குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/தாயுமான சுவாமிகள்



30


தாயுமான சுவாமிகள்


தமிழகம் வரலாற்றுப் புகழ் பெற்றது. தமிழக வரலாற்றைக் காலம்தோறும் அறிஞர்கள், சித்தர்கள் தோன்றி வளர்ந்து வந்துள்ளனர். தமிழ், வளர்ந்த மொழி. தமிழ் இனிமையும் எளிமையும் நிறைந்த மொழி. தமிழ் இலக்கிய இலக்கண வளம் கொழிக்கும் மொழி. தமிழ் ஒரு தத்துவமொழி. மெய்ப்பொருள் கண்டுணரவும் செம்பொருளைக் காணவும் துணை செய்யும் மொழி. தமிழ், ஞானத்தமிழ். தமிழ், மானுடம் பேசிய மொழி. தமிழ், மானுடம் வளர்த்த மொழி. வெள்ளத்தைக் கடந்து வளர்ந்தது தமிழ். நெருப்பினை வெற்றி கண்டமொழி தமிழ். ஆரியம் கதவைச் சாத்தும். தமிழ் கதவைத் திறக்கும். தமிழோடிசை கேட்கும் இச்சையால் நாளும் காசு கொடுத்துக் கடவுளும் கேட்ட மொழி-கன்னல் தமிழ். தேரோடும் திருவாரூர் நெடுவீதியில் இறைவன் நடந்தது நற்றமிழ் கேட்டின்புறத்தானே! வேதங்கள் ‘ஐயா!’ என்று தேடிய திருவடிகள் பரவையார் வீட்டுப் படியில் தோய்ந்தது சுந்தரரின் செந்தமிழ் கேட்டு இன்புறத்தானே! வையை யாற்றங்கரையில் பிட்டுக்கு மண் சுமந்து மொத்துண்டு புண் சுமந்தது பண்சுமந்த பாடல் பரிசு பெறத்தானே! இங்ஙனம் தமிழின் பெருமை அளப்பரியது. அந்நியரையும் “தமிழ் மாணவர்” ஆக்கிய பெருமை தமிழுக்கு உண்டு.

தமிழகம் புகழ் பெற்று விளங்கிய நாடு. தமிழ் வளம் கெழுமிய மொழி. தமிழினம் சிந்தையில் சிறந்து விளங்கிய இனம். தமிழ் நாட்டின் பெருமை, தமிழினத்தின் பெருமை மெய்ப்பொருள் சார்பு. தத்துவ நூல்கள் பலப்பல தலைமுறை தோறும் வந்து கொண்டிருந்தன.

தமிழ் நாட்டில் காவிரிப்புனல் சூழ்ந்த நாடு வரலாற்றில் இடம் பெற்ற நாடு அல்ல. வரலாற்றை எழுதிய நாடு. காவிரியைக் கங்கையில் புனிதமாய காவிரி என்பார் சேக்கிழார். காவிரிக் கரையில்தான் விண்ணளந்து காட்டி வினைமறைக்கும் திருக்கோயில்கள் எண்ணற்றவை இன்றும் உள்ளன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் போற்றிப் புகழ்ந்த திருத்தலங்கள் நின்று புகழ்சேர்க்கும் நாடு காவிரிப் புனல் நாடு. அன்னை காவிரியே தன் இரு கரைகளிலும் உள்ள திருக்கோயில்களிலும் எழுந்தருளியுள்ள இறைவனுக்குப் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்து கொண்டே செல்லும் நாடு, காவிரி நாடு அறுபான் மூன்று நாயன்மார்களில் பலர் வாழ்ந்த நாடு. சோழநாடு திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்த புண்ணிய பூமி. காவிரி பாய்ந்து வளமூட்டும் பூமி. தமிழர் சமயம் இன்னதெனத் துணிந்து இலக்கணம் வகுத்த மெய்கண்டார் திருவவதாரம் செய்த தலமும் காவிரி நாட்டைச் சார்ந்ததேயாம். தமிழின் பின் சென்ற அரங்கன் உறையும் பதியும் சோழ நாடேயாம். தமிழின் நாட்டில் சோழநாடு வளம் கொழிக்கும் நாடு. வண்மை செழித்து வளர்ந்த நாடு. ஞானம் கொழித்த - கொழிக்கும் திருநாடு. யோகத்திலிருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்த திருமூலர் தவம் செய்த நாடு. ஏன்? சிவபிரான் தமது அலுவலகத்தையே இந்த மண்ணில் மாற்றியமைத்துக் கொண்ட தலம் - திருவையாறு, காவிரிப்புனல் பாயும் நாட்டில்தான் இருக்கிறது. கம்பன் இராமகாதை இயற்றி அரங்கேற்றிப் புகழ் கொண்டதும், இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திற்குக் களம் அமைத்துத் தந்ததும் காவிரி வளம் கொழிக்கும் சோழ நாடே. தமிழகம் சிறப்புடையது. காவிரிப்புனலால் வளம் கொழிக்கும் சோழநாடு புகழ் பெற்றது. சிவநெறியும் செந்தமிழும் வளர்த்த-வளர்த்துக் கொண்டிருக்கும் நாடு, சோழநாடு. தமிழர்கள் கடவுள் நம்பிக்கையுடையவர்கள். தமிழர்கள் கடவுளைப் பயப்படக் கூடிய பொருளாக முன்னும் கண்டதில்லை. இனிமேலும் காணமாட்டார்கள். தமிழர் வாழ்வில் கடவுள் தாய்; தந்தை; ஆசிரியன்; தோழன். கடவுள், வாழ்த்துப் பொருள் மட்டு மல்ல; வாழ்வுப் பொருள். கடவுள் அழைத்துச் செல்பவன் அல்ல. ஆற்றல் மிக்க அன்பால் அழைத்தால் வருபவன். எங்கே? எங்கே? என்று தேடி வருபவன். உண்கின்ற சோறாகவும், தின்கின்ற வெற்றிபாக்காகவும் இருந்தருள் செய்பவன். செந்தமிழ் நாட்டில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பலப்பல.

