குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/பாரதிதாசனின் உலகம்



16
பாரதிதாசனின் உலகம்

1. பாரதிதாசன் கண்ட சமுதாயம்


அன்பிற்கும் பாராட்டுதலுக்குமுரிய துணைவேந்தர் அவர்களே! அறிஞர் பெருமக்களே! மாணவ நண்பர்களே! பாவேந்தன் பாரதிதாசன் நூற்றாண்டு விழா நிகழும் காலத்தில் பாவேந்தன் பாரதிதாசன் பிறந்த மண்ணில் பாவேந்தனைப் பற்றி எண்ணவும் பேசவும் தங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் வாய்ப்பளித்த புதுவைப் பல்கலைக் கழகத்திற்கும் துணையாயமைந்த திரு. ஆனந்தரங்கம் பிள்ளை குடும்பத்தினர் அறக் கட்டளை யினருக்கும் நன்றி! கடப்பாடு!

முன்னுரை

தமிழர் வளர்ந்த தலைமுறையினர்: ஆம்,! தமிழ் மொழி வளர்ந்த மொழி. மானுடத்தின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் வாழ்தலுக்கும் வழிகாட்டும் சான்றோர் பலர் தமிழகத்தில் வாழ்ந்தனர்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சிந்தனை உயர்ந்திருந்தது; முதிர்ச்சி அடைந்து இருந்தது; உலகத்தை இயக்கும் உயிர்ப்புப் பெற்று இருந்தது. தமிழர் சமுதாயத்தின் வாழ்க்கைைையக் களமாகக் கொண்டு சில இலக்கியங்கள் தோன்றின. தமிழர் சமுதாயத்தை நெடுந்துரப் பார்வையில் இயக்கிய சமுதாய விஞ்ஞானிகளாகப் பல தமிழ்க் கவிஞர்கள் விளங்கியுள்ளனர்; முன்னேறிச் செல்லும் சமுதாயத்திற்குக் கருத்துக்களைத் தந்துள்ளனர். ஆனால் அக்கருத்துககள் வாழ்வாக மலராமை காரணமாகப் பல சமயங்கள் பல்லவி, அனுபல்லவியாக அமைந்துவிட்டது என்பது உண்மை. அனுபல்லவியானாலும் ஆலாபனத்தில் வேற்றுமையிருக்கும். அதாவது விசைமிக்குடைய சொற்கள் வந்து வீழும்.


பாவேந்தன் பாரதிதாசன்

நம்முடைய தலைமுறையில் தோன்றியவர் பாவேந்தன் பாரதிதாசன். அவன் புரட்சிக் கவிஞன். ஆற்றல் மிக்குடைய படைப்பாளன், தமிழையே உயிரெனக் கொண்டுலாவிய ஏந்தல்; ஆயினும் விரிந்த உலக பார்வை கொண்டவன்; பொதுவுடைமைச் சமுாயத்திற்குப் பாடிய கவிஞன், உழைப்பாளர் உலகத்திற்குப் புகழ்ப்பரணி பாடியவன். பாவேந்தன் கவிதைகள் எளிய நடையில் இன்பத் தமிழாக அமைந்தன! பாவேந்தன் கவிதைகள் எழுச்சியைத் தருவன. ஆற்றல்மிக்க தூண்டுதல்களாகப் பாவேந்தன் கவிதைகள் விளங்கின. விளங்கிக் கொண்டிருக்கின்றன. கவிஞனின் கவிதைகள் தூணியிலிருந்து புறப்படும் அம்புபோல் சென்று தைக்கும் தகைமையின. கவிதைகளின் பொருள்கள் வெளிப்படையானவை. நமது நூற்றாண்டில் நாம் கிண்ட மாபெரும் கவிஞன் பாவேந்தன் பாரதிதாசன். பாவேந்தனுக்கும் நூற்றாண்டு விழா வந்துவிட்டது. ஆனால், பாவேந்தன் பாரதிதாசன் கொள்கைகளில் யாதொன்றும் தமிழினத்தை வென்றெடுக்கவில்லை. கொள்கைகள் உயர்ந்து விளங்கி என்ன பயன், தத்துவங்களுக்குரிய பெருமையே அவை செயற்பாட்டுக்கு உரியனவாக அமைவதுதான்! வாழ்வியலுடன் பொருந்தாத எந்தத் தத்துவமும் உலகத்தின் முன் நிற்காது. பாவேந்தன் கொள்கைகள்-கோட்பாடுகள் வாழ்விற்கென்றே பாடம் பெற்றன. ஆம், மரத்துப் போன தமிழினம் வழக்கம் போல் பாரதிதாசனையும் ஏமாற்றவே நினைக்கிறது. பாரதிதாசன் நம் தலைமுறையில் வாழ்ந்த கவிஞன்! அவன் ஒரு குயில். இந்தக் குயிலின் ஓசை கேளாத காதுகள் இல்லை; புதுவையின் குயில்தான்! ஆனாலும் ஆவேசமும் இருந்ததை மறந்துவிட இயலாது. ஆனால் பாவேந்தன் பாரதிதாசனுக்கு அவன் நூற்றாண்டு விழாக் காலத்தில் விழாக்கள் எடுக்காதீர்கள். செயல்திட்டம் தீட்டுங்கள்; போராட்டக் களங்கள் அமையுங்கள்; போராடுங்கள். பாவேந்தன் பாரதிதாசனின் கவிதைகள், தமிழர் வாழ்வாக உருக்கொள்ள வேண்டும். பாவேந்தன் வலியுறுத்திய சமுதாய அமைப்பைக் காண்பதே பாரதி தாசனுக்கு உண்மையான பாராட்டு!

இன்றைய சமுதாயம்


பாவேந்தன் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின் போது தங்களுடன் கலந்து சிந்திக்க எடுத்துக் கொண்ட தலைப்பு, "பாரதிதாசன் கண்ட சமுதாயம்” என்பதாகும். பாவேந்தன் மன்னர்களைப் பாடவில்லை; கடவுளைப் பாடவில்லை; மானுடத்தையே எண்ணி மானுடத்தின் உயர்வுக்கே பாடியவன். ஆதலால், அவன் கண்ட சமுதாயத்தைப் பற்றிச் சிந்திப்பது பயனுடையதாக அமையும். மானுடம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் ஏன் இன்னமும் மானுடம் ஒரு சமுதாயமாகத் தம்மை அறிவார்ந்த நிலையில் உருவாக்கிக் கொள்ள வில்லை? இன்றைய மனிதக் கூட்டம் காடுகளைப் போன்று விளங்குகிறது. காடுகள் தன்னிச்சைப் போக்காகவே வளரும். காடுகளில் ஒழுங்கு இராது; நெறிமுறை இராது. அருவருக்கத் தக்க போட்டிகள் இருக்கும். வல்லாண்மையுடைய மரங்கள் வல்லாண்மை இல்லாத தாவரங்களை அழித்துவிடும். இன்றைய மனிதக் கூட்டமும் அப்படித்தானே இருக்கிறது! எங்கும் மனிதன் தன்னிச்சைப் போக்கையே விரும்புகின்றான். ஒழுங்குகள்-ஒழுக்கங்கள் ஆகியவற்றிடம் மக்களுக்கு நாட்டமில்லை. கையூட்டு தேசீய மயமாகி விட்டது; பழக்கமாகி வழக்கமாகிவிட்டது; வல்லாண்மையுடையோரே வாழ்க்கின்றனர்; நாட்டின் செல்வத்தை, கையடியும் வாயடியும் செய்து அள்ளிக்கொண்டு போகின்றனர். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள். நமது நாடு வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று. திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி உண்டு. இந்தியா ஏழை நாடல்ல; இந்தியர்களே ஏழைகளாக இருக்கிறார்கள். நாட்டின் செல்வத்தை மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினாரே எடுத்துக் கொள்கின்றனர். 80 விழுக்காடு மக்களுக்கு 20 விழுக்காடு செல்வம்தான் கிடைக்கிறது.

‘’Two little for too many" என்றாகிறது மதங்கள் ஏழைகளுக்கே கீதோபதேசம் செய்கின்றன. இன்றைய மனிதக் கூட்டம் பழத் தோட்டங்களை போல மாறி வளர்ந்து உருப்பெற்றால்தான் மானுடம் வளரும். பழத் தோட்டத்தில் ஒழுங்கு இருக்கும். நெறிமுறை இருக்கும். ஒன்றையொன்று சார்ந்து உடன்பாட்டு நிலையில் உத்தரவாதத்துடன் பழமரங்கள் வளரும்; வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் உண்டு; போட்டி இல்லை. ஆக்கிரமிப்பு இல்லை. அழிக்கப்பட வேண்டுவன மட்டுமே அழிக்கப்படும். இப்படி மனித சமூகம் அமைதல் வேண்டும். இத்தகு சமுதாயம் உருவாக பாரதிதாசன் காட்டும் வழி என்ன? நாம் செய்ய வேண்டுவது என்ன? என்பதே இந்தப் பேச்சின் குறிக்கோள்.

மானுடம் வரலாற்றுக் காலத்திற்கு முன் சிறப்பாக வாழ்ந்துள்ளது. பாரதிதாசன் வார்த்தைகளில் கூறுவதானால் "அரசு கடந்து" வாழ்ந்துள்ளது. காலப்போக்கில் மானுடம் தனி உடைமை நாடும் ஆசைக்கு அடிமைப்பட்டுப் போனது. இந்த சூழ்நிலையில்தான் மனிதன் சாதி, மதம், அதிகாரம் ஆகிய தீயூழ்களில் சிக்கித் தவிக்கத் தொடங்கினான். இந்தச் சூழ்நிலையை மாற்றியமைக்கப் பலர் எண்ணினர். பாரதி நமது தலைமுறையில் நம்முடைய காலத்தில் நெம்புகோலாக அமைந்த கவிஞன். சீரழிந்து போன மானுடத்தின் இயல்பைப் பாரதி.

"மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற்கடைக்கண் வைத்தா ளாங்கே
ஆகாவென்று எழுந்தது.பார் யுகப்புரட்சி!
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
வாகான தோள்புடைத்தார் வானமரர்
பேய்களெலாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்;
வையகத்தீர், புதுமை காணீர்!

உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை
பிணிகள்பல வுண்டு; பொய்யைத்
தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க
ளுன்டு; உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு.
தூக்குண்டே இறப்பு முண்டு;
முழுதுமொரு பேய்வனமாம் சிவேரியிலோ
ஆவிகெட முடிவ துண்டு”

(பாரதியார் கவிதைகள்-புதிய ருஷ்யா 1 & 3)

என்ற கவிதைகளில் விளக்குகின்றான். உழுது அறுவடை செய்யும் உழவனுக்கு உணவு கிடைக்கவில்லை, வாய் திறந்து கேட்டாலோ, சிறைக் கொடுமை-சுரண்டும் கும்பலின் கும்மாளம்! அரசியல் சதுரங்கமாயிற்று! எங்கும் கொடுமை! பரந்த-விரிந்த நிலவுலகில் எல்லைகள் தோன்றின! வேலிகள் அமைக்கப் பெற்றன! மானுடத்தின் பொதுமை சுருங்கிற்று!

இதனை பாவேந்தன் பாரதிதாசன்.

"வீட்டிற்கும் வீட்டிற்கும் இடையே வைத்த சுவர்"

என்பான். ஆம்! பிறப்பில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்: ஒன்றுபட்டு வாழ வேண்டியவர்கள். உடைமைப் பற்று - தனியுடைமை நஞ்சு உறவைக் கெடுத்துவிட்டது! தாயிற் சிறந்த அன்பையும் கெடுத்துவிட்டது! எங்கும் பிறர் பங்கைத் திருடி வாழும் ஏமாற்றுக் கூட்டம்! ஏமாற்றும் சூதாடிகளுக்கு அரண் செய்யும் மதப்புரோகிதர்கள்! ஆளுநர்கள் ! ஐயகோ! இந்த இருட்டறையிலிருந்து வெளிச்சத்திற்கு மக்கள் என்று வருவர்?


தனியுடைமை

மக்கட் சமுதாயத்தில் தனியுடைமைச் சமுதாய அமைப்பு கால்கொண்டவுடன் அந்தத் தனியுடைமைச் சமுதாய அமைப்பினைக் கட்டிக் காப்பாற்றச் சாதிகள் உருவாக்கப் பெற்றன; மதங்கள் உருவாகின; பின் அரசுகள் தோன்றின. சுரண்டும் தன்மை வாய்ந்த, பிறர் பங்கைத் திருடும் சமுதாய அமைப்புத் தோன்றியதிலிருந்து நீதி நூல்கள், அரசியல் சட்டங்கள் முதலிய அனைத்தும் சுரண்டும் வர்க்கத்திற்குச் சாதகமாகவே அமைந்துள்ளன. சான்றாக ஒன்று. ஒரு பெட்டிக் கடையில் சில ரூபாய் விலை மதிப்புள்ள பொருள்கள் திருடு போனால், அதுபற்றி வழக்குத் தொடுக்க குற்றவியல் சட்டத்தில் இடமுண்டு. அதேபோழ்து ஒரு சாதாரண இரும்புத் துண்டைத் தன்னுடைய உழைப்பால் விலைமதிப்புடைய பொருளாக்குகின்றான் ஒருவன். மனிதனின் உழைப்போடு தொடர்பு கொள்ளாத பொருளின் மதிப்புக்கும் உழைப்போடு தொடர்பு கொள்ளாத பொருளின் மதிப்புக்கும், உழைப்பால் உருமாற்றம் பெற்று விலைமதிப்புக் கூடியதே அந்த மதிப்புக்கும் இடையேயுள்ள உழைப்பாளியின் பங்கைப் பலர் திருடுகின்றனர். இது குற்றமல்ல. உரிமையாகிவிடுகிறது. பிறர் பங்கைத் திருடும் இந்த உரிமை இன்று பாதுகாக்கப்படுகிறது.

சாதிக் கொடுமை

சாதிகளைச் சாடுவதில் பாவேந்தன் பாரதிதாசன் மிகவும் முன்னேறிவிட்டான்; சாதிகளை எதிர்த்துப் பல நூற்றாண்டுகளாகப் பாடியோர் உண்டு. ஆதி நாளில் திருநாளைப்போவார், கருவறைக் கதவைத் தட்டித் திறக்க முயன்றார்! பூசாரியின் வரம் கிடைக்கவில்லை. கடவுளானாலும் கதவைத் திறக்க முடியவில்லை. பூசாரியின் ஆதிக்கம்! கடவுளின் கருணையால் கடவுட் காட்சிக்கு இருந்த தடை நீங்கியது. அன்று கடவுட் காட்சிக்கே தடையிருந்தது போலும்! திருநாளைப்போவார் விட்டபாடில்லை! தொடர்ந்து போராடினார்! தீயில் வீழ்ந்து போராடினார்! புதிய ஐயராகத் திருநாளைப்போவார் தோன்றினார்! ஆயினும் அந்த வரலாறு தொடரவில்லை. ஐயர். ஐயரே! புலையர் புலையரே! என்ற நிலையே நீடித்தது - நீடித்துக் கொண்டிருக்கிறது! இன்னமும் திருக்கோயில் கதவு திறக்கப்படவில்லை. அடைத்திருப்பவர், சிறுகூட்டம்! திறக்க விரும்புபவர் பெருந்திரளான கூட்டம். ஆயினும் திறக்க இயலவில்லை. கொள்கை சிறந்திருந்தால் போதுமா? தெளிவும் உறுதியும் வேண்டாமா? இவையிரண்டும் இன்றையத் தமிழருக்கு இல்லை. ஆயினும் பாவேந்தன் சாதிகளை, பச்சையாகக் கருணையின்றித் தாக்கித் தகர்க்கும் சொற்களால் பாடினான்.

தீண்டாமையை எதிர்த்து உரத்த குரலில், விவாத அடிப்படையில் வினாக்களைத் தொடுக்கிறான்.

சுத்தாமில்லாப் பஞ்சமர் கோயிற்
சுவாமியைப் பூசிப்பரே-எனில்
நித்தமுயர்ந்தவர் நீரில் குளிப்பது
யாதுக்கு யோசிப்பீரே!

(பாரதிதாசன் கவிதைகள்-மூன்றாம் தொகுதி)

என்பது பாவேந்தனின் வினா! அதோடு கவிஞன் விடவில்லை. திருக்கோயிற் கருவறைக்குள் பூனை, பெருச்சாளி, வௌவால் ஆகியன எல்லாம் சுற்றுகின்றன. ஆயினும் மானிடன் மட்டும் ஏன் அனுமதிக்கப் படுவதில்லை.

"நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி
நேரில் அக்கோயிலிலே-கண்டும்
ஒத்தபிறப் பினரை மறுத்தீர் உங்கள்
கோயிலின் வாயிலிலே”

(பாரதிதாசன் கவிதைகள் 3-ஆம் தொகுதி. பக்கம் 20)

என்று பாடுகின்றான் பாவேந்தன்.

ஏன்? ஏன்? திருக்கோயில் கருவறை நுழைவுப் போராட்டம், தமிழ் வழிபாடு ஆகிய இயக்கங்கள் நடந்த பொழுது முன்னாள் முதல்வர் பக்தவத்சலனார் அவர்கள், மரபுரிமை கருதிக் கடுமையாக எதிர்த்தார்., அவர், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்தவர். அவரைக் கேட்பது போலப் பாவேந்தன் கேட்கிறான்.

"முப்பது கோடியர் பாரதத்தார்-இவர்
முற்றும் ஒரே சமூகம் என
ஒப்பும் தலைவர்கள் கோயிலில் மட்டும்
ஒப்பா விடில் என்ன சுகம்"

(பாரதிதாசன் கவிதைகள் 3-ஆம் தொகுதி, பக்கம் 200)

என்பது பாவேந்தனின் வினா.

ஒரு கொள்கை என்றால் முன்னுக்குப் பின் முரண்பாடு இருக்கக் கூடாது. இன்றைய கடவுட் கொள்கையில் முரண்பாடுகள் அதிகம். “ஒன்று பரம்பொருள்" "அம்மையப்பரே. உலகுக்கு அம்மையப்பர்” என்பர். ஆயினும் மக்கள் குலத்தில் ஒரு பாதியைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்குதல் நியாயமா, இந்த முரண்பாட்டில் என்ன சிறப்பிருக்கிறது? என்பது பாவேந்தன் வினா.

ஏக பரம்பொருள் என்பதை நோக்க
எல்லாரும் உடன்பிறப்பே-ஒரு
பாகத்தார் தீண்டப்படாதவர் என்பதி
லே, உள்ள தோசிறப்பு?

(பாரதிதாசன் கவிதைகள்)

என்பதும் அவன் வினா.

தனக்குவமையில்லாதவன் இறைவன். அதாவது அறிவில், ஆற்றலில், நிறைவில் இறைவனுக்கு நிகர் இறைவனேயாம். இத்தகு ஆற்றல் வாய்ந்த இறைவனைத் தாழ்த்தப்பட்ட குடிமகன் தீண்டினால் என்ன? இறைவனின் ஆற்றல் குறையுமா? அப்படி ஆற்றல் குறையுமானால் தாழ்த்தப்பட்டோனின் ஆற்றலன்றோ மிகுதியாகத் தெரிகிறது. ஆம்! தாழ்த்தப்பட்டோர் ஒருவர் இறைவனைத் தீண்டினாலும் புண்ணியாவசனம்-தூய்மை செய்கிறார்கள்-பிராயச்சித்தமும் செய்கிறார்கள் புரோகிதர்கள். ஆதலால், யாருடைய ஆற்றல் பெரிதென நையாண்டிக் குரலில் பாவேந்தன் கேட்கின்றான்.

"தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்தில்லையோ?-எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட
மேலும் சமர்த்தில்லையோ?”

(பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 3 சமத்துவப்பாட்டு 14)

இதுவரையில் பதில் இல்லை. இனிமேலும் கிடைக்காது ஏன்? இன்றும் செயல்முறையில் இறைமை இல்லை பிழைப்புத்தானே இருக்கிறது! இந்த நூற்றாண்டிலும் மானுடத்திற்குக் கருவறைக் கதவு திறக்கப்படாது போனால் வரலாறு பாடம் கற்பிக்கும். திருக்கோயில் கதவுகைளத் திறமின்! எல்லோரும் அர்ச்சகராவது அடுத்த கட்டம். முதலில் சாதிப் புன்மையினை ஒழிமின்! எல்லோரும் கருவறைக்குள் எழுந்தருளியுள்ள பெருமானுக்குப் பூவும் புனலும் இட்டுத் தொழ உரிமை வேண்டும். இதற்கு விடை கிடைக்குமா? கிடைக்காது?


"சாதி உயர்வென்றும் தனத்தால் உயர்வென்றும்
போதாக் குறைக்குப் பொதுத்தொழிலா ளர்சமூகம்
மெத்த இழிவென்றும் மிகுபெரும்பா லோரைஎல்லாம்
கத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும்
பாவிகளைத் திருத்தப் பாவலனே நம்மிருவர்
ஆவிகளை யேனும் அர்ப்பணம் செய்வோம்”

(புரட்சிக்கவி-பக் 25 பாரதிதாசன் கவிதைகள் தொகுதி-)

என்று பாரதிதாசன் பாடுவதை ஒர்க. பாவேந்தன் தனது ஆவியைக் கொடுத்தேனும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டான். கவிஞனுடைய ஆவிதான் போயிற்று. காரியம் நடந்தபாடில்லை.


மதங்களை ஏன் எதிர்த்தான்?

சாதிகளைச் சாடிய பாரதிதாசன், சமயங்களை மறுத்திருக்கிறான்; தொட்ட தொட்ட இடமெல்லாம் மூடப் பழக்கங்களை முழுமூச்சாகப் பாரதிதாசன் வெறுத்து ஒதுக்கியிருக்கிறான்; வெறுத்து ஒதுக்க, மக்களை அறைகூவி அழைக்கிறான். மக்களைச் சாதிகள் பெயரால், தலைவிதியின் பெயரால் ஒதுக்கிய சமய நெறிகளைப் பாவேந்தன் பாரதிதாசன் ஓரங்கட்டியதில் தவறில்லையென்றே தோன்று கிறது. சமயநெறி "அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்" என்று ஒதுகிறது. ஆயினும், சமயநெறியில் துறைதோறும் சாதிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஏன்? சாதிப்புன்மைகளை அறவே அகற்றாத வரையில் சமய நெறிகள் மனிதகுலத்திற்குத் தீமையே செய்யும் என்பதை எண்ணுக.

மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாளில் கடவுட் கொள்கை தோன்றியது. தமிழ் மரபுவழி கடவுட் கொள்கை தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்தவை பேரறிவு வேட்கையும், பேராற்றல் வேட்கையுமேயாகும். தம்முடைய அறிவையும் ஆற்றலையும்விட ஏதோ ஒன்று அறிவும் ஆற்றலும் மிக்கு விளங்குகிறது என்று இந்த வியத்தகு உலகின் அமைவையும் ஒழுங்குகளையும் முறை பிறழா நிகழ்வு களையும் கண்டபோது உய்த்துணர்ந்தனர். அதனால் அந்த அறிவு ஆற்றல் எது என்று விவரிக்க முடியாமற் போய்க் கடவுள் என்று அதனை அழைத்தனர். காலப்போக்கில் மனிதன் திறமைசாலியாகவும் சாமர்த்தியமாகவும் வாழத் தொடங்கியபோது மதங்களைக் கண்டான். கடவுள் உய்த்துணரப் பெற்ற ஒன்று.

"ஓர் கடவுள் உண்டு-தம்பி
உண்மை கண்ட நாட்டில்!”

(பாரதிதாசன் கவிதைகள் தொகு-3 ஏற்றப்பாட்டு-55)

என்ற பாரதிதாசன் பாடல் இக்கருத்தினை அரண் செய்வதாகும். அந்த ஒன்றை அறிவு புலனால் தேடும் நெறியே, மெய்ப்பொருள் நெறியாயிற்று. மதங்கள் செய்யப்பட்டவை. மதங்களும் காலப்போக்கில் பெருநெறிகள்-சாராமல், சிறுநெறிகள் சார்ந்து விட்டன; மனிதர்களையும் கெடுக்கத் தொடங்கின. அதனால் மனிதகுல மேம்பாடு மனித நேயம் முதலியவற்றிற்கு முரணாக மதங்கள் இயங்கத் தலைப்பட்டன. அதன்பிறகுதான் மதங்களுக்கு எதிர்ப்புகளும் மறுப்புகளும் தோன்றலாயின. இதுவே மதங்களைப் பற்றிய வரலாறு.

பாவேந்தன் பாரதிதாசன் மதங்களை எதிர்த்தான் அதுவும்கூடத் தொடக்க காலத்தில் இல்லை என்பதை "எதிர்பாராத முத்தம்" என்ற காப்பியம் குமரகுருபரைப் பற்றி விவரிக்கும் நூல் குறிக்கும் பாவேந்தன்.

"கடவுள் வெறி சமயநெறி
கன்னல் நிகர் தமிழுக்கு
நோயே! நோயே!”

என்று கூறுவதால் கடவுள் வெறியை, சமயநெறியை மறுக்கிறான் என்பதே உண்மை.

மதம் கடவுட் கொள்கையை மையமாகக் கொண்டு மனிதகுல மேம்பாட்டுக்காகத் தோன்றியது. மதம் காலப் போக்கில் தடம் புரண்டுவிட்டது. கடவுளை மறந்த மதங்கள் கூடத் தோன்றிவிட்டன. ஒரே கடவுள் என்று மதங்கள் கூறுவது உண்மையானால் மதச் சண்டைகள் வருவானேன்? வழிகளைப் பற்றிச் சண்டை போட்டுக் கொண்டு அடைய வேண்டுவதை இழப்பது பைத்தியக்காரத் தனமல்லவா? பாவேந்தன் பாரதிதாசன் மதங்களுக்கிடையில் வேற்றுமை பாராட்டுவதை விரும்பவில்லை. கடவுள் பெயரால் எழுதப்பட்ட பொய்ம்மைக் கதைகளை ஒப்பாமல் மறுக்கிறான். நம்மையும் மறுக்கும்படி தூண்டுகிறான். தமிழ்நாட்டில் வாழும் ஏசுமதத்தினர், முஸ்லீம்கள், இந்துக்கள் அனைவரும் தமிழர். பிறப்பால் திராவிடர் என்பதைத் தமிழக மக்கள் உணர வேண்டும். இந்த மதத்தினரைக் கூட்டி, ஆரியத்தைப் பாதுகாத்துத் திராவிடர்களை - தமிழர்களைத் தாழ்த்தும் சூழ்ச்சியில் முன்னணிகள் ஈடுபடும் முயற்சி இன்று நடைபெறுகிறது. விழிப்பாக இருங்கள். எல்லோரும் தொழுவது ஒரு கடவுளையே.

