குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/தாய்போல் கருணையன்


18


தாய்போல் கருணையன்


இறைவன் காண்பதற்கு அரியவன்; கடவுள் காணப்படாத பொருளா! இல்லை, இல்லை! கடவுளைக் காண முடியும். கடவுள் அளவுகளால் அளந்தறியப் படாதவன்.

“நின்னளந்தறிதல் மன்னுயிர்க்கு அருமை” என்று திருவாசகம் பேசும். அவன் ‘ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்’ பிறவா யாக்கைப் பெரியோன்; மனம் வாக்குகளுக்கு எட்டாதவன்! ஆயினும் நம்முடைய மனத்தில் எழுந்தருளுகின்றவன்!

அண்டங்களாகப் பரந்திருக்கும் பொருள், நமது உள்ளத்திற்குள் ஒடுங்கி இருந்தருள் செய்யும் கருணையைப் பட்டினத்தடிகள் வியந்து பாடுகின்றார். “அளவினில் இறந்த பெருமையை, ஆயினும், எனதுளம் அகலாதொடுங்கி நின்றுனையை” என்று பாடுகின்றார்.

திருவள்ளுவரும் “மலர்மிசை ஏகினான்” என்றார். இதற்குப் பரிமேலழகர், “அவரவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் ஏகினான் என்றார்” என்றெழுதும் உரை நினைந்து இன்புறற்பாலது. திருவாசகமும் “என்றன் உடலிடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே” என்று கூறகிறது.

அப்பரடிகள் “நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டான்” என்று அருளிச் செய்துள்ளார். இறைவன் மிக விரும்புவது கற்கோயிலை யன்று. மனக்கோயிலையே! கற்கோயில் எழுந்தருளியது மனக்கோயிலில் புக வாயில்கள் காணவே!

அதனாலன்றோ, பல்லவ மன்னன் கட்டிய கற் கோயிலில் எழுந்தருளுதலைவிட பூசலார் எழுப்பிய மனக்கோயிலிற் புகுவதற்கு விரைந்தார்.

இறைவன் உயிர்களுக்கு அருள் வழங்குவதில் முன்னிற் பான். அந்த வகையில் கடவுள் ஓர் நாயகன். அவனுக்கென்று ஒரு வடிவம் இல்லை. ஏன்? அவன் உலகே வடிவமானவன்.

அப்பரடிகள் “எல்லா உலகமும் ஆனாய்” என்றார். நமது பட்டினத்தடிகளும் “மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும், வையகம் முழுதும் நின் வடிவம் எனப்படும்” என்றார். ஆதலால் உயிர்கள் உற்றறிவனவெல்லாம் அவன் அறிவான்!

இறைவன் ஞானியரிடத்தில் - அடியார்களிடத்தில் விளங்கியருளுகின்றான். அல்லாதாரிடத்தில் விளக்கமுறுவதில்லை. ஏன்? ஆணவ இருள்வழி மயக்கில் வெளிப்படுவதில்லை. அன்பும் தவமும் பெருகப் பெருக இறைவன் வெளிப்படுவன்; விளங்கித் தோன்றுவன்; அறிந்தும் உணர்ந்தும் அனுபவித்தும் ஆனந்திக்கலாம். இறைவன் எய்ப்பினில் வைப்பு.

இறைவன் உயிர்களை அதனதன் பக்குவநிலைக்கேற்ப ஆட்கொள்கின்றான். ஆட்கொள்ளும் பொதுத் தன்மையில் வேறுபாடில்லை. முறைகளிலேயே வேறுபாடு. அவன், போகியாக இருந்தும் ஆட்கொள்கின்றான். அவன் யோகியாக இருந்தும் ஆட்கொள்கிறான். துறவியாக இருந்தும் ஆட்கொள்கின்றான். தாயுமாகித் தண்ணருள் செய்கின்றான் தோழனாகத் துணை நிற்கின்றான்.

