கீழ் அமர்ந்திருக்கிறான். குடை வெயிலை மறைப்பதற்கல்ல என்று புலவர் நையாண்டி செய்கின்றார். பின் ஏன் குடை? “வருத்தமுற்ற குடியைத் தண்ணளி தந்து நிழல் போல் பேணுதலின் சின்னமே வெண்கொற்றக்குடை.

செருகளத்தில் வெற்றி பல பெற்றோம் என்று எண்ணி மகிழற்க! பொருநர் தந்த வெற்றி, நிலத்தை உழுது வேளாண்மை செய்து செந்நெல் குவித்த உழவர் தந்த கொடை, வெற்றி! மறவற்க!” என்று எடுத்தும் கூறும் அறவுரை.

அண்மைக் காலத்தில் நம்முடைய நாட்டைப் போர் வருத்திய போது, நம்முடைய நாட்டின் பிரதமராக விளங்கிய அமரர் சாஸ்திரியார் அவர்கள் ‘ஜெய்கிஸான்’ என்று சொன்னதை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

உழவர் உழுபயன் மிகுந்து விளங்க, வான் மழை பெய்ய வேண்டும்; பெய்தால் மட்டும் போதாது; பெய்யும் காலத்தில் பெய்ய வேண்டும். மழை பெய்யாது போனாலும், காலம் மாறி மழை பெய்தாலும் சங்க காலத் தமிழர், ‘பாழாய்ப் போன வானம்’ என்று வானத்தைப் பழிதூற்றார்.

மழை பெய்யாமைக்குக் காரணம் நெறிமுறை தவறிய மக்களும், அரசுமே என்பது சங்க காலத் தமிழர் கருத்து. மக்களும், அரசு வழியினராதலின் அரசையே மிகுதியும் பழி தூற்றுவர். ஆதலால் மக்கள் தூற்றாத அரசாக அமைய வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.

தனிப்பட்டோர் வாழ்க்கையிலும், பேரரசுகளின் வாழ்க்கையிலும்கூட மிகுதியும் கெடுதல் செய்வோர் கோள் சொல்வோரேயாம். கோள் சொல்பவர்கள் யாருக்கும் இனியராக இருக்க மாட்டார்கள்; அயலவர்கள் ஆகி விடுவார்கள்.

கோள் சொல்லுபவனை, நச்சுப்பாம்பு போன்றவன் என்றே உருவகம் செய்கிறது இலக்கிய உலகு. நச்சுப் பாம்பனைய அவனிடம் செவியைக் கடிக்கக் கொடுக்கும் ஒருவன், அக்கணமே இறந்தவனை ஒத்தவனாகிறான் என்பது இலக்கியக் கருத்து. இங்ஙனம் கோள் சொல்லிப் பிழைப்பவர்கள் தீயவர்கள். கோள் சொல்பவர்களை ஒழிக்க வேண்டுமானால் அவர்களைத் திருத்த முயல்வது பயன் தராது; திருத்தவும் முடியாது.

கோள் கேட்பவர்கள் தாம் திருந்த வேண்டும். கோளினைக் கேட்பவர்கள் இல்லாது போனால் கோள் சொல்பவர்கள் ஏது? குடும்பங்களும் நிறுவனங்களும் அரசுகளும் நிலை தளர்ந்து கெடுவதற்கு, கோளினைக் கேட்கும் கெட்ட பழக்கமே காரணம். ஆனால், இன்றும் கோள் சொல்வோர் எண்ணிக்கை பெருகி வளர்ந்து வருகிறதே தவிரக் குறையவில்லை.

நாடு தழுவிய நிலையிலே கூட இன்று கோள் சொல்வோர் கொட்டமடித்து வாழ்கின்றனர். கோள் கேட்கும் நிலை உள்ள வரையில் நாட்டில் அச்சத்தை அகற்ற முடியாது; சிறு செயல் செய்யும் கயவரை ஒடுக்க முடியாது. ஆட்சியாளருக்குக் கோள்கேட்கும் பழக்கம் இருக்குமாயின் அது அவர்கட்கு தீங்கு; அவர்கள் ஆட்சியின் கீழிருக்கும் மக்களுக்கும் தீங்கு.

ஆட்சியாளர்கள் கோள்கேட்கக் கூடாது என்பதற் காகத்தான் “ஒற்றர் அமைத்துக் கொள்ள உரிமை தந்தது சமுதாயம். கோள் சொல்பவன், சண்டைகளை வளர்ப்பவன்; கலகங்களைத் தூண்டுபவன். ஒற்றர் சொல்வது சண்டை கள்ைத் தவிர்க்கும், கலகத்தைத் தவிர்க்கும்.

எனவே வெள்ளைக்குடி நாகனார், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை அறமுரைத்து ஆற்றுப்படுத்துகிறார். கோள் சொல்பவன் வார்த்தையைக் கேட்காதே! ஏரைப் பாதுகாக்கும் குடியினரைப் பாதுகாப்பாயாக! அவ்வழி மற்ற குடியினரையும் பாதுகாப்பாயாக! என்பது கருத்து.

ஆதலால் நாடும் நாட்டில் வளமும் சிறக்க நல்லாட்சி அமைய வேண்டும்.

“முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோர்ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோரே,
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்”

“கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயின்மறைக் கொண்டன்றோ? அன்றே! வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ!
...........................”

“மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்இக் கண்அகல் ஞாலம்
அதுநன்கு அறிந்தனை யாயின் நீயும்”

“நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறந் தருகுவை யாயின்நின்
அடிபுறந் தரு வர் அடங்கா தோரே.

(புறம்; 35-15-22, 27-34)

அரசு முறை அமைந்தவுடனேயே அரசுக்கு மக்கள் வரி கொடுப்பது கடமையாகிறது; அரசுக்கு மக்களிடம் வரி வாங்கிக் கொள்ளுதல் உரிமையாகிறது. இது தவிர்க்க முடியாத நியதி.

சங்கத் தமிழரின் ஆட்சியியலில் இந்த வரிக்கொள்கை தெளிவாக வரையறுக்கப் பெற்றுள்ளது. அரசன் வரி விதிப்பில் மட்டுமன்று, வரி வசூலிக்கும் முறையிலும் சிறந்த நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையும் வலியுறுத்தப் பெற்றுள்ளது.

பாண்டியன் அறிவுடை நம்பி என்ற பேரரசனைப் பிசிராந்தையார் என்ற பெரும் புலவர் நயம்பட எடுத்துக் கூறி வழி நடத்தும் பாட்டு, எண்ணுதலுக்குரியது.

ஒரு சிறிய நிலப்பரப்பில் விளைந்த நெல்கொண்டு, யானைக்குப் பல நாள்களுக்கு உணவு வழங்கி வளர்க்கலாம். எப்பொழுது? முறையாக நெல்லை விளைவித்து முறையாக அறுவடை செய்து, முறையாகச் சோறாக்கி யானையைக் கட்டி உணவு கொடுத்தால்!

