குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/மாணிக்கவாசகர் கண்ட காட்சி

16

மாணிக்கவாசகர் கண்ட காட்சி


பிறவாமை வேண்டுவது உயர்ந்தோர் மரபு. ஆயினும் நல்லன கருதிப் பிறவியை வேண்டுவோரும் உண்டு. அப்பரடிகள் பிறவியை வேண்டுகின்றார். ஏன்? ஆடல் வல்லான் திருக்கோலத்தைக் கண்டு கண்டு களித்திருக்கப் பிறவியை விரும்பினார். “மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.” என்பது அப்பர் வாக்கு. பிறவி நீக்கம் எப்போது வரும்? ஆசைகளும் அவாக்களும் உள்ளவரை பிறவி நீங்காது. பொறிகள், புலன்கள் துய்ப்பனவெல்லாம் துய்த்து அவ்வழி அவா நீங்கப் பெற்றனவாய் விளங்க வேண்டும். ஆன்மா புலன்கள் வழி, பொறிகள் வழி கடவுட் காட்சியை அனுபவிக்கும் தகுதி பெற வேண்டும். இத்தகுதி எளிதில் அமைவதில்லை. உடல் ஒரு துய்ப்புச் சாதனமே! துய்ப்பினை மறுத்துத் துறவு மேற்கொண்டாலும் துறவு முழு நிலையில் கைகூடுமா? துறவு, விருப்பு-வெறுப்புக்களினின்று விடுதலை பெற்றிருக்கிறதா, இல்லையே! துறவு, மதத்துடன், மடங்களுடன், ஆசிரமங்களுடன் பிணைந்துவிட்டதால் துறவு உணர்வு பூர்வமாக இல்லையே! துறவிகளுக்குள் நடந்த சண்டை, சச்சரவுகளே இல்லையா? நிறைய உண்டு! ஆதலால், துறவு என்பது புலனடக்கம் மட்டும் அல்ல; திருமூலர் கூறியாங்குப் புலன்களை மடை மாற்றலேயாகும். பொறிகள், புலன்கள், உயிர்க்குலத்திற்கு நல்லன செய்தல், அவ்வுயிர்கள் மகிழ்வுழித் தாமும் மகிழ்தல் என்பதே வாழ்வு நெறி. என்று உயிர் தனக்கு வரும் துன்பங்களைச் சற்றும் தயங்காமல் விரும்பி ஏற்று அனுபவிக்குமோ அன்றே துறவு கால் கொள்கிறது. என்று, ஆன்மா பிறர் நலத்திற்காகவே முயன்று உழைக்கும் நோன்பை எடுத்துக் கொள்கிறதோ அன்று துறவு வாழ்க்கை வருகிறது. இத்தகு துறவு இன்று எங்கிருக்கிறது? இன்று, துறவு சாதிகளைக் கூடத் துறந்தபாடில்லை. மாணிக்கவாசகர் பொன்வேண்டாம் என்றார்! ஏன்? புகழையே வேண்டாம் என்றார்; மாணிக்கவாசகர் பழுதிலாத் துறவு பூண்டவர். பழுத்த மனத்து அடியார்; ஆதலால், மாணிக்கவாசகருக்கு இந்த மண்ணிலேயே கடவுட்காட்சி கிடைத்தது.”

“கண்ணால் யானும் கண்டேன் காண்க!” என்று தாம் கண்ட கடவுட் காட்சியை உறுதிப்படுத்துகின்றார்.

