குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/பட்டுக்கோட்டையின் பாடல்கள்


18


‘பட்டுக்கோட்டை’யின் பாடல்கள்

தமிழ், கவிதை மொழி - ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே கவிதை நலம் கண்டு போற்றிய நாடு தமிழ்நாடு. தமிழருக்கும், தமிழர் வாழ்வியலுக்கும் உணர்வும் உரமும் ஊட்டிய கவிஞர்கள் பலர் தோன்றிய நாடு இது. இன்றுவரை அந்தக் கவிஞர் பரம்பரை வளர்ந்து வாழ்ந்து வருவது தமிழகத்தின் சிறப்புக்களுள் ஒன்று. 20ஆம் நூற்றாண்டுத் தமிழகத்திலும், நல்ல பல கவிஞர்கள் தோன்றி வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வாழ்ந்து வரலாறு முடித்த ஒரு சிறந்த கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம். இன்றையக் கவிதைகள் பெரும்பாலும் திரைப்படப் பாடல்களாகவே வெளிவருகின்றன. இது காலத்தின் விளைவு. திரைப்படம் பார்க்க விருப்பம் இல்லாதபோனாலும், இந்தப் பாடல்களைக் கேட்டு அனுபவிக்கவாவது திரைப்படங்கட்குச் செல்ல வேண்டும் என்று விருப்பம் தோன்றுகிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நஞ்சை கொழிக்கும் தஞ்சையைச் சார்ந்தவர். சமுதாயத்துறையில் முற்போக்குக் கருத்தினர். எளிய வாழ்வினர். முகமன் கூறாமல் உள்ளதைச் சொல்லுபவர். வளங்கள் பலவற்றைச் சுவைத்தறியாதவர். இந்த முன்னுரை கவிஞரை அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறோம்.

இவருடைய பாடல்கள் இசைப் பாடல்களாகவே வெளிவந்துள்ளன. அதிலும் பெரும்பாலும், கிராமீயப் பண்பையும், பண்ணையும் தழுவி வெளிவந்துள்ளன. உருவகங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டுகிறார். கிராமத்துச் சாதாரண மனிதனின் மொழியில் பேசுகிறார். பாடல்கள் எளிய நடையில் இருந்தாலும் கருத்தால் அவை ஆழமாக இருக்கின்றன. இருக்கும் குறைகளைச் சுட்டிக் காட்டுகிறார். வளரவேண்டிய நிறைவுகளையும் வரிசைபடுத்திக் காட்டுகிறார். பொதுவாக, கவிதைகள் சிந்தைக் கினியனவாக - வாழ்வுக்கு வளமூட்டுவனவாக இருக்கின்றன.

உலகம் தொடங்கின நாள்தொட்டு, மனித குலத்தில் பல்கிப் பெருகி வருகின்ற வேற்றுமையுணர்வுகளும், வேறுபாடுகளும் வருத்தத்தைத் தரக்கூடியனவாக உள்ளன. பலர் கூடி வாழும் சமுதாயத்தை அமைப்பதே மனிதனின் தலையாய கடமை, சமுதாய அமைப்பைத் தோற்றுவித்து, அந்த அமைப்பைக் காப்பாற்றுவது தலையாய ஒழுக்கம். ஆனால், இன்றைய மனிதனோ அதைச் செய்யாமல், சமுதாய அமைப்பில் கலகங்களை எழுப்பிக் கலைக்கின்றான். சமுதாய அமைப்பின் தோற்றத்திற்கும் அவற்றின் - பாதுகாப்பிற்கும் துணை நிற்கவேண்டிய அரசியல், மொழி, சமயம் ஆகியவை களின் பேராலேயே வேற்றுமைகளை விளைவித்துப் பகைமையைத் துண்டி விடுவதைப் பார்க்கிறோம். இப்போக்கு கவிஞரை மிகவும் வருத்தியிருக்கிறது. பல்வேறு கவிதைகளில், வேற்றுமைகளை விலக்கி, ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார். விண்ணையிடிக்கும் மலையின் முகட்டிலே, அருவிகள் தோன்றுகின்றன. அந்த அருவிகள் பொழியும் இனிய நீர்ப்பெருக்கு கடலோடேயே கலக்கின்றன. ஆனால், தனி மனிதனோ சமுதாயம் என்ற பெருங்கடலில் கலப்பதில்லை. உயர்வும் தாழ்வும் வளர்க்கின்றான் என்று பாடுகின்றார்.

“உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியிலே கலக்குது
ஒற்றுமையில்லா மனித குலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது”

என்று பாடுகிறார்.

மூங்கில் குத்திலே மூங்கில்கள் வளர்கின்றன. ஓங்கி வளர்கின்றன. ஒன்றையொன்று தழுவி வளர்கின்றன என்று எடுத்துக்காட்டி, மனித குலத்தோடு ஒட்டாமல் ஒதுங்கியிருந்தால் உயர முடியுமா? என்று கேட்கிறார். மேலும் ஒருபடி மேலே சென்று, ஒற்றுமையில்லாது போனால் உயர முடியாதது மட்டுமின்றி, வளர்ச்சியும் கெடும் என்றும் உணர்த்துகிறார். கவிதையில் சிறந்த உவமை நயம் இருப்பது படித்து இன்புறத்தக்கது.

“ஓங்கி வளரும் மூங்கில் மரம்
ஒன்னையொன்னு புடிச்சிருக்கு
ஒழுங்காகக் குருத்துவிட்டு
கெளை கெளையா வெடிச்சிருக்கு
ஒட்டாமே ஒதுங்கிநின்னால் உயரமுடியுமா?-எதிலும்
ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா?”

என்ற பாடற்பகுதி இனிமை வாய்ந்ததாகும்.

ஒரு சிறந்த கவிஞன் தனக்கு முன்னே வாழ்ந்த கவிஞர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு நயம்படத் தன் மொழியில் வழிமொழிந்து பேசுதல் இயல்பு. இவரிடம் இத்தகு ஆற்றல் அமைந்திருப்பதைப் பல்வேறிடங்களில் காண முடிகிறது.

திருவள்ளுவர்,

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்,
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

என்றும், தாயுமானவர், "காகம்போல் உறவு கலந்துண்ணக் கண்டீர்" என்றும் கூறிய அறிவுரையை மனத்தகத்தே கொண்டு "கானக் கருங்குயிலின் கச்சேரியாம்' என்ற பாடலில் பாடுவதும் படித்தின்புறத்தக்கது. இப்பாடல் முழுவதுமே படித்து இன்புறத்தக்கது.

பாடலில் காக்கைகளும், குருவிகளும் மனிதர்களின் கோணல்களை விமரிசனம் செய்யும் பகுதி நகைச்சுவை நிரம்பியதாக இருக்கிறது. ஆனால் சிரித்து மகிழத்தக்க நகைச்சுவையன்று. சிந்தித்து ஒரு சொட்டுக் கண்ணிர் வடித்தற்குரிய நகைச்சுவையாகவே இருக்கிறது.

நம்முடைய மக்கள் ஊழின் வலிவை எண்ணி, ஊழின்வலியை மிகுதிப்படுத்தி உழைப்பாற்றலைத் தரத்தில் தாழ்த்தி வாழ்விழந்து போயினர். இம் மனப்போக்கு வளரும் சமுதாயத்திற்கு நல்லதல்ல. கவிஞர் இயல்பாகவே, இத்தகு கருத்துக்களில் நம்பிக்கையில்லாதவர். அவருடைய கருத்துக்கள் கற்பனையில் தோன்றியவை அல்ல. யதார்த்த உலகத்தையும், அனுபவத்தையும் மையமாகக் கொண்டே தோன்றியிருக்கின்றன. கவிஞர் "ஏற்றமுன்னா ஏற்றம்" என்ற பாடலில், "விதியின் உணர்வால் வீழ்ந்து கிடக்கும் வீணரெல்லாம். வேலை செய்து வீறுபெறவேண்டும்" என்று குறிப்பிடுகிறார். இப்பாடல் முழுவதிலும் உழைப்பின் உயர்வு, சேர்ந்துழைப்பதன் அவசியம் ஆகிய சிறந்த சித்தாந்தங்களைத் தந்ததான பாடற் சந்தத்தில் விளக்கியிருக்கிறார்.

