குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/பிசிராந்தையார் பெருவாழ்வு




4


பிசிராந்தையார் பெருவாழ்வு


சங்க காலக் கவிஞருள் நட்பிற்கு இலக்கணமாக விளங்கியவர் பிசிராந்தையார். பிசிராந்தையார் பழுத்த புலவர்: பண்பாளர்: நல்ல கவிஞர். நன்னெறி உணர்த்திய சீலர்; புரவலரால் கவிதை பாடிப் போற்றப் பெறும் புகழினைப் பெற்றவர். கோப்பெருஞ் சோழன் பிசிராந்தையாரின் பெருகிய நட்பினை ஆரத் துய்த்தவர்.

நட்பு என்பது எளிய சொல். ஆனால் அது அருமைப்பாடு நிறைந்த தவம். இருவர் அன்பினராதல் எளிதன்று. வாழ்க்கையில் அருமந்த நட்பினராக ஒருவர் கிடைத்தாலும் உலகை வென்று வாழலாம். நன்னட்புப் பெற்றார் துன்புறுதல் இல்லை. பிசிராந்தையார் நட்பையே தவமெனக் கொண்டு. உயிரை ஓம்பினார். சாதாரணமான உலகியலில் நட்பு என்ற பெயரில் உடலோம்பும் வாழ்க்கையே நடைபெறும். உடலுக்குரியன வழங்க இயலாதபோழ்து நட்பு திரியும்; மாறுபடும். ஆனால் பிசிராந்தையார் என்ற பெருந்தகையின் நட்பு உயிரோம்பும் நட்பு. அதனால்தானே “செல்வக் காலை நிற்பினும், அல்லற்காலை நீற்றிலன்-மன்னே” என்று கோப்பெருஞ்சோழன் கூறுகின்றான்.

பிசிராந்தையார் காலத்தை வென்று நிற்கும் கருத்து அமுதத்தினைத் தந்தவர். வானவர் அமிழ்தம் மரணமிலா வாழ்வளிக்கும் மருந்தென்பர் புராணிகர். அஃது உண்மையோ, பொய்யோ நாமறியோம். ஆனால் பைந்தமிழ்ப் புலவர் பிசிராந்தையார் நரையின்றி, மூப்பின்றி வாழத் தந்துள்ள கருத்து அமிழ்தம் அணையது. காலத்தை வென்று வாழும் வகை காட்டுவது.

பிசிராந்தையார் உயிரை ஓம்பி வாழ்ந்தவர். அதனால் அவர் வாழ்க்கை நட்பிற் பொருந்தியிருந்தது. நட்பிற்கு உறுப்பாகிய கெழுதகைமை தழைத்திருந்தது. ஆரா அன்பினில் அவர் உயிர் தோய்ந்திருந்ததால், அவருடலில் ஓடிய செங்குருதித் துளிகளெல்லாம் அன்பின் மயமாகவே உருமாறியிருந்தன. நிறைந்த அன்புடையோர் என்றும் இளையராயிருப்பர். அவர்களை முதுமை தீண்டாது. நரையும் திரையும் நாடி வந்து பற்றா. பிசிராந்தையார் ஆண்டு பலவாகியும் இளமை குன்றாதிருந்தார்.

நரையின்றி வாழ்ந்த பிசிராந்தையாரைக் கண்டு வியப்புற்றோர் புலவரை வினாவுகின்றனர். ஆம்! முதுமையின் அடையாளமாகிய நரையை விரும்பி ஏற்போர் யார்? நரைத்த வெண்மயிரைக் கருமைச் சாயம் பூசி ஒப்பனை காட்டி உலகில் திரிவோர் எத்தனை பேர்? செய்தித் தாள்களைப் புரட்டினால் “நரையா? கவலைப்படாதீர்கள்!” என்ற விளம்பரங்களைப் படிக்கின்றோம். கேட்கின்ற உங்களில் பலருக்கும் கூட நரையின்றி வாழ விருப்பம்தானே! இதோ நரையின்றி வாழப் பிசிராந்தையார் வழி கூறுகிறார் கேளுங்கள்!