இங்ஙனம் செய்யத் தவறி யானையையே நெல் வயலுக்குள் புகுந்து தின்ன அனுமதித்தால் மிகப் பெரிய பரப்பளவுள்ள நிலமேயாயினும் யானைக்கும் போதாது. ஏன்? யானை உண்டதைவிட யானையின் கால்பட்டு அழிந்த உணவுப் பொருளே மிகுதி.


அதுபோல, அரசன் குடிகளை வருத்தாது வரியை நெறி முறையில் தண்டுவானானால் நாடும் பொருளாற் செழிக்கும்; அரசின் கருவூலமும் பொருளால் குவியும். அரசன் வரிகளை முறையாக வசூலிக்க வேண்டும். வரியை வரன்-முறையின்றி விதிக்கக் கூடாது. வரித் தண்டல்காரர்களை தத்தம் விருப்பம் போல செய்ய அனுமதித்தல் கூடாது.

அரசனின் அறிவு, வலிமையுடையதாக இருக்க வேண்டும். அரசன் தக்க சான்றோர்கள் சொல்வதையே கேட்கவேண்டும். அரசன் விரும்புவதனையே “ஆமாம்!” என்று ஆமோதித்து, அறமும் ஆக்கமும் எடுத்துக் கூறத் தவறுபவர்கள் அரசுக்குப் பகைவர்களிலும் கொடியர்.

மக்கள் நெஞ்சு நிறைந்த அன்போடு கொடுக்கும் வரியே, அரசை வாழ்விக்கும் வரி, அங்ஙனமின்றி முறையிகந்து பெறும் வரி அரசையும் கெடுக்கும்; உலகையும் கெடுக்கும் என்று அரசை ஆற்றுப்படுத்தும்பாட்டு இன்றைக்கும் வரி விதிப்பில், வரி வசூலிப்பதில் உள்ள இடர்ப்பாடுகளை நினைவூட்டுகிறது.

காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்
நூறுசெறு வாயினுந் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்

மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே.

(புறம் 184)

என்று புறநானூறு பேசுகிறது.

நாடும் ஆட்சியும் செழித்து விளங்க, தண்ணீரே இன்றியமையாதது. நீரின்றி அமையாது உலகு என்பது தமிழ் மறை. உடல், உயிர் தாங்கி வாழ்வோர்க்கெல்லாம் தண்ணீர் இன்றியமையாதது.

உடல்-உயிர் கூட்டு வாழ்க்கை இனிதே நிகழ உணவு தேவை. நீரும் நிலமும் குலந்திடின் உணவு ஆகும். அவ்வுணவை வழங்கியோர் உடலையும் உயிரையும் பிணைத்த வராவார். நிலப்பரப்பு அகன்றதாயினும் நீரும், உழவர் தம் முயற்சியும் ஒத்து இசையாத வழி அரசு தோற்கும்.

ஆதலால் வான்மழை பெய்துழி, அம்மழைத்தண்ணீரை ஏரிகளில் தேக்கிப் பாதுகாக்கும் அரசர்கள், செல்வம் முதலியவற்றைப் பிணைத்துக் கொண்டவர்களாவர். இவ்வுலகத்தில் அவர்கள் பெயர் நீங்காது நின்று நிலவும். நீர் நிலைகளை, ஏரிகளை அமைக்கத் தவறும் அரசர்கள் இந்நிலவுலகில் தம் பெயரை நிலை நிறுத்திக் கொள்ளாதவர்கள் ஆவர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தண்ணீரை - அணைகட்டித் தேக்கி, ஏரிகளில் தேக்கி வேளாண்மைக்குப் பயன்படுத்தும் சிறந்த வாழ்வியற் கருத்தைச் சங்கத் தமிழர் மேற்கொண்டிருந்தனர் என்பது எண்ணி எண்ணி இறும்பூதெய்தக் கூடிய செய்தி.

நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
வித்தி வான்நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற் றாயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்டு உதவாதே அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம இவண்தட் டோரே
தள்ளா தோர் இவண தள்ளா தோரே.

புறம். 18-30

என்ற குடபுலவியனார் பாட்டு அறிக.

ஒரு நாடு சிறப்புற்று விளங்க, அந்நாட்டின் அகத்திணை வாழ்க்கைக்கும் புறத்திணை வாழ்க்கைக்கும் உரிமை பூண்ட ஆடவர் நல்லவராய் அமைதல் வேண்டும். “நல்லவர்” என்பது ஓர் உயர்ந்த குறிப்புச் சொல். அறிவு, ஆற்றல், சீலம், பண்பாடு ஆகிய அனைத்தும் நிறைந்தவரையே நல்லவர் என்று கூறுவது சங்க இலக்கிய மரபு.

நாடு, நாட்டு நலன்கள் அனைத்தும் அமைந்ததாக இருந்தால் என்ன? இல்லாது போனால் என்ன? மேடாக இருந்தால் என்ன? இவற்றாலெல்லாம் நாடு வளமாக அமைந்து விடுவதில்லை. நாட்டின் குறைகளை நீக்கி, நாள்தோறும் பாதுகாக்கும் திறமுடைய ஆடவர்கள் இருந்தால்தான் அந்த நாடு வளமுடையதாக இருக்கும்.

அங்ஙனம் நாட்டில் நல்லவர்கள் வாழாது போனால் நாட்டின் இயற்கையையும் வாழ்வோர் அழித்து விடுவர். நாடு, இயற்கையில் நல்வளங்கள் அமைந்து விளங்காது போனாலும், நல்லோர் தமது அறிவறிந்த ஆள்வினையின் மூலம் அந்நிலத்தின் குறைகள் அனைத்தையும் நீக்கி, நலன்கள் நிறைந்ததாக்கி விடுவர். இந்த அரிய கருத்தினை ஒளவையார்,

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.

(புறம்-187)

என்று கூறி விளக்குகிறார். இன்றும் இப்பாடல் நம்நாட்டு மக்களுக்குத் தக்க அறைகூவலாக விளங்குகிறது. கடல் கொந்தளிப்பினால் பாழ், வெள்ளத்தினால் பாழ்; வறட்சி யினால் பாழ் என்றெல்லாம் அவலப்படுகிறோம். ஏன்? நம்முடைய நாட்டை உயிரினும் மேலாக மதித்து, அதனை நாடோறும் வளங்குன்றா நிலையில் பேணிப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் இந்நாட்டினும் வளங்கொழிக்கும் நாடு வேறு எது?

ஆதலால் ஒரு நாட்டின் வளத்திற்கும் சிறப்பிற்கும் அந்நாட்டின் ஆடவரே பொறுப்பு என்பது சங்கத் தமிழர் வாழ்வியலின் முடிவு.