உழைத்தால் மட்டும் போதாது. உற்பத்தியைப் பெருக்கினால் மட்டும் போதாது. சமுதாயத்தில் நரியைப் போலத் தந்திரங்கள் செய்து ஏமாற்றி - எலியைப் போல் உழைக்காமல் பொருள் சேர்த்து வாழ்வது முறையல்ல. இக்கருத்தைக் கவிஞர் "நாங்கள் இதயமுள்ள கூட்டம்” என்ற கவிதையில் அழகாக விளக்குகிறார். இக்கருத்தை விளக்குவதோடு மட்டுமின்றி, இவ்வுலகில், நன்மை செய்வோர் அல்லற்படுவதையும் அக்கிரமங்கள் செய்வோர் வாழ்க்கையை அனுபவிப்பதையும் இடித்துக் காட்டுகிறார். கவிஞர், "ஏமாறமாட்டோம்” என்ற தற்காப்புணர்ச்சியை மட்டும் ஊட்டவில்லை. இந்த உணர்வு பெரும்பான்மை யோரிடத்தில் இயல்பாகவே இருக்கிறது. தன் வாழ்க்கையில் ஏமாற விரும்பாதவர்கள் பலர் பிறரை ஏமாற்ற விரும்புகின்றனர். கவிஞர்,

"ஏமாற்றவும் மாட்டோம் - நாம்
ஏமாறவும் மாட்டோம்”

என்று பாடுவது புதிய மரபு. முதலில் சமுதாயத்தில் வளர வேண்டிய ஒழுக்கம் ஏமாற்றமாட்டோம் என்பதேயாகும்.அதுவளர்ந்து விட்டாலேயே ஏமாறுதல் இவ்வையத்தில் இருக்காது. இக்கருத்தை வலியுறுத்தும் கவிஞரின் மனப்போக்கில், ஒழுக்கத்தை வற்புறுத்துவதோடு மட்டுமின்றி,அவ்வொழுக்கத்தைத் தூண்டி வளர்க்கக்கூடிய சமுதாயச் சூழ்நிலை இருக்கவேண்டும் என்று கருதுவதையும் வெளிப்படுத்துகின்றார்.

எரிகின்ற நெருப்பில் விறகுகள் அகப்பட்டு அழிவது போல, மனிதன் தன்னலத்தில் சிக்கி அழிந்து கொண்டிருக்கிறான். தன்னலத்தின் தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்காகச் சில பொழுது தோற்றத்தால் அறம் போலக் காட்டும் சில காரியங்களையும் செய்வான். ஆனால் உள்நோக்கம் வேறு. உள்நோக்கத்தை அறிகின்ற பொழுது விலாவறச் சிரிக்கத் தோன்றும். இவ்வாழ்க்கையே இப்படியென்றால், இக்கவிஞருடைய கவிதையாற்றலால் வேதனை கலந்த வியப்புணர்ச்சி மிகுகிறது. "இரைபோடும் மனிதர்க்கே இரையாகும் வெள்ளாடே! இதுதான் உலகம்! வீண் அனுதாபம் கண்டு நீ ஒருநாளும் நம்பிடாதே" என்கிறார். எளிய சொற்கள்! ஆழமான பொருள்! நினைந்து இன்புறத்தக்க உவமை. இக்கவிதைதான் நம்மைப் பட்டுக்கோட்டையாரிடம் ஈடுபடுத்தி ஆற்றுப்படுத்தியது.

அடுத்து மனித வாழ்வு துன்பப் படுகுழிகளும், இன்ப மேடுகளும் விரவிக் காணப்படுவது. படுகுழிகளே அதிகம். மேடுகள் குறைவிலும் குறைவே. பலர், துன்பங்களைக் கண்டபோது துவண்டு விடுவர். அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமில்லை. இருக்கவும் முடியாது. அதனாலன்றோ திருவள்ளுவரும் கூட,

'இன்பம் விழையான்
இடும்பை இயல்பென்பான்'

என்றார். துன்பங்கள் அறிவைத் தூண்டி வளர்க்கும். ஆற்றலைப் பெருக்கும். இக்கருத்து, அறிவும் தெளிவும் பொருந்திய முற்போக்குக் கருத்துடைய மனிதனுக்கே விளங்கும். கவிஞர், மிக அழகாக, இக்கருத்தை வலியுறுத்துகின்றார், "துயரிதனைக் கண்டே பயந்து விடாதே, சோர்வை வென்றாலே துன்பமில்லை" என்கிறார். இக்கவிதையின் ஈற்றடிகள் நண்பர்களின் நிலைமைகளையும் விமரிசனம் செய்கின்றன.