பெண்ணின் பெருமை

பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாவேந்தன் பாரதி தாசன் உரத்த குரலில் பாடுகின்றான்; போராடுகின்றான். பெண் குழந்தை தாலாட்டு அற்புதமான படைப்பு. நயம்பட அமைந்த கவிதைகள் பலவே. ஆயினும் இது தனிச் சிறப்புடைய கவிதை. இக்கவிதையில் கவிஞனின் ஆத்திரம் இல்லாத ஆவேசத்தையும் காண்கிறோம்.

வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேச வந்த
- பெண்ணழகே!”

(பெண் குழந்தை தாலாட்டு 5-6 பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி)

என்று பாடுகின்றான். மானுடத்திற்கு வாய்க்கும் சிறப்பெல்லாம் பெண்மையின் பெருஞ்சிறப்பினாலேயே என்று கவிஞன் பாடுகின்றான். மடப் பழக்கங்கள் பெரும்பாலும் பெண்களைப் பிடித்தாட்டுவது இயற்கை ஆனால், பாவேந்தனின் பெண், மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவந்த கற்பூரப் பெட்டகமாக விளங்குகின்றாள்! இந்தக் கவிதை முழுதும் பெண்ணைப் புதுமைப் பெண்ணாக, புரட்சிப் பெண்ணாகப் படைத்துப் பாராட்டுகின்றான்! இத்தகு சிறப்புக்களெல்லாம் உடைய பெண்கள் இன்னமும் விடுதலை பெற்றார்களில்லை! உரிமை பெற்றார்களில்லை! பெண் பிறவி இழிவு என்ற கருத்துக்கூட மாறவில்லை!

இன்று இங்கும் அங்குமாகச் சில பெண்கள் கல்வி கற்பது உண்மை. உயர்கல்வி கற்பதும் உண்மை. அரசுப் பணிகளில் அமர்வதும் உண்மை. ஆயினும் அவர்கள் சமநிலை உரிமை கலந்த ஒருநிலை உரிமை பெற்றார்களா? அதுதான் இல்லை. பெண்மை தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாகிறது. "அன்புடைய மாமனும் மாமியும் நீ!” என்று தேவாரம் பெசும். இத்தகு அன்புடைய மாமனும் மாமியும் ஆண்களுக்குத்தான் வாய்க்கின்றனர். பெரும்பாலும் பெண்களுக்கு வாய்ப்பதில்லை. அண்மையில் நடந்த சென்னை இராசேசுவரியை, இ.ஆ.ப. தேர்வில் வெற்றி பெற்ற அவர் கணவன் கொன்ற செய்தியும் பூலான்தேவி வரலாறும் உணர்த்துவது என்ன? பெண்மையை இழிவுபடுத்தித் துன்புறுத்தும் இழிதகைமைக்கு இன்றே, இப்பொழுதே பாவேந்தன் நூற்றாண்டு விழாவின் போதே முடிவு கட்டுமின்! பெண், வேலைக்குப் போவது உண்மை. ஆனால் அவள் ஈட்டும் ஊதியம் கணவனுக்கே உரிமை உடையது. மறவாதீர்! இதுவா உரிமை? அவளாகக் கனிந்த காதல் ஒப்படைப்பில் தருதல் நன்றே! நிகழ்வு அப்படியல்ல! தட்டிப் பறிக்கின்றான் கணவன்! மகளிர் பணிகளுக்கு செல்வதால் அவர்கள் கூடுதல் நேரம் உழைக்கிறார்கள் என்பதையும் நினைவிற் கொள்க! வீட்டு வேலைகளையும் அவர்கள் மட்டுமே செய்கின்றனர். துணை நிற்கும் கணவன்மார் உண்டோ? உங்களுக்குத் தெரிந்திருந்தால் சான்று காட்டுங்கள்! இம்மாட்டோ? இன்று பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்ற கொடுமையையும் பார்க்கின்றோம்! பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின் நினைவாகப் பெண்கள் விடுதலை மலரட்டும்.

பெண்கள் படத்தை விளம்பரப் பொருளாகப் பயன்படுத்தும் கீழ்மையை அரசுகள் தடைசெய்ய வேண்டும்! "மலரினும் மெல்லிது காமம்" என்று வள்ளுவம் கூறும். பாவேந்தன் பாராட்டிய காதலுக்கு எதிரிடையாகப் பாலுணர்ச்சியைத் தூண்டிக் காமவெறியூட்டும் திரைப்படங்கள். ஆகா! ஆகா! எங்கும் எந்த நிலையிலும் ஆடவரும் மகளிரும் கூடிக் கல்வி கற்க வேண்டும். இளமை தொட்டே பாலுணர்வைக் கடந்த நிலையில் பெண்மையை மதிக்கும் மதிப்புணர்வு ஒழுக்கத்தை நமது இளைஞர்களிடம் வளர்க்கவேண்டும். முதலில் ஆடவர் மகளிரிடையே தோழமை உருவாதல் வேண்டும். பின் அது வாய்ப்புழி விருப்பம் கடைகூட்டும்போது காதலாக மலரட்டும்.

கற்பது முதற்கடமை

பாவேந்தன், அறியாமைக்கு எதிரி கல்விக்குக் காவலன்! பலருக்கும் கல்வி நல்காதாரைக் கழுவேற்ற வேண்டும் என்று பாவேந்தன் பாரதிதாசன் பாடுகின்றான்!

"ஏழ்மையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்"

என்பது பாவேந்தன் உள்ளக்கிடக்கை. குழந்தைப் பள்ளிக் கூடங்கள் தேவையென்று கவிஞன் உணர்த்துகின்றான். ஆரம்பப் பாடசாலைக்குமுன் கற்கும் முதல்நிலை ஆரம்பப் பள்ளி நமது நாட்டில் இல்லை. வசதியுள்ளோரின் குழந்தைகளுக்கு "மாண்டிசோரி" கல்வித் திட்டத்தில் இடம் உண்டு. ஏழைத் தமிழ்க் குழந்தைகளுக்கு கிராமப்புறத் தமிழ்க் குழந்தைகளுக்கு அஃதில்லை. நமது நாட்டில் உள்ள சத்துணவு மையங்களை அப்படியே குழந்தைகள் பள்ளிக் கூடங்களாக உருவம் கொடுக்க வேண்டும். சின்னஞ்சிறு வயதில் குழந்தைகள் மூளையைப் பயன்தரத்தக்கவகையில் வளர்க்க வேண்டும். மூளையின் வளர்ச்சி சற்றேறக்குறைய 8 வயதில் நிறைவு பெறுகிறது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த வயதிற்குள் குழந்தைகளுக்கு மூளைப்புலனை இயக்கும் பயிற்சி, நினைவாற்றல், தேடும் முயற்சி ஆகியவற்றைக் கற்றுத் தந்துவிட்டால் அவர்கள் வாழ்வார்கள், வெற்றி பெறுவார்கள். நிகழ்காலத்திற்கே அழுது தொலைப்பதில் இன்று என்ன பயன் இருக்கிறது. நெடிய நோக்கோடு அடுத்த தலைமுறைக்கு வாழ்வளிக்கும் முயற்சியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளிடத்தில் தாழ்வுணர்ச்சி வாராமல் பாதுகாக்க வேண்டும். குழந்தமை வயதில் கற்கும் பயிற்சி நல்லது. பயன்தரும். "இசையமு”தில் பாவேந்தன்.

"கற்பதுவே உன்முதற் கடமை”

என்று ஆற்றுப்படுத்துகின்றான். பாவேந்தன் தமிழ்வழிக் கல்வியை வற்புறுத்திப் பாடுகின்றான். கல்வி நலம் எல்லாருக்கும் என்று முரசறைந்தவன் பாவேந்தன்! இந்த முரசு ஓயாது ஒலிக்கட்டும்!


சுதந்திரத்தின் அருமை

பாவேந்தன், சுதந்திரமான சிந்தனையாளன்; கவிஞன். மனிதன் சுதந்திரமாகப் பிறக்கின்றான்; பின் அவனே அடிமை விலங்குகளை மாட்டிக் கொள்கின்றான் என்பதே வரலாறு. நமது பாவேந்தன் பாரதிதாசன் சுதந்திரத்தின் அருமையை உணர்ந்து பாடுகின்றான். சுதந்திரம் என்பது ஒருவன் கொடுத்து, ஒருவன் பெறுவதன்று. அவனவனே பெற்றுக் கொள்வதுதான் சுதந்திரம். சுதந்திரத்தினை வேண்டி நிற்பாரைப் பார்த்து, பாரதிதாசன் "சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே!” என்று கேட்கின்றான். கடையில் சுக்கு, மிளகு வாங்குவது போல், சுதந்திரத்தை வாங்கமுடியாது. சுதந்திரம் கடைச் சரக்கன்று. சுதந்திரம் ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் உரிய பரிசு.


இளந்தமிழன் ஏற்றம் பெறுக

இளந்தமிழர்க்குப் பாவேந்தனின் அறிவுரை மிகவும் பயன்படக்கூடியது. "வாளினை எடடா!” என்ற கவிதை சிறப்பானது. கவிதைத் தலைப்புத்தான் இப்படி அமைந்து விட்டது! கவிதைக்குள் ஆக்கப் பணிகள் பலவற்றைப் பாவேந்தன் பட்டியல் போட்டுக் காட்டுகின்ற அருமையே, அருமை!

கலைகள் தழுவாத வாழ்க்கை வறட்சித் தன்மை யுடையது. கலைமலிந்த சீர் வாழ்வு தேவை. கலையை வளர்க்க வேண்டும். கலையின்பத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து போய்விடாமல் தொழில் பல செய்தல் வேண்டும். நல்ல கவிதைகளை இயற்றுதல் வேண்டும். படை நடத்தும் படை மறவனும் வாழ்தலுக்குரிய பயிற்சி பெறுதல் வேண்டும். கருவிகள் பல செய்து குவித்தல் வேண்டும். நிலத்தை உழுது உணவுப் பொருள்கள் விளைவித்துக் குவித்தல் வேண்டும். நிதியியல் ஆட்சிமுறை நூல்கள் பல காணுதல் வேண்டும். நுட்பம் சார்ந்த இயற்பியல் நூல்கள் பல படைத்திடுதல் வேண்டும். உண்மையைத் தேடும் நூல்கள் பலப்பல படைத்திடல் வேண்டும். இங்ங்னம் படைத்தவற்றைப் பேண அதிகாரம் பெறுதல் வேண்டும்! இன்றைய இளந்தமிழர்கள் இந்தப் பட்டியலில் உள்ள பணிகளை மேற்கொண்டால் அவர்கள் நலமுற்று வாழ்வர்; தமிழகமும் வளரும்.


உழைப்பவன் உயர்ந்தவன்

பாவேந்தன் உழைப்பை - உழைப்பாளர்களைப் பாராட்டி மகிழ்ந்தவன். பாவேந்தனின் படைப்பில் "வியர்வைக் கடல்" படிக்க வேண்டிய கவிதைகளுள் ஒன்று. உழைப்பவர்களின் வியர்வை கடலாகும் மாட்சியே கவிஞனின் காட்சி. இந்த உலகத்தின் படைப்புக்கள் அனைத்தும் உழைப்பாளர்களின் படைப்பு என்பது பாவேந்தனின் கருத்து! இல்லை! இல்லை! அந்தப் படைப்புக்களையே பாவேந்தன் வினாக்களைத் தொடுத்து விடை சொல்ல வைக்கின்றான். "நீங்களே, சொல்லுங்களேன்!” என்ற கவிதை அது. நன்செய்; நல்ல நிலம்; நெல் விளையும் நிலம்! இந்த நன்செய் நிலம் உழைப்பாளர்களின் உழைப்பால், நாள்தோறும் திருத்திய திருத்தத்தால் நன்செய் ஆயிற்று! எத்தனை உழைப்பாளிகள்? எத்தனை தலை முறைகள் வியர்வையை சிந்தி நிலமாக்கினர்.


"சித்திரச் சோலைகளே! உமைநன்கு
திருத்த இப்பாரினிலே-முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன
ரோ! உங்கள் வேரினிலே!" -

"நித்தம் திருத்திய நேர்மையினால்மிகு
நெல்விளை நன்நிலமே!-உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே!”

(பாரதிதாசன் கவிதைகள் 1 பக் 156-1 & 2)

என்பதை அறிவோம்.


அடுத்து, ஆர்ப்பரவத்துடன் இயங்கும் இயந்திரங்கள்! இந்த இயந்திரங்களின் வரலாறு என்ன? இந்த இயந்திரங்கள் இரும்புத் துண்டுகள் - அவ்வளவுதான்! ஊர்த் தொழி லாளர்கள் ஒன்று சேர்ந்து உழைத்து இயந்திரமாக்கினார்கள். இதுவே இயந்திரங்களின் வரலாறு! இயந்திர உலகுக்கும் தொழிலுக்கும் தந்தை நிலையிலுள்ளவர்கள் உழைப்பாளிகளே!


"ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்கனே!-உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ?-நீங்கள்
ஊர்த் தொழி வாளர் உழைத்த உழைப்பினில்
உதித்தது மெய் அல்லவோ!

(பாரதிதாசன் கவிதைகள் 1 பக் 156-5)

என்று பாடுகின்றான்.

இங்கனம் உழவுக்கும் தொழிலுக்கும் உயிர்ப்பாக விளங்கும் உழைப்பாளிகளின் நிலை என்ன? அவர்களிடம் நிலம் இருக்கிறதா? இயந்திரசாலைகள் உள்ளனவா? உழைக்கும் கருவிகளாகிய கையும் காலும்தான் மிச்சம்! மண்ணைப் போர்த்து விளங்கும் பசுமையும் இயந்திரங்களும் உண்மையான சாட்சி, உழைபபாளிகளின் படைப்பு என்று கூற! ஆனால், இந்த உழைப்பாளிகள் அடைந்தது என்ன? கூலி உயர்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்! நிலமே பாயாகவும் கையே தலையணையாகவும், வானே கூரையாகவும் கொண்டு வாழ்கின்றனர். அவர்கள் அறிந்த தெல்லாம் வயிற்றுப் பசியேயாம்!

'தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ?-பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?"

(பாரதிதாசன் கவிதைகள் பக்.157)


என்று பாவேந்தன் கேட்கும் வினாவை இன்னும் எத்தனை யுகங்களுக்கு வினாவாகக் கேட்டுக் கொண்டிருப்பது? இந்தச் சிக்கலுக்குப் பாவேந்தன் ஒரு தீர்வும் கூறுகின்றான். என்ன அந்தத் தீர்வு! "இவ்வுலகு உழைப்பவர்க்குரியது?" என்பது தான் அந்தத் தீர்வு! இந்த உலக உடைமைகளை உழைப்ப வர்க்கு உரியதாக்கி விடுவதுதான்! இது எப்போது நடக்கும்! நடக்காது! நடக்காது! எதுவும் தானாக நடக்காது! நடக்கும்படி செய்ய வேண்டும். உழைப்பாளர்கள் கெஞ்சு தலை விட்டொழிக்க வேண்டும். கிலியை விட்டொழிக்க வேண்டும். "வல்லாண்மையே வாழும் உரிமையுடையது” என்ற நியதிக்கேற்ப வலிவுடையராக விளங்கி இன்ப வாழ்வினைப் படைக்க வேண்டும். இந்த வார்த்தையே உண்மையான வார்த்தை!

"தனி உடைமை", இனிப்புத் தடவிய நஞ்சு, தனி உடைமை பற்றால் பொதுமையிலிருந்தே மனிதன் விலகத் தொடங்கினான்; மனித குலத்தை அந்நியமாக்கினான். உயர் சுவர்களும் அடைக்கும் தாழ்களும், பூட்டுகளும் கண்டு, தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொண்டான். இதனால் துன்பங்கள் பலமடங்காக வளர்ந்தன. ஆதலால், பொது வுடைமைக் கொள்கைக்கு மீண்டும் ஒர் உயிர்ப்புக் கிடைத்து வருகிறது. பாவேந்தன் பொதுவுடைமைக் கவிஞன், மனித இதயங்களை அன்பினில் நனைத்தல், "இது எனது" என்னும் கொடுமையைத் தவிர்த்தல் ஆகியன பொதுமை நெறியின் வாழ்க்கை முறைகள் என்பதனைப் பாவேந்தன்.

"இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
'இது என'தென் னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்"

(பாரதிதாசன் கவிதைகள்-1 "புதியதோர் உலகு செய்வோம்’-3 பக்.58)


என்று புதியதோர் உலகைப் படைக்கச் சொல்லி ஆணையிட்டான்! இந்த ஆணை நமது இதயக் கதவுகளைத் திறக்குமா? புதிய உலகு படைப்போமா?


உடைமையைப் பொதுமைசெய்

பாவேந்தன். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்த்தான். ஏன், பொதுவுடைமைச் சமுதாயத்தை வரவேற்றுப் பாடினான். மனித குலத்தில் தனியுடைமைச் சமுதாய அமைப்புத் தோன்றியதிலிருந்தே சுரண்டல் அமைப்புடைய பொருளாதார அமைப்புத் தோன்றிவிட்டது. உலகையே இயக்கி வளமும் வரலாறும் படைத்த மனித உழைப்பு இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பெற்று, அற்பக் கூலிக்கு விற்கப்படும் பொருளாகிவிட்டது. உழைப்பாளி தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற கூலியைக் கேட்கும் உரிமையைப் பெற்றானில்லை. இத்தகு சுரண்டல் முறைப் பொருளாதாரத்தால் உழைப்பாளிகள் ஏழைகள் ஆனார்கள், உழைப்பாளிகளைச் சுரண்டிச் சேர்த்த உடைமைக்காரர்கள் தண்ணிர் நிறைந்த தொட்டியைப் போல ஆனார்கள். வறுமையும் சுரண்டப்படும் பொருளாயிற்று. ஏழ்மையை அறவே ஒழிக்க முடியும் என்ற கருத்தில் பாவேந்தனுக்கு முற்றிலும் உடன்பாடில்லை. 2-5-60-ல் எழுதிய கட்டுரையில் இதை விவரித்து எழுதியுள்ளான். இந்தக் கட்டுரை நமது கருத்தை மறுத்து எழுதப்பட்டது என்பதையும் நினைவுகூர்ந்து மகிழ்கின்றோம். நமது கருத்து கவிஞருக்குக் கிடைத்தது செய்தித்தாள் வழியேயாம். செய்தித்தாள் வழியாக செய்திவாயிலாகக் கிடைக்கும் கருத்து முழுமையாக இருக்க முடியாதல்லவா? வறுமையையும், ஏழ்மையையும் பழங்காலத்தில் பிரித்துப் பார்த்ததில்லை. இரண்டும் ஒன்றேயாகத்தான் பேசப் பெற்றுள்ளன. ஆனால், மனித நுகர்வுகள் வளர்ந்து வந்துள்ளன. நுகர்வுப் பொருள்களின் சந்தை வளர்ந்து கொண்டே வருகின்றன. உண்மையைச் சொல்லப் போனால், வையகத்தின் வரலாற்றை நீட்சி பெறச் செய்யும் படைப்புக்களை விட, இன்று நுகர்வுப் பொருள்களே அதிகமாகப் படைக்கப்படுகின்றன. இன்றைய நாகரிகத்தை "நுகர்வு நாகரிகம்” (Consuming Culture) என்று சொன்னால் கூடத் தகும். ஆதலால், வறுமையும் பலவகையான பிரிவுகளுக்கு உரியதாகின்றது. நமது நாட்டு அரசு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் என்று ஒரு கணக்கு எடுத்து அறிவித்துள்ளது. நமது மக்கள் தொகையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் 58.9 விழுக்காட்டினர். வறுமைக் கோட்டுக்கும் கீழ் வாழ்கின்ற இந்த மக்களும் நான்கு வகையினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆண்டு வருவாய் ரூ.3,500/- ரூ.4,500/- ரூ. 5,000/- ரூ.6,400/- என்ற அளவு காட்டி வகைப்படுத்தப்பட்டுள்ளனர். முதற்பிரிவினர் ஆண்டு ஒன்றுக்கு, ரூ. 3,500/-க்கும் குறைவாக ஈட்டுபவர்கள். அதாவது நாள் ஒன்றுக்கு ரூ. 10/- கூலி பெறுபவர்கள். ஒரு குடும்பத்தில் ஆணும், பெண்ணும் சேர்ந்து உழைத்தாலும் பெறுவது ரூ. 20/-தான். இன்றைய விலை நிலவரத்தில் 5 பேர் உள்ள குடும்பம் வயிறார உண்ண முடியுமா? ஒரு வேளை கூடப் பசியார உண்ண இயலாத குடும்பம் இது. இப்படிப்பட்ட குடும்பங்களை நாம் ஏழைக் குடும்பங்கள் என்று கூறுகின்றோம். கடையாகக் குடும்ப வருவாய் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 6,400/- இந்த வருவாயும் இன்றைக்குப் பற்றாக் குறைதானே! மற்ற வகையினர் ரூ. 4,500/- ரூ. 5,000/- ஆண்டு ஒன்றுக்கு வருவாய் வரும் குடும்பங்கள். இன்றைய நிலையில் சந்தை நிலவரத்தில் இந்த வருவாயில் ஒரு குடும்பத்தை நடத்துவது அரிது! அரிது! ஆதலால், அன்றாட வாழ்வுக்கே அல்லற்படுகின்ற நிலையை ஏழ்மை என்றும், வாழ்க்கையில் வசதிகளைத் தேடிக் கொள்ள முடியாத நிலையை வறுமை என்றும் நாம் பிரித்துப் பார்ப்பதில் தவறில்லை என்றே கருதுகின்றோம். வறுமை வேறு! ஏழ்மை வேறு. ஏழ்மையென்பது அன்றாட வாழ்வில் தேவைக்காகவே போராடுவது; அல்லற்படுவது. வறுமை என்பது இந்த உலகில் காணப்பெறும்-படைக்கப்பெறும் நுகர்பொருள்களையெல்லாம் அடைந்து அனுபவிக்க இயலாமை. அடிப்படை வாழ்விற்கு உத்தரவாதம் தேவை. இதுவே நமது கருத்து. பாவேந்தன் கருத்து நம்முடன் முற்றிலும் முரண்பட்டதன்று.

இந்த நிலைமையை விவரித்துப் பலர் எழுதி எழுதியே கை ஒய்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு விட்டார்கள். மாமேதை கார்ல்மார்க்சு மட்டுமே இப்படித்தான் உலகம் இருக்க வேண்டும் என்று துணிவுடன் கூறினார்; எழுதினார்; இயக்கம் நடத்தினார்; போராடினார்; வெற்றி பெற்றார். மார்க்சு திறமைசாலி மட்டுமல்ல. திறமைசாலிகள் பலர் கிடைக்கக்கூடும். ஆனால் மேதைகள் எளிதில் கிடைக்க மாட்டார்கள். மார்க்சு மாமேதை. அதனால்தான் மார்க்சு இறந்தபொழுது "மார்க்சு சிந்திப்பதை நிறுத்திக் கொண்டு விட்டார்” என்று கூறினார் ஏங்கெல்ஸ்.

பொருளாதார வேற்றுமை தோன்றிய பிறகு, தானங்களால், தருமங்களால், இலவசங்களால் ஏழ்மைக்குத் தீர்வு காண நமது முன்னோர்கள் முயன்றார்கள். கைகூடிய பலன் யாதொன்றும் இல்லை. இருள் சூழ்ந்தது. இந்தச் சூழ்நிலையில் ஒரு விடிவெள்ளி தோன்றியது. அவர்தான் மாபெரும் சிந்தனையாளராக விளங்கிய கார்ல்மார்க்சு. மனிதகுல வரலாற்றைக் கூர்ந்து நோக்கி உழைப்பு, கூலி, உபரி, லாபம் என்ற தத்துவத்தைக் கண்டுபிடித்தார். மாமேதை மார்க்ஸ், உழைப்பாளிகளின் செல்வம் சுரண்டப்படாதிருக்க வேண்டுமென்றால் உற்பத்திக் களங்களும் உற்பத்திக் கருவிகளும் பொதுவாக்கப் படவேண்டும் என்று கூறு கின்றார். நமது பாவேந்தன் பாரதிதாசனும் "உடைமையைப் பொதுமைசெய்” என்று ஆத்திசூடியில் கூறுகின்றான்.

பாவேந்தன் பாரதிதாசன் தமிழன்; தமிழ்க் கவிஞன்! தமிழ் எழுச்சிக்குப் பாடிய கவிஞன்! ஆயினும் அவனுடைய விசாலப் பார்வை பெரிது! பெரிது! "விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று பாடிய வரிகள் நூற்றுக்கு நூறு பாரதிதாசன் சாரம்! பாரதி, கலியுக வீழ்ச்சியின் சின்னமாகிய ருஷ்யப் புரட்சியை அறிந்தவன்; அறிந்து வரவேற்றவன். "யுகப் புரட்சி” என்று பாரதி அதை வரவேற்கிறான்! 'புரட்சி' என்ற சொல் தமிழிலக்கியத்தில் முதன் முதலாக ஆக்கப் பெறுகிறது! பாரதியை அடியொட்டி பாரதிதாசன் பொதுவுடைமைக் கவிஞனாகவே பாடுகின்றான்!

பொதுவுடைமைச் சமுதாயம் என்றால் என்ன? மானுடம், அரசியல், சமூகவியல், பொருளியல் அனைத்திலும் சுதந்திரம் பெற்று விளங்குவதே. பொதுவுடைமை. செய்யும் மனிதனுக்கு, உழைப்பு உண்டு. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உண்டு. உழைப்புக்கும் உழைப்பினால் படைக்கப்படும் பொருளுக்கும், பொருள் மதிப்பீட்டுக்கும் மதிப்பீட்டின் பயனுக்கும் உரிமை உடையவன் உழைப்பாளன், உழைப்பாளனிலிருந்து உழைப்பாளன் பொருள் அந்நியப்படுத்தப்படும் அநியாயம் பொதுவுடைமைச் சமுதாயத்தில் கிடையாது. பொதுவுடைமைச் சமுதாயத்தில் மனிதன்தான் மதிப்பிற்குரியவன். மனிதனுக்காகவே எல்லாம்!

