குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/தெய்வம் பேணார் தெளிவு

13
தெய்வம் பேணார் தெளிவு

வாழ்க்கை, அறியாமையில் தொடங்குகிறது. அறிவை நோக்கிப் பயணம் செய்கிறது. அறியாமை கடலினும் அகலமுடையது; ஆழமுடையது. அறிவு வர வர, அறியாமை சற்றே அகலும். முற்றாக அறியாமை அகலப் பலகாலம் ஆகும். ஏன்? பல பிறவிகள் எடுக்கவேண்டியது ஏற்படும். அதுவும், பெற்ற அறிவை மீண்டும் இழக்காமல் இடையீடின்றி அறிவை நோக்கிப் பயணம் செய்தால்தான் அறியாமை முற்றாக அகலும். அறியாமை முற்றாக அகன்ற உயிர். அறிவு மயமாகிறது; ஞானத்தின் வடிவம் எய்துகிறது. உயிர், ஞான நிலை எய்திய பிறகு அதற்கு விருப்புமில்லை, வெறுப்புமில்லை; இன்பமுமில்லை, துன்பமுமில்லை; பிறப்புமில்லை, இறப்புமில்லை. ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்ப அன்பில் நிலைபெற்று மகிழ்கின்றது.

அறிவு, குழப்பமானது. அறிவின் இயற்கை அது வளர, வளர அறியாமையின் வன்மையைக் காட்டுவது; குழப்பத்தைத் தரக்கூடியது. இதுவோ அதுவோ என்று ஆராய்ந்து கொண்டிருப்பவன் அறிவின் ஆதித்தொடக்கத்தில் இருக்கிறான். இன்னும் தெளிவாகச் சொன்னால் அவன் ஒரு குழப்பவாதி. அவன் ஒரு பொழுதும் முடிவுக்கு வர மாட்டான். வினாக்களின் தொடர்ச்சியிலிருக்கும் வரை அறியாமையின் தொடர்ச்சி இருப்பதாகவே பொருள். அப்படியானால் வினாவிற்கு அறிவு முரண்பட்டதா? என்ற வினா தோன்றலாம். இல்லை, இல்லை! அறிவைப்பெறும் சாதனங்களில் தலையாயது வினாதானே! “நான் ஆர்? என்னுள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்?” என்ற வினாக்களை மாணிக்கவாசகரே கேட்கிறாரே! ஆனால், அறிவாக்கம் நோக்கிக் கேட்கப்படும் வினா வேறு. அறியாமைக்கு ஊட்டம் தரக் கேட்கப்படும் வினா வேறு. அறிவைப் பயனாகக் கருதிக் கேட்கப்படும் வினாவில் அறிவு வேட்கை தலைப்படும். ஆங்கு விவாத உணர்ச்சி இருக்காது. சிலர், தம்மை அறிஞர் என்று தாமே காட்டிக் கொள்வதற்கு வினா கேட்கின்றனர். அத்தகைய வினாவே அவர்களை அறியாதார் என்று அறிமுகப்படுத்துகிறது.

அறியாமை அகல, அறிவு பெறப் பல முயற்சிகள் தேவை. முதல் முயற்சி சிந்தித்தல். இன்று, சிந்தனைப் பழக்கம் பல்ருக்கு இல்லை. இன்று பலருடைய மூளை சத்திரம் போலத்தானிருக்கிறது. அதாவது, வீடு என்றால் அங்கேயே சிலர் வாழ்வர். சத்திரம் என்றால் வருவோரையும் போவோரையுமே பார்க்கலாம். அதுபோல், இன்று பலர் நூல்களைப் படிப்பது, மூளையில் ஏற்றிக்கொள்வது, திரும்ப ஒப்புவிப்பது என்ற பணிகளையே செய்வர்; சிந்திப்பதே இல்லை! சிந்திக்கின்ற மனிதன், வாழ்க்கையில் விபத்துக்களுக்கு ஆளாக மாட்டான். அவனுடைய அறிவு, நிலையானபடி முறையில் வளர்ந்து வரும்.