ஆலமர் செல்வனாக, அருட் குருவாக, துறவியாக நின்றும் அருள் வழங்குகின்றான் என்பது கொள்கை. அடிகள் இறைவனை ஐம்பொறிகளால் தொட்டு அனுபவிக்க முடியாததால் “நுகரா நுகர்ச்சியை” என்று பாடுகின்றார். ஆனால் இறைவன் அறிவால் அனுபவிக்கப்படும் பொருள் என்பது தத்துவம் இதனை,

“மாசில் வீணையும் மாலை மதியமும்
விசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே”

என்பது அப்பரடிகள் அருள்வாக்கு.

இந்த இன்பங்கள் பொறிகளால் நுகரத்தக்கனவேயாம். ஆனாலும் புலன்களின் அறிவு அமையாதாயின் பொறிகள் துய்த்தற்கியலா! மாசில்லாத வீணையின் இசையைச் செவிகள் உடையார் கேட்கலாம். ஆனாலும் இன்புறுதல் இயலாது. இசைக்கலை அறிந்தாலே நுகர்ந்து அனுபவித்து மகிழலாம். மாலை மதியத்தைக் கண்ணுடையார் அனைவரும் காணலாம். ஆனால் களித்து மகிழ அறிவு தேவை. தென்றலைத் தேகமுடையார் அனைவரும் உணர்ந்து மகிழலாம்; உற்று மகிழ இயலாது. அதற்கு உற்றுணரும் அறிவு தேவை.

ஆதலால், புலன்களின்றிப் பொறிகளுக்குப் பொருள் இல்லை; அனுபவம் இல்லை; பயனில்லை! இறைவன் பேரின்பக் கடல். நுகரா நுகர்ச்சி! அவனைச் சிந்திப்பார். நெஞ்சத்தினின்றும் அவன் அகலான். இதனைப் பட்டினத்தார் “அகறா அகற்சியை” என்பார்.

மாணிக்க வாசகர் “இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” என்பார். இறைவன் திருவுள்ளத்தில் எண்ணிய அளவிலேயே உலகைப் படைத்தருளுகின்றான்; காத்தருளுகின்றான். தீமையை அழித்து நன்மையைக் காத்தருளுகின்றான். இறைவன், இயல்புகள் அனைத்தும் நினைந்து சொற்களால் வாழ்த்துதல் இயலாத ஒன்று.

இறைவனது உயர்ந்த குணங்களை எண்ணித் தொழப் பயன்படும் சொற்கள் ஆற்றலுடையன அல்ல. அச்சொற்கள் இறைவனை அணைய இயலாதன. ஆயினும் நீ, தாயிற் சிறந்த தயா உடையவன். தாய் கடமையைக் கருதிக் குழந்தையைப் பிரிந்து சென்றிருக்கிறாள். குழந்தை அழுகிறது! குழந்தையின் அழுகுரல் தாய்க்குக் கேட்காது!

ஆயினும் குழந்தையின் பசியை அவளே தெரிந்து, அவள் தானே வந்து ஊட்டி வாழ்விப்பதைப் போல பல பிறவிகளிற் பிறந்து இளைத்து, நின் அருளினின்றும் விலகி நிற்கும் எனக்கு நின் கருணையைப் பாலித்து ஆட் கொள்ளுதல் கடனன்றோ! என்று பட்டினத்தார் பாடும் பாடல் நெஞ்சைத் தொடத் தக்கது.

”ஆவலித் தழுதலில் அகன்ற தம்மனை
கேவலம் சேய்மையிற் கேளா ளாயினும்
பிறித்தற் கரிய பெற்றிய தாகிக்
குறைவினில் ஆர்த்தும் குழவியது இயல்பினை
அறியாது எண்ணில் ஊழிப் பிறவியின்
மயங்கிக் கண்ணிலர் கண்டுபெற் றாங்கே
தாய்தலைப் படநின் தாள்இணை வணக்கம்”

என்பது பாடல். “பிறவி தோறும் ஆசையினால் கட்டப்பட்ட கட்டுகளை நீ யன்றோ அவிழ்த்துவிட வேண்டும்! நான் எவ்விதம் அவிழ்ப்பேன்? என்று இரந்து கேட்கிறார் பட்டினத்தார். நாமும் கேட்போம்!