காதல் வாழ்க்கை அன்பின் வழிப்பட்டது. காதல் வாழ்க்கை இன்பந் தருவது. ஆனால் பலர் நினைப்பது போல எளிதன்று. ஒருவன் ஒருத்திக்கு உண்மையான கணவனாக அமைவதும், ஒருத்தி ஒருவனுக்கு உண்மையான மனைவியாக அமைவதும் அருமையிலும் அருமை. கணவனாக திறைவேற்றும் வாழ்க்கையிலும், மனைவியாக நிறைவேற்றும் வாழ்க்கையிலும் ஏராளமான உடற் கடமைகள்-உயிர்க் கடமைகள் அமைந்துள்ளன. அந்தக் கடமைகள் அனைத்தையும் இனிதே நிறைவேற்றுவதற்கு நிறைந்த குணங்கள் வேண்டும். நல்ல மனைவியைப் பெறாத கணவன், வாழ்க்கையில் இன்பத்தையும் பெறுதல் இயலாது. அமைதியையும் பெறுதல் இயலாது.

அதனாலன்றோ, பிற்காலக் கவிஞர் “சற்றேனும் ஏறுக்கு மாறாயிருப்பாளே யாமாகிற் கூறாமல் சந்நியாசம் கொள்” என்று பாடினார். திருவள்ளுவரும் வாழ்க்கைக்கு வாய்க்கும், மனைவி நலம் செய்பவளாக இருக்க வேண்டும் என்ற குறிப்பில், வாழ்க்கைத் துணை நலம் என்றே ஓர் அதிகாரம் அமைத்தார். வாழ்க்கைத் துணை நலம்! அவர், மனைவிக்குத் தந்த பெயர் வாழ்க்கைத் துணை! அவள்மூலம் பெறுவது நலம்!

 “தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

என்றது. வள்ளுவம். ஒரு சிறந்த மனைவி தன்னை, தன்னுடைய உடலை, உயிரை, உயிரினும் சிறந்த கற்பு நலத்தைத் தானே பாதுகாத்துக் கொள்கிறாள். ஆம்! ஒரு மனைவி தன்னைக் காப்பாற்றிக் கொண்டாலே தற்கொண்டானைப் பேண முடியும். தற்கொண்டானைப் பேணுதல் வள்ளுவர் கூறும் நுட்பமான வழக்கு. “தன்னைக் கொண்ட கணவனை, உணவு முதலியவற்றால் பேணுதல்” என்று பரிமேலழகர் கூறினாரேனும், அதுவே வள்ளுவத்தின் நிறைவான கருத்தன்று. கணவனின் உடல் நலத்தைப் பேணுதல் மனைவியின் சாதாரணக் கடமைகளில் ஒன்று. அதனினும் சிறந்த கடமை உயிர் நலம் காத்தல். கணவனின் கற்பு நலம் காத்தல்.

ஒரு மனைவி தனது கணவனின் வருவாய்க்குத் தக்க வாழ்க்கை நடத்தாது போனால் கணவன் கடன்படுவான். அவ்வழி பலரால் இகழப்படுவான். அதன் காரணமாக விலங்கியல் உணர்வுடையோர் கள்வராகவும், மனித உணர்வில் ஊசலாடிக் கொண்டிருப்போர் இரவலராகவும், உருமாற்றம் பெறுவர். ஆதலின் கணவனின் புகழ் காக்க விரும்பும் மனைவி வளத்தக்க வாழ்க்கையுடையவளாக அமைய வேண்டும்.

பால் உணர்வும், அவ்வழிப்பட்ட இன்ப விழைவும், நுட்பமான வாழ்வியற் கலைப்பாடு. இக் கலைப்பாடு நிறைந்த அருமைப்பாட்டுடன் கணவனை நிறை நல இன்பத்தில் பிணைத்து வைக்கத் தெரியாதவ்ர்கள் சிறந்த மனைவியராதல் அரிது. அதன் காரணமாக வாழ்க்கையில் ஏமாற்றமுற்ற கணவன் பரத்தையர் வழி போகத் தலைப்படுவான். இதனால் வாழ்க்கை சொர்க்கமாவதற்குப் பதில் நரகமாகி விடும். ஒருவனுக்கு மனைவியே மாட்சிமையைத் தருபவள்.