சிந்தனையைத் தொடர்ந்து கற்றல், அடுத்து அறிவு பெறும் முயற்சி. கற்பது என்பது உயிரின் இன்றியமையாத கடமை. கற்கும் முயற்சிக்குத் தானே கண்கள் தரப்பெற்றன. கற்றலையடுத்து வரும் முயற்சி, கேட்டல். கேட்டது, உயிரின் அறிவாக்கத்திற்கு ஒரு சிறந்த முயற்சி. எளிய முயற்சியும் கூட ஆனால், யாரிடம் கேட்கவேண்டுமோ, அவரிடம் கேட்காது போனால் அறிவு நலத்திற்குப் பதில் அறியாமையும் குழப்பமும்கூட மிகலாம். சுவைபார்த்து உண்பதைப் போலச் சுவை பார்த்துக் கேட்கவேண்டும் என்பது வள்ளுவர் கருத்து. கற்றலும் கேட்டலும், சாதாரணமானவர்கள் பணியல்ல. மாணவர்கள் கடமை மட்டுமல்ல. பெரியவர்களும் செய்ய வேண்டிய கடமை என்பதனைத் திருஞானசம்பந்தர், “கற்றல் கேட்டலுடையார் பெரியார்” என்று பாராட்டுவார். இங்ஙனம் முத்திறத்தாலும் பெறும் அறிவு, ஒரு சிறு கூறேயாம்.

அடுத்து, அறிவைப் பெருக்கி வளர்த்துக்கொள்ளும் நெறி, பெற்ற அந்தச் சிறு கூறாகிய அறிவை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுதலாகும். சிந்தனை, அறிவைப் பெறும் வாயிலே தவிர சிந்தனையே அறிவன்று. கல்வி, அறிவைப் பெறும் வாயிலே தவிர, கல்வியே அறிவன்று. இம் மூன்றினாலும் பெற்ற செய்தியை - கருத்தை அறிவாக்கி உயிர்க்குத் தரவல்லது வாழும் முறையேயாம். அறிவியற் கூடத்துச் சோதனைகளில் விஞ்ஞான அறிவு கிடைப்பதைப் போல வாழ்க்கைச் சோதனைகளில் அறிவு கிடைக்கிறது. சோதனைக்கு ஆட்படவும், வாழ்க்கையைச் சோதனைக்கு ஆளாக்கவும் திறமை தேவை. கோழை, ஒரு பொழுதும் அறிவுடையவனாக முடியாது. இங்ஙனம், வாழ்க்கை அனுபவத்தின் மூலம், அறிவு முழுமை நலம் பெறுதற்குரிய தகுதியை எய்துகிறது. ஆனாலும் முழுமை அடைந்து விடுவதில்லை. அறிவு நலம் முழுமையடைய அல்லது முழுமை அடைந்தது என்பதை அறிந்துகொள்ளத் துணை செய்வது இறைவழிபாடேயாம். காரணம், ஒரு முழுமை, மற்றொரு முழுமையை நாடுதல் - கவர்ச்சிக்கப்படுதல் - ஒன்றோடொன்று கலத்தல் உலகியலின் நியதி; இயற்கை. இறைவன் முழுநிறை அறிவினன்; வாலறிவன். ஆதலால், அறிவு நலம் பெற்ற உயிர், மேலும் முழுமை நலம் எய்த, வழிபாடு துணை நிற்கிறது. மேலும், தெளிவாகச் சொன்னால் இந்த நிலை எய்திய உயிர்கள் செய்யும் வழிபாடே வழிபாடு. அறிவின் வாசனையே இல்லாத உயிர்கள், இன்று இறைவனை வழிபடுவதில்லை; தம் ஆவல்களையே வழிபடுகின்றன. இதனையே, வழிபாடென்று கருதி அறியாதவர்கள் நாத்திகம் பேசுகின்றனர்.

ஞான நிலையில் ஞானிகள் தொழுவதே வழிபாடு. இங்ஙனம் உலகியலறிந்து, அருளியல் உணர்ந்து, ஈசன் திறம் நினைந்து வழிபடாதார் எவ்வளவு கற்றென்ன? எவ்வளவு கேட்டென்ன? அவர்கள் எவ்வளவுதான் தெளிவாக விரிவுரைகள் செய்தாலென்ன? அவையெல்லாம் மீண்டும் மீண்டும் சேற்றிற்குள் இழுத்து அமிழ்த்தும் செயல் முறையேயாம். அவர்களுடைய அறிவையும் தெளிவையும் மதித்து ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருஞான சம்பந்தர் எடுத்துக் கூறுகின்றார். பூம்புகார்ச் சாய்க்காட்டில் எழுந்தருளியுள்ள ஈசனையே தெய்வம் என்று தெளிந்து வழிபடுவாரே வழிபடுபவர். அவர்களே கற்றல் கேட்டலுடைய பெரியார். அங்ஙனம் வழிபடத் தெரியாதவர்களின் தெளிவு, தெளிவன்று.

வையநீ ரேற்றானு மலருறையு நான்முகனும்
ஐயன்மா ரிருவர்க்கு மளப்பரிதா லவன்பெருமை
தையலார் பாட்டோவாச் சாய்க்காட்டெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறாமே.

- திருஞானசம்பந்தர்