குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/மகாகவி பாரதியாரின் சிந்தனைகள்-II

8
மகாகவி பாரதியாரின்
சிந்தனைகள் - II

இந்தியா ஒரு வளமான நாடு. இயற்கை வளங்களும் தாதுப் பொருள்களும் நிறைந்த நாடு. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நூறாயிரம் பிரச்சினைகள், பின்னடைவுகள் இருப்பினும் இவற்றையெல்லாம் கடந்து நாடு திட்டமிட்ட திசையில் வளர்ச்சி பொருந்திய வழியில் நடந்து வந்திருக்கிறது. நாட்டில் பசுமைப் புரட்சி நடந்தது. ஆலைகளும், தொழிற்சாலைகளும் தோன்றின, நாடு, உணவில் தன்னிறைவு அடைந்தது. ஆயினும், நாட்டின் வருவாய் உயர்ந்த அளவுக்குத் தனி நபர் வருவாய் கூடவில்லை, ஏழை பணக்கார ஏற்பாடு இருந்து கொண்டே இருக்கிறது. செல்வர்கள் மேலும் செல்வர்கள் ஆயினர்; ஆகிக் கொண்டுள்ளனர். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆயினர்; ஆகிக் கொண்டுள்ளனர். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் அவல நிலையே வளர்ந்து வருகிறது.

"மனிதர் உணவை மனிதர் பறித்தல்” என்ற பாரதியின் வாக்கு ஆழ்ந்து கவனிக்கத் தக்கது. மனிதன் கூடி வாழப் பிறந்தவன்; கூடி உண்ணப் பிறந்தவன். இந்த உலகில் ஏராளமான உணவுப் பண்டங்கள் உள்ளன. எல்லாரும் உண்டு வாழப் போதும். ஆனால், மனிதனின் ஆசை விட்ட பாடில்லை. தனக்கென்று வாரிக் குவித்துக் கொள்வதால் இலர் பலர் ஆயினர். அவன் ஏன் இப்படிக் கெட்டுப் போனான்?

மேலும் பாரதி "மனிதர் நோக மனிதர் பார்க்கும்" வாழ்க்கையை வெறுக்கிறான்; மறுக்கிறான். இதுவரையில் இப்படி வாழ்ந்தது போதும்! இனிமேலும் இந்த அசுர வாழ்க்கை வேண்டாம் என்கிறான். மனிதர் உணவை மனிதர் பறித்து வாழ்தலும், மனிதர் நோக மனிதர் பார்த்து வாழ்தலும் அறிவற்ற வாழ்க்கை என்று திட்டுகிறான். புலனில் வாழ்க்கை என்று ஏசுகிறான்.

மனிதர் நோக மனிதர் பார்த்து வாழும் பாழ்பட்ட வாழ்க்கை ஏன் தோன்றியது? பாரதி அதன் காரணத்தைக் கண்டு பிடித்து மாற்ற விரும்புகிறான். விதி நம்பிக்கைக் கொள்கை வந்த பிறகுதான் இந்த அவலம் கால் கொண்டது. ஒருவர் துன்புறுவதற்கு விதியே காரணம்! அந்த விதியை மாற்ற யாராலும் இயலாது என்ற மூடக் கொள்கை வளர்ந்ததால்தான் இந்திய மக்கள் எழுச்சியை இழந்தனர்; தன்னம்பிக்கையை இழந்தனர். அறிவியல் சார்ந்த விழிப் புணர்வை இழந்தனர். வாழ்க்கை மாறாது. அதனை மாற்றவும் இயலாது என்ற நம்பிக்கைக்கு வந்து விட்டனர். பாரதி இந்த விதிக் கொள்கையைப் புதுப்பிக்க விரும்பினானன். எனவே,” இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்!” என்றான்! பாரதி விரும்பிய விதி என்ன?

"இனி ஒரு விதி செய்வோம்! அதை
எந்த நாளும் காப்போம்'
தனி ஒருவனுக் குணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!”



தனி ஒருவன் யார்? ஒரு மனிதன் எண்ணிக்கையால் அல்ல! யாராலும் எவராலும் பேணப்படாத மனிதன்! அநாதை என்பது பொருள்! அவனுக்கும் சோறு இருக்க வேண்டும்! அவனுக்கும் சோறு இருக்கும் படியாகக் செய்வது சமுகத்தின் பொறுப்பு! உலகத்தின் பொறுப்பு! தனி ஒருவன் பட்டினி கிடப்பதற்கும் நொந்து வாழ்வதற்கும் சமூகமே காரணம்! சமூகமே பொறுப்பு! ஆதலால், தனி ஒருவனுடைய விதி எதுவோ, எப்படியோ? கவலை இல்லை! அந்தத் தனி ஒருவனுக்குச் சோறு தேவை! அதை இருக்கும் படியாகச் செய்ய வேண்டியது சமூகத்தின் பொறுப்பு! சமூகம் அந்தப் பொறுப்பை உணர்ந்து செய்யாவிடில் இந்த உலகம் அழிக்கப்பெறும் என்று பாரதி ஆவேசமாகப் பேசுகிறான்.

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”

என்ற திருக்குறளிலிருந்து பாரதி வெகுவாக வளர்ந்திருக்கிறான். வள்ளுவர், "உலகியற்றியானைப்” பொறுப்பாளன் ஆக்குகிறார், பாரதி, உலகத்தையே பொறுப்பாக்கினான்.

ஆம்! மனிதன் ஒரு சமூகப் பிராணி! ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் தவிர்க்க இயலாத, இங்ஙனம் மனிதர்கள் சமூகமாகக் கூடி வாழ்தலே ஒப்புரவு வாழ்க்கை. ஒப்புரவினால் கூடி வாழும் வாழ்க்கைக்கு ஈடான வாழ்க்கை இந்த உலகத்திலும் இல்லை. புத்தேள் உலகத்திலும் இல்லை என்பது திருவள்ளுவர் கண்ட முடிவு. பாவேந்தன் பாரதிதாசனும் "உலகம் உண்ண உண்” என்றான். தனக்கென முயலாது பிறருக்கென முயலும். அறநெறி வாழ்க்கை மலர்ந்தால்தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். பாரதியின் சிந்தனையில், கருக்கொண்ட பொதுமைச் சமுதாயம் காண்போம்.