பொதுவுடைமைச் சமுதாயத்தில் மனிதனின் உழைப்பை அற்பக் கூலிக்கு வாங்கும் முதலாளி இருக்க மாட்டான். உழைப்பாளியே படைக்கப்படும் பொருள் அனைத்துக்கும் உரியவன். பொதுவுடைமைச் சமுதாயத்தில் உழைப்பாளர்களே அனைத்துரிமைகளும் உடையவர்கள். இலாப வேட்டை இல்லை. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும். வரலாற்றுக் காலம் தொட்டு, உழைத்து அலுத்து எய்த்துக் களைத்துப்போனவர்கள்! பொதுவுடைமைச் சமுதாயத்தில் உரிமை பெறுகிறார்கள்! வாழ்வு பெறுகிறார்கள்!


எல்லைகளை எடு!

பாவேந்தன் பாரதிதாசன் உலக வரலாற்றைக் கூர்ந்து பார்க்கிறான். நூறாயிரம் வேற்றுமைகள் மனித குலத்திற்குள் - மதங்களின் பெயரால்! சாதிகளின் பெயரால்! ஏன் போரிடுவதே மண்ணாள்பவருக்கு வழக்கமாகி விட்ட வாழ்க்கை. பாவேந்தன் பாரதிதாசன் எண்ணற்ற வேற்றுமைகளைக் களைந்து உலக ஒருமையை உயர்த்திப் பாடுகின்றான்.


"உன்வீடு-உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு"

பாரதிதாசன் கவிதைகள் தொகுதி ! 'உலகம் உன்னுடையது 21-25)


வீட்டிற்கும் வீட்டிற்கும் இடையே சுவர் எப்படி வந்தது! சுவர் வரவில்லை; சுவர் வைக்கப்பெற்றது. வீதிகளுக்கிடையே திரைகள்! நாடுகளுக்கிடையே எல்லைகள்! ஏன் எல்லைகள்? சுவர்கள்? என்று பாவேந்தன் பாரதிதாசன் கேட்ட வினாவிற்கு இன்று கிழக்கு ஜெர்மனி விடை தந்திருக்கிறது. ஆம்! கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனி இவற்றைப் பிரித்து நின்ற சுவர் இடிக்கப் பெற்றுவிட்டது. ஏகாதிபத்தியம் வைத்த சுவரைச் சடசடவென மக்கள் எழுச்சி இடித்துவிட்டது! நமது நாட்டின் எல்லை - ஆம்! இந்தியா-பாகிஸ்தான் எல்லை எப்போது எடுபடும்? பாகிஸ்தான்-பாரத மக்கள் எல்லைகளைக் கடந்து இதயங்களை இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! கவிஞன் "உலகம் உண்ண உண்: உலகம் உடுத்து உடுத்து!" என்று ஆணை இடுகின்றான்.

எங்கும் போர்! ஏன் போர்! சிலர் போராடுவதையும் மக்களுக்குத் தொல்லைகள் தருவதையும் பொழுது போக்காகக் கொண்டுள்ளனர். இதனைப் பாரதிதாசன் "கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்” என்று பாடுகின்றான். மனிதன் வாழ்வுக்குப் போராடிக் கொண்டிருக்கின்றான். எந்த மனிதன் போராடிக் கொண்டிருக்கின்றான்? உழைத்து உலகத்தை உருவாக்கி இயக்கும் மனிதன் வாழ்க்கைக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்! அவனுடைய உழைப்பு கொள்ளை போகிறது! எல்லாம் அவனுடைய செயலே என்ற மதத்தின் மந்திர மொழியுடன் உழைப்பவன் செல்வம் பறிபோகிறது. பாவேந்தன் பாரதி தாசன் தொழிலாளர்களை உசுப்பி விடுகின்றான். தொழி லாளிகளின் உரிமைக்குரல் இதோ!

"செப்புதல் கேட்பீர் - இந்தச்
செகத் தொழிலாளர்கள் மிகப்பலர் ஆதலின்,
கப்பல்க ளாக - இனித்
தொழும்பர்களாக மதித்திட வேண்டாம்
இப்பொழுதே நீர் - பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்படைப்பிரே - எங்கள்
உடவில் இரத்தம் கொதிப்பேறு முன்பே'

(பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 1 தொழிலாளர் விண்ணப்பம்-7)


என்பது பாரதிதாசன் பாடல். உழைத்துண்பவர் நாலாம் சாதியாய், ஐந்தாம் சாதியாய் ஒதுக்கப்பட்ட அநியாயம் கண்டு பாவேந்தன் எரிமலையாய்ச் சீறுகின்றான். மாந்தர் குலத்தை "நின்றது போதும்! முன்னேறுக" என்று ஆவேசமிக்க கவிதைகளால் முன்னே தள்ளுகிறான்! நாம் தான் நகர்ந்தபாடில்லை! "புதியதோர் உலகம் செய்வோம்!” என்று அழைக்கின்றான். கவிஞனுடைய அழைப்பு அழைப்பாகவே இருக்கிறது! தமிழர் காதில் வீழ்ந்ததாகத் தெரியவில்லை. சிலர் காதில் வீழ்ந்ததாகக் காட்டிக் கொண்டார்கள்! ஆயினும் செயல் இல்லை. பாவேந்தனுடைய உலகப்பன் பாட்டைப் படியுங்கள்! இந்த உலகப்பன் பாடிய பாடல் ஆண்டு 1936-க்கு முன்பாகும். இடையில் இவ்வளவு ஆண்டுகள் ஓடியுள்ளன. என்ன நடந்தது?

"பொத்தல் இலைக் கலமானார் ஏழை மக்கள்
புனல்நிறைந்த தொட்டிபோல் ஆனார் செல்வர்"

என்ற நிலை. இன்று நாமே ஆள்கின்ற குடியாட்சியில்கூட மாறவில்லையே? மாறாதது மட்டுமல்ல. மேலும் கெட்டிருக்கிறது. பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகியுள்ளான். ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகின்றனர். இலவச உணவு, இலவச அரிசி, இலவச உடை, இலவசத் திருமணம் இவையெல்லாம் நமக்கு என்ன போதிக்கின்றன? ஏழ்மை போகவில்லை! ஏழ்மையின் கொடிய வெப்பம் இலவசத்தால் தணிக்கப் பெறுகிறது! அவ்வளவுதான்!

பொதுவில் நடத்து

பாவேந்தன் உணர்ச்சிக் கவிஞன் மட்டுமல்ல. திட்டமிட்டு மக்களை ஆற்றுப்படுத்தும் கவிஞன்! உலகம் உன்னுடையது அற்புதமான படைப்பு! காலத்தை வென்று விளங்கும் படைப்பு! கவிதையின் முற்பகுதியில் மனிதன் தாழ்ந்து வீழ்ந்த நிலையை விளக்கி இடித்து எடுத்துக்கூறி மனிதனை எழுப்பி, நிற்கச் செய்கின்றான்! பாவேந்தன்! புதிய மனிதனாக்குகின்றான்! உலகத்தை நடத்துக என்று ஆணை தந்து இயக்குகின்றான்.

"ஏறு! விடாமல் ஏறு! ஏறு மேன்மேல் ஏறு!
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களைப்
பாரடா உனது மானிடப் பரப்பைப்
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய் அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உன்னைச் சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும் பேத மில்லை
உலகம் உண்ண உன்! உடுத்த உடுப்பாய்
புகல்வேன்! உடைமை மக்களுக் குப்பொது!
புவியை நடத்து! பொதுவில் நடத்து."

(பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 1
"உலகம் உன்னுடையது" வரி 26-40)


என்ற கவிதை வரிகள், கவிதை வரிகள் மட்டுமல்ல. மானுடத்தின் நல்வாழ்வுக்குரிய வரிச்சட்டம்!மறைசாசனம்! இந்த வரிகளை நாம் உணர்வுடன் ஏற்று நடைமுறைப் படுத்தினால் நாடு வளரும். பாவேந்தனின் நூற்றாண்டிலிருந்து செய்ய எண்ணுவோமாக!

வீடு, வீதி, நாடு ஆகிய எல்லைகளைக் கடந்த மனிதனை மாமனிதனை பாவேந்தன் படைத்துக் காட்டு கிறான். ஆம்! இது அணுயுகம்! இன்று நாடுகளையும் கடந்த மனிதன் தேவை! மாமனிதன் தேவை! அப்போதுதான் போரைத் தவிர்க்க இயலும் மக்கள் குலம் "என்குலம்", "என் கோத்திரம்" என்ற சிறு சிறு சுழிகளுக்குப் பதிலாக "மக்கள் குலமே என் குலம்’ என்பது அற்புதமானது.

"அறிவை விரிவு செய்! என்றான் பாவேந்தன். ஆம்! பாவேந்தன் காலத்திற்கு முன்பும் அவன் காலத்திலும்கூட மனிதக் குலத்தை வருணங்களால், சாதிகளால் பிரிந்தவர்களே - குறுகிய புத்தியுடையவர்களே அறிஞர்கள் என்று அழைக்கப்பெற்றனர். "ஒரு குலத்திற்கு ஒரு நீதி” சொன்னவன் மனு! அவன் பாராட்டப் பெற்றான்! அதனால்தான், பாவேந்தன் பாரதிதாசன் குறுகாதே! குறுகியதெல்லாம் சின்னப்புத்தி! "அறிவை விரிவு செய்” அகண்டமாக்கு!" என்று ஆற்றுப்படுத்துகின்றான்! ஆம்! மக்களுடன் பழகு! வேற்றுமையின்றிப் பழகு! விசாலப் பார்வை வேண்டும். விசாலப் பார்வையிருந்தால் போதுமா? அனைத்தையும் போற்றி வளர்த்தல் வேண்டும், வாழ்விக்க வேண்டும். கடைசியாக மணிமுடியாக

"உலகம் உண்ண உண்! உடுத்த உடுத்து"

என்று அறம் வகுத்து உணர்த்துகின்றான்! இதுவே, இன்றைய மனித அறம்! இந்த அறநெறி கால்கொள்ள உடைமை பொதுவாக வேண்டும். இதுவே, பாரதிதாசனின் இலக்கு! நாம் என்ன செய்யப் போகிறோம்?

2. பாரதிதாசனின் குடும்ப விளக்கு

இனிய அன்பர்களே,

பெருமைக்குரிய துணைவேந்தர் டாக்டர் வேங்கட சுப்பிரமணியம் அவர்களே!

புரட்சிக் கவிஞன் பாவேந்தன் பாரதிதாசன் பிறந்த மண்ணில் அவனுடைய நூற்றாண்டு விழாச் சொற்பொழிவு நிகழ்த்த வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி; கடப்பாடு!

முன்னுரை

நமது தலைமுறையில் தோன்றி நம்மிடையில் வாழ்ந்த தலைசிறந்த கவிஞன் பாவேந்தன்! பாவேந்தன் எண்ணற்றகவிதைகள் மூலம் நம்மை உசுப்பிவிட்டான். ஆனால், நாம் எழுந்தோமா! விடை காண்பது பல்கலைக் கழகத்தின் பொறுப்பு. பாவேந்தன் எழுச்சிமிக்க கவிதைகளைத் தந்தான்! விசையூட்டினான்! நன்றும் தீதும் இனம் பிரித்துக் காட்டினான்! இதுவே செய்யத்தக்கது என்று ஐயத்திற்கிடமின்றி உணர்த்தினான். பாரதிதாசன் இனிய, எளிய தமிழில் தெளிந்த நடையில் கவிதை தந்தவன். தமிழக வரலாற்றில் பாவேந்ததன் பாரதிதாசன் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்தவன்.

குடும்ப விளக்கும் குறளும்

பாரதிததாசன் இயற்றிய காப்பியங்களில் ஒன்று குடும்பவிளக்கு. இந்தக் காப்பியம் அழகுத் தமிழில் உள்ள அரிய படைப்பு. புதிய புனைவுகள் பல பொதுளும் படைப்பு. குடும்ப விளக்கு ஒரு சாகா இலக்கியம். தமிழர் தலைமுறை என்றென்றும் போற்றிப் படிக்க வேண்டிய படைப்பு. உலக மொழிகளில் குடும்ப விளக்கைத் தந்தால், குடும்ப விளக்கு உலகக் காப்பியமாக விளங்கும். திருவள்ளுவர் காமத்துப் பாலில் அமைதி தழுவிய-ஆற்றல்மிக்க காதலை விளக்குகின்றார். காமத்துப்பாலில் திருவள்ளுவர் பேசவில்லை. திருவள்ளுவர் பாத்திரங்களையே பேச வைக்கின்றார். காமத்துப்பாலில் ஓர் இடத்தில்கூடக் கடுஞ்சொல் காணப்பெறவில்லை. தொட்ட தொட்ட இடமெல்லாம் கனிந்த அன்பு: செயல் நிலைக்குரிய உந்துதல்; மகிழ்ச்சி; இன்பம்; இதுவே காமத்துப்பால், பாவேந்தனின் குடும்ப விளக்கும் திருக்குறளின் காமத்துப்பால் போலவே அமைந்துள்ளது. பொதுவாகப் பாவேந்தன் படைப்புக்களில் ஆவேசம் அதிகம். ஆனால், குடும்ப விளக்கில் எங்கும் ஆற்றல் மிக்க அன்பையும், அமைதி தழுவிய அன்பையும் காணலாம். இக்காப்பியம் இலக்கிய நலன்கள் நிறைந்த படைப்பு. மனிதராய்ப் பிறந்தோர், குடும்பங்களில் வாழ்வோர், குடும்பங்கள் நலமுற வேண்டுமென விழைவோர் அனை வரும் படிக்க வேண்டிய காப்பியம் இது.

எல்லார்க்கும் கல்வி

மக்களின் நல்வாழ்வுக்கு முதல் தேவை கல்வி. எல்லாரும் கற்க வேண்டும். கற்றவர்கள் முகத்தில் இருப்பனவே கண்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பன புண்கள் என்றது வள்ளுவம். எல்லாருக்கும் கல்வி நல்க வேண்டும். கல்வி பயிலும் வாய்ப்பில்லார்க்குக் கல்வியை வழங்காத ஊரவரைக் கழுவேற்றிட வேண்டும் என்பது பாவேந்தன் கருத்து.

"கல்வி நல்காக் கசடர்க்குத் துரக்குமரம்
அங்கே உண்டாம்"

(பாண்டியன் பரிசு)

கல்வியைப் பொதுவாக்க வேண்டும் என்பது பாவேந்தனின் ஆற்றல் நிறைந்த குறிக்கோள்.

"கல்வியைக் கட்டாயத்
தால் நல்கி யாவர்க்கும்
நல்லுடலை ஓம்ப
நனியுழைத்தால் அல்லலுண்டோ?"

(குடும்ப விளக்கு-பக். 63)

என்பது பாவேந்தனின் பாட்டு. எல்லாருக்கும் கல்வி தேவை. உடல்நலம் தேவை: உடல்நலத்திற்கு உழைப்புத் தேவை. இன்று, கல்வி பொதுவாக்கப்பட்டுவிட்டது! ஆனால், கல்வியில், குறிப்பாக ஆரம்பக் கல்வியில் போதிய அக்கறை காட்டப்பெறவில்லை. நாட்டின் எதிர்காலம் இன்றைய ஆரம்பப் பாடசாலைகளிலேயே உருவாகிறது. பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின்போது ஆரம்பக் கலவியின் தரத்தை உயர்த்த வேண்டும்; அறிவாக்கத்திற்குச் செயற்பட வேண்டும்.

"கல்வியைக் கட்டாயத்தால் நல்கி" என்பது கவிஞனின் வாக்கு நாட்டுத் தொண்டில் முதல் நிலையில் இடம் பெறுவது கல்வியேயாம்! நம்நாடு விடுதலை பெற்ற பிறகு எல்லாருக்கும் கல்வியளிப்பது என்ற வழியில் நீண்டதூரம் நடந்திருப்பது உண்மை. ஆயினும் போதாது. மேலும் கற்கும் வாயில்கள் பலவாகச் செய்தல் வேண்டும். கல்வியின் தரம் உயர்தல் வேண்டும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

கேள்விச் செல்வம்

அறிவியக்கத்திற்குப் பயன்படுவது கேள்விச் செல்வம். "கற்றலில் கேட்டலே நன்று” என்பது வள்ளுவம். "செவிநுகர் கணி” என்பான் கம்பன். நமது பாவேந்தன். "மடமைத்தனம் கேள்வியால் அகலும்" என்கின்றான்! "இருள் நீங்கி ஒளி பரவுதல் போல” என்று உவமித்துக் காட்டுகின்றான். ஆம்! கல்வி கரையில; கற்பவர் நாள் சில, ஆயினும் கற்ற அறிஞர்களின் வாய்ச்சொல் கேட்பதால் குறைந்த காலத்தில் நிறைந்த அறிவைப் பெறமுடியும். எத்துறையிலும் மடமை இருக்காது. இது கவிஞனின் எண்ணம்.

"...கேள்வியால் அகலும் மடமை போல்
நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண் டிருந்தது"

(குடும்ப விளக்கு - பக். 5)

என்பது கவிஞனின் வாக்கு.

தீங்கிலாத் தமிழ்

பாவேந்தன், தமிழே தன்னுயிரெனக் கொண்டு வாழ்ந்தவன். பாவேந்தன் தமிழைச் சிறப்பித்துப் பாடியதைப் போல் வேறு யாரும் பாடவில்லை. தமிழுக்கு ஒரு இயக்க வடிவமே தந்தவன் பாவேந்தன் பாரதிதாசன்! தமிழை அவன் போற்றும் பாங்குகள் அற்புதமானவை. தமிழ் யாருக்கும் தீங்கு செய்யாது. தமிழ் தண்ணளியுடையது. "தண்ணார் தமிழ்” என்பது திருவாசகம், பாவேந்தன் "தீங்கிலாத் தமிழ்” என்று பரவுகின்றான்.

தலைவியின் தொண்டுணர்வு

பாரதிதாசன் காட்டும் குடும்பத்தில் காலை நேரத்தில் தமிழ்ப்பாடம் கற்பிக்கப் பெறுகிறது. குடும்பத் தலைவி தமிழ் சாய்ந்த எழுத்துக்கள்வாத்திச்சியாக இருந்து பாடம் கற்பிக்கிறாள்; சங்கத் தமிழ்ப் பாடல்களைக் கற்பிக்கின்றாள் அவள், இதனை,

தவழ்ந்தது சங்கத் தமிழ்ச் சுவை"

(குடும்ப விளக்கு-பக். 8)

என்று விளக்குகிறான் பாவேந்தன்.

வீட்டின் படுக்கை அறை. குடும்பத் தலைவனும் தலைவியும் கலந்துரையாடல் செய்து மகிழ்ந்து கொண்டிருக்கிறனர். அந்த நேரத்திலும் அந்தச் குடும்பத் தலைவிக்கு நாட்டுத் தொண்டு, தமிழ்த் தொண்டு பற்றிய எண்ணம் அலைமோதுகிறது. கணவனை நோக்கித் தலைவி கேட்கிறாள்.

"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்,
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்!
எப்போது தமிழனுக்குக் கையா லான
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்
அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை.
அனைவருமிவ் வாறிருந்தால் எதுத டக்கும்?

(குடும்ப விளக்கு - பக். 31)

என்று கேட்கிறாள். ஆம் நல்ல கேள்வி! இன்றும் நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி!

அரசியல் சட்டப்படி எங்கும் எதிலும் இடம் பெற வேண்டிய தமிழ். இன்று எங்கு இடம் பெற்றிருக்கிறது? மேடைகளில் தமிழ் நன்றாக வளர்கிறது, இது போதுமா? ஆலயங்களில் தமிழ், தான் பெற்ற இடத்தைக்கூடக் காத்துக் கொள்ள முடியவில்லையே! பயிற்சிமொழி தமிழ் என்று அறிமுகப்படுத்தப் பெற்று, அரை நூற்றாண்டாயிற்று. என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? 1971-இல் கலைஞர், தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த பொழுது தமிழ்வழியாகக்கற்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை கொடுத்து அரசாணை பிறப்பித்தார். அதைத் தமிழ் நாட்டு மக்கள் எதிர்த்தனர்; தமிழிளைஞர்கள் எதிர்த்தனர்; ஏன், இன்று தமிழகத்து ஏடுகள் பலவற்றில் கலப்புத் தமிழே காட்சியளிக்கிறது. கொச்சைத் தமிழே கோமாளி நடனம் ஆடுகிறது! தட்டிக் கேட்பாரில்லை! பாவேந்தன் "தமிழ் என் உயிர்" என்றான். "தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்” என்றான். ஆனால், இன்று நடப்பது என்ன? "மறைமலையடிகள் தமிழும் தமிழ்தானா?” என்று வினா எழுப்புகின்ற பிறவிகள் நம்மிடையில் வாழ்கின்றனர் என்பதுதான்.

இன்று 'தமிழ் வாழ்க!' என்பது மேடை முழக்கம் மட்டுமே! தமிழ்த் தொண்டு செய்வாரைக் காணோம்! ஏன், தமிழால் பிழைப்பு நடத்துபவர்கூட, அவர்தம் வீட்டுப் பிள்ளையை ஆங்கிலம் கற்கவே அனுப்புகின்றனர். இன்று தமிழுணர்வு பட்டுக் கொண்டிருக்கிறது. பாவேந்தன் நூற்றாண்டு விழாவை யொட்டியவாது நமது தமிழுணர்வை, தமிழின உணர்வைப் புதுப்பித்துக் கொள்வோமாக! நாமமது தமிழரெனக் கொண்டு வாழாது, தமிழராகவே வாழ்தல் வேண்டும். தமிழ்த் தாய்க்குத் தமிழ் நாட்டின் அரியணையை மீட்டுத் தந்து அமர்த்துதல் வேண்டும். கி.பி. 2000க்குரிய புதுமை நலன்கள் அனைத்தும் பெற்று வளரும் மொழியாகத் தமிழை வளர்க்க வேண்டும். இப்பணிகளைச் செய்து முடிக்கத் தமிழன் வளரவேண்டும். தமிழர்களின் வளர்ச்சியே தமிழின் வளர்ச்சி! தமிழின் வளர்ச்சியே தமிழ்ச் சமூக வளர்ச்சி! இப்பாடம் நமது வாழ்வுப் பாடமாதல் வேண்டும்.

இனி, குடும்ப விளக்கின் தலைவி கேட்ட வினாவுக்குத் தலைவன், விடை சொல்வதைப் பார்ப்போம்! என்ன விடை சொல்கிறான்? வருவாய்க்குத் தக்கபடி ஒரு தொகையைத் "தமிழர் கழகத்திற்கு வழக்கமாக வழங்கி வருவதாக விடை கூறுகின்றான். தலைவி மகிழ்ச்சியுறுகிறாள். இன்னும் தமிழ் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகள் எண்ணற்றவை உள்ளன.

தமிழ், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த மொழியாக வளர்க்கப் பெறுதல் வேண்டும். புத்தம் புதிய கலைகள் தமிழில் வெளிவருதல் வேண்டும். தமிழில் அரிய கருத்துக்கள் உலக மொழிகளில் தரப்பெறுதல் வேண்டும். உலகத்தில் தமிழர் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்க் கல்வி பெற வாய்ப்பளிக்க வேண்டும். இத்திட்டங்கள் நிறைவேறப் பலகோடி ரூபாய்கள் தேவை. நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும். இன்று நாட்டுத் தொண்டில், தமிழ் வளர்ச்சிப் பணியில் யாரும் பங்கேற்க வருவதில்லை. இன்று பொதுத் தொண்டு, தமிழ்த் தொண்டு ஆகியன அரசுக்குப் பரிந்துரை செய்யும் பணி யளவில் சிறுத்துவிட்டது. "தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும்” என்று அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானத்தை ஓர் அறையில் கூடி நிறைவேற்றி அனுப்புகிற அளவில் தமிழ்த்தொண்டு அமைந்துவிட்டது. தமிழ் வளர்ச்சித் துறையில் போராட்ட உணர்வு இல்லை! இந்நிலை மாறியாக, வேண்டும். தமிழ் வளர்ச்சி இயக்கம், மக்கள் இயக்கமாதல் வேண்டும். மக்கள் காசுகளைத் தமிழ் வளர்ச்சிக்கு-கழகத்திற்கு எண்ணித் தரவேண்டும். குடும்ப விளக்கின் தலைமகன் செய்து காட்டியது நமக்காகத்தானே! கெழுதகை நட்புக்குரிய கலைஞர் இந்த முயற்சியைத் தொடங்கி-தமிழர் இயக்கமாக ஆக்குதல் வேண்டும். இது நமது விருப்பம். பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின் சின்னமாகத் தமிழ்வளர்ச்சிக்கு நிறுவனம் காணவேண்டும். பலகோடி நிதியமைப்புடன் காணவேண்டும் தமிழர்களே, இந்த அமைப்பினைக் காணின் தமிழ் வளரும்! வாழும்!

ஆட்சிமொழிக் குழப்பம்

இன்று சட்டப்படி தமிழ்நாட்டில் ஆட்சிமொழி தமிழேயாம். ஆனால், நடைமுறையில் தமிழின் வளர்ச்சி நிலை ஆமைவேகம்தான். நடுவணரசின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருப்பதும் தமிழ் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. அதாவது ஆங்கிலத்தின் வாயிலாகக் கற்றால்தான் நடுவணரசின் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் என்பது உண்மையன்று! நடுவணரசு, "இந்திய நாட்டு மொழிகள் 14-ல் எந்த மொழியிலும் நடுவணரசுப் பணித் தேர்வுகளை எழுதலாம்” என்று அறிவித்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது! ஆதலால் ஆங்கில மொழியே தமிழ்நாட்டின் இணையாட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது பொருந்தாது. அது மட்டுமல்ல. ஆங்கிலம் கற்பது வேறு. ஆங்கிலத்தின் வாயிலாகக் கற்பது வேறு, நாம் ஆங்கிலம் கற்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆங்கிலத்தைக் கற்போம். மிகமிக நன்றாகவே கற்போம்! அறிவியல், தொழிலியல் துறைப்பாடங்களைத் தமிழ் வாயிலாகக் கற்க வேண்டும் என்பதே பாவேந்தன் எண்ணம். ஆனால், இன்று எங்கும் ஆங்கிலப் பற்று! பச்சிளம் மழலைகள் ஆங்கிலம் கற்கிறார்கள். தமிழ் பயிலவில்லை! இது வெட்கப்பட வேண்டிய செய்தியல்லவா! பாவேந்தன் குடும்ப விளக்குக் காப்பியத் தலைவி மூலம்.

