குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/சிலம்பு நெறி






12


சிலம்பு நெறி


வெற்றிக்கு வழி


வாழ்க்கை மலர்ப் பாதையன்று. வாழ்க்கை கரடு முரடான மேடு பள்ளங்களையுடையது. அது மட்டுமா? மனித உருவில் கொடிய விலங்கினங்கள் மறைந்து வாழ்ந்து தீமைகள் செய்யும். இத்தகு மனித வாழ்க்கை அமைப்பில், வெற்றி பெறுதல் எளிதன்று. பகையை வரவேற்றுச் சந்திக்கும் மன உறுதி வேண்டும்; வெற்றி பெற வேண்டும்.

பகையைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. பகைவன் ஒருவகையில் நமக்குத் தற்காப்பு உணர்வைக் கூடத் தருகிறான். பகைவனைக் கூடப் பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும்.

“நாசம் வந்து உற்ற போதும்
நல்லதோர் பகையைப் பெற்றேன்!”

(கும்ப. வதை. 31)

என்று இராவணன் கூறுவதாகக் கம்பன் கூறுவான். பகைவனைப் போற்றும் பண்பு, வரலாற்றில் இடம் பெற்ற மாபெரும் தலைவர்களுக்கு இருந்தது.

ஆனால் இன்று நண்பர் யார்? வேண்டியவர் யார்? உறவினர் யார்? தெரிந்தவர் யார்? பகைவர் யார்? என்றெல்லாம் எளிதில் இனம் கண்டுகொள்ள முடிவதில்லை.

இன்று மனித உறவுகளின் அருமைப் பாட்டை உணர்ந்து பழகுவோர் அருகிவிட்டனர். எங்கும் இலட்சிய அடிப்படையிலான உறவு இல்லை! தோய்ந்த அன்பும் இல்லை! எல்லாம் இலாப நோக்கு!

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்பவர்களைவிட, இலாப நோக்குடைய சந்தர்ப்பவாதிகளைவிட, பகைவர்கள் ஆயிரம் மடங்கு நல்லவர்கள்!

பகைவர் யார்? அதற்கும் இலக்கணம் உண்டு. நல்ல பகைவர்கள் வெளிப்படையாக எதிர்த்து நிற்பார்களே தவிர, சூது செய்ய மாட்டார்கள்! துரோகமும் செய்ய மாட்டார்கள்! எந்தக் காரணத்தை முன்னிட்டும் மறைந்தும் மறைத்தும் ஒழுக மாட்டார்கள். இன்று இத்தகு நலம் செறிந்த பகைவர்களைக் காண இயலவில்லை.

இன்று மலிந்து வருவது “சின்னப்புத்தி”. இந்த சின்னப் புத்தியுடையவர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளவே முயற்சி செய்வர். இவர்களிடம் திறந்த மனமும் இல்லை! திறந்த வாழ்க்கையும் இல்லை! சூது நிறைந்தவர்களாக இருப்பர். நேரில் நண்பராக நடிப்பர்; உறவினராக மேவிப் பழகுவர்! எல்லாம் நாடகமேயாம்!

சின்னப் புத்தியுடையோர் இடர் உற்றுழி இடறி விடுவர். வீழ்ந்த இடத்தில் குழி பறிப்பர்! இவர்களிடத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். பகைவர்களைவிடக் கூட இந்த வங்கு மனம் கொண்ட நாய்கள் தொல்லை தர முயலும். ஆதலால் வாழ்க்கையில் வெற்றிகளைப் பெற அல்லது பொருளைப் பொருதொழிய நட்போ, பகையோ முற்றாகக் காரணங்களாகா! வாழ்கின்றவனுடைய மன உறுதிதான் காரணமாக முடியும்.

புதை மணலில், சகதியில் அகப்பட்டுக் கொண்ட உரம் மிக்க காளைகள் படுக்கா! தலையைக் குனிந்து மூச்சை அடக்கி, காலை மடக்கி எழும். அந்த முயற்சியைப் பார்த்தாவது மனிதன் தன் முயற்சியைப் பற்றிக் கற்றுக் கொள்ளவேண்டும்.

ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருப்பவர்கள் எல்லாரும் முயற்சி உடையார் என்று ஏற்றுக் கொள்ளப் பெற மாட்டார்கள். வேலைகள் குறித்த வேளைகளில் குறித்த பயன் கூடும் வண்ணம் செய்து முடிக்கப் பெறுதல் வேண்டும். இன்று, கடமைகளைக் காலத்தில் செய்பவர்களைக் காண்பதரிது. அது மட்டுமா? எந்த ஒரு பணியையும் கடமையாகச் செய்து வெற்றி காணாமல் இடையறவுபட்டு அல்லலுறுவோர் பலர். ஒரு சிறு இடர்ப்பாட்டைக்கூடத் தாங்க முடியாமல் துன்புறுவோர் எப்படி வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்க முடியும்?

அறிவியல் முறைப்படி இடர்ப்பாடுகளும் துன்பங்களும், வாழும் உயிர்ப்புள்ள மனிதனைத் தூண்டித் தொழிற்படுத்தி வளர்க்கும்.

சோழன் கரிகாலன் வடபுலம் நோக்கிப் படையெடுத்துச் செல்கிறான். வடபுலத்து நிலங்கள் எல்லாம் அவன் வெற்றியை ஏற்றுக் கொண்டன. தமிழ்ப் பேரரசு கால்கொள்கிறது. இந்தியாவுக்கு அப்பாலும் செல்ல ஆவல்! ஊக்கம்! ஆனால், இமயமலை குறுக்கே நிற்கிறது! இமயமலை உச்சியில் தமிழ்ப்பேரரசின் சின்னம் பொறிக்கப் பெறுகின்றது!

கரிகாலன் எதிர்பாராது சோழ அரசுக் கட்டிலில் ஏறியவன்! ஆயினும், சோழன் கரிகாலன் வீரத்தால் தமிழரசு பேரரசு ஆயிற்று; இமயத்தின் உச்சிவரை பரவிற்று. எழுச்சித் தன்மையுடைய வீரம் கூடப் பல சமயங்களில் மண்ணாள்வோருக்கு வந்துவிடுவது உண்டு. ஆனால் கரிகாலன் குடிமக்கள் நலன் நாடும் பேரரசாகவும் விளங்கினான்! கல்லணைக்கட்டி நீர்ப்பாசன வசதிகளை முறைப்படுத்தினான்.

வாழ்க்கையில் தோல்விகளைத் தரக்கூடிய ஆற்றல் பகைக்கு இல்லை; இருக்க முடியாது. அசைவில்லாத - நடுக்கம் இல்லாத - சோர்வில்லாத ஊக்கம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்கலாம் என்பதைச் சிலப்பதிகாரத்தால் உணரலாம்!

........
“இருநில மருங்கில் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமாவளவன்
..........
அசைவில் ஊக்கத்து நசைபிறக் கொழியப்
பகைவிலக் கியதுஇப் பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு”

(சிலப். 5: 89-98)

என்னும் சிலப்பதிகார வரிகள் எண்ணத்தக்கது.

அறிந்தவர் கடமை

வாய் படைத்தோரெல்லாம் பேசுகின்றனர். பொருள்களைச் சமைத்துச் சுவைத்து உண்ணக் கற்றுக் கொண்ட சமுதாயம், உணர்வுகளைச் சமைத்துக் கொண்டு இனிய சொற்களைக் கூறக் கற்றுக் கொண்டபாடில்லை.

பேசுவதெல்லாம் பேச்சா? சொல்லுவதெல்லாம் சொல்லா? “வறுமை என்றது செல்வத்தில் மட்டுமல்ல; சொற்களிலும் கூட உண்டு” என்பார் இளங்கோவடிகள். “வறுமொழியாளர்” என்று குறிப்பிடும் சிலம்பு.

வறுமை நிறைந்த சொற்களைப் பேசுபவர்கள் “வறுமொழியாளர்”. இதனையே திருக்குறள் பயனற்ற சொல் என்று கூறுகிறது. பயனற்ற சொற்களைக் கூறுபவர்களைப் ‘பதடி’ என்று வள்ளுவம் திட்டுகிறது.

சொற் குற்றத்தில் தீயது புறங்கூறல், அதாவது ஒருவரைப் பற்றி அவர் இல்லாத இடத்தில் கூறுதல், அதுமட்டுமா? கண் எதிரில் முகமன்; புகழ்ச்சி! புறத்தே பழிதூற்றல்! இந்தக் குற்றம் மலிந்து வருகிறது. “புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்கிறவர்கள், அறத்திற்காக என்று கூறுவார்களாம். அங்ஙனம் கூறுவது பொய்! நம்பாதே!” என்று எச்சரிக்கை செய்கிறார் திருவள்ளுவர்.

அடுத்துவரும் சொற்குற்றம் மிகக் கொடிது! அதாவது கோள் சொல்லுதல், அம்மம்ம! காலத்திற்குரிய கடமைகள் இல்லாத சோம்பேறிகளின் தொழில், கோள் சொல்லுதல்; பகை வளர்த்தல். இன்று கோள் சொல்லிப் பிழைத்துத் திரிபவர்கள் எண்ணிக்கையும் மலிந்துவிட்டது.

அடுத்தது, சொற்குற்றம். தான் நினைப்பவையெல்லாம் நடந்தவை போலப் பேசுதல். இவர்கள் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். இவர்கள் பரப்பும் தீமை இருக்கிறதே அது, ஒருவரைத் தற்கொலை செய்து கொள்கிற அளவுக்குக் கொண்டு போய் விட்டுவிடும். “ஊரார் தத்தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே” என்பது திருவாசகம், தத்தம் மனத்தன பேசுவோர் மிகவும் மோசமானவர்கள்.

சமுதாய உறவுகள் வளரவும், பாதுகாக்கப் பெறவுமே நெறிமுறைகள். சாலை வழிச்சென்றால் ஊரையடையலாம் என்பதைப் போல, உறவுகளுக்குரிய நெறிமுறைகளை அறிந்து உணர்ந்து ஒழுகினால் உறவுகள் வளரும்; பயன்தரும்; உறுதி யானதாக அமையும்.

நெறிமுறைகள் பிறழப் பெறுவதால்தான் உறவுகள் நீடிப்பதில்லை; நிலைத்து நிற்பதில்லை; நண்பர்கள் பகைவர்களாகின்றனர்; உடன் பிறந்தவர்கள் கொலை யாளிகள் ஆகின்றனர். இவையெல்லாம் இயற்கையல்ல; தவிர்க்க முடியாதனவுமல்ல.

எல்லாவற்றிற்கும் நெறி முறைகள் உண்டு. நமக்கு எவையெல்லாம் நன்மையாக இருக்கின்றனவோ அவையெல்லாம் மற்றவர்களும் அடைய வேண்டும் என்று எண்ணவேண்டும். உறவுகள் ஒத்துழைப்பும் உதவியும் கொடுத்துப் பெறுவனவே தவிரத் தாமாக வருவன அல்ல.

உலகின் எல்லாத் துறைகளிலும் ‘ஒரு தலைக் காமம்’ கொடிதே! மற்றவர்கள் மனம் வருந்த எதையும் கூறுதல், செய்தல் தீது, நெறியன்று, ஆயினும் உலகியலில் இந்நெறி நிற்போர் சிலரே.

ஆதலால், அறிந்தோரே சமுதாயப் பொறுப்புடையராக நடந்து கொள்ளுதல் வேண்டும். அறிந்தோராக இருப்பவர்களே சமுதாயத்தை அழைத்துச் செல்ல வேண்டியவர்கள். அவர்களிடம் சமுதாயம் கூடுதலாக எதிர்பார்க்கிறது. அறியாதவர்கள் பலர்; அறிந்தவர்கள் சிலர். அறியாதவர்கள் நெறியில் நீங்கியவர்கள்.

நெறியில் நீங்கியவர்களிடம் நல்லன எதிர்பார்க்க இயலாது; முடியாது. ஆதலால் நெறியில் நீங்கியவர்கள் வருந்தத்தக்கன கூறினார்களேனும், “அவர்கள் கூறவில்லை; அவர்கள் அறியாமையின் காரணமாக கூறுகின்றனர்” என்று அறிவுடையார் கருதி அதனைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.

கவுந்தியடிகள் மாதவத்தர்; நோன்பினால் உயர்ந்தவர்; இரக்கம் பெரிதும் உடையவர். கவுந்தியடிகள் கோவலனிடம் காட்டிய பரிவை, எவரிடம் யார் எதிர்பார்க்க முடியும்? ஆயினும், கோவலன் - கண்ணகி பற்றிச் சிறியோர் கூறிய தீய சொற்களை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை! சபித்துவிடுகிறார்!

மாதவத்தராகிய கவுந்தியடிகளுக்கு, மனைத்தவத் தாளாகிய கண்ணகி நெறியுணர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கவுந்தியடிகள் பிறழ்ந்தது கோவலன் - கண்ணகி மீதுள்ள பரிவினாலேயே! இயல்பாகச் சினம் கொள்பவரல்லர், இன்றைய சமுதாய வாழ்க்கையில்,

நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்
அறியாமை என்று அறிதல் வேண்டும்

(சிலப் 10: 237-238)

என்ற கண்ணகியின் அறிவுரை முற்றாகக் கொள்ளத்தக்க அறிவுரையாகும்.

திரிந்த கோலும் திரிந்த நிலமும்

அரசியல் ஓர் அறம், அரசியல் முறைகள் மனித குலத்துக்கு மறைமொழி போலப் பேணத் தக்கன. அரசியல் நிலத்திற்கு நீர் போல; உடலுக்கு உயிர் போல; பெண்ணிற்குக் கற்புப் போல மனித குலத்திற்கு இன்றியமையாதது. சிறந்த ஆட்சி தனிமனித ஆவல்களுக்கு, ஆர்வங்களுக்கு எதிராக அமையாது. ஆனால் அந்த ஆவல்கள், ஆர்வங்கள் நெறிமுறைப்படி அடையத்தக்கன என்று நெறிப்படுத்தும் - முறைப்படுத்தும்.

சிறந்த ஆட்சி முறை, தனிமனிதனுக்குச் சமுதாய உணர்வுகளையும் உறவுகளையும் வளர்த்துத் தரும். சமுதாய மோதல்களைத் தூண்டாது; வளர்க்காது. சிறந்த ஆட்சி நிலவும் நாட்டில் உள்ள மக்கள், அரசின் உறுப்புக்களாகத் தங்களை எண்ணுவர்; அரசை ஏமாற்ற மாட்டார்கள். அரசும் மக்களை வஞ்சிக்காது; ஏமாற்றாது.

அரசியல் அறம் முறைப்படி நிகழுமாயின் நாட்டில் வளம் பெருகும்; வறுமை இருக்காது; அமைதி நிலவும்; கலகங்கள் நடைபெறா உழைப்பு உயர்தவம் என்று போற்றப் பெறும்; உற்பத்தி பெருகும். வல்லோராயினும் வரையறைக்கு உட்படுத்தப்படுவர்; மெலியோர் நலியார்; எங்கும் இன்பம் தழுவிய ஆக்க வழியிலான சமூக உறவுகள் நிலவும் கால்கொள்ளும்.

அரசு, மனித குலத்தின் அனைத்துச் சக்திகளையும் பயன்படுத்தி வளர்க்கும்; வழிப்படுத்தும். அரசின் கடமை, தவறுகள் குற்றங்கள் நிகழாத-செய்வதற்குரிய அவசியம் ஏற்படாத சமுதாயத்தைக் காண்பதேயாம். அரசு சமுதாயத்தை வளர்க்கும் சாதனமேயாம். அதற்குத் தண்டனை வழங்கும் அதிகாரம் உண்டு. ஆயினும், அது கடைசி ஆயுதம்தான்! இத்தகைய நல்லரசை மனிதகுலம், அரசியல் சிந்தனைக் காலத்திலிருந்து பெற்றதா? இல்லவே இல்லை!

ஆட்சி செய்தல் பொறுப்புள்ள பணி. இந்தப் பணியைச் செய்வதற்கு ஒரு மனிதச் சிந்தனை போதுமானதன்று. ஏன்? ஒரு நிகழ்வை அணுகும் முறையிலும் அளந்தறியும் வகையிலும் ஒரு மனிதர் தவறுதல் கூடும். அதனால், முன்னாளில் அரசர்கள், அமைச்சர்களுடன், ஐம்பெருங்குழுவுடன், எண்பேராயத்துடன் கலந்துபேசி முடிவெடுத்துச் செயற்படுதல் என்ற முறை இருந்தது.

காலப்போக்கில் கலந்தறியும் இயல்பு இல்லாமல் போயிற்று. ஒரோவழி யிருந்தாலும் கலந்தறியும் பணிக்குத் துணையாகாதவர்கள் சார்புகள் உடையவர்களானார்கள். அதனால் கலந்தறிதல் போதிய பயன்தரவில்லை.

அரசு முறையில் “ஒருமனிதமுறை” மேவியதால் மனிதகுலம் பயனடையவில்லை என்ற மனக்குறையில் பலர் கூடி ஆட்சி செய்யும் மக்களாட்சி முறையைக் கண்டனர். ஆயினும் இன்றுவரை செழிப்பான - முறையான மக்களாட்சியைக் காண இயலவில்லை. மக்களாட்சி வடிவமைப்பில் “தனி மனிதரே” ஆட்சி செய்யும் இயல்பு இன்றைய மக்களாட்சி முறையில் அமைந்திருக்கிறது. ஆட்சி முறையில் தவறுகள் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதே தவிர, குறைய வழி காணப் பெறவில்லை.

ஆட்சியைவிட, கட்சிகள் பெரிதாகி விட்டன. இன்று நாட்டில் வளர்க்கப் பெறுவது கட்சிப் பற்றே தவிர, நாட்டுப் பற்றல்ல! இவ்வாறு முறை பிறழ்ந்தபோதெல்லாம் அரசு நெறிமுறை திறம்பியுள்ளது. அரசு கெட்டுப்போய் வலிமை குன்றிப் பழிப்புக்கு ஆளாகி வரலாற்றுக்கு அடிமையாகி அழிந்திருக்கிறது. அரசியல் மரபில் வந்த அருளாளர் இளங்கோவடிகள், இந்நிலை கண்டு இரங்குகின்றார்.

ஆட்சி இயற்றும் அரசியல் தலைவன், அரசியல் முறை தெரிந்த, நல்லாட்சி தவிர வேறெதையும் நாடாத நல்லோருடன் கலந்து செய்யாததால் எங்கும் முறை பிறழ்ச்சி!

உழைப்பவர் வருந்துவர்; உறிஞ்சும் உலுத்தர்கள் வாழ்வர்;உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்காததால் உழைப்பாளர் வருந்துவர்; உற்பத்தி குறையும்; வறுமை வளரும் ஆறலை கள்வர் தோன்றுவர்; களவும் கலகமும் வளர்ந்து அமைதிச் சூழ்நிலையைக் கெடுக்கும்; அரசியல் என்பது இல்லாததுபோல நாடு காட்சி தரும்.

அரசியல் முறை பிறழ்ந்த நாட்டில் அவலம் பெருகும்; அந்த நாடு, பாலை நிலம் போல விளங்கும்; நிலத்தின் வகையில் பாலை நிலம் கிடையாது; குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலம் நான்கு வகையினதே.

இயற்கையின் தலைமைக் கோள் ஞாயிறு தம் நிலை கெடுதலால், வளம் கொழிக்கும் குறிஞ்சிநிலம் வளம் குன்றுகிறது. முல்லை நிலம் முழுதும் கெடுகிறது. வளம் மிக்க தம் இயல்பைக் குறிஞ்சியும் முல்லையும் இழந்து விடுகின்றன. காதலுக்கும் களிப்புக்கும் உரியதாயிருந்த இந்நிலங்கள் மக்களுக்குத் துன்பம் தரும் பாலை நிலமாகி விடுகின்றன.

சிறந்த அரசியல் முறை இல்லாத நாட்டில் இன்பம் இல்லை; அமைதி இல்லை; பாதுகாப்பு இல்லை. இத்தகு இழிநிலை வயப்பட அரசைப் பெற்றுள்ள நாடு, பாலைவனம் போன்றது. இதனை இளங்கோவடிகள் எடுத்துக் கூறுவதறிக.

“கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்வியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்.”

(சிலம்பு 11:60-66)

என்பது சிலப்பதிகாரம்.

திருந்த மாட்டார்களா?

மக்கள், உருவத்தால் மக்கள் அல்லர். “உறுப்பொத்தல் மக்கள் ஒப்பன்று” என்று திருக்குறள் கூறும். ஏன்? “மக்களே போல்வர் கயவர்” என்றும் திருக்குறள் மக்கட் பண்பில்லாதாரை ஏசுகிறது. மக்கட் பண்பில்லாதவர்கள், சிந்திக்கும் பழக்கம் இல்லாதவர்கள்; சிந்திக்க மறுப்பவர்கள் அறிவில்லாதவர்கள்.

ஆயினும் தங்களது அறியாமையையே அறிவு என்று நம்பி ஆட்டம் போடுபவர்கள், ஆணவத்தின் உருவங்களாகத் தலைதடுமாறி நடப்பவர்கள்.

இவர்களின் செவிகள் கேட்கும் திறன் உடையவை யல்ல. இவர்களின் செவிகள் தோட்கப் படாத செவிகள்! இவர்கள் பிறப்பால் மக்கள்! அறிவால், உணர்வால், ஒழுக்கத்தால் விலங்குகள்! இத்தகு மக்களை இழிவு உபசார நிலையில் நெடிய ஒலியோடு மாக்கள் என்று அழைத்தல் தமிழிலக்கிய மரபு.

மக்களாகப் பிறந்தோர், இயற்கை வழங்கிய அறிவு வாயில்களைப் பயன்படுத்தி, மக்களுக்குரிய தகுதியினைப் பெறுதல் வேண்டும். வாழ்க்கையின் இலட்சியமே மக்களை அறிவு நலமுடையவராக்குதலும், பண்பு நலமுடையோ ராக்குதலுமே. இவ்விரண்டு குறிக்கோளும் இன்று அடையத்தக்க வழியில், மக்களுடைய வாழ்க்கையின் நடைமுறை இல்லை.

வாழ்க்கைக்குப் பொறிகளும் புலன்களும் துய்ப்பனவும் கிடைத்தது எதற்கு? உண்டு, கூடிக் களித்து மகிழ மட்டுமா? இல்லை; உய்யும் நெறியில் செல்லத்தான்! ஆற்றல் மிக்க அறிவு வாயில்கள், இன்று பயனற்றுக் காமக் களியாட்டங்களுக்கும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய தீமைகளை வளர்ப்பதற்குமே பயன்படுகின்றன.

இன்று எங்கும் குடும்பம், சுற்றம், சமூகம், நாடு என்ற பாங்கு வளரவில்லை. வாழ்க்கையின் தனி உறுப்புகளாகிய காதல், நட்பு ஆகிய துறைகளும் செழிப்பாக இல்லை. இப்பொழுது ஒரே இலட்சியம் “பிழைத்துவிடு! எப்படியாயினும் பிழைத்துவிடு” என்பதுதான்!

அரசு அமைப்புக்கள், முதிர்ச்சியும், உயர் இலட்சியமும் உடையவர்களால் இயக்கப் பெறாமையால் தேர்தல் போராகவே அமைந்துவிடுகிறது; ஒழுக்கச் சிதைவுகளும் வளர்ந்து வருகின்றன. ஆனால், இயல்பில் ஒழுக்கத் தவறில்லாத - ஆனால் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட ஒழுக்கத் தவறுகள் தண்டனைக்கு உள்ளாகின்றன.

ஏன் இந்த அவலம்? அதுவும் புகழ்பூத்த வரலாறு படைத்த தமிழ்நாட்டுக்கு! பாண்டிமாதேவியின் கற்புநலம் இந்த நாட்டின் தனிச்சிறப்பல்லவா? நாள்தோறும் வரும் செய்திகள் இன்று ‘கற்பு’ என்பது கேலிக்குரிய பொருளாகி விட்டது, என்றே பறைசாற்றுகின்றன.

ஒரு காலத்தில் தேர்க்காலில் மைந்தனை இட்டு நீதி வழங்கியது அரசு. ஆனால் இன்று யாரையும் விசாரிக்கக் கூட இயலாமல் ஊர்க்காவல் நிலையத்தில் முற்றுகை! அரசியல் தலையீடுகள்; தப்பித் தவறி ஊர்க்காவல் நிலையத்தில் அகப்பட்டுக் கொண்டுவிட்டால் அங்கு விசாரணை இல்லை! சித்திரவதை! மனச்சாட்சியுடையவர்கள் ‘காயம்பூ’வும் ‘இராச’னும் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதை மறக்க இயலுமா? இந்த நாட்டில் நீதி நூல்களுக்குப் பஞ்சமா? இதிகாச புராணங்களுக்குத்தான் பஞ்சமா? மேடைகளுக்குத்தான் பஞ்சமா? அல்லது உப்தேசங்களுக்குத்தான் பஞ்சமா?

உலகிலேயே இந்தியாவில்தான் புராணங்கள் அதிகம்; உபதேசியார்கள் அதிகம்! ஆனால் நிலைமை என்ன? மதிப் புணர்ச்சியுடன் போற்றப்பட வேண்டிய பல்கலைக்கழகங்கள் கூடப் போராட்டக் களங்களாகத்தான் மாறி உள்ளன. போராட்டத்திற்குரிய நியாயங்கள் உண்டா? இல்லையா? என்பதல்ல கேள்வி.

உரிமைகளை அடைய அணுகும் முறைகளைப் பற்றித்தான் நமது கவலை! போராடுபவர்கள் மீது மட்டும் குறையில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் போராடினால்தான் பணிகிறார்களே தவிர, நியாயங்களைக் காலத்தில் ஆராய்ந்தறிய முன்வருவதில்லை.

இம் மனப்போக்கு, அநியாயங்களைத் தூபமிட்டு வளர்க்கிறது. இந்தக் குறைகளையெல்லாம் மனம் வைத்தால் எளிதில் தீர்க்கலாம்; தீர்த்துக் கொள்ளமுடியும். ஆயினும் மனம் வரவில்லை. ஏன்? மக்கள் உணர்ச்சியைவிட, மாக்கள் உணர்ச்சியே மேலிட்டிருக்கிறது. சராசரி மனிதனிடத்திலிருந்து மிகப் பெரிய இடம் வரையில் ஒரே நிலைதான்!

தீண்டாமை குற்றம். தீண்டாதார் என்று ஒதுக்குதல் கூடாது. சாதி வேற்றுமை தீது. சாதி வேற்றுமைகளை அறவே விலக்க வேண்டும். “எல்லாரும் ஓர் குலம்” என்ற கருத்து சங்க காலத்திலிருந்து இலக்கியங்களில் ஒரே மாதிரியாக உரத்த குரலில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. யாராவது கேட்டார்களா? பின்பற்றினார்களா? படித்ததில் என்ன குறைவா? உரைகள் எழுதி அச்சிடவில்லையா? பட்டி மன்றங்களில் பேசி மகிழவில்லையா?

ஆனால், நடைமுறை என்ன? “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்பது என்னாயிற்று? தெருச் சண்டைகள்தானே வளர்ந்தன! குருதிக் கலப்புடையவர்கள் கூட, சுற்றத்தாராக இல்லையே! அண்ணன் - தம்பி சண்டை, கணவன் - மனைவி சண்டை மலிந்து வருகின்றனவே! “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்! என்பது என்னாயிற்று?

திருமுறைகளைப் போற்றிப் பூசனை செய்யும் இடங்களிலெல்லாம் சாதிவெறி முடைநாற்றம் வீசுகிறது! இன்றும் தனித்தனிப் பந்தியே போடுகின்றனர்! அது மட்டுமா? திருமந்திரத்திற்குப் புது உரை கூறுகின்றனர். சிவனை வழிபடும் உயர்ந்தோர் ஒருகுலமாம். இது சிறப்பு விதியாம். பொதுவிதியல்லவாம்! இது அந்தச் சாதி வெறியாளர்கள் கற்பிக்கும் அனுபவ உரை. “பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” என்பது என்னாயிற்று?

“பிறக்கும் வகையினால் ஒத்தன” என்று உரை எழுதி, உரையைக் கெடுத்ததுதான் மிச்சம்! “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!” என்பது என்னாயிற்று? இந்தப் பாடலைப் பாராயணம் செய்வோர், “தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த பெண்கள், சட்டை போட்டதால் மழை பெய்யவில்லை” என்று கூறும் அளவுக்கு அப்பரடிகளின் கொள்கை வெற்றி முழக்கம் செய்கிறது!

இவர்கள் படித்தால் என்ன? பாராயணம் செய்தால் என்ன? கற்றால் என்ன? கேட்டால் என்ன? திருந்த மாட்டார்கள்! மக்களாக இருந்தால் அல்லவா திருந்த? தலையெழுத்தில் கால் நீட்டியாகிவிட்டது. கால் அதிகமானால் விலங்குகள் என்றுதானே பொருள்! விலங்குகள் என்ன பாவம் செய்தன, இவர்களோடு ஒப்பிட்டுக் கூற? உவமித்துக் கூற விலங்குகளுக்குத் தோற்றம் போலவே வாழ்க்கை முறை? ஏமாற்றங்கள் இல்லை!

மாக்கள் நிலை அப்படியல்லவே. அவர்கள் துன்பப் படும்பொழுது மட்டுமே மயங்குவர்; அழுவர். இவர்களைத் திருத்த கரும்பைப் பயன்படுத்தும் வழியே பயனுடையதாகுமா? வேறு வழியில்லையா?


“மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்று
அறத்துறை மாக்கள் திறத்தில் சாற்றி
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும்
யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்
தீதுடை வெவ்வினை உருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர்”

(சிலம்பு ஊர்காண் 27-32)

என்னும் சிலப்பதிகார அடிகள் எண்ணத் தக்கன.

பெண்டிரும் உண்டு கொல்!

கொலையுண்ட கோவலன் பிணத்தை, கொலையுண்ட இடத்தில் கண்ட கண்ணகி, பாண்டியனின் அவைக்களத்தை நோக்கி, நடக்கிறாள் நீதி கேட்க! ஊர் முழுதும் நீதி கேட்டு நடக்கிறாள்! அப்பொழுது முதன் முதலாக, கண்ணகி, “பெண்டிரும் உண்டு கொல்! பெண்டிரும் உண்டு கொல்!” என்று அறை கூவி அழைத்துக் கேட்கிறாள்!

ஏன்? பெண்டிர் இருந்திருந்தால் கோவலன் கொல்லப்பட்டிருக்கமாட்டானா? ஒரு நாடு, ஒரு நகரம் என்றிருந்தால் பெண்கள் இல்லாமலா இருப்பார்கள்? கணவனை இழந்த துன்பத்தின் அனுபவத்தை உணரும் நிலையில் “பெண்டிர் இல்லையா?” என்று கேட்டாள் என்பர். இது பொருந்தாது. பெண்டிர் என்பது பொதுப் பெயர். இது என்ன கேள்வி?

பெண் என்பவள் பேணத்தக்கவள் என்பது மட்டுமல்ல. அவள் மற்றவர்களையும் பேணுபவள் என்பதும் பொருள். அதனால்தானே பெற்றவளாக இல்லாத பெண்ணையும் “தாய்” என்று அழைக்கும் மரபு, மக்கள் மன்றத்தில் வழக்கில் இருந்து வருகிறது. பெண் எல்லா உயிர்களையும் பேணிக் காக்கும் இயல்பினள்.

அதனாலன்றோ ஐங்குறுநூறு அம்மையைப் பங்கிலுடைய ஐயன் திருவடிகளில் உலகம் முகிழ்த்தது என்று வாழ்த்துகிறது. அம்மையோடு அப்பன் உடனுறைதலாலே உலகு இயங்குகிறது; உயிர்கள் இன்புற்று வாழ்கின்றன என்று திருவாசகம் கூறும்.

பெண்ணின் நல்லாளொடு பொருந்தியவனாகப் பிரான் இருப்பதனாலேயே பெருமானுக்கு அருளிச் செயல் இருக்கிறது என்று திருமுறைகள் பறை சாற்றுகின்றன. பெண்மை என்பது மகவெனப் பல்லுயிரையும் ஒக்க நோக்கும் பேரருள் திறத்தது. அதனாலன்றோ கடவுளின் கருணையைத் தாயன்பு போன்றது என்று உவமித்துக் கூறினர்.

உண்மையான பெண்டிர் - பெண்மைக்குரிய நலமனைத்தும் அமைந்த பெண்டிர் வாழும் ஊரில் நியாயங்கள் நிலவும்; நீதி நிலைத்து நிற்கும். அங்கு யாருக்கும் துன்பம் வராது. இது தமிழ்க் கொள்கை.