கணவனுக்கு மாட்சிமை மட்டுமின்றி அவனைத் தெய்வமாக்கி, வீடும் தர வல்லவள் மனைவியேயாம். இதனை வள்ளுவம்,

“பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு”

என்று பேசும், பிசிராந்தையாருக்கு வாய்த்த மனைவி மாட்சிமை மிக்குடையாள், அது மட்டுமா? மாட்சிமைமிக்க ஒரு மனைவி கிடைத்து, ஒரு கணவன் குடும்பம் நடத்துவானானால் ஆங்கு நன்மக்கள் தோன்றுவர். மக்கட்பேறு உலக இயற்கை. ஆனால் நன் மக்கட்பேறு சிறப்பியல் வழிப்பட்டதேயாகும். பெற்றோர் என்ற பெயரைத் தாங்குதல் எளிதன்று. ஆனால் பெற்றோர் என்ற தகுதியைப் பண்பாட்டினைக் காப்பது சிறப்புடைய கடமையாகும். பெற்றோர் தவறிழைப்பின் பல தலைமுறைகளின் வரலாறு கெடும். ஆதலால் மக்கட்பேறு பெரிதன்று. நன்மக்கட் பேறே மனைமாட்சியின் நன்கலமாகும்.

பிசிராந்தையாரும், அவர்தம் வாழ்க்கைத் துணைவியும் ஒருவரையொருவர் விஞ்சிய பண்பினர். அவர்தம் வாழ்க்கையின் பயனாகத் தோன்றிய மக்கள் நல்லவராயிருப்பதற்குத் தடையென்ன?

பழங்காலத்தில் ஏவல் செய்பவர் தரங்குறைந்த சொற்களால் “வேலைக்காரன்” “கூலிக்காரன்” என்று அழைக்கப் பெற்றதில்லை. “இளையர்” என்ற இனிய வழக்கு இருந்திருக்கிறது. ஏவல் கொள்வது, ஏவல் செய்வது என்ற முறை அனுபவத்தின் வழி வந்ததேயாகும். ஏவல் கொள்வோர் ஆண்டில் அனுபவத்தில் மூத்தவராகவும், ஏவல் செய்வோர் அவர் வழி இயங்குபவராகவும் இருத்தல் வேண்டும் என்பதே மரபு. ஏவல் செய்வோர் ஏவல் கொள்வோரின் அனைத்து நலன்களுக்கும் அரணாக விளங்க வேண்டும். அத்தகைய ஏவல் செய்வோர் கிடைத்தாலே ஏவல் கொள்வோர் வாழ்க்கை இன்பமானதாகவும், பாதுகாப் புடையதாகவும் அமையும். அங்ஙனம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லையாயின் ஏவல் செய்வோர் இன்றியே வாழ்தல் இன்பந்தரும்.

ஏவல் செய்வோர், ஏவல் கொள்வோர் கருதும் இயல்பிலேயே, கருதும் இயல்பினில் சிறந்து விளங்க வேண்டும். ஏவல் செய்வோர், ஏவல் கொள்வோரிடையே அடிப்படை நோக்கங்களில் முரண்பாடுகள் இருத்தல் கூடாது. ஏவல் கொள்வோர் நினைப்பனவே ஏவல் செய்வோர் நினைந்து, ஏவல் கொள்வோர் நலனையே நாடி ஏவல் செய்வார், வாழ்க்கையை அமுதமாக்கும் மருந்தனையர். பிசிராந்தையாருக்கு வாய்த்த இளையோர் அத்தகையோர்.

வீட்டிற்கு அணிகலன் செய்யும் மனைவி, நல்லாள் ஆயினள். மக்கள் நல்லவராயினர். இளையர் இனியவராயினர். இவர்களால் வீடு விழுமிய நலன்கள் சிறந்ததாக அமைந்தது. நல்வாழ்க்கைக்கு இதுபோதாது. நாடும் நன்றாக இருக்க வேண்டும்.

நாட்டின் நடைமுறை அரசைச் சார்ந்தது. நாட்டில் நல்லன நடந்தாலும் சரி, தீயன நடந்தாலும் சரி, அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். அரசு மறுக்கப் பெறாத - மறுக்க முடியாத அதிகாரத்தின் சின்னம். அந்த அரசு தன் அதிகாரத்தை நாட்டுமக்களை நல்ல முறையில் வாழ்விக்கப் பயன்படுத்த வேண்டும். அரசு நல்லனவே செய்யவேண்டும் அல்லன செய்யக் கூடாது.

பிசிராந்தையார் கண்ட அரசு, அல்லன செய்யாத அரசு, நல்லனவே செய்த அரசு. அதுமட்டுமா! உயிர்களைக் காத்த அரசு, பிசிராந்தையாருக்கு நாட்டிலும் கவலையில்லை வீட்டிலும் கவலையில்லை. நாடும் வீடும் நல்லவாறு அமைந்துவிட்டால் போதுமா? நாட்டுக்கும் வீட்டுக்கும் இடையில் ஒரு பொல்லாத உலகம் இருக்கிறதே! அந்த உலகமும் செப்பமாக இருந்தால்தானே நிறைநல்வாழ்வு கிடைக்கும். அந்தப் பொல்லாத உலகம் எது? அதன் பெயர்தான் ஊர் என்பது.