சமுதாயம் என்பது பலவுறுப்புக்களை உடையது; தகுதியின் பாற்பட்ட பல பிரிவுகளையுடையது. ஒவ்வோர் உறுப்பும் பிறிதோர் உறுப்புடன் ஒத்திசைந்து, ஒழுங்குற அமைந்து இயங்கும் பொழுதுதான் வாழ்க்கை சிறப்புடையதாக அமைகின்றது; இன்பம் பொதுள இனிது இயங்குகிறது. இங்ஙனம் சமுதாய அமைப்பு இயங்கும் பொழுது என்றும் இளையராக வாழும் இனிய பேறும் கிடைக்கிறது.

ஒன்றோடொன்று உடன்பாடில்லாத சமுதாய வாழ்க்கை முறை கவலையைத் தருகிறது; துன்பத்தைத் தருகிறது; இளமையில் முதுமையைத் தருகிறது; வாழ்க்கை சுவையற்றுப் போய்விடுகிறது என்று சங்கத் தமிழர் எண்ணினர். சங்கத் தமிழர் வாழ்வியல் சமுதாயத்தின் அனைத்து உறுப்புக்களுக்கும் இணைந்து இன்பம் மேவியதாக இருந்தது என்பது அறியற்பாலது.

சங்க காலத்துச் சான்றோருள் பிசிராந்தையாரும் ஒருவர். அவர், ஆண்டில் முதியராக இருந்தும் மூப்பின் அடையாளமாகிய நரையின்றி விளங்கினார். அச்சான்றோரை, ஆண்டு பலவாகியும் நரையில ஆவது எங்ஙனம்? என்று புலவர்கள் வினவினர். வினாவிற்கு விடையாகத் தமிழினத்தின் நல்வாழ்விற்கு உரியதொரு பாடல் பிறக்கிறது. அப்பாடல் சங்க காலத் தமிழர் வாழ்வியலின் வளம் பேசுகிறது.

வீடும் ஊரும் நாடும் சமுதாயத்தின் உறுப்புக்கள். இம்மூன்றினிடையிலும் சங்க காலத்தில் முரண்பாடுகள் இருந்ததில்லை; மாறுபாடுகள் இருந்ததில்லை. எல்லா வற்றிலும் உடன்பாட்டு நெறி. ஒத்திசைந்து செல்லும் நெறி. அம்மம்ம! அத்தகைய அரிய வாழ்க்கையை மீண்டும் தமிழகம் காணுமோ!

அங்ஙனம் காணின், நரைத்த - வெள்ளையான உரோமங்களை, மையால் கருப்பூட்டிக் காட்டும் போலி இளமையைப் புறக்கணிக்கலாம். தெங்கின் இளநீரில் தவிர, வேறு எங்கும் வழுக்கையைக் காணாமற் செய்யலாம். அது என்ன அப்படி அற்புதமான வாழ்க்கை!

மனிதனுக்குக் காற்றும், தண்ணீரும், உணவும் மட்டும் வாழ்க்கையன்று. களிப்பும் மகிழ்ச்சியும் சேர்ந்ததுதான் அவன் வாழ்க்கையின் உயிரூற்று. வீட்டில் நல்ல மனைவியும் மக்களும் உளர். மனைவியும் மக்களும் நல்லறிவினர். அவர்களால் இன்பமே ஒழிய யாதொரு துன்பமுமில்லை.

அடுத்து, வாழ்க்கையில் பங்கு பெறுவோர் ஏவல் செய்வோர். பல சமயங்களில் ஏவல் செய்வோர் கொடுக்கும் இடர்ப்பாடுகளால் ஏவல் செய்வோரின்றி நாமே செய்து கொள்ளக் கூடாதா? என்று எண்ணத் தோன்றும். பலகால் சொல்லினும் எடுத்துக் கூறினும் இடித்துக் கூறினும் கேட்டுச் செய்யும் ஏவலரைக் காண்டது அரிதாக இருக்கிறது.

ஆனால், சங்க காலத்து ஏவலர்கள் ஏவல் கொள்வார் கருதுவதையே கருதிச் செய்து முடிக்கும் இயல்பினராக விளங்கினர்.

அரசு, அதிகாரங்கள் உடையதாயினும் யாதொரு தீமையும் செய்ததில்லை; செய்யாது! அது மட்டுமன்று, அரசின் அதிகாரங்கள் காத்தற்கே பயன்பட்டன. ஆக்கத் திற்கும் காப்பதற்கும் பயன்படும் அதிகாரமே அதிகாரம்.

ஆதலால் அச்சமும் கவலையும் இன்றி உண்டுறங்கி வாழும் பேறு கிடைக்கிறது. என்னுடைய ஊர் நல்ல ஊர். என்னுடைய ஊரில் கல்லா மாக்கள் இல்லை. என்னுடைய ஊரில் பொறிகளை, மதம் பிடித்த களிற்றைப் போலத் தத்தம் போக்கில் அலைய விடுவாரில்லை.

நன்றாகப் பழுத்த கனிகள் போல அவர்கள் சால்பு நிறைந்த பொறிகளையுடையவர்கள். நற்குணங்களை யெல்லாம் தமக்கே உரிமையுடைய சான்றோர்கள் பலர் வாழ்கின்றனர். அவர்கள் கொள்கையுடையவர்கள், அடக்க முடையவர்கள். அவர்களைக் காண்பதிலும் அவர்கள் சொற்களைக் கேட்பதிலும் துன்பம் தொலைந்தது; இன்பம் பெருகி வளர்ந்தது. அதனால், ஆண்டுகள் பலவாகியும் நரையிலேன் என்று கூறும் பெருமிதத்தை என்னென்று கூறுவது?

சங்க காலச் சமுதாயம் அனைத்துமே முழுமையுற்றிருந்தது என்பதற்கு இஃது ஒர் எடுத்துக்காட்டு. பிசிராந்தையார் பெற்ற பெருமிதத்தை இந்த நாட்டில் ஒவ்வொருவரும் பெற்றுக் கூறும் நாளே இந்த நாட்டின் பொன்னாளாகும்.

யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கா கியர்என வினவுதி ராயின்
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை

ஆன்றவிந் - கொள்கைச் சான்றோர்
பலர்யான் வாழுமூரே.

(புறம்-191)

ஒரு சமுதாய அமைப்பில் நிகழும் நிகழ்வுகளையும், நிகழ்வுகளுக்குப் பின்னணியாக இருக்கின்ற இன்ப துன்பங்களையும் நாம் அணுகும் முறையிலேயே முரண்பாடுகள் நீங்கிச் சிறப்புறுகின்றன; துன்பம் நீங்கி இன்பம் தருகின்றன.

சங்க காலத்துச் சான்றோர்களுள் கணியன் பூங்குன்றனார் என்ற பெரும்புலவர் உலகு தழுவிய ஒட்பமுடையவர். சிற்றெல்லைகளைக் கடக்க வழி காட்டியவர். சிறு செயல்களைத் தவிர்க்கக் கற்றுக் கொடுத்தவர்.