கோவலன் கொலையுண்ட நிகழ்ச்சியின் மூலம் மதுரையில் அருள் நலம் காக்கும் பெண்டிர் இல்லையோ என்ற முடிவுக்கு, கண்ணகி வருகிறாள்! மதுரையில் பெண்கள் இல்லாமல் இல்லை! இருந்தனர். ஆனாலும் திண்மையும் திறனும் மிக்க பெண்டிர் இல்லை.

பெண்கள் தம் நிலை இழந்துவிட்டனர்; போகப் பொருளாக மட்டுமே இருக்கும் நிலைக்குத் தாழ்த்தப்பட்டு விட்டனர்; இந்த இழிநிலைக்குச் சோழநாடு தள்ளப்பட்ட தனால்தானே நடுச்சந்தியில் மாதவி ஏலம் கூவி விற்கப்படுகிறாள்!

கோவலன், மாதவியிடத்திலேயே தங்கிவிட்டதை இடித்துக்கூறி, இல்லத்திற்கு அழைத்துவரும் பெண்கள் யாரையுமே காணோம்! கோவலனின் தாயும்கூட அப்படித் தான்! ஐயோ பாவம்! இரங்கத்தக்க நிலை! கண்ணகியின் தோழிகூட, கண்ணகியைக் காமவேள் கோட்டம் தொழ அழைக்கிறாளே தவிர, கோவலனை அழைத்து வரும் வாய்ப்பில்லை! இந்த அளவுக்குப் பெண்ணுலகு தரம் தாழ்த்தப்பட்டுவிட்டது.

மதுரையில் மட்டும் என்ன? பாண்டியன் அவைக் களம் ! அத்தாணி மண்டபம் ! பாண்டியன் அரசு இருக்கையில் அமர்ந்திருக்கிறான்! ஆடல் மகள் ஆடுகிறாள்! அரசன், ஆடலில் ஒன்றிக் கலந்து அனுபவிக்கிறான்! அரசிருக்கையில் உடனிருந்த பாண்டிமாதேவிக்குத் தாங்க முடியவில்லை! ஆனால் என்ன செய்கிறாள்: ஆடலை நிறுத்த அவளால் இயலவில்லை; இயலாத நிலை! அரசியானாலும் பெண்தானே!

ஆதலால், பாண்டிமா தேவிக்குத் தலைவலி வருகிறது! இல்லை! தலைவலி வந்திருப்பதாகச் சொல்லிப் பிரிகிறாள்! அந்தப் புரத்திற்குச் செல்கிறாள்! இதுதான் பாண்டியநாட்டு நிலை! இத்தகு பெண்டிர், பெண்டிர் அல்லர். போகப் பதுமைகள்! அணிகலன்களின் சுமை தாங்கிகள்! அவ்வளவு தான்!

இதனால்தான் கண்ணகி; “பெண்டிரும் உண்டு கொல்! பெண்டிரும் உண்டு கொல்!” என்று கேட்கிறாள்! அது மட்டுமா? நல்ல பெண்டிர் முரட்டுத்தனத்திற்கு - வன் கண்மைக்கு மாற்று மருந்து!

தலைவனின் வாழ்க்கைத் துணையாய் அமைந்து அவனுடைய முரட்டுத் தனங்களையெல்லாம் அன்பியலால் மாற்றியமைத்து அவனைத் தெய்வமாக்குபவள் பெண் ! அத்தகைய பெண்டிர் மதுரையில் இருந்திருந்தால் கோவலன் கொல்லப்பட்டிருக்க மாட்டான் என்பது கண்ணகியின் துணிபு.

ஆம், உண்மைதான்! பெண், சமுதாயத்தில் பாதி! பெண், வாழ்க்கையில் பாதியல்லள். பெண், வாழ்க்கை முழுதும் தாயாக, உடன் பிறந்தவளாக, மனைவியாக, தோழியாகத் தொடர்ந்து வருகிறாள்! திருவள்ளுவர் காட்டும் பெண், வாழ்க்கைக்குத் துணை நாடுபவள் அல்லள்; துணையாய் அமைபவள்; துணை நலமாக அமைந்து ஆக்கம் தருபவள்.

பெண்டிர்குலம் தரமானதாக அமைந்தால் தனி உடைமைத் தீமைகள் வளரா, கூட்டுக் குடும்பங்கள் நிலவும்; நாட்டில் களவு நிகழாது; கொலை நிகழாது.

பெண்டிர் குலம் ஆக்கத்தினைத் தரும் குலம்! இன்ப அமைதி காக்கும் குலம்! இன்றும் நமது நாடு துன்பங்களால் அலைக்கழிக்கப்படுகிறது. பெண்டிர் இல்லையா? இருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் தமிழ்ப் பெண்களாக இல்லை. தனி உடைமைப்பற்று, குடும்பப்பாசம் (அன்பு விலக்கல்ல) ஆகிய நச்சுக் குணங்களை எய்தியுள்ளனர். இன்றைய பெண்டிர்களில் பலருக்குப் பொதுமைக் குணம் இல்லை. நாடே வீடு ஆனால்கூட அவர்கள் மனநிறைவு பெறாத நிலை! இந்த நிலை மாற வேண்டும்.

படித்த பெண்கள் இன்று மிகுந்துள்ளனர். இவர்கள் திண்மையுடையவர்களாக விளங்கிப் பெண்மைக்குச் சிறப்புச் சேர்க்க வேண்டும். பெண்களை விளம்பரப் பொருளாகக் கொச்சைப் படுத்துவதைக் கண்டு கொதித்து எழவேண்டும்.

பெண் பெருமைக்கு உரியவள்; பேணத் தக்கவள்; போற்றத் தக்கவள் என்ற மனப்போக்கு சமுதாயத்தில் உண்டாக வேண்டும். வாழ்வியலில், பெண்ணின் பெருமைக்கு எதிராக உள்ள சமுதாய விதிகளில் மாற்றம் காண வேண்டும்.

சராசரியாக வளர்ந்தவர்கள் கூட, கடைப்பிடிக்க முடியாத விதிகள், ஒழுக்க நெறிகள் வற்புறுத்தப் பெறுவதால், ஒழுக்கக் கேடுகளே தோன்றுகின்றன. பெண்ணியலுக்கு ஏற்ப நிலவும் பழந்தமிழ் நெறி, புத்துயிர் பெறவேண்டும்.

இப்பெண்டிர் குலம் நாட்டின் நாகரிகத்திற்கு அரண் செய்யவேண்டும். நாட்டில் மலிந்துள்ள தீமைகளைக் களைய, அவர்கள் அன்பின் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்.

பெண்டிர்கள் வாழும் திருநாடாக, பாரதம் மலர்தல் வேண்டும்! “பெண்டிரும் உண்டுகொல்!” என்ற கண்ணகியின் கேள்விக்கு விடை கண்டாக வேண்டும்.

“சான்றோரும் உண்டு கொல்?”

கோவலன் கொல்லப்பட்டான்; கள்வன் என்று பழி சுமத்திக் கொல்லப்பட்டான். யாரால் கோவலன் கொல்லப் பட்டான்? நாடோடிகளால் அல்ல. நாடாளும் அரசனால் கொல்லப்பட்டான்!

கண்ணகி ஆற்றாது அலமந்து அழுகிறாள்! ஏன்? கணவனை இழந்த துன்பத்திற்காக அல்ல! கணவனை இழந்த துன்பம் கண்ணகியின் எழுச்சிக்குக் காரணமாய் அமைந்தது. அவ்வளவுதான்! பின் கண்ணகியின் வெகுளலுக்கு யாது காரணம்?

கோவலனைக் கொன்ற அரசு, பாதுகாப்புத் தர வேண்டிய நாடாளும் அரசு; நாட்டில் கள்வர்கள் தோன்றாமல் காக்க வேண்டிய கொற்றம். ஆனால், அரண்மனையிலேயே திருடர்கள்! திருடு! இதற்கு வாழ வேண்டியவர்களை - வாழ வந்தவர்களைக் கொலைப் பலி கொள்வது, என்ன நீதி:

கள்வர்கள் - கொலையாளிகள் நாடாள்பவர்களாக விபத்துக்களால் இடம்பிடித்துக்கொண்டு, மற்றவர்களைக் கள்வர் என்று பழி சுமத்துவது நியாயமா? நீதியா? கொலைகாரர்கள், நல்லவர்களைக் கொலை செய்வதுதான் கொற்றமா? இத்தகைய முறைகேடான கொற்றம் எங்கு அமையும்? எப்படி அமையும்?

நாட்டில் சான்றோர்கள் யார்? பெருமைக்குரிய பெரியவர்கள் யார்? இது இன்று புரியாத புதிர்! ஒருவர் உணவைச் சுருக்குகிறார்! வாய் பேசா மௌனியாக இருக்கிறார்! காதலின்பத்தை நாடாமலே புலனடக்கத்துடன் வாழ்கிறார்! இவையெல்லாம் சிறப்புத்தான்! ஆயினும் இவ்வியல்புகள் அருமையானவையா?

எத்தனையோ பேர் இந்த நாட்டில் ஒருவேளை உணவு, உண்ணுகிறார்கள், ஊமைகளாகவே பிறந்து வாழ்வோர் பலர்! பெண் யானைகள் கூடப் பிரிக்கப்பெற்று நாட்டில் வளர்க்கும்போது பிரமசரியம்தான் காக்கின்றன. அதனால், பெருமைக்குரியன ஆகிவிடுமா? கண்கண்ட தெய்வங்களாகி விடுமா? இவையெல்லாம் உடலால் செய்யும் தவம் ! பழக்கத்தால் வரும் இயல்புகள்!

நன்றாக உண்பதோ, களித்துப் பேசி மகிழ்ந்து வாழ்வதோ, காதலின்பத்தில் திளைத்து வாழ்வதோ பெருமைக்குரியன அல்ல - சான்றாண்மைக்குரியன அல்ல என்றால் நமது சமயங்களும் இலக்கியங்களும் புராணங்களும் கூறும் வாழ்க்கை முறைகள் என்ன, பொய்யா?

யாரையாவது புகழவேண்டுமாயின் வாயில் வந்தபடி யெல்லாம் புகழ்ந்து விடக்கூடாது. எதற்கும் நெறிமுறை தேவை. இந்த நூற்றாண்டில் பெருமையும் புகழும் கற்பிதத்திற்குரியன, இயல்பானவையல்ல, உழைத்துப் பெறக்கூடியன அல்ல என்பது படிப்பினை! எனினும் இது தவறு.

சான்றாண்மையுடையவர்கள் பெருமைக்குரிய குணங்களை உடையவர்கள் மட்டுமல்லர்; அக்குணங்களை வாழ்க்கையிற் செயற்படுத்துபவர்கள். இவர்கள் பொய்யை நிந்திப்பதுடன் நிற்கமாட்டார்கள்; உண்மையைச் சாதித்தும் நிற்பார்கள்.

இவர்கள் மனத்தில் உயிர்க்குலத்தினுடைய வேற்றுமைகளை வளர்க்கும் வெறுப்புணர்ச்சி இருக்காது. ஒருமையுணர்வு ஊற்றத்துடன் வெளிப்படும்.

உயிர்க் குலத்தை அழிக்கும் இனப்பகையான மொழி வேற்றுமை, சமய வேற்றுமை முதலியவற்றைச் சான்றோர் எனப்படுபவர், உளமார வெறுப்பர். கடைகோடி மனிதரின் உரிமைக்கும் வழக்காடிப் பாதுகாப்பர்; வாழ்வளிப்பர்.

நாடாளும் கொற்றமேயானாலும் அஞ்சாது, தவறு கண்ட போது எடுத்துக் கூறுவர் இடித்துக் கூறுவர்; திருத்தமுறும் வகையில் போராடுவர். இவர்களே சான்றோர். இத்தகு சான்றோர்கள் உள்ள நாட்டில் நல்ல அரசு அமையும். மக்கள் உரிமைகள் பாதுகாப்பாக அமையும்.

கோவலன் முறை கேடாகக் கொல்லப்பட்டதால் அரசு நல்ல அரசல்ல! அதனால் அந்த நாட்டில் சான்றோர்கள் இல்லை என்ற முடிவுக்கு வருகிறாள் கண்ணகி! அதனால், “சான்றோரும் உண்டு கொல்!” என்று கேட்கிறாள்!

அன்று கண்ணகியின் வினாவிற்கு விடை கிடைக்கவில்லை. அதே வினாவை இன்றும் பலர் கேட்கின்றனர்! விடைதான் கிடைத்த பாடில்லை! என்றுதான் கிடைக்குமோ…?

தெய்வமும் உண்டு கொல்!

“தெய்வம்” என்பது நியதிகளின் மறு பெயர். நீதியின் வடிவம் தெய்வம்! எந்த நாட்டில் தெய்வ நம்பிக்கை இருக்கிறதோ அந்த நாட்டில் மனித உரிமைகள் மதிக்கப் பெறும்; இயற்கை நியதிகள் பாராட்டப் பெறும்; நீதி நெறிகள் பாராட்டப் பெறும்.

“வல்லாண்மை வாழும்” என்ற நியதி உண்மையே யானாலும், தமிழிலக்கிய உலகு இந்நியதிக்குத் தரும் பொருள் வேறு. வல்லாண்மை என்பது எளியனவற்றை அழித்து வென்று வாழ்தலன்று.

இவ்வகைப் போராட்டங்கள் மனித குலத்துக்குத் தனியுடைமை உணர்வு வந்த காலந்தொட்டுத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆயினும் மனித குலம் அடைந்த பயன் இழப்புகள்தான்! ஆனால், தமிழிலக்கிய உலகம் “வல்லாண்மை” என்பதற்கு, கொள்ளும் பொருள் வேறு.

இயற்கையின் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, வளி, வெளி ஆகியனவற்றால் ஏற்படும் பாதிப்புக்களைத் தாங்கி, உயிர்த் தொகுதிகளுக்கிடையிலுள்ள நச்சுயிர்களினின்றும் தப்பி, ஆற்றல் மிக்க உழைப்பால், நுகர்வன படைத்து உள்ளவாறு நுகர்ந்து இன்பந் துய்த்து வாழும் வாழ்க்கையே வல்லாண்மையின் வெற்றி. ஆனால், நடைமுறையில் கொள்ளும் பொருள் வேறு.

வாழும் உயிர்களிடையில் நுகர்பொருள் தேவைக்கு அதிகமாக இல்லை; பற்றாக்குறை நிலைதான். அதனால் உயிர்களிடையில் ஆங்காரமான போராட்டங்கள். இப்போராட்டத்தில் வல்லாண்மை பெறாதனவற்றை அழித்து வல்லாண்மை வாழ்கிறது! இந்தச் சூழ்நிலையில் தான் ‘தெய்வம்’ என்ற சிந்தனை அரும்புகிறது.

தெய்வம் என்பது சங்க காலத்தில் கடவுளைக் குறித்திருக்கிறது. “மணங்கமழ் தெய்வத்திள நலம்” என்பது திருமுருகாற்றுப்படை பின்னால் ‘சிறு தெய்வம்’ என்றால் கிராம தேவதை என்று பொருள் கொண்டனர். ஆனால் ‘சிறு’ என்ற அடைச்சொல் சேர்த்தால்தான்! மேலும், ஊழுக்கும் தெய்வம் என்று பெயர் உண்டு.

ஆனால் ஊழ், தெய்வமாகாது. ஊழின் பயனைச் சேர்ப்பிக்கும் நியதியாகத் தெய்வம் விளங்குவதால் ஊழைத் தெய்வம் என்றும் அழைத்தனர் போலும்!

தெய்வம் என்பது உயர்ந்தது; வேண்டுதல் வேண்டாமை இல்லாதது; உலகியலின் உயிர்ப்பாக இருந்து அதனை இயக்குவது. உலகியலில் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒழுங்குகளுக்கு - முறை பிறழாத நிகழ்ச்சிகளுக்குக் காரணம் தெய்வம் - கடவுளேயாம்.

தெய்வத்தை ‘நீதி’ என்று திருவாசகம் போற்றும். தெய்வம், வலியாரிடமிருந்து மெலியாரைக் காப்பாற்றுவது; நீதியை நிலை நிறுத்துவது. தெய்வம் பிரார்த்தனைகளால் - பூசனைகளால் மட்டும் அமைதி கொள்வதன்று. தெய்வம் நீதித் தன்மையுடைய ஒப்புரவு வாழ்க்கையையே விரும்புகிறது; வாழ்த்துகிறது.

நீதித் தன்மை பிறழ்ந்த உயிரினங்களைத் தெய்வம் ஒறுக்கும். இதுதான் சமய இயல். ஆனால், காலப்போக்கில் கடவுள்-தெய்வம் லஞ்ச லாவண்யத்திற்குட் பட்டதென்றும், தெய்வமே பலி கேட்கிறது என்றும் கூறி, தெய்வ நம்பிக்கையை, கேலிக் கூத்தாக்கி விட்டனர்.

இன்று, கடவுளைப் பற்றி அதிகமாகப் பேசுகிறவர்களில் மிகுதியானவர்கள், மனித குலத்தின் பொதுநலம் சார்ந்த இன்ப வாழ்வினுக்குப் பகைவராகத்தான் உள்ளனர்.

இன்றைய நமது சமய உலகம் கடவுளை நினைக்கிறது; மனிதனை மறந்துவிடுகிறது. கடவுளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. ஆனால் தம்மைச்சுற்றி வாழும் மனிதருக்கு எதையும் செய்ய விரும்புவதில்லை. இது தெய்வ நம்பிக்கை ஆகாது; கடவுள் வழிபாடு ஆகாது.

தெய்வ நம்பிக்கை உடையவர்கள் மற்றவர்களின் உரிமைகளை மதிப்பார்கள்; உலகம் உண்ண உண்பார்கள்; உலகம் உடுத்த உடுப்பார்கள். தெய்வம் இருப்பதை நம்புகிறவர்கள், மற்றவர்களை வாழ்வித்து வாழ்வார்கள்.

தெய்வ நம்பிக்கை உள்ள நாட்டில் தீண்டாமை இருக்காது. பகை வளர்க்கும் வேற்றுமைகள் இரா. எல்லாரும் கூடித் தொழில் செய்வர்; ஒப்புரவு நெறியில் வாழ்ந்தின்புறுவர்; இதுதான் சொர்க்கம்.

சந்து பொந்துகளில் சாதிகள் வாழ்கின்றன! குல கோத்திரச் சண்டைகளின் பேரிரைச்சல் கேட்கிறது! சோம்பித் திரியும் மதியிலிகள் எங்கும்! தெருவுக்குத் தெரு வறுமொழியாளர்கள்! வம்பரத்தர்கள்! ஒருவரை ஒருவர் அடுதல், தொலைத்தல் ஆகிய இழி செயல்கள்! வறுமை, ஏழ்மையின் கோர தாண்டவங்கள்! இங்ஙனம் விளங்குவது ஒரு நாடாகாது; அதுவும் தெய்வம் இருக்கும் நாடாகாது.

பூம்புகாரில் செல்வக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கோவலன் நாட்டின் சூழ்நிலையால் பாதிக்கப் பெற்றவனாகி, வாழ்வதற்காக மதுரைக்கு வருகின்றான். “வாழ்தல் வேண்டி ஊழ்வினை துறப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப்புகுந்த” என்பது கண்ணகியின் வாய்மொழி.

வாழ்கிறவர்களை வாழ்விப்பதுதான் நல்ல அரசு. ஒருவருடைய வாழ்வுரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், கோவலன் உயிர், பாண்டியப் பேரரசால் பறிக்கப் பெற்றது. கோவலன் கொலையால் ஆற்றொனாத் துயரத்தைக் கண்ணகி அடைந்தாள் என்பது உணமை.

ஆயினும் கண்ணகியை மிகுதியும் வருத்திய துன்பம் கோவலன் கொலையுண்டதன்று. கோவலனைக் கொலை செய்ய சொல்லப்பட்ட காரணத்தில் தான்! அதாவது ‘கள்வன்’ என்ற குற்றச்சாட்டின் மீது கொல்லப் பெற்றதுதான்!

கள்வர்கள், மற்றவர்களைக் கள்வராக்கிக் கொள்ளும் முறை அன்றும் இருந்திருக்கிறது; இன்றும் இருக்கிறது. இது நெறிமுறை பிறழ்ந்த நிலை. களவு, பொய்ம்மை, ஆராயாமை, அறியாமை, கொலை ஆகிய பல குற்றங்கள் கோவலன் கொலையின் மூலம் தெரிய வருகின்றன.

இத்தகு குற்றங்கள் தெய்வ நம்பிக்கையுடையவர் களிடத்தில் இருப்பதற்கில்லை; தெய்வம் உள்ள இடத்தில் இருக்காது; பழிசுமந்த கொலைகள் இருத்தற்கில்லை. இது இளங்கோவடிகள் நம்பிக்கை கண்ணகியின் நம்பிக்கை! ஆனால், மதுரையின் நடப்பு முரண்பாடாக இருந்தது.

ஆதலால் “தெய்வமும் உண்டு கொல்” என்று கேட்கிறாள் கண்ணகி. இன்றும் “தெய்வமும் உண்டு கொல்!” என்று கேட்கத்தான் செய்கின்றனர் பலர், “தெய்வம் கோயிலில் இருக்கிறது” என்று கூறுகின்றனர்! தெய்வத்தை ஒருமையில் காண்மின்! வாழ்விக்கும் பேரறத்தில் காட்டு மின்! இதுவே கண்ணகியின் வினாவிற்கு விடை!

நன்றே செய்க! இன்றே செய்க!

உயிர் வாழ்க்கை என்பது, குறிக்கோளுடையது. உயிர் கண்டறிவதில்லை; ஆனால் கேட்டறியும், உயிரின் தரமும் தகுதியுமே உலகியலின் வரலாறாக வளர்கிறது.

உயிர், நல்லியல்புடையது. ஆனால் சார்பினால் உயிரின் நல்லியல்பு திரிகிறது. உயிர் தம்மியல்பில் திரியாமல் தம்நிலையில் நன்னிலையைப் பாதுகாக்க அறம் செய்து கொண்டிருக்க வேண்டும். அறம் என்பது மனத்தூய்மை,

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”

என்று திருக்குறள் கூறும்.

நாளும் வாழும் வாழ்க்கையில் உயிர் மனத்துய்மை இழத்தலும், இழுக்குறுதலும் தவிர்க்க முடியாதது. புவியீர்ப்பு ஆற்றல் தன்பால் பொருள்களை ஈர்ப்பது போல, உயிரைக் கீழ் நோக்கிய இயல்புகளில் இழுக்கும் ஆற்றல், பொருந்தா உலகியலுக்கும் உண்டு. அதனால் மனத்தூய்மை கேடுறும். ஆதலால் நாள்தோறும் நாம் மனத்துய்மை பெறுதல் வாழ்தலுக்குரிய கடமைகளுள் ஒன்று.

துய்மை எளிதில் வராது. மனத்துய்மை பெறுதற்குரிய வாயில்களை நாடி அவற்றைச் செய்தல் வேண்டும். மனத் தூய்மை பெறுதலுக்குரிய சிறந்த வாயில் மற்றவர்களிடத்தில் அன்பு காட்டுதல்; அவர்கள் வாழ்வதற்குரியன செய்தல்; அவர்கள் மகிழ்தலுக்குரியன செய்தல். அவற்றையும் நன்றி, பாராட்டு, புகழ் முதலியன பெறும் வேட்கையின்றிச் செய்தல்; பயன் பெறுவார் இகழ்ந்து வெறுத்தாலும் பொறுத்துக் கொண்டு செய்தல் அறம்.

புகழை விரும்பிச் செய்யும் செயல்கள் மனத் தூய்மையைத் தரா. ஏன்? புகழ் விருப்பம் போதையை விடக் கொடியது. மேலும் மேலும் பெற விரும்பும்படி காமுறுத்துவது புகழ்.

அதனால் காலப் போக்கில் அறத்தின் நோக்கம் மாறி, செய்வன அறமாக இல்லாமல் போகும். செய்யப்படுவோர் பயன்படுதலுக்குரியர் என்று, புகழ்வோருக்கு வரையறையின்றிச் செய்யும் மனப்பாங்கே தோன்றும். அப்போது புகழ்வோரே பயன்பெறுவர். வறியோர்-உரியோர் பயன் பெற மாட்டார்கள்.

தூய்மை, துறவு, தொண்டு இவைதாம் உலகத்தில் அழுக்காற்றின் வழியில் சிக்கிப் போட்டிகளுக்கு ஆளாகாதவை. மற்ற உலகியல் பேறுகள் அனைத்தும் மற்றவர்களிடத்தில் அழுக்காற்றைத் தோற்றுவிப்பன போட்டி உணர்வைத் தருவன. அதனால், புகழ்பெறுதலும் பாதுகாத்தலும் அரிது. அது மட்டுமன்று, ஒருவர் புகழ், மற்றவர்களிடத்தில் அழுக்காற்றை உண்டாக்கும்.

அழுக்காறுடையவர்கள், புகழுடையோரை இகழ்வர், இகழ்ச்சியைத் தாங்க முடியாமல் பொறுமையிழந்து பொருத வேண்டி வரும். அவ்வழி பகையும் போரும் மூளும்.

புகழ் கருதிச் செய்யும் எவையும் அறமாகா. வணிக நோக்கோடு செய்யப் பெறும் எச்செயலும் அறமாகாது. ஏன்? இலாபம் என்ற குறிக்கோளும் வெறியூட்டும் தன்மையது. இலாபம் மேலும், மேலும் கூட வேண்டும் என்றே இலாப நோக்குடையவர் விரும்புவர். இத்தகு இலாப வெறியரின் துண்டுதலால்தானே, உணவுப் பொருள்களில் கூட கலப்படம் செய்கின்றனர்; கை நிறைய ஊதியம் பெற்றாலும், கையூட்டின் மீது நாட்டம் கொண்டுள்ளனர். ஆதலால், இலாப நோக்கும் மனத் தூய்மைக்குத் துணை செய்யாது.

ஆதலால், தொண்டு மனப் பான்மையுடன் செய்யப் பெறும் அறச் செயல்கள், மனத் தூய்மைக்கு வாயிலாக அமையும். இத்தகு அறத்தை-நற்செயல்களை, ஒவ்வொரு வினாடியும் சிந்தனையால், செயலால், உயிர்க் குலத்தினிடத்தில் அன்பு காட்டி, அந்த உயிரினம் வாழ்தலுக்கு உரியவாறு செய்து கொண்டிருக்க வேண்டும்.

அறம் செய்தலுக்குரிய காலம் என்று ஒன்று இல்லை. நாள் தோறும் வீடுகள் கூட்டிச் சுத்தம் செய்யப் பெறுதல் வேண்டும். அங்ஙனம் கூட்டப் பெறாத வீட்டில், கூட்டித் தூய்மை செய்ய இயலா வண்ணம் சில நாட்களில் அழுக்குகள் வந்தடையும். அவ்வழி, நச்சுயிர்களும் வந்து வாழத் தொடங்கும். அது போல அன்றாடம் மனத் தூய்மை செய்து கொள்ளுதல் வேண்டும்.

ஒரு நாள் அன்பு காட்ட மறந்தால் மறுநாள் அன்பு தலைப்படாது. பகை தோன்றிய உடனேயே அன்பினால் பகையை மாற்றிக் கொள்ளத் தவறினால் மறுநாள் அந்தப் பகை வன்பகையாக உருமாற்றம் பெற்றுப் படிப்படியாக வஞ்சினமாகி, கொலையளவு இழுத்துச் சென்று விடும்.

பகை கண்ட போதே பண்பாட்டு மருத்துவத்தைச் செய்துவிடல் வேண்டும். அப்பொழுதுதான் தீமைகள் மனத்தில் கூடாரமடித்துத் தங்கா. ஆதலால் நாழிகை தேர்றும் நாள்தோறும் மனத்துய்மை பேணும் அறம் செய்தல் வேண்டும். மேலும் நாளை செய்யலாம் என்றால் ‘நாளை’ என்னும் நாள் யார் கையில் இருக்கிறது? இஃது இயற்கையில் தெரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது. அதனால் இறப்பு உணர்ச்சி மேலிட்டு அழுது மடிவதா? கூடாது.

வாழ்வதற்கே பிறந்த நல்லுயிர்கள் மரணத்தில் அழிந்து போகக் கூடாது. மரணத்தைக் காட்டிப் பயமுறுத்துவதற்காக நிலையாமையை எடுத்துக் கூறுவதில்லை. மரணத்தைக் கண்டு அஞ்சிச் சாகிறவர்கள் கோழைகள்; வாழத் தெரியாதவர்கள்.

பின் ஏன் மரணத்தைப் பற்றிய எண்ணம்? கல்வி, ஞானம், தொண்டு, அறம் ஆகியவற்றிற்கு, ஒவ்வொரு விநாடியும் கடைசி விநாடியே என்று கருதிச் செய்து வாழ்தல் நல்ல மரபு.

கல்வியை இன்றே கற்க வேண்டும். நல்ல நூல்களை நாடிக் கற்க வேண்டும். பெறுதற்கரிய ஞானத்தை இன்றே, இப்பொழுதே பெறவேண்டும். தொண்டு இப்பொழுதே செய்க, சிந்தித்தால் வாய்ப்பு இழக்கவும் நேரிடலாம். இந்த உயர் நோக்கத்தோடு சொல்லப் பெற்ற நிலையாமைக் கருத்து, எதிர்காலத்துச் சிந்தனையே இல்லாமல் செய்துவிட்டது ஒரு பெரிய குறை.

நிலையாமை உணர்வு அறம் செய்தற்குத் தூண்டு கோலேயன்றி, எதிர்காலச் சிந்தனைகளை, திட்டங்களை இழப்பதற்கன்று. இத்தகு உயரிய கருத்தினைச் செங்குட்டுவனிடம் மாடல மறையோன் கூறுவதாக சிலப்பதிகாரம் உணர்த்துகின்றது.

“நாளைச் செய்குவம் அறமெனின் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்
இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதுமில்லை.”

(சிலம்பு. நடுகல். 179-182)


ஊழ் என்பது என்ன?

இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்ற, வெளிப்படையான காரணங்கள் மூன்றைக் குறிக்கின்றார்.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதூ உம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து ஊட்டும் என்பதூ உம்”

காரணங்களாகும். இம்மூன்றனுள் வாழ்வியலுக்கு முதலாக அமைந்து மிகுந்த விவாதத்திற்கும் உரியதாகிறது ஊழ்.

ஊழ் என்பது என்ன? உயிர் நிலையானது; தோற்றம், அழிவு இல்லாதது. அறியத்தக்கது செயல்கள் செய்யும் இயற்கையினது. உயிர், பிறத்தல் - இறத்தல் என்ற சொற்கள், உடல் மாற்றங்களைக் குறிக்குமே தவிர, உயிரைக் குறிப்பனவாகா.

உயிர்க்கு, கண்ணால் காணப்பெறும் பருவுடலன்றி நுண்ணுடல் ஒன்று உண்டு. உடலியக்கத்தை இயக்குவிக்கும் மனம், புத்தி, சித்தம் ஆகிய அறிகருவிகள் நுண்ணுடலைச் சார்ந்தவை. உயிரின் மனம், புத்தி, சித்தங்களில் நிகழும் எண்ணங்கள், முடிவுகள், ஆர்வங்கள், உடலை இயக்கிச் செயற்படுத்தும்.

“வினை” என்ற தமிழ்ச்சொல் மத முத்திரை பெற்ற பின், ஒரு சிறு பொருளைக் குறிப்பதாக, பெருவழக்கில் வந்துவிட்டது. பெருவழக்காயினும் தவறு, தவறுதான்! தவறு கூடச் சொல்லில் இல்லை. அச்சொல்லை, கேட்புழிப் பொருள் கொள்ளும் பாங்கிலேயே தவறு ஏற்படுகிறது.

‘வினை’ என்பது செயலைக் குறிக்கும். தமிழிலக்கணத்தில் “வினைச்சொல்” செயற்பாட்டினைக் குறிக்கும் சொல் என்பது எண்ணத்தக்கது. ஆதலால் வினை என்பது ஒருவர் மனம், புத்தி, சிந்தனை, புலன், பொறிகளால் இயங்கிச் செய்யும் செயல்களைக் குறிக்கும். அச்செயல்களின் பயன் துய்ப்புக்கு வரும்பொழுது வினைப்பயன் என்றாகிறது.

ஒவ்வொருவரும் அவரவர் உழைப்பின் பயனை அடைய விரும்புவதே உலகியற்கை ஒருவர் உழைப்பை மற்றவர் எடுத்துக் கொள்வதைச் “சுரண்டல்” என்று கண்டிக்கின்றோம். ஆனால், ஒருவர் தீமையைச் செய்தால் அதன் பயனை அனுபவிப்பதற்கு விரும்புவதில்லை. இது ஏன்?