கவிஞர் கடவுள் நம்பிக்கையை மறுக்கின்ற முற்போக்குப் பாரம்பரியத்தைச் சார்ந்தவர். எனினும், கண்மூடித் தனமாகக் கண்டபடி கடவுள் நம்பிக்கையை இழித்துப் பேசவில்லை. மாறாகக் கடவுள் நம்பிக்கை தோன்றி வளர்வதற்குதவும் நற்கருத்துக்களைக் கூறுகிறார். சமயத் துறையில், சமய நிலையங்களில் புகுந்துள்ள கேடுகளை விளக்குகிறார். நடுநிலை உணர்வோடு சிந்தித்தால் யாரும் கவிஞரின் கருத்தை மறுக்க முடியாது.

கவிஞர், தூயபக்தி மலரவேண்டும் என்று கூடப் பேசுகின்றார். ஆனால், பக்தி பக்திக்காகவே இருக்க வேண்டுமே யொழிய சுண்டலுக்காக இருக்கக்கூடாது என்கிறார். இன்று நம்முடைய சமய நிலையங்களைச் குழ்ந்திருக்கிற குறைகளுள் தலையாயது, மடைப்பள்ளி ஆட்சியேயாகும். ஐம்புலன்கள் ஆர அருளாரமுதத்தை அனுபவிக்க வேண்டிய திருக்கோயில்களில் பொறிகளுக்குத் தீனிபோடும் சூழ்நிலை! கவிஞர்,

"பக்த ஜனங்கள் கவனமெல்லாம் தினமும் கிடைக்கும்
சுண்டலிலே
பசியும் சுண்டல் ருசியும் போனால் பக்தியில்லே
பஜனையில்லே

என்று பாடுவது சிரிக்கவும் தூண்டுகிறது - சிந்திக்கவும் தூண்டுகிறது. -

அன்பு மழை பெய்தால் இறையருள் வெள்ளம் பாயும் என்று கூறுகின்றார். இக் கருத்து, "வஞ்ச ஆறுகள் வற்றின, பக்தி வெள்ளம் பரவிற்று” என்ற அப்பரடிகள் கருத்தை நினைவூட்டுகிறது. கவிஞருடைய கவிதையில் உணர்ச்சிகளுக்கு மாறாக அமைதி தவழ்வதைப் பார்க்கிறோம்.

"சோதியிறையருள் ஆறு பாயவே, அன்பு மழை
பெய்யவே, பேதம் மறைந்து உய்யவே"

என்று கவிஞர் பாடும்போது தூய அமைதியைக் காண்கிறோம்.

இறைவனுடைய பக்தியில் ஈடுபட்ட அடியார்கள் எல்லாவற்றையும் இறைவன் மயமாகப் பார்த்தனுபவிப்பார்கள்.

'இருநிலனாகித் தீயாகி' என்று அப்பரடிகள் பாடுவார். 'வானாகி மண்ணாகி என்று மாணிக்கவாசகர் இறைவனை வாழ்த்துவார்.

நம்முடைய கவிஞரும்,

"விண்ணும் மண்ணும் நீயானாய்,
வெயிலும் மழையும் நீயானாய்,"

விளங்கும் அகில உலக மீது.
நீயில்லாத இடம் ஏது”

என்று பாடுகிறார். பாடல் படிக்கப் படிக்க இன்பமாக இருக்கிறது. மிக உயர்ந்த சித்தாந்தத்தை, மிக எளிமையான சொற்களால் விளக்கும் ஆற்றல் உண்மையிலேயே பாராட்டுதற்குரியது.