மாணிக்கவாசகர் தாம் பிறவாநிலையை அடைந்தது ‘திண்ணந்தான்’ என்று உறுதிப்படுத்துகின்றார்: ஆம்: தொடர்ந்து சங்கிலித் தொடர்போல வந்தது பிறவி; வெட்டப் பெற்றாலும் பூமிக்குள் புதைந்து கிடக்கும் கிழங்கிலிருந்து அடுத்தும் தாவரம் முளைப்பதைப் போல அவாவை அகற்றினாலும் அகந்தையை அடக்கினாலும் அவை தலை காட்டும் இயல்பின. தினையின் அளவு அவா இருந்தாலும் அந்த அவா வெள்ளமாக வளரும் இயல்பினது. அகந்தையும் அப்படித்தான்! பெருங்காயம் இருந்த பாண்டம் போல அகந்தையின் தாக்கம் இருக்கும்! அகந்தைக்குப் பெயர் “மானம்”. சூரபன்மன் முருகவேளினை உணர்ந்து கொண்டு விட்டான்; தொழுதிட நினைக்கிறான்; ஆனால், தடுத்தது மானம் ஒன்றே! மாணிக்கவாசகர் இந்த நிலைகளை எல்லாம் கடந்து விட்டார்! வேண்டிலேன் பொன்! வேண்டிலேன் புகழ்! “ஏசப்பட்டேன் நின்னடியாரில்” என்பது திருவாசகம். இங்ஙனம் பாழ்த்த பிறவியாக அமைந்ததை எளிதில் கடக்க அருள் செய்த இறைவனின் திருவருளை எந்தச் சொற்களால் போற்றுவது? புகழ்வது! எங்ஙனம் சிந்திப்பது என்று எண்ணுகின்றார்.

ஆம்! மாணிக்கவாசகர் இறைவன் ஆட்கொண்டருளியமையை வியந்து வியந்து போற்றுகின்றார்! ஏன்? பிறவியிலிருந்து விடுதலை பெற வழி தெரியாமல் தவித்திருக்கிறார் மாணிக்கவாசகர். தனியாக நின்று தவித்திருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஆசிரியராக எழுந்தருளி நெறிகளை அறிவித்து வழிகாட்டியது பெறுததற்கரிய பேறு அல்லவா? இன்றைய மனித சமுதாயம் ‘உதவி’ என்றால் பொருள் கொடுப்பதையே கருதுகிறார்கள். உலகத்தின் எல்லா உதவிகளிலும் சிறந்தது வழிகாட்டும் உதவியேயாகும். வழியறியாது தவித்த மாணிக்கவாசகர் அவர் அருளிய திருவாசக வழி இன்று மக்களுக்கு வழிகாட்டுகிறார்.

மாணிக்கவாசகர் கடவுட்காட்சியைக் கண்டு அனுபவித்தவர்.

மனிதக் காட்சிக்கும் கடவுட் காட்சிக்கும் நிறைய வேறுபாடு உண்டு! மனிதன் தொலைவில் வரும்பொழுது அவனுடைய உருவம் தெரியும். ஆம்! எத்தனை அடி உயரம்? எவ்வளவு கணம்? தொலைவில் மனிதக் காட்சியின் உருவம்! அடுத்து அண்மையில் நகர்ந்து வரும்பொழுது அவன் கையின் நீளம் என்ன? மூக்கு எப்படி இருக்கிறது? அடுத்து அண்மித்து, வந்து நிற்கும் பொழுதுதான் அந்த ஆள் கருப்பா? சிவப்பா? என்பது தெரியவரும். இது மனிதக் காட்சி!

கடவுட் காட்சியில் நெடுந்தொலைவில் வரும்பொழுது வண்ணம்-நிறம் தெரியும். அதனாலேயே “சோதியே” என்று எரிகின்ற சுடரில் ஒளியைப் போற்றி நினைந்து பாராட்டுகின்றார். “செந்தாமரைக் காடு அனைய மேனி” என்கிறார் மாணிக்கவாசகர். “சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே!” என்கிறார். சோதி-அகண்ட ஒளி, புவிக்கோளத்தை விளக்கிக் காட்டுவது சுடர்! மனைகளை, வீடுகளை விளக்கிக் காட்டுவது ஒளிவிளக்கு! ஆன்மாவை விளக்கம் செய்து, ஆன்ம தரிசனமும் அவ்வழி கடவுள் தரிசனமும் தந்தருளும் பாங்குடையது. ஆதலால் கடவுட் காட்சியில் தூரத்துக் காட்சி வண்ணக் காட்சிதான்! ஓங்கி உயர்ந்த சோதி! இந்தத் தத்துவங்களை விளக்குவது தான் மலைமேல் விளக்கு! அண்ணாமலை தீபம்!