நல்லதாயின் மகிழ்வு; இன்பமாயின் இதயக்களிப்பு பெறுவர். துன்பமாயின் ஏன் வெறுப்பு? அத்துன்பமும் வேறு யாரும் தந்ததில்லையே! அவரவர் படைத்துக் கொள்வது தானே! இதனைத் திருக்குறள்,

“நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்?

என்று கேட்கும். உயிரின் இயற்கை உயிர்த்தல்; செயற்படுதல்; வளர்தல்; உய்தல். உயிரின் இயக்கங்கள் செயற்பாடுகள் பலதுறையின, பலவகையின. ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு முதல் பத்து வரையிலான செயல்களில் ஒன்றோடொன்று முரண்பாடின்றிச் செயற்படலாம். சில சமயங்களில் ஒன்றுக் கொன்று முரண்பாடும் இருக்கும்.

ஒரே பணியில் புலன்களும் பொறிகளும் தம்தம் நிலையில் இயங்கித் தொழிற்பட்டு அப்பணியைத் தம்தம் நிலையில் வளர்த்துச் செழுமைப்படுத்துகின்றன. இங்ஙனம் செய்யப்பெறும் செயல்கள் தரமுடையனவாக அமையும்; பயனுடையனவாகவும் அமையும். ஒன்றோடொன்று தொடர்பில்லாத பணிகளிலும் ஈடுபடலாம். இப்பணிகள் பயன் தருவனவாக அமைவது அருமை.

ஒன்றுக்கொன்று மாறுபட்டு முரண்பட்ட நிலையிலும் பணிகள் நிகழ்வது உண்டு. இப்பணிகள் பயனும் தரா. எதிர்மறையான துன்பத்தையும் தரும். சிந்தையில் தீய எண்ணங்களும் செயலில் நல்லவையும் காட்டி நடிப்பவர்கள் மிகுதி. இத்தகையோர் செய்யும் செயல்கள் நற்பயனைத் தராதது மட்டுமின்றித் துன்பத்தையே அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தரும். எச்செயலுக்கும், தாவிப் படர்ந்து விரிவடையும் இயல்புண்டு.

ஆதலால், ஒருவரின் தீமை அவரளவில் நின்று விடுவதில்லை. அத்தீமை விரைவில் படர்ந்து சமுதாயத்தில் தீமையைப் பரப்பும், வளர்க்கும். அப்போது சமுதாயமே தீமை மயமாகி விடுகிறது. அத்தீமையை எதிர்க்கும் ஆற்றலின்மையாலோ, பலவீனங்கள் காரணமாகவோ, தீமையிடத்தும் நடுவுநிலை என்ற நிலையை மேற்கொண்டதாலோ ஆசைகள் காரணமாக சிந்திக்கும் திறனின்றி, தீமைக்கு உடன்பட்டு போவதாலோ பலர் தீமையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது; சமூகமே கெட்டுவிடுகிறது; அல்லது 'கெட்டது' என்று பெயர் பெறுகிறது.

ஒரு வஞ்சிப்பத்தன் செய்த தீமை ஒரு பேரரசையே கெடுத்துவிட்டதே! எவ்வளவோ திறமுள்ள அரசாய் இருந்தும் நெறிமுறைப்படுத்தும் சூழல்கள் வலிமையாக இருந்தும் வஞ்சிப்பத்தனே வெற்றி பெற்றான்! ஏன்? எண்ணிப்பார்க்க வேண்டாமா? எண்ணிப் பார்ப்போமாக!

ஆதலால், அவரவர் தம் எண்ணங்கள், சிந்தனைகள், செயல்கள் பயனைத் தரக்கூடியன; பயனைத்தரும். இங்ஙனம் அவரவர் செயல்களின் பயனைத் துய்க்கும் வழியில் அமைத்து நடத்தும் இயக்கமே ஊழ் எனப்படுவது “ஊழ்” - ஊழ்த்தல். அதாவது உயிரினிடத்துள்ள செயற்பாடுகளின் பயன்பாடுகள் பரிணமித்து வெளிப்படுதல் என்று பொருள் கொள்ளலாம்.

ஒவ்வொருவரின் நேற்றைய பழக்கம் இன்று முன் வந்து நிற்கிறது. பழக்கம் மிகமிகக் கொடிது. பழக்கம் என்ற தளையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பகுத்தறிவு நன்றாக வேலை செய்ய வேண்டும்.

தன்னிடத்தில் தானே காட்டும் சலுகைகள் தாட்சண்யங்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும். ஒருவன் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையைத் தொடங்கும் பொழுது பகுத்தறிவு கொண்டு தனது நேற்றைய வாழ்க்கையை ஆய்வு செய்து திருத்திக் கொண்டு வளர்த்துக் கொள்ளும் எண்ணத்தைப் பெற வேண்டும். இந்த அடிப்படையில் தோன்றிய பிரார்த்தனை இயக்கம், இன்று திசை மாறிச் செயற்படுகிறது. ஏன்?

உயிர்கள், பழக்க வாசனைகளின் வழியிலேயே போகின்றன. ஆதலால் நேற்றைய, நேற்றைக்குமுன் நாளைய, உயிர் வாழ்க்கையின் தொடக்க காலம் தொட்டு வாழ்ந்த வாழ்க்கையின் பயன்கள் இன்றைய வாழ்க்கையின் பழக்க வழக்கங்களின் வாயிலாக நம்முடைய அனுபவத்திற்கு வருகின்றன. இஃதொரு தவிர்க்க இயலாத, தவிர்க்கக் கூடாத நியதி; முறைமை.

உயிரின் நுண்ணுடம்பிலுள்ள மனம், புத்தி, சித்தம் இவற்றின் இயக்கங்களே. தொழிற்பாடுகளே புலன்களில் உணர்வாகி, பொறிகள் வாயிலாகத் தொழிற்படுகின்றன. இவற்றில் அக உறுப்புகளின் தொழிற்பாடுகள் நமக்கு எதிரில் தெரியவருவதில்லை. ஆனால், வாழ்க்கையில் அகி உறுப்புகளின் செயற்பாடே பயன் தருகின்றன.

ஊழ் என்பது என்ன?

வாழ்க்கை வினையினால் ஆயது; வினைக்காளாவது; வினைக்கே உரியது. “வினையே ஆடவர்க்கு உயிரே” என்பது இலக்கியம். செயல்கள்-செயல்களுக்கு உந்து சக்தியாக அமைந்து காரணமாக இருக்கும் நோக்கம் ஆகியன, ஊழ் அமையும் களங்கள். ஊழிற்குச் செயல்கள் காரணமாக அமைவது முதன்மையான காரணமாகா.

செயல்களுக்குரிய நோக்கமே ஊழின் களம். சிந்தனையும் நோக்கமும் செயலும் மாறுபடா. ஒரே நிலையிலிருப்பதுதான் இயற்கை எளிய முயற்சிகளின் வழிப்பட்டது. ஒன்றுக்கொன்று மாறுபட்டுச் செயற்படுவது கடினமானது; செயற்கையானது. ஆனால், மனித உலகிலோ இக்கடினமான சிந்தனை, செயல் மாறுபட்ட நிலையில் வாழ்வோரே மிகுதி.

பழகுவோர் பலர் பயன் விளைவிப்பது எது? பயன்படுவது எது? உலகியலில் உடனடியான பயன்களை - தற்காலிகமான பயன்களை, சிந்தனை மாறுபட்ட செயல்கள் தரும். ஆனால், நல்லனவாகவும் நெடியனவாகவும் உள்ள பயன்களைத்தரா. நெடிய பயனை, நிலையான பயனை, இன்புறு நலன்களைத் தருவது சிந்தனையின் உள்ள நோக்கமேயாகும்.

சிந்தனை வேறு, சொல்வேறாக நண்பர்கள் போலப் பழகின், அந்நட்பில் உயிர்ப்பு இருக்காது. உள்ளூற பகை வளர்ந்து கொண்டிருக்கும். என்றாவது ஒருநாள் பொருது கொள்வர்; அழிவர். அதுபோலவே ஒரு பணியில், சிந்தனை ஒருமித்த நிலையில் ஈடுபட்டால் அப்பணி சிறக்கும்; பயன்களைக் குவிக்கும்; புகழைத் தரும்.

ஆதலால், பயன் தருவன சித்தத்தின் நிகழ்வனவாகிய சிந்தனையும், புத்தியின் நிகழ்வும், மனத்தின் இயக்கமுமே யாம். உயிரின் நுண்ணுடம்பின் அறி கருவிகளின் நிகழ்வுக்குரிய பதிவுகள் உள்ளடங்கிக் கிடந்து அப்பதிவுகள் செயற்பாடுகளாக உருப் பெருவதற்குரிய காலம் வரும் பொழுது, புலன்கள், பொறிகளின் வாயிலாகச் செயற் பாட்டுக்கும், பயனுக்கும் வருவது ஊழ். இஃது ஒரு தவிர்க்க முடியாத இயற்கை விதி; நியதி; அறத்தின் செயற்பாடு.

ஊழ் மற்றவரின் படைப்பும் அல்ல; கடவுளின் கொடையும் அல்ல. உலகியலின் ஒழுங்கு அமைதிகளுள் ஊழ் அமைவும் ஒன்று.

உலகியலில் இயற்கையில் வலிமையாக இருந்த புயல், பெரு மழை, வெள்ளம் முதலியவற்றை மனிதன் இன்று, வெற்றி பெற்று, ஆண்டு அனுபவிக்கிறான்.

இயற்கையோடு அவன் நிகழ்த்தும், நிகழ்த்திக் கொண்டிருக்கும் போராட்டத்தில் மனித குலம் வெற்றிகளையே பெற்று வருகிறது. ஒரோவழி, பெறும் தோல்விகள் கூட வெற்றியின் வாயில்களாக அமைந்தனவேயன்றி, முற்றான தோல்விகள் அல்ல.

அது போல ஊழியலின் ஒழுங்கமைவையும், மனிதன் வெற்றி காண முடியும் என்பது ஒரு கொள்கை.

ஊழியலின் ஒழுங்கமைவை வெற்றி பெறுதல் என்றால் ஒழுங்கமைவை எதிர்த்துப் போராடுவது அல்ல. ஊழின் ஒழுங்கமைவை எதிர்த்துப் போராடுவது என்றால், நியதிகளை எதிர்த்து அல்ல.

நியதிகளும் ஒழுங்கமைவுகளும் இல்லாது போனால் வாழ்க்கையில், ஓர் அமைவு இருக்காது; அமைதி இருக்காது; நல்லன நோக்கி நல்ல நினைந்து செயற்படுதல் இல்லாமல் போகும்.

ஆதலால், ஊழியல் என்ற இந்த ஒழுங்கமைவு - நியதி எதிர்ப்பதற்குரியதன்று; வரவேற்கத்தக்கது. ஏன்? இயற்கையில், இப்படி ஒரு நியதி இல்லாது போனாலும் நாமாகவாவது படைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

இந்த ஊழியல் விதி நடைமுறையில் இருக்கும் பொழுதே மனிதகுலம் நன்னெறியில் ஈடுபட்டு நல்லன செய்வதில் நாட்டம் காட்டுவது இல்லை. மக்கள் அன்றாடப் பிழைப்பாளர்களாக உள்ளொன்றும் புறமொன்றும் உடையவர்களாக வாழ்கின்றனர்.

நேற்றைய வாழ்வின் விளைவாக இன்றைய வாழ்க்கைக்கு வரும் ஊழின் பயனை எதிர்த்துப் போராடலாம் என்பது கொள்கை.

எப்படி? நெடுந் தொலைவானாலும் விரைந்து செல்லும் ஊர்திகள் வழி, நெடுந்தொலைவுப் பயணம் எளிமையாக்கப் பெற்றுள்ளது; இன்புறுதலுக்குரியதாகவும் ஆக்கப் பெற்றுள்ளது. நோய், துன்பம் தருவதுதான்! நோயின் கடுமையை மருந்துகள் மூலம் தணிப்பதுடனன்றி, தீர்வும் காணப் பெறுகிறது.

புயல், பெருவெள்ளம் போன்றவைகளைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை; தடுத்து நிறுத்தவும் இயலாது. ஆயினும் அவை உருவாகி வரும் நிலைமைகளை அறிந்து அவற்றின் அழிவுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்றுவரும் விஞ்ஞான உலகத்தை நாம் மறுக்க முடியாதல்லவா? மனித இயலும் ஒரு விஞ்ஞானம் தானே!

நேற்றைய வாழ்க்கையின் பயனாகிய ஊழ், இன்றைய வாழ்க்கையின் தொடக்கமாகும். ஊழ், சித்தம், புத்தி, மனம் வழியாகப் பரிணமித்து எண்ணங்களாக வந்து மனிதனின் செயலூக்கியாக இடம் பெறும்.

மனம், இயல்பாக யாதானும் ஒன்றைப் பற்றிக் கொண்டேயிருக்கும் இயல்பினது. அங்கனம் மனம் பற்றும் பற்றின் வாயிலையே, எண்ணமும் ஏற்றுக் கொண்டு இயங்கக் கூடும். இங்ஙனம் செயற்படும் பொழுது பற்றிய பொருளின் அமைப்பிலேயே செயற்படாது. பற்றப் பெற்றது மிகச் சிறந்ததாயினும் ஊழ் கறைப்படுத்த இயலும், கறைப்படுத்தக் கூடும்.

சாதாரணமாக நல்லோருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்து அவருடன் பழகினாலும் அந்நன்மையை எடுத்துக் கொள்ளாமல், அந்நன்மையையும், தீமையாக்கிக் கொள்வது போலச் செல்லுழிச் செல்லும் மனம் தொழிற்படும்.

அதாவது நல்லோருடனும் கூட, முழுமையாக, ஈடுபாட்டுடன் உளம் ஒன்றிப் பழகாமல் இருப்பது. ஏதோ ஒரு காரியத்தை அடையும் நோக்கத்தில் - பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் புகுவது.

பயன்படுதல் வாழ்க்கையின் நியதி; வாழ்க்கையில் தவிர்க்க முடியாத தேவை. ஆனால் பயன்படுத்திக் கொள்ளுதலைவிட பயன்படும் நிலையில் அமைதலே நன்று. பயன்படுத்திக் கொள்ளுதலில் செயற்கையும் உண்டு. இது ஊதிப்பழுக்க வைத்த பழம் போன்றது. பயன்படுதல் என்பது இயற்கையில் கனிந்த பழம் போன்றது.

நெறிவழிப்பட்ட முறையில் தனிமனித வாழ்வியலும் சமுதாய இயலும் அமைந்து இயங்கும்பொழுது பயன்கள் தாமே விளையும். ஆங்கு, தருவாரும் பெறுவாரும் இல்லை.

ஆதலால், நல்லோரைப் பயன்படுத்திக் கொள்ளல் பேறு. பயன்படுதல் நிலையில் ஊழின் அமைவு நல்லூழாக அமையும். அப்பயன்பாட்டுக்கு ஏற்ப திரும்பப் பயன்பெற்று விட்டால் நல்லூழாக அமையாது.

ஊழையும் வெற்றி பெறலாம்!

ஊழின் பயனை எதிர்த்துப் போராடுதல் என்றால் என்ன? நல்லூழாயின் இன்புறு நலன்கள் எய்தும். வாழ்க்கை இன்பமாயினும், அதனை மருந்து எனக் கருதியே துய்த்தல் வேண்டும். உடற் பிணிக்குரிய மருந்தில் இனிப்பு, சுவையுடையதாயினும் அளவுக்கு மேல் தின்னல் தீது பயக்கும்.

ஆதலால், உலகில் யாரும் இனிப்பை அதிகமாகத் தின்றதும் இல்லை. அதுபோலத்தான் இன்பங்களும் கூட. இன்பத்தில் அளவு கடந்த மகிழ்வெய்தி, பற்றுள்ளத்துடன் துய்த்தல் கூடாது. அங்ஙனம் துய்த்தால் அது-அதாவது நல்லூழின் துய்ப்பு, தீயூழாக மாறி, பயன் விளைவித்தற்குரிய வாயில்கள் அமையும். அதோடு ஒன்றை இன்பமென மூழ்கி, மயங்கித், தருக்கித் துய்க்கும்காலை அத்துய்ப்பு முறை, மற்றவர்களிடத்தில், அழுக்காற்றையும் அவாக்களையும் தோற்றுவித்துப் பொருதலை உண்டாக்கும்.

இன்பத் துய்ப்பை, பற்றற்ற நிலையில் காய்தலும் களித்தலுமின்றிக் கடமையுணர்வோடு துய்க்க வேண்டும். இங்ஙனம் துய்க்கும் பொழுது, அனுபவிக்கும் ஊழ், பின் தொடர்ச்சியின்றிக் கரைகிறது. எதிர் விளைவுகளை உண்டாக்காமலும், அமைகிறது. இது, நல்லூழை வெற்றி கொள்ளும் முறை.

தீயூழ், துன்பத்தைத் தரும். துன்பம் கண்ட பொழுதும் கலக்கமுறாமல் அத்துன்பத்தை நடுக்கமற்ற நெஞ்சுடன் அனுபவிக்க வேண்டும். சாதலைவிட, சாதலைப் பற்றிய எண்ணம் துன்பமானது; துன்பத்தை விளைவிப்பது என்பது ஒரு கருத்து. ஆதலால் துன்பத்தை, கவலையாக்காமல் அழிவுக்குரிய வாயிலாக ஆக்கிக் கொள்ளாமல் தற்காத்துக் கொள்ள வேண்டுமானால், துன்பத்தை அறைகூவல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

துன்பத்தை அனுபவிக்க மனம் எடுத்துக் கொள்ளும் நிலையில் துன்பத்தின் வேகம் தவிர்க்கப்படுகிறது. அதுமட்டு மல்ல. துன்பத்தை அனுபவிக்கும் உணர்வு நிலையில் துன்பத்தின் வேகம் தணிகிறது; விவேகம் பிறக்கிறது. அதனால் தீயூழும் வெற்றிகளாக்கப்படுகிறது.

ஆதலால் தீயூழை, தீயூழ் துன்பம் தருவதற்குரிய வாயில்களைப் பகுத்தறிவுடன் ஆராய்ந்து செயல்களை மேற்கொண்டு தீயூழையும் நாம் வெற்றிபெற வேண்டும். இதுவே வாழ்க்கையின் நியதி.

குறிக்கோளை உண்டாக்கிக் கொண்டு அக்குறிக்கோளை அடைவதே, வாழ்க்கையின் இலட்சியம். குறிக்கோள் என்று எடுத்துக் கொண்டால் ஆர்வம் நிறைந்த ஆவேசமான முயற்சிகள் தோன்றும். இம்முயற்சிகளுக்கு மலையை நகர்த்தும் பேராற்றல் உண்டு. அதனால், ஊழின் விளைவு வரத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத நியதி.

ஆனாலும் ஊழின் விளைவை ஊழின் தாக்குதலை நம்முடைய முயற்சிகள் வழி, தணிக்கலாம். மிகப் பெரிய பாதிப்புக்கள் ஏற்படாதபடி பாதுகாக்க முடியும். கொடிய கோடையின் வெப்பத்தை ஒரு சாதாரண குடை தடுக்க வில்லையா? சுடு மணலை, காலில் அணிந்து கொள்ளும் செருப்பு, தடுத்துப் பாதுகாக்க வில்லையா?

இலட்சிய வேகத்தில் இடையில் சந்திக்கும் தடைகள் தூள் தூளாவதில்லையா? அதுபோலத்தான் இதுவும். ஆதலால், ஊழ் உண்டு. அது மற்றவர் படைப்பு அல்ல. அவரவர்களுடைய சொந்தப் படைப்பே.

ஒருவர் செய்த செயல்களின் விளைவே ஊழ். அவரவர் விளைவுகளின் பயனை அவரவர் அனுபவிக்க வேண்டுமென்பது ஒரு நியதி; ஒரு ஒழுங்கு; அதாவது உலகில் உயிரியலில் உள்ள ஓர் ஒழுங்கு; முறைபிறழா நிகழ்ச்சி “Order and constancy” அவ்வளவே. “அவரவர் வினை வழி அவரவர் வந்தனர்” என்பது ஞான அனுபூதி வாக்கு.

வாழ்க்கை என்ற களத்தில் குதிக்கும் பொழுதே, சென்ற கால வாழ்க்கையின் பயன்-சுமை இருக்கத்தான் செய்கிறது. அதே போழ்து சிந்திக்கும் திறனும், அறிவும் உயிர்க்கு இயல்பாக அமைந்திருக்கிறது. இப்புத்தியால் சாக்கைத் தூக்கினாலும், தண்ணீரில் நனைத்துத் தூக்காமல் எளிதில் தூக்குவது போல், உயிர்கள் பயனைத் துய்க்கலாம்.

ஆதலால், ஊழால், அதனுடைய விளைவால், எதிர் விளைவால் பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ள முடியும். இதுதான் தமிழ் நெறி; வாழ்வியல் நெறியும் கூட! இந்த ஊழை இலக்கியங்கள் சமய நூல்கள் எப்படி விளக்குகின்றன?

தமிழிலக்கியங்களில் தொன்மையானது புறநானூறு. புறநானூற்றிலேயே ஊழியற் கொள்கை வலியுறுத்தப் படுகிறது. கணியன் பூங்குன்றன் என்ற பெரும் புலவர்,


"யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானம் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”

(புறம். 192)

என்று பாடியுள்ளார். இந்தப் பாடல் அருமையிலும் அருமையுடையது; சிந்தனைக்குரியது; வாழ்வுக்குரியது.

ஊழின் விளைபுலம், பற்றேயாம். இது எனது ஊர்; நான் பிறந்த ஊர்; வாழும் ஊர் என்றெல்லாம் உலகப் பொதுமை நோக்கின்றிக் கருதும்பொழுது, பற்றுணர்வு கால் கொள்ளுகிறது. பற்றுக்கள் ஆசைகளைத் தோற்றுவிக்கும் இயல்பின. ஆசைகள் உயிர்க்கு இன்பம் செய்வனபோல் காட்டித் துன்பம் செய்வனவேயாம்.

ஆசைப்பட்ட ஒன்றை அடையாத வழி உயிர்படும் அல்லல் எழுதிக் காட்ட இயலாதது. உடலுணர்ச்சிகளைத் தூண்டிவிடும் போதைப் பொருள்களின் வழிப்பட்டோர் படும் அவதிகளைக் காண்கிறோமே! ஆதலால், எப்பற்றும் தீயதேயாம். ஓர் ஊரில் வாழ்பவர்கள் அந்த ஊரின் மீது பற்றுக்கொண்டு அந்த ஊரை வளர்த்துப் பாதுகாத்தல் கடமையன்றோ! இக் கடமையை எப்படிப் புறக்கணிக்க முடியும்.

இக் கடமையை, புறக்கணித்தால் ஊர்கள் வாழும் இயல்பினை இழந்து பாலைவனங்களாகி விடாதா? ஆம்! நூற்றுக்கு நூறு உண்மை! பற்று என்பது உறவுகளைத் தவிர்ப்பது கடமைகளைத் தவிர்ப்பது; எதுவுமே இல்லாமல் சூன்யமாக்குவது என்பதல்ல.

கடமைகளின் தொகுதியே வாழ்க்கை. அன்பு, ஆசைகளின் வெளிப்பாடே வாழ்க்கை. பற்று என்பது, “மற்றவர்க்குக் கூடாது; வேறு யாருக்கும் இல்லை; எனக்கே உரியது” என்ற அடிப்படையில் முகிழ்ப்பது. அதுமட்டுமல்ல பற்றுக் காட்டப் பெறும் பொருள் கூட அதற்கு முக்கியமல்ல. அதில் உள்ள துய்ப்பு உரிமங்களை முதன்மைப் படுத்துதல் பற்று.

ஊழின் இயல்பு

பற்றுக்கள்-ஆசைகள் ஊழின் வினைபுலன்களாகும். பற்றுக்களை விடுதலே ஊழை வெற்றி பெறும் வழியாகும். பற்றை விடுதல் என்பது நுட்பமான தத்துவம். செல்வத்தை விரும்புதல், ஈட்டுதல், தொகுத்தல், துய்த்தல் ஆகியன பற்று ஆகா.

ஆனால் செல்வத்தை ஈட்டும்பொழுது மற்றவர்களுக்குத் துன்பம் தந்து ஈட்டுதல் பற்று ஆகும். செல்வத்தின் பயன்களாகிய ஈதல், துய்த்தல் ஆகியன இன்றிச் செல்வத்தைச் செல்வத்திற்காகவே ஈட்டிப் பாதுகாத்தல் பற்று ஆகும். இத்தகைய பற்று ஊழாக மாறும்.

ஒருத்தியை மணந்து, காதல் வாழ்க்கை வாழ்தல் பற்றாகாது. ஆனால், காதல் வாழ்க்கையின் இலக்கணமாகிய இன்புறுத்தலின் வழி இன்புறுதல் என்ற நெறி பிறழின் ஊழ் விளையும்.

பணி செய்தல், தொண்டு செய்தல் பற்றன்று. ஆனால் பணிகளை, தொண்டுகளை, புகழ் கருதியும், நன்றியினை எதிர்பார்த்தும், கைம்மாறுகளை எதிர்பார்த்தும் செய்தால் பற்று ஆகும்; ஊழ்விளையும். பணிகளைப் பணிகளுக்காகவே மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவே செய்தால் ஊழன்று.

அதாவது செய்யும் காரியங்களின் நோக்கம் தற்சார்புடையதாக மட்டுமே விளங்குவதும், வெறித் தன்மையுடன் துய்க்கும் இன்ப துன்ப உணர்வுகளும் ஊழாக விளையும். இன்பத்தை ஈடுபாட்டுடன் ஆவலுடன் துய்த்தால் ஊழ் விளையும்.

தவிர்க்க முடியாதன போலவும், கடமைப்பாட்டுணர்வுடனும், இன்பங்களைத் துய்த்தல், தவறன்று; ஊழாகாது. துன்பத்தையும் அங்ஙனமே கவலையின்றியும், நொந்து கொள்ளாமலும் துய்த்தால் ஊழ் தோன்றாது.

எல்லா ஊர்களையும் தமது ஊர்களாகவும் எல்லாரையும் சுற்றத்தாராகவும் கருதவேண்டும்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரி அமரர் அறிஞர் அண்ணாவுக்கும் பிடித்தமான வரி. இது பரந்த-விரிந்த, உலகியல் ஒருமைக்கொள்கையையும் மனித குலம், ஒருகுலம் என்ற உயர் கொள்கையையும் உணர்த்துகிறது.

எல்லாரும் சுற்றத்தினர். ஆதலால் ஒருவருக்கொருவர் நன்மை செய்து கொள்வர்; ஆனால் தீமை செய்து கொள்ள மாட்டார்; நன்மை செய்து கொள்ளலாம்; செய்து கொள்ள வேண்டும்.

ஆயினும், ஒருவர், ஒருவருக்கு நன்மை செய்யும் பொழுது, நன்மையைச் செய்பவர்கள் உயர்ந்தவர்களாகவும், நன்மையைப் பெற்றவர்கள் தாழ்ந்தவர்களாகவும் கருத இடம் ஏற்படலாம். அது மட்டுமின்றி, நன்மையின் அடிப்படையில் விருப்பங்களும், தீமையின் அடிப்படையில் வெறுப்புக்களும் தோன்ற இடமுண்டு.

ஆதலால், ஒருவர் நன்மை செய்தாலும் அந்த நன்மை செய்பவர் செய்தே தீரவேண்டிய கடப்பாடும், நன்மை பெறுபவருக்கு நன்மை பெறுதலுக்குரிய உரிமையும் ஊழின் வழி அமைந்தன என்று கருதுவதின் மூலம் விருப்பு வெறுப்புகளைத் தவிர்க்கலாம்; புதிய ஊழ் தோன்றுதலையும் தவிர்க்கலாம். அதுமட்டுமா?

வாழ்க்கையில் சந்திக்கும் இன்பங்களையும், துன்பங்களையும் கண்டு வெறியுணர்வின்றித் தணிந்த உணர்வுடன் அல்லது நொந்து கொள்ளும் உணர்வுடன் துய்க்கும் இயல்பும் எளிதில் வருவதன்று. அதுவும் ஊழின் வழிப்பட்டதேயாம்.

“சாதலும் புதுவதன்று”. இங்கு உயிர் நிலையானது; என்றும் இருப்பது. உயிர்க்குச் சாதலும் பிறத்தலும் இல்லை என்னும் தமிழர் கொள்கையை நினைவிற் கொள்ள வேண்டும். ஆனால், உயிர் எடுத்துக் கொள்ளும் உடம்புகள் முதுமையடைவதால் அந்த உடலைக் களைந்து புது உடல் எடுத்தலைத்தான் சாதல்-பிறத்தலென்று தமிழ் கூறும்.

ஆதலால், சாதல் பழக்கப்பட்டுப் போன ஒன்று; கவலைப்படுவதற்கில்லை. ஆதலால், இன்பமென்று மகிழ்வுக் கூத்தடித்தற்கில்லை. இன்னாதன என்று கருதிப் புலம்புவதற்கும் ஒன்றும் இல்லை.

ஆற்றுவெள்ளம் ஓடும் திசையில் படகு செல்லுதல் போல, உயிர்கள், ஊழின் நெறியில் செல்லும் தகையன என்பது கொள்கை. இக்கொள்கையை அப்படியே ஏற்பதற்கில்லை. ஏற்கவும் இயலாது. ஏன்?

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை மனித உலகத்திற்குத் தேவையான மூன்று உயர்க்குறிக்கோள்களை உணர்த்தும் நோக்கத்துடன் இயற்றியுள்ளார். அம் மூன்று நோக்கங்கள்,


“அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்என் பதூ உம்.”

என்பனவாகும்.

இவ்வுயிர்க் குறிக்கோள்கள், வாழும் மனிதக் குலத்திற்கு இன்றியமையாதன. மனிதகுலம் வாழும் நாடு, நல்ல வண்ணம் அமையவேண்டும். அதாவது நல்ல அரசியல் வேண்டும். நல்ல வலிமை சான்ற அறநெறிச் சார்புடைய - முறை வழங்கக் கூடிய சிறந்த அரசு அமையாத நாட்டில் இனிய வாழ்க்கை அமையாது; அமைதி கிடைக்காது. ஆதலால், வாழ்க்கைக்கு மிகுதியும் உறுதுணையாக இருக்கக்கூடிய நல்ல அரசை முதற் குறிக்கோளாகக் கொண்டார்.

நாடு எவ்வளவு சிறப்புற்றிருந்தாலும் வீடு சிறப்பாக அமையாது போனால் மானிட வாழ்க்கை சிறப்பெய்த முடியாது. நல்ல தலைமுறைகள் தோன்றா நாடு சிறப்புற நல்லரசு தேவை. வீடு சிறப்புற நல்ல மனைவி தேவை.

தெளிவாகச் சொன்னால் நாட்டிற்கே வலிமை சேர்ப்பது நல்ல மனைவிதானே! எப்படி? நாட்டிற்கு மன்னவன் ஆனாலும் அவனுக்கும் மனைவி உண்டு. அவள் நல்லவளாக இல்லாது போனால் நாட்டுப்பணி முட்டுப்படும். ஆக வீட்டிற்கும் நாட்டிற்கும் மட்டுமல்லாது எதிர்கால வரலாற்றுக்கும் விழுப்பம் சேர்க்கும் நல்ல மனைவியை உயர்ந்தோர் போற்றுதல் இயற்கை.

இளங்கோவடிகள் உயர்ந்தோரில் உயர்ந்தவர். எனவே பத்தினிப் பெண்டிரைப் பாராட்டுதலை இரண்டாவது குறிக்கோளாகக் கொண்டார். நாட்டை ஆளும் அரசனாயினும், வீட்டையாளும் மனைவியாயினும் அவர்தம் ஊழ், அவர்களை வழி நடத்துகின்றது.

ஆதலால், நாட்டில் வாழ்வோரும், வீட்டில் வாழ்வோரும் ஊழின்பால் கவனத்துடன் இருக்க வேண்டும். நல்லூழாக அமையும்படி அரிய முயற்சிகளை மேற்கொண்டு அமைத்துக் கொள்ளவேண்டும். அங்ஙனம் நல்லூழாக அமைத்துக் கொள்ளத்தவறின், அல்லல்பட வேண்டிவரும். முன் முயற்சி மேற்கொள்ளாது பின் இரங்குவதில் என்ன பயன் என்று மனித குலத்தை எச்சரித்து வழி நடத்த, குறிக்கோளைக் கொள்கின்றார்.

“ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்பது இளங்கோவடிகள் வாக்கு,

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்.”

என்றார் திருவள்ளுவர்.

அதனால் ஊழ்வலிமை பயனைத் தந்தே தீரும் என்பது பெறப்படுகிறது. இளங்கோவடிகள் இக்கருத்தினை விளக்குகின்ற களம் எது? ஊழ்வினையின் ஆற்றலை முதன்முதலில் இளங்கோவடிகள் எடுத்துக் காட்டும் இடம் “கானல்வரி” யாகும்.