இலக்கிய உலகிற்குக் கொடையெனக் கிடைத்த “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்ற சொற்றொடர் கணியன் பூங்குன்றனார் தந்ததேயாம். ஆம்! ஊர், வாழ்க்கைக்கு இன்றியமையாதது தான்! ஆனால் “எனது ஊர்” “உனது ஊர்” என்ற வேறுபாடுகள் தோன்றின் வாழ்க்கை நரகமாகி விடுகிறது. அதனால் எல்லா ஊரையும் தம் ஊர் போல்வே கருதி, நல்லன இயற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.

சமுதாய அமைப்பில் சுற்றத்தார் என்ற குருதிச் சார்புடைய உள்வட்டம் அமைதல் தவிர்க்க இயலாததே ஆயினும் இந்த உள்வட்டம் சமுதாயம் என்ற பொதுமைக்கு இடையூறாக வளர்ந்து விடக்கூடாது.

ஆதலால் எல்லாரையுமே சுற்றத்தாரைப் போல ஒப்ப நோக்கவேண்டும் என்பது பழந்தமிழ்க் கொள்கை. இத்தகு உயர் தமிழ்க் கொள்கையை இழந்தமையினால், சாதிச் சழக்குகளுக்கு ஆளாகித் தமிழகம் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றையத் தமிழகத்திற்கு உயிர் தருவது கணியன் பூங்குன்றனார் பாட்டேயாகும்.

வாழ்க்கையில் நல்லன வந்தமைதலும் உண்டு! தீயன வந்து தொல்லை தருதலும் உண்டு. நெறியழிந்தோர், தீமைக்கு மற்றவர்களையே காரணம் காட்டி, தம் தவறுகளை மூடிமறைத்துக் கொள்வர். யாரொருவருக்கும் ஒரு நன்மையை அல்லது தீமையை பிறிதொருவர் செய்துவிட முடியாது. எரிகின்ற இயல்புடைய பொருள் ஒன்றைத்தான் ஒருவர் எரிக்கமுடியும்.

அதுபோல நன்மையை ஏற்று ஒழுகும் இயல்புடையோரே நன்மைக்குரியதாக அமையும் சூழல்களை ஆற்றலோடு பயன்படுத்தி நன்மையைக் காண்பர்; படைப்பர்.

நொய்ம்மையுடையோர். நல்ல சூழல்களையும் கூட வலிந்து தீமையாக்கிக் கொள்வர். ஒருவர் பிறிதொருவருக்கு நன்மை செய்து விடுவதும் இல்லை. தீமை செய்து விடுவது மில்லை இஃதொரு சித்தாந்தம்.

ஆதலால், நன்மையைக் கண்டபொழுது மகிழ்தலும் அவசியமில்லாத ஒன்று. தீமையைக் கண்டபொழுது துவள்தலும் தகாத ஒன்று. மகிழ்தலும் நோதலும் வாழ்க்கைக்கு நல்லன செய்யா!

சாதல், புதுவதன்று! பிறப்பிலேயே சாவும் நிர்ணயிக்கப் பெற்றிருக்கிறது. இஃதொரு மாற்றமுடியாத நியதி. ஆதலால், இது மகிழ்ந்து வாழ்தலையும் ஒரு பொருட்டாக நினைக்கக் கூடாது. அதுபோலவே, வெறுப்பன வந்தபோதும் நொந்து கவலைப்படுதல் கூடாது.

ஆற்றுவெள்ளப் போக்கில் பட்குகள் மிதந்து - செல்லுகின்றன. அதுபோலச் சமுதாய முறை நிகழ்வுகளில் உயிரின் வாழ்க்கையும் மிதந்து செல்கிறது. ஒருவர் பெருமைக்கும் சிறுமைக்கும் அவர் காலத்தில் சமுதாய நிகழ்வுகளே காரணமாக அமைகின்றன.

அதனால், ஒருவரைப் பெரியோர் என்று அளவுக்கு விஞ்சிப் புகழ்தல் நெறியுமன்று; முறையுமன்று. அது போலவே சிறியோரையும் இகழ்தல் கூடாது. சிறியோர், அவர்களாக வலியச் சிறியோராகவில்லை. அவர்களைச் சிறியோராக்கிய சமுதாய நிகழ்வுகள் நினைவில் கொள்ளத்தக்கன.

ஆதலால், பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் சரியான சமுதாய மரபல்ல என்ற சங்கத் தமிழர் வாழ்வியற் கொள்கை என்றைக்கும் பொருந்துவது!

“யாதும் ஊரே யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படுஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!”

(புறம்-192)

மனித உலகம் தோன்றிய நாள்தொட்டு சமுதாய அமைப்பில் இன்பமும் துன்பமும் கலந்தே சமுதாயத்தை அழைத்து வழி நடத்திக்கொண்டு வந்திருக்கின்றன. ஆனால் இரு வேறுபட்ட இன்பதுன்பச் சூழலை, சான்றோர்கள் தொடர்ந்து எதிர்த்துப் போராடிக் கொண்டே வந்திருக்கின்றனர். வெற்றி முழுதாகக் கிடைக்கவில்லை.

அதுமட்டுமன்று, இயற்கையில் அமைந்த திருமணம், மரணம் இவற்றோடு தொடர்புடைய இன்பதுன்பங்களைக் கூட சங்ககாலத் தமிழர் உடன்படாது எதிர்த்திருக்கின்றனர். அந்தச் சிந்தனையின் வளர்ச்சியே “மரணமிலாப் பெருவாழ்வை” எண்ணிப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்தது.

ஆனால், இந்தக் கருத்தில் இந்தச் சமுதாய முழுமையான வெற்றி பெறுவதற்கு மாறாக, இன்றைக்கு வீட்டுக்கு வீடு புன்மை நிறைந்த சாதிவேற்றுமைகளால், அழுக்காற்றின் வழிப்பட்ட பகையால், வளம், மறுமை என்ற வேறுபாடுகளால் வேறுபட்டுக் கிடந்து எய்த்து அலையும் அவலத்தை என்னென்பது!

அது மட்டுமா? இந்த இன்பதுன்ப வேறுபாடுகளுக்குப் படைத்தோனே காரணம் என்ற பைத்தியக்காரத்தனமான கொள்கை சங்க காலத்திலேயே தலைகாட்டியிருக்கிறது. ஆனால், பக்குடுக்கை நன்கணியார், இவ்வுலகத்தின் இன்ப துன்பங்களுக்குப் படைத்தோனே காரணம் என்று தட்டிக் கழிக்கும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறார்.