...எப்படிக்கும்
முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும்”

(குடும்ப விளக்கு-பக்.31)

என்று கூறுகின்றான். ஆம்! தமிழ்நாட்டுக் குழந்தைகள் தமிழ் படிக்க வேண்டும். நாம் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும்.

பெண்ணின் பெருமை

பாவேந்தன் பாரதிதாசன் மகளிர்குல விடுதலைக்குத் தன்னுடைய ஆசிரியன் பாரதியைப் போலவே, இல்லை - பாரதியைவிட வேகமாகப் பாடியவன். பெண்களுக்குக் கல்வி தேவை. தாய்மை நிலையடையும் பெண்களுக்குக் கல்வி அவசியம். பெண்கள் கற்றாலே நல்ல தலைமுறை தோன்றும்.

"கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம் அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை”

(குடும்ப விளக்கு)

என்கிறான் கவிஞன்.

கவிஞனின் இந்த வாக்கு வெற்றி முரசம் ஆர்ப்பது எப்போது? இன்றும் நமது நாட்டில் உள்ள பெண்களின் கல்விநிலையை எண்ணுங்கள்! விழிமின் மகளிர் குலத்திற்குக் கல்வி வழங்குமின்!

பெண், தனக்கு வாய்ப்புக் கிடைத்தால் அனைத்தையும் திறமையாகச் செய்வாள் என்பது பாவேந்தனின் கருத்து! குடும்ப விளக்குக் காப்பியத் தலைவியின் வாணிகத் திறனை நோக்குங்கள்.

"களிப்பாக்குக் கோட்போர்க் கீந்து
களிப்பாக்கிக் கடனாய்த் தந்த
புளிப்பாக்கி தீர்ந்த பின்பு
கடனாகப் புதுச்ச ரக்கை
அளிப்பார்க்குப் பணம் அளித்தாள்
................"

"இளகிய நெஞ்சத் தாளை
இளகாத வெல்லம் கேட்பார்
அளவாக இலாபம் ஏற்றி
அடக்கத்தை எடுத்து ரைப்பாள்
மிளகுக்கு விலையும் கூறி
மேன்மையும் கூறிச் சற்றும்
புளுகாமல் புகன்ற வண்ணம்
புடைத்துத் துரற்றிக் கொடுப்பாள்"

(குடும்ப விளக்கு-பக். 23)

"வாங்குவோர் களிப்படையும் வண்ணம் களிப்பாக்குத் தருதல், முன்கடன் வசூலித்துச் சரக்குக் கொள்முதல் செய்தல், முன்பாக்கி தருதல் ஆகியன வாணிகத்தின் நுட்பங்கள்.

வாணிக உலகம் தூய்மையாக இருக்க வேண்டும். சுத்தமான சரக்கினைத் தருதல் வேண்டும். அடக்கவிலை கூறி விற்றல் முதலியன வாணிகச் செயற்பாடுகள்! இந்தக் குடும்பத் தலைவி, இவற்றைப் பெற்று விளங்கும் பெற்றிமையை என்னென்பது! கடைசியாகக் குடும்பத் தலைவன் வருகின்றான். குடும்பத் தலைவி, அவனிடம் கணக்கு ஒப்படைக்கும் பாங்கைப் பாவேந்தன் விளக்கும் வரிகள் நிதிநிர்வாகத் தொழில் நுட்பம் சார்ந்த செய்திகள் அடங்கியவை: கடன் கொடுத்த இனங்களுக்குரிய தண்டல், ரொக்கத்திற்கு விற்ற முதல் தனியே வைத்தல். என்ற நிர்வாக ஒழுங்கியல்களைத் தாங்கியவை.

'கொண்டவன் வந்தான், கண்கள்
குளிர்ந்திடக் கண்டாள்!” அத்தான்
கண்டுள்ள கணக்கின் வண்ணம்
சரக்குகள் கடன்தந் தார்க்குத்
தண்டலும் கொடுத்தேன்! விற்று
முதலினைத் தனியே வைத்தேன்!

என்பது எண்ணி மகிழத்தக்கது.

தாய்மையின் மாண்பு

இந்த உலகில் அமைதி தழுவிய வாழ்க்கையை விரும்பாதவர் யார்தான் உண்டு? அமைதியான வாழ்க்கையை அடைய என்ன செய்ய வேண்டும்? அந்த வழியும் அருமையானதாக இல்லாமல் எளிமையானதாக இருக்கவேண்டும். ஆம்! பாவேந்தனை - புரட்சிக் கவிஞனை அணுகி இதற்கு வழி கேட்போமே! பாவேந்தனும் அமைதி நிலைத்திட இலேசான ஒரு வழியைக் காட்டுகின்றான். இதோ பாவேந்தன் அமைதிக்குக் காட்டும் இலேசான வழி!

"இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின்
இயேசுவழி ஒன்றுண்டு பெண்களை ஆடவர்கள்
எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்"

(குடும்ப விளக்கு பக். 199)

அன்பு ஆழமானது. அன்பு தூய்மையானது. அன்பு ஆற்றல் மிக்கது. அதுவும் தாயன்புக்கு ஈடு இணை இந்த உலகில் இல்லை. கடவுள், மானுடத்திற்கு உதவ எடுத்த வடிவம் 'தாய்' என்று சொன்னால் பொருந்தும். தாய், குழந்தையின் நோய்க்குத் தானே மருந்துண்பாள். பத்தியம் இருப்பாள். தாய், தன்னைப்பற்றிக் கவலைப்படாள். தன் சேயைப் பற்றியே அவளுக்குக் கவலை. குடும்ப விளக்கில் ஒரு காட்சி! குடும்ப விளக்கின் தலைவி, தன் குழந்தையை அணைத்தவாறு தூங்குகிறாள்! அயர்ந்து தூங்குகிறாள்! தலைவனுக்குத் தலைவியை எழுப்ப எண்ணம். அதனால் தலைவி, சூடிக் களைந்தெறிந்த மலர்ச் சரத்தைத் தலைவன் எடுத்து அவள் முகத்தில் எறிகிறான். அவள் விழிக்கவில்லை. பின் மலர்ச்சரத்திலிருந்து உதிர்ந்த மலரிதழ் ஒன்றைக் குழந்தை மீது போடுகின்றான். தூங்கிக் கொண்டிருந்த தாயின் கை உடனே மதலையின் மீது விழுந்த மலரிதழைத் துடைத்து எறிந்து மீண்டும் அதன் இடம் போயிற்று! என்ன அருமையான காட்சி!

"மங்கையை எழுப்பு தற்கு
வழியொன்று கண்ட றிந்தான்!
அங்கவள் களைந்தெ றிந்த
மலர்க்கண்ணி யைஅன் னாளின்
திங்களின் முகத்தில் போட்டான்!
சேயிழை விழித்தா ளில்லை!
மலர்கண்ணி தனில்அ விழ்ந்த

மலரிதழ் ஒன்றைத் தூக்கம்
கலைத்திடக் குழந்தைமீது
போட்டனன்! தாயின் கைதான்
மலரிதழ் தனைத்து டைத்து
மற்றும்தன் இடம் போயிற்று"

(குடும்ப விளக்கு - பக். 166-167)

என்ற கவிதை வரிகள் தாயன்பினை விளக்கும் ஒப்பற்ற வரிகள்.

மணந்தோன் அருள் விரும்பும் மங்கை

பாவேந்தன் காதல் கவிதைகள் இயற்றுவதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாக விளங்கினான்: விளங்குகின்றான். இன்று எங்கும் பொருள் மதிப்பீட்டுச் சமுதாயம்! இல்லை, பண மதிப்பீட்டுச் சமுதாயம்! இன்று எங்கும் நுகர்வு நாகரிகமே வளர்ந்து வருகிறது. இன்று பெண்களில் பலர், கணவனை, கண்டதையெல்லாம் வாங்கித் தருமாறு தொந்தரவு கொடுத்துக் கடனாளியாக்கித் தற்கொலை எல்லைக்குக் கொண்டு போய்த் தள்ளிவிடுகிறார்கள். இதுவா காதற் சிறப்புடைய பெண்ணின், அழகு? இல்லை, இல்லை! சிறந்த காதலி பொருளைப் பெரிதென்று கருதமாட்டாள்! அணிகலன்களை வேண்டி நிற்கமாட்டாள்! தன் மணாளனுடைய அருளையே தன் உயிரெனக் கொண்டு வாழ்வாள்! இதுவே பெண்டிர் பெருஞ்சிறப்பு! இதனை,

"பொருளையும் பெரிதென் றெண்ணாள்
பூண்வேண்டாள் தனைம ணந்தோன்
அருளையே உயிரென் றெண்ணும்
அன்பினாள்"

என்று பாடுகிறான்.

இங்குக் கணவன் காட்டும் அன்பை, அருள் என்று பாவேந்தன் கூறுவது ஏன்? அருள் என்பது தொடர்பிலார் மாட்டுச் செல்வது என்ற பழைய உரை வழக்கு என்னாவது? என்று கேட்கலாம். இல்லை, இல்லை! அன்பின் முதிர்ச்சியே அருள்! கைம்மாறும், கடப்பாடும் எதிர்பாராதது அருள்! அதுபோல் தனது கணவனின் காதலொழுக்கம் இருத்தல் வேண்டும் என்று மனைவி எண்ணுவதில் தவறில்லை யல்லவா?

முதியோர் காதல்

ஆகா! பாவேந்தனின் குடும்ப விளக்குக் காப்பியத்தில் முதியவர்கள் காதல் பகுதி மிகவும் சிறந்த பகுதி. படிக்குந் தோறும் இன்பமூட்டுவது. கிழவன் கூறுகிறான், தன் காதலி "கிழவி இருக்கின்றாள் என்பதொன்றே தனக்கு இன்பம்" தருகிறது என்று! எவ்வளவு அன்பின் முதிர்ச்சி!

அறைவீடு - கழகம்

தமிழர் வீடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று பாவேந்தன் வழிகாட்டுகிறான். வீட்டின் அறைகள் தமிழ்க் கழகம் போல் விளங்க வேண்டும். மேலும் வீடுதோறும் நூலகம் அமையவேண்டும். அந்த நூலகத்தில் பழைய நூல்களும் புதிய நூல்களும் கலந்திருக்கவேண்டும். நூல்கள் மட்டும் போதுமா? இந்த யுகம், செய்தித்தாள் யுகமல்லவா? செய்தித்தாள்களும் இருக்கவேண்டும். கவிஞனின் பொன்னுரைப்படி எப்பொழுது தமிழர் இல்லங்கள் இயங்கும்?

"பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள்
அவள் வாத்திச்சி. அறைவீடு கழகம்
தவழ்ந்தது சங்கத் தமிழ்ச் சுவை"

(குடும்ப விளக்கு - பக். 8)

என்றும்,

“நின்றகண் ணாடி நெடும்பேழை தான்திறந்து
இன்று மலர்ந்த இலக்கியங்கள் - தொன்றுவந்த
நன்னூற்கள் செய்தித்தாள் நல்கி"

என்றும் பேசும் கவிதை வரிகளை உன்னுக.

தட்டாமல் ஈக - தனியில்லம்

குடும்ப விளக்குக் காப்பியம் மனையறத்தின் மாண்பினைச் சிறப்புற விளக்குகிறது. பாவேந்தன் காட்டும் மனையறம் தமிழர் மரபு வழி வந்த மனையறம், ஆரியக் கலப்பு வந்த பிறகு, வந்த கூட்டுக் குடும்பம் அன்று. கூட்டுக் குடும்பமுறை ஒரே நரகம்! அங்குக் காதலும் சிறப்பதில்லை: மனையறமும் மாட்சி யுறுவதில்லை: பொறுப்புணர்வும் வருவதில்லை. தற்சார்பான வாழ்க்கையும் கால்கொள்வதில்லை. கூட்டுக்குடும்பத்தில் எதிர் விளைவுகளே மிகுதி. "மாமியார் மருமகள் சண்டை" உலகமறிந்த செய்தி! அதோடு நாத்தியார் பிடுங்கல் வேறு! அதனால், திருவள்ளுவர்,

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு"

என்று கூறினார். இந்தத் திருக்குறள் வழி தமிழர் மனையறம் கூட்டுக் குடும்பமன்று என்பதை உணர்கின்றோம். “தம்மில்" "தமது” என்பவற்றால் தனிக்குடித்தன முறை இருந்தது என்பது உய்த்துணரத்தக்கது.

நமது குடும்ப விளக்கின் தலைவியின் திருமணம் நிறைவேறிய நிலையிலேயே,

"தட்டாமல் ஈக தனியில்லம்" குடும்ப விளக்கு-(பக்.117) என்கிறாள்!

கவிஞனின் இந்த வரி ஊன்றிப் படிக்கத்தக்கது. தமிழர் வாழ்வில் கூட்டுக் குடும்ப முறை தகாது: பயன் தராது: தனியில்ல முறையில்தான் பெற்றோரிடத்தில் கூட அன்பு பெருகி வளரும்! பிரிவே அன்புக்குச் சாதனம்.

பொருள் தேடல் மாந்தன் சீர்

முந்தையோர் தேடிவைத்த செல்வத்தினை வைத்தே வாழ்தல் நன்றோ? இல்லை! மாந்தன் சீர்பெற வேண்டு மானால் அவரவரும் அவரவர்தம் வாழ்க்கைக்குச் செல்வம் தேடவேண்டும். இதுவே தமிழ் மரபு. இங்குத் தொல்காப்பியத்தின் பொருள்வயிற் பிரிவு நினைவு கூரத்தக்கது.

"பெற்றவர் தேடி வைத்த
பெருஞ்செல்வம் உண்டென் றாலும்
மற்றுந்தான் தேட வேண்டும்
மாந்தன்சீர் அதுவே யன்றோ?

(குடும்ப விளக்கு - பக். 136)

என்னும் வரிகள் இதனை உணர்த்தும்.

மருத்துவத்தில் சிறந்த மங்கை

அடுத்து, வீடே மருத்துவ மனையாத் திகழும் தகுதியும் பெற்றிருப்பதைக் காண்கிறோம். குடும்பத் தலைவி தமிழ் வாத்திச்சியாக விளங்கினாள்: வாணிகச் சிறப்புப் பெற்று விளங்கினாள். அதே குடும்பத் தலைவி மருத்துவத் தாயாகவும் விளங்கும் அருமைப்பாட்டினைப் பாவேந்தர் விளக்கும் மாண்பினை உன்னுக! உன்னுக!

"நாடியில் காய்ச்சல் என்றே
நன்மருந் துள்ளுக. கீந்தாள்"

என்றும்,


"அன்றியும் உன்பெண் டாட்டி
அறிவுக்கோர் திருவி ளக்காம்

இன்றுநான் அடைந்த நோய்க்கு
நன்மருந் திட்டுக் காத்தாள்"

என்றும் மாமியார் மெச்சும் மருமகளைக் குடும்பவிளக்கில் காண்பீர். இன்று கண்டபடி மாத்திரைகள் தின்பதால் பலருக்கும் நோய் வளர்கிறது! நமது பெண்கள் அவர்களுடைய தமிழ் மரபு மருத்துவத்தினை என்று அறிவர்? என்று உணர்வர்: அன்றே தமிழர்க்குப் பொற்காலம்!

வாழ்வின் வீடு

வாழ்நிலை அரும்பாகி மலராகி, காயாகி, கனியாகி முதிர்வதைப் போல, வாழ்க்கையும் முதுமையடைகிறது. இந்த வாழ்க்கைப் படிகளில் முறையாக வளர்ந்து செழுங் கிளைகளுடன் தழைத்து வளர்வதே வாழ்வியற் சிறப்பு. இங்கனம் நிறைவுறும் வாழ்வே வீடு என்று பாவேந்தன் கூறுவதைக் கேளுங்கள்!

"அதிர்ந்திடும் இளமைப் போதில்
ஆவன அறங்கள் செய்து
முதிர்ந்திடும் பருவந் தன்னில்
மக்கட்கு முடியைச் சூட்டி
எதிர்ந்திடும் துன்ப மேதும்
இல்லாமல் மக்கள் பேரர்
வதிந்திடல் கண்டு நெஞ்சு
மகிழ்வதே வாழ்வின் வீடு"

(குடும்ப விளக்கு - பக். 20)

வேலைவாய்ப்புப் பெருக வேண்டும் மானுடம் தோன்றிய நாள் தொட்டு உழைத்து வேலை செய்து பொருள்களைப் படைத்து நுகர்ந்து வாழ்தல் என்பது பரிணாம வளர்ச்சி. எல்லாருக்கும் தொழில் வேண்டும். தொழிலின்மையே வறுமையாகும். இன்று நமது நாட்டை வருத்தும் கொடிய துன்பம் வேலையில்லாத் திண்டாட்டம் என்பதைப் பாவேந்தனும்

"தொழில் வேண்டு வார்க்குத் தொழிலில்லை”

(குடும்ப விளக்கு - பக். 61)

என்று வருந்திப் பாடுகின்றான். நாடு நலமுற, வளர, வாழத் தொழில்களை வளர்க்கவும், வேலை வாய்ப்புக்களை வழங்கவும் முதலீடு செய்ய வேண்டும் என்பது பாவேந்தனின் அறிவுரை. இன்று இளந்தலைமுறையினர் வேலை செய்து வளர வாய்ப்புக்கள் இல்லை! ஊர்தோறும் பல நூற்றுக் கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறவில்லை. உலக நாடுகளிலேயே வேலைவாய்ப்புக் குறைவான நாடு நமது நாடுதான்! ஆதலால், இந்த நூற்றாண்டில் செய்யக் கூடிய தலைச்சிறந்த அறம், தொழிற் சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பு வழங்குவதேயாம். பின்னை உள்ள அறங்கள் இரண்டாம் நிலையினவே என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

எம்மட்டில் உண்டோ அம்மட்டில் உண்டு

தமிழினத்தின் பிறவிக்குணம், ஒற்றுமையைப் பேணா திருத்தல். நமது பாவேந்தன் தமிழர் தம்முள் ஒற்றுமை பேணவேண்டும் என்று வலியுறுத்துகின்றான். ஏன் நம்முள் ஒற்றுமை இடம் பெறவில்லை? நாம் அனைவரும் ஒன்றென்று எண்ணும் உணர்வு தோன்றி வளராமல், அயல் வழக்கின் வழி வந்த சாதிகள் பிரிவினைப்படுத்தி ஒற்றுமையைக் குலைத்த கொடிய செய்தியை நினைத்தாலும் குருதி கொதிக்கிறது. பாவேந்தன்,

"....எல்லாரும்
ஒன்றென்னும் எண்ணம் உயரவில்லை.ஒற்றுமைதான்
நன்றென்னும் எண்ணம் நடப்பதுவோ?

(குடும்ப விளக்கு - பக். 6)

என்ற கவிதைகளைப் பலகாலும் படிக்கவேண்டும்: ஒழுக்க மாக்குதல் வேண்டும். ஏன்? சாதியில் உயர்வு - தாழ்வு நீங்கின அளவிற்குக்கூட நன்மை உண்டு, உயர்வு உண்டு என்பது பாவேந்தனின் எண்ணம்.

"இம்மக்கள் தமக்கு மேலோர்
இழிந்தவர் என்னும் தீமை
எம்மட்டில் போமோ, நன்மை
அம்மட்டில் இங்குண் டாகும்"

(குடும்ப விளக்கு - பக். 61)

என்பதை அறிக.

ஏற்றத்தாழ்வு

சாதிகுல இழிவு மட்டும்தானா? செல்வம் உடையார் - இல்லாதார் ஏற்றத்தாழ்வால் ஏற்படும் இழிவையும் காட்டுகின்றான் பாரதிதாசன். ஏற்றத்தாழ்வின் கொடு முடியாக ஓர் ஆளை வண்டியில் வைத்து, ஆள் இழுக்கும் கேவலம் தோன்றியமையை நினைந்து வெதும்பிக் கவிதை களில் தெரிவிக்கிறான் பாவேந்தன்.

"கல்வி தன்னினும் செல்வம் தன்னினும்
தொல்லுல கோர்பால் தொலையா திருந்திடும்
ஏற்றத் தாழ்வே இதற்குக் காரணம்
இழுப்பவன் வறியவன்! ஏறினோன் செல்வன்! இருவரும் ஒருநிலை எய்தும் நாளில்
ஆளைஆள் இழுத்தல் அகலும்"

(குடும்ப விளக்கு - பக் 5)

பாவேந்தனின் இந்தப் பாடலுக்குச் செயலுருவம் கொடுத்த பெருமை அறிஞர் அண்ணா அவர்களுக்கு உண்டு. அறிஞர் அண்ணா தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் ஆள் இழுக்கும் வண்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

சுற்றுப்புறத் தூய்மை

வாழ்வு இனிதாக அமையச் சுற்றுப்புறச் சூழ்நிலை சுத்தமாக அமையவேண்டும். ஈக்கள் நோய் பரப்பிகளாகும். ஈக்களை ஒழிப்பது தலையாய கடமை.

{{block_center|

"ஈமுன்கால் சோற்றிலையில்
இட்டாலும் - தீமையம்மா"

( குடும்ப விளக்கு - பக். 45)

இஃதோர் இனிய பாடல்! அருமையான அறிவுரை!

பனை-நட்புக்கோர் உவமை

வாழ்க்கையை இயக்கும் உணர்வுகள் இரண்டு. ஒன்று காதல்! மற்றொன்று நட்பு! காதல் உணர்வு ஆண் பெண்பாலார்க்கிடையே நிகழும் மென்மையான உணர்வு: ஆழமானது ஆற்றலுடையது. நட்பு, பால் வேறுபாடின்றி நிகழ்வது. ஒருவன் காதலிக்காமல் கூட வாழ முடியும். நட்பு இல்லாமல் வாழ முடியாது. நட்பு - ஆம்! அஃதோர் அற்புதமான உந்துசக்தி!! உணர்வு! மருந்து! பாவேந்தன், நட்பை - உவமையால் விளக்கும் முறை அற்புதமானது. பனை மரத்தை நட்புக்குச் சான்றாக விளக்குகின்றான்! ஆம்! ஒருவன் தன் இளமைக்காலத்தில் பனம்பழம் தின்று ஏரிக் கரையில் போட்ட பனங்கொட்டை, பனைமரமாக வளர்ந்தது. தண்ணிர் கேட்காமல் தானே வளர்ந்தது பனைமரம்! ஏன் காப்புக்கூட எதிர்பார்க்கவில்லை! தானே வளர்ந்த பனைமரம் உரிமையோடு நூங்கும் சாறும் தந்து உரமூட்டுகிறது: வளர்கிறது: வாழ்விக்கிறது! வெப்பம் தாக்காமல் விசிறியாக நின்று பாதுகாக்கிறது. ஆம்! நல்ல நண்பர்கள், எதிர்பார்த்து நண்பர்களாவதில்லை. தாமே வளர்வர்; வாழ்வர். நமக்கு வேண்டிய உதவிகளை நாம் எதிர்பார்க்காமலே செய்வர். கைம்மாறும் எதிர்பார்க்க மாட்டார்கள். இதுவே நட்பு.

"ஊர்ஏரிக் கரைதனிலே என்னிளமைப்
பருவத்தில் இட்ட கொட்டை
நீரேதும் காப்பேதும் கேளாமல்
நீண்டுயர்ந்து பல்லாண் டின்பின்
வாராய்என் றெனைஒலை விசிறியினால்
வரவேற்று நுங்கும் சாறும்
சீராகத் தந்ததெனில், பனைபோலும்
நட்புமுறை தெரிந்தா ருண்டோ!

(குடும்ப விளக்கு - பக். 80-81)


இத்தகு நட்புக் கிடைப்பின் வேறு என்ன வேண்டும்?


தீமை கண்டு ஒதுங்குதல் தீமை


சமூகம் ஒரு அமைப்பு இயக்க நிலையில் உள்ள அமைப்பு. இந்தச் சமூக இயக்கத்துடன் ஒருங்கிணைந்து ஓடாத வாழ்வு பயனற்றது. ஊர்திகள் தடங்களிலும் சமூகம் நியதிகளின் வழியும் செல்ல வேண்டும். சமூக நியதி புறக்கணிக்கப்படும்பொழுது சமூகத்தின் வளர்ச்சி பாதிக்கும். சமூக நியதிகளை வழுவாமல் பின்பற்ற வேண்டும். சமூக நியதிகளிலிருந்து மறந்தும் வழுவுதல் கூடாது.

இன்றைய சமூகத்தில் பலர், பயந்தாங்கொள்ளிகளாயிருக்கின்றனர். அது அவர்களின் பிறவிக்குணம் போலும், பயம் மிகமிகத் தீயகுணம். பயம் மனிதனைக் கோழையாக்கி விடுகிறது. மனித உலகத்திலிருந்து ஒதுக்கி விடுகிறது. பயம் அறிவைக் கொன்றுவிடுகிறது. ஆளுமையை அழித்து விடுகிறது! தீமைகளிலெல்லாம் தீமை பயம். இந்தப் பயத்திலிருந்து மனித உலகத்தை மீட்பதே பெருந்தொண்டு! பயத்திலிருந்து மனிதனை மீட்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை! வாழ்க்கைக்கு ஒப்புறுதி உத்தரவாதம் இன்மையும் அதன் விளைவாகிய தற்சார்புமே பயத்திற்குக் காரணம். பாஞ்சாலிக்கு அநீதி இழைத்த பொழுதும் சமூகம் விழித்து எழவில்லை என்பதுதானே உண்மை! அன்று மட்டுமன்று. இன்று மட்டும் என்ன வாழ்கிறது? பாவேந்தன் பாரதிதாசன்,

"ஒரு தீமை கண்டால்
ஒதுங்கி நிற்றல் தீமை"

(குடும்ப விளக்கு - பக். 66)

என்று கூறும் அறிவுரை தமிழர் வாழ்வாக மலர்தல் வேண்டும்.

"இழுக்கொன்று
காணில் நமக்கென்ன
என்னாமல் கண்டஅதன்
ஆணிவேர் கல்லி
அழகுலகைப் - பேணுவதில்
நேருற்ற துன்பமெலாம் இன்பம்"

(குடும்ப விளக்கு - பக். 66)

என்பான் பாரதிதாசன். சமூக நியதிக்காகத் துன்பமுறுதலும் இன்பமே என்பது பாவேந்தனின் பண்பான அறிவுரை.