கோவலன், கானல்வரியில் உருவகம் அமைத்துப் பாடுகின்றான். தற்செயலாக அந்த உருவகம் கலைச் சார்புடையதாக அமைகின்றது. ஏன்? கானல்வரி பாடும் இடம் கடற்கரை. பாடும் காலம் இந்திரவிழா நிகழும் காலம்; முழு நிலா நாள்! அருகில் அவனை வாழ்விக்கும் மாதவி இருக்கிறாள். ஏன்? மாதவி மனம் மகிழத்தான் கோவலன் பாடவே தொடங்கினான்.

கோவலன் ஊழ்

கோவலன் பாடலைக் கேட்ட மாதவி, யாழை மீட்டிப் பாடத் தொடங்குகிறாள். மாதவி கோவலனின் உருவகத்தோடு போட்டி போடுகிறாள். ஆம்! அஃதொரு கலைப் போட்டிதான்!

கலைஞர்களுக்குக் கலைத்துறையில் தாழ்ந்து போகும் எண்ணம் வருவதில்லை. எனவே, மாதவியும் பாடுகிறாள்! மாதவியின் கற்பனை எந்தக் களத்திற் பிறக்கிறது? மாதவியின் கற்பனைக்கும் அவள் ஊழே காரணம். மாதவியின் சென்ற காலப் பழக்கம் என்ன? மாதவி வழிவழி கணிகையர்குல மரபினள். ஆயினும், ஒருநெறி நின்று, வாழ ஒருப்படுகிறாள். ஒருநெறி நின்று வாழ, அவளைக் கோவலன் பிரியாதிருக்க வேண்டும். கோவலன் தன்னைப் பிரிந்து விடுவானோ என்ற அச்சத்திலேயே மாதவி கோவலனை மிகவும் கவனத்துடனும் பரிவுடனும் தன்பால் ஈர்த்து வைத்திருக்கிறாள்.

“ஊடற் கோலமோ டிருந்தோ னுவப்பப்
பத்துத் துவரினும் ஐந்து விரையினும்

முப்பத் திருவகை ஓமாலி கையினும்
ஊறின நன்னீ ருரைத்தநெய் வாசம்
நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப்
புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை
வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி
அலத்தக மூட்டிய அஞ்செஞ் சீறடி
நலத்தகு மெல்விரல் நல்லணி செறீஇப்
பரியக நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து
குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்துப்
பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ்
நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇக்
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து
மத்தக மணியொடு வயிரங் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொற் கை வளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து
வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம்
கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து
சங்கிலி நுண்தொடர் பூண்ஞாண் புனைவினை
அங்கழுத் தகவயின் ஆரமோ டணிந்து
கயிற்கடை யொழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையிற் சிறுபுற மறைத்தாங்கு
இந்திர நீலத் திடையிடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்கா தகவயின் அழகுற அணிந்து
தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி

தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி
மையீ ரோதிக்கு மாண்புற அணிந்து
கூடலும் ஊடலும் கோவலற் களித்துப்
பாடமை சேர்க்கைப் பள்ளியுள் இருந்தோள்”

(கடலாடு காதை - 75-110)

என்ற அடிகளால் அறியலாம்.

இந்த அச்சம் மாதவிக்கு இயல்பான வழிவழிப் பழக்கத்தாலும் வந்தது. இந்த அச்சத்தின் விளைவாகிய ஊழ் துய்ப்பாகிறது. ஒரு பெண்ணின் கற்புத்திறத்திற்கு அவளுடைய கணவனே காரணம். “கணவனாகிய ஆடவன் முறைபிறழ்ந்தால் பெண்ணின் முறைபிறழ்வுக்குக் காவல் ஏது?” என்று கோவலனுக்கு உணர்த்தும் நோக்கத்தோடு பாடுகிறாள். மாதவி கற்பனையும் கோவலன் கற்பனையைச் சார்ந்தே, சோழப் பேரரசைச் சுற்றி வட்டமிடுகிறது.

கோவலன் காவிரிக்குச் சிறப்புத்தந்து அது புலவாதிருக்கிறது என்று பாடினான். மாதவி, காவிரியின் புலவாத் தன்மைக்கும் நிறை நலத்திற்கும் சோழனின் செங்கோலே காரணம் என்று சிறப்பித்துத் தொடர்ச்சியாகக் கோவலனின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவள் போலவும், அவன் பிரியாத பெரு நெறியில் நிற்க வேண்டும் என்ற பொருள் படவும் பாடுகிறாள்.

‘மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அது போர்த்துக்
கருங்கயற் கண் விழித் தொல்கி நடந்தாய் வாழி காவேரி
கருங்கயற் கண் விரித் தொல்கி நடந்த வெல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை யறிந்தேன் வாழி காவேரி!

(கானல்வரி-25)

நன்னித்திலத்தின் பூண னிந்து நலஞ்சார் பவளக் கலையுடுத்துச்
செந்நெற் பழனக் கழனிதொறும் திரையுலாவு கடற்சேர்ப்ப
புன்னைப் பொதும்பர் மகரத்தின் கொடியோன் எய்த புதுப்புண்கள்
என்னைக் காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ

(கானல்வரி-37)

என்பன சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

கோவலன், ஊழினை அடக்குதற்குரிய வலிமையின்றி, பழக்கவழக்கங்களால் நொய்மைப் பட்டிருந்ததால், மாதவியின் பாடல், அவனை எளிதில் தாக்கியது; பாதிப்புக் குள்ளாக்கியது; ஊழின் வழி அவன் உந்திச் செலுத்தப்பட்டான். ஊழின் ஆற்றலைத் தடுத்து நிறுத்தும் தறுகண் அவனிடத்தில் அப்போது இல்லை.

மாதவியின் கற்பனையில் ஐயம் கொள்கிறான். இந்த ஐயத்திற்குரிய பழைய ஊழ், கோவலனுக்கு உண்டு. ஓர் அரங்கில் மாதவி ஆடுகிறாள். பலர் அவளுடைய ஆடல் திறனைக் கண்டு மகிழ்கின்றனர்.

ஆனால் கோவலன் மட்டும் கலையை மறந்தான். மற்றவர்கள் மகிழ்வது பற்றியும் அவன் அழுக்காறு கொண்டான்; மாதவியின்பால் ஐயம் கொண்டான். இந்த ஐயம் முற்றிக் கானல் வரியில் வெளிப்படுகிறது.

கோவலன் தனிமகனாக வாழும் பொழுது நல்லூழை வளர்த்துக் கொண்டானில்லை. மாதவியுடன் கூடி வாழும் பொற்காலத்திலும்கூட அவன் நல்லூழைத் தேடி வளர்த்துக் கொண்டானில்லை. தான் வளர்த்துக் கொண்ட ஊழைச் சிந்தித்து மறு ஆய்வு செய்து மாற்றிக் கொள்ளும் பழக்கங்களும் உடையவனாக இல்லை. ஆதலால், ஊழின் வழியே செல்கிறான்.

கோவலன் மாதவியிடத்தில் விடுதல் அறியா விருப்பினனாகத் தங்கினான். அந்த விருப்பத்தையும்கூட ஊழ் வெற்றி கொண்டுவிட்டது. இந்த இடத்தில் கோவலன் வீழ்ச்சியைத் தடுக்கக் கூடிய நல்லியல்புகள் கோவலனிடத்தில் இல்லாமற் போனதே குறை.

ஒருவர் வாழ்க்கை, தோல்வியைச் சந்திக்காமலிருக்க வேண்டுமானால், அவர், நாள்தோறும் சிந்தித்துத் தம்முடைய தீய பழக்கங்களைத் தவிர்த்துக் கொள்பவராகவும், நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்பவராகவும் இருக்க வேண்டும்.

நிகழ்ச்சிப் போக்கின் வழியில் செல்லாமல், நினைந்து செயல்படுபவராக இருக்க வேண்டும். நிகழ்வுகளும் சூழ்நிலைகளும் அவரைப் பாதிக்கக் கூடாது. இவைகள் எப்படியிருப்பினும், இவைகளுக்கு அப்பாலும், நின்று சிந்தித்துச் செயல்படுவோராக அவர் வாழ்ந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். இத்தகையோர் வாழ்க்கையில், ஊழ் தோற்கும். அவர்கள் வெல்வர்.

இத்தகைய ஆற்றலும் நல்லியல்பும் கோவலனுக்கு இல்லை. அவன் உணர்ச்சி வசப்பட்டவன். நிகழ்வுகளின் வழி உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, அரிய காரியங்களைக்கூட செய்திருக்கிறான். ஆயினும், அந்த உணர்ச்சி அவனிடம் நிலையாக இருந்ததில்லை.

எடுத்துக்காட்டு, ஒன்று: கோவலன், கணவனைப் பிரிந்து வாழ்ந்த ஒரு பெண்ணுக்குப் பொருள் கொடுத்து, கணவனைச் சேர்ந்து அவள் வாழுமாறு, வழி நடத்தினான். கணவனைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணின் துயரம், அவனுக்குத் தெரியத்தான் செய்தது.

ஆனால் அதே கோவலனுக்கு, தன்னைப் பிரிந்து வருந்தும் கண்ணகியின் துயரம் தெரியாதது ஏன்? இது தான் அவன் நிலைத்த உணர்ச்சி இல்லாதவன் என்பதற்கு எடுத்துக்காட்டு. கோவலனிடம் அருமையாகத் தென்பட்ட சிறந்த பண்பாடுகள் நிலைத்திருந்தால், அவன் சான்றோ னாகியிருப்பான்.

ஆதலால், மாதவியின் கானல் வரிப்பாடல் கோவலனை முறை பிறழ உணரச் செய்தது. மாதவியோ பெண். மேவிச் செல்லும் இயல்பைப் பெறாதவள். முடிவு, கோவலன் பிரிந்து விடுகிறான். கோவலன் மாதவியை விட்டுப் பிரியும் இடத்தில் இளங்கோவடிகள் ஊழைக் காரணம் காட்டுகிறார்.

ஆம்! கண்ணுக்குப் புலனாகக் கூடிய எந்தக் காரணமும், மாதவியைக் கோவலன் பிரியக் காரணமாக இல்லை; செவிக்குப் புலனாகும் காரணமும் இல்லை. கோவலனும் மாதவியும் தேர்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள்; விடுதலறியா விருப்புடன் வாழ்ந்தவர்கள், ஒருநாள் அல்ல. பல நாட்கள் வாழ்ந்தவர்கள்.

திடீரென ஒரு நிகழ்ச்சி. அதுவும் நன்னிகழ்ச்சி, நற்கற்பனை, சிறந்த உருவகம். இவற்றை முறை பிறழ உணர்ந்து, கோவலன் பிரிகிறான் என்றால், ஊழைத்தவிர, வேறு என்ன காரணம் காட்ட முடியும்? அதுவும் இளங்கோவடிகளுக்கு, கோவலன் மாதவியை விட்டுப் பிரிவதில் உடன்பாடில்லை. எங்கெங்கோ சுற்றித் திரிந்த கோவலனை மாதவி ஒருமைப்படுத்தி வைத்திருந்தாள்.

திடீரென அந்த முயற்சிகள் தகர்க்கப்பட்டவுடன், இளங்கோவடிகள் காரணங்களைத் தேடிப்பார்க்கிறார். யாதும் அவருக்குத் தெரியவில்லை. உடனே ஊழின் மீது வைத்துப் பாடுகிறார், “யாழிசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்” என்று! இங்கு ஊழ் என்று வலியுறுத்தப்படுவதை, இந்தப் பிறப்பிலேயே உள்ள சென்ற காலப் பழக்க வழக்கங்கள் என்பதை உய்த்து உணர்ந்தால், பழக்கங்கள் தவிரப் பழகும் இயல்பிருந்தால், ஊழை வெற்றி காணலாம் என்ற உண்மை புலப்படும்.

கோவலன், ஊழின் வலியால் உந்திச் செலுத்தப்படுவதாக இளங்கோவடிகள் கூறும் இரண்டாவது இடம் கனாத்திறம் உரைத்த காதை, கோவலன், மாதவியைப் பிரிந்தவுடன் மாலைப் பொழுதில் கண்ணகியைக் காண வருகிறான். கண்ணகியைக் காணும் தருணத்தில் கோவலன் தன்னுடைய சென்ற கால நடத்தைகளை எண்ணி வருந்தி, அதனால் தன்னை வறுமை வந்தடைந்தது என்று. நாணுகிறான். இதனைக் கோவலன்,

“சலம்புணர் கொள்கை சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த
இலம்பாடு நானுத் தருமெனக்கு”

(சிலம்-கனா 67-71)

என்று கூறுவதனால் அறியலாம். கோவலன் சொன்னதை ஆராய்ந்தால் இரண்டு செய்திகள் ஆய்வுக்கு உரியனவாம்.

ஒன்று, குலம்தரு வான் பொருள். அதாவது பரம்பரைச் சொத்து. கோவலன் தோன்றி, அரிய முயற்சிகளில் ஈடுபட்டு உழைத்துப் பொருள்களை ஈட்டியிருப்பானாகில், அவன் அந்தச் செல்வத்தின் அருமையை அறிந்து செலவழித் திருப்பான். அந்த வாய்ப்பு அவனுக்கில்லை.

உழைப்பையும், முயற்சியையும் சுவைத்து வாழும் தகுதி மிகுதியுடைய ஒழுக்க நெறி வாழ்க்கை, கோவலனுக்கு இல்லாமற் போய்விட்டது. அதனால் அவனுக்குச் செலவழிக்கத் தெரிந்ததே தவிர, ஈட்ட வேண்டும் என்ற உணர்வில்லை. கோவலனின் செல்வம் செலவழித்ததால் மட்டுமே அழிந்தது என்று கருத முடியாது. செல்வம் நுகர்தல் வழி, செலவழித்தலுக்குரியது தானே! அதனால் செல்வம் அழியும் என்று கூறுதல் பொருளியல் கொள்கையன்று. செல்வம் தொடர்ந்து ஈட்டப்படாது போனால்தான் அழியும்.

கோவலனின் செல்வம், செலவின் வாயில்களைப் பெற்றிருந்ததைப் போல, வருவாய், வாயில்களைப் பெறவில்லை. முன்னோர் அமைத்திருந்த வாயில்களும், இயல்பாய் அமைந்திருந்த வாயில்களும் தொடர்ந்து பேணாமையால் தளர்ந்து போயின. கோவலன் விடுதல் அறியா விருப்பினனாக மாதவியிடத்திலேயே தங்கி விட்டான். அவன் செல்வம் தேடும் முயற்சியில் ஈடுபடவில்லை.

ஆயினும், வழிவழியாக வந்ததும், கோவலன் துய்த்து மகிழ்ந்ததுமாகிய குலப் பெருமை மட்டும், அவனுடைய நெஞ்சை உறுத்துகிறது. அயர்விலா ஆள்வினையுடையவனாக இருந்திருப்பின், அவன் புகாரில் இருந்தபடியே கூட இழந்த செல்வத்தை ஈட்ட முடியும்.

ஆயினும், அன்று இருந்த சூழ்நிலையில் அவனுடைய செல்வம் செய்யும் முயற்சி, அவனுடைய பழைய தகுதிகளுக்கு இசைந்ததாக இருக்க முடியாது. தம் வழிவழி நிலையிலிருந்து தாழ்ந்துதான், அவன் செல்வத்தைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பல்லாண்டுகள் பழகிய அந்தப் பெருமை உணர்ச்சி, அவனிடத்தில் ஊழாகத் தங்கி, உறுத்தி வழி நடத்துகிறது.

கோவலன், தன் நிலை கண்டு வருந்துவதோடு மட்டும் நிறுத்திக் கொண்டு, பெருமை சிறுமைகளைப் பற்றி கவலைப்படாமல், வாழும் உள்ளம் பெற்றிருப்பானானால் அவன் புகாரிலிருந்தே பொருளீட்டியிருக்க முடியும்.

கோவலனுக்கு அந்த ஊழ் இல்லை. அதாவது கெட்ட காலத்திலும், வாழும் காலத்திலும், ஒரே மாதிரியான உணர்வினைப் பெறும் இயல்பு அவனிடத்தில் இல்லாமல் ஊழின் ஆற்றலை வலிமைப்படுத்தியது.

அது மட்டுமல்ல, ஒரு தனி மனிதனுடைய பழக்க வழக்கங்கள், அவன் வாழும் சமுதாயத்தினுடைய, மனப் போக்குகளுக்கு ஏற்றவாறு பெரும்பாலும் அமையும். இதனைச் ‘சமூக ஊழ்’ என்று கூறினும் கூறலாம்.

கோவலன் காலத்தில் வாழ்ந்த சமுதாய மனப் போக்குகள், கோவலன் வீழ்ச்சியை விரைவு படுத்துவனவாகவே அமைந்திருந்தன. அதாவது கோவலன் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல், சமுதாயத்தினிடத்திலும் இல்லை. கோவலன் நெறி முறை பிறழ்விற்குச் சமுதாயத்தின் நடைமுறையே துணையாகவும் அமைந்தது.

கோவலன் வறுமையுற்றுத் துன்பப்படும் காலத்து, அன்றிருந்த சமுதாயம் அவனைத் தேற்றும் குறிப்புடையதல்ல. இழித்துப் பழித்துக் கூறுவதோடு மட்டுமின்றி, அயலான் போலக் கருதும் மனப்போக்கும் சமுதாயத்தினிடத்தில் இருந்தது. ஆக, இத்தகு தீய சமுதாய ஊழ் கோவலனைப் புகாரில் வாழ அனுமதிக்க வில்லை.

ஆதலால், கோவலன் இழந்த பொருளை ஈட்டும் ஆவல், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் விருப்பம் ஆகி, பல்லாண்டு பழக்கப்பட்ட உணர்வுகள் தூண்ட, மதுரைக்குச் செல்ல நினைக்கின்றான்.

மதுரை, அயல்நாட்டு நகரம். அவனை அறியாதவர் பலர் அங்குண்டு. அவனுடைய சென்ற கால வாழ்க்கையையும், நிகழ்காலத் தாழ்ச்சியையும் எடுத்துக் கூறித் தூற்றுபவர்கள் யாரும், அங்கு இருக்க மாட்டார்கள். நேற்று மதித்தவர்கள் இன்று செல்வமின்மையின் காரணமாக, அலட்சியப்படுத்தும் கொடிய துன்பம் அங்கு இருக்காது.

இருந்த செல்வத்தை, உடனிருந்து அனுபவித்தவர்கள், தொடர்ந்து வர மாட்டார்கள். அதனால் சிக்கனமாக வாழ முடியும். புகாரை விட்டு மதுரைக்குச் சென்றுவிட்டால் மாதவியைக் கூட அவனால் முயன்று மறந்து விட முடியும். இத்தகைய எண்ண அலைகளால், கோவலன் உந்தப் பட்டிருக்கக் கூடும்.

இந்தச் சிந்தனைகள் அனைத்தையும் கூர்ந்து நோக்கினால், கோவலனுடைய பழக்க வழக்கங்கள் வழித் தொடர்பானவையே என்பது புலப்படும். ஆதலால் கோவலன் பூம்புகாரை விட்டு மதுரை செல்லத் துணிந்தான். தன்னுடைய பழக்கங்களை மாற்றிக் கொள்ளத் துணிவில்லாமல், எங்கேயாவது, யாருக்கும் தெரியாமல் பொருளை ஈட்டி, வாழ்க்கையை நடத்தினால் சரி என்ற முடிவுக்கு வந்துவிடுகிறான். அதனால், கோவலனின் தனித் திறன்கள் செய்லபடாமையால்தான் இங்கேயும் ஊழ் வெற்றி பெறுகிறது.

கோவலன் சிலம்பினை விற்றுச் சிறு தொழில் செய்து வாழ்க்கையை நடத்தலாம் என்ற எண்ணத்துடன் மதுரைக்கு வருகிறான். ஆயர் குலத்துப் பெருமக்கள் வாழும் ஆயர்பாடியில் தங்குகிறான். அவனுடைய சென்ற காலத் தவறுகளை நினைத்து வருந்துகின்றான். ஆனாலும், கண்ணகி அவனைத் தேற்றுகிறாள்.

மதுரை மாநகருக்குள் சிலம்பினை விற்கும் பொருட்டுச் செல்கிறான். கோவலன், நாடு விட்டு நாடு வந்திருந்தாலும் அவனுடைய குடும்பத்தின் பழைய பெருமையை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

கோவலன் சிலம்பை விற்கப் புறப்படும்பொழுது கண்ணகியைப் பிரிகின்ற துயரம், பெருமை இழந்து வறுமை நிலையில் சிலம்பு விற்கச் செல்லும் வருத்தம் ஆகியன நெஞ்சை உறுத்த உலகத்தார்க்கு ஒத்துவராத நடையோடு மதுரைக்குள் செல்கிறான். மதுரைக்குள் சென்றவன், வாணிகர் தெருக்களுக்குச் சென்று வெளிப்படையாக விற்றிருக்கலாம். அங்ஙனம் அவன் முயற்சி செய்யவில்லை.

அவனுடைய பழைய பெருமை உணர்வுகளும் இன்றைய அவனுடைய இழிநிலையும் அவன் எண்ணத்தில் அலைமோதின. அதன் காரணமாக அவன் தயங்கித் தயங்கி நடக்கிறான். அது மட்டுமா? சிலம்பினை, பொற் கொல்லனிடம் விற்கும் முயற்சியில் கோவலன் அணுகவில்லை. விலை மதிப்புக் கூறும்படிதான் கேட்கிறான். இதனால் தன்னுடைய பொருளின் விலை மதிப்புக் கூட அறியாமல் அவன் வாழ்ந்திருக்கிறான் என்று தெரிகிறது.

பரம்பரைச் செல்வத்தினால் வந்த தீமை இதுதான். முயன்று ஈட்டாத பொருளுக்கு யாரும் தகுந்த மதிப்பினைத் தரமாட்டார்கள். இஃது இயற்கை. இந்த இயற்கைக்கு, கோவலன் விதி விலக்கல்ல.

ஆக, உழைத்துப் பொருளீட்டாத பழைய வாழ்க்கை முறை, பரம்பரைச் செல்வத்தை மேலும் பெருக்க-வளர்க்க முடியாமல், அழித்த, இழிவு ஆகிய சென்ற காலப் பழக்க வழக்கங்கள், ஊழாக உருப்பெற்றுக் கோவலனைப் பிடர் பிடித்து உந்திச் செலுத்துகின்றன. வலியச் சென்று பொறி வாயில் அகப்படும் விலங்கு போலப் பொற்கொல்லனிடம் சிக்குகிறான்.

பொற்கொல்லன், வெற்றிகரமாகத் தனது பணியை முடித்து, நாடாள்வோனின் காவலருடன், கோவலனிடம் வருகிறான்; கோவலனைக் கள்வன் என்று காவலரிடம் காட்டுகிறான். காவலர்கள், கோவலன் கள்வனாக இருக்க மாட்டான் என்று விவாதிக்கின்றனர்.

ஆனால், கோவலன் ஆழ்ந்த மௌனம் சாதிக்கிறான். தன் கையிலிருப்பது தன்னுடைய சிலம்புதான் என்று கூடச் சொல்லாமல் இருக்கிறான். ஏன்? இருக்க வேண்டிய இடத்திலே இருக்காமல் இழிந்து வீழ்ந்த தற்கொலை மனப்பான்மையிலிருந்து கோவலன் மீண்டானில்லை.

ஆதலால், ஆழ்ந்த மௌனம் சாதிக்கிறான். கோவல்னின் ஊழ், தன்னுடைய நினைப்பை நிறைவேற்று தற்குரிய பிறிதொரு ஊழைக் கருவியாகக் கொண்டு காரியங்களை இயற்றுகிறது. சென்ற கால நிகழ்ச்சிகளை நினைத்து வருந்துதலைத் தவிர்த்து, புதிய ஆள்வினை யாற்றலைப் பெறும் நோக்கம் வந்திருக்குமானால், பொற் கொல்லனை எதிர்த்துப் போராடியிருப்பான்; ஐயப்படும் காவலருக்கு எடுத்துக் கூறியிருப்பான். ஏன் நாடாளும் அரசன் அவைக்கும் சென்று எடுத்துக் கூறவும் முடியும்.

கோவலனின் வாழ்க்கை அந்தத் திசையில் செல்லவில்லை. சென்ற காலத் தவறுகளால் விளைந்த ஊழிற்குள்ளேயே அமிழ்ந்து விடுகிறான். அவனுக்கு ஊழினை எதிர்த்து நிற்கும் ஆற்றலில்லை. எழுந்து நடக்கும் ஆற்றலில்லாத சிங்கத்தைச் சுண்டெலிகள் கூட, எதிர்த்து வெற்றி கொள்ள முடியும் அல்லவா?

வாழ்கின்ற பொழுது சீராக, சிறப்பாக வாழ்தல் நன்றே. அறிந்தோ அறியாமலோ தவறுகள் நிகழ்ந்து விடுமாயின், இழப்புகள் ஏற்பட்டு விடுமாயின், அதனை நினைத்துக் கவலைப்பட்டு என்ன பயன்? கறையான், மரத்தை அரித்து அழிக்கும். கவலை, மனத்தை அரித்து அழிக்கும்.

தவறுகளை உணர்ந்து தவறுகள் நீங்கிய சிறப்புடைய வாழ்க்கை வாழ, அங்ஙனம். வாழ்தலுக்குரிய களங்களை அமைக்க அடலேறுபோல, அயர்விலாத முயற்சிகளை மேற்கொள்ளும் வாழ்க்கையே, வாழ்க்கை; அது அறிவறிந்த ஆள்வினையுடைய வாழ்க்கை, ஊழையும் உப்பக்கம் காணும் வாழ்க்கை வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை.

இந்த வாழும் நெறியைக் கோவலன் கடைப்பிடிக்க வில்லை. அதன் காரணமாகவே, அவனைச் சராசரிப் பொற்கொல்லன் கூட, வெற்றி கொள்ள முடிந்தது. கோவலனின், ஆள்வினையிழந்த வாழ்க்கையின் தீயூழ் மன்னவனின் தீயூழோடு கூட்டுச் சேர முடிந்தது. முடிவு, கோவலன் கொல்லப்படுதலாகும்.

அவன், சென்ற கால ஊழின் காரணமாக கொல்லப்பட்டான் என்று கூறுவதில் தவறில்லை. ஆயினும், அந்த ஊழினை வெற்றி காணும் ஆகூழ்ப் படைக்கக் கோவலன் முயன்றிருப்பானாகில் அவன் வெற்றி பெற்றிருப்பான்; வாழ்ந்திருப்பான்; பாண்டியனுக்கும் பெருமை சேர்த்திருப்பான்; நாட்டின் தீய சக்தியாகிய பொற்கொல்லன் ஒதுக்கப்பட்டிருப்பான்.

நல்லன சிந்தித்து, ஆற்றலோடு செயல்பட வேண்டியவர்கள், அங்ஙனம் வாழத் தவறுவதன் மூலம், தீய சக்தியை வளர்த்து விடுகிறார்கள் என்பது வரலாற்றுக் கருத்தாகிறது.

பாண்டியனின் ஊழ்

பாண்டியப் பேரரசு, அரசியல் நெறிமுறை பிறழாத பேரரசு முறை செய்து காப்பாற்றும் அரசு, செய்தியறிந்து கொள்ள, தவறுதலாகக் கதவைத் தட்டி கணவன் மனைவியிடையே ஐயப்பாடு தோன்ற காரணமாக இருந்ததற்காக, தனது கையையே வெட்டிக் கொண்ட பொற்கைப் பாண்டியனின் வழிவழி வந்த அரசு, பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கொற்றமும் அறநெறிக் கொற்றமேயாகும்.

இளங்கோவடிகள், புறஞ்சேரியிறுத்த காதையில் பாண்டிய மன்னனின், செங்கோன்மைச் சிறப்பையும் உலகு தழுவிய புகழுடைய பேரரசாக விளங்கியதையும் விளக்கிக் கூறி வாழ்த்துகிறார்.

கரடிகள், கொடிய பாம்புகள் வாழும் புற்றினை அகழா. புலிகள் மான்களோடு மாறுபடாது விளையாடும் இயல்பின. முதலையும், தெய்வமும், இடிகளும் கூட யாருக்கும் துன்பம் செய்வதில்லை என்று பாராட்டுகிறார்.

“கோள்வ லுளியமும் கொடும்புற் றகழா;
வாள்வரி வேங்கையும் மான்கண மறலா;
அரவும் சூரும் இரை தேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என
எங்கணும் போகிய இசையோ பெரிதே!”

(புறஞ் சேரியிறுத்த காதை, 5-10)

இத்தகு சிறந்த நாட்டின் அரசன் நெடுஞ்செழியன். அவன் அரசுக் கட்டிலில் ஏறின காலம் தொட்டு, அறம் ஒன்றினையே அறிந்தவன்; நல்லனவே கேட்டுப் பழகியவன்; முறை செய்தே பழக்கப்பட்டவன். இப்பழக்கமாகிய ஊழ் அவனுடைய ஊனில், உயிரில் உணர்வாகக் கலந்து விட்டது.

அவன், இப்பழக்கத்தின் காரணமாக, நன்றல்லாதன நடக்கக் கூடும் என்ற சிந்தனையே இல்லாமல் போய்விட்டான். நாள்தோறும் நாடி முறை செய்தல் மன்னன் கடமை என்பதைப் பழக்கத்தால் மறந்துப் போயினான்.

உழுத சால் வழிச் செல்வது போல அவரவர் பழக்கங்களின் வழியாக மனம் செல்வது இயல்பாகிவிட்டது. சமுதாயச் சூழலில், நேற்றைய நன்மை இன்றைய தீமையாவதும், இன்றைய தீமை நாளை நன்மையாவதும் நடைபெறக் கூடியது என்பதை அவன் அறிந்தானில்லை.

இந்தச் சூழ்நிலையில், அத்தாணி மண்டபத்தில் நடந்த ஆடலை அனுபவித்த வகையில், அரசியின் ஊடல் வேறு தோன்றிவிட்டது. பாண்டியன், அரசப் பெருங் குடும்பத்தைச் சேர்ந்தவனானாலும் ஒழுக்க நெறியில் சிறந்திருந்தவன். காதல் மனைவியின் ஊடலைப் பொறாதவனாக ஊடல் தீர்க்கும் வேட்கையினால், கோப்பெருந்தேவியிடம் விரைந்து செல்கிறான்.

தவறு செய்யாத தன்னைத் தவறாக நினைத்துக் கொண்டு அரசி ஊடியிருக்கிறாளே என்ற கவலை அவனை வருத்தியிருக்கிறது. அதனால் ஊடல் தீர்க்கும் வேட்கை அவனுக்கு மிகுந்திருக்கிறது.

நற்பழக்கங்களால் செழித்த அவனுடைய நல்லூழ் எதிர்பாராத தீமைக் குறக்கீடுகளால், அலைப்புறுகிறது; அதனால் உறுதி பிறழ்கிறது.

இத்தருணத்தில், பொற்கொல்லன் அந்தப்புர வாயிற் படியில் அரசனைச் சந்திக்கிறான். காணாமற் போன அரசியின் சிலம்பை, கண்டுபிடித்து விட்டதாகச் சொல்கிறான்.

காணாமற்போன சிலம்பு கைவசம் வந்தால், அரசியின் ஊடலைத் தீர்ப்பது எளிது என்று அரசன் கருதுகிறான். அதனால்,

“தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகிற்
கொன்று, அச்சிலம்பு கொணர்க ஈங்கு”

என்று ஆணையிடுகிறான். தவறு செய்யாத நிலையில் அரசி தவறெனக் கொண்டமையாலும், காதல் மிகுதியினாலும், நிலைமாறி அரசனின் வாய் உமிழ்நீர்வற்றி, “கொன்று அச்சிலம்பு கொணர்க” என்று கூறிச் சொற்சோர்வுபட்டு விட்டான். சொற்சோர்வு பொருட் சோர்வாக மாறி, கோவலன் கொலைக்குக் காரணமாயிற்று. பாண்டியன் செங்கோல் வளைந்தது.

பாண்டியனின் செங்கோலை வளைத்த வினையை “வல்வினை” என்று இளங்கோவடிகள் கூறுகிறார் ஏன்? பாண்டியன், சிறந்த அரசன். நெறிமுறை பிறழாதவன். அவனுடைய செங்கோலையே வளைத்த வினையாதலால் “வல்வினை” என்றார்.

காலத் தாழ்த்தியேயானாலும் பாண்டியன் நெடுஞ்செழியன் தன்னிலை எய்தினன், அயரா ஆள்வினையோடு, நீதியில் தோய்ந்த நெஞ்சத்தோடு, தனது செங்கோலை வளையவிடாமல், உயிரையே ஆணியாகக் கொடுத்துச் செங்கோலை நிமிர்த்தி, உலகத்திற்கே காட்டினான்.