தமிழர் கடவுளை அம்மையப்பராகவும் அம்மையாகவும் வழிபட்டு வந்துள்ளனர். “தாயிற் சிறந்த தாயவுடையவன்” என்றும் “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” என்றும் சிவபெருமான் தாயினும் நல்லானாக வந்தருளும் பாங்கினை அறிக; உணர்க.

சிவன், தாயாக அருள் செய்வான் என்பதற்கு ஓங்கி உயர்ந்து நிற்கும் சான்று, திருச்சிராப்பள்ளி தாயுமானார் திருக்கோயில். ஒருகாலத்தில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரிக்கு அப்பால் உள்ள சிற்றூரில் ஒரு பெண்ணுக்குப் பேறு காலம். மகப்பேறு எளிதில் அமைய, தாயை எதிர் நோக்குகிறாள். தாயும் மருந்து முதலியன வாங்கிக் கொண்டு மகள் வீட்டுக்குப் பயணமானாள். ஆனால் காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம் தாயின் பயணத்தைத் தடுத்து விட்டது. தாயுள்ளம் தவித்தது. தாய், சிராப்பள்ளி மேவிய சிவனைத் தொழுதாள்; வேண்டினாள்; மகளுக்கு உதவி செய்ய சிராப்பள்ளி மேவிய சிவனும் சடுதியில் தாயெனச் சென்று மகப்பேற்றிற்கு உதவி செய்தனன். அன்று முதல் திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளியுள்ள இறைவனுக்குத் தாயுமானவர் என்ற பெயர் நின்று விளங்குவதாயிற்று. திருச்சிராப்பள்ளியில் தாயுமானவர் பெயரில் மகப்பேறு மருத்துவமனை அமைப்பது சிறந்த அறம். மகளிரைப் பொறுத்தவரையில் மகப்பேறு மரணவாயிலிலிருந்து தப்புவது போன்றது. ஆயினும் எந்த ஒரு பெண்ணும் மகப்பேற்றை - தாயாக ஆவதை மறுப்பதில்லை. ஏன்? ஒருவர் மானுட வடிவம் பெறத் துணையாய் அமைவது தாய்மைதானே! இயற்கையாக அமைந்த அறம் இது. மேலும் தாய்மைக்குத் துணை செய்யாத காமம் - இன்பம் விலங்கின் தன்மையது. தாய்மைக்குத் துணை செய்யும் காதலின்பமே இன்பம். தாயுமான ஈசனின் தண்ணருள் போற்றுதும்! போற்றுதும்!