நல்லறம் நாடுக
இன்றைய சமுதாயத்தில் தன்னலம் - பொதுநலம் என்று அடிக்கடி பேசப்படுகிறது. இவ்விரண்டில் பொது நலமே உயர்ந்தது. பொதுநலத்தில் தன்னலம் அடங்கும்; ஆனால் தன்னலத்தில் பொதுநலம் அடங்காது. ஆதலால், பொதுநலம் போற்றுதலுக்குரியது. வழி வழி வந்த தமிழ் மரபு பொதுநலம் சார்ந்தேயாம். தமிழ்த் தலைமகன் பொருளிட்ட விரும்புவதுகூடப் பொதுநலத் துண்டுதலிலேயே என்று அகநானூறு கூறும். 

"இல்லென்று இரப்போர்க்கு இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்”

என்பது அகநானூறு. புறநானூறு,

"தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர்...."

என்று கூறும்

நமது கவிஞன் பாவேந்தன் பொதுநலம் பற்றி நிறையப் பேசுகிறான்.

"அதிகாலை தொடங்கிநாய இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்ப தல்லால்
இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்?


(குடும்ப விளக்கு - பக். 30)

என இடித்துரைக்கும் வகையில் பாடுவான். நல்லறமே நாட்டிற்கு இசைந்தது. எந்நாளும் பிறர்க்குத் தீமை செய்யாமை நல்லறம் ஆகும்.

"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்"


என்பது திருக்குறள். தீமை, செய்வானுக்கும் செய்யப் படுபவனுக்கும் தீமை பயக்கும்.

"நல்லது செய்தல் ஆற்றி ராயினும்
அல்லது செய்தல் ஒம்புமின்


என்பது புறநானூறு.

தீமை செய்யாமையும் நன்றி மறவாமையுமே நல்லற மாகும்.

"இந்நாட்டின் நலனுக் காக
நல்லறம் இயற்றி வந்தோம்
எந்நாளும் பிறர்க்குத் தீமை

எங்களால் நடந்த தில்லை
சின்னதோர் நன்றி செய்தார்
திறம்மறந் தறியோம்"

(குடும்ப விளக்கு - பக். 185)

என்னும் அடிகளை ஒர்க.


துன்பத்தின் காரணங்களை மாற்றுக

பாவேந்தன் வெளிப்படைக் கவிதைகளையே அதிகமாகப் பாடியவன். ஆயினும், கற்பனை வளத்தில் பாவேந்தனுக்கு நிறைய ஆற்றல் உண்டு.

மாட்டின் மீது ஈக்கள் மொய்க்கின்றன. மாடு தனது வாலைச் சுழற்றி ஈக்களை விரட்டுகிறது. அதனால் ஈக்களால் விளையும் துன்பம் ஒய்ந்துவிடுமா என்ன? ஈக்கள் புழுக்கும் இடத்தைத் தூய்மை செய்தால்தானே துன்பம் தொலையும். இஃது ஒர் எளிய கற்பனை! இந்தக் கற்பனை மூலம் கவிஞன் நமக்கு உணர்த்துவது, "துன்பங்களுக்கு மாற்றுத் தேடாதீர்! துன்பத்தின் காரணங்களையே மாற்ற முனைவீர்! அதுவே வாழும் முறைமை” என்பதாகும்.

நகைச்சுவை

பாவேந்தனின் 'குடும்ப விளக்கு' காப்பியம், காப்பியச் சுவைகள் நிறைந்து விளங்குவது. காப்பியத்திற்கு இன்றியமை யாதது நகைச்சுவை. நாத்தியார் வீட்டுக்கு வண்டிப் பயணம் போய்வந்த மாமன் மாமிக்கு, வண்டிப் பயணம் அமைந்த நலம் பற்றி மருமகள் மாமியை கேட்கிறாள்.

"இவையெல்லாம் வண்டிக் குள்ளே
இருந்தன என்றால், அந்த
அவைக்களம் தனிலே நீவிர்
எங்குத்தான் அமர்ந்திருந்தீர்?
சுவைப்புளி அடைத்து வைத்த
தோண்டியின் உட்புறத்தில்

கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும்
கால்வைக்க இடமி ராதே!

(குடும்ப விளக்கு - பக். 14)

என்பது மருமகள் கேள்வி:

இனி மாமியாரின் விடையைப் பார்ப்போம். அந்த விடை உயர்ந்த நகைச்சுவையை வழங்குகின்றது. மாமி,

"இவைகளின் உச்சி மீதில்
குன்றுமேல் குரங்கு போல
என்றனைக் குந்த வைத்தார்
என்தலை நிமிர, வண்டி
மூடிமேல் பொத்த விட்டார்!
உன்மாமன் நடந்து வந்தார்
ஊரெல்லாம் சிரித்த" தென்றாள்!

(குடும்ப விளக்கு பக். 14)

சாமான் மூட்டைகளின் மேல் மாமியை உட்கார வைத்து வண்டியின் கூரை மாமியின் தலையில் முட்டியதால் வண்டியின் கூரையைத் தலையளவுக்குப் பொத்தலிட்டார், மாமனார்! அந்தப் பொத்தலுக்குள் மாமியார் தலை நிமிர்ந்தது. மாமனாருக்கோ வண்டியில் இடமில்லை. அதனால்அவர் நடந்தே வந்தார். ஊரெல்லாம் சிரித்தது என்று பாவேந்தனின் பாத்திரம் கூறுகிறது! ஏன் இன்றும் நமக்குச் சிரிப்பு வருகிறதே.

உவமை நயம்

கவிதை நலன்களுள் சிறந்த உவமை நலம், பாவேந்தன் கவிதைகளில் தொட்ட தொட்ட இடமெல்லாம் இடம் பெற்றிருப்பதை யாவரும் அறிவர். ஆயினும் ஒரு செழிப்பான உவமை. தென்னையைப் பற்றிய உவமை. நாம் அன்றாடம் பார்க்கும் தென்னை மரந்தான்! ஆனால் பாவேந்தன் பார்வை வேறு! தென்னை தலைவிரித்து நிற்கிறது! விரித்த உரோமத் தலையையும் தெங்குக் குலைகளையும் தாங்கமுடியாமல் உடல் இளைத்து நிற்கிறது! ஒற்றைக் காலில் நின்று பெருஞ்சுமையைத் தாங்குகிறது. தமிழர்க்குத் தேங்காய், குளிர்நீர், கூரை மறைக்கும் ஒலையெல்லாம் தந்து புகழ் பெற்று நிற்கிறது. இதுபோல நல்லோர்கள் தாம் பசித்திருந்தாலும் பிறர் பசி தீர்க்கவே இலை விரித்துச் சோறிடுவர். இது தமிழ் மரபு! தம்மை மீறியும் அறம் செய்யும் தமிழ் மக்களின் மனநிலையில் அயல் வழக்கு ஊடுருவி "தனக்கு மிஞ்சியது தான தர்மம்" என்ற இழிநிலைக்குத் தள்ளியது. மீண்டும் நல்லோராக வாழ்வோம். தென்னை மரம் போல் பயன்பட வாழ்வோம்.

தலைவிரித்தாய் உடல்இளைத்தாய்
ஒற்றைக்கா லால்நின்றாய்
தமிழ்நாட் டார்க்குக்
குலைவிரித்துத் தேங்காயும்
குளிரிளநீ ரும்கூரைப்
பொருளும் தந்தாய்
கலைவிரித்த நல்லார்கள்
தாம்பசித்தும் பிறர்பசியைத்
தவிர்ப்ப தற்கே
இலைவிரித்துச் சோறிடுவார்
என்பதற்கோர் எடுத்துக்காட்
டானாய் தெங்கே!

இந்தக் கவிதையின் அருமையையும் அழகையும் சிந்தித்துப் பாருங்கள்.


முடிவுரை

பாரதிதாசனின் குடும்ப விளக்கு ஒரு சிறந்த காப்பியம். இந்தக் காப்பியத்தைத் திறனாய்வு செய்வது இந்தச் சொற்பொழிவின் நோக்கமன்று. குடும்ப விளக்குக் காப்பியத்தைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதே நோக்கம்! ஏன்? தமிழகத்தில் தமிழ்க் குடும்பங்கள் பாவேந்தனின் குடும்ப விளக்கின் அமைவில் அமையவேண்டும். அதுவே, பாவேந்தனுக்கு - புரட்சிக் கவிஞனுக்குச் செய்யும் நன்றி! கடப்பாடு!

பாவேந்தன் புகழ் வாழ்க!
குடும்ப விளக்கின் ஒளி பரவுக!

5. பாரதிதாசனின் உலகம்

பேரன்புக்கும் பெருமைக்குமுரிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ச. முத்துக்குமரன் அவர்களே! தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் மா. இராமலிங்கம் அவர்களே! இனிய அன்பிற்குரிய பேராசிரியப் பெருமக்களே! நண்பர்களே! சகோதரர்களே!

பாவேந்தன் பாரதிதாசன் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் பாவேந்தன் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் நூற்றாண்டு விழா அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்தும் பேறு கிடைத்தமையை எண்ணி மகிழ்கின்றோம். வாய்ப்புக்கு முதலாக இருந்த அறக்கட்டளையினருக்கும் துணையாக அமைந்த பல்கலைக்கழகத்தாருக்கும் நன்றி! பாராட்டு!

முன்னுரை

பாவேந்தன் பாடல்கள் இன்றையத் தமிழகத்தை வென்றெடுக்க வேண்டும் என்பது நமது விழைவு விருப்பம். என்ன நடக்கப் போகிறது! பாவேந்தன் பாடல்கள் தமிழகத்தை வென்றெடுக்கும் என்ற நம்பிக்கையோடு பேசுகின்றோம். செயல், நாட்டு மக்களினுடையது; இன்றைய இளந் தலைமுறையினருடையது. வரலாற்றின் மேல் விழிவைத்துப் பார்ப்போம்! பாரதிதாசன், கவிதைகளை - மரபுவழிக் கவிதைகளை இயல்பாகவே எழுதிக் குவிக்கும் தனித்திறன் பெற்ற கவிஞன். 'பாவேந்தன்' என்ற பெயர் நூற்றுக்கு நூறு பாரதிதாசனுக்குப் பொருந்தும், பாவேந்தன் காலந்தோறும் வளர்ந்து வந்த ஒரு கவிஞன் என்பதைக் காலந்தோறும் அவன் பாடிய கவிதைகளைப் படித்தால் உணரலாம். அவன் பாடல்கள் தனித் தமிழ் நடையில் அமைந்தவை; எளிய நடையுடையவை; பொருட்செறிவு உடையவை ! அவை பண்ணொடு பொருந்தும் பாடல்கள்; மனித குலத்தை முன்னோக்கிச் செலுத்தும் பாடல்கள்! எண்ணற்ற மக்களின் இதயங்களைத் தூண்டிச் செயற்பாட்டுக்கு ஊக்குவிக்கும் உந்து சக்தியுடைய பாடல்கள்! நீண்ட உறக்கம் தெளிவிக்க வந்த பாடல்கள். உரிமையும் உணர்ச்சியும் எழுச்சியும் தந்து எழுந்து நிற்கச் செய்த பாடல்கள். அப்பாடல்கள் மூடத்தனத்திற்கு வைத்த முழு நெருப்பு. வாழ்வியல் துறைதோறும் கவிதைகள் இயற்றி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவன் பாரதிதாசன். பழைமையை எதிர்த்துப் புரட்சிப்பண் பாடியவன், பாவேந்தன். சிறு சிறு எல்லைகளைக் கடந்து, மிக மிக விரிந்த எல்லைகளைத் தொட்டு உயர்ந்து விளங்கிய கவிஞன் பாவேந்தன்!

காலம் தந்த கவிஞன்

பாவேந்தனின் ஒட்பம் உலகம் தழிஇயது. பொது நலம் கொழித்துப் புதிய உலகம் படைக்கத் துடித்த பாவேந்தனின் இதயப் பொழிவுகள் அவனுடைய படைப்புகள். பாவேந்தன் வாழ்ந்த காலத்தில் ஒரு பகுதியில் நாடு அடிமைப்பட்டிருந்தது. மற்றொரு பகுதியில் நாடு விடுதலை பெற்றிருந்தது. அவன் காலம் இந்திய மக்கள் விடுதலை இழந்து, உணர்விழந்து பாழ்பட்டுக் கிடந்த காலம்! தமிழ் மக்கள் தமிழை மறந்து அயல் மொழிக்கு வரவேற்புக் கூறி, வாழ்த்துக் கூறி வாழ்ந்து கொண்டிருந்த காலம். கல்வியில், ஆட்சியில் ஆங்கிலம்; ஆண்டவன் சந்நிதியில் ஆரியம் இருந்த காலம். தமிழ் மக்கள் ஓரின உணர்வை இழந்து, சாதி, குலங்களில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த காலத்தில் தமிழகத்திற்குப் புதுமையும் பொதுமையும் வழங்கிடப் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் தோன்றினான். காலம் தந்த கவிஞன் பாவேந்தன் பாரதிதாசன். காலத்திற்குப் புதிய வடிவம் தரப் போராடியவன் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்!

திராவிடன், தமிழன், ஆரியன் என்ற வேற்றுமைகள் எழுத்தாலும் பேச்சாலும் பூதாகாரமாக வளர்க்கப்பெற்ற நிலையில் தோன்றிய பாவேந்தனை, இந்த இன, மொழி உணர்வுகள் தொடக்கத்தில் கவர்ந்தது வியப்பன்று.

தமிழர் அனைவரும் சூத்திரர், இழிமக்கள் என்று இழித்துரைக்கப்பட்ட நிலையில் யாரைத்தான் இனவுணர்வு தொடாது? இனமானம் இழந்து சூத்திரனாக மதிப்பிழந்து உரிமை இழந்து வாழ யார்தான். ஒருப்படுவர்? இன்றும் உயர்குடி ஆதிக்கம்-ஆணவப் பேய் கொட்டமடிப்பதைப் பார்த்தால் ஏன் திரும்பவும் பெரியார் பிறக்கவில்லை, பாவேந்தன் பிறக்கவில்லை, என்று கேட்கத் தோன்றுகிறது. அவர்கள் தொடங்கி வைத்த இழிவு நீக்கும் வரலாறு இன்னும் முடியவில்லையே!

பாவேந்தனின் இலட்சியம்

பாவேந்தன் பாரதிதாசன் இந்த இழிநிலையை நீக்கச் சூளுரைக்கின்றான். "சமூகமே, யாம்!!” என்று சமூக மனப்பான்மைக்கு உரமூட்டுகின்றான். அறிவுப் புயற்காற்றில், சாதி மதங்களின் பெயரால் வளர்ந்துள்ள மூட நம்பிக்கைகள் அலைக்கழிக்கப்படுதல் - வேண்டும், ஒழிக்கப்படுதல் வேண்டும். பின், அறவோருக்குப் புதியதோர் உலகம் செய்ய வேண்டும். இது பாவேந்தனின் இலட்சியம் - விருப்பம்.

"சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டையுல கிதனை
ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்."

(பாரதிதாசன் கவிதைகள் - முதல் தொகுதி, பக். 146) பாவேந்தன் காண விரும்பிய சமூகத்தை அமைக்கும் முயற்சியில் முன்னேறுவோம்!

உலகப் பார்வை

திருக்கோயிலில் இருக்கும் திருமேனியைத் தொழ, அத்திருக்கோயிலை எடுத்த தமிழன் நுழையக் கூடாது. ஆனால் "பேர் கொண்ட பார்ப்பனர்" மட்டும் நுழையலாம். இது என்ன சமூக நியதி! நீதி! இத்தகைய இழிவுகளைக் கண்டு குமுறிய பாவேந்தன் தொடக்கத்தில் இனவழிக் கவிதைகள் பாடியதுண்டு. ஆனால், பாவேந்தன் பாரதிதாசன் வளர்ந்து - உலகந்தழீஇய கவிஞனாக வளர்ந்து- நின்று பாடிய கவிதைகள் அற்புதமானவை. மானுடநேயமும் உலகந்தழிஇய ஒருமைப்பாட்டுணர்வும் பாவேந்தனின் கவிதைத் தொகுதி களில் நிறைந்துள்ளன. ஆதலால், பாவேந்தன் - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் உலகக் கவிஞனாக உயர்ந்து விளங்கும் மாட்சிமையை எண்ணி மகிழ்வோம்!

மக்களா? மரங்களா?

மனிதகுல வரலாற்றுப் போக்கில் கடவுள், அரசு, உடைமை ஆகியன மதிப்பீட்டுப் பொருள்களாக வளர்ந்து இடம்பெற்று வந்துள்ளன. ஒரோவழி, அருமையாகச் சான்றாண்மையும் மதிக்கப் பெற்றுள்ளது. இத்தகைய உயர் மதிப்பீடுகள் வரலாற்றில் நிலைபெற்று நிற்கவில்லை. கடைசியாக அரசு அதிகாரங்கூட நிலைத்த மதிப்பீட்டுக்குரியதாக இல்லை என்பதை முடியாட்சிகள் சரிந்து வீழ்ந்த வரலாறுகள் நினைவூட்டுகின்றன. எஞ்சியது மதிப்பீட்டுச் சமுதாயமேயாகும். இன்று நம்முடைய நாட்டை வருத்தும் தீமை, பணமதிப்பீட்டுச் சமுதாயமேயாம். இன்று மனிதன் மதிக்கப்படுவதில்லை! இந்திய சமூகத்தில் நீண்ட காலமாகவே ஒரு பகுதியினர், மானுடமாக மதிக்கப் பெறாமல், ஒதுக்கப் பெற்ற அரிசனங்கள் - உயிரொடுங்கி, உணர்விழந்து நடைப்பிணங்களாக வாழ்ந்து வந்தனர். இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் இந்த மண்ணின் மைந்தர்களை வென்றதன் விளைவாக இந்த மண்ணின் மைந்தர்கள் தாழ்த்தப்பட்டவர்களாயினர்; தீண்டத்தகாதவர்களாயினர். இந்தத் தீண்டாமையைச் சாத்திரம், சட்டம் இரண்டாலும் உறுதிப்படுத்தினர். இந்தக் கொடுமையை, பாவேந்தன் பாரதிதாசன் மறுக்கிறான். மக்களை மரங்களாக மதித்து நடத்தும் இழிநிலையைச் சாடுகிறான். மரங்களாகக் கூட எங்கே மதிக்கிறார்கள்? மக்களை மக்களாக மதிக்க வேண்டும். மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். இதுவே பாவேந்தனின் உணர்வு.

"மக்களை மரங்களாக
மதித்தநாள் மலைஏ றிற்று!
மக்கட்குத் தொண்டு செய்தே
தனிமகன் வாழ வேண்டும்"

(குறிஞ்சித் திட்டு-பக்.85)


இங்கே "மக்கள்” என்ற பொதுமைச் சுட்டினை ஒர்க.

மக்களை மக்களாக மதிக்காது அவர்களின் உழைப்பைச் சுரண்டிப் பொருள் சுருட்டும் புன்மையினரைக் "குட்டைப் புத்திக்காரர்” என்று கவிஞன் ஏசுகிறான்.

"குட்டைப் புத்திக் காரர் - மக்கள்
கூட்டத்தையும் நினையார்
கிட்டியது போதும்!” - எனக்
கேளிரையும் மறப்பார்"

(ஒருதாயின் உள்ளம்-பக்.118)


என்பதறிக.

அனைவரும் உறவினரே!

பாவேந்தன், புதிய 'ஆத்திசூடி' இயற்றியுள்ளான். இந்த

ஆத்திசூடியை, பாவேந்தன் அறிமுகப்படுத்தும் வரிகள் கவனமாகப் படிக்கத் தக்கவை.

"உலகில் பொதுவாட்சி ஒன்றே ஒன்று
நிலவுதல் கருதி நிகழ்த்திய திந்நூல்"

என்பன அந்த வரிகள். இந்த ஆத்திசூடியில் ஓர் உயர்கொள்கையைக் காட்டுகின்றான். மாந்தர் - ஆம் மனிதர் எவராக இருந்தால் என்ன? எந்த மொழி பேசினால் என்ன? எந்தக் கடவுளைக் கும்பிட்டால் என்ன? கும்பிடாமல் போனால்தான் என்ன? ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? அதைப் பற்றியெல்லாம் எண்ணாதே! ஆராய்ச்சி செய்யாதே! "அனைவரும் உறவினர்" என்கின்றான். ஆம்! அனைவரையும் உறவினராக ஏற்பதற்குரிய இதயவிரிவு வேண்டும். அணுயுகத்தின் அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ளவாவது அனைவரையும் உறவினராக எண்ணக்கூடாதா? ஏற்கக்கூடாதா?

பொது நாட்டம்!

நாட்டை ஆள்பவர்களுக்குப் பொது நாட்டம் வேண்டும் என்பது பாவேந்தனின் கொள்கை. நமது நாட்டில் நிலவிய ஆட்சிகள்கூட சாதி, மதங்களைச் சார்ந்து நின்று ஒருகுலத்துக்கு ஒரு நீதி கற்பித்து ஆட்சி செய்தன. இன்று மட்டும் என்ன வாழ்கிறது? சமயச்சார்பற்ற அரசு என்பது கொள்கை. ஆனால், இந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதில் அரசு வெற்றிபெற வில்லை. பேதம் - பிரிவுகள் எண்ணும் மக்கள் போக்கும் மாறவில்லை. அப்படி மாறியிருந்தால் ஏன் ஒரே அரசியல் சட்டத்தால் நாம் ஆளப்படவில்லை: இந்துச் சட்டம் ஏன்? இசுலாம் சட்டம் ஏன்? கிறித்தவச் சட்டம் ஏன்? "இராம ஜன்மபூமி - பாபர் மசூதி" விவாதம் ஏன்? விவாதத்தை முடித்து வைக்க அரசு தயங்குவதேன்? நாட்டில் சமயச் சார்பற்ற சமுதாயத்தைப் பற்றிய கவலையைவிட, வாக்குப் பெட்டி பெரிதாகத் தெரிகிறது போலும்! இன்று ஆள்வோர்கள் குறுகிய எண்ணங்களுக்கே ஆட்பட்டுள்ளார்கள். ஆட்சி நடத்தவே அரசியற் கட்சி! அதனால், இன்றோ அரசியற் கட்சியை, ஆட்சியே நடத்துகிறது! இவையெல்லாம் தவிர்ந்த நல்லாட்சி காண,

"கதிர்நாட்டை நரிக்கண்ணன் ஆளும் ஆட்சி
கடுகளவும் தீங்கின்றி இருப்ப தற்கும்
பொதுநாட்டம் உடையதோர் அறிஞன் தன்னைப்
போயிங்கு நீர்அனுப்ப வேண்டும்"

(பாண்டியன் பரிசு-பக்.54)

என்ற வரிகள் துணை செய்யும். ஆம்! நாட்டு மக்களை நடுநிலை, சமநிலைகளில் பார்த்து நடத்திடும் நல்லாட்சி அமைய வேண்டும் என்பது பாரதிதாசன் குறிக்கோள்!

நல்லாட்சியின் இலக்கணத்தைப் பாவேந்தன் விவரித்தும் கவிதை செய்துள்ளான். இன்று "மக்கள் நலம் பேணும் அரசு" (Welfare State) என்பதற்குள்ள இலக்கணம் அனைத்தும் பாரதிதாசனின் நல்லாட்சித் திட்டத்தில் அடங்கியுள்ள அருமைப்பாட்டை எண்ணுக நாடு விடுதலை பெற்று 43 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் பாவேந்தனின் எண்ணங்கள் ஈடேறவில்லை. இன்று நமது நாட்டில் "எல்லார்க்கும் தேசம்", என்பது அரசியல் சட்டத்தில்தான்! ஆனால் தேசம், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள முதலாளிகளிடம் கையடை செய்யப்பெற்றுள்ளது. எல்லார்க்கும் கல்வி கிடைக்கவில்லை. நமது நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் 33% தான். ஆனால் ஊர்தோறும் பள்ளிகள் அமைத்ததில் குறையில்லை. எங்கு குறை, அரசுக்குத் தட்டிக் கேட்கும் துணிவில்லை; ஆரம்பக் கல்வியை நெறிமுறைப் படுத்த விருப்பம் இல்லை! நமது நாட்டில் ஏழைக்கு, "சுகாதாரம்" என்பது அகராதி அளவில் உள்ள ஒரு சொல்லேயாம். பாவேந்தன் கவிதையைப் படியுங்கள்!

"எல்லார்க்கும் தேசம் எல்லார்க்கும் உடைமைஎலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!

எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!
எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக!
எல்லார்க்கும் நல்ல நுதல்மாதர் எல்லார்க்கும். விடுதலையாம்”. .
(பாரதிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி பக்.5)


பழம்பஞ்சாங்கம் கிழியட்டும் !

பழைய பஞ்சாங்கம்! ஆம்! மானிடத்தில் பல்வேறு சாதி, குலப் பிரிவுகளை ஏற்படுத்தி, வெவ்வேறு நியாயங்கூறிய பழைய பஞ்சாங்கம்! மாந்தரில் ஒரு பிரிவினருக்குக் கல்வியை மறுத்த பழைய பஞ்சாங்கம்! ஏழ்மை - வறுமை ஆகியவற்றிற்குத் தலைவிதியைக் காரணம் காட்டிய பழைய பஞ்சாங்கம். இந்தப் பழைய பஞ்சாங்கம் கிழிக்கப் பெறுதல் வேண்டும். எல்லார்க்கும் கல்வி வழங்கப் பெறுதல் வேண்டும். தான் கற்று, கல்லாத மற்றவர்க்குக் கல்வி நல்க முன்வராதார் எவரானாலும் அவரைக் கழுவேற்றுக என்பது பாவேந்தனின் ஆணை! ஆம்! எல்லார்க்கும் கல்வி நல்குவது சமூகத்தின் பொறுப்பு: கடமை! இதுவே, பாவேந்தனின் குறிக்கோள்! எல்லாரும் எல்லாவற்றையும் அடையவேண்டும். இது பாவேந்தனின் தணியாத ஆசை!

"எல்லார்க்கும் எல்லாம்என் றிருப்ப தான
இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்!
கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
கசடர்க்குத் துரக்குமரம் அங்கே உண்டாம்!
இல்லாரும் அங்கில்லை! பிறன் நலத்தை
எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே!
நல்லாரே எல்லாரும் அவ்வை யத்தில்!
நமக்கென்ன கிழியட்டும் பழம்பஞ் சாங்கம்!
(பாண்டியன் பரிசு-பக்.99)

சுவர் சுயம்புவா?