நெடுஞ்செழியன் செங்கோலை வல்வினை வளைத்த வேகத்தைவிட, பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆள்வினை அதனை நிமிர்த்ததே, அதுதான், காப்பியத்தில் இறவாப் புகழ்பெற்றுள்ளது. ஊழ்வினையை, ஆள்வினையால் மாற்றலாம். மாற்றமுடியும் என்பதற்குப் பாண்டியன் நெடுஞ்செழியனே சான்றாவான்.

“வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது”

(காட்சிக் காதை - 98-99)

என்பது எண்ணத்தக்கது.


கண்ணகியின் கற்பு


இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைச் செய்த நோக்கங்களுள் ஒன்று, “உரைசால் பத்தினிக்கு உயர்ந்ததோர் ஏத்தலும்” என்பது. பெண்ணுக்குப் புகழ், கற்பு. புகழ் மிக்க, கற்புடைய பெண்ணை, உலக மக்கள் பாராட்டுவர். அமரர்கள் போற்றுவர்.

கற்பு என்பது என்ன? இதற்குப் பலர் பலவாறு பொருள் கொண்டுள்ளனர். கொன்றை வேந்தன் ஆசிரியர், “கற்பெனப்படுவது சொல் திறம்பாமை” என்று கூறியுள்ளார். அதாவது, கணவன் சொல்லுக்கு எதிராகச் சொல்லா திருத்தல், என்று கூறுவர். இக்கருத்து சிறந்த மனையற வாழ்க்கைக்கு ஏற்புடையதாக இருக்க முடியாது.

கணவன் சொல்வது தவறாக இருக்குமானால், பெண் அந்தத் தவற்றுக்கு உடந்தையாக இருந்து கணவனுக்குக் கேடு சூழ்வதை எப்படிக் கற்பு என்று ஏற்றுக் கொள்ள முடியும்.

கணவனுக்கும், தனக்கும், இருவரும் சார்ந்த குடும்பத்திற்கும், குடும்பத்திற்குக் களமாக இருக்கும் சமுதாயத்திற்கும், நலம் பயக்கின்றவாறு வாழ்வதும், கணவனின் வாழ்க்கையை அந்த வாழ்க்கையில் நிலை நிறுத்துதலும் தான், உண்மையில் சிறந்த பெண்ணின் கடமை.

கற்பு என்பது. ஒழுக்கத்தின் மறு பெயரே. பெண்ணின் ஒழுக்கத்தை சிறப்பித்துச் சொல்லும் பொழுது, கற்பு என்று குறிப்பிடுவது இலக்கிய வழக்கில் வந்திருக்கிறது.

எந்த வாழ்க்கைக்கும், அன்பே அடித்தளம். அன்பில்லாத எந்த உறவும் பயனற்றது. அதிலும் ஒருவனும் ஒருத்தியுமாகக் கூடிய நெடிய நாட்கள் வாழ வேண்டுமானால், அவர்களுடைய அன்பு ஆழமானதாக, அகலமானதாக, உறுதியானதாக இருக்க வேண்டும்.

மென்மையான அன்பு, உறுதிப்பாட்டில் கல்போல விளங்க வேண்டும். கற்பு என்ற சொல்லின் பகுதி ‘கல்’ என்பதாக இருக்க வேண்டும் போலத் தெரிகிறது. இங்கு, ‘கல்’ என்பது உறுதியின் பாற்பட்டது.

கற்பு என்ற சொல் இன்று கருதுவதைப் போலக் குறிப்பிட்ட உடலொழுக்கத்தை மட்டும் குறிப்பிடுவதன்று; விரிந்த பொருளுடையது.

தூய அன்பு, கணவனுக்காகத் தியாகம் செய்தல், வாழ்க்கையில் அனைத்துத் துறையிலும் கணவனுக்குத் தோழமையாதல், துணை நிற்றல் ஆகிய அனைத்தும் சேர்ந்த ஒழுக்க நெறிக்கே, கற்பு என்று பெயர்.

காலப்போக்கில், பெண் அடிமைத்தனம் வந்த பிறகு பெண்ணின் உடலைச் சார்ந்ததே கற்பு என்று சிறிய எல்லை வகுத்துவிட்டனர். உயர்ந்த கற்புடைய பெண்ணின் இலக்கணம் கணவனை வாழ்வித்து வாழ்தல், உயர்த்தி உயர்தல், உடலும் உயிரும் என வாழ்க்கையில் ஒன்றாகி விடுதல். இந்த இலக்கணங்கள் கண்ணகியிடத்தில் பொருந்தி யிருந்த நிலையினைக் காண்போம்.

கண்ணகி, கோவலனாகிய தலைமகனுக்கு முற்றும் ஈடு கொடுக்கும் தலைமகளே யாவாள். கோவலனின் உயிரும், உணர்வும் மகிழ்ந்து இன்புறத்தக்க அளவிற்கு அவள் இன்பப் பெட்டமாக இருந்தாள் என்பதை இளங்கோவடிகள், கோவலன் வாயிலாக.

“மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ!
யாழிடைப் பிறவா இசையே என்கோ!
தாழிருங் கூந்தல் தையாள்! நின்னை.”

(மனையறம். 73-80)

என்று, பாராட்டி மகிழ்கிறார்! இதிலிருந்தே கண்ணகியின் சிறப்பை உணரமுடிகிறது.

அப்படியானால், ஏன் கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்தான்? என்ற வினாத் தோன்றும். பலர் அவரவர், சிந்தனைப் போக்கிற்குத் தகுந்தவாறு விடை சொல்கின்றனர்.

“கண்ணகியிடம் மாதவிக்கிருந்த கவர்ச்சியில்லை; கோவலன் கலைஞன் கண்ணகியிடம் கலையுணர்வு இல்லை; கலை இல்லை” என்றெல்லாம் சொல்கின்றனர். இவையனைத்தும் பொய். கோவலன் இயல்பிலேயே மகளிர் ஒழுக்கத்தில் முறை பிறழ்ந்தவன். அவனுடைய மகளிர் ஒழுக்கம் பற்றி இளங்கோவடிகள்,

“குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன் போல
இளிவாய் வண்டினொ டின்னிள வேனிலொடு
மலய மாருதந் திரிதரும்”

(இந்திர விழவூரெடுத்த காதை 200-203)

என்று தென்றலுக்கு உவமையாகக் கோவலனை எடுத்துக் காட்டுவதால் அறியலாம்.

இங்ஙனம், கோவலன் விளங்கியதற்குக் காரணம் அவன் மட்டுமல்லன். அவன் காலத்திய சமுதாய அமைப்பும் காரணமாகும். கோவலன் காலத்தில் சொத்துடைமை தோன்றி வளர்ந்துவிட்டது. சொத்துடைமை தோன்றி வளர்வதற்கு முன்பு, காதல் வாழ்க்கையில் சுதந்தரமிருந்தது.

சொத்துடைமை தோன்றிய பிறகு, சொத்தைப் பாதுகாப்பதற்காகக் காதல் வாழ்க்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்பொழுது தான், பலரை மணந்து வாழ்ந்த தலைமகன், ஒருத்தியை மட்டும் மணந்து வாழும் நியதிக்கு உட்படுத்தப்படுகிறான். காரணம் சொத்து சிதறிப் போகாமல் குவிந்த முறையில் இருக்க வேண்டும் என்பதாகும்.

ஆனால், பால் உணர்ச்சி வழிப்பட்ட வாழ்க்கையில், தலைமகன் ஒருத்தியொடு கூடி வாழ்வதன் மூலம் மன நிறைவு பெற இயலாது போய்விட்டது. இந்தச் சூழ்நிலையில் பரத்தையர் வாழ்க்கைமுறை ஏற்பட்டது. இந்தக் கால கட்டத்திற்குப் பிறகுதான், பரத்தமை என்ற ஒழுக்கக்கேடு கால் கொண்டது.

இந்தப் பரத்தமையும்கூட, சங்க காலத்தில் ஒருத்திக்கு ஒருவன் என்ற முறையிலேயே முறைப்படுத்தப்பட்டிருந்தது. பின்பு, காலப்போக்கிலே தான், பரத்தமை வாணிக நிலைக்குத் தள்ளப்பட்டுச் சீரழிவுக்குள்ளாகியது.

ஆதலால் இயல்பான வளர்ச்சிப் போக்கும், அவனது வளர்ச்சிப் போக்கை, உந்திச் செலுத்திய அவன் காலத்திய, சமுதாய நிலையும் கோவலனை, கண்ணகியை விட்டுப் பிரித்தன. கண்ணகியிடம் எந்தக் குறையும் இல்லை.

தமிழ் நாகரிகம், பெண்ணைப் பெருமைப்படுத்துகிறது. பெண்ணுக்கு உரிமைகள் அனைத்தும் உண்டு. சிறந்த நாகரிக சமுதாய அமைப்பு, உரிமைகளைக் கடமைகள் வழி அனுபவிக்கவே தூண்டும். உரிமைகள் முனைப்பினைத் தரா; பணிவினைத் தரும்; நெஞ்சுநிறை அன்பினைத் தரும்; தொண்டு மனப்பான்மையினை நல்கும்; அவ்வழி தன்னலமறுப்புத் தோன்றும்; பிறர் நலம் விழையும் பெருந்தகைமை விளையும்.

இத்தகு பண்புகளைப் பழந்தமிழகத்துப் பெண்கள் பெற்றிருந்தார்கள். அவர்கள் பெறாத உரிமையில்லை. ஆயினும் கணவன் வாழ்விலேயே நாட்டம் காட்டினர். கணவனை வாழ்வித்து வாழ்வதிலேயே இன்புற்றனர்.

பொதுவாக ஒன்று அல்லது ஒருவர் பெற்றுள்ள அழகு நலம், செல்வம், ஆகியன அது அல்லது அவர் துய்ப்பதற்கல்ல. அவரவர் அழகை - நலத்தை அவரவர் துய்த்தல் அரிது. மலரின் மணத்தை மலரே நுகர்தல் இயலாத ஒன்று. தென்றலின் குளிர் நலத்தினைத் தென்றலே துய்த்தல் இல்லை. இயலாததும் கூட.

அதுபோலக் காதலனின் அழகு நலன்களைக் காதலியும், காதலியின் அழகு நலன்களைக் காதலுனும், மாறித் துய்த்தலே இயற்கையின் நியதி. ஒருவனே துய்க்கத் தன்னை அவனிடம் ஒப்படைத்துத் தன்னல மறுப்புணர்வுடன் வாழ்தல் கற்பு. இக் கற்புநெறி இருபாலுக்கும் பொதுவே.

அதனால், தமிழகத்துப் பெண்கள் கணவன் மகிழ்தலுக்கே அழகு உடையவராக விளங்க விரும்புவர். கணவன் துய்த்து மகிழும் காலங்களுக்கு ஏற்றாற் போலவே ஒப்பனை செய்து கொள்வர். அதனாலன்றோ காரைக்கால் அம்மையார், தம் கணவன் தம் அழகு நலத்தினைத் துய்த்து மகிழ மறுத்தபோது துறந்தார்; பேய் வடிவம் கொண்டார்.

கண்ணகி வழி வழிச் சிறந்த குலத்தில் தோன்றிய குலமகள். மகளிர்க்குரிய இயல்பான குண நலன்கள் அனைத்தும் நிறைந்தவள். அதனாலன்றோ கோவலன் கண்ணகியைவிட்டுப் பிரிந்து மாதவியிடம் சென்றபோது ‘வடு நீங்கு சிறப்பின் தன் மனையகம் மறந்து” என்று இளங்கோவடிகள் கண்ணகியைப் பெருமைப்படுத்துகின்றார்.

‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’

என்று தமிழ்மறை காட்டும். பெண்ணுக்கு இலக்கணமாக வாழ்ந்தவள் கண்ணகி. ஒரு பெண்ணின் கற்பைக் கணவன்காக்க முடியாது. கற்பு என்பது உடல் சார்பான ஒழுக்கம் மட்டுமன்று. பொதுவாக, ஒரு பெண் தன் அழகு நலத்தினைப் பிறர் அதாவது பரத்தமைக் குணமுடைய ஆடவர் காண, கண்டு மகிழ வாய்ப்பளிக்கக் கூடாது.

அதுமட்டுமன்று. தானும் தன் தலைவனைத் தவிர வேறு ஆடவர் நலனை உள்ளத்தில் நினைத்துக் காமுற்றுப் பாராட்டுதல் கூடாது.

அதனாலன்றோ கற்புடைய மகளிர் “பிறர் நெஞ்சு புகார்” என்று சிறப்பித்துக் கூறுகிறது மணிமேகலை.

ஆதலால், கற்பு என்பது உடல் சார்பு உடையது மட்டுமன்று. உடல் சார்பான கற்பைக் கணவனின் காவல் காப்பாற்றித் தரும். சிந்தனையில், உணர்வில் கெட்டபிறகு உடல் காப்பாற்றப்பட்டு என்ன பயன்? அதனால் தான் தமிழ் மறை ‘தற்காத்து’ என்று கூறுகிறது.

தற்காத்தலிலேயே தன் கணவனுக்கு எதிரிடையான எந்தக் குணக் கேடுகளையும் தான் பெறாது ஒழுகுதலும் அடங்கும்; பெருமை, புகழ் ஆகியனவும்கூட அடங்கும். இது, கணவனுக்கும் பொருந்தும்.

கண்ணகி தற்காத்துக் கொண்டு வாழ்ந்த பெண்ணிற் சிறந்த பெருந்தகையள். கோவலன் நிலா முற்றத்தில் கண்ணகியுடன் கூடி வாழ்ந்த காலத்தில்தான், கண்ணகி ஒப்பனை செய்து கொண்டாள். கோவலன் பிரிந்து போன பிறகு கண்ணகி, அழகை வெறுத்தாள்; அணிகலன்களை வெறுத்தாள்; துயரினையும் அடைந்தாள்.

ஆனாலும், கணவன் நலம் கருதித் துயரினை மறந்து ஒழுகினாள். மங்கல நாணைத் தவிரப் பிற அணிகளை அணியாது நீக்கினாள். கண்ணகியின் அழகிய கண்கள் கோவலனைப் பிரிந்தமையினால் கருங் கண்களாக மாறிவிட்டன.

அறம் உண்டு. ஆனால் எந்த அறமும், கூட்டு முறையிலேயே செய்யப்படும். மனை அறத்திற்கென்று சில அறங்கள் உள்ளன. இதில் சில அறங்கள் தலைவியும் தலைவனும் சேர்ந்து செய்யும் அமைப்பு உடையன. ஒருவர் இன்றி ஒருவர் செய்தல் இல்லை.

அந்தணர்களைப் பேணுதல், அறநெறி நிற்போரை வாழ்வித்தல்; விருந்தினரை உபசரித்தல் ஆகியன மனையறத்தில் தலைவி செய்யக்கூடிய அறங்களாகும். கண்ணகி இந்த அறங்களைக் கோவலன் பிரிந்திருந்தாலும் செய்ய வசதி உண்டு. ஆனால் கண்ணகி செய்யவில்லை.

ஏன்? கணவன் இல்லாதபோது மனைவி அறம் செய்தல் கற்பு நெறியன்று. இது மட்டுமா? கண்ணகி கற்புக்காக, கோவலனின் புகழைக் காப்பதற்காக உள்ளத்தின் துன்பத்தினை மறந்து கோவலனின் பெற்றோரிடமும், அவர் தம் வீட்டுக்கு வரும் சான்றோரிடமும் செயற்கையாகப் புன்முறுவல் பூக்கின்றாள்.

ஏன்? கோவலனை விவாதப் பொருளாக்கிச் சீரழியச் செய்யக்கூடாது என்ற கற்பு நெறிதான் காரணம்.

கண்ணகி கோவலனைப் பிரிந்து வாழ்ந்த நிலையிலும் தம் கற்பினையும் காத்துக் கொண்டாள். கோவலனுக்குரிய எந்த நலன்களையும் இழக்காமலும் பேணிப் பாதுகாத்து வந்தாள். அதுபோலவே கோவலனின் பெருமையையும் புகழையும் கெடுக்கும் எந்தச் செயலிலிருந்தும் தன்னை விலக்கி, காத்துக் கொண்டாள். இதுவே பெண்ணின் கற்பு-பெருமை, கண்ணகி போற்றத்தக்கவள்.

கண்ணகி கோவலனுக்கு ஏற்ற மனைவி என்ற தகுதி மிகுதியும் உடையவளாக இருந்தாள் என்பதனைத் தேவந்தியும் உணர்த்துகிறாள். கோவலன், கண்ணகியைப் பிரிந்ததற்குக் காரணம் கண்ணகியல்லள்.

கோவலன் கண்ணகியை வெறுத்து ஒதுக்கவில்லை என்பதைக் “கணவற்குக் கைத்தாயுமல்லை” என்று தேவந்தி கூறி விளக்குகிறாள். இங்ஙனம் இருக்க, கண்ணகியிடம் கலை இல்லை, கவர்ச்சியில்லை, அதனால் கோவலன் பிரிந்தான் என்றெல்லாம் கருதுவது மரபன்று.

தேவந்தி, கோவலன் கண்ணகியைப் பிரிந்ததற்கு ஊழையே காரணமாகக் காட்டுகிறாள். அதாவது, மகளிர் கணவன் பொருட்டு நோற்கும் நோன்பினை முறையாகச் செய்யாமையால் விளைந்த தீயூழ் என்று சொல்கிறாள்.

ஆனால், இளங்கோவடிகள் தேவந்தியின் வாயிலாகத் தான் இங்கு ஊழை நினைவூட்டுகிறார். இங்கு ஊழின் விளைநிலமாகிய சமுதாய அமைப்பு, சீராக இன்மையே கோவலன் பிரிவுக்குக் காரணம்.

சமுதாய அமைப்பின் சீரின்மையை அரசு திருத்தி நெறிப்படுத்தலாம். ஆனால் புகாரிலிருந்த சோழப் பேரரசு அதைச் செய்யத் தவறிவிட்டது அல்லது தனி ஒருவர், தன் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிற சமுதாய அமைப்பை, எதிர்த்துப் போராடலாம். அந்தத் தகுதியும் கோவலனுக்கு இல்லாமல் போய்விட்டது.

காரணம், கோலவன் பரத்தை வழி ஒழுகினதோடன்றி, நெறிமுறை சார்ந்து வாழாது நகரில் சுற்றித் திரியும் இளைஞர்களுடன் கூட்டுச் சேர்ந்துவிட்டான். வறுமொழி பேசியும், நெடிய நகை நகைத்தும், வறிதே வாழும் கூட்டு, கோவலனைச் சிந்திக்க விடாமலேயே தடுத்துவிட்டது. ஆதலால் இளங்கோவடிகள் இங்கே ஊழை, எடுத்துக் காட்டவில்லை.

தேவந்தி, கோவலனைக் கண்ணகி திரும்ப அடைவதற்கு உரியவழியும் காட்டுகிறாள். சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகியவற்றில் மூழ்கிக் காம வேளை வணங்கினால் கோவலனைத் திரும்ப அடையலாம் என்று கூறுகிறாள். பல நாட்கள் கணவனைப் பிரிந்து வருந்தும் கண்ணகிக்கு இந்த வழிகாட்டுதல் ஆறுதல் தரும்; இன்பம் அளிக்கும் என்று தேவந்தி எண்ணினாள். ஆனால், கண்ணகி இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒரே வார்த்தையில் நறுக்குத் தெரித்தாற் போல் “பீடன்று” என்று கூறி மறுத்துவிட்டாள். இந்த இடத்தில் தேவந்தியின் ஆலோசனையை ஒரே வார்த்தையில் கண்ணகி மறுத்துப் பேசுவானேன்?

ஒரு துன்பத்தில் வருந்துவார்க்குப் பலர் எளிதில் ஆலோசனைகள் கூற வருவர். அந்த ஆலோசனைகள் பெரும்பாலும் தன்மதிப்பை இழக்கக் கூடியதாகவும் நெறிமுறைகளைக் கடந்ததாகவுமே இருக்கும். ஆயினும், தன்னல நயப்பு, தேவை என்ற அடிப்படையை வைத்துக் காது கொடுக்கத் தொடங்கிய நிலையிலிருந்து முற்றாக மாறிவிடுவர்.

இராமகாதையில் வரும் கூனி, கைகேயியின் மனத்தை மாற்றியதை நினைவு கூர்க.

இதன் தொடர்பாகத் தொடர்ந்து தேவந்தியிடம் பேசுவதால், தன் மனம் நெறிகளைக் கடக்கும் வாய்ப்பு ஏற்படும். அந்த வாய்ப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் ஒரே சொல்லில் “பீடன்று” என்று கூறி மறுத்து விடுகிறாள்.

காதல், கற்பு என்பன இன்பத்திற்கும் களிப்பிற்கும் மட்டுமே உரியவை அல்ல. தன்னல மறுப்பிற்கும், தம்மைச் சார்ந்தாரைக் காத்தற்கும் காதலும் கற்பும் பயன்படும் பொழுதுதான் அறம் ஆகிறது. இறைமை ஆகிறது.

அதனால், தமிழ்ப் பெண்டிர் தத்தம் கணவனின் தவறுகளை நெஞ்சத்தாலும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள் என்று ஐங்குறுநூறு எடுத்துக் காட்டும். கண்ணகி பெண்ணிற் பெருந்தக்காள். கண்ணகி தன் கணவனின் தவற்றைக் காமவேளிடம் சொல்ல எங்ஙனம் ஒருப்படுவாள்? அதனாலேயே “பீடன்று” என்று மறுக்கிறாள்.

அதுமட்டுமன்று. மாதவியிடம் தங்கியிருப்பது கோவலனுக்கு விருப்பமாயின் அவனது விருப்பத்திற்குக் குறுக்கே நிற்பானேன் என்று கருதி, கோவலன் மகிழ்வுக்கு முதன்மை கொடுக்கும் கண்ணகியின் திறமும் புலப்படுகிறது.

இதனைக் கொலைக்களக் காதையிலும் கண்ணகி புலப்படுத்துகிறாள். கொலைக்களக் காதையில் கோவலன் தன்னிலை நினைந்து வருத்திக் கூறுகிறான்; தன் குறைகளைப் பாராட்டாது, கண்ணகி தன்னுடன் மதுரைக்கு வந்தமையைப் பாராட்டுகிறான்.

அப்போது கண்ணகி “போற்றா ஒழுக்கம் புரிந்தீர், யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் ஏற்றெழுந்தனன்யான்” என்று கூறுகிறாள். இங்குப் “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” என்று கண்ணகி கூறியது முறையன்று: இடித்துக் கூறியது போலத்தான் என்று சிலர் கூறுவர். இது தவறு.

இங்கு ‘போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ என்பது போற்று தலுக்குரிய ஒழுக்கத்தை மேற்கொள்ளவில்லை என்றுதான் பொருளே தவிர, அது இழிநிலைக் கருத்தைத் தராது

அதோடு, கண்ணகி பெரிய இடத்துப் பெண், கோவலனுடைய நடைமுறையைச் சமூகம் ஏற்றுக் கொள்ளாமையை அறிந்திருக்கிறாள்; உணர்ந்திருக்கிறாள். சமூகத்தின் நினைப்பு, கோவலனுக்கு எதிராக இருக்கிறது. என்பதைக் கண்ணகி அறிந்திருந்தாலும் அவள், கோவலன் தன் கணவன் என்ற அடிப்படையில் காதலையும் கடமையாக்கிக் கோவலன் வார்த்தையை மறுக்காத-மறுக்க நினைக்காத ஒழுகலாறுடையேன் என்று, தன் நிலையைக் கோவலனுக்குத் தெரிவித்துத் தன்பால் கோவலனுக்கிருந்த ஐயத்தையும் அச்சத்தையும் நீக்குதற் பொருட்டே கூறுகிறாள்.

இந்நோக்கம் கண்ணகிக்கு ஆழமாக இருந்தது என்பதை, புகாரில் மாதவியை விட்டுப்பிரிந்த கோவலன், கண்ணகியை நோக்கி வந்தபொழுது கண்ணகி கோவலனுக்குத் தன்னம்பிக்கையும் நலமும் மகிழ்வும் தரும் வகையில் “நலங்கேழ் முறுவல் நகை முகம் காட்டி” வரவேற்கிறாள் என்று இளங்கோவடிகள் கூறுவதால் அறிக.

அதுபோது கோவலன் தன் வளமார்ந்த செல்வங்கள் அனைத்தையும் இழந்துவந்துள்ள கீழ்மை நிலையை நினைந்து வருந்தி கண்ணகியிடம் கூறுகிறான். கண்ணகியோ கோவலன் பொருளை இழந்து வருந்தும் செய்தி பற்றி, அலட்டிக் கொள்ளவில்லை.

பொருளிழப்புத் தொடர்பாக யாதொரு வார்த்தையும் சொன்னாளில்லை. ஏன்? பொருளிழப்புச் செய்திகளையும் தொடர்ந்து விவாதித்தால் வருந்தும் சூழ்நிலைகள் மேலும் உருவாகலாம் என்பது கண்ணகிக்குத் தெரியும்.

அத்தகைய வருத்தத்தைக் கோவலனுக்குக் கொடுக்கக் கண்ணகி தயாராக இல்லை. இதற்கு மாறாக அவன் பொருள் தேவையின் காரணமாக தாமே கோவலன் மீதுள்ள காதல் மிகுதியால் மேலும் பொருள் வழங்கும் நோக்கத்தோடு “சிலம்புள கொணம்” என்கிறாள்.

இங்கேயும் கண்ணகியின் மாண்பு உயர்ந்து காணப் படுகிறது. “சிலம்பு உள” என்று சொன்னதின் மூலம் சிலம்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்ற குறிப்பையும் உணர்த்துகிறாள். இங்ஙனம் உணர்த்த வேண்டிய அவசியம் என்ன ?

மீண்டும் தொடர்ச்சியாகப் பெறுதற்கு, பொருள் யாதொன்றுமில்லை என்ற குறிப்பை உணர்த்துவதன் மூலம் அவனைப் பொருள் செயல் வழியில் நெறிப்படுத்தலாமா என்று எண்ணியே “சிலம்புள கொணம்” என்று கூறுகிறாள்.

கோவலனை, மதுரைக்குச் சென்று வாணிகம் செய்து பொருளிட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆற்றுப் படுத்தியது “சிலம்புள கொணம்” என்ற கண்ணகியின் சொல்லே என்று கூறலாம். ஆதலால் கண்ணகியின் வாழ்வும் இலட்சியமும் கோவலனைச் சார்ந்து இயங்கியது எனலாம்.

சொற்காத்த கண்ணகி

கற்புடைப் பெண்ணின் அடுத்த கடைமை “தகைசான்ற சொற்காத்தல்” என்பதாகும். அதாவது கணவனின் புகழை, பெருமையைப் பாதுகாத்தல், பிறரால் மகிழ்ந்து சொல்லப்படுவது புகழ். ஆதலால், புகழைச் சொல்” என்று வள்ளுவம் கூறுகிறது.

காதல் வாழ்க்கையில், மன வேற்றுமைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஊடல் முற்றி வளர்ந்து புலவியாகலாம். ஆயினும் எந்தச் சூழ்நிலையிலும், கணவனின் புகழுக்கு, ஊறு ஏற்படாமல் காப்பவளே கற்புடைய பெண்.

அது போலவே கணவன் மொழிந்த வாக்கு, சூளுரை ஆகியவைகளை நிறைவேற்றி, அவன் மொழிந்த சொல்லை நிறுத்தத் தக்கவாறு, கற்புடைய மனைவி தோழமையாக விளங்கித் துணை செய்ய வேண்டும். தன்னயப்பால் கணவனின் கொடைக்கு இடையூறாக விளங்கக்கூடாது. இன்ப நயப்புணர்வால் கணவனைக் கடமைகள் மீது செல்லவிடாமல் தடுத்தல் கூடாது.

மேலும் கணவன் மீது அயலார்-பகைவர், தகாத பழியைக் கூறினாலும், அப்பழியிலிருந்தும், கணவனை மீட்க வேண்டும். இங்ஙனம், எல்லா வகையாலும் கணவனின் புகழை, பெருமையைக் காப்பவளே கற்புடைய பெண்.

கண்ணகி, கோவலனின் பிரிவின்வழித் துன்பத்தை, கோவலன் மாதவியால் சார்ந்து வாழ்ந்ததை, யாரிடமும் எடுத்துக் கூறவில்லை. கடவுளிடமும் கூட எடுத்துக் கூறி, வழிபட மறுத்துவிட்ட மாண்பினை, முன்னர்ப் பார்த்தோம்.

கண்ணகியால், கோவலனுக்கு எந்தப் பழியும் வரவில்லை. ஆனால் மதுரை மாநகரில் கோவலனுக்குப் பழி வந்துவிட்டது. கோவலனுக்குக் ‘கள்வன்’ என்ற பழிச் சொல்லை மதுரையில் கொடுத்துவிட்டனர். பாண்டிய அரசும் கோவலன் மீது பழிகாரர் கொடுத்த பழியை நம்பி, கோவலனுக்குத் தவறிழைத்து விட்டது.

கோவலனுக்கு ஏற்பட்ட மரணத்தைவிட, கண்ணகியை வருத்தியது கோவலன் மீது சுமத்தப்பட்ட பழியேயாம். கோவலன் கள்வன் என்று சொல்லப் பெற்றுக் கொல்லப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டவுடன் கண்ணகிக்குக் கோவலன் மீது எள்ளளவும் ஐயம் ஏற்படாதது கண்ணகியின் கற்புக்குச் சிறப்பு.

கோவலனும், கண்ணகியும் சில ஆண்டுகளே வாழ்ந்தனர். இடையில் கோவலன் கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறான். கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்த காலத்தில், கோவலனின் ஒழுக்க நலன்கள் என்ன ஆயின? என்ற ஆய்வுக்குக் கூட, கண்ணகி தயாராக இல்லை. ஏன்? நம்பிக்கை நிறைந்த நல்வாழ்க்கையில், கண்ணகி நாட்டம் கொண்டாள்.

கண்ணகி, கோவலனின் குறைகளையும் நிறைகளையும் தேர்ந்து தெளிந்தவள். ஆதலால், ‘கள்வன்’, என்று கோவலன் பழி சுமத்தப்பட்டபோது பாண்டிய அரசுதான் தவறு செய்துவிட்டது என்று ஐயத்திற்கு இடமின்றித் துணிகிறாள்.

இத்தகைய சால்பு, பழகிய பலரிடத்தில் காண்பது அரிது. அவர்கள், இயல்பில் குற்றம் காண்பவர்கள். எனவே, “இல்லாமலா இருக்கும் அல்லது இருக்குமோ?” என்று ஐயப்படுவார்கள். கண்ணகிக்கு ஐயத்தின் அடிச்சுவடேயில்லாத நம்பிக்கை கோவலனிடத்தில்!

கோவலன், தன்னைப் பிரிந்து துன்புறுத்தினானாயினும், அவள் அத்துன்பத்தைத் தாங்கி, தவம் செய்தாளே தவிர, கோவலனுக்கு இம்மியும் நெஞ்சத்தாலும் தவறிழைக்க வில்லை. தான் தவறிழைக்காததோடு மற்றவர் தவறிழைத்த பொழுது, தான் அத்தவற்றைத் தாங்கமுடியாது சினந்து எழுகின்றாள்.

பூம்புகாரில், ஆழ்கடலின் அமைதி போலிருந்த கண்ணகி, மதுரை நகரில் சினந்து எழுகிறாள்; எரிமலையெனக் குமுறுகிறாள். பூம்புகாரில் கோவலன் மாதவி ஆகியோர் தனக்கிழைத்த தீமையைத் தாங்கிக் கொண்டாள். ஆனால், மதுரையில் தன் கணவன் கோவலனுக்கு இழைத்த தவற்றை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கண்ணகியின் தன்னல மறுப்பும் கோவலனுக்காகவே வாழ்ந்த தியாக உணர்வும் இதனால் புலப்படுகின்றன. கோவலன் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தவுடன் அவள் நெஞ்சத்தில் குமுறல் எழுந்தது கொலையால் அல்ல; பழி தூற்றலாலேயாம். இதனை,

“மன்பதை அலர் துரற்ற மன்னவன் தவறிழைப்ப
அன்பனை இழந்தேன் யான் அவலங் கொண்டழிவதோ”

(துன்பமாலை-36-37)

என்று கூறுகிறாள். ஒரு நாட்டு அரசு தவறு செய்து விட்டது என்று நம்புகிறாள். ஆனால், தன் கணவன் தவறு செய்யவில்லை என்று திடமான நம்பிக்கை நெஞ்சளவில் மட்டும் கொள்ளாமல், தன் கணவனின் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்க, அரசை எதிர்த்துப் போராடும் அளவுக்குக் கண்ணகி துணிந்து விட்டாள்.