மலை, நெடுந்தொலைவில் உள்ளது; உயரமானது. ஆங்கு ஒரு சோதி அழைக்கிறது; வழிகாட்டுகிறது. தமிழ் நாட்டில் கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தன்று ‘சொக்கப்பனை’ கொளுத்தும் பழக்கம் உண்டு. இன்றும் நடந்து வருகிறது. இதுவும் இறைவன் ஓங்கி உயர்ந்த சோதியாக விளங்குகின்றான். (அறிவாலும் பொருளாலும் தேடி காண முடியாதது அன்பின் வயப்படும் பொருள் அது) காட்சியளிக்கின்றான் என்ற தத்துவமேயாகும்! அடுத்து, அண்மித்து வரும்பொழுது கடவுட் காட்சியில் உருவம் தெரிகிறது! ஆம்! குனித்த புருவம் உடையவன்; கோவைப் பழம் ஒத்த செவ்வாயினன்; அவன் உதடுகளில் புன்சிரிப்பு; விரித்த சடையினன்; நனைந்த சடையன்; திருவெண்ணீற்றில் துதைந்த திருமேனி உடையவன். ஒற்றைக்கால் தூக்கி ஆடுகின்றான்! அவன் உருவில் பாதி பெண். இவையெல்லாம் உருவக்காட்சி; இந்த நிலைகளையும் கடந்து இறைவன் அண்ணித்து நெருங்கி நிற்கும்பொழுது புலப்படுவது உறுப்புக்காட்சி! அதாவது திருவடிக் காட்சி! இறைவனை அண்மித்து நிற்கும் பொழுது புலப்படுபவை திருவடிகள்; திருவடிகளைப் பற்றிய நாயன்மார்களும் ஆழ்வார்களும் அனுபவித்து அனுபவித்துப் பாடுவார்கள்; திருக்குறளும் கடவுள் வாழ்த்தில் திருவடிகளையே பேசியிருப்பது அறிதலுக்குரியது மட்டுமல்ல அறிவுக்கு விருந்தும் கூட! திருவடிகள் தாள்கள் என்றும் அழைக்கப் பெறும். தாங்கும் தன்மையுடையன தாள்கள்; பல்லுயிரும் பல உலகும் படைத்தளித்து வாழ்விக்கும் இறைவனின் தாள்கள்! தாங்கும் தன்மையுடைய தாள்கள்! தாள்கள் முயற்சியின் சின்னம்! உழைப்பின் சின்னம்! “நோன்றாய்” என்று புறநானூறு கூறும்! “தாளாண்மை” என்று திருக்குறள் கூறும். திருவடிப் பேறு என்றே சமயத் தத்துவங்கள் கூறும்! திருவடிஞானம் என்னும் தத்துவம்.

திருவடிக் காட்சி, திருவடிஞானம், எளிதில் கிடைக்காது. முதலில் ஆன்மா இடையீடின்றி சிவத்தை எண்ணுதல் வேண்டும்; சிந்தித்தல் வேண்டும். தவமும் கூட விகார உணர்வுகளுடன் செய்யின் திருவடிக் காட்சி கிடைக்காது; ஏன்? தேவர்களே இன்னமும் கடவுளைக் காணவில்லை; காண இயலவில்லை; தேவர்கள் கெட்டிக்காரர்கள்; கடவுளைக் கண்டதாகவும் கடவுளைப் பற்றிப் பலபடவும் கூறுகின்றனர். ஒருவர் செம்மேனியின், பிறிதொருவர் வெண்ணீரணிந்த திருமேனியராதலால் வெண்மை நிற முடையவர் என்று கூறுகின்றார். ஒருவர் இல்லை ‘அநேகன்’ என்று கூறுகின்றார். ஏன்? இவையனைத்தும் பொய்: உண்மையும் கூட! ஏன்? இறைவன் பக்தர்கள் நினைக்கின்ற வடிவில் அவர்களுடைய உள்ளத்தில் எழுந்தருளும் தன்மையன்; ஆதலால், எவ்வெவர் கூற்றிலும் உண்மை உண்டு; இறைவன் அணுவாக இருக்கிறான்; இல்லை, சென்று சென்று தேய்ந்து விடும் அணுவாய் இருக்கிறான்; நுண்ணியோன் காண்க;

