குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/வள்ளலார் நெறி II

32


வள்ளலார் நெறி II


தமிழகம் தெய்வமணம் கமழும் திருநாடு. இறைமணம் கமழும் இன்பத் திருநாடு. விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் திருக்கோயில்கள் அழகு செய்யும் திருநாடு. ஞானியர் பலர் தோன்றிய ஞானத் திருநாடு. தமிழக வரலாறு அரசியலால் பெற்றிருக்கும் ஏற்றத்தை விட ஞானத்தால் பெற்ற விளக்கம் அதிகம்.

தமிழகத்தின் சங்க காலத்து பக்குடுக்கை நன்கணியார் முதலாக வள்ளலார் காலம் வரை இடையீடின்றி ஒரு ஞானப் பாரம்பரியம் தொடர்ந்து வந்திருக்கிறது.

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்ற அப் பண்பிலாளன்
இன்னா தம்ம இவ்வுலகம்
இனிய காண்கிதன் இயல்புணர்ந்த தோரே

- புறம் 194

என்று பாடிய பக்குடுக்கை நன்கணியார் காலந் தொட்டு ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று

கு.இ.VIII.29. அழுத வள்ளலார் வரை ஓர் அருள் ஒழுக்கப் பாரம்பரியம் வளர்ந்து வந்திருக்கிறது. வள்ளற் பெருமான், தமக்கு முன்பே தோன்றிய நால்வர் பெருமக்களை நினைந்து நினைந்து நெஞ்சுருகப் பாடுகின்றார். தம்மை அந்த வழிவழி மரபில் வந்த திருக்கூட்டத்தைச் சேர்ந்தவரென்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகின்றார்.

“வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட
மரபினில்யா னொருவன் அன்றோ?”

என்பது அவர் திருப்பாடல். எனவே, வள்ளற் பெருமான் வழிவழி மரபில் தோன்றி, தமது மரபுக்குப் புதுமையும் பொதுமையும் சேர்த்தவர்.

நாம் வாழும் இந்தத் தலைமுறை வரலாற்றுச் சிறப்புடையது. ஏன்? பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் தோன்றி ஒரு சமய மறுபலர்ச்சி இயக்கத்திற்குக் கால்கோள் செய்தார். தமிழக வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டில், வள்ளற் பெருமான் நமது சமயத்தில்-சமூகத்தில் தேங்கிக் கிடந்த உணர்வுகளுக்கு ஒளியூட்டி எழுச்சி தந்தார்; ஏற்றம் தந்தார். வள்ளலார் சீர்திருத்தம் செய்ய விரும்பினார். அவர் விரும்பிய சீர்திருத்தம் முறையானது. இன்று, பலர் சீர்திருத்தம் பேசுகின்றனர்; செய்ய முனைகின்றனர். ஆனால், அவர்களுக்குச் சீர்திருத்தத்திற்குரிய அடிப்படைக் களங்களில் நம்பிக்கை இல்லை-அல்லது ஊசலாட்டம் இருக்கிறது. நம்பிக்கையில்லாதவர்கள் அல்லது ஊசலாட்டம் உள்ளவர்கள் சீர்திருத்தம் செய்யப் புகுவது சமய வழிப்பட்ட சமுதாயத்திற்குப் பேரிழப்பைத் தரும். பெர்னாட்ஷா, “களை பிடுங்க இறங்குபவர்கள் களை, பயிர் இவற்றின் வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டு இறங்க வேண்டும்” என்றார். அங்ஙனம் தெரியாது இறங்குபவர்கள் பயிரைக் களை என்று பிடுங்கினாலும் பிடுங்கி விடுவர். வள்ளற் பெருமான் காலங்கடந்த பழைமையிற் காலூன்றி நின்றவர். ஆயினும், வள்ளற் பெருமான் பழைமைக்கு இளமையும், எழிலும் தந்து, புதுமை நெறி போற்றினார். வள்ளற் பெருமானின் புதுமை, வறட்சித் தன்மையுடையதன்று; வளமான புதுமை; அன்பினை, அருளினை அளித்திடும் புதுமை. மனித குலத்திற்குப் பொதுமை நெறி காட்டிய புதுமை.

வள்ளலார், சீர்திருத்தம் செய்ய முனைந்தவரல்ல. ஆனால், அவருடைய அனுபவத்தில் சீர்திருத்தம் முகிழ்த்தது. அறிதோறும் அறியாமை தோன்றுதலும் அறிவு வளர்தலும் இயற்கையாதல் போல அனுபவ வளர்ச்சி, படிப்படியாகக் குறைகளைக் கடந்த நிறைக்கு அழைத்துச் செல்லும். அறிவில் முகிழ்க்கும் புதுமையை விட அனுபவத்தில் முகிழ்க்கும் புதுமை நிறையுடையது; பயனுடையது. வள்ளற் பெருமான் படிப்படியாகத் தம்முடைய அனுபவ அறிவு முதிர்ச்சியடைந்தது என்பதை எடுத்துக் கூறியுள்ளார். வள்ளற் பெருமான் தம்முடைய அனுபவ நெறியைப் பின்வருமாறு உணர்த்துகின்றார்;

“சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் எல்லாம்
அருட்பெருஞ் சோதியென் றறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீயறிந்தது நான்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே!”

