குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/அழுதால் பெறலாம்
நாம் தவறு செய்ய விரும்பாது போனாலும் சார்பால் அல்லது சூழ்நிலையால் தவறுசெய்யும்படி நேரிட்டு விடுகின்றது. அதுமட்டுமின்றி நாம் குறையுடையவர்களே! அதனாலேயும் பொய்யும்-பொய்வழிப் பட்ட செயல்களும் நடமாடுவதுண்டு. இவை தவிர்க்க முடியாதவை என்று சொன்னால்கூடத் தவறில்லை. ஏனெனில் சிவமுத்தி நிலையிலும் கூட மலத்தின் ஆற்றல் செயற்படுமெனச் சைவ நூல் கூறுகின்றன. அதற்கு “வாசனாமலத்” தாக்குதல் என்பர் அறிஞர்கள். ஆதலால் தான் தவறுதல் மனித இயற்கை என்பர் அறிஞர்கள், ஆனால் இயல்பிலே நிகழும் பொய் நிகழ்ச்சிகளுக்கும், வேண்டுமென்றே செய்யும் பொய்மைகளுக்கும், நிறைய வேற்றுமை உண்டு. முன்னையதற்கு மன்னிப்பு உண்டு; பின்னையதற்கு மன்னிப்பு இல்லை. பொய்யைச் சொன்னவரை-அதனோடு தொடர்புடைய தவறான செயல்களைச் செய்தவர்களை இறைவன் மன்னிப்பான் என்பது உண்மை. ஆனால் எப்பொழுது மன்னிப்புக் கிடைக்கும். பாவமன்னிப்புக்கு நம்முடைய சமயம் சொல்லும் முறையே சிறந்தது. குறிப்பிட்ட சில சடங்குகளின் மூலம் பாபத்தைக் கழித்துக் கொள்ளலாம் என்று கூறுவது தமிழ் வழக்கல்ல, பிற புல வழக்கு, கிறித்தவ நெறியில்... முன்னால் பாபமன்னிப்புமுறை இருந்து வந்தது. அதாவது, போப், பாபம் செய்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்து பாபத்தை மாற்றிவந்தார்.
காலப்போக்கில் போப் பாப மன்னிப்புச் சீட்டு விற்கத் தொடங்கினார். உடன், மார்டின் லூதர் பாப மன்னிப்புச் சீட்டு முறையை எதிர்த்தார். இந்த வரலாறு இந்த நாட்டில் எல்லாருக்கும் தெரியும். சில சடங்குகளைச் செய்வதின் மூலமும் பாபத்தைக் கழித்துவிடலாம் என்பது வடமொழி வழக்கு. ஆனால் சைவத்தமிழ் வழக்கு முற்றிலும் மாறுபட்டது. அதுமட்டுமின்றி அறிவிற்கும் -- அனுபவத்திற்கும் ஏற்றது சைவத் தமிழ் வழக்கேயாகும்.
மாணிக்கவாசகர் அழுதவர்; அழச்சொன்னவர் அவர் தம் பாடல் மூலம் நம்மையெல்லாம் அழவைப்பவர். “மனம் கரைந்து மலம் கெடுக்கும் வாசகம்” என்று மனோன்மணீயம் கூறுகிறது. நாம் செய்தவற்றை நாமே நினைந்து-வருந்தி அழுவதின் மூலம் மன்னிப்புப் பெற முடியும். அங்ஙனம் அழுவதினால் நெஞ்சு பக்குவப்படுகிறது. அதனால் மீண்டும் தவறு செய்யும் பண்பு கால் கொள்வதில்லை, இதனை,
“யானே பொய்யென் நெஞ்சும்
பொய்யென் அன்பும் பொய்
ஆனால் வினையோன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே யருளாய் அடியேன்
உன்னைவந் துறுமா றே”
என்ற திருவாசகத்தின் மூலம் உணரமுடிகிறது.
நாள்தோறும் உடலில் சேரும் அழுக்கை, குளித்து நீக்கித் தூய்மைப்படுத்திக் கொள்வது போலவும் - நாள் தோறும் உடையில் சேரும் அழுக்கை, துவைத்து நீக்கித் தூய்மைப் படுத்திக் கொள்வது போலவும் நாள்தோறும் உள்ளத்தெழும் பொய்மையை இறைவனை நோக்கி அழுவதின் மூலம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அழுகை இதயத்தின் ஆழத்திலிருந்து வர வேண்டும், அழுகை பிழைதிருத்தும்; பிழையிலிருந்து தவிர்க்கும்; பிறவியைத் தடுக்கும்; ஆரா இன்பத்தை அளிக்கும்.