பாண்டிய அரசிடம் வழக்குரைக்கச் சென்றதே கணவனை மீட்க அல்ல; கணவனின் புகழை மீட்கத்தான்! கோவலன் கள்வன் அல்லன் என்று உலகறியச் செய்து அவன் புகழைக் காப்பாற்றிய கண்ணகியின் கற்பு தெய்வக் கற்பு, மறக் கற்பு, அரசியலையே மாற்றியமைத்த ஆளுமையுடைய கற்பு.


கணவன் புகழ் காத்த கண்ணகி

கண்ணகி வள்ளுவம் காட்டிய வாழ்க்கைத் துணை நலத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவள். பொறுமையின் மறுபதிப்பாகப் பூம்புகாரில் வாழ்ந்த கண்ணகிக்கு மதுரையில் இவ்வளவு ஆற்றாமை ஏன்? வெகுளி ஏன்? இங்குதான் கண்ணகியின் சால்பு ஒளி பெற்று விளங்குகிறது.

ஒட்டு மொத்தமாக வெகுளல்தான் தீது. வெகுள வேண்டிய இடங்களில் வெகுளாமல் இருப்பவர்கள் அநியாயக்காரர்கள்; கொத்தடிமைகள்; கோழைகள்; வாழ்க்கையின் பொருள் புரியாத புல்லறிவாளர்கள்.

வாழ்க்கையில், சொற்காத்தல் என்பது ஒரு சிறந்த பண்பாடு. சொல்லப்படுவன எல்லாம் சொல்லல்ல. பொதுப் படையாக இருந்தாலும் சிறப்பாக சொல் என்பது புகழையே குறிக்கும்.

பிறரால் மகிழ்ந்து சொல்லப்படுவது புகழ். அதனால்தான், திருவள்ளுவர் “சான்றோர் எனக் கேட்ட தாய்” என்றார். இதையே பெண்ணின் பெருஞ் சிறப்பிற்குத் “தகை சான்ற சொற் காத்தல்” என்பதும் ஒரு கடமை என்றும் கூறுகிறார்.

மானிட வாழ்க்கையில் காதல்-நட்பு ஆகிய இரு உறுப்புக்கள் மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் தோழமை உறுப்புக்களாகும். இந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வோர், தொடர்புடையோர் நலனைப் பாதுகாப்பர்.

கண்ணகி கோவலனுக்குக் காதற் கடமை பூண்டவள். கோவலனின் வாழ்க்கை தன்னுடைய தவறுக்கு ஏற்றதாக இல்லையானாலும் அவன் புகழைப் பாதுகாக்கும் உணர்வோடு பூம்புகாரில் பொறுமையாக இருந்தாள். பூம்புகாரில் பாதுகாத்த கணவரின் பெரும் புகழைப் பாதுகாப்பதற்கே மதுரைக்கு வந்ததையும் கண்ணகி நினைவு கூர்கிறாள்.

ஆதலால், தனது இளமையை இழந்தும் வாழ்க்கை நலன்களை இழந்தும் காப்பாற்றிய கணவனின் புகழ் மதுரையில் மாசுறுவதை அவளால் தாங்கமுடியவில்லை. கோவலனின் இழப்பில் கண்ணகிக்கு இருந்த ஆற்றாமையை விட - கோவலன் மீது சுமத்தப் பெற்ற பழியில்தான் அவளுக்கு இருந்த ஆற்றாமை-ஆத்திரம் அதிகம்.

கோவலன் கொல்லப்பட்டான் என்ற செய்தி கேட்டவுடனேயே, கண்ணகி துன்பத்தின் எல்லைக்குச் சென்று விடுகிறாள். கோவலன் கள்வன், அதனால் அவன் கொல்லப்பட்டான் என்ற செய்தி அவளை அனலாக்கி விட்டது. அவளுக்குத் தன் கணவன் கள்வன் அல்லன் என்னும் தெளிவிருக்கிறது.

அது மட்டுமா? தனது காற்சிலம்பை விலை கொடுக்காமல் அடைவதற்காக, கோவலன் மீது பழி சுமத்தி விட்டார்கள் என்று துணிகிறாள். இத்தகு தெளிவு கண்ணகிக்கு எப்படித் தோன்றியது: ஆராய்ந்து பிறந்த தெளிவல்ல, கடப்பாட்டின் வழிப்பிறந்த தெளிவு.

காதலில், நட்பில், பழகியவர்களை ஐயப்படுதல் ஆராய்தல் மூலம் நட்பு கெடும்; காதல் கெடும். ஆயினும் தன்னுடைய தெளிவான கருத்தை வலியுறுத்தாமல் கணவனின் வாயிலாகவே தான் கள்வன் அல்லன் என்று கேட்டறிய விரும்புகிறாள்; துடிக்கிறாள்.

தனது கணவன், கள்வன் என்று உலகம் பழி தூற்றும்படியாக மன்னவன் செய்த தவற்றை நினைத்து நினைத்து, அவள் வெம்புகிறாள். அது சீற்றமாக உருவெடுக்கிறது. கணவனை இழந்த நிலையிலும் கணவனைக் காணவேண்டும். திரும்ப அடையவேண்டும் என்றெல்லாம் ஆவல் கொள்ளாமல் “அவன் தீதறு நல்லுரை” கேட்க விரும்புகிறாள்.

தீதறு நல்லுரை யாது, கோவலன், கள்வன் அல்லன் என்பதுதான். இந்த நல்லுரையைக் கேட்கவே அவள் மதுரைப் பெண்டிரை நாடுகிறாள். பதில் இல்லை. மதுரைச் சான்றோரை நாடுகிறாள்; பதில் இல்லை. மனித உலக வரலாற்றிலேயே நீதிக்குச் சார்ந்து பேசி வழக்காடும் பழக்கம் இவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது.

கடைசியாகத் தன் கணவனைக் கள்வன் என்று பழிசுமத்திக் கொன்ற அரசனையே நாடுகிறாள். நீதி கேட்கிறாள். தேர்ந்து தெளியும்படி கேட்டுக்கொள்கிறாள். அரசனோ, தேர்ந்து தெளிய உடன்பட்டான் இல்லை.

தேர்ந்து தெளிந்து சொல்வதாக, உரியன செய்வதாகப் பாண்டியன் சொல்லியிருந்தாலும் கண்ணகியின் சீற்றம் தணிந்திருக்கும். ஆனால், பாண்டியன் “கள்வனைக் கோறல் கடுங்கோலன்று” என்று தம் நிலைமையையே சாதிக்கிறான். அதனால்தான், கண்ணகிக்கு ஆற்றொனாத் துயரம் தோன்றி வழக்கைத் தொடுக்கிறாள்.

அப்பொழுதும் அந்தச் சூழ்நிலையிலும் கண்ணகிக்கு ஆத்திரத்தில் பாண்டியன் மீது பழி சுமத்தும் எண்ணம் இல்லை. அறிவார்ந்த நிலையில் வழக்கை வைக்கிறாள். தன் கணவன் கள்வன் அல்லன் என்று பாண்டியன் உணரும்படி செய்கிறாள்.

தன் கணவன் கோவலன் மீது கள்வன் என்று பழி சுமத்திய பாண்டிய பேரரசன் வாய் மொழியினாலேயே கோவலன் கள்வன் அல்லன் என்ற முடிவைப் பெற்று உலகத்திற்குத் தந்து கோவலனுடைய புகழைக் காப்பாற்றினாள். இன்றும் காப்பாற்றுகிறாள்.

அன்று கண்ணகி பாண்டிய அரசோடு போராடிக் கோவலன் புகழைக் காப்பாற்றத் தவறியிருந்தாளானால் இன்று கோவலன் நினைப்பதற்குக்கூட தகுதியுடையவனாக இருந்திருக்க மாட்டான்.

வரலாற்று ஏடுகளும் காப்பியங்களும் பழிசுமத்த கோவலனையே காட்டும். கோவலன் வழி வணிகர் குலமும் சோழ நாடும் கூட பழி சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். கண்ணகி, இவ்வகையில் செய்த பணிக்கு ஈடாக உலகத்தில் வேறெதுவுமில்லை.

மதுரையை எரிக்கலாமா?

கண்ணகி, பாண்டியன் அரசவைக் களத்தில் முறையாக வழக்குரைத்து வெற்றி பெறுகிறாள். நீதியினை நிலைநாட்டுகிறாள். கோவலன் புகழைக் காப்பாற்றுகிறாள்; ஆயினும் கண்ணகியின் ஆற்றாமை நீங்கவில்லை; துயர் தணியவில்லை. கண்ணகியின் வெகுளி பொங்கியெழுந்து செயற்படுகிறது. ஆயினும் நெறிமுறை கடந்துவிடவில்லை. கண்ணகி, மதுரையை அழிப்பேன் என்று உறுதி பூணுகிறாள். மதுரையை அழிப்பானேன்?

கோவலன் கள்வனல்லன் என்பது உறுதியாகிவிட்டது. கோவலன் உயிரை முறை கேடாக எடுத்துக்கொண்ட பாண்டிய அரசன் உயிரைக் கொண்டாகிவிட்டது. கணவனை இழந்த கண்ணகி பட்ட துயரைப் பாண்டிமாதேவி அடைந்து விட்டாள்! இவ்வளவு நடந்த பிறகு ஏன் கண்ணகிக்குச் சினம் அடங்கவில்லை? மதுரையை அழிப்பதற்கு என்ன நியாயமிருக்கிறது.

மனித வாழ்வில் குறைகள், குற்றங்கள் என இருப்பதும் உண்டு. இவற்றில் குறைகள் மன்னிக்கத்தக்கன; மறக்கத் தக்கன. குறைகள் என்பவை வாழ்வியலோடு சம்பந்தப் பட்டவை. அப்பட்டமான தன்னலச் சார்புடைய ஒழுகலாறுகளால், சமூகத்துக்குப் பெரிய தீங்குகள் விளைந்து விடுவதில்லை.

கோவலன் மாதவியின்பாற் சென்றொழுகியது குறை. ஆதலால் கண்ணகி பொறுத்திருந்தாள். ஆனால் பாண்டியன் நெடுஞ்செழியன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவனைக் கொன்றது குற்றம். இத்தகைய குற்றம் தனி மனிதனிடத்தில் கூட பெரிய தீமை தரும். அது பலர் உயிரை எளிதில் கொல்லக் கூடிய அரசாணையுடைய அரசனிடத்தில் இருக்குமாயின் நாட்டு மக்களின் கதி என்னாவது?

அதனால்தான் கண்ணகிக்குப் பாண்டியனின் குற்றத்தைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ள முடியாத சினம் ஏற்பட்டது. அப்படியானால் பாண்டியன் நெடுஞ்செழியன் உயிரைத்தான் கொண்டாயிற்றே! மீண்டும் மதுரையின் மீது, ஏன் சினம்?

இளங்கோவடிகள் முடியைத் துறந்து மக்களை நாடி மக்களுள் ஒருவராகி, கண்ணகியின் காற்சிலம்பை முதலாகக் கொண்டு காப்பியம் செய்தவர். ஆதலால் காப்பியப் போக்கிலும் அரசியலில் மக்களுக்குரிய பங்கை வற்புறுத்த எண்ணுகிறார்.

நாட்டு மக்கள் நல்ல அரசை விரும்ப வேண்டும். நாட்டை ஆள்வோர் கள்ளுக் கடைகளைத் திறந்தாலென்ன? மூடினால் என்ன? கடன் வாங்கினால் என்ன? கொடுத்தால் என்ன? “கமிஷன்” வந்தால் என்ன? போனால் என்ன? என்று ஏனோதானோ என்று நினைக்கக் கூடாது.

நாட்டு மக்கள், நல்லவர்களாக இல்லாதுபோனால் அந்த நாட்டில் நல்லாட்சி அமையாது அமையமுடியாது. எனவே, ஓர் அரசின் சிறப்புக்கு அந்த நாட்டு மக்களின் நடத்தையும் காரணம் என்று கண்ணகி வாயிலாக இளங்கோவடிகள் உணர்த்துகின்றார். அதனால், பாண்டியன் செய்த தவறு திடீரென்று விளைந்ததன்று என்று கண்ணகி ஓர்கிறாள்.

ஒரு மனிதனிடத்தில் குற்றம் திடீரென்று தோன்றி விடாது. அதற்கொரு வரலாறு இருக்கும். அந்தக் குற்றத்தை வளர்த்தவர்கள் இருப்பார்கள் என்பதே உண்மை. பாண்டியன் தன் அமைச்சர்களிடத்தில் கலந்து ஆராயாமல் “கொன்று அச்சிலம்பைக் கொணர்க!...” என்றது தன்னிச்சையான வாக்கு.

தன்னிச்சையான மனப்போக்குக் கொள்ளுதல், தன்னிச்சையாகச் செயற்படுதல் சமுதாய வாழ்வில் பெரிய குற்றம். மானுட சமுதாய அமைப்பில் தன்னிச்சையாய்ச் செயற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற இயற்கை நியதியே இருக்கிறது. பிறர் சொல்வதைக் கேட்டு அறிந்து, தெளிந்து செயற்பட வேண்டும் என்பதற்காக இரண்டு செவிகள் வழங்கப் பெற்றிருக்கின்றன. ஆனால் கேட்பாரைத் தான் காணோம்.

அமைச்சர்களாக இருந்தோரும், ஊர்காவலர்களாக இருந்தோரும் அரசன் தங்களுடன் சூழ்ந்து ஆராயாமல், பொற்கொல்லன் சொற்கேட்டு அவ்வழிச் செயற்பட்டு விட்டானே என்று துணுக்குற்றாரில்லை. அங்ஙனம், துணுக்குறாததற்குக் காரணம் இந்நிகழ்வுக்கு முன்பும் மன்னன் அப்படித்தான் செய்திருப்பான் என்று நம்ப இடமிருக்கிறது.

அமைச்சர்களும் மற்றவர்களும் நமக்கு ஏன் பெரிய இடத்துப் பொல்லாப்பு என்று வாளா இருந்து வயிறு வளர்த்திருப்பர் போலும். ஆதலால் ஒரு நாட்டுச் சமுதாய அமைப்பு கெட்டுப் போனால் ஒழிய அரசு தவறு செய்ய முடியாது.

தவறு செய்வதற்கு நேரிடையாக நெடுஞ்செழியன் காரணமாக இருந்தாலும் அவனை இவ்வகைக் குற்ற நெறியில் செலுத்திய அந்த நகரத்து மக்களும் பொறுப்பாவர். ஆதலால்தான் கண்ணகி குற்றமுடைய ஓர் அரசு தோன்றி வளரக் காரணமாக இருந்த மதுரையை அழிப்பேன் என்று உறுதி பூணுகிறாள்.

ஆயினும், கண்மூடித்தனமாகவும் அவளுடைய சினம் செல்லவில்லை. வாழ்ந்தாலும் செயலற்றவர்களாக பொதுமைக்குப் பொறுப்பேற்காது ஒதுங்கி வாழ்பவர்களாகச் சிலர் இருக்கத்தான் செய்வர். அவர்களையெல்லாம் தப்பித்துக் கொள்ள விடுகிறாள்; தீத்திறத்தார் மட்டுமே அழியுமாறு அழிக்கின்றாள்.

தீத்திறத்தாரை அழிப்பது பாவமா? கழனியில் களை பிடுங்குவது தவறா? ஆதலால் கண்ணகி மதுரைக்கு எரியூட்டியது அரசியல் நீதி! சமுதாய நீதி! அறத்தின் ஆட்சி! கொற்றம் செய்த கொடுமையிலிருந்து குடி மக்கள், நல்லாட்சியை அமைத்த வரலாறு!

உரைசால் பத்தினி

இளங்கோவடிகள் தமது காப்பியத்தை மூன்று குறிக்கோள்களோடு தொடங்குகின்றார். அவற்றுள் ஒன்று “உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தல்” என்பதாகும். ஒருவரைப் பண்பறிந்து போற்றும் பண்பு எல்லாருக்கும் வந்து விடுவதில்லை.

சமுதாயத்தில் இழி மனப்பான்மையுடையவர்கள் நல்லதன் தன்மை அறிய மாட்டார்கள். அதனால் நன்மையைப் பாராட்டும் மனப்பாங்கு அவர்களுக்கு இருக்காது. ஏன்? அவர்களுடைய அறியாமையின் காரணமாகத் தீமையை நன்மையென்று போற்றினாலும் போற்றுவர். போற்றும் பண்பு என்பது உயர் பண்பு. நன்மையை - நன்மையின் திறத்தை அறிந்து போற்றுவதென்பது அறிஞர்க்கு அழகு.

ஒரு பெண் பத்தினிப் பெண்ணாக வாழ்க்கையில் உயர்தல் எளிதன்று. அஃதொரு கடுமையான சோதனை. நல்ல கணவன் வாய்ப்பின் அம்முயற்சி வெற்றி பெறலாம். நற்றிறமில்லாதவனாக வாய்த்து விடின் ஒரு பெண்ணின் கற்புக் கடமைகள் கூடுகின்றன. கடமைகளும் பொறுப்புக்களும் கூடும்பொழுது சோதனைகளும் மிகத்தான் செய்யும்.

கற்பு என்பது ஒழுக்கம் மட்டுமன்று. அது கடமைச் சார்புடையதுமாகும். ஆனால் இந்த நூற்றாண்டு அறிவியலறிஞர்கள் “ஒருவர் தம் பொறுப்புக்களை, கடமைகளை முறையாகச் செய்தல் ஒழுக்கத்தின் அடையாளம்” என்று வரையறுத்துக் கூறுகின்றனர்.

ஆனால் இன்னமும் நம்முடைய நாட்டில் ஒழுக்கம் என்ற சொல்லைக் கடமையோடு பொருத்திப் பார்க்கிற மனப் பாங்கு வளரவில்லை.

வள்ளுவம் வகுத்துக் காட்டிய பெண்மையின் பெருஞ் சிறப்பு.

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

என்பதாகும்.

இப்பண்புகள் அப்படியே கண்ணகியிடம் பொருந்தி அமைந்திருந்தன. ஆயினும் தற்கொண்டாற் பேணுதல் என்ற துறையில் கண்ணகியால் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை. அஃது அவள் குறையன்று. கண்ணகி காலத்தில் சமுதாய அமைப்பு சீர் கெட்டிருந்தது.

பரத்தமை ஒழுக்கம் தலைமகனுக்குரிய ஒழுகலாறு போல ஏற்றுக் கொள்ளப்பெற்ற தீயூழ்க் காலம். கண்ணகியால் என்ன செய்ய இயலும்? அந்தச் சூழ்நிலையையும் அவள் எதிர்த்துப் போராடுவதென்றால் கோவலனின் விருப்ப உணர்வுகள் கெட்டுப் போகுமோ என்ற உணர்வில் தன்னல மறுப்பிலும், கோவலனின் நலம் பேணுதலிலும் இருந்த முனைப்பு அவ்வகையில் அவளைப் போராடத் தூண்டவில்லை.

அந்த நல்லொழுக்கம் தற்சார்புடையதாக அமைந்து விட்ட குறையே அது. ஆதலால், கண்ணகியை உயர்ந்தோர் பாராட்டுகின்றனர். இதனைக் காப்பியம் முழுதும் காணலாம்.

கவுந்தியடிகள் ஒரு துறவி. அதிலும் சமணத்துறவி. சமணத் துறவியருக்குப் பெண்மை இசைவிலாத ஒன்று. ஆயினும் கவுந்தியடிகள் கண்ணகியை மனங்குளிரப் பாராட்டுகிறார். ஏன்? தெய்வம் என்றே பாராட்டுகிறார்.

அருக தேவனையன்றி மற்றவரை வாழ்த்தாத கவுந்தியடிகளின் வாயினால் கண்ணகி தெய்வம் என்று போற்றப் பெறுதல் எளிதில் கிடைக்கத்தக்கதா? அல்லது கவுந்தியடிகளுக்குத்தான் இங்ஙனம் போற்றிப் பாராட்ட எளிதில் பாத்திரங்கள் கிடைக்குமா?

“கற்புக் கடம்பூண்டஇத் தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்”

என்று பாராட்டுகிறார் கவுந்தியடிகள்.

அடுத்து, மதுரை நகரத்தெய்வம் “பெருந்தகைப் பெண்ணோ!” என்று அழைக்கிறது. ‘பெருந்தகை’ என்ற சொல் வள்ளுவத்தில் மாட்சிமை பெற்றது.

“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்”

என்பது திருக்குறள்.

“பெருந்தகை” என்பது, தான் துன்பத்தை ஏற்றுக் கொண்டு மற்றவர்க்கு வாழ்வளித்தல் என்ற பண்பாடு ஆகும். கண்ணகி பூம்புகாரிலும் சரி, மதுரையிலும் சரி, துன்பத்தைத் தழுவியவள்; கோவலனை வாழ்வித்தவள். சிறந்த பெண் என்பதைப் ‘பெண்ணின் பெருந்தக்க’ என்று திருக்குறள் பாராட்டும். மதுரை நகரத் தெய்வமும் கண்ணகியைப் ‘பெருந்தகைப் பெண்’ என்று பாராட்டுகிறது.

அடுத்து, வஞ்சிக்காண்டத்தில் - குன்றக்குரவையில் கண்ணகி தெய்வமெனப் போற்றப் பெறுகிறாள். மலை வாழ் குறவர், தங்கள் குலத்தில் கண்ணகி போன்றதொரு தெய்வம் இல்லையென்று போற்றுகின்றனர்.

“இவள் போலும் நங்குலத்தோர்
இருந்தெய்வம் இல்லை”

என்பது காண்க.

இளங்கோவடிகள், மண்ணக மாதர்க்கு அணியென விளங்கிய கண்ணகி, விண்ணக மாதர்க்கு விருந்தாக அமையும் அருட் காட்சியை நெஞ்சு குளிர எடுத்தோதுகின்றார்.

“தெய்வந்த தொழாஅள் கொழுநற் றொழுவளைத்
தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்-தெய்வமாய்
மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி
விண்ணகமா தர்க்கு விருந்து”

என்பது, இளங்கோவடிகள் வாக்கு.

கண்ணகி தவத்தால், நோன்பால் தெய்வமாயினாள். அவள் மட்டுமா? அவளை மனையாட்டியாகப் பெற்ற கோவலனும் விண்ணிழி விமானத்தில் விண்ணகம் செல்கிறான்.

கண்ணகி, முடியுடை அரசர்களால் தொழுதேத்தும் பெருமை பெறுகிறாள். சேரன் செங்குட்டுவன் இமயத்துக் கல்லில் கண்ணகிக்குச் சிலையெடுத்து கங்கை நீராட்டி, வஞ்சித் தலை நகரில் கோயிலில் எழுந்தருளச் செய்கிறான்.

முடியுடை அரசர்கள் பலர் சூழ்ந்து போற்றுகின்றனர்; கற்புக் கடம் பூண்ட கண்ணகி தேவியிடம் நாடாளும் செங்கோன்மை தவறாதிருக்க வரம் வேண்டுகின்றனர். கண்ணகி பலராலும் போற்றப் பெறும் பத்தினித் தெய்வமாகிய வரலாறு. வாழ்க்கையில் பிறந்தது; வாழ்க்கைக்குத் துணை செய்வது.

மாதவி

சிலம்பில் கண்ணகிக்கு அடுத்த நிலையில் சிறப்பாகப் பேசப் பெறும் பாத்திரம் மாதவி. மாதவி விவாதத்திற்குரிய பாத்திரமாக விளங்கினாலும் அவள், விளங்கு புகழ் படைத்த பாத்திரமேயாம்.

மாதவி, அழகுத் திருவினள்; ஆடற் கலையில் சிறந்தவள்; பாடற்கலையில் தேர்ந்தவள். மாதவி முத்திறத்திலும் சிறந்தவள் என்று கூறுகிறார் இளங்கோவடிகள். முத்திறமாவது மேற்சொன்ன ஆடலும், பாடலும், அழகும் என்பனவாகும்.

வானவர் மகளிராகிய ஊர்வசி, ரம்பை ஆகியோர் அழகிலும் ஆடல் திறத்திலும் உயர்ந்தவர்கள் என்று கூறுதல் புராண மரபு. மாதவி, முன்னைப் பிறப்பில் ஊர்வசியாக வாழ்ந்தவள், என்ற நம்பிக்கையையும் ஆசிரியர் இளங்கோவடிகள் நமக்குத் தருகின்றார்.

வானவர் மகளாக விளங்கிய ஊர்வசி, மாதவியாகப் பிறந்தாள், பேரழகியாக விளங்கினாள் என்பதில் வரலாற்றுச் சிறப்பு என்ன இருக்கிறது? மண்ணக மகளிர், வான மகளிரை வென்று விளங்கியவர் என்று கூறுதல்தான் மண்ணக மகளிர்க்குச் சிறப்பாகும்.

சமணசமயச் சார்பில் சிந்திப்பவர்கள் ஊழ்ச்சிறப்பை உணர்த்துவதற்காக எந்த ஒரு நிகழ்ச்சியையும் முற்பிறப்போடு கொண்டு இணைப்பது ஒரு மரபு. நம்மைப் பொருத்த வரையில் மாதவி மண்ணக மகள்தான்.

ஆனாலும் வானகமகளிரை வென்று விளங்கும் அழகு பெற்றுப் பொலிந்தாள். ஆடற்கலையில் சிறந்து விளங்கினாள். மாதவிக்குப் பிறப்பில் ஒரு குறையுமில்லை “பெருந்தோள் மடந்தை!” யாக விளங்கினாள்.

மாதவி, யாழ் மீட்டும் கலை கற்றுத் தேறினாள்; பாடற்கலை பயின்றாள்; ஏழாண்டுகள் ஆடலும் பாடலும் இடைவிடாது பயின்று தேர்ச்சி பெற்றாள். மாதவி அரங்கேற்றத்துக் குரியவளாகி விட்டாள்.

சோழப் பேரரசின் அரங்கில் மாதவி தனது ஆடற் கலையை அரங்கேற்றம் செய்தாள். சோழப் பேரரசன் மாதவியின் ஆடற்கலைத் திறமும் நுட்பமும் கண்டு மகிழ்வெய்தி ‘தலைக்கோல்’ தந்து சிறப்பித்தான். மாதவி சோழ நாட்டின் ஆடற்கலையரசியானாள். கலை உலகத் தெய்வமானாள்.

மாதவி தலைக்கோலியானாள். தலைக்கோல் சிறப்புப் பெற்ற மாதவி ஆயிரத்தெண் கழங்சு பசும்பொன் ஒரு நாள் பரிசாகப் பெற்றாள். மாதவி, பிறப்பிற் குன்றாப் பெருந் திருவினளாயினும் சார்பு யாரை விட்டது?

மாதவியை - கலைக்குரிய தெய்வத்தை நாட்டு மரபிற்கேற்ப ஒருவனுக்கு உரிமையாக்க அவள் சுற்றம் முயன்றது. ஆயிரத்தெண் கழஞ்சு பொன் அளித்து மாலையை வாங்கி மாதவியை அடையலாம் என்று கூறப்பட்டாள்.

கோவலன் மாலையை வாங்கினான்; மாதவியின் மனையில் புகுந்தான்; மாதவியை அடைந்து இன்புற்று மயங்கி அமைந்தான்; மாதவியைப் பிரியா இயல்பினனாகப் பெருவிருப்புடையவனாகக் கோவலன் விளங்கினான்; மாதவியின்பால் உள்ள ஈடுபாட்டினால் கண்ணகியை மறந்தான்; மனையறத்தை மறந்தான்; மாதவியின் வீட்டிலேயே வாழ்பவனாயினான்.

மாதவி கோவலனின் மனம் மகிழ்ந்து அமைவதற்கு ஏற்றவாறு கோவலனைக் காதலனாகக் கொண்டு அவனை வாழ்வித்தாள். காதல் வாழ்க்கை சிறப்புற அமைதற்கேற்றவாறு கோவலனுக்குக் கலவியும் புலவியும் ஒருங்கேயளித்து இன்புறுத்தினாள். மாதவி இத்துறையில் கோவலனுக்கு விருந்தாக அமைந்தாள்.

கோவலனைப் பேணி வளர்த்த மாதவி

தலைமகனுக்கு வாய்க்கும் வாழ்க்கைத் துணை நலம் சிறப்புற அமையின் அத்தலைமகன் குறைகளினின்றும் விடுதலை பெறுவான்.

ஒரு கல்லை அருச்சகர் உபாசித்து அருச்சிப்பதன் மூலம் கடவுளாக்குவதைப் போல, ஒரு பெண் தன்னுடைய கணவன் எவ்வளவு குற்றங்குறைகளுடையவனாக இருந்தாலும், அவள் மட்டும் சிறந்த அன்பும் செயல்திறனும் உடையவளாக இருப்பின், தன் கணவனைச் சிறப்புடைய தலைமகனாக விளக்கமுறச் செய்ய முடியும்.

காதல் வாழ்க்கையென்பது களிப்புக்குரியது மட்டுமன்று; ஆக்கத்தின் வழிப்பட்டது; கடமைகளின் வழிப்பட்டது.

மாதவி, கோவலனுக்கு வாய்த்த நல் துணைவி. கோவலன் மாதவியைச் சாரும்பொழுது குற்றங்கள் உடையவனாக இருந்தான். தென்றல் பல மலர்களை நுகர்ந்து வருவதைப் போல் கோவலன் சுற்றித் திரிந்தான் என்று இளங்கோவடிகள் கூறுவார்.

மாதவியை அடைதற்குரிய மாலையைக் கோவலன் வாங்கிய இடமே நகர நம்பியர் திரிதரும் தெருவாகும். யாதொரு குறிக்கோளுமின்றிக் காரணமின்றி நகரைச் சுற்றித் திரிகின்றவர்கள் திரியும் தெரு அது. அத்தகு நகர நம்பியருள் கோவலனும் இருந்தான். அது மட்டுமா?

உணவுக்கு உழைக்காமல் ஊரார் உழைப்பில் உண்டு கொழுத்துத் திரியும் இத்தகு நகர நம்பியர்கள் கூடிக் கூடிப் பயனற்ற சொற்களைப் பேசிப் பொழுது போக்குவர்; பேச்சினூடே, தாங்களாகவே நெடிய சிரிப்புச்சிரித்துக் கொள்வர்; பரத்தமை கொண்டொழுகுவர். இதனை இளங்கோவடிகள்,

“வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ”

(கொலைக்களக்காதை 63-66)

என்று கோவலன் வாயிலாகவே கூற வைக்கிறார்.

ஓர் இளைஞன், நல்ல தலைமகனாக வளர்ந்து முன்னேற வேண்டுமாயின், உழைத்து உண்பவனாக இருக்க வேண்டும். உழைப்பில் ஆர்வம் காட்டி மகிழும் மனப்போக்கு வேண்டும். பயனற்ற சொற்களைப் பேசக்கூடாது. குறை, கோள், பொய் முதலிய தீச் சொற்களைப் போலவே பயனற்ற சொற்களும் தீமையானவை.

சிரித்தல் என்பது உதட்டில் வழியக்கூடிய ஒன்று. நல்லோர் சிரிப்பில் ஒலி இருக்கும். ஆனால் அந்தச் சிரிப்பொலி தோன்றி உடன் மறையும். ஓரகத்திருந்து ஒழுகி வாழ்வர்.

பிறப்பால் இத்தகைய தலைமகனாகக் கோவலன் வளர்தற்குரிய வாய்ப்பிருந்தும் நல்லூழின்மையால் அவன் நகரம் திரிதரு நம்பியர் குழாத்துள் சிக்கிக் கொண்டான். ஆனால் அவனோ, முன்னோர்களோ புரிந்த நல்வினைப் பயன்களின் காரணம் போலும் மாதவியைச் சென்றடை கின்றான்.

மாதவியைச் சென்று சேர்ந்த கோவலன் பரத்தமை ஒழுக்கத்திலிருந்து முற்றாக விடுதலைபெற மாதவியின் காதலொழுக்கம் துணை செய்திருக்கிறது.

கோவலன் பரத்தமை ஒழுக்கத்திலிருந்து விடுபட்டு விட்டான் என்று இளங்கோவடிகள் சொன்னாரில்லை. காரணம், அஃது அவனுடைய தற்சார்பான முயற்சியன்று. ஆனால், கோவலனைப் பிரிந்து அவருக்கு ஆளாகாத மாதவி என்று இளங்கோவடிகள் மாதவியைச் சிறப்பித்துக் கூறுவார்.

“காதற் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா
மாதக் கொடுங்குழை மாதவி..........

(இந்திரவிழவூரெடுத்த காதை 189-190)

என்று கூறுவதன் மூலம் மாதவியின் கற்பின் திறமும்; கோவலனை மாதவி நன்னெறியில் நிறுத்திய திறமும் பெறப்படுகிறது.