பாவேந்தன் ஒரு முற்போக்குச் சிந்தனையாளன். பொதுவுடைமைச் சிந்தனையை விரிவாக, விளக்கமாகத் தமிழில் தந்த பெருமை பாவேந்தனுக்கேயுண்டு. "உலகத்தை நடத்துக!" என்கின்றான். இன்று நாமா உலகத்தை நடத்துகின்றோம்? உலகத்தை நாம் நடத்த வேண்டும். "வீட்டுக்கும் வீட்டுக்கும் இடையே வைத்த சுவரினை இடித்து அப்புறப்படுத்துக!” என்கின்றான் பாவேந்தன். இனிய அன்புடையீர், "வைத்த சுவர்" என்ற சொற்றொடரை நினைமின் சுவர் சுயம்பு அல்ல! "பாட்டனுக்குப் பாட்டன் காலத்திலிருந்து இருக்கிறது” என்று சிலர் கூறினாலும் கூறுவர் என்பதால் "வைத்த சுவர்” என்கின்றான். இணைந்து வாழத் தெரியாதவர்கள் வைத்த சுவர்! மனித குலத்தை உடைத்த உடைமை வர்க்கத்தினர் வைத்த சுவர்! இந்தச் சுவரினை இடி வீதிகளிடையில் திரை! ஆம்! உயர்சாதி, கீழ்சாதி இவற்றை நிலையாக்கும் திரைகள்! இன்று இறைவன் சந்நிதியில்கூட திரைகள்! ஏன் திரைகள்! இரகசியங்கள் குற்றங்களின் குட்டையிலேயே பிறப்பன. திரைகள் நீக்கப்பட்ட திறந்த வாழ்வு இன்று மானுடத்திற்குத் தேவை. நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையே வேறுபாடுகள், எல்லைகள், எல்லைச் சண்டைகள் ஏன்? நாட்டின் எல்லைகளை அகற்றுக! இந்த எல்லைகளை அகற்றிக்கொண்டு பொதுமையில் ஏறுக! ஏறுக! இது கவிஞனின் ஆணை! நாம் எப்போது ஏறுவோம்? எப்போதாவது ஏறும் வாய்ப்புக் கிடைக்குமா? வரலாறுதான் கூறவேண்டும். வரலாற்றை உருவாக்கக்கூடிய இளைஞர்கள்தாம் கூறவேண்டும். நாட்டொடு நாட்டை இணைக்க வேண்டும். பாகிஸ்தானில் வாழும் இளைஞர்களே! இந்தியாவில் வாழும் இளைஞர்களே! எண்ணிப் பாருங்கள்! பிரிவினையால் விளைந்த துன்பத்தினை - விளைந்துவரும் துன்பத்தினை! ஜெர்மனியின் சுவர் இடிந்தது போல நமது எல்லைகள் இடியட்டும்! மீண்டும் வலிமை பொருந்திய வளமான இந்தியாவை உருவாக்க உறுதி கொள்ளுங்கள்! முன்னேற்றத் திசையில் முன்னேறுங்கள்! வானை இடிக்கும் இமயத்தின் உச்சியில் ஏறி நின்று பாருங்கள்! உலக மானுடத்தைப் பார்த்துப் பரவசமடையுங்கள்! உலக மானுடம் உன்னுடன் பிறந்த பட்டாளம் என்று உறவு முறையை வளர்த்துக் கொள்ளுங்கள்!


"...நடத்து லோகத்தை!
உன் விடு - உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிக ளிடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு: வானை இடிக்கும் மலை மேல்
ஏறு: விடாமல் ஏறு! மேன் மேல்
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உன்னுடன் பிறந்தபட் டாளம்!
'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்:”

பாரதிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி பக்149-50)


இவ்வாறு பரந்து விரிந்த வாழ்க்கையையும், இதற்கு மாறான சின்னப் புத்திகொண்ட வாழ்க்கையையும் உருவகப்படுத்திப் பாருங்கள்! பாவேந்தன் விளக்கியுள்ள அருமைப்பாடு ஆயிரம் தடவை படித்தாலும் சுவை தரும்.


கடுகு? துவரை? தொன்னை?

உணவிற்கு கடுகு சேர்ப்பது, மணம் சேர்ப்பதற்காக! ஆனால், உணவில் கடுகின் அளவு கூடினால் சுவை கெடும்! உணவின் தன்மை கெடும்! உணவு நஞ்சாகும்! அதுபோல, மனிதர் களிப்புடன் வாழ மனைவி, மக்கள், பொருள் தேவைதான்! இவர்கள் மாட்டுள்ள பற்று கடுகுபோல அளவாக அமையவேண்டும். வீடு நாட்டுக்குப் போயாக வேண்டும். ஆனால், நாடு வீட்டுக்கு வரக்கூடாது. இன்று, நமது நாட்டில் நாடு வீட்டுக்குள் வருவதைப் பார்க்கின்றோம். இது நெறியுமன்று; முறையுமன்று: கடுகு போன்ற உள்ளம் வேண்டாம்! அறவே வேண்டாம்!

அடுத்து, துவரம் பருப்பு! இது கடுகு அளவுக்குத் தீமையில்லை! ஒரோவழி நன்மையும் தரும்! ஆனால், துவரம் பருப்பும் அளவு மிகுதல் கூடாது! "துவரை உள்ளம்" ஊர்ப்பற்றுக்கு உவமையாகக் கூறப்படுகிறது. இரண்டு ஊர்களுக்கிடையில் ஏன் சண்டை? பிரிவினையில் குளிர் காயும் ஊர்ப் பெரிய மனிதர், ஊர்ச் சண்டையை மூட்டி விடுவார். ஊர்ப்பற்று இருக்கலாம்; இருக்க வேண்டும். ஆனால் அது அடுத்த ஊருக்குப் பகையாக இருக்கக்கூடாது.

அடுத்தது, தொன்னை உள்ளம்! ஆம்! சின்னஞ் சிறிய தொன்னை. தொன்னை உள்ளம் போன்றது நாட்டுப்பற்று. நாட்டுப் பற்றின் காரணமாக உலகில் விளைந்த சண்டைகள் எண்ணிச் சொல்ல இயலாதவை. அதிகார வர்க்கம், ஆதி பத்தியப் போட்டிகள் சண்டைகளை வரவேற்கும். அப்போதுதான் ஆட்சியின் சிறுமைபற்றி மக்கள் எண்ண மாட்டார்கள் என்பது ஆள்வோரின் எண்ணம். நாட்டுப் பற்று தேவை! இன்றியமையாததுங் கூட! ஆனால் நாட்டுப் பற்றும் உலகப் பார்வைக்கு - உலக ஒற்றுமைக்குத் தடையாக இருக்கக்கூடாது! தாய் நாட்டின் மேல் உள்ள பற்றினால் மற்ற நாடுகளுக்குத் தீங்கு செய்யக்கூடாது. பாவேந்தன் ஓருலகப் பார்வையில் பாடிய பாடல் இதோ:

"தன்பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு
சம்பாத்யம் இவைஉண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!

கன்னலடா என்சிற்றுரர் என்போ னுள்ளம்
கடுகுக்கு நேர்மூர்த்த துவரை யுள்ளம்!
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்திரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்!

(பாரதிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி. பக்.131)

இந்தப் பாடல் கூறும் மூன்று மனநிலைகளையும் வென்றெடுக்கும் நாளே புது உலகம் தோன்றும் நாள்!

பொதுவில் நடத்து!

பாவேந்தன் பாரதிதாசன் சண்டையில்லாத உலகத்தை விரும்புகின்றான். தன்னலம் தீர்ந்தால்தால் சண்டை ஒடுங்கும். தன்னலம் தீர்தல் எப்போது? எப்படி? நுகர்வுவழி தன்னலம் தீருமா! நுகர்தலே தன்னலம் பெருதற்குரிய வழி! நுகர்தலை மறுத்தல் எப்போது நிகழும்? மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற வேணவாத் தோன்றும் போதே நுகர்வு மறுத்தல் நிகழும். அப்படியானால் "ஓர்குலம்" என்ற உணர்வு,தேவை. இந்தக் கொள்கையை - கோட்பாட்டைப் பாவேந்தன் காரணகாரியங்களுடன் விளக்குவதைக் காணுங்கள்!

பாவேந்தன் பாரதிதாசன் ஆற்றல் மிக்க கவிஞன். ஆவேசம் மிக்க கவிஞன், "புவியை நடத்து பொதுவில் நடத்து" என்று ஆணையிடுகின்றான். ஆம்! புவிஈர்ப்பில் சிக்கித் தவிக்காமல், புவிஈர்ப்பு இழுக்கும் திசையில் செல்லாமல் - கீழே விழாமல் உயிர்ப்பாற்றலுடன் புவிஈர்ப்பை அடக்கி யாண்டு புவியை நடத்து! ஆம்! புவியை நடத்து! எல்லாருக்குமாகப் புவியைப் பொதுவில் நடத்து! வலியவர்களுக்காகவும் புவியை நடத்து! வலிமை யில்லாதவர் களுக்காகவும் புவியை நடத்து!

ஆம்! நிலம் பொது! வான் பொது! வளி பொது! வான்மழை பொது! அப்புறம் ஏன் வரப்புகள்: சுவர்கள்? எல்லைகள்? பொய்ச்சாத்திரப் பிரிவுகள்: மதப்பிரிவுகள்: பேதம் ஏன்? பேதா பேதம் ஏன்? இவற்றால் பிரிவு ஏன்? ஒருமையுளத்தராக, ஒரு குலத்தவராக வையகத்தில் வாழ்ந்திடப் புவியை நடத்து! பொதுவில் நடத்து! இது பாவேந்தனின் ஆணை!

தன்னலம் உள்ளத்தைச் சுருக்கும், பொதுநலம் விரிவைத் தரும். ஆன்மாவை அடக்கி வளரும், தன்னலத் தையே வளர்க்கும். ஆன்மா பொதுநலமே நாடும். ஆன்மாவின் இயல்பான பொதுநல உணர்வு, மலர் மனம் நிகர்த்தது; கனியின் சுவையனையது. அறிவை விரிவு செய்ய வேண்டும். ஆம்! இன்று படிக்கக் கிடைக்கும் நூல்கள் பல, மத நூல்கள் உள்படப் பிரிவினையைக் கற்பிக்கின்றன; வெறுப்பையே வளர்க்கின்றன. வரலாற்று நூல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! வெறுப்புக்காட்டக் கற்றுக் கொள்ளக்கூடாது! அறிவை விரிவு செய்யும் நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும். அதாவது வாழ்வியற் பாங்கில் அறிவை விரிவு செய்து கொள்க! அறிவை அகண்டமாக்குக! விசாலப் பார்வையால் பார், இந்த மக்கள் உலகத்தை! மக்களை அணைந்து கொள்க! ஆறுகள் எல்லாம் கடலில் சங்கமம் ஆகின்றன. அதுபோல் மனிதனே, நீ மனித சமுத்திரத்தில் சங்கமமாகு!

கவிதையின் மணி மகுடமாக ஊனை, உயிரை, உணர்வைத் தொடும்வகையில் பாவேந்தனின் ஆணை பிறக்கிறது! "உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்!” என்பதே அந்த ஆணை! நாமறிந்த வரையில் உலகில் எந்த ஒரு கவிஞனும் ஏன்? அருள்நெறியாளரும்கூட "உலகம் உண்ண உண்" என்றும் "உலகம் உடுத்த உடுப்பாய்!” என்றும் கூறினாரிலர். உலகத்தில் எல்லாரும் உண்டு, உடுத்து மகிழும் பொற்காலம் தோன்றுமா? பொதுவுடைமை, உலகத்தை வென்றெடுக்குமா? காலந்தான் விடை சொல்ல வேண்டும். இதோ கவிதையைப் படித்து அனுபவியுங்கள்.

"அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உனைச் சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை! எங்கும் பேத மில்லை!
உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன், உடைமை மக்களுக் குப்பொது!
புவியை நடத்து பொதுவில் நடத்து!


(பாரதிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி, பக்.150)



இந்தக் கவிதை வரிகள் சாகா வரம் பெற்றவை.


யாரால் திருட்டு?

தனியுடைமைச் சமுதாயம் தோன்றிய பிறகு மானுடம் அடைந்த தீமைகள் பலப்பல. முதலில் மனிதன், மனிதன் என்ற மதிப்பை இழந்தான். எங்கும் சொத்து அளவின் அடிப்படையில் மனித மதிப்பீடு தொடங்கிவிட்டது. சொத்துக்களின் அடிப்படையே வாழ்க்கை என்ற நியதியால் மனிதன் சூது வாதுகளால் - மோசடிகள் வாயிலாகக்கூட, சொத்துச் சேர்க்கலானான். இதனால் மனித நேயம் கெட்டது; ஒழுக்கம் தவறிப் பாழ்பட்டுப் போயிற்று, களவு, காவல், இரத்தல், ஈதல் ஆகியவை தோன்றலாயின. களவு என்ற தீமையைச் சொத்துடையோன்தான் உருவாக்குகின்றான் என்பது பாவேந்தனின் கொள்கை.


"பொருளாளி திருடர்களை விளைவிக் கின்றான்
பொதுவுடைமை யோன்திருட்டைக் களைவிக் கின்றான்."

(பாண்டியன் பரிசு-பக்.31)


என்பது பாவேந்தனின் பாடல், சொத்துடையோர்களிடையில் ஏற்பட்ட போட்டிகள், பூசல்கள் இவற்றின் காரணமாக அரசுகள் தோன்றின. இன்றுவரை அரசுகள் சொத்துடைமையுடைய மேட்டுக் குடியினருக்கும், அவர்களுடைய சொத்துக்களுக்கும்தான் பாதுகாப்புத் தந்து வந்துள்ளன. ஏழைகளுக்குக் கிடைத்ததெல்லாம் அரைகுறை வயிற்றுச் சோறுதான்! அதுவும் கூட, மனித நேயத்தினாலன்று; உரிமையினாலன்று; உழைப்புத் தேவைக்காகவே! அதுவும் நிரந்தரமன்று. இந்த உலகத்தைப் பழைய விதி-தலைவிதி இயக்குவதாக, பழைய புராணங்கள் கதை விட்டன.

உயிரென்று காப்போம்

இவற்றை எண்ணியே பாரதி, "இனி ஒரு விதி செய்வோம்!” என்றான். பாவேந்தன், பொதுவுடைமை முரசு கொட்டினான்: “புதியதோர் உலகம் செய்வோம்” என்று உடன்பாட்டுணர்வோடு, படைக்கும் உணர்வோடு பாடினான். மனித வரலாறு எழுதத் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை நடந்துள்ள போர்களினால் ஏற்பட்டுள்ள மக்கள் இழப்பு, பொருள் இழப்பு பற்றி மாமேதை லெனின் கூறியுள்ளார். "இரண்டாவது உலகப் பெரும் போரில் இழந்த பொருளைக் கொண்டு, உலகில் ஐயாயிரம் பேர் வாழும் ஒவ்வொரு சிற்றூருக்கும் தேவையான கல்வி, மருத்துவ வசதி செய்து தர முடியும்" என்று கூறியுள்ளார் லெனின்.

பொதுவுடைமைச் சித்தாந்தம் வன்முறை தழுவியது என்ற ஒரு தவறான கருத்து உலக முழுதும் பரப்பப்படுகிறது. இது பொய்! பொதுவுடைமைச் சமுதாயம் இயல்பாக அறிவார்ந்த நிலையில் மலர வேண்டும். தேவைப்படின் அறுவை மகப்பேறு மருத்துவம் போல, வன்முறையும் அவசியப்படலாம்" என்றுதான் கார்ல்மார்க்ஸ் கூறினார். தனியுடைமைச் சமுதாயந்தான் போருக்கு வித்து, பொதுவுடைமைச் சமுதாயம்தான் போரைத் தவிர்க்கும். இது, பாவேந்தனின் தெளிவான முடிவு.

"பொதுவுடைமைக் கொள்கை
திசையெட்டும் சேர்ப்போம்!”

என்பது பாரதிதாசன் வாக்கு! அந்தப் பொதுவுடைமைச் சமுதாயத்தைப் புனிதமோடு உயிரைப்போல காப்போம் என்று சூளுரைக்கின்றான். ஆம்! பொதுவுடைமைச் சமுதாயம் அடைந்துவிட்டால் போதுமா? அந்தப் பொதுவுடைமைச் சமுதாயம், மீண்டும் கெட்டுவிடாமல் புனிதமாகக் காக்கப்பட வேண்டுமாம்.

இன்று கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பொது வுடைமை நாடுகளில் நடப்பது என்ன? சோவியத்து நாட்டில் "ஸ்டாலினிசம்" தோன்றவில்லையா? இன்று சோவியத்து நாட்டில் புனிதம் கெட்டுப்போன பொதுவுடைமைக் கொள்கைக்கு கோர்பசேவ், "பெரிஸ்த்ரோய்க்கா" என்ற பெயரில் புத்துயிர்ப்பு இயக்கம் நடத்துகிறார் அல்லவா? ஆனால் அன்றே பாவேந்தன்,

"புதியதோர் உலகம் செய்வோம்! - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்!
பொதுவுடை மைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதையெங்கள் உயிரென்று காப்போம்!”

(பாரதிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி, பக்.158)

என்றான். இது காலத்தால் உணர்த்திய அறம்!

பொதுவுடைமை வாழ்க்கை

பாவேந்தன் இங்ஙனம் பொதுவுடைமையை வரவேற்றுப் பாடியதுடன் நிற்கவில்லை. பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைக்கும் நெறிமுறைகளைப் பற்றியும் எடுத்துரைக்கின்றான். "உடமைகளைப் பொதுவாக்கு" என்பது பாரதிதாசன் ஆத்தி சூடி உடைமை என்பது சொத்து. சொத்துக்கள் சிறிது சிறிதாகச் சேர்ந்து மூலதனம் ஆகின்றன. மூலதனமாகக் குவிந்த சொத்துடைமையைப் புனல் நிறைந்த தொட்டியென்று பாவேந்தன் விளக்குகின்றான். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் நிறைந்த தொட்டி, புனல் நிறைந்த தொட்டி. அதுபோலத்தான் நூற்றுக்கணக்கான உழைப்பாளிகளின் உழைப்பு, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து சொத்து வடிவம் பெற்று மூலதனமாக வடிவம் பெற்றுக் குவிகிறது என்பதைப் புனல் நிறைந்த தொட்டி என்று எளிமையாக, அறிவில், உணர்வில் படும்படி கூறுகின்றான். உடைமைச் சமுதாயம், புனல் நிறைந்த தொட்டியான அதே நேரத்தில், "பொத்தல் இலைக் கலமானார் ஏழைமக்கள்” என்று கூறி மூலதனத்தால் தோன்றும் ஏழ்மையை உரைக்கும் அருமை உணரற்பாலது. "உடைமையைப் பொதுவாக்கு" என்றால் மக்களைப் பிச்சைக்காரர்களாக்குவது என்று சிலர் திரித்துக் கூறுகின்றனர். இங்கு உடைமை என்று கூறுவது செல்வ உற்பத்திக்களங்களையும் கருவிகளையுமே குறிக்கும். உற்பத்தி பொதுவில் நடக்கவேண்டும். எல்லாரும் அவரவர் சக்திக் கேற்ற உழைப்பினை மேற்கொள்ளவேண்டும். உளமார உழைப்பை மேற்கொள்ள வேண்டும். உழைப்பது உயர்வு என்ற எண்ணத்தில், உழைப்பது என்பது உயிர்க் குணமாக மாறவேண்டும். பண்டங்கள். - நுகர் பொருள்கள் செய்து குவிக்கப் பெறுதல் வேண்டும். எல்லாரும் அவரவர் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே பொதுவுடைமைச் சமுதயாம்.

இத்தகைய பொதுவுடைமைச் சமுதாயம் இன்னமும் உலகில் எங்கனும் தோன்றவில்லை. பொதுவுடைமைச் சமுதாயப் பயணத்தின் இடையில் உள்ள சோஷலிச சமுதாய அமைப்பிலேயே சில நாடுகள் தங்கியுள்ளன. சோவியத்து, சீனா ஆகிய நாடுகள்கூட சோஷலிச நிலையிலேயே உள்ளன. வரலாற்றுலகம் ஈன்று தந்த நச்சுப் பழக்கங்கள் சோஷலிச சமுதாயத்தில் ஊடுருவி உள்ளிடழித்தன. அதாவது, உழைப்பை உயிர்க்குணமாக்கிக் கொள்ளாமை; உழைப்பைப் பயனிலாக் கொள்கைக்கு ஈடாக்கியமை; உழைப்பைச் சமுதாய உழைப்பாகக் கருதாமை; மாற்றாமை, உழைப்பு வேள்வியைவிட நிர்வாகம் பெரிதாவது போன்ற தீயபழக்கங்கள் தலைகாட்டத் தொடங்கின. இந்நிலையை மாற்றி - சோஷலிச சமுதாயத்தைக் காப்பாற்றி - புத்துயிர்ப்புச் செய்துவரும் "பெரிஸ்த்ரோய்க்கா இயக்கம் வளர்க! வெற்றி பெறுக!

சொத்துடைமை வர்க்கம் தோன்றிய பிறகுதான் சொத்துடைமைக்கும் ஆதிபத்தியத்திற்கும் உரிமை கொண்டாடும் நிறுவன ரீதியான மத நிறுவனங்கள் தோன்றி ஆதிபத்தியச் சண்டைகளை, மதச் சண்டைகளை நடத்தி மனித உலகத்திற்கு தீங்கிழைத்து வந்தன. அதனால்தான் நிறுவன அமைப்பிலான சொத்துடைமையும் ஆதிபத்திய குணாம்சங்களும் உடைய மத நிறுவனங்களே பொதுவுடைமைக் கொள்கையை எதிர்க்கின்றன. இதனை, பாவேந்தனின் ஒரு மத நிறுவனத் தலைவரின் 'கடவுள் பக்தி' விளக்குகிறது. "சொத்துக்கள் எல்லாம் பொதுவுடைமை என்று ஆணை பிறந்துவிட்டது என்ற செய்தி கிடைத்தவுடன் கடவுளையே மறந்துவிட்டார் மத நிறுவனத்தலைவர்” என்று விளக்கும் பாவேந்தனின் கவிதை நகைச்சுவை மிக்கது; போர்க்குணம் ஊட்டவல்லது.

பொதுவுடைமை உலகத்திற்கு ஆணி - அச்சு உழைப்பேயாம். உழைப்பு, உலகை இயக்கும் ஓர் அற்புத ஆற்றல், உழைப்பு. சாதாரண உழைப்பா? இல்லை, இல்லை! மெய் வருந்தி வியர்வை சொட்டச் சொட்ட உழைக்கும் உழைப்பு: உழைப்பாளர் சிந்தும் வியர்வைத் துளிகளில் உலகைக் காண்பது, இந்த உலகை உழைப்பாளர்களுக்கு உரியதாக்குவது அறிஞர் கடன்! சான்றோர் கடன்!

"களைபோக்கு சிறுபயன் விளைக்க இவர்கள்
உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுலகு உழைப்பவர்க்கு உரியதென் பதையே!

(பாரதிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி, பக்.155)

ஆற்றல் - சக்தி, உழைப்பு, உணரப்படுவனவும், அறியப்படுவனவும்கூட! ஒரு பொருளை அதன் இயல்பான, மதிப்பிலிருந்து கூடுதல் மதிப்புடையதாக மாற்றும் ஆற்றலுள்ள செயற்பாட்டுக்கே உழைப்பு என்று பெயர். இந்த உழைப்பை வழங்கும் உழைப்பாளிகளே உலகத்தின் படைப்பாளிகள். இதனை, பாவேந்தன் பாரதிதாசன்,

சித்திரச் சோலைகளே - உமைநன்கு
திருத்தஇப் பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன
ரோ! உங்கள் வேரினிலே!

"நித்தம் திருத்திய நேர்மையினால்மிகு
நெல்விளை நன்னில மே! - உனக்கு
எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே!”

"ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே - உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள்
ஊர்த்தொழி லாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய்அல்ல வோ?”

(பாரதிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி, பக்.156)

என்று வியந்து பாராட்டி மகிழ்ந்திருக்கின்றான்.

முடிவுரை

பாவேந்தனின் இலட்சியம் உழைப்போரை வாழ்த்துவது; உழைப்போரையே உறுப்பினர்களாகக் கொண்ட ஓருலகம் காண்பது. அந்த உலகத்தில் அனைவரும் உறவினர். அவர்கள் உலகத்தை உண்பித்த பின்னே உண்பர். இந்த உலகம் எப்போது தோன்றும்? தமிழ் இளைஞர்களே! இந்திய இளைஞர்களே! உங்கள் வாழ்க்கை இதற்கு வழி கூறட்டும்!

4. பாவேந்தனும் பைந்தமிழும்


பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களே! பேராசிரியர் பெருமக்களே! இளைய பாரதமே! அனைவருக்கும் நன்றி, கடப்பாடு.

பாவேந்தன் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவை வழக்கம்போல் தமிழகம் இந்த ஆண்டில் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தச் சொற்பொழிவும் அமைந்துள்ளது எண்ணத்தக்கது.

முன்னுரை

தமிழ் மொழி கவிதை மொழி! பல்லாயிரம் ஆண்டுகளாகக் கவிதையில் சிறந்து வளர்ந்துள்ள மொழி! பெரும்பான்மையான கவிஞர்கள் மறக்கப்பட்டு விட்டனர். அவர்களை மறந்தாலும் தவறில்லை. ஆயினும் மானுடத்தின் வாழ்வியலைக் குறிக்கோளாகக் கொண்டு மனித மேம்பாட்டுக்கு முற்போக்கு திசையில் இலக்கியம் படைத்த கணியன் பூங்குன்றன், திருவள்ளுவர், அப்பரடிகள், வள்ளலார், பாரதி, பாவேந்தன் ஆகியோரை மறத்தல் கூடாது; மறக்கவும் முடியாது. வாழையடி வாழையென வந்த கவிஞர் வரிசையில் தனக்கென ஓரிடத்தை அமைத்துக் கொண்டவன் பாவேந்தன்.