இவ்வுலக நிகழ்வுகள் இன்னாதனவாக இருக்கலாம். ஆனால் அப்படியே இருக்க அனுமதிக்கக் கூடாது. அறிவார்ந்த ஆள் வினையால் இன்னாதனவாக இருக்கும் உலக நிகழ்வுகளை இனியனவாக அமைக்க வேண்டும் என்று கருதி, வாழ்வியலை வழி நடத்திய சங்கத் தமிழர் வாழ்வே வாழ்வு!

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பதைல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பிலாளன்
இன்னா தம்ம இவ் வுலகம்
இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே!

(புறம்-194)

ஒர் ஒப்பற்ற சமுதாய அமைப்பு, பொருளை ஈட்டுதலாலோ துய்த்தலாலோ மட்டும் அமைந்து விடுவதில்லை. செல்வத்தின் பயன் விரிந்தது. பரந்தது! செல்வத்தின் பயனை மிகச் சுருக்கியுள்ள இந்தக் காலத்தில் சங்ககாலத் தமிழர் வாழ்வியலை எண்ணிப் பார்ப்பது பயன்தரும்.

செல்வத்தின் பயன் ஈதலேயாம்! மற்றவர் வருந்தும் பொழுது அவர்தம் வருத்தத்தை மாற்றாது ஒருவன் தன் செல்வத்தைத் துய்ப்பானானால் அச்செல்வமே அவனை விட்டுத் தப்பித்துப் போய்விடும். இதனைச்

“செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே”

என்று புறநானூறு விளக்கிக்கூறும்.

செல்வத்தைச் செல்வத்திற்காக ஈட்டுவதோ, செல்வத்தைத் தாம் மட்டுமே துய்த்து வாழ ஈட்டுவதோ பழந்தமிழர் மரபன்று. களவியலில் தலைவன் ஒருவன் கற்பியல் நாடி அமைத்துக் கொள்வதற்காகப் பொருள்தேடச் சென்றிருக்கிறான். குறித்த காலத்தில் தலைவன் வரவில்லை. தலைவி துன்புறுகிறாள். அருகிலிருக்கும் தோழி தலைவன் வருவான், கவலற்க!” என்று ஆறுதல் கூறித் தேற்றுகிறாள். ஆனால், தோழியின் மொழியைத் தலைவி ஏற்று உடன்பட்டு ஆறுதல்பெற உடன்பட்டாளில்லை. ஏன்? தலைவி, தலைவனை முற்றாக அறிந்தவள்.

தலைவன் ஒரு கொடையாளி. தன்னை நாடி யார் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லாது வழங்கும் கொடைஞன் அவன். ஆதலால், அவன் பொருளீட்டச் சென்றது கற்பியல் நலம் கருதியன்று.

தம்மை நோக்கி “இல்லை” என்று இரந்து வருவோர்க்கு “இல்லை” என்று சொல்லும் நெஞ்சைப் பெறாதவனாதலால், தம்மை நாடி வருவோருக்குப் பொருள் ஈவதற்காகவேதான், அவன் பொருள் தேடச்சென்றிருக்கிறான். தலைவனுக்குத் தலைவியிடமிருக்கும் காதலைவிட, பொருளின் மீதுள்ள காதல் பெரிது என்று, அகநானூற்றுத் தலைவி, தன் தோழிக்கு,

“இல்லோர்க்கு இல்லென்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்”

(அகம்-53; 13-15)

என்று கூறுவதால் அறியலாம்.

ஆதலால், சங்ககாலத் தமிழர் வாழ்வியலில் பொருள் ஈட்டுதல் சமுதாய நோக்குடையது. சங்ககாலத் தமிழர் உயர்ந்த பொருளையீட்டி, மற்றவர்களுக்கு வழங்கி வாழ்வளிப்பர். எஞ்சியதிலேயே தம் வாழ்க்கையை இயற்றுவர்.

உயிரினத்தில் எருது உழைப்பிற்குப் பெயர்போனது. அதுபோலவே உழைப்பின் பயனாகிய செந்நெல்லையும், செங்கரும்பையும் மானிடசாதி அனுபவிக்கத் தந்துவிட்டு வைக்கோலையே தின்று உயிர் வாழ்வது. அதனாலன்றோ நமது சமய நெறியில் எருது போற்றுதற்குரியதாக ஏற்றம் பெற்றது.

சங்க காலத்து வழிபடும் தெய்வமாகிய சிவம் ஓங்கி உயர்த்த கொடி, ஏறும் ஊர்தி எருது சிவனின் திருக்கோயில் முன்றிலில் வருவோர்க்கு “உழைப்பிற்கு, முன்நில், உழைப்பின் பயனைத் துய்ப்பதில் கடைசியாக நில்! கொடையிலும் ஆர்ப்பரிக்காதே! அடக்கத்துடன் இரு! இதுவே இறைநெறி! சமயநெறி!” என்று பாடம் கற்பிக்கும் நிலையில் படுத்தும் கிடக்கிறது.

இத்தகு வாழ்க்கை சங்க காலத் தமிழர் வாழ்வில் நிறைந்திருந்ததால்தான் கொலை, களவு முதலிய குற்றங்கள் குறைந்திருந்தன. சமுதாய வாழ்க்கையில் நம்பிக்கையும் நல்லெண்ணமும் மலிந்திருந்தன. இவ்வுயரிய கருத்தினை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தன் பாடும் இயல்பைக் கேளுங்கள்!

“நள்ளாதார் மிடல் சாய்த்த
வல்லாள! நின் மகிழிருக்கையே
உழுத நோன்பகடு அழிதின்றாங்கு
நல்லமிழ் தாகநீ நயந்துண்ணும் நறவே!”

(புறம்-125)

இந்த வரிகள் சமுதாயச் சீரமைப்புக்குரிய மருந்தாகும்!

சங்க காலத் தமிழர் வாழ்வியல் காதற் சிறப்புடையது. சங்க காலத் தமிழர் வாழ்வியலில் பெண்ணைப் பெருமைப் படுத்தும் இயல்பு நிறைந்திருந்தது. ஒரு தலைவனின் வாழ்க்கையில் பங்குபெறும் பெண்ணுக்குத் “தலைவி” என்றே பெயர் அமைந்திருந்தது.

காதல் மனையற வாழ்க்கை சங்க காலச் சிறப்புகளுள் ஒன்று. பெண்ணைத் துறத்தல், வெறுத்தல், இழிவு படுத்துதல் ஆகிய இழி இயல்புகள் சங்க காலத்தில் இருந்ததில்லை.

அவர்கள் மனையற வாழ்க்கையிலேயே துறவும் துய்த்தலும் ஒன்றாகக் கலந்திருந்தன. ஒன்றுக்கொன்று துணையா யமைந்தன. மனையற வாழ்க்கையில் முகிழ்த்து மலர்வதே “சிறந்தது பயிற்றல்” எனப் பாராட்டப்பெறும் துறவு.