சிவானுபூதிச் செல்வராக விளங்கிய தாயுமானவர் திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் பிறந்தவர். சைவ வேளாண் மரபில் கேடிலியப்ப பிள்ளைக்கு ஆண் மகவு பிறந்தது. திருச்சிராப்பள்ளியில் பிறந்தது. பெற்றோர்கள் தாயுமானவன் என்று பெயரிட்டனர். தாயுமானவர் முறையாகத் தமிழும் வடமொழியும் பயின்றார். தேவாரத் திருமுறைகள், திருவாசகம் முதலியவற்றை ஓதுவார். அந்நூல் வழி திருவருள் பேற்றினை உணர்ந்தார்.

தந்தையார் காலமாக, தந்தையார் பார்த்த அரசுப்பணி வழி வழி தாயுமானவருக்கும் கிடைத்தது. ஆனால், திருவருள் நாட்டமே தாயுமானவரை ஆட்கொண்டு ஆட்டிப் படைத்தது. சாரமாமுனிவரைக் காணும் பேறு கிடைக்கிறது. சாரமாமுனிவர் யோக ஞான முறைகளைக் கற்றுத் தந்தார்; உணர்த்தினார். சாரமாமுனிவர் உணர்த்திய நெறி, சிவஞான சித்தி நெறி. சிவஞான சித்தியாரில் எட்டாவது நூற்பாவில் நாற்பதாவது பாடலைக் கொண்டு சிவஞானத்தை உணர்த்தினார் என்பது மரபுவழி கிடைக்கும் செய்தி. “சித்தியில் ஓர் விருத்தப் பாதி போதுமே” என்ற சொல் வழக்கும் உண்டு. தாயுமானார் நாளும் ஞானநெறியில் வளர்ந்து வந்தார். பழுத்த துறவுமன நிலையையும் பெற்று வந்தார். நாடாண்ட அரசியின் காமத்திற்கும் உடன்பட்டாரில்லை. அரசுப் பணியிலிருந்து விலகி, திருத்தல யாத்திரை செய்யலானார். விராலி மலையில் சித்தர்களுடன் தங்கினார். ஆனாலும் சித்து விளையாட்டுக்களில் தாயுமானாருக்கு ஈடுபாடு வரவில்லை.

தாயுமானவருக்குத் திருமணம் நடைபெறுகிறது. தந்தையுமாகிறார். ஆனால், மனைவி சில ஆண்டுகளிலேயே இறந்து விடுகிறார். மனைவியைத் தொடர்ந்து தாயும் கால மாகிறார். இந்தச் சூழ்நிலையில் மீண்டும் கடுந்துறவினை மேற்கொண்டு கோவணத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். திருச்சிராப்பள்ளிக்கு வந்து மௌன குரு மடத்தில தம் குருவுடன் தங்குகிறார். பின் 1662-ம் ஆண்டில் இராமநாதபுரம் சென்று பரிபூரணம் அடைகின்றார்.

தாயுமானவர் பல்வகையாப்புக்களில் நிறையப் பாடியுள்ளார். தாயுமானவர் பாடல்களில் அளவிறந்த வடமொழிச் சொற்கள் பயிலுகின்றன. ஆயினும் செந்தமிழ்ச் சுவை குன்றி விடவில்லை. தாயுமானவர் வாக்குப்படியே மொழிக்கு மொழி தித்திப்பாக அமைந்தவை தாயுமானவர் பாடல்கள். பக்திச் சுவையும் ஞான வேட்கையும் ததும்பும் இயல்பின தாயுமானவரின் பாடல்கள். தாயுமானவர் பாடல்களை நாள்தோறும் ஓதினால் பொறிகள் அடங்கும்; புலன்களின் சேட்டை குறையும். ஏன்? மனமே கூட அடங்கும்.

தாயுமானவர் துறவி; துறவினையும் கடந்த துறவி. தாயுமானவருக்கு பக்தி உண்டு. ஆனால் பக்தி நெறியையும் கடந்த ஞானநெறியில் நின்றவர் தாயுமானவர். தாயுமானவர் ஞானி.

“மெய்ஞ்ஞானத் தாணுவினோடு அத்துவிதம்
சாரும் நாள் எந்நாளோ?”

என்ற வரி தாயுமானவரின் ஞானவேட்கையைப் புலப்படுத்தும். தாயுமானவர் சிவஞான சித்தி நெறி பயின்றவர். ஆதலால் சித்தாந்த மரபுகளைத் தழுவியனவாகப் பாடல்கள் அமைந்துள்ளன.