பாவேந்தன் தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்; ஒரு யுகம். அவன் 'ஓருலகம்' படைக்க விரும்பினான். "புதியதோர் உலகம் செய்வோம்" என்று பாடினான். ஆவேசத்துடன் பாடினான்; நமக்கும் ஆவேசத்தையூட்டினான்; அவன் பற்றவைக்கப் பயன்படும் நெருப்பு. பெருநெருப்பாக இருந்தாலும் பற்றப்படும்பொருளில் எரியும் இயல்பு வேண்டும். நமக்கு எரியும் ஆற்றல் உண்டா! பலநூறு ஆண்டுகளாக நாம் மூடத்தனத்தின் முடைநாற்றத்தில் முடங்கிக் கிடந்து வருகின்றோம். நாம் அவமானம், இழிவு, ஏழ்மை ஆகியவற்றைத் தாங்கிப் பழகிப் போனோம். பாவேந்தன் நூற்றாண்டு விழாப் பொழுதிலாவது எண்ணுங்கள்! செய்யவேண்டுவன பற்றி எண்ணுங்கள்! துணிச்சலோடு செயற்படுங்கள்! பாவேந்தன் எண்ணியவை நடைபெற வேண்டும். அப்போதுதான் பாவேந்தனுக்குரிய புகழ்சேரும். பாவேந்தன் அடிச்சுவட்டில் தமிழரின் கல்விநிலை உயர்தல் வேண்டும். தமிழர் எப்படிக்கும் முதற் படியாய்த் தமிழ் படிக்க வேண்டும். தமிழ்வழிப் படிக்க வேண்டும். தமிழ் வளர வேண்டும். இவையே பாரதிதாசனின் குறிக்கோள்! எனினும் பாவேந்தன் காட்டிய வழி மாறுகிறது! தடம் மாறுகிறது! அன்புகூர்ந்து எண்ணுங்கள்!

முதன் மொழி தமிழ்

நமது தமிழ் மொழி, மொழிகள் அனைத்திற்கும் முன்னேதோன்றி மூத்த மொழி என்று பாவேந்தன் பெருமிதத்துடன் பாடுகின்றான்! ஆம்! வையகம் கையசைத்துக் கொண்டிருந்த கலத்தில் நாவசைத்தவள் தமிழ்த்தாய்! உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மை நிலையில் விளங்கும் தகுதி, தமிழுக்கு உண்டு என்பது மொழிஞாயிறு பாவாணர் கருத்து. பாவேந்தன்,

முன்னைத் தோன்றிய மக்கள்
முதன்முதல் பேசிய மொழியே
மொழியே மொழியே எனவே வாழ்த்தும்
தன்னேரில் லாத தமிழ் அன்னையே
உனை வாழ்த்தினேன்! (தேனருவி பக்.10)

என்று பாடுகின்றான்.

பைந்தமிழ்

தமிழ் முன்னே தோன்றிய மொழி. மக்கள் முதன் முதலில் பேசிய மொழி தமிழ்! தமிழ் தனியே தோன்றித் தனித்தன்மையுடன் வளர்ந்து தனித்தன்மையுடன் இயங்கும் மொழி. ஆதலால் "பைந்தமிழ்” என்று பாவேந்தன் பாராட்டுகின்றான். "பைந்தமிழ் பயிலுக!” என்பது பாவேந்தனின் வாக்கு இந்த ஆத்திசூடிக்கு பாவேந்தனே உரையும் எழுதினான். அந்த உரையில் "ஆரியம் போன்று, தமிழ் சார்பு மொழியன்று” என்று உரையெழுதி விளக்குகின்றான். இன்று தமிழின் தனித்தன்மை பேணப்படுகிறதா? இல்லை, ஏன்? நமது மொழியின் தனித்தன்மையை இழப்பது வரவேற்கத் தக்கதா? இல்லை, இல்லை! எந்த விலை கொடுத்தும் தமிழின் தனித்தன்மை காப்பாற்றப்படுதல் வேண்டும். இயற்கையில் தோன்றிய மொழி தமிழ் தொன்மையான மொழி என்பதையும் இயற்கையில் தோன்றி வளர்ந்த மொழி என்பதையும் பாவேந்தன் சொல்லாய்வுகள் மூலம் விளக்குகின்ற பாங்கு அறிந்துணரக்கூடியது. காக்கையின் "கா" என்ற சொல்லும் கருமுகிலின் "கடாமடா" என்ற சொல்லும் கிள்ளையின் "அக்கா” என்ற சொல்லும் வஞ்சப் பூனையின் "ஞாம் ஞாம்” என்ற சொல்லும் கழுதையின் "ஏ" என்று கத்துதலும் இயற்கையில் தோன்றிய மொழி என்பதற்குச் சான்றாகி விளங்குவதைக் காட்டும் பாடலைப் படித்து அனுபவி யுங்கள்:

"காக்கை 'கா' என்றுதனைக் காப்பாற்றச் சொல்லும்! ஒரு கருமு கில்தான் நோக்கியே 'கடமடா என்றே தன் கடனுரைக்கும்! நுண்கண் கிள்ளை வாய்க்கும் வகை அக்கா என் றழைத்ததனால் வஞ்சத்துப் பூனை ஞாம் ஞாம்! காக்கின்றோம் எனச் சொல்லக் கழுதை அதை 'ஏ' என்று கடிந்து கூவும்!” (தமிழியக்கம் பக்.54) மேலும் குயில்கள் "கூ” என்று கூவும் ஒலியும், நாய்களின் "வாழ் வாழ்” என்று கத்தும் ஒலியும் கோழியின் "கோ" என்று கூவு ஒலியும் காற்று ஆம் என்று ஒலித்து அசைதலும் எல்லாமே தமிழ், தமிழியக்கம் என்று பாவேந்தன் விளக்கி தமிழ் இயற்கை தரும் மொழி என்று உறுதிப்படுத்துகின்றான்.

தமிழின் சிறப்பு

தமிழ் காலத்தால் மூத்த மொழி, கருத்தாலும் மூத்து முதிர்ந்து வளர்ந்த மொழி. காலத்தினாலாய இனிமையையும் எளிமையையும் பெற்று விளங்கும் மொழி. தமிழ், எழுத்து, சொல்லில் தெளிவான அமைப்புடையது. தமிழ் மொழியின் சொல் வளர்ச்சியிலும் தமிழ்ச் சொற்கள் பொருளுணர்த்தும் முறையிலும் தெளிவான அடிப்படை உண்டு. தமிழ்ச் சொற்களில் பல, பொருளை மட்டுமன்றி அப்பொருளின் பருவம், முதன்மை, அமைவு முதலியனவற்றையும் இயல்பில் உணர்த்தும் சொற்களாக அமைந்துள்ளமை தமிழுக்கே உரிய தனிச்சிறப்பாகும். தமிழ் எழுத்து, பேச்சு, இயல், இசை, கூத்து என்றெல்லாம் வளர்ந்து விளங்கும் மொழியாகும். மேலும் தமிழ், இலக்கண வரம்புகள் பெற்று விளங்கும் மொழியாகும். எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் இயற்றாமல் தமிழ் மொழியைப் பேசும் மக்களின் வாழ்க்கைக்கும் அகத்திணை என்றும் புறத்திணை என்றும் இலக்கணம் கண்ட ஒரே மொழி தமிழ். அதனால் தமிழை “ஒழுக்க வாழ்வின் உயிரே!” என்று போற்றுகின்றான், பாரதிதாசன். தமிழ் கூத்து, இசை, இயல் என்று முறையாக வளர்ந்த மொழி. தத்துவ இயலைச் சார்ந்த நூல்கள் பலவும் பெற்றுச் சிறப்புற விளங்கும் மொழி தமிழ்.

கொச்சைத் தமிழ் கூடாது!

பாவேந்தன் பாரதிதாசன் தமிழ் பற்றி அற்புதமான கனவு ஒன்று காண்கின்றான். அந்தக் கனவில் காதலி ஒருத்தி, தன் காதலனைக் கொச்சைத் தமிழால் திட்டிப் பரிகசிக்கின்றாள். தலைவன், காதலியின் கொச்சைத் தமிழைக் கேட்டுப் பொறுக்க முடியாமல் சோர்ந்து விடுவதாகக் கனவு! இன்று தமிழ் கொச்சைப்படுத்தப்படுவதற்கு ஓர் எல்லையே இல்லை! நாளிதழ்கள், வார இதழ்கள், திங்களிதழ்கள் முதலிய இதழ்களில் கொச்சைத் தமிழைத் தவிர வேறு என்ன இருக்கிறது! இத்தகு இதழ்கள் விற்பனையாகும் வரை தமிழின் தரம் எப்படிக் காப்பாற்றப்பெறும்?

தமிழே நீ என்றன் ஆவி!

தமிழ் முறையாக வளர்ந்த ஒரு மொழி. பல நூறு ஆண்டுகள் கவிதையிலே வளர்ந்த மொழி தமிழ். நல்ல நூல்கள் மனிதரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் கருவிகளாகும். தமிழ் நூல்கள் தம்மைப் படித்தாரை வானில் உயர்த்தும் தகையன. இவைமட்டுமா? தொழில் நூல்கள், இசைத்தமிழ் நூல்கள் எல்லாம் பெற்று வளர்ந்த மொழி! தமிழ் நாளும் வளர்ந்து வந்த மொழி! தமிழை வளர்பிறை போல் தமிழர் வளர்த்தனர். சிந்தையில் தெளியுடைய புலனழுக்கற்ற அந்தண்மை பூண்ட அறிஞர்கள் தங்கள் உள்ளத்து உணர்வுகளை எழுத்தில் வடித்துத் தருவது இலக்கியம். இந்தப் பரந்த உலகின் அமைவுகளைத் தருவனவும் இலக்கியங்களேயாம். இலக்கியங்களைத் தமிழர் இயற்றமிழ் என்று போற்றுகின்றனர். ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் தமது உள்ளத்தில் எழுந்த உணர்வுகளையும் இந்த உலகின் வளங்களையும் விளக்கும் இயற்றமிழ் நூல்கள் பற்பல எழுந்தன. இசையில் தமிழ் வீறுகொண்ட நிலையில் வளர்ந்திருந்தது. தமிழ் ஆடற் கலைக்குத் தாய்!

இந்த நூற்றாண்டில் அல்லது 19-20-ஆம் நூற்றாண்டில் தமிழர்களாகிய நாம் தமிழ்ப் பாதுகாப்புப் பணிமட்டுமே செய்து வந்துள்ளோம். அதுவும்கூட முற்றாகச் செய்யப்பெறவில்லை. தமிழ் வளர்ச்சி வேறு; தமிழ்ப் பாதுகாப்பு வேறு. வளர்ச்சியில்லாமல் பாதுகாக்கப் பெற்றாலும்கூடக் காலப்போக்கில் மொழி அழியும். மொழியைப் பேசும் மக்கள் தம் வளர்ச்சியின் நலங்கருதித் தாய் மொழியை மறந்து விடுவர். தம் வளர்ச்சிக்குத் துணை செய்யக்கூடிய பிற மொழியைப் பயிலத் தொடங்கி விடுகின்றனர். இன்றையத் தமிழகத்தின் நிலை என்ன? ஆங்கிலம்தான் வாழ்க்கைக்குத் துணை செய்யும் என்ற நம்பிக்கையில் தமிழ் வழிக் கற்காமல் ஆங்கில மொழி வழிக் கற்கின்றனர். இந்த நிலை எங்குக் கொண்டுபோய் விடும்? அன்புகூர்ந்து சிந்தனை செய்யுங்கள்; தமிழ் வளர்ச்சிக்குரிய பணிகளில் ஈடுபடுங்கள்.

வளர்பிறை போல்வ ளர்ந்த
தமிழரில் அறிஞர் தங்கள்
உளத்தையும் உலகில் ஆர்ந்த
வளத்தையும் எடுத்துச் சொல்லால்
விளக்கிடும் இயல்மு திர்ந்தும்
வீறுகொள் இசைய டைந்தும்
அளப்பிலா உவகை ஆடற்
றமிழேநீ என்றன் ஆவி!

(அழகின் சிரிப்பு பக்62)


என்ற பாவேந்தன் பாடல் சிந்திக்கத்தக்கது. மக்கள் சோற்றினால் மட்டும் வாழ்தல் நன்றன்று. ஆகவும் ஆகாது. தமிழால் வாழும் வாழ்க்கை பெற்றாக வேண்டும்.

பாவை தனக்கு இவ்வுலகில் தேவை
சோறன்று மிளகின் சாறன்று தமிழ்ஒன்றே!

(குறிச்சித்திட்டு பக்.92)


பாவேந்தன் தமிழின்பால் கொண்டிருந்த ஈடுபாட்டினை உயிர்ப்புள்ள சொற்களால் பாடி, நம்மனோரின் உணர்வையெல்லாம் தொடுகின்றான். தமிழ் உயிருக்குச் சமம். அதாவது தமிழே உயிர்! தமிழ்ச் சமூகம் வளர்வதற்கு ஊற்றப்பெரும் தண்ணீர்! தமிழ், வாழ்வுக்குரிய மையம்! ஊர்! தமிழ், தமிழ் மக்களின் உரிமைக்கு வேர் போன்றது. வேரற்ற மரம் வளர இயலுமா? வாழுமா? தமிழ் மொழி பயிலாத தமிழினத்தின் உரிமைகள் பறிபோகும். தமிழ்ச் சமூகம் நாளும் புதிய விளைவுகளைப் படைத்திடத் தமிழே துணை! தமிழ் உயிர்! தமிழ் நலம் காப்பதே உயிருடைமைக்கு அடையாளம் !

"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! (பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி, பக்89)

என்பது உணர்க!

தமிழின் சுகம்

தமிழ்ச் சுவைக்கு இணை எதுவும் இல்லை! காதல் சுகமா? ஆம்! அதுவும் ஈடில்லை என்கின்றான் பாவேந்தன்.

"மங்கை யொருத்தி தரும் சுகமும் - எங்கள் மாத்தமிழுக் கிடில்லை என்பேன்"

என்பான். அனைத்து நலன்களும் பெற்ற பாவையாயினும் தமிழறியாப் பாவை, தமிழருக்குப் பாவையல்ல, வெற்றுடலேயாம் என்றும் பேசுகின்றான்.

"இருளில் இட்ட இன்ப ஒவியம் அழகும் பண்பும் தழையக் கிடப்பினும் பழகு தமிழறியாப் பாவை தமிழருக்கு உயிரில்லா உடலே அன்றோ" (காதல் நினைவுகள் பக்.39)

என்பதறிக.

வந்த மொழிக்கு தந்த வரவேற்பு

தமிழ் செழித்து வளர்ந்த ஒரு மொழியாக விளங்குகின்றது. இந்த வளர்ச்சி எளிதாக அமைந்த ஒன்றல்ல. தமிழ் காலந்தோறும் இடர்ப்பாடுகளைக் கண்டு கடந்து, நீரினை, நெருப்பினை வென்று வளர்ந்து வந்த மொழி என்பதையும் நினைவில் கொண்டால், தமிழின் அருமை வெளிப்படும் அல்லது தெரியும்.

தமிழ் மக்கள் தம் தாய்மொழி தமிழின் மீது பாவேந்தனைப் போல உயிர் மூச்சினை வைத்ததில்லை. வந்த மொழிகளையெல்லாம் வரவேற்று இடம் தந்து ஏற்றம் கொடுத்தனர்; வடமொழிக்கு இடம் தந்து தமிழைப் புறக்கணித்தனர்; புறக்கணித்துக் கொண்டிருக்கின்றனர்; கொன்றனர்; கொல்லுகின்றனர். தமிழில் வடசொல் கலப்பின் விளைவாகக் கன்னட மொழி பிறந்தது; மலையாள மொழி தோன்றியது; தெலுங்கு மொழி தோன்றியது. ஏன், வீட்டுச் சடங்குகளிலும் கோயிற் சடங்குகளிலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டது. வடமொழியே இடம் பெற்றது. கடவுளர்கூடத் தமிழ் கேட்கமுடியாத அளவுக்குக் கருவறைக் கதவு சாத்தப்பட்டது. கடவுள் இந்த கட்டுக் காவலைக் கடந்து தமிழ் கேட்க விரும்பிக் காசு தந்து கேட்டுள்ளான்.

"...திருமிழலை - இருந்து நீர் தமிழோ டிசைகேட்கும் இச்சை யால்காசு நித்தல் நல்கினர்" (ஏழாந்திருமுறை பக். 399 என்பது சுந்தரமூர்த்திசுவாமிகள் திருவாக்கு. ஆனால் இன்று ஏன் இந்த அவலம்? வழிகாட்டுவோராக யாரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்! ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராக விளங்கும் தமிழந்தணரை ஆசிரியனாக ஏற்றுக் கொண்டிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது! ஏன் தமிழரசுகளைக்கூட இழந்திருக்க மாட்டோம்! அந்தோ இரங்கத்தக்க நிலை!

".......மக்கள் இடருற வடமொ ழிக்கே இடந்தந்து தமிழைக் கொல்வான்"(குறிஞ்சித்திட்டு பக்.20)

என்ற பாவேந்தன் பாடல் வரிகளை உணர்க.

தமிழில் பிறமொழிச் சொற்களை நுழைத்துக் கலப்படம் செய்பவரைப் "பேடி” என்று திட்டுகின்றான் பாவேந்தன். தமிழுக்குக் கேடு வந்தது, தமிழர் மறையெனப் பிறமொழி மறைகளை ஏற்றுக் கொண்டமையாலே தான்! தமிழர்க்கு மறை வடமொழியில் எப்படி இருக்க முடியும்? வடமொழி எப்படி தமிழரை வழி நடத்த முடியும்? தமிழர் தமது வாழ்வுக்கு, சமய வாழ்வுக்கு வடமொழி வழிகாட்டும் என்று நம்பும் வரையில் தமிழர் முன்னேற்றம் முயற்கொம்பேயாம். தமிழர்க்கு மறை திருக்குறளேயாம். முற்காலத்துத் தமிழர்தம் நிலையை,

"பிறமொழி தமிழிற் சேர்க்கும் பேடிகள் நுழைந்த தில்லை! அறமுதல் நான்கு கூறும் தமிழ்மறை அலால்வே றில்லை” (குறிஞ்சித்திட்டு பக்.3)

என்று பாரதிதாசன் விளக்குகின்றான். தமிழுக்குப் பகை தமிழரே!

தமிழை, தமிழின் எழிலை, தமிழின் தரத்தைத் தடுத்து மறைத்து எவரும் அறியாவண்ணம் செய்யும் இழி முயற்சிகள் பாவேந்தனுக்கு நெஞ்சு பதைபதைக்கும் நிலையைத் தருகிறது. இன்று ஒவ்வொருவருமே தமிழுக்குப் பகையானோம்! இந்த நிலை என்று மாறும்?

பிறமொழிக் கலப்பால் தமிழ், தன் தகுதியை இழந்தது; தன்மையை இழந்தது! தமிழ்க் கலை, நாகரிகம், ஒழுக்கம் ஆகியவற்றில் அக்கறை நமக்கு இல்லை; முயற்சி இல்லை! தமிழ் அழிந்து வருகிறது! வெறும் உயிர்ப் பிண்டமாகத் தமிழர் வாழத் தலைப்பட்டனர்; வாழ்கின்றனர்! மீண்டும் தமிழர்கள் எழுந்திருப்பார்களா? எழுந்திருப்பர் என்ற நம்பிக்கை கால்கொள்ள மறுக்கிறது. ஏன்? தமிழரிடை ஒருமை இல்லை; ஒற்றுமை இல்லை! இதனால் தம்முள் முரணிப் போர் செய்து, அழியத்தான் நேரம் இருந்தது. இன்றையத் தமிழர்கள் பற்றிய பாவேந்தனின் ஒரு சித்திரம் இதோ:

"தமிழர்நாம் என்றால் நம்பால்
தமிழ் உண்டா? தமிழ் ஒழுக்கம்
அமைவுறச் சிறிது முண்டா?
அன்றைய மறத் தனந்தான்
கமழ்ந்திடல் உண்டா? கல்வி
கலைநலம் உண்டா? நெல்லின்
உமிமுனை அளவி லேனும்
ஒற்றுமை உண்டா?"

(குறிஞ்சித்திட்டு பக்.185)

என்று பாடியிருப்பது கவிதையா? சாட்டையடியா?

பாவேந்தன் குறகிய நோக்கம் உடையவன் அல்லன். பிற மொழிகளைப் பயில்வதைப் பாவேந்தன் தடைசெய்ய வில்லை. தமிழை உயிராயக் கொள்ள வேண்டும் என்பதே பாவேந்தன் கொள்கை.

"ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயல்மொழியைக் கற்கையிலும் எந்தநாளும் தீங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர் (தமிழியக்கம் பக்.77)

"எனக்குத் தமிழில் பேசத் தெரியாது” என்று பலர் முன்னிலையில் கூறிப் பெருமைபெறுவது, உயர் அரசு அலுவலர் முதலியோருக்கு இயல்பாக இருந்த பழக்கம். பாவேந்தன் இத்தகைய போக்கைக் கடுமையாக மறுக்கின்றான். தமிழ்நாட்டில் பிறந்தோம் என்ற எண்ணமே அவர்களுக்கு இல்லையோ? என்று வினவுவதுடன் அவர்கள் திருந்தவேண்டும் என்று எச்சரிக்கை செய்கின்றான்.

சில மாறுதல்கள்

இன்றைய தமிழ்நாட்டு அரசு அலுவலர்களிடையில் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது! இன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், துறைத் தலைவர்கள் நல்ல தமிழில் நிரந்தினிது பேசும் ஆற்றல் பெற்று விளங்குகின்றனர். நல்ல தமிழில் ஆட்சி ஆவணங்கள் தயாரிக்கின்றனர். ஏன் இன்று பொறியியல் துறையில், மருத்துவத்துறையில் நல்ல தொழில்நுட்ப நூல்களை எழுதும் அறிஞர்கள் பலர் உள்ளனர். இந்த வகையில் பாரதிதாசனின் கொள்கைக்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது என்று கூறலாம்.

யுகப்பிரளயமே வந்தாலும் தமிழர், தம் தமிழ்க் குருதியை இழக்க மாட்டார்கள். பலநூறு ஆண்டுகளாகத் தமிழை அழிப்பதற்குப் பலப்பல முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் தமிழ் அழியவில்லை; தமிழ் வளர்கிறது; தமிழ் வாழ்கிறது

இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்போம்!

"புனற் கடலும் புகைக் கடலும் என்ன செய்யும்" என்று பாவேந்தன் கேட்கின்றான். ஏழாம் நூற்றாண்டில் வைகைப் புனல் வெள்ளத்தையும் மதுரையில் எரிந்த எரி நெருப்பையும் புறங்கண்டு தமிழ் வெற்றி பெற்ற வரலாற்றை இங்கு நினைவிற்கொள்க!

இன்று தமிழகத்தில் தமிழில் வழிபாடு இல்லை! ஏன்? தமிழ் மந்திர மொழி இல்லையாம். தமிழ், பயிற்று மொழி இல்லை! ஏன்? தமிழில் அறிவியல் இல்லையாம். இவையெல்லாம் தமிழர் அயர்ந்துள்ள நிலையில் நடக்கும் அவலங்கள்! தமிழில் மந்திரங்கள் உண்டு! இல்லை, தமிழே மந்திரமொழி என்பதைத் தமிழகத்தின் ஏழாம் நூற்றாண்டு வரலாறு கூறுகிறது. திருவிளையாடற் புராண ஆசிரியர்,

"தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்ததும் எலும்பு பெண்ணுருவாக்
கண்டதும் மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்
தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்!”

(திருவிளையாடற்புராணம், திருநாட்டுச்சிறப்பு பக்.58)

என்று தமிழின் மாண்பினை எடுத்துரைக்கிறார்.

பாவேந்தன் கேள்வி, தமிழுக்குத் தொடர்பில்லாத கடவுள் ஏன்? என்பது. தமிழில் இல்லாத ஒன்று தமிழருக்கு ஏன்? எவன் அன்று எழுப்பும் வினாவிற்கு விடை கூறுவார் யார்?

எல்லாரும் தமிழ்க் கல்வி - தமிழ் வழிக் கல்வி கற்கவேண்டும். தமிழ் வழிக் கல்வி பயின்றால்தான் அறிவு வளரும் அறிவு வளர்ந்தால்தான் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும்; நெஞ்சில் தூய்மை வரும்; வீரம் வரும். ஆதலால் நல்வாழ்க்கை அமைவிற்குத் தமிழ் வழிக் கல்வியே துணை செய்யும். ஆதலால், தமிழ்க் கல்வியை எல்லாரும் பயில்கின்றனர் - பயின்றனர் என்ற நிலையே தமிழ் நாட்டிற்கு ஆக்கம் தரும். இதனைப் பாவேந்தன்,

"இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக் கும்நிலை எய்திவிட் டால்
துன்பங்கள் நீங்கும்; சுகம்வரும்; நெஞ்சில்
தூய்மையுண் டாகிவிடும்; வீரம் வரும்"

(பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி பக்.93)

என்று பாடுகின்றான்.

அயல்மொழி அண்டும் அளவுக்குத் தாழ்வே!

தமிழரும் தமிழும் தணலும் சூடும் போல வாழ வேண்டும். தமிழர் வாழ்வில் அயல்மொழி அண்டும் அளவுக்குத் தமிழ் தாழும்; தமிழர் வாழ்வும் தாழும். தமிழ், தமிழிலக்கியம், தமிழினம் இவை ஒன்றுக்கொன்று ஆதாரம் - அடிப்படை. இவற்றில் ஒன்று அழிந்தாலும் எஞ்சிய இரண்டும் வாழா. தமிழ்நாடு வீழ்ச்சியுறும். நாட்டின் உரிமை காக்கும் பணி, தமிழ்ப் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலுமே இருக்கிறது.

"தமிழனும் தமிழும் தணலும் சூடும்!
அமிழ்தமே ஆயினும் அயல்மொழி அயல்மொழி!
அயல்மொழி தமிழை அண்டும் விழுக்காடு
தமிழ்மொழி தாழும் தமிழன் தாழ்வான்!
தமிழை வடமொழி தாவும் நோக்கம்
தமிழை அழிப்பதும் தான்மேம் படுவதும்!
வடமொழி அதனின் வழிமொழி எதுவும்
தமிழ்மேல் சந்தனம் தடவவே வரினும்

ஒழித்து மறுவேலை உன்னுதல் வேண்டும் தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும் நாட்டின் உரிமை காத்தல் வேண்டும்.” (குறிஞ்சித்திட்டு. பக்.31-312)

என்று பாரதிதாசன் இடித்துரைப்பதை எண்ணுக.