இந்தப் பாடலில் இறைவன் சுட்டி அறியப்படுபவன் அல்லன்! இறைவனை எழுத்தும் சொல்லும் காட்டாது! இறைவன் ஞானத்தின் திருவுரு! இறைவனை ஞானத்தாலேயே அனுபவிக்க முடியும்! ஆன்மா, ஞானமயமாகும் பொழுதே கடவுட்காட்சி நிகழும். உடம்பினால், மனத்தினால் செய்யும் பணிகள் முதிர்ந்து அறிவுத் தொழிலே தலைமை தாங்கும் நிலையில் ஞானம் முகிழ்க்கிறது; எதுபோல் எனில், அரும்பு, மலர், காய், கனி போல! அறிவு - அறியாமைக் கலப்பற்ற அறிவு. அறிவு, சிவத்தை அறியும் அறிவு வளர, வளர அறியாமை-ஆணவமலத்தின் ஆற்றல் ஒடுங்கும். அப்போது இறைவன் ஞானத்தை அருளுவான். ஞானமே சிவத்தை அனுபவிக்கும் பேற்றினையும் தரும்; இன்ப அன்பினையும் நல்கும்;

இன்று பத்திமை மேவியுள்ள அளவுக்கு, ஞானத்தில் ஆர்வம் இல்லை; வேட்கை இல்லை! ஞானம் பெறுதலுக்குரிய சிவபூசை முதலியன பண்ணும் ஆர்வம் அகப்பூசை செய்யும் மரபு மறந்தேபோய் விட்டது. பூசலார் அகப் பூசையில் தோய்ந்தவர் இல்லை! ஞான நூல்களை கேட்கும் ஆர்வம் இல்லை. ஞான நூல்களை ஓதும் ஆர்வம் இல்லை. இதனாலேயே சமய ஆசாரங்கள், சடங்குகள் பெருகி வளர்ந்து கூட ஆன்மாவின் தரம் உயரவில்லை; ஆணவம் வேறு வேறு வடிவத்தில் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இன்று எங்கு நோக்கினும் ஆணவத்தின் போக்கே காணப்படுகிறது. இறைவன் சந்நிதியிலேயேகூட ஆணவம் ஆட்சி செய்கிறது. சமயசீலம் அருகி வருகிறது. தாழ்வு மனப்பான்மை யாரிடமும் இல்லை! விருப்பும், வெறுப்பும் மனித உலகத்தை ஆட்டிப் படைக்கின்றன.

இந்தத் துன்பத்திலிருந்து மாந்தர் உலகம் மீள உள்ள ஒரே வழி, ஆன்மாவின் ஆணவத்தைக் கரைத்துக் கரைத்துக் கெடுக்கும் திருவாசகத்தை ஓதுதல்; திருவாசகமே நமக்கு ஞானாசிரியன்! திருவாசகம் நமக்குத் துணை! திருவாசகம் நம்மை வளர்க்கும்! திருவாசகம் ஞானம் நல்கும்; ஏன்? திருவாசகத்தின் வழி மாணிக்கவாசகர் கண்ட காட்சியை அனுபவித்தால் இறைவன் திருவடிகளைப் பற்றலாம்!