சித்தாந்தம் என்றும் உள்பொருள் மூன்று என்ற கொள்கையுடையது. அவையாவன: கடவுள், உயிர், உயிரை இயல்பாகப் பற்றிய ஆணவம். இவை மூன்றும் என்றும் உள்ளவை. சிவத்திற்குத் தோற்றமும் இல்லை; அழிவும் இல்லை. பழைய மதங்களில் சங்கரரின் மாயா வாதம் மட்டும் “நானே கடவுள்” என்று கூறும். அங்ஙனமாயின் உயிர்க்குள்ள குற்றங்குறைகளுக்கு யார் பொறுப்பேற்பது? இந்தக் கருத்து அறிவியல் உலகில் நிற்காது. அதனால்தான் விளம்பரத்தால் தூக்கி நிறுத்த முயல்கின்றனர். தத்துவச் சிந்தனையாளர் மத்தியில் எடுபடாது; விலை போகாது.

தாயுமானவர் சித்தாந்த மரபு நெறியில் “என்று நீ அன்று நான் உன்னடியன் அல்லவோ!” என்று அருளிச் செய்துள்ள பாங்கினை அறிக. சைவசித்தாந்த சமயநெறியின் உயிரைப் பற்றிய சிறந்த கோட்பாடாவது உயிர். சார்ந்ததன் வண்ணமாதல். உயிர், ஆணவத்தைச் சார்ந்த நிலையில் ஆணவம் நிற்கும். சிவத்தைச் சார்ந்திருக்கும் பொழு சிவமாக விளங்கும்.

“அறியாமைச் சாரின் அதுவாய் அறியும்
நெறியான போது அது வாய் நிற்கும்”

என்பார். ஆணவம் உயிரின் அறிவியல்பை மறைப்பதால் ஆணவத்தை அறியாமை என்று கூறும் மரபுண்டு. உயிர்கள் பிறப்பும் இறப்பும் இல்லாதவை. உயிர்கள் அறிவித்தால் அறியும் இயல்பின. உயிர்கள் பலப்பல என்ற சிவநெறிக் கொள்கைகள் தாயுமானவர் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

ஆணவத்துடன் இரண்டறக் கலந்து கிடந்த உயிரை இறைவனின் தண்ணருள் மாயை, கன்மங்களைக் கூட்டிப் பிறப்பை நல்குகிறது. மாயையும் கன்மமும் கெடுக்கும் மலங்களல்ல. ஆற்றுப்படுத்தும் மலங்கள். சித்தாந்த மரபுவழி முதலில் ஆன்மா, தன்னைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதன்பின்தான் கடவுளை அறிதல் இயலும். இருளும் ஒளியும் ஓரிடத்தன. ஆனால், ஒளிமேவிய நிலையில் இருள் நீங்கும். உயிர், சிவமாய அறிவுச் சார்ந்து விடின் அறியாமை அகலும். அறியாமை தலைகாட்டாது. காரிட்ட ஆணவக் கருவறையிலிருந்து ஞான உலகிற்கு உயிரைக் கொண்டு வரத் திருவுள்ளம் கொண்டு கருவிகள் - பொறி, புலன்களுடன் கூடிய உடலினைத் தந்து பிறப்பில் ஈடுபடுத்துகின்றான் இறைவன். உயிர்க்கு வழங்கப்பெறும் பிறப்பு, மருத்துவம் செய்தல் போலவேயாம். இறைவன் உயர்க்குயிராய் நின்று ஆண்டருள் செய்கின்றான். இறைவன் உணர்த்தும் பொழுது உயிர் உணர்கிறது. ஆனாலும் உயிரை, அறிவுப் பொருள் என்று சொல்லும் வழக்கும் இருக்கிறது. இதனைத் தாயுமானவர்,

“நீ யுணர்த்த நான் உணரும் நேசத் தாலோ
அறிவென்றே எனக்கு ஓர் நாமம் இட்டது”

என்று அருளிச் செய்து விளக்குகின்றார். உயிர் நிலையில் கடவுளை அறிதலுக்குரிய உபாயத்தைத் தாயுமானார் எடுத்துக்கூறி விளக்குகின்றார்.

“தன்னை அறிந்து அருளே தாரகமாய் நிற்பதுவே
உன்னை அறிதலுக்கு உபாயம் பராபரமே”

என்பது தாயுமானார் வாக்கு உயிர் சிவத்தைச் சார்ந்தாலே இன்பம் மற்றையது எதுவும் உயிர்க்கு இன்பம் தாரா.

தன்னை யறிந்தால் தலைவன் மேல் பற்றலது
பின்னையொரு பற்றும் உண்டோ பேசாய் பராபரமே!