ஆதலால், சங்க கால வாழ்க்கையில் நெறிமுறை பிறழாத காதல் வாழ்க்கை இருந்தது. அன்றையக் காதல், எளிதில் தோன்றியதுமன்று; எளிதில் மாறியதுமன்று. சங்க காலத்தில் தலைவன், தலைவி தம்முள் காதலித்தே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அந்தக் காதலை வீடும், நாடும் ஏற்றுக் கற்பியலாக்கிப் பெருமை கொண்டன.

ஆனால், இளம் வயதினரான தலைவனும் தலைவியும் கூட, காதலில் உணர்ச்சி வசப்படவில்லை என்பதுதான் சங்க காலத் தமிழர் காதலுக்குச் சிறப்பு. சிறந்த தெளிவில் தோன்றிய காதல் வளர்ந்து ஆழம்பட்டு எழுபிறப்பும் தொடரக் கூடியதாக உரம் பெற்றது என்பதை எண்ணும் பொழுது அவர்களின் காதல் மாட்சியை எண்ணி வாழ்த்துதற்குச் சொற்கள் ஏது?

“களவும் கற்று மற” - என்றொரு பழமொழி தமிழகத்தில் வழங்கி வருகிறது. இப்பழமொழி சங்க காலத் தமிழரின் அகத்திணை வாழ்வியலின் களவு நெறியை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதேயாகும்.

அதாவது, தலைவனும், தலைவியும் தற்செயலாகக் காண்பர். நல்லூழ் கூட்டக் காதல் தோன்றும், உற்றாரும் ஊராரும் அறியாது தனியே சந்திப்பர். கலந்து பேசி மகிழ்வர். மற்றவர் அறியாது கூடுவதால் “களவியல்” என்றாயிற்று.

இங்ஙனம் களவியலில் சந்தித்துக் காதலை வளர்த்துக் கொண்ட தலைவன், கற்பியல் அமைக்க-திருமணம் செய்ய முனைவான். இதை நினைவூட்டும் வகையில் களவியலில் தலைவியைச் சந்தித்துக் காதலித்தல் தவறன்று. ஆனால், அது தொடரக் கூடாது என்ற குறிப்பில் பிறந்த பழமொழி இது.

களவியலில் யாருமின்றித் தனியே சந்திக்கும் தலைவனும் தலைவியும்கூட அவர்கள் உள்ளத்தால் அன்பினால் க்லந்து பழகுவதன்றி மெய்யுறு புணர்ச்சி நிகழ்வதில்லை. இதனைக் கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் வரும் தோழி செவிலிக்கு எடுத்துக் கூறுகிறாள்.

“வேய்புரை மென்றோள் இன்துயில் என்றும் பெறான்”

(குறிஞ்சிப். 242)

என்று.

தலைவன் தலைவியிடத்திற் கொண்ட நட்பு மிகமிக உயர்ந்தது. அஃது ஆழ்கடலைவிட ஆழமானது. அதனால் அவன் மெய்யறு புணர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டவனல்லன். வரம்பிகந்த இன்பத்தைத் துய்ப்பதற்குரிய செல்வம் இல்லாதவனுமல்லன்.

ஆயினும் அவன் நெறிமுறைகளுக்கு இசைந்த வாழ்வுடையவன். அவன் தலைவியைக் காதலித்தது, தான் இன்புறுதற்காகவல்ல. காதலியை இன்புறுத்தற்காகவேயாம். ஆதலால் மெய்யுறு புணர்ச்சி பெற இயலாமை அல்லது காலம் நீட்டித்தல் ஆகியன பற்றி அவன் கவலைப்படுவதில்லை. இதனை,

“பெறாஅன் பெயரினும் முனிய லுறான்
இளமையில் இகந்தன்றும் இலனே”

(குறிஞ்சிப்பாட்டு 243-244)

என்ற குறிஞ்சிப் பாட்டால் அறியலாம்.

பழங்காலத்தில் உள்ளப் புணர்ச்சியில் மட்டுமே கூடி மகிழ்ந்து மெய்யறு புணர்ச்சி வாய்க்காமலே இறந்த காதலர் களும் உண்டு. -

அதனால்தான் களவியலில் உள்ளப் புணர்ச்சி மட்டுமே உண்டு என்பதை விளக்க அகத்திணை நூலாகிய குறுந்தொகையில், பாடிய பாட்டாலேயே பெயர் பெற்ற “செம்புலப் பெயல் நீரார்” பாடும் அகப்புணர்ச்சியின் மாட்சிமையைக் கேளுங்கள்!

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனிர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”

(குறுந்-40)

தலைவன் தலைவியாக தம்முள் பண்பு நலம் ஒத்தவர்களிடையில் காதல் தோன்றுவது தவறன்று. அஃது அறம் என்பது சங்க காலத் தமிழர் வாழ்வியலில் நிலை பெற்றிருந்தது. காதலித்தவர்களை மணம் செய்து கொள்ள முடியாமல் தொல்லைப்படுத்தும் இக்காலச் சமுதாயத்தினரைப் போலன்றி சங்க காலத்தில் காதலுக்கு வரவேற்பு இருந்தது.

அதனால் சமுதாய அமைப்பில் அன்பும் பண்பும் வளர்ந்திருந்தது. தலைவன்-தலைவியிடையே காதல் தோன்றி வளர்ந்தமைக்கு யாரும் காரணமல்ல, அஃதொரு இயற்கை நிகழ்வு. இக்காதலுக்கு யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம்; செய்ய வேண்டியது மணம் ஒன்றே என்று தலைவியின் தோழி செவிலிக்கு அறத்தை உணர்த்துகின்றாள்.

இளைய மகளிர் ஓடி விளையாடித் தொழிற்பட்டால் தான் அவர்களுடைய உள்ளமும் உடலும் உறுதி பெறும். அதனால் செவிலித்தாயாகிய நீ, தலைவியைத் தினைப்புனக் காவலுக்கும் அனுப்பி வைத்தனை. தலைவியும் நின்குறிப்பின் வழிதான் விளையாடினாள். அவளும் பெண்மை நலன்கள் அனைத்தும் பொருந்தியவள்; பண்பும் உடையவள். அதனால் அவள் மீதும் குற்றமில்லை. தோழியாகிய நான் தலைவியுடன் சென்றிருந்தேன்; என் குற்றம் என்னவென்றும் யானறியேன். யாதானும் இருப்பின் பொறுத்தருள்க.

தலைவியின் மனத்தைக் கவர்ந்த தலைமகனும் வேட்டைத் தொழிற்கு வந்தபொழுதே தலைவியை எதிர்ப்பட்டான். தலைவனும் தீயவனல்லன். ஆதலால், நம் அனைவரின் கருத்தின் வழியும் யாதொரு குற்றமும் செய்யவில்லை. நம் அனைவரின் கருத்தின்றியும் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது.