அது மட்டுமன்று, கோவலன் பெருவணிகக் குடும்பத்தில் தோன்றியவன். அவன் தன்னைப் பிரிந்து மீண்டும் பரத்தமை வழியில் போய்விடக்கூடாது என்று கோவலனைக் காப்பாற்றும் உணர்வில் மாதவி சிறந்து விளங்கினாள். மாதவிக்குத் தன்னை மிக அழகுற ஒப்பனை செய்து கொள்ளுவதில் இயல்பாக விருப்பமில்லையானாலும். கோவலன் மகிழ வேண்டும் என்பதற்காகவே அவ்ன் ஒப்பனை செய்துகொண்டாள்.

கோவலன் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுடைய செல்வத்திற்கேற்ப, அவன் வள்ளமையுடையவ னாகவும் புகழுடையவனாகவும் விளங்காது போனால் மாதவியின் கூட்டினால்தான் இந்தத் தவறுகள் வந்தன. கோவலன் வள்ளன்மை இழந்தான், புகழை இழந்தான் என்று ஊரவர் பேசாதிருக்க, கோவலன் விரும்பியவாறெல்லாம் அறம் செய்து ஒழுக மாதவி துணை நின்றாள்.

மாதவியிடத்தில் கோவலன் வாழ்ந்த காலத்தில் வீரச் செயல்களைச் செய்திருக்கின்றான்; அறச் செயல்களைச் செய்திருக்கின்றான்.

கோவலனும் மாதவியும் பூம்புகாரில் தங்கள் அருமை மகள் மணிமேகலைக்குப் பெயர் சூட்டு விழா எடுத்தனர். விழாவில் கோவலனிடம் தானம் பெறுவதற்காக ஒரு பார்ப்பனன் வந்தான். சோழப் பேரரசின் பட்டத்து யானை மதம் பிடித்துப் பாகனின் கட்டுக்காவலை மீறி ஒடி வந்தது.

இடையில் சிக்கிய முதிய பார்ப்பனனை, யானை தன் தும்பிக்கையில் எடுத்துவிட்டது. கோவலன் பார்த்து விட்டான். விரைந்து யானையின் தும்பிக்கையில் பாய்ந்து அந்த முதிய பார்ப்பனனை விடுதலை செய்தான். யானையின் கொட்டத்தை அடக்கி அதன்மீது ஏறி அமர்ந்து செலுத்தினான்.

ஒன்றைக் காப்பாற்றும் பொழுது பிறிதொன்றுக்கு இழப்பு வந்தால் அது வீரமன்று. அறமுமன்று. இங்கு முதிய பார்ப்பனனும் உயிர் பிழைத்தான். யானைக்கும் யாதொரு கேடுமில்லை. கோவலனும் யாதொரு இடையூறுமின்றி யானையை வெற்றி வீரனாகச் செலுத்தினான்.

இதனை இளங்கோவடிகள், “கடக்களிறு அடக்கிய கருணை மறவ!” என்று மாடலன் வாயிலாக வாழ்த்துகின்றார்.

கோவலன் சான்றோனாக விளங்கி வாழ்ந்த காலமும் மாதவியிடத்தில் வாழ்ந்த காலமேயாம். இளங்கோவடிகள் “கடன் அறிமாந்தர்” என்று ஒரு புதியமானிட சாதியை அறிமுகப்படுத்துகின்றார். கடனறி மாந்தர் யார்? பிறர்க்குப் பணி செய்து கிடப்பதே தன் கடன் என்று உணர்ந்தவர்கள் கடனறிமாந்தராவர்.

இன்றைக்கு, கடமையென்பதற்கு இந்தப் பொருள் கொள்ளப்படுவதில்லை. அது மட்டுமல்ல, பிறருடைய தீவினையைத் தீர்ப்பதனால்தான் ஒருவர்க்குப் புண்ணியம் உருவாகிறது, கிடைக்கிறது என்றும் இளங்கோவடிகள் கூறுகின்றார்.

இன்றுள்ள மனப்போக்கு, “தீவினையுடையோரின் தீவினையை மாற்றுதல் கூடாது; அவர் துன்புறுதல் வேண்டும்; அதுவே இயற்கையின் நியதி” என்பதாகும். இது, அறநெறியன்று.

கோவலன், கண்ணகியை பிரிந்து கண்ணகிக்குத் துயர் கொடுத்தாலும் மற்றவர்களின் துன்பத்தை உணர்ந்திருந்தான். கீரிப்பிள்ளையைக் கொன்ற பார்ப்பனியின் பாபத்தைப் பெரும் பொருள் கொடுத்துக் கழிக்கிறான். அது மட்டுமா? பார்ப்பனனைப் பிரிந்து வருந்திய பார்ப்பனிக்கு, அவனையும் அழைத்து வந்து சேர்த்து வைத்துப் பெரும் பொருள் வழங்கி வாழச் செய்கிறான்.

இதனை இளங்கோவடிகள் “நல்வழிப்படுத்த செல்லாச் செல்வ” என்று மாடலன் வழியாக வாழ்த்துகின்றார்.

சமூகத்தில் எந்தக் காலத்திலும் தூர்த்தர்கள் வாழ்வர் போலும். இவர்களுக்குக் கால எல்லை இல்லையோ? திருத்தமுற்ற முழுச்சமுதாயம் காண்பது அரிதோ?

ஒரு பத்தினிப் பெண்மீது, அவளது கணவனுக்கு ஐயமுண்டாகும் வண்ணம் சாட்சியமளித்தல் எவ்வளவு தீமை? அதுவும் அறியாத ஒன்றினை அறிந்தது போல் சாட்சியம் கூறல் பொல்லாத தீமை. இத்தகு தீமையைச் செய்தோரை உயிருடன் நிலத்தில் அறைந்து உண்ணும் பூதம் ஒன்று பூம்புகாரில் இருந்ததாம்.

இங்ஙனம் பொய்க்கரி சொன்னான் ஒருவனைப் பூதம் நிலத்திலறைந்து உண்ணப் பாசக் கயிற்றைப் போட்டிருந்தது. அத்தூர்த்தனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அவனை ஈன்ற தாய் கலங்குகிறாள்.

இச் சூழ்நிலையில் கோவலன் பூதத்தினை அணுகி, தூர்த்தனை விட்டுவிடுமாறும் அத்தூர்த்தன் உயிர்க்குப் பதில் தன்னுயிர் கொள்ளுமாறும் வேண்டுகிறான். பூதமோ, அதற்கு உடன்படவில்லை.

பாவியின் உயிரை விட்டுவிட்டு நல்லுயிர் கொள்ளும் தீவினையைத்தாம் செய்யத் தயாராக இல்லை என்று பூதம் மறுக்கிறது. கோவலன் வேறு வழியின்றித் தூர்த்தனின் சுற்றத்தார்க்குப் பெரும் பொருள் வழங்கி துன்பத்தை மறந்து வாழச் செய்கின்றான்.

இதனை இளங்கோவடிகள் “பசிப்பிணியறுத்துப் பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்” என்று மாடலன் மூலம் வாழ்த்துகின்றார்.

ஆதலால், மாதவியால் கோவலன் வாழ்க்கை அழியவில்லை; வளர்ந்தது. ஆனால், கண்ணகியால் கோவலன் செல்லாமைக்குக் காரணம் மாதவியின் செப்பம் சான்ற மனையற வாழ்க்கையின் பண்பேயாகும்.

எந்த வழியிலும் கோவலனைப் பிரிந்தால் தன்னைப் பரத்தமையாக்கத் தன் சுற்றத்தார் முயல்வர் என்று எண்ணிய மாதவி, கோவலன் எந்தவொரு குறையாலும் தன்னைப் பிரியாமல் பேணிப் பாதுகாத்து வந்தாள். இது அவளுடைய வாழ்க்கைத்திறம்.

பெரும்பொருள் குறைந்ததற்குக் காரணம், மாதவிபால் சென்று தங்கிய கோவலன் பொருள் ஈட்டத்தைக் கவனிக்கவில்லை; வணிகத்தைக் கவனிக்கவில்லை. பொருட் செல்வம் நாள்தோறும் பேணி வளர்த்துத் தொகுத்தால்தான் உளதாகும். மாதவிபால் வாழ்ந்த கோவலன் இந்தப் பொருள் செயலை மறந்தான்.

உரியவர் கண்காணிக்காத செல்வம் அழிவது இயற்கை அதுவும் வணிகக் குடும்பத்தின் செல்வம் எளிதில் குறையும். கோவலன் குடும்பச் செல்வம் நிலப்பிரபுத்துவ முறையில் அமைந்த செல்வமல்ல; வணிகச் செல்வம். அஃது ஈட்ட ஈட்டத்தான் வருமே தவிரத் தம்மியல்பாக வருவதல்ல.

எப்படிப் பொருள் குறைந்தது? பொருள் ஈட்டும் பணியில் கோவலன் ஈடுபடவில்லை. ஆயினும் வளமான வாழ்க்கை வாழ்கிறாள்; மற்றவர்களுக்கும் வழங்குகிறான்.

கோவலன் மனநிறைவு கருதி மாதவியும் இதில் தலையிடவில்லை. இந்த வகையில்தான் கோவலனின் பொருள் அழிந்திருக்க வேண்டும் என்று உய்த்துணர வேண்டியிருக்கிறது.

இங்ஙனம் விழிப்பாகவும் சிறப்பாகவும் வாழ்ந்த மாதவிக்கும் அடிச்சறுக்கல் ஏற்பட்டு விடுகிறது.

பூம்புகாரில் இந்திரப் பெருவிழா. அனைவரும் கூடிக் கடலாடிக் களித்து மகிழும் விழா. கோவலனும் மாதவியும் கடலாடச் சென்று ஆடிக் களித்து மகிழ்ந்து அமர்ந்திருக்கும் பொழுது, மாதவி, கோவலன் கையில் யாழினைக் கொடுத்து மீட்டிப்பாடச் சொல்கிறாள். கோவலனும் மாதவி மனம் மகிழ யாழினை இசைத்துப் பாடுகிறான். கோவலன் பாடிய பாடலில் யாதும் உள் நோக்கம் இல்லை. ஆயினும்; கோவலன் பாடிய,

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோ லதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்(று)
அறிந்தேன் வாழி காவேரி!

சேரல் மட அன்னம்! சேரல் நடை ஒவ்வாய்
சேரல் மட அன்னம்! சேரல் நடை ஒவ்வாய்!
ஊர் திரைநீர் வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மட அன்னம்! சேரல் நடை ஒவ்வாய்!

முதலிய பாடல்கள் மாதவியிடம் ஊடல் தோன்றுவதற்குக் காரணமாயின. மாதவி, கோவலன் அயற்பெண் ஒருத்தியிடம் கொண்ட காதற் குறிப்பில் பாடுகிறான் என்ற எண்ணத்தில் உள்ளம் ஊடினாள்.

மாதவி தன் ஊடலை முகக்குறிப்பில், ஒதுங்கி நிற்றல் முதலிய வழிகளில் புலப்படுத்தியிருந்தால் கோவலன் மாதவியின் ஊடற்குறிப்பை உணர்ந்திருப்பான். மாதவியின் ஊடலையும் மாற்ற முயற்சி செய்திருப்பான்.

ஆனால், மாதவி தன் ஊடலை வெளிப்படையாக உணர்த்தாது கோவலனைப் போலவே குறிப்புப் பொருள் வைத்துப் பாடினாள்.

“மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
மணிப்பூ ஆடை யதுபோர்த்துக்
கருங்க யற்கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி
கருங்க யற்கண் விழித்தொல்கி
நடந்த வெல்லாம் நின்கணவன்

திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி!

என்று பாடினாள். இப்பாடலில் மாதவி, காவிரியின் கற்புக்குச் சோழனின் செங்கோலே காரணம் என்று பாடுகிறாள். இதில் யாதொரு தவறுமில்லை. இங்ஙனம் கூறுவதன் மூலம் மனைவியின் கற்புக்குக் கணவன் காவலனாக அமைய வேண்டும் என்பது பெறப்படுகிறது. இஃதொரு சிறந்த கருத்து. இந்த அளவோடு நின்றிருந்தால் மாதவியிடம் தவறு காண முடியாது.

ஆனால் உணர்ச்சி வேகம் எல்லை கடந்து போகிறது. கோவலன் நங்கை ஒருத்தியின் காதலில் சிக்கித் தவித்தேன் என்று பாடியதைப் போலவே மாதவியும் தான் ஒரு நெய்தல் தலைவனின் காதல் வழிப்பட்டதாகப் பாடுகிறாள்.

“அடையல் குருகே அடையல் எங்கானல்
அடையல் குருகே அடையல் எங்கானல்
உடைதிரைநீர் சேர்ப்பதற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல் எங்கானல்”

என்று பாடுகிறாள்.

மாதவி இந்த உத்தியைக் கையாண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கோவலன் போக்கில், தான் கண்ட குற்றத்தைக் கடிந்து சொல்லியிருந்தாலும் ஏற்றிருப்பான்; மனம் மாறுபடான். கோவலனின் நடைமுறையில் மாதவிக்கு இருந்த ஐயமும் அச்சமும் நீங்கினபாடில்லை. அதனால் கடிந்து கூறவும் தயக்கம்.

ஆனால் தனது உணர்வை வெளிப்படுத்த தேர்ந்தெடுத்த செயல்முறை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாததாகி விடுகிறது. தலைவன் தலைவியிடையே ஒத்த உரிமைகள் உண்டானாலும் தலைமகன் சோரம்போதல் போல தலை மகள் சோரம்போக எந்த மரபும் ஒத்துக் கொள்வதே இல்லை. குறிப்பாகத் தமிழ் நாகரிகம் ஏற்றுக் கொள்வதேயில்லை.

இந்தச் சூழ்நிலையில் மாதவியின் போக்கு கோவலனுக்கு அதிர்ச்சி தந்தது. அதுவும் கோவலன் தன் செல்வத்தை இழந்த சூழ்நிலையது. செல்வம் இழந்த நிலையில் ஏற்கெனவே கோவலனுக்கு ஒரு தற்கொலை மனப்பான்மை தோன்றிவிட்டது.

தன்னிடம் செல்வம் இல்லையென்ற காரணத்தால் தான் மாதவி தன்னை மறந்து வேறொருவனை நாடுகிறாள் என்ற முடிவுக்குக் கோவலன் வந்துவிட்டான். இது மாதவி எண்ணிப் பார்க்காத ஒன்று! உணர்ச்சி வேகத்தில் நடந்துவிட்ட ஒன்று.

பிரிவு தோன்றிவிடுகிறது. கோவலன் ஆத்திரத்துடன் பிரிந்து விடுகிறான். ஆனால் கோவலன் நினைந்து பிரிவதற்குரிய அளவுக்கு மாதவி தவறு செய்பவள் அல்லள். அவள் வேறொருவனை நாடுவதாக இருந்தால் வசந்தமாலை போன்றவர்கள் குலவொழுக்கமாகிய பரத்தமையை நாடும்படித் தூண்டிய காலத்திலேயே செய்திருக்கலாம்.

மாதவி கற்புடைய பெண்ணாகக் கோவலனிடத்தில் தங்கி வாழவேண்டும். அவ்வழி பரத்தமைக் குலமரபை மாற்ற வேண்டும் என்ற திண்ணிய உறுதி கொண்டிருந்தாள்.

அதனால்தான் கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்த பொழுது ஊழினைக் காரணமாகக் காட்டவே இளங்கோவடிகள், மாதவியைவிட்டு கோவலன் பிரிகிற பொழுது “ஊழ்வினை வந்து உருத்ததாகலின்” என்று கூறுகிறார்.

அதனால், குற்றமிலராக இருந்தாலும் போதாது. குற்றங்கள் செய்யாதிருந்தால் மட்டும் போதாது. உணர்ச்சி வேகத்துக்கு ஆட்பட்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆதலால் கோவலன் மாதவியைப் பிரிந்ததற்கு மாதவி முற்றாகக் காரணமல்லள். ஆனாலும் சூழ்நிலை அவளை ஒரு காரணமாக்குகிறது.

இந்தச் சிறு களத்திலிருந்து மாதவி விரைந்து மீள முயற்சி செய்கிறாள். அம் முயற்சிகளைத் தொடர்வதை பார்ப்போம்.


மாதவியின் முயற்சி

கோவலனது வாழ்க்கையின் வலிமை, வலிமையின்மை, நல்லுணர்வுக்குறை ஆகியன மாதவி அறிந்திருந்ததே! ஆயினும் கலை, கவிதைப் போட்டிகளின் சூழ்நிலைகளில் மாதவி சோர்ந்துவிட்டாள். சோர்வின் விளைவாக கோவலன் பாடிய உத்தியைப் போலவே மாதவியும் பாடத் தொடங்கினாள்.

ஆனால், விளைவுகள் மோசமாகப் போயின. மாதவி இந்த விளைவுகளை எதிர்பார்க்கவில்லை. கோவலன் பிரிவு, அதிலும் வேனிற் காலத்தில் அவனது பிரிவு மாதவியை வருத்தியிருக்கிறது. கோவலனின் பிரிவுத் துன்பத்தால் மாதவி உயிரிழக்கும் சூழ்நிலை இல்லாது போவதற்குக் காரணம்

“மாலை வாரா ராயினும்
காலை காண்குவம் என”

மாதவிக்கு ஒரு நம்பிக்கையிருந்ததேயாம். அந்த நம்பிக்கையே அவளை உயிர் வாழச் செய்தது.

நம்பிக்கை மட்டும் இருந்து பயன் என்ன? நம்பிக்கையை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சி வேண்டாமா? இடை நிகழ்வுகளால் நம்பிக்கை தளர்ந்து போகாமல் பாதுகாக்க வேண்டாமா? இவ்விரண்டு முயற்சிகளிலும் மாதவி ஈடுபடுகிறாள்.

கோவலனை, அழகாலும், மணத்தாலும், உணர்வாலும் ஈர்த்து வயப்படுத்தும் கடிதம் எழுதுகிறாள். கடிதத்தின் தரம் நோக்கி இளங்கோவடிகள் அதனைத் “திருமுகம்” என்று சிறப்பிக்கிறார்.

திருமுகத்திற்குரிய செய்திகளை மாதவி, எளிதில் எழுதிவிடவில்லை. என்ன எழுதுவது என்பதைப் பல தடவை தனக்குத்தானே பேசித் தெளிந்த உணர்வில் எழுதினாள். அந்தத் திருமுகம் எத்தகைய குற்றமும் குறையும் இல்லாதிருந்ததால் “மழலை” என்று இளங்கோவடிகள் சிறப்பிக்கின்றார்.

மழலைச்சொல் என்பது உள் நோக்கமில்லாதது; தூய்மையானது; இளங்கோவடிகளின் “மழலையின் விரித்துரை எழுதி” என்ற வரி மாதவியின் துய்மையைப் புலப்படுத்துகிறது.

திருமுகத்தில் உலக வாழ்க்கையின் இயற்கையையும் நோக்கத்தையும் எடுத்துக் கூறுகிறாள். உயிர்கள் நிலையானவை; உலகில் பிறந்து துய்ப்பன துய்த்து மகிழ்ந்து நிறைவெய்துதற்குரியன. இதில் காதல் வாழ்க்கை சிறப்புடையது.

உயிர்களுக்குக் காதலுணர்வு தோன்றி வளர்ந்து முறையாகத் துய்த்து மகிழும் விருப்பங்களை உருவாக்க அன்னை உமையம்மை, இன்ப உணர்வைத் தோற்றுவிக்கும் கரும்பைத் தன் கரத்தில் ஏந்தியிருக்கிறாள்.

அதுபோலவே அன்னை உமையம்மையின் நோக்கத்தை நிறைவேற்றும் வேனிற்காலத் தலைவன் காமவேளும் கரும்பு வில்லைக் கொண்டிருக்கிறான். காமவேளின் கடமை உயிரினங்கள் தமக்குரிய துணையைத் தேர்ந்தெடுத்துப் புணர்ந்து மகிழத் துணையாயிருப்பது.

கூடி வாழ்ந்த காதலர் யாதானும் ஒருவகையில் சிறு பொழுது பிரியினும் வேனில் தலைவன் வருத்துவான்; உயிரைப் பிரிப்பான். ஆதலால் அருமைக்குரிய தலைவன் பெருமானே! இதனை அறிந்து அருள்செய்க! என்ற வகையில் திருமுகத்தை எழுதி வசந்தமாலையின் வழி கொடுத்தனுப்பினாள்.

மாதவியைப் பிரிந்த கோவலன் இன்னமும் வீட்டுக்குச் செல்லவில்லை. கடைவீதி மருங்கிலேயே சுற்றிக் கொண்டிருந்தான். அங்குக் கோவலனைக் கண்டு வசந்தமாலை திருமுகத்தைக் கொடுக்கிறாள்.

கோவலன் நிலை எதிர்மாறாக இருந்தது. கோவலன் மாதவியின் திருமுகத்துக்கிசைந்து வர உடன்படாததோடு, மாறாக மாதவியைக் கடுஞ் சொற்களால் ஏசித் தீர்க்கிறான். முன்னர்க்கூடி வாழ்ந்த காலத்தில் மாதவி ஊடல் தவிர்த்துக் கூடுதற்குத் துணையாக இருந்த நிகழ்ச்சியைக் கூட நடிப்பு என்று கூறுகிறான். திருமுகத்தை ஏற்றுக்கொள்ளவே மறுக்கிறான்.

இதனால் மாதவியின்பால் குறை இல்லை என்பது தெளிவு எனினும் கோவலனிடத்திலிருந்த தணியாக் காதலால் மாதவி மீண்டும் முயற்சி செய்கிறாள்.


மாதவியின் மாண்பு

மாதவி கோவலனின் துனியை மாற்ற முடியாமையை நினைந்து வருந்துகிறாள். ஆனாலும் முயற்சியைக் கைவிடவில்லை. மீண்டும் கோசிகன் என்ற ஓர் அந்தணாளனை அணுகி, கோவலனுக்குத் திருமுகம் எழுதிக் கொடுத்து அனுப்புகிறாள். இத்திருமுகத்தின் வாயிலாக மாதவியின் வளர்ந்த நிலையை அறியமுடிகிறது.

காதலர் இருவரிடையில் புலவியோ, துணியோ ஏற்பட்டு அதுமாறாது நீட்டித்தால் இருவரில் ஒருவர் தம் நிலையை வற்புறுத்தாது மற்றவர் நிலையைச் சார்ந்து ஒழுகுதல் கடமை; நாகரிகம். இப்படி ஒழுகத் தலைப்படின் பிரிவு பகையாக மாறி வளராமல் தவிர்க்கப்படும். காலப் போக்கில் உறவும் தோன்றும்; வளரும்.

மாதவியிடத்தில் இந்தப் போக்கு கால்கொண்டு விட்டது. இரண்டாவது திருமுகத்தில் காதலி, காதலனுக்கு எழுதுவது போன்ற சொற்றொடர்களே அமையவில்லை. ஒரு ஞானாசிரியர்க்கு ஒரு மாணாக்கன் எழுதுவது போல, கோவலனுக்கு மாதவி எழுதிய திருமுகம் அமைந்திருந்தது.

மாதவி, கோவலனுக்கு எழுதிய திருமுகத்தை அப்படியே தன் பெற்றோருக்குக் காட்டுமாறு பணித்தான். காதலனைப் பிரிந்து பிரிவுத் துன்பத்தால் வருந்தும் ஒரு காதலி, தன் காதலனுக்கு எழுதிய திருமுகம் மற்றவர்களும் அதிலும் சிறப்பாக பெற்றோர்களும் படிக்கத்தக்கதாக அமைந்ததெனில் மாதவி எவ்வளவு செழிப்பாக வளர்ந்திருக்கிறாள் என்பதை அறியமுடிகிறது.

மாதவியின் திருமுகம் இதோ:

“அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக் கொளல் வேண்டும்
குரவர்பணி யன்றியும் குலப்பிறப் பாட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி”

(புறஞ்சேரியிறுத்த காதை 87-92)

கோவலனை ‘அடிகள்’ என்று விளித்து எழுதுகிறாள்; தன்னை அடியவளாக்கிக் கொண்டு வணக்கத்தைப் புலப்படுத்துகிறாள். மாதவி தன் இரண்டாவது திருமுகத்தை தேர்ந்து தெளிந்து எழுதுகிறாள்.

அதுமட்டுமன்று, கோவலனின் மன நிலையைப் போற்றிப் பாதுகாக்குமாறும் ஆற்றுப்படுத்துகிறாள். ஆயினும் அடக்கத்தின் காரணமாகத் தன் கடிதத்தின் சொல், தேர்ந்து தெளியாத சொல்-புன் சொல் என்று குறிப்பிடுகிறாள்.

“தாங்கள் பெற்றோர்குரிய பணிகளைச் செய்யாமல் குலத்திற் பிறந்து சிறந்த கண்ணகியோடு எல்லாருக்கும் வாழ்வளிக்கும் பூம்புகாரை விட்டு இரவில் யாரும் அறியாது சென்றது ஏன்?

அஃது அடியவளாகிய நான் செய்த குற்றத்தினாலா? நான் செய்த குற்றமாக இருப்பின் பெண் பேதைமையால் செய்திருப்பாள் என்று கருதிப் பொருட்படுத்தாது விட்டிருக்கலாம். அல்லது ஒறுத்துத் திருத்தி இருக்கலாம். கோவலனாகிய நீவிர் குற்றமற்ற காட்சியையுடையவர். நும் புகழுக்கு யாதொரு குற்றமும் வராது பாதுகாத்துக் கொள்க!” என்று திருமுகத்தை முடிக்கிறாள்.

இத்திருமுகத்தில் மாதவிக்குக் குடும்பப் பாசமும் நாட்டுப் பற்றும் வளர்ந்திருப்பதையும் பார்க்கிறோம். தான் இன்புறுவதை விட கோவலனின் புகழ் சிறப்புற அமைய வேண்டுமென்ற விருப்பம் மட்டுமே இருந்த தென்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஒரே ஒரு இடத்தில் தனது நிலையை எண்ணி வருந்துகிற சொற்றோடர் விழுகிறது. ஆனால், வெளிப்படையாக இல்லை. உய்த்து உணர வேண்டிய ஒன்று.

அதாவது “குலப் பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது கையறு நெஞ்சம்” என்ற சொற்றொடரில் கண்ணகி குலப்பிறப்பாட்டியாக இருந்ததால் கோவலன் அழைத்துச் சென்றிருக்கிறான்; தன்னை அழைத்துச் செல்லாததற்குக் காரணம். தான் குலப்பிறப் பாட்டியாக இல்லாதுதான் என்றுணர்கிறாள் போலும்!

ஆனால் இத் திருமுகம் வாயிலாக மாதவி, கோவலனை மாசின்றிக் காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கை யுடையவளாக விளங்குகின்றாள். இது மாதவிக்குள்ள பெருமை.

கோவலனும் மாதவி தீது இலள் என்று உணர்கிறான். மாதவியின் திருமுகத்தைத் தன் பெற்றோரிடம் காட்டுமாறு கோசிகன் வாயிலாகக் கொடுத்தனுப்புகிறான்.

இங்ஙனம் வளர்ந்த மாதவி, துறவு நிலைக்குரிய உளப்பாங்கினை அடைந்தாள். தான்மட்டுமல்ல. தன் அருமந்த செல்வி மணிமேகலையையும் கூட இளமைப் பருவத்திலேயே பௌத்தத் துறவியாக்குகிறாள். ஏன்? சமூகத்தில் தனக்கு-கணிகையர் குலத்துக்கு இருந்த இழி நிலையை எண்ணி ஏங்குகிறாள்.

தூய்மையையும் காதல் மனைவிக்குரிய கடைப் பிடியையும் மேற்கொண்டொழுகினாலும், எளிதில் தன்னை நீங்கி கோவலனை நினைந்து வருந்தாது போனாலும், இதற்குக் காரணமாயமைந்த சமுதாய நியதிகள் மாதவியை வருத்தியிருக்கிறது.

அதன் காரணமாக அவளுக்கு ஏற்பட்டதுயரம் மிகுதி, கோவலன் கொலையுண்ட செய்தி, மாதவியை மரணத்துக்கு ஆளாக்கவில்லை, அதனால் அவள் கற்பு மூன்றாந் தரத்தது என்பர் அறியாப் பேதையர் சிலர்.

கணவன் இறந்தவுடன் இறப்பது மட்டுந்தானா கற்பின் கடமை? அப்படியானால் கண்ணகி கூடத்தான் உடனே சாகவில்லை.

கற்பு என்பது கணவனை, கணவனின் புகழை, கணவனின் குறிக்கோளைக் காப்பாற்றுவதிலும் அமைந்து கிடக்கிறது.

பாண்டிமாதேவி, பாண்டியன் இறந்தவுடன் உயிர் நீத்தாள், ஆம்! பாண்டியன், பாண்டிமாதேவிக்கென்று யாதொரு கடமையும் விட்டுச் செல்லவில்லை. அதனால் பாண்டிமாதேவி உடன் உயிர் துறந்தாள்.

கோவலன் இறந்தவுடன் கண்ணகி இறக்கவில்லை! ஏன்? வாழ்ந்துவிட வேண்டுமென்ற ஆசையா? இல்லை. கோவலன், தன் மீது கள்வன் என்று சுமத்தப்பட்ட பழியை மாற்ற வேண்டிய கடமையை விட்டுச் சென்றிருக்கிறான். அப்பணியைக் கண்ணகி இனிதே செய்து முடித்தாள்.

கோவலன், அவன் மகளாகிய மணிமேகலையைக் காப்பாற்றும் பொறுப்பை மாதவியிடம் விட்டுச் சென்றிருக்கிறான். அதனால் மாதவி உயிர் துறக்க முடியவில்லை. மாதவி, மணிமேகலையை வளர்த்துப் பௌத்தத் துறவியாக்குகிறாள்.

ஏன்! மணிமேகலை கணிகை வாழ்க்கை மேற்கொண்டால் கோவலன் புகழுக்கு இழுக்கு நேரும் என்று எண்ணித்தான்!

இங்ஙனம் பல்லாற்றாலும் சிறந்து விளங்கிய மாதவி பெண்ணில் பெருந்தக்காளாவாள்.


சேரன் செங்குட்டுவன்

சிலம்பு, தமிழ்த் தேசியக் காப்பியம்! சிலம்பு, தமிழகம் தழீஇய இலக்கியம், பழந்தமிழகத்தின் மூன்று அரசுகளையும் போற்றிய இலக்கியம். சோழ, பாண்டிய, சேரநாடுகளைப் பற்றுக் கோடாகக் கொண்டு வளர்ந்த இலக்கியங்கள் பலப்பல.

தமிழ்நாடு சோழர், பாண்டியர், சேரர் ஆகிய மூவேந்தர்களாலும் ஆளப்பெற்று வந்தது. இந்த மூவேந்தர்களுள் சோழப் பேரரசர்கள் திருக்கோயில்கள் கட்டுதல், இசை, நடனம் முதலிய கலைகளை வளர்த்தல், நிலவளம், நீர்வளம் முதலியன பேணுதலில் அதிக ஆர்வம் காட்டினர். அணை கட்டித் தண்ணீர் தேக்கும் நீர்ப்பாசன நிர்வாக மேலாண்மையைத் தமிழ்நாட்டு வரலாற்றில் அறிமுகப்படுத்தியது சோழப்பேரரசே!

அதுபோலவே நில அளவையையும் அறிமுகப் படுத்தியது. மக்களாட்சி முறையைக் குடவோலை மூலம் நடைமுறைப்படுத்திய பெருமை சோழப் பேரரசுக்கு உண்டு.

தமிழரசுகளில் ஊராண்மை சிறந்து விளங்கியது. இன்று மக்களாட்சி நடைபெறும் காலத்தில் கூடப் பழைய ஊராண்மை இல்லை. கட்சிகள் பலவாகி, கட்சிகளில் குழுக்கள் பலவாகி வலிமை வாய்ந்த ஊராண்மையைச் சிதைத்துவிட்டனர். ஊராட்சி மன்றங்கள் சட்டப்படி இருந்தாலும் கூட நாடு பாதி, காடு பாதி என்பதைப் போல் ஊராட்சி மன்றங்களை இயங்காமல் முடக்கி வைப்பதுதான் அரசின் பணியாக இருந்து வருகிறது. ஊராண்மை இருந்தால்தான் கிராமங்கள் வளரும்; அரசின் பணி எளிதாகும்.

பாண்டியப் பேரரசர்கள் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்ததில் புகழ் பெற்றனர். சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் பாண்டிய நாட்டையே களமாகக் கொண்டு தோன்றியவை.

பாண்டிய அரசர்களில் பலர் கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள். பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், பாண்டியன் அறிவுடை நம்பி ஆகியோர் கவிஞர்களாக விளங்கிய பாண்டியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

சேர அரசு செந்தமிழ் அரசு, வீர வரலாறு படைத்த அரசு. நல்ல சைவப் பற்றுடைய அரசு. அதே போழ்து சமய சமரசம் நிலவிய அரசு, வஞ்சி நகரத்தில் பல்வகைச் சமய நெறிகளும் இயங்கின. அதனாலேயே இளங்கோவடிகளிடத்தில் சமண சமயத்தின் தாக்கம் இருந்தது.