தமிழ் பயிற்று மொழி

தமிழர் ஆக்கம், தமிழ் வழிக் கல்வியின் வாயிலாகத் தான் என்பதால் தமிழ்வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். தமிழ்வழிக் கல்வியை ஒவ்வொருவரும் தவறாமல் கற்க, சட்டம் செய்யவேண்டும் என்பது பாவேந்தனின் எண்ணம். தமிழர் நெறி தமிழருக்குத் தேவை என்பதறிந்து தமிழையும் தமிழனையும் காப்பாற்றமுடியும். எல்லாரும் தமிழ்வழிக் கல்வி கற்க, அரசு சட்டமியற்றினால் மட்டும் போதாது. சலுகைகளும் தந்து ஊக்குவிக்க வேண்டும். இன்றைய தமிழ்நாட்டில் இதுதான் இல்லை! ஏன் தமிழ் வழியாகக் கற்பவன் கிராமப்புற தமிழன். இவனுக்கு எந்த வசதியும் இல்லை; பணி வாய்ப்பும் இல்லை. இது பிழைபட்ட நிலை! தமிழ்வழிக் கல்வியைத் தமிழ் நாட்டரசு ஊக்குவிக்க வேண்டும். தமிழ் வழிக் கற்று வருவோருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை தரவேண்டும் என்று கேட்கவும் துணிவில்லை. ஏன்? 1972-73-இல் அன்று தமிழக முதல்வராக இருந்த பாராட்டுதலுக்குரிய டாக்டர் கலைஞர். தமிழ் வழிப் பயின்றோர்க்குத் தமிழ்நாடு அரசில் முன்னுரிமை கொடுத்து அரசாணையும் பிறப்பித்தார்! ஆனால் தமிழக மக்கள் ஆங்கிலப் பற்றார்வத்தின் காரணமாக அந்த ஆணையை எதிர்த்தனர். கல்லூரிகள், பள்ளிகளுக்குச் செல்லாமல் மாணவர்கள் படிப்பு நிறுத்தம் செய்தனர். மக்களை, அவர்தம் வழியில் சென்று திருத்தலாம் என்ற நம்பிக்கையில் அப்போது அம்முயற்சி கைவிடப்பட்டது. இன்றைய நிலை மேலும் மோசமாகி விட்டது! தமிழ்நாடு, தமிழர் நலம், தமிழின் நலம் ஆகியவற்றில் அக்கறையுடையவர்கள் ஆழமாகச் சிந்தித்துத் தீர்வுகாண வேண்டிய சிக்கல் இது.

செய்ய வேண்டியவை

தமிழ் நூல்கள் நிறைய வெளிவருதல் வேண்டும். எளிய நடையில் ஏற்றம் தரும் கருத்துக்கள் அடங்கிய தமிழ் நூல்கள் பலப்பல படைத்திடுதல் வேண்டும். நாளும் இலக்கிய மரபுகள் மாறுகின்றன. புதிய கவிதைகள் தோன்றி வளர்ந்து வருகின்றன. இலக்கியங்கள் வாழ்க்கைப் போக்கில் வளர்ந்து வருகின்றன! இந்தப் புத்திலக்கியங்கள் யாப்பியலுக்கு ஒத்துவராதவை என்பது வெளிப்படை! அதனால் இவை அனைத்தையும் இலக்கியங்கள் அல்ல என்று ஒதுக்க முடியுமா? ஒதுக்குவது நல்லதா? ஒதுக்க இயலாது; ஒதுக்கவும் கூடாது. தோன்றும் இலக்கியங்களுக்குத்தான் இலக்கணங்கள்! ஆதலால் சமுதாய நிகழ்வுகளின் தாக்கத்தின் காரணமாக உணர்வுகளால் உந்தப்பட்டு எழுச்சியுடன் வரும் கவிதைகளை மரபுவழி ஒத்தவையல்ல என்று தள்ள இயலாது. இதோ சில உதாரணங்கள்:

“.......................... இனியும் சகிக்க முடியாது, கண்ணிர்க் கடலடியில் உறங்கிக் கிடக்கும் வட முகாக் கினியை உசுப்பி விடுவோம் வாருங்கள்” ஒரு சங்காரத்தால் இந்த பூமி பண்படுத்தப் பட்டபின் நட்சத்திர விதைகளைத் தூவுவோம் இங்கே!" ('பால்விதி' பக்.91, அதுல்ரகுமான்)

நீ தாமதிக்காதே தேரோட்டம் முடிந்த பிறகு திருவிழாக் காணவரும் ஒரு பக்தனைப் போல் - வண்டி போன பிறகு நிலையம் வந்து சேரும் ஒரு பயணியைப்போல் - நோயாளி மடிந்த பிறகு மருந்து வாங்கி வரும் ஒரு சொந்தக்காரனைப்போல் - நீ காலங்கழித்து வராதே! பிறகு வருந்தாதே! (கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் பக்.70-மீரா)

இங்ஙனம் தோன்றும் புதுக் கவிதைகளுக்கும் இலக்கணம் செய்ய வேண்டும். இலக்கணம், இலக்கிய வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் துணை செய்ய வேண்டும். பாவேந்தன் "இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்” என்று கூறுவதை நினைமின்! தமிழ்ப் பல்கலைக் கழகம் இந்த நூற்றாண்டு இலக்கியங்களுக்கு இலக்கணங்களை உருவாக்க முன்வரவேண்டும்.

பாவேந்தன் செந்தமிழைக் கற்றவன்; உணர்ந்தவன். ஆயினும் செந்தமிழ், செழுந்தமிழாக இல்லையே என்று கவலைப்பட்டுச் செந்தமிழைச் செழுந்தமிழாக வளர்க்கும் பணியில் ஈடுபட ஆணையிடுகிறான். வெளியுலகில் நாளும் வளர்ந்துவரும் புத்தம்புதிய அறிவியல் நுட்பங்களுக்குத் தமிழ்ச் சொல்லைத் தேர்ந்து தெளிந்து பயன்படுத்தியும், எளிதில் விளங்கும் வரைபடங்களுடனும் தமிழில் பலப்பல சுவடிகள் வரவேண்டும். இது பாவேந்தனின் ஆர்வம்! இன்று இத்தகைய முயற்சிகள் முகிழ்த்ததன் விளைவாக, "கலைக்கதிர்", "வளரும் வேளாண்மை", "துளிர்", "அறிக அறிவியல்" என்று சிலபல இதழ்கள் வெளிவருகின்றன. இவை போதா! இந்த இதழ்களின் விற்பனையும் குறைவு; மக்களிடத்தில் அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த செய்திகளைப் படிப்பதில் - கேட்பதில் ஆர்வம் இல்லை. ஆயினும், முயற்சிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும், நடைபெறும் என்று நம்புவோமாக!

தமிழன் கற்றுத் தெளிந்து வாழ்தல் வேண்டும். கல்வி பெறும் முயற்சியில் ஒருதமிழன் தாழ்ந்தானானால் தமிழர் அனைவரும் நாணித் தலைகுனிதல் வேண்டும் என்பது பாவேந்தனின் ஆணை. பாவேந்தனின் இந்த ஆர்வங்கள் நிறைவேறும் நாள் எந்நாள்? கவிதையைப் படியுங்கள்! திரும்பத் திரும்பப் படியுங்கள்! நாணம் இருக்கிறதா? இல்லையா? சோதனை செய்து கொள்ளுங்கள்!

எளியநடையில் தமிழ்நூல் இயற்றிடவும் வேண்டும்
இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்
வெளியுலகில் சிந்தனையில் புதிதுபுதி தாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாம் கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெல்லாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்!

(பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி, பக்.95)


என்பதறிக.

தமிழைத் தாபிப்போம்!

அடுத்து, பாவேந்தன் தமிழருக்கு ஒருதலையாகச் செய்து முடிக்கவேண்டிய பணி ஒன்றை ஆணையிடுகின்றான்! இந்த உலகியல் விரிந்தது; பரந்தது. பூத, பௌதிக இயல்களை ஒட்டி எண்ணற்ற அறிவியல் துறைகள் தோன்றியுள்ளன; வளர்ந்துள்ளன. இத்துறைகள் அனைத்திலும் தமிழர் அறிவு பெற்றால்தான் தமிழர் நிலை உயரும்! தமிழ் வளரும்! நல்ல எளிய தமிழ் நடையில் அறிவியல் செய்திகளை சாதாரண மக்களுக்கும் சென்று சேரும்படி செய்யவேண்டும். நாள்தோறும் நூற்கழகங்கள் தோன்ற வேண்டும். இது பாவேந்தனின் எண்ணம். பாவேந்தன் எண்ணத்தை நாம் நிறைவேற்ற வேண்டாமா? இன்று தமிழுக்கு உரியன செய்யாமல் தமிழின் சென்ற காலப் பெருமைகளைப் பறையறைவதில் என்ன பயன்? இதோ, நீங்களே பாவேந்தனின் கவிதைகளைப் படியுங்கள்!

"உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூல்கள் ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்! தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்! இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்! எங்கள்தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்வித் தலைமுறைகள் பலகழித்தோம் குறைகளைந் தோமில்லை! தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்! ('பாரதிதாசன் கவிதைகள்' முதல் தொகுதி; பக்.95)

பாரதிதாசன் அடிச்சுவட்டில் தமிழைத் தாபிப்போம் வர்ரீர்!

கணக்காயர் கடமை!

அடுத்து, தமிழர் வளர்ச்சியில், தமிழ் வளர்ச்சியில் பொறுப்பேற்க வேண்டியவர்கள் கணக்காயர்கள் - ஆசிரியர்கள்! நல்ல தமிழில் எழுதவும் பேசவும் ஆற்றலுள்ள ஆசிரியர்கள் பொறுப்புணர்வுடன் - முற்போக்கு எண்ணத்துடன் உரியவாறு உழைப்பாராயின், தமிழன்னை விழித்தெழுவாள்! தமிழ் மக்களின் அடிமை வாழ்வும் தீரும்! என்கின்றான் பாவேந்தன்!

கழகத்தின் கணக்காயர், தனிமுறையில் கல்விதரு கணக்கா யர்கள்,

எழுதவல்ல பேசவல்ல கல்லூரிக்
        கணக்காயர் எவரும் நாட்டின்
முழுநலத்தில் பொறுப்புடனும் முன்னேற்றக்
        கருத்துடனும் உழைப்பா ராயின்
அழுதிருக்கும் தமிழன்னை சிரித்தெழுவாள்;
        அவள்மக்கள் அடிமை தீர்வார்!

('தமிழியக்கம்' பக்.71)

இந்த நிலை என்று உருவாகும்? நினைமின்! செய்ம்மின்!

தமிழ்த் தெருவில் தமிழ் வேண்டும்

தமிழ் நாட்டின் தெருக்களில், கடை வீதிகளில் தமிழ்தான் இல்லை! கடைகளுக்குத் தமிழில் பெயர் வைத்தால் என்ன? என்று பாவேந்தன் தணிப்பரிய துன்பத்தில் உழன்று பாடிய கவிதை இதோ!

உணவுதரு விடுதிதனைக் "கிள"ப் பெனவேண்
        டும்போலும்! உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்குச் "சில்குஷாப்” எனும் பலகை
         தொங்குவதால் சிறப்புப் போலும்!
மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை?
        தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின்
            தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை!

('தமிழியக்கம்' பக்.22)

இந்த நிலை என்று மாறும்? தமிழையே கருவியாகக் கொண்டு அரசு, இதற்குச் சட்டங்கள் இயற்றக்கூடாதா? இனிமேலாவது செய்வார்களா? பொதுமக்களாகிய நமக்காவது சுரணை வருமா?

திருக்கோயிலில் தமிழ்

காற்செருப்பு, வெளிப்புறத்தில் கழற்றி வைக்க வேண்டியதே! அத்தகைய காற்செருப்பை ஒருவன் கழிவிடத்தில் தள்ளிவிட்டால் நம்மால் தாங்கிக்கொள்ள முடிகிறதா? எவ்வளவு ஆத்திரப்படுகின்றோம்! இதே ஆத்திரம் ஏன் நமது உயிரினும் மேலாய தாய்மொழிக்கு இழிவு செய்யும்பொழுது வருவதில்லை! தமிழை மட்டுமா தாழ்த்தினார்கள்! தமிழனையும் சூத்திரன் என்று இரண்டாந் தரமாக்கிக் கருவறைக்கு வெளியே நிறுத்தினார்கள்! யார் கருவறைக்கு வெளியே? கற்கோயில் கட்டிய தமிழன்! இந்த இழிவு ஏன்? இறைவனை அர்ச்சனை செய்யத் தமிழுக்குத் தகுதியில்லையா? "அர்ச்சனை பாட்டேயாகும்" என்பது பொய்யுரையா? மெய்யுரையா? செந்தமிழ் மொழியில் தேவாரங்கள் உள்ளன. திருவாசகம் உள்ளது! இவை மொழிக்கு மொழி தித்திப்பானவை! இறைவன் விரும்பிக் காசு கொடுத்துக் கேட்டவை! தமிழ் கேட்கும் விருப்பத்தால் தமிழின் பின்னால் கடவுள் சென்ற வரலாறு, மறக்க முடியுமா? திருக்கோயில்களில் திருமுறைகளையே வழிபடும் மறைகளாக நடைமுறைப்படுத்தும் நாளே, தமிழர்க்கு நல்ல நாள்! இதோ பாவேந்தனின் உணர்ச்சி நிறைந்த கவிதைகளைப் படியுங்கள்! மானமும் உணர்ச்சியும் இருந்தால் தமிழகத் திருக்கோயில்களில் திருமுறைத் தமிழை வழிபாட்டு மொழியென்ற நியதியை உருவாக்குங்கள்! வரலாறு படையுங்கள்!

தமிழ் மக்களிடத்தில் தமிழ் என்ற உணர்வே இல்லை! கடவுள் பக்தி என்ற பெயரில் ஆசாரச் சடங்குகளுக்கே இரையாகிறார்கள்! ஞானத்தில் நாட்டமில்லை. நாம் தமிழகத் திருக்கோயில்களில் திருமுறைத் தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று பல்லாண்டுக்கு முன் போராடினோம். பல மேடைகளில் வற்புறுத்திப் பேசிவந்தோம். அப்போது தமிழக அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திரு. எம். பக்தவத்சலம் அவர்கள் இதற்கு உடன்படவில்லை. அவரை இசைவிக்க வேண்டி நாம் முதல்நிலையில் திருமுறைத் தமிழ் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்குரிய சான்றுகளடங்கிய நூல்கள் பலவற்றில் அடையாளமிட்டு அவர் பார்வைக்கு அனுப்பி வைத்தோம். அதன்பின் அறிஞர் பெருமக்கள் பலருடன் அவரைச் சந்திக்கச் சென்றோம். அதுபோது அவர் தாம் ஏற்கனவே அனுப்பிய நூல்களை முன்னதாகப் பார்வையிட்டிருந்ததால் எந்தவித மறுப்புமின்றித் திருக்கோயில்களில் திருமுறைத் தமிழருச்சனை செய்வதற்கு உடனே இசைவளித்தார்; பின், அரசு ஆணையும் பிறப்பித்தார். பின்னர் அவரே மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் 1962ஆம் ஆண்டில் நாமும் உடனிருக்க, திருமுறைத் தமிழருச்சனையைத் தொடங்கியும் வைத்தார். இது வரலாறு. திருக்கோயில்கள் திருமுறைத் தமிழ் அருச்சனைக்குரியன என்ற அரசாணையை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பெற்றுத் தந்தும் தமிழர்கள் தமிழ் அருச்சனை செய்ய முன்வரவில்லை. என்னே உறக்கம்! நிலைகெட்ட நிலை! இறைவா! எங்கள் தமிழர், என்று விழிப்புநிலை எய்துவர்? பாவேந்தன் கவிதையைப் படியுங்கள்!

"சொற்கோவின் நற்போற்றித் திருவகவல்
செந்தமிழில் இருக்கும் போது
கற்கோயில் உட்புறத்தில் கால்வைத்த
தெவ்வாறு சகத்ர நாமம்?
தெற்கோதும் தேவாரம் திருவாய்நன்
மொழியான தேனி ருக்கச்
செக்காடும் இரைச்சலென வேதபா
ராயணமேன் திருக்கோ யில்பால்?"

('தமிழியக்கம்' பக்.59)


ஆட்சியியலில் தமிழ் வேண்டும்

ஆங்கிலம் மட்டுமே கற்றவர்கள் தமிழ் நாட்டரசின் அலுவல்களைப் பார்ப்பதைப் பாவேந்தன் விரும்பவில்லை. ஏன்? ஆள்கிறவர்கள், ஆளப்படுகிறவர்களுடைய மரபுகளை அறிந்திருக்க வேண்டும். இது ஆட்சியியலின் நியதி. அதுவும் தமிழ், தீங்கறியாதது. தமிழ் மக்கள் யாருக்கும் தீவினை சூழாது நல்லனவே எண்ணி நல்லனவே செய்யும் மக்கள். ஆதலால், தமிழ் நாட்டை ஆளுவோர் தமிழறிந்தவர்களாய் இருத்தல் வேண்டும் என்பது பாவேந்தனின் எண்ணம். இந்த எண்ணம் இன்று ஓரளவு நிறைவேறி வருகிறது. இன்னும் முழுமை யடையும் என்று எதிர்பார்க்கத் தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு, தமிழுக்குத் தொண்டு செய்து, தமிழை உயர்த்து பவர்கள் உயர்வார்கள். தமிழுக்குச் தொண்டு செய்வது, தரித்திர நாராயணர்களுக்கு அமிழ்து அளித்ததுபோல என்று கவிஞன் எடுத்துக் கூறும் பாங்கு நுட்பமானது. அதாவது, தமிழ்க் கல்வியைக் கடைகோடி மனிதருக்கும் வழங்கி அறிவை உண்டாக்கி வளர்த்து மூடத்தனத்தின் சிக்கறுத்து அறிவறிந்த ஆள்வினையை அறிமுகப்படுத்தி விட்டால் அவர்கள் தாமே வளம் பல படைத்து வாழ்வர் என்பது பாவேந்தனின் கருத்து.

"தமிழை உயர்த்தினார் தாமுயர் வுற்றார்”
என்றசொல் நாட்டினால் இறவா நற்புகழ் என்று
வாய்ந்திடும் என்ற நடுக்கமோ?
தமிழின் தொண்டு தரித்திர வயிற்றுக்கு
அமிழ்தம் அன்றோ அண்ணன் மாரே!”

(இசையமுது 2-பக்:31)

என்பது காண்க.

தமிழ் வளர்ந்த மொழி. தமிழ் மக்கள் வளர்ந்த நாகரிக வாழ்வினர், தமிழர் தம் வாழ்வியல் அந்தண்மையும் சான்றாண்மையும் சார்ந்து விளங்குவது. தமிழ்நாடு தமிழ்ச் சான்றோர் காட்டிய நெறி வழியிலேயே ஆளப்படுதல் வேண்டும்.

தமிழ் மக்கள் யாரையும் எளியர் என்று எண்ணி எள்ளி நகைக்க மாட்டார்கள். யார் ஒருவரையும் பெரியர் என்று வியந்து பாராட்டமாட்டார்கள். மனிதம் என்ற நிலையே தமிழர் முதன்மைப்படுத்தும் நெறி.

"......மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!” (புறம். 192)

எல்லாரும் இன்புற்று வாழ்தல் வேண்டும். இதுவே தமிழர் குறிக்கோள்.

"ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னா தம்ம இவ் வுலகம்
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே! (புறம்.194)

என்ற நெறிமுறை தமிழர் முறை. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற திருக்குறள் நெறியே தமிழர் நெறி. இந்நெறிகள் வழி, தமிழ் நாட்டுக்குச் சட்டம் இயற்றுதல் வேண்டும் என்பது பாவேந்தனின் எண்ணம்.

"நம்நாடு தமிழ்நாடு நாமெல்லாம்
தமிழ்மக்கள் இன்பம் கோரி
இந்நிலத்தில் வாழ்வதெனில் மூச்சாலே! .
அம்மூச்சு தமிழே! அந்தப்
பொன்னான தமிழாலே தமிழ்ச்சான்றோர்
புகன்றதமிழ்ச் சட்டம் ஒன்றே
இந்நாட்டை ஆண்டிடுதல் வேண்டுமதை
இகழ்வானை ஒழிக்க வேண்டும்!"

(குறிஞ்சித்திட்டு-பக்.198)

என்ற பாவேந்தன் எண்ணப்படி தமிழ்நாடு ஆளப்படும் நாளே தமிழ்நாட்டுக்குப் பொற்காலத் தொடக்கமாகும்!

நல்லதோர் திட்டம் வேண்டும்

பாவேந்தன் தமிழ் நாட்டின் நலனுக்கென்று திட்டம் அமைத்துச் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்துவதை அனைவரும் உணரவேண்டும். உணர்ந்தவழி, செய்யவும் முற்படவேண்டும், நல்லன நடைபெறவேண்டும். அல்லன அகலுதல் வேண்டும். களை மண்டிய கழனியில் பயிர் வளருமா? நாட்டில் செல்வ வளம் செழிக்கச் செய்தல் வேண்டும்; செந்தமிழைக் காத்திடுதல் வேண்டும். சாதி, மத பேதங்களற்ற சமுதாயம் காணல் வேண்டும், ஏன்? மாமேதை மார்க்ஸ் வழியில் அரசுங் கடந்த பொதுமை நலம் செறிந்த சமுதாய அமைப்பைக் காண்பது தமிழர் கடன்! இந்தக் கடமையை நாம் விரைந்து செய்து முடிக்க வேண்டாமா?

"நல்லதோர் திட்டம் அமைத்தல் நம்கடன்
அல்லன அனைத்தும் அழித்தல் நம்கடன்
செல்வம் நாட்டிற் சேர்ப்பது நம்கடன்
செந்தமிழ் காத்தல் சிறந்தகடன் நமக்கு!
மதம் அகன்ற சாதி மறைந்த
அரசு கடந்தார் வாழ்க்கை அமைப்பது
நம் கடன்."

(குஞ்சித்திட்டு-பக்.319)

என்று பாவேந்தன். அளித்த திட்டத்தை நிறைவேற்ற உறுதி கொள்வோம்.

தமிழ்த் தலைவர்களை உருவாக்குக!

தமிழரின் குறை தீர்தல் வேண்டும். இன்னே தீர்தல் வேண்டும். யாராவது ஒரு தமிழன், ஒரு தமிழ் மறவன், தமிழர் தலைவன் முன்வரமாட்டானா? என்று எதிர்பார்க்கின்றான் பாவேந்தன் பாரதிதாசன்!. நமது தலைமுறையில் இரண்டு தலைவர்கள் கிடைத்தனர். ஆனால், அவர்கள் தமிழகத்தின் தரம் உயர்வதற்கு முன் மாண்டு போயினர்! இது தமிழகத்தின் தீயூழேயாம்! தமிழ்த் தலைவர் வரவை எதிர்பார்த்திருக்க வேண்டாம். இப்பல்கலைக் கழகம் பாவேந்தன் கண்ட தமிழகத்தை உருவாக்கும் தலைவர்களை உருவாக்குக! தமிழர் குறை பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் தீர்ந்ததாக வரலாறு புகழ்ப் பரணி பாடட்டுமே!

வரலாறு தொடரட்டும்!

தமிழகம் படையெடுப்புக்களைக் கண்டதில்லை. தமிழ்நாடு இயற்கை வளம் நிறைந்த நாடு; நற்றமிழ் வளர்ந்த நாடு; கவிஞர்கள் பலர் தோன்றிக் கற்கண்டுத் தமிழை வளர்த்த புகழ்மிக்க நாடு; தொழில்கள் பல நடந்த நாடு - நடக்கும் நாடு; புதிய புதிய தொழில்கள் அமையப்பெற்று வளர்ந்த நாடு - வளரும் நாடு. இந்தப் புகழ்மிக்க மரபு, தொடர் வரலாறாக அமையும்படி செய்வது நமது கடமை.

"எவர்படை யெடுப்பும் இன்றி
இயற்கையால் வளர்ச்சி பெற்ற
நவையிலாக் குறிஞ்சித் திட்டு
நற்றமிழ் வளர்ச்சி பெற்றும்
கவிஞர்கள் பலரைப் பெற்றும்
கைத்தொழில் வளர்ச்சி பெற்றும்
குவிபுதுத் தொழில்க லைகள்
கொளப்பெற்றும் வந்த தாகும்"

(குறிஞ்சித்திட்டு -பக்.5)

இந்த வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள்.

நமது கடமை!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ்க்குடியின் வரலாறு எப்படிக் கெட்டது? ஏன் கெட்டது? தமிழர்கள் வெள்ளையுள்ளம் படைத்தவர்கள்; எளிதில் எதையும் நம்புவார்கள்! அதனால், செழுந்தமிழ் வழக்கு சீர்கெடும் வகையில் அயல் வழக்கு ஊடுருவியது. தமிழர். ஒரு கடவுட் கொள்கையுடையவர்கள். இதற்கு மாறாக அயல்வழியால் பல கடவுள் வழிபாட்டு நெறி புகுந்தது! தமிழ் வழியினர் அனைவரும் உறவினர்; ஒரு குலத்தினர். அயல்வழக்கு எண்ணத் தொலையாத சாதிகளைப் புகுத்தித் தமிழினத்தை உருக்குலையச் செய்து ஊடழித்தது.

"ஒன்றே அல்லால் குலமில்லை
ஒருவ னல்லால் தெய்வமில்லை
என்றதோர் தமிழரின் சொல்லை
மறந்ததால் அல்லவா வந்ததித் தொல்லை”

(தேனருவி-பக்.24)

என்ற பாவேந்தனின் பாடல்கள் கவனத்துடன் படிக்கத்தக்கன. இன்றும் தமிழகத்தைப் பல தெய்வ வழிபாடும் மூடத்தனமான சடங்குகளும் அலைக்கழிவு செய்து கொண்டுதான் உள்ளன. அயல் வழக்கின் பிடியிலிருந்து தமிழ் வழக்கை மீட்க வேண்டும்! இதுவே நமது கடமை! சிந்தனையில் தெளிவையும் சொல்லில் உறுதியையும் செயலில் செம்மையையும் அளிப்பதற்குத் தமிழ் உண்டு; தமிழ் மக்களுண்டு. நாளும் தமிழுக்குத் தொண்டு செய்வோம்! தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்வோம்! இதுவே இன்று பாவேந்தன் அடிச்சுவட்டில் செய்ய வேண்டிய கடமை!

இன்பத் தமிழுக்குத் தொண்டு செய்வோம் என்பதை இன்றையத் தமிழரின் குறிக்கோளாகவும் தமிழர் வாழ்வாகவும் அமைத்துக்கொள்வதே, பாவேந்தருக்குச் செய்யும் நன்றி! கடப்பாடு!

பாவேந்தன் ஒரு இயற்கைக் கவிஞன்; பிறவிக் கவிஞன். தமிழும் தமிழரும் நாளும் வளரப் பாடிய கவிஞன்! பாவேந்தன் புகழ் வாழ்க! வளர்க! பாவேந்தன் அடிச்சுவட்டில் துறைதோறும் தமிழை வளர்ப்போம்! வாழ்வோம்!