நிகழ்ந்துவிட்ட தலைவன் தலைவியின் உறவினைக் கற்பியலாக்குவதே அறம் என்று சொல்லும் இனிய பாங்கினை அறிக. இங்ஙனம் திருமணம் நிகழ்கிற வாய்ப்பை இன்றைய சமுதாயம் பெற்று விட்டால் “வரதட்சணை” என்கிற கொடுமையே இருக்காது.

நின்குற்றம் இல்லை நிரைதொடியும் பண்புடையள்
என்குற்றம் யானும் உணர்கலேன் - பொன்குன்று
அருவி கொழிக்கும் அணிமலை நாடன்
தெரியுங்கால் தீய திலன்

.
(குறிஞ்சிப்பாட்டு - வெண்பா)

சங்ககாலத் தமிழர் வாழ்வியலில் பொருள் செய்யும் முயற்சி போற்றப் பெற்றது; பொருளை இழிவெனக் கருதும் கருத்து இருந்ததில்லை. ஆனால் பொருள் செய்யும் முயற்சியின் குறிக்கோள் உயர்ந்ததாக இருந்தது. வயது வந்த ஒவ்வொருவரும் தத்தம் முயற்சியில் பொருளிட்டியே வாழ வேண்டும் என்ற நடைமுறை இருந்திருக்கிறது. தந்தை பொருளிற்கூட மகன் வாழ்வதில்லை.

அதனால் தலைமகன் என்று பாராட்டப்படுவதின் உயர்நிலை வினை செய்தலாகவே இருந்தது. வினை என்பது இன்று குறிக்கும் பொருளில் பண்டு குறிக்கப் பெற்றதில்லை. வினை என்றால் தொழில் என்பதுதான் சங்ககாலத் தமிழ் வழக்கு.

“வினையே ஆடவர்க்கு உயிரே!”

என்று குறுந்தொகை கூறுகிறது.

பொருள் செய்யும் முயற்சியை ஒப்புக்கு யாரும் செய்வதில்லை. ஒரு முயற்சியை அச்சத்திற்காகவும் ஒப்புக்காகவும் மேற்கொண்டு செய்தால் அம்முயற்சி போதிய பயனைத் தராது. உள்ளம் ஒன்றிய உணர்வுடன் அம்முயற்சியில் - பொருள் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று பாலைக் கலி கூறுகிறது.

“புலம்பில் உள்ளமொடு பொருள்வயிற் செலீஇய”

என்பது கலித்தொகை வரி.

சங்கத்தமிழர், பொருளை உழைப்பின் வழியிலேயே ஈட்ட நினைத்தனர். வேறு வழிகளில் பொருள் ஈட்டுதலை அறம் - அன்றெனக் கருதியது மட்டுமல்லாமல், குற்ற மென்றும் கருதினர். பிறர்க்குரிய பொருளை அல்லது பங்கைத் திருடும் மனப்போக்கு, சங்ககாலத் தமிழர் வாழ்வில்

&. v. 4. இருந்ததில்லை. இதனை, மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் அழகுறக் கூறுகிறார்.

“நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்...”

(மதுரைக் காஞ்சி 496 - 499)

என்றவாறு செந்நெறியில் பொருளீட்டி வாழ்ந்தது சங்கத் தமிழர் வாழ்வியலின் சிறப்பு.

நெடிய பயணத்திற்குப் பயன்படும் மகிழுந்துகளுக்குச் (Pleasure Car) சேமக்காற்றுருளை (Stepney) வைத்துக் கொள்வது இன்றுள்ள நடைமுறை. ஆனால், பொதியினைச் சுமந்து இழுக்கும் எருதுகளுக்குக் களைப்பு நீங்க ஓய்வு கொடுக்க மாற்று எருதுகளைக் கொண்டு செல்லும் பழக்கம் இன்று இல்லை.

ஆனால், பண்டைத் தமிழர் வாழ்வியலில் உயிரிரக்கம் மேம்பட்டிருந்தது. மயிலின் குளிர் நீக்கப் போர்வை ஈந்த உயிரிரக்கம் எங்கே? இன்று மந்தை மந்தையாக அடிகளத்திற்கு மாட்டை அழைத்துச் செல்லும் கொடுமை எங்கே? பற்றிப்படரக் கொழுகொம்பில்லாத முல்லைக் கொடிக்குத் தேர் ஈந்த இரக்கம் எங்கே? நாள்தோறும் காடுகளை வெட்டி அழித்து வரும் நமது புன்மதி எங்கே?

சங்க காலத்தில் எருது பூட்டிய வண்டியில் உப்பை ஏற்றிச் செல்கின்றனர். அந்த உப்பு வண்டியை இழுத்துச் செல்லும் காளைகளுக்கு ஓய்வு கொடுக்க வேறுகாளைகளையும் அழைத்துச் செல்கின்றனர் என்பதை,

“படலைக் கண்ணிப் பரேர் எறுழ்த் திணிதோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்

 சிறுதுளைக் கொடுநுகம் நெறிபட நிரைத்த
பெருங்கயிற்று ஒழுகை மருங்கிற் காப்பச்
 சில்பத உணவின் கொள்ளை சாற்றிப்
பல்எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி”

(பெரும்பாண். 60 - 65)

என்று பெரும்பாணாற்றுப் படை பேசுவதால் அறியலாம்.

சங்கத்தமிழர் வாழ்வியலில் முறையான அரசு அமைந்திருந்தது போலவே, அறங்கூறவையமும் அமைந்திருந்தது. இன்று, நீதி மன்றங்கள் என்றும், முறை மன்றங்கள் என்றும் அழைக்கப் பெறுவனதாம் பழங்காலத்து அறங்கூறவையம். ஆனால், இந்த நீதி மன்றங்களின் நடைமுறைக்கும் அறங் கூறவையத்தின் நடைமுறைக்கும் நிறைய வேறுபாடுண்டு.

இத்தகைய சிறந்த அறங்கூறவையங்களைப் பண்டைத் தமிழரசர்கள் நிறுவி, முறை வழங்கினர். அறங்கூறவையத்தில் அறவோராக, நடுவராக அமர்வோர் வழக்கிடுவோரின் உள்ளத்தின் ஐயத்தையும் அச்சத்தையும் அவ்வழித்தோன்றும் வருத்தத்தையும், இம்மூன்றிற்கும் காரணமாக அமைந்த பற்றுள்ளத்தையும் நீக்கும் தகுதியுடையவராக அமர்ந்து இருந்தனர்.

அவ் அறவோர், ஒருபால் கோடுதல் இல்லை. அவர்கள் துலாக்கோல் போல் அமர்ந்து அறத்தினையே மையமாகக் கொண்டு எல்லாருக்கும் விளங்க, ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில், வழக்கில் வென்றோர் மகிழ்தல் மட்டுமின்றி வழக்கில் தோற்றோரும் தம்முடைய தோற்பும் நீதியின் பாற்பட்டதே என்று ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் முறை வழங்கும் மாண்புடையதாகச் சங்ககாலத் தமிழகத்தில் அறங்கூறவையம் இருந்தது. இதனை, மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சி,

“அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ளுெமன் கோல் அன்ன செம்மைத் தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூற வையமும்”

(மதுரைக் காஞ்சி; 489 - 492)

என்று கூறிப் பாராட்டுவதால் அறியலாம்.