ஊர் என்பது ஊரினைச் சார்ந்த ஊராரைக் குறிக்கும். ஊரிலுள்ள தோட்டங்களுக்கு வேலியுண்டு. ஆனால் ஊராரின் வாய் வம்பளப்புக்கு வேலியில்லை. அவர்கள் நான்குபேர் கூடினால் எதையும் பேசுவர்; இல்லாததை உருவாக்கி விடுவர்; இருப்பதை மறைத்துவிடுவர். அம்மம்மா! ஊரார் என்ற இந்தப் பொல்லாத சமூகத்திற்கு அஞ்சி வீண் பெருமைக்காக - ஊர் மெச்சுவதற்காக வீட்டுச் சடங்குகளைக் கடன்பட்டுச் செய்து ஏழையரானோர் எத்தனை பேர்? ஏன்? ஊராரின் கொட்டம் அதிகமானதற்கு அடையாளமாக “உடம்பிற்காக இல்லாது போனாலும் ஊருக்காகவாவது வேண்டாமா?” என்ற பழமொழியே தோன்றிவிட்டது. நான்குபேர் என்ன நினைப்பார்கள் என்ற கவலை எத்தனை மனிதரை அரித்து அழித்து இருக்கிறது. எத்தனை தூய காதலர்களை அலர் தூற்றி அயர்வுக்கும் கவலைக்கும் ஆளாக்கி அழித்திருக்கிறது. தற்கொலையைத் தழுவிக் கொண்டவர்கள் எத்தனைபேர்? ஒரு நல்ல ஊர் - சமூகம் அமைவது அவ்வளவு எளிதன்று.

ஊர் என்றால் நாலுமறிந்த நல்ல பெரிய மனிதர்கள் நாலுபேராவது இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உயிர் வாழ்க்கை உவப்புடையதாக அமையும். ஊரிலுள்ளோரில் பலர் கல்வியறிவில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும். புலனழுக்கற்ற அந்தணாளர்களாக விளங்க வேண்டும். அவர்கள் தன் முனைப்பு அற்றவர்களாகவும் அடக்கமும் பணிவும் -உடையவர்களாகவும் அமையவேண்டும். அத்தகைய ஊர் நன்நடை நல்கும் ஊர். ஒழுக்கத்திற்கு உருக்கொடுக்கும் ஊர். பிசிராந்தையார் வாழ்ந்த ஊர் அத்தகைய நல்ல ஊர். ஆதலால் ஆண்டு பலவாக நரையின்றி வாழ்ந்தேன் என்று பெருமிதத்துடன் கூறுகின்றார் பிசிராந்தையார்.

மருத்துவ உலகில் “பஞ்ச கல்பம்” என்று, ஒன்று கூறுவர். இந்தப் பஞ்ச கல்ப மருந்தை உண்பவர் நெடிது வாழ்வது என்பது நம்பிக்கை; அதுவும் ஆராய்ச்சிக்குரியது. ஆயினும் பிசிராந்தையார் தந்துள “பஞ்ச கல்பம்” கிடைத்திடின் காலத்தை வென்று வாழலாம். என்றும் இளைஞராக வாழலாம். இது முக்காலும் உண்மை.

பிசிராந்தையார் தந்துள பஞ்ச கல்பத்தை மீண்டும் ஒரு தடவை சிந்தனை செய்யுங்கள். மனைவியும் மக்களும் மாட்சிமைமிக்க குணங்களுடையவர்களாகத் திகழவேண்டும். நாம் கருதுவதையே கருதிச் செயலில் துணை நிற்கும் ஏவல் செய்வோர் வேண்டும். அரசு நல்லது அல்லாதன செய்யாததாக அமையவேண்டும். ஊரில் சான்றோர் பலர் வாழ வேண்டும். பிசிராந்தையார் குறிப்பிடும் பஞ்சகல்பம் உடலுக்கும் பாதுகாப்புத் தருவது. உயிருக்கும் பாதுகாப்புத் தருவது. பிசிராந்தையார் காட்டியுள்ளது போன்ற வீடுகளை, நாட்டு அரசை, ஊரைக்காண முயற்சி செய்வோமாக!

“யாண்டுபல வாகநரையில வாகுதல்
யாங்காகிய ரென வினவுதி ராயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே

(புறம்-19)