கோயில்களில் பொருளாட்சி ஆதிக்கம் செலுத்தும் அவல நிலையையும் அவர் சாடுகிறார். காசு கொடுத்தால் வழிபாடு கிடைக்கும். இல்லையானால் இல்லை. கோயிற் கதவுகள் பூட்டப்பட்டு வழிபாட்டுரிமை மறுக்கப்படும் என்று அநீதியைக் கண்டிக்கிறார்.

"காசு தந்தால்தான் உன்னைக்
காணும் வழி காட்டுவதாய்
கதவு போட்டு பூட்டி வைத்துக்
கட்டாயம் பண்ணுவதைப் பார்த்தாயா?"

என்று கேட்கிறார். பாடலின் கருத்தை யார்தான் மறுக்க முடியும். இங்ஙனம் இருக்கும் குறையை எடுத்துக் காட்டுவது நாத்திகமா? ஆத்திகமா? கவிஞர் பதில் சொல்லிவிட்டார். காலம்தான் விடை காண வேண்டும்.

கவிஞர் இந்த உலகத்தின் விசித்திரமான போக்குகளைக் கண்டு சிரிக்கின்றார்-சிந்தனை செய்கிறார். வெற்றி தோல்விகளைக் கணக்கிடுகின்றார். பொதுப்பணி உலகத்தில் வேண்டிய எல்லாம் ஒருங்கமையாத-அமைத்துக் கொள்ள முடியாத பொருந்தாச் சூழ்நிலையை விளக்குகின்றார். சிலரிடத்தில் ஆற்றல் இருக்கிறது. ஆனால் உண்மையில்லை. உண்மை இருக்கிறது. அவர்களிடத்தில் ஆற்றல் இல்லை. இவ்விரண்டும் இருந்தால் சமுதாயம் ஏற்றுகொள்வதில்லை. இந்தப் பொருந்தா வேறுபாடுகளைக் கவிஞர் நினைந்து நினைந்து நமக்கு நினைவு படுத்துகின்றார்:

"எல்லோரும் நம்பும்படி சொல்லும் திறனிருந்தால்
சொல்விலே உண்மையில்லை
உள்ளதை உள்ளபடி சொல்லும் மனிதனிடம்
உணர்த்திடும் திறமையில்லை
உண்மையும் நம்பவைக்கும் திறனும் அமைந்தவனை
உலகம் ஏற்பதில்லை"

என்று பாடுகிறார். பொருந்தா வேறுபாடு இவ்வளவு தானா? மேலும் தொடர்கிறார் கவிஞர்:

பொதுப்பணியில் ஈடுபட்டு நல்லன செய்ய விரும்புவோர்க்குக் கையில் காசில்லை. செல்வம் இருப்போர்க்குப் பொதுப்பணியில் நினைப்பில்லை. எல்லாவற்றுக்கும் மேல், பொதுப்பணியில் நினைப்பும் செய்து முடிக்கத் தேவையான செல்வமும் இருந்தாலும், காரியத்தை செய்து முடிக்க நல்ல கூட்டாளிகள் கிடைப்பதில்லை என்ற குறையை உணர்ந்து கூறுகிறார். இது, அனுபவ ரீதியான உண்மை.

"பொதுப்பணியில் செலவழிக்க
நினைக்கும்போது பொருளில்லை,
பொருளும் புகழும் சேர்ந்த பின்னே
பொதுப்பணியில் நினைவில்லை,

போதுமான பொருளும் வந்து
பொதுப்பணியில் நினைவும் வந்தால்
போட்டதிட்டம் நிறைவேறக்
கூட்டாளிகள் சரியில்லே."

என்கிறார்.

இத்தகு சிறந்த கவிதைகளைத் தந்த, கவிஞர் நிறைநாள் வாழ முடியாமல் போனது தமிழகத்திற்குப் பேரிழப்பேயாகும். வாழ்ந்த நாள் கொஞ்சமேயாயினும், கால வெள்ளத்தைக் கடந்து நிற்கின்ற கருத்துக்கள் நிறைந்த கவிதைகள் பலவற்றைத் தந்திருக்கிறார். மனிதகுலம் வாழுநாள் இக்கவிதைகள் வாழும்! கவிஞன் புகழ் வாழும்!