சங்ககாலத் தமிழர் வாழ்வியலில் சமயப்பொறை இருந்தது. சமயச் சண்டைகள் இருந்ததில்லை. எல்லாச் சமயத்தினரும் வழிபடும் கடவுள் ஒன்றே என்ற விழுமிய கருத்துக் கால் கொண்டிருந்தது. பல்வேறு திருப்பெயர்களில் கடவுள் வழிபாடு இருந்தமையைச் சங்க காலம் உணர்த்தினாலும் “இந்தக் கடவுள்தான் உயர்ந்தது; அந்தக் கடவுள் தாழ்ந்தது” என்ற சண்டைகள் இருந்ததில்லை. குறிஞ்சிப் பாட்டில் கபிலர்,

“பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும்
வேறுபல் உருவில் கடவுட் பேணி”

(குறிஞ்சிப்பாட்டு: 5 - 6)

என்று இயம்புகின்றார், பரிபாடல் ஆசிரியரும்,

“ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்!
எவ்வயி னோயும் நீயே! நின் ஆர்வலர்
தொழுதகை அமைதியின் அமர்ந்தோயும் நீயே!
அவரவர் ஏவ லாளனும் நீயே!
அவரவர் செய்பொருட் கரணமும் நீயே!”

(பரிபாடல் 4: 67-72)

என்று கூறுவதாலும் அறியலாம். சங்ககாலத் தமிழர் வாழ்வியலின் இனிய சமயப் பொறை இன்றும் வேண்டற் பாலது. சங்ககாலத் தமிழர் இறைவனை வழிபட்டனர். தாம் விரும்பியவற்றை அருளிச் செய்யுமாறு இரந்து வேண்டினர். எவற்றை வழங்குமாறு வேண்டினர்? பொருளினையா? பொன்னினையா? போகத்தினையா? இல்லை! இல்லை! ஏன்? இவை சங்ககாலத் தமிழர்க்கு வேண்டாதனவா? இவை வேண்டாத மானிடசாதி என்றும் இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை.

பின் ஏன் இவற்றை வேண்டவில்லை. இவை மூன்றும் மானிடர் தமது அறிவால், அறிவறிந்த ஆள்வினையால் படைத்துத் துய்க்க வேண்டியவை. தம் ஆற்றலுக்கு இசைந்தவற்றைத் தாம் ஆற்றாது இறைவனை வேண்டுதல் பிழை-குற்றம் என்ற நிலை, சங்க காலத் தமிழர் வாழ்வியலில் இருந்தது. அன்பினை இரந்து கேட்டனர்; அறத்தினை அருளுமாறு வேண்டினர்.

“...யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலிதாரோயே!"

(பரிபாடல் 5 : 78-81)

என்னும் பரிபாடல் இதற்குச் சான்றாகும்.

சங்ககாலத் தமிழர் வாழ்வியல் நனி நாகரிகத்தில் சிறந்தது. எது நாகரிகம்? உடைகளின் எடுப்பா? முடிகளின் காடா? செந்நெற் கழனியில் சற்றும் தாழாது தலைநிமிர்ந்து ஆடும் பதர் நிறைந்த பயிரின் பகட்டா? சிறுசிறு செயல்களில் கொல் குறும்புகளில் பலர் கவனத்தை ஈர்ப்பதா? இவை இன்று கல்லா இளைஞரால் நாகரிகம் என்று கருதப் பெறும் பொய்ம்மைகளாகும்.

சமயச் சின்னங்களா? தோற்றங்களா? எவற்றை உடல் தாங்கி என்? உயிரல்லவோ தாங்கிச் சுமக்க வேண்டும்! உடல் தவமே உய்தி தருமா? உயிர்த்தவம் சிறிதுமில்லா இன்று, நாகரிகம் என்பது தோலைக்கூடத் தொட்டுப் பார்த்ததில்லை!

நாகரிகம் என்பது ஊன் கலந்து, உயிர் கலந்து உணர்வில் செழித்துக் காட்டுவது! சீலத்தில் வெளிப்படுவது! நற்றிணை, நாகரிகம் இது என்று எடுத்துக் காட்டுகிறது. நண்பன் ஒருவன் தம் கண் முன்னால் நஞ்சினைக் கலந்து உண்ணக் கொடுத்தாலும் உண்பர் நாகரிகமுடையவர். நஞ்சினை உண்பதோடன்றி நஞ்சென நினையாது அமைதி பெறுவர். நஞ்சினைக் கொடுத்தோர்மீது பகை பாராட்டமாட்டார். மேலும், அன்பினோடு மேவிப் பழகுவர்; நட்புக் கொள்வர். இத்தகைய வாழ்க்கையே நனி நாகரிக வாழ்க்கை,

“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்”

(நற்றிணை 355 : 6-7)

என்று நற்றிணை சிறப்பித்துக் கூறும். இத்தகைய சங்கத் தமிழர் வாழ்வியலின் நாகரிகம் இன்றைய மானிட சாதியில் நிலவும் பகைப் புயலுக்கு மருந்து.

சங்க காலத் தமிழர் வாழ்வியல் மிகமிகச் சிறந்தது. சங்க காலத் தமிழர் வாழ்வியலில் பாடறிந்து ஒழுகும் பண்பாடிருந்தது. தன் கிளை செறாமல் பேணி வளர்க்கும் அன்பிருந்தது; பேதைமையைக் கண்டும், நோற்கும் அறிவிருந்தது; தூய காதல் சிறந்திருந்தது. அது வீரத்தின் விளை நிலமாக இருந்தது.

சங்க காலத் தமிழர் கொடை மடம் பட்டுப் புகழ் பெற்று விளங்கினர்; பொருள் போற்றினர்; இன்பம் துய்த்தனர்! அறநெறி கண்டனர்; இறைநெறி போற்றினர். இத்தகு சிறந்த சங்க காலத் தமிழர் வாழ்வியலைச் சிந்தை குளிர, செவி குளிர டாக்டர் போப்பையர் தமது நாலடியார் மொழி பெயர்ப்பில் போற்றிப் புகழ்கிறார்.

“தமிழ் மக்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்னும் ஊக்கமுள்ளவர்கள்; நன்னெறி பற்றி ஒழுக வேண்டுமென்ற விருப்பமுள்ளவர்கள்; தன்னலமற்ற உண்மையான அன்புள்ளவர்கள்; உயர்ந்த நோக்க முள்ளவர்கள் என்று போப்பையர் வியந்து பாராட்டிய அனைத்துப் புகழும் சங்க காலத் தமிழர்க்கே உண்டு.