சிலப்பதிகாரம் தமிழினத்தின் தேசியக் காப்பியம்; தமிழகம் தழீஇய காப்பியம்; முத்தமிழ்க் காப்பியம், சிலம்பை இயற்றியவர் இளங்கோவடிகள், சேர அரச மரபினர் தமிழக வரலாற்றில் தொன்மையான மரபினர். பாரதப் போர்க் காலத்திலேயே சேரர் குலம் புகழுடன் விளங்கியது.

இன்றைய அரசியலில் நடுநிலைக் கொள்கை பேசப் பெறுகிறது. பாரதப் போர் நடந்தபோது கௌரவர்கள் - பாண்டவர்கள் ஆகிய இரண்டு அணியினருக்கும் உணவு வழங்கிய பெருமை சேர அரசருக்கு உண்டு. இந்த நடுநிலைக் கொள்கையை, “பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை” என்று சிலம்பும்

“வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!”

(புறம்-2)

என்று புறநானூறும் பாராட்டுகின்றன. சேர அரசர்களைப் பற்றிய இலக்கியங்கள் சங்க காலத்திலேயே தோன்றிவிட்டன. இவற்றுள் பதிற்றுப்பத்து குறிப்பிடத்தக்கது.

இங்ஙனம் வளர்ந்து வந்த சேரர் மரபில் நெடுஞ்சேரலாதனின் அருமை மக்களாகச் செங்குட்டுவனும் இளங்கோவும் தோன்றினர். செங்குட்டுவன் அரசுப் பணி ஏற்க வாய்ப்பாக இளங்கோ துறவியாகிறார். இளங்கோ புவியரசாகாமல் கவியரசாகிச் சிலப்பதிகாரத்தை இயற்றி யருளினார்.

செங்குட்டுவன் செஞ்சடை வானவன் அருளில் தோன்றியவன் என்று சிலம்பு பேசுகிறது. முடியுடை மூவேந்தருள்களும் சேர அரசு விழுப்பம் உடையது; பாடும் புகழுடையது. நீதி வழுவாத் தன்மையுடையது. சேர மரபினர் அரசு அறந்தழீஇய அரசு, போர் முனையிலும் வீரம் விளைவிக்கும் கொற்றமுடைய அரசு.

சேரர் பண்பு பாடப் பண்ணும் தமிழும் காத்திருந்தன. இங்ஙனம் புகழ் பூத்த சேர அரசர்களின் தலைநகர் வஞ்சி நகரமாகப் பெரும்பாலும் இருந்தது. ஒரு சில காலத்தில் கருவூர், வெஞ்சாமாக்கூடல் ஆகியன தலைநகரங்களாக இருந்திருக்கின்றன. சிலம்புக்குரிய வரலாறு நிகழ்ந்த போது தலைநகரமாக இருந்தது வஞ்சி நகரமே. வஞ்சி நகரம் என்பது திருவஞ்சைக் களமா? திருவனந்தபுரமா? என்பது ஆராய்தலுக்குரியது.

இயற்கை வளம் செறிந்தது சேர நாடு. குறிஞ்சி, நெய்தல், முல்லை, மருதம் ஆகிய நான்கு வகை நிலங்களும் சேர நாட்டில் உண்டு, சேர நாடு புலவர் பாடும் புகழ்பெற்றது.

பதிற்றுப்பத்து சேரர்களுக்கே உரிய இலக்கியம். பத்துப் பாட்டுகள் ஒரு தொகுதி. இப்படி பத்துத் தொகுதி. ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சேரனைப் பற்றியது. இதில் ஐந்தாம் பத்து செங்குட்டுவனுக்குரியது. செங்குட்டுவனுக்குரிய பத்தினை இயற்றியவர் பரணர். இந்தப் பத்து செங்குட்டுவனை “கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன்” என்று அழைக்கிறது. பரணர் செங்குட்டுவனின் வீரத்தினையும் கொடைச் சிறப்பினையும் விரிவாக எடுத்துப் பேசுகிறார்.

சேரர் குலத்தில்தான் சேரமான் பெருமான் நாயனார் - கழறிற்றறிவார் தோன்றினார். கழறிற்றறிவார் சிவநெறி நின்றொழுகியவர். நம்பியாரூரருக்குத் தோழராகச் சிவ பெருமான் மூலம் ஆகியவர். இத்தகு புகழ் பெற்ற சேரர் குலத் தோன்றல்தான் செங்குட்டுவன். செங்குட்டுவனுக்கு முடிசூட்டிக் கொள்ளும் வாய்ப்பினை நல்க, இளங்கோ துறவியானார்; கவியரசானார்.

சேரன் செங்குட்டுவன் மனைவி சோழர் குலத்தில் தோன்றிய பெண். இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சேரன் செங்குட்டுவனின் மைத்துனன். பெருநற்கிள்ளி காலத்தில் சோழநாடு பிரிந்து ஒன்பது பேர் ஆட்சிக்குட்பட்டது.

சோழ நாட்டை ஒரே நேரத்தில் சோழ மரபினைச் சேர்ந்த ஒன்பது பேர் ஆண்டனர். ஒன்பதின்மரும் இளவரசர்கள்; ஒத்த தன்மையினர். இதன் காரணமாகச் சோழர் குலத் தலைவன் பெருநற்கிள்ளியின் ஆணைக்கு ஒன்பது இளவரசர்களும் கட்டுப்பட மறுத்தனர். பகைமை கொண்டனர். இந்தச் சோழர் ஒன்பதின்மரையும் போரில் வென்று தமது மைத்துனனிடம் சோழப் பேரரசின் கொற்றத்தைத் தந்து ஒரு நிலைப்படச் செய்த பெருமை சேரன் செங்குட்டுவனுக்கு உண்டு.

சேரன் செங்குட்டுவன் ஒரு சமயம் மலைவளம் காணப் புறப்பட்டான். பேரியாற்றங் கரையில் தனது மனைவி இளங்கோ வேண்மாதேவி மற்றும் அரசுத்துறை அலுவலர்களுடன் பாடி வீடு அமைத்துத் தங்கியிருந்தான். அதுபோது வடபுலத்திலிருந்து தவமுனிவர்கள் சிலர் வந்து செங்குட்டுவனைச் சந்திக்கின்றனர்.

தவமுனிவர்கள் செங்குட்டுவனை வாழ்த்திவிட்டு வரலாற்றுத் திருப்பத்திற்குரிய செய்தியைத் தெரிவிக்கின்றனர். “மன்னர் மன்ன! தமிழ் நாட்டரசர்கள் வடபுலம் வெற்றி கொண்டபோதும், வட பனி மலையில்-இமயத்தில் சின்னங்கள் பொறித்தபோதும் எம்மைப் போல வலிமையுடைய அரசர் இல்லைபோலும்” என்று வடநாட்டு அரசர்கள் கூறிய செய்தியை உரைக்கின்றனர் செங்குட்டுவனிடம்.

இத்தருணத்தில் சாத்தனாரும் அந்த அவைக்கு வருகிறார். சாத்தனார் கண்ணகி வரலாற்றில் நிகழ்ந்தன அனைத்தையும் முறைப்படுத்திக் கூறுகிறார். பாண்டிய அரசன் இறந்த செய்தி கேட்டபொழுதும் செங்குட்டுவன் மகிழ்ந்தானல்லன்; வருத்தமுறுகின்றான். இந்தச் சூழ்நிலையில் தான் அரசாளும் பொறுப்பு இன்பச் சார்புடையதல்ல, துன்பம் மிகுதியுடையது என்று கூறுகின்றான்.

நாட்டில் மழை வளம் குறைந்தாலும் சரி, உயிர்கள் வருத்தமுற்றாலும் சரி செங்கோல் செலுத்துவது துன்பமேயாம். போற்றத்தக்கதல்ல என்பது செங்குட்டுவன் கருத்து.

பாண்டிய நாட்டில் நடந்த நிகழ்வுகள் பற்றி-பாண்டிய அரசனைப் பற்றி செங்குட்டுவனிடம் இகழ்வுக் குறிப்பு யாதொன்றம் தோன்றவில்லை. மாறாகப் பாண்டியன் நெடுஞ்செழியனை நினைத்து அரசுப் பொறுப்பின் கண் உள்ள துன்பத்தையே நினைவு கூர்கிறான். இதனால் செங்குட்டுவன் பிறர் இகழ்ச்சியைக் கண்டு மகிழாத பெருந்தகை என்பதும் புலப்படுகிறது.

இன்றைய நிலை தலைகீழ்த் தடுமாற்றம். இன்று அரச பதவிகள், பணம் பண்ணும் பதவிகளாகப் போயின. அதுமட்டுமா? ஆரவாரமான சுகந்தழுவிய வாழ்க்கையும் கிடைக்கிறது. இன்று நடப்பவை அரசுகள் அல்ல, பெரிய வியாபாரக் கடைகள். அவ்வளவுதான்.

செங்குட்டுவன், தாபதர்கள் வாயிலாக ஆரிய அரசர்கள் தமிழ் நாட்டரசர்களை இழித்துக் கூறியதைக் கேட்டுப்பொருமினான்; ஆரிய அரசர்கள் கொட்டத்தினை அடக்க வேண்டும் என்று உறுதி பூண்கின்றான்; வஞ்சினம் மேற்கொள்கின்றான்.

அதுபோது அந்த அவையிலிருந்த ஆசன் எழுந்து, “சேரர்குல மன்ன! இமய வரம்ப! நின்னை இகழ்ந்தன ரல்லர்” என்று கூறினான். ஆயினும் செங்குட்டுவனின் சினம் தணியவில்லை. “எம்மை இகழ்ந்தால் என்ன? மற்ற தமிழ் அரசுகளைப் பழித்தால் என்ன? தமிழ் நாட்டவர் ஒரு மரபினர்” என்று இனமான உணர்வுடன் கூறுகிறான்.

தமிழருக்குத் தேவை தன்மான உணர்ச்சி. தன்மான உணர்ச்சி இருந்தால் மட்டும் போதாது. இனமான உணர்ச்சியும் தேவை. அதாவது தமிழர் என்ற உணர்வில் விருப்பம். தமிழர், தமிழரைப் பகைக்காது வாழ்தல். தமிழருக்கு இடையூறு வரும்பொழுது ஒன்று திரண்டு பாதுகாத்தல், இந்த இனமானம் தமிழருக்கு என்றும் இருந்ததில்லை. நம் தலைமுறையில் தலைவர் பெரியார் தமிழரிடையில் இனமானத்தை வளர்க்க உழைத்தார். அறிஞர் அண்ணா அவர்கள் இனமானத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாவார்.

செங்குட்டுவன், தமிழ் அரசர்களைப் பழித்ததைத் தன்னைப் பழித்ததாகவே கருதினான். இந்த நிலையில் செங்குட்டுவன் தன்னை மூவருள் ஒருவனாக எண்ணிக் கொள்கின்றான். வடவரை நோக்கிப் படையெடுக்கிறான். படையெடுத்தல் ஆரிய அரசர்களை வெல்லுவதற்காக மட்டுமல்ல. பத்தினித் தெய்வம் கண்ணகிக்குச் சிலை எழுப்ப இமயத்தில் கல் எடுத்து வரவே படையெடுக்க எண்ணுகிறான்.

சூளுரைத்துப் படையெடுப்பும் தொடங்கிற்று. வடபுலத்து ஆரிய அரசர்களை வென்று வாகை சூடினான். ஆரிய அரசர்கள் போரில் புறமுதுகிட்டோடினர். அவர்களை - கனக விசயர்களைப் பிடித்து அவர்கள் தலைமீது இமயக் கல்லையும் கங்கையையும் ஏற்றிக் கொண்டு வருகிறான்.

ஆயினும் செங்குட்டுவன் வடபுலத்துப் போரில் வெற்றி பெற்ற பிறகு பிடித்த கைதிகளைச் சோழப் பேரரசுக்கும், பாண்டிய பேரரசுக்கும் கொண்டு போய் காட்ட ஏற்பாடு செய்கிறான். சோழ, பாண்டிய அரசர்கள், தம்முடைய வெற்றியைத் தமிழன் வெற்றி, தங்களுடைய வெற்றி என்று எண்ணுவர் என நம்பிக் கைதிகளைக் கொண்டுபோய்க் காட்டச் சொன்னான். அதன் எதிர் விளைவுகளைச் செங்குட்டுவன் உணர்ந்தானில்லை.

கைதிகளைப் பார்த்த சோழ, பாண்டிய அரசர்கள் போரில் உயிர் பிழைத்து ஓடுபவர்களைச் சிறைப்பிடித்தல் வீரமன்று என்று கூறி விடுகின்றனர். இன்று வரையில் தமிழகம்-தமிழர் நலம் காக்கும் பெருந்தகையாளர்களைக் கண்டதில்லை. இன மானம் என்பது கடுகளவு கூட இல்லை.

இமயக் கல் கொண்டு கண்ணகிக்கு-பத்தினித் தெய்வத்திற்குச் சிலை அமைக்கிறான் செங்குட்டுவன். கங்கை நீரினைத் தெளித்து வழிபாட்டுக்குரிய திருமேனியாக்குகிறான். கண்ணகி பத்தினிக் கோயிலில் நாள்தோறும் வேள்வி முதலியன நிகழ்த்தினான்.

நாள்தோறும் வழிபாடு நடக்க தேவந்தி மூலம் ஏற்பாடு செய்தான். கண்ணகி திருக்கோயிலை வலம் வந்து வணங்கினான். அப்போது செங்குட்டுவனுடன் ஆரிய அரசரும், குடகக் கொங்கரும், மாளவ வேந்தரும், இலங்கைக் கயவாகுவும் உடனிருந்து வணங்கினர். கண்ணகிக்குத் திருக்கோயில் எடுத்தமையால் தமிழ் நாட்டில் பத்தினி வழிபாடு தொடங்கப் பெற்றது; வளர்ந்து வருகிறது.

செங்குட்டுவன் கண்ணகி கோட்டம் அமைத்துக் கடவுண்மங்கலம் செய்தபோது சிறைப்பட்ட ஆரிய அரசரை விடுதலை செய்து அரசு விருந்தினர் தகுதியில் உபசரணை செய்து பத்தினி வழிபாடு நிறைவெய்தியவுடன் அவரவர் நகருக்குச் செல்லுமாறு ஏற்பாடு செய்தான். இச்செயல் செங்குட்டுவனின் பெருந்தகைமைக்கு எடுத்துக்காட்டு.

சேரன் செங்குட்டுவன் சிறந்த அரசன், வீரன். மனையறம் காத்தவன்; இனமானம் பேணியவன். மற்றத் தமிழரசர்களிடம் மதிப்புணர்வு காட்டியவன்; போற்றியவன்.

சிலம்பு விளைத்த புதுமை

சிலம்பு, தமிழ் இலக்கிய உலகில் பூத்த மலர்களில் மணம் மிக்கது. தூய தமிழ், தெளிந்த நடை, குறிக்கோள் உள்ள படைப்பிலக்கியம்; முத்தமிழ்க் காப்பியம்; தமிழகம் தழீஇய இலக்கியம்; சமூக நலம் பொதுளும் காப்பியம்.

அரசியல் நெறியும் அறநெறியும் உணர்த்தும் காப்பியம்; தமிழர்தம் ஆற்றலை வடபுலம் உணருமாறு செய்த காப்பியம்; உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாய் அமைந்த படைப்பு; நீதிக்காக அரசை எதிர்த்துப் போராடும் உரிமை வழங்கிய காப்பியம். சிலம்பில் மரபுகளைக் கடந்த புதுமைகள் பல உண்டு. சிலம்பு செய்த புரட்சி போற்றத் தக்கது.

இலக்கியத்தைத் தொடங்கும்பொழுது கடவுளை வாழ்த்தித் தொடங்குதல் மரபு. ஆனால் சிலம்பு திங்கள், ஞாயிறு, மாமழை, பூம்புகார் ஆகியவற்றைப் போற்றித் தொடங்கப் பெறுகிறது. இஃதொரு புதிய நெறி.


திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றில்
வங்கண் உலகளித்த லான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த வான்

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்கு நீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு
ஓங்கிப் பரந்தொழுக லான்

இளங்கோவடிகள் பாடிய இப்பாடல்கள் சோழனின் புகழை, சோழனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவதாக அமைந்திருப்பது எண்ணுதலுக்குரியது.

மக்கட் சமுதாய வரலாற்றில் அரசுகள் தோன்றியவுடன் வணிகர் சமுதாயம் தோன்றி வளர்கிறது. அரசுகளை விடக் கூடவும் வணிகர்கள் கூடுதல் செல்வ ஆதாரங்களைப் பெற்று விளங்கினர் என்பது வரலாற்றுண்மை.

இன்றும்கூட மக்கட் சமுதாய வாழ்க்கையின் உயிர் நாடியாக விளங்கும் உழவர்களைவிட, வணிகர்களிடம் செல்வம் கூடுதலாகத்தான் குவிந்திருக்கிறது. வணிகர்களே அரசை இயக்குகின்றனர்; நடத்துகின்றனர்.

இதுபோல் பண்டைக் காலத்திலும் சோழப் பேரரசிற்குச் செல்வம் வேண்டும்போது கொடுத்து உதவும் தகுதியில் வாழ்ந்த குடும்பம் கோவலனின் குடும்பம். ‘அரசுவிழை திரு’ என்பது இளங்கோவடிகள் வாக்கு. சமுதாய வளர்ச்சியில் வணிகர் சமுதாயத்தின் வளர்ச்சியை நினைவூட்டியவர் இளங்கோவடிகள்! இலக்கியத்தில் அரசு, வணிகர் என்ற சமுதாயப் படிமுறை வரலாற்றை உணர்த்தியது சிறப்பு.

வாழ்க்கைக்குச் செல்வம் தேவை. ஆயினும் செல்வம் மிகினும் குறையினும் துன்பம் செய்யும். சோழப் பேரரசு - பூம்புகார் நகரம் செல்வத்தில் செழித்தது. அதனால் ஒழுக்கம் பாழ்பட்டது. முற்றவெளியில் மகளிரை விலைகூறும் அளவுக்குச் சோழ நாட்டின் சூழல் கெட்டுவிட்டது. மாதவி ஆயிரம் கழஞ்சு பொன் கூறி விற்கப்படுகிறாள். கோவலன் வீழ்ச்சிக்குக் காரணம் பூம்புகாரில் நிலவிய சமுதாய அமைப்பே என்று சிலம்பு உணர்த்துவது புதிய மரபு: புதிய நெறி.

ஊழில் நம்பிக்கை உடைய இளங்கோவடிகள் கோவலனின் வீழ்ச்சிக்கு ஊழைக் காரணமாகக் காட்டாது கோவலன் வாழ்ந்த சூழ்நிலையால் ஒழுக்கம் பாதித்துக் கெட்டுப் போனான் என்று கூறுவதன்மூலம் இலக்கிய உலகில் சூழலைப் பற்றிய சிந்தனையை அறிமுகப்படுத்தியது புதுமை. கோவலனின் வீழ்ச்சிக்கு காரணமாயமைந்தது சூழல். இதனை,

“வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்
நச்சுக் கொன்றேற்கு நன்னெறி யுண்டோ”

என்று கோவலன் கூறுவதன் மூலம் அறியலாம்.

மாதவி, பரத்தையர் குலத்தில் பிறந்த பெண். ஆனால், சமுதாயத்திலேயே பரத்தைமையை அடியோடு அகற்றத் தவம் செய்த முதற்பெண். பரத்தைமைத் தொழிலிலேயே ஈடுபடுவது மரபு என்றெல்லாம் சித்திராபதி முதலியோர் வற்புறுத்தியும் மாதவி பரத்தையாக வாழாமல் பத்தினியாக வாழ்ந்து வெற்றி பெற்றது சிலம்பு விளைவித்த புதுமை.

மாதவி, கோவலனைக் கணவனாகக் கொண்டே வாழ்கிறாள். கோவலன் பரத்தைமை ஒழுக்கமுடையவன். ஆயினும், மாதவி பரத்தையல்லள் பிறப்பின் ஒழுக்கத்தை மாற்றிப் புதுமை செய்தாள் மாதவி. தமிழ் நாட்டில் பரத்தைமையை அகற்றும் முயற்சியைத் தொடங்கியது சிலம்பு விளைவித்த புதுமை.

கோவலன் மதுரைக்கு வருகிறான். புதிய வாழ்க்கையைத் தொடங்க சிலம்பை விற்க நினைக்கிறான். சிலம்பை விற்கப் பாண்டிய நாட்டுத் தலைநகரின் கடைவீதிக்குச் செல்கிறான். கோவலனிடம் உள்ள சிலம்பு, கடைவீதியில் விற்கக்கூடியது அல்ல; சாதாரண மக்கள் வாங்கக் கூடிய சிலம்பும் அல்ல. பாண்டிய அரசன் வாங்கவேண்டும் அல்லது மிகப்பெரிய வணிகர்கள் வாங்க வேண்டும். இத்தகு விலை உயர்ந்த சிலம்பை விலை கூற, மதுரை நகர வீதிகளில் மறுகி மறுகி நடக்கிறான்.

கோவலன் தனது வீழ்ச்சியை நினைத்து-மதுரை நகரில் சிலம்பை விலை கூறி வாழ நேரிட்டதே என்று வெட்கப்பட்டு மறைவாக விலை கூறி விற்க நினைத்து மறுகுகிறான். தன் நிலைக்கு இரங்குகிறான்; வெட்கப்படுகிறான். நாடறிந்த வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவன். குடும்பப் புகழ் போய்விடக் கூடாதே என்பது கோவலனின் கவலை.

தன்னை உணரும் திறன் படைத்த சராசரி மனிதனின் உள்ள இயல்பு இது. உளவியல் பாத்திரப் படைப்பில் சிந்தனை செய்து திருத்திக் கொள்ளும் பாத்திரமாக கோவலனைப் படைத்தது இலக்கிய உலகில் சிலம்பே. ஆதலால் கோவலன் இலக்கிய உலகில் வாழ்கிறான்.

கோவலன் தன்னிலை தாழ்ந்தமையை எண்ணி வெட்கிப் போனதாலேயே கொலைக் களத்தில் தான் கள்வனல்ல என்று கூறாமல், மறுக்காமல், வாதாடாமல், திகைப்புண்டு மௌனம் சாதிக்கிறான். ஆங்குப் பேச நேரின் குடும்பம், சோழப் பேரரசு முதலியவற்றை எடுத்துக் கூற வேண்டிவரும். அது மரபல்ல; புகழும் தராது என்று எண்ணியே மௌனம் சாதிக்கிறான். குல மரபு காக்கப் பழியைச் சுமந்து கொலைக்குக் கோவலன் உடன்பட்டது கோவலனின் உயிர் மானமாக இருந்தது என்று உணர்த்துவது புதுமை.

கோவலன் கள்வன் என்று பழி சுமத்தப்பட்டுக் கொல்லப்பட்டுவிட்டான் என்ற செய்தி கண்ணகிக்குக் கிடைக்கிறது. கண்ணகி உணர்ச்சி வசப்படாமல் அறிவை இழக்காமல் நடந்து கொண்டமுறை இலக்கிய உலகத்திற்கோர் புதுமை.

கண்ணகி ஆற்றொணாத் துயரத்திற்காளானாலும் அழுது புலம்பியவாறு உட்கார்ந்து விடவில்லை. கண்ணகியின் அவல நிலையிலும் அறிவு தலைப்படுகிறது; போர்க்குணம் தலைப்படுகிறது. செய்ய வேண்டுவனவற்றைச் செய்கிறாள்; செய்யத் தலைப்படுகிறாள். சிலம்பில் வழக்குரை காதை அற்புதமான படைப்பு.

கண்ணகி நடந்தனவற்றை பாதிக்கப் பெற்ற கோவலனிடம் கேட்டறிய முதலில் விரும்புகிறாள்; நேரே கொலைக் களத்திற்குச் செல்கிறாள். இங்கு இளங்கோவடிகள், இயற்கை இகந்த நிலையில் கோவலனின் வெட்டுண்ட தலை கண்ணகியுடன் பேசுவதாக காட்சி அமைத்திருக்கிறார். இந்தக் காட்சி அவசியமானது.

நேரிடையான வாக்கு மூலம் - சாட்சி இல்லாமல் எப்படி வழக்கை நடத்த இயலும்? ஆட்சிமுறைச் சட்டங்களுக்கு இசைய இலக்கியம் அமைந்துள்ளமை சிலம்பில் உள்ள புதுமை. கண்ணகி, கோவலனிடம் நடந்தவையனைத்தும் கேட்டுணர்ந்த நிலையில் பாண்டியன் தவறு செய்துவிட்டான் என்று உணர்கிறாள். உடன் பாண்டியனிடம் வழக்குரைக்கப் புறப்படுகிறாள்.

ஒரு அரசு தனிப்பட்டதல்ல. சமுதாயம் தழீஇயது தானே அரசு. சமுதாயத்தில் உள்ளவர்கள் பிழைகள் செய்யின் அரசு கெடும். எனவே கண்ணகி பாண்டிய நாட்டின் சமுதாயத்தை ஆய்வு செய்கிறாள். “பத்தினிப் பெண்டிரும் உண்டுகொல்” என்று வினவுகிறாள்.

எங்கு பத்தினிப் பெண்டிர் உண்டோ அங்குக் காமுகன் இருத்தல் இல்லை. காமுகன் இல்லாத சமுதாயம் தரமுடையது. அச் சமுதாயத்தில் தவறுகள் நிகழா.

அடுத்துத் “தெய்வமும் உண்டு கொல்?” என்று கேட்கிறாள். தெய்வச் சிந்தனை உடைய சமுதாயம் தெய்வ நம்பிக்கை காரணமாக நல்லவர்களை உடையதாக அமையும். அதன் காரணமாகத் தவறுகள் செய்ய அஞ்சுவர்.

அடுத்துச் “சான்றோரும் உண்டு கொல்?” என்று வினவுகிறாள். ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் வாழும் ஊரில் உள்ள மக்கள் சான்றோர் நெறிப்படுத்துதலின் காரணமாக நன்னெறி நின்றொழுகுவர். கோவலன் கொலை நடந்த மதுரையில் இவர்களில் யாருமில்லை. அதன் காரணமாகவே கோவலன் முறை கேடாகக் கொல்லப்பட்டான் என்று துணிகின்றாள்.

ஒரு தவற்றுக்கு வழக்காட இத்தனை பேருடைய உடன்பாடும் தேவை. இது மரபு. எடுத்தேன்! கவிழ்த்தேன்! என்று பேசாமல் இங்ஙனம் முறைப்படி சிந்தித்துப் பேச வைத்தது ஒரு புதுமை.

இவை மட்டுமா? கண்ணகி அடுத்துத் தன் கணவன் கள்வனா? இல்லையா? என்று ஆய்வு செய்கிறாள். ‘காய் கதிர்ச் செல்வனை நோக்கிக் கேட்கிறாள்; காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்?’ என்று! கதிரவனின் ஒளிக்கற்றை நுழையாத இடமில்லை.

ஆதலால், காய்கதிர்ச் செல்வனே! உனது ஒளிக் கற்றைகள் சென்ற இடங்களில் என் கணவன் கோவலன் கள்வனாக இருந்ததைக் கண்டிருக்கிறாயோ சொல்! சொல்! என்று கேட்கிறாள். கொலைக் களத்தில் வேறு சாட்சி இல்லை! ஆதலால், காய்கதிர்ச் செல்வனே சாட்சியாக வேண்டிய கட்டாயம்.

பாண்டியனின் அவை கண்ணகி வழக்குரைக்கிறாள்! இந்த நூற்றாண்டில் வழக்கு எப்படி உரைக்க வேண்டுமோ அந்த மரபுப்படி வழக்குரைக்கின்றாள்! கண்ணகி முதலில் தான் பிறந்து வளர்ந்த சொந்தச் சோழநாட்டரசின் நீதிச் சார்பினை, தனது குடும்பத்தின் மாண்புகளைக் கூறி அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்.

அடுத்து நேரிடையாகப் பேசுகிறாள். “பாண்டியனே! என் காற் சிலம்பு மாணிக்கப் பரல்களையுடையது” என்கிறாள்! பாண்டியன் தம்முடைய சிலம்பு, முத்தினை உடையது என்று பதில் சொல்கிறான். பாண்டியன் அந்த சிலம்பைக் கொண்டுவரச் செய்கிறான். கண்ணகி சிலம்பை வாங்கி வீசி உடைக்கிறாள். மாணிக்கப் பரல்கள் சிதறுகின்றன. நேரிடை நிரூபணம்! இதுவே சட்டங்கள் வழி வழக்காடு முறை! இந்த முறை சிலம்பில் விவரிக்கப்படுவது புதுமை.

"தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான் தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே! அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்திங்கு
என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரே!” எனப் "பெண்ணணங்கே!

கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
வெள்வேற் கொற்றங் காண்” என, ஒள்ளிழை
"நற்றிறம் படராக் கொற்கை வேந்தே
என் காற் பொற்சிலம்பு மணியுடைய அரியே” எனத்
"தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிவம்பு முத்துடை அரியே
தரு” கெனத் தந்து தான் முன் வைப்பக்
"கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே!"

(வழக்குரை காதை 50-72)

என்பது வழக்குரை காதைப் பகுதி! நேரிடையான நிரூபணத்தின் மூலம் கோவலன் குற்றவாளியல்ல என்பது நிரூபணமாகிவிட்டது!

“தேரா மன்னன்” என்பது வழக்கு! “யானோ அரசன்?” என்பது பாண்டியன் தனக்குத்தானே எழுதிய தீர்ப்பு! “யானோ?” என்ற ஐய வினாவில் அரசனல்லன் என்பது பாண்டியனின் தீர்ப்பு முடிவு! அடுத்து “யானே கள்வன்!” என்றான் “என் கணவன் கள்வனா” என்பது வழக்கு.

கண்ணகி கணவன் கள்வனல்லன் என்று கூறாமல் “யானே கள்வன்” என்று கூறியதன் மூலம் கோவலன் கள்வனல்லன் என்ற தீர்ப்புக் கிடைக்கிறது. கோவலனின் சிலம்பு பாண்டியன் வசம் இருந்தது-ஓரிரவு! அடுத்து கோவலனின் உயிரை முறைகேடாகப் பறித்தது - இரண்டாவது களவு! அதனால் பாண்டியன் ஐயத்திற் கிடமின்றித் தன்னயப்பின்றித் தற்சலுகையின்றி “யானே கள்வன்” என்று தீர்ப்பினை அறிவிக்கின்றான்.

அரசனின் முறைகேடான செயலால் கோவலனின் உயிர் பறிக்கப்பட்டது. உயிர்க்கு உயிர்தான் தண்டனை! பாண்டியன் தீர்ப்புச் சொன்னதோடின்றிக் “கெடுக என் ஆயுள்"- என்று தண்டனையும் விதித்துக் கொள்கிறான்.

பாண்டியனின் உயிர், அரச நீதியில் தங்கி இருந்தமையால் நீதி பிழைத்ததறிந்த நிலையில் உயிர் தானே பிரிந்தது! உலக வரலாற்றிலேயே இத்தகைய அரசியல் இருந்ததில்லை! இருக்கப் போவதும் இல்லை! இது சிலம்பு விளைத்த புதுமை!

பத்தினிப் பெண்டிரைத் தொழும் மரபு சிலம்பு விளைத்த புதுமை. பத்தினிப் பெண் கற்பின் திண்மையால், ஆற்றலால் தன் சிலம்புக்குச் செங்கோலின் அதிகாரத்தையே மாற்ற முடியும் என்ற நம்பிக்கை சிலம்பு விளைவித்த புதுமை. நாடாளும் அரசர்கள் பத்தினித் தெய்வத்தை நீதித் தெய்வமெனப் போற்றினர். இது புதிய மரபு; முற்றாகப் புதுமை.

சிலம்பு இலக்கிய யாப்பில் புதுமையாயிற்று. சிலம்பு, பரத்தைமையை ஒழித்த புதுமைப் படைப்பு! சிலம்பு, குடிமக்களை-குடிமகள் காற்சிலம்பைப் பாடு பொருளாக்கியது புதுமை!

சிலம்பு, குடிமக்கள் அரசை எதிர்த்து வழக்காடும் உரிமையைத் தந்த புதுமை உடையது. அரச நீதியை உயிராகக் கொண்ட அரசர்களை அறிமுகப்படுத்திய புதுமையைச் செய்தது.

சிலம்பு தமிழ்த் தேசியத்தைக் கண்டது. இது பொதுவில் விளைந்த புதுமை.