இந்து சமூகத்தில் உள்ள சாதி வேற்றுமை மிகக் கொடுமையானது. இந்தச் சாதி வேற்றுமையை அகற்ற திருவள்ளுவர், அப்பர், உடையவர், இராமாநுசர், மாணிக்கவாசகர், சேக்கிழார் போன்ற சான்றோர்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கின்றனர். அந்த வரிசையில் வள்ளலார் தோன்றி, சாதி வேற்றுமைகளைக் கடுமையாகச் சாடினார். பொதுவாக, இன்றைய சமய நிறுவனங்களைச் சாதிமுறை ஆட்கொண்டதன் மூலம், உய்திபெற வேண்டிய மனிதனுக்கு உய்தியை வழங்கும் வழிபாட்டைத் திருக்கோயில்களில் தாமே நேரடியாகச் செய்து கொள்ளும் உரிமையில்லாதிருக்கிறது. செயல், சிந்தனையை வெளிப்படுத்துவது. செயல், சிந்தனையை வளர்ப்பது. செயல், சிந்தனையை நிலை பேறாக்குவது.

சமய உலகின் வழிபாட்டு நிறுவனங்களாகிய திருக்கோயில்களில் சாதாரண, சராசரி மனிதனுக்குத் தானே வழிபாடு செய்து கொள்ளும் உரிமை மறுக்கப் பட்டிருக்கிறது. வள்ளல் இராமலிங்கர் இது நியாயமற்றது என்பதைத் தமிழகத் திருக்கோயில்களில், யானை பூசித்தது; அணில் பூசித்தது; சிலந்தி பூசித்தது: எறும்பு பூசித்தது என்றெல்லாம் கூறுபவர்கள் மனிதனுக்குப் பூசனை உரிமையை ஏன் மறுக்க வேண்டும் என்று வினா எழுப்புகிறார்.

“...............போற்றுகின்ற
ஆடுங் கரியும் அணிலும் குரங்கும் அன்பு
தேடும் சிலம்பியொடு சிற்றெறும்பும்-நீடுகின்ற
பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றால்பூசை
ஓம்புவதற்கு யார்தான் உவலாதார்?..........”

என்பது வள்ளற் பெருமான் கேள்வி. கி.மு. 42 இல் கண்ணப்பர் காலத்தில் கேட்ட கேள்வியையே 19ஆம் நூற்றாண்டில் வள்ளற் பெருமானும் கேட்கிறார். ஆனால், கண்ணப்பர் காலத்தில் சிவகோசாரியார் எழுப்பிய வினாவுக்குச் சிவபெருமானே விடை தந்தருளினார். ஆனால், சாதி, குல, கோத்திர வேற்றுமைக்கு ஆளாகிய மனித குலம், அந்த விடையை மீண்டும் அழித்து விட்டது. வள்ளலார்க்கு உண்மையான நினைவு நமது இந்து சமூகத்தில் நிலவும் சாதிகளை அகற்றி ஒரு குலம் அமைப்பதேயாகும்.

வள்ளற் பெருமான் சமூக நெறிகளைக் கூடப் படி முறையிற் கருதினாரே தவிர, அவைகளையும் கடந்த பொதுமை உலகம் தோன்றுதலையே விரும்பினார். வள்ளற் பெருமான் சாதிகளை வெறுத்ததைப் போலவே, சமய நெறிகளையும், மதங்களையும்கூட வெறுத்தார். காரணம் அவை மனித உலகத்தில் இன்ப அன்பினை வளர்த்து அமைதியை வழங்குவதற்குப் பதிலாகப் பகையை வளர்த்துக் கலகம் விளைவித்தன. மனித உலக வரலாற்றில் நிகழ்ந்த போர்களைக் கணக்கெடுத்தால் அவைகளில் மிகுதியானவை சமய-மதச் சண்டைகளாகவே இருக்கும். சமயத் தத்துவங்கள், மதக் கொள்கைகள் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப் பெற்றன. பிரச்சார முறை தோன்றும் பொழுது நிறுவனங்கள் தோன்றும். நிறுவனங்கள் தோன்றியவுடன் தத்துவங்கள்-கொள்கைகள் பின் தள்ளப்பட்டு நிறுவனம் முன்னிலைப் படுத்தப் பெறும். நிறுவனம் தோன்றியவுடனேயே அதன் நிழலாக உடைமைகளும் அதிகாரமும் தோன்றும். தத்துவங்களும், கொள்கைகளும் நெறி திறம்பும் திருப்பு முனை, நிறுவனத் தோற்றமேயாகும். நிறுவனம் என்னும் பொழுது விதிமுறைகளாலும் சட்டங்களாலும் கட்டுக் கோப்புகளாலும் காவல்களாலும் கெடுபிடிகளுக்காளாகும் அமைப்பினையே நாம் குறிப்பிடுகின்றோம். ஒரு காலத்தில் திருவானைக்கா, திருக்காளத்தி ஆகிய திருக்கோயில்களில் விலங்குகளும், வேடர்களும் சென்று வழிபாடு செய்திருக்கின்றனர். அந்தச் சூழ்நிலையில் அவை நிறுவனங்களல்ல. அவை நிறுவனங்களானவுடன் பூசனை செய்ய ஒரு சாரார் உரிமை ஆதிக்கம் பெறுகின்றனர்; கதவு கால் கொள்கிறது; பூட்டும் சாவியும் இடம் பெறுகின்றன. முடிவாக, இன்று நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் பெறுகிறது. இவை நிறுவனத்தின் அடையாளங்கள்.

அதுபோலவேதான் தத்துவப் பிரச்சாரம், யாருக்காக செய்யப்படுகிறதோ அவர்களாலேயே பாதுகாக்கப் பெற வேண்டும். அவர்களிடமிருந்தே தத்துவப் பிரச்சார கர்த்தாக்களின் அன்றாட வாழ்க்கை நடைபெற வேண்டும். இதுவே பழைய முறை. இந்த அடிப்படையிலேயே ‘பிஷை’ என்ற வட சொல்லும், ‘பிச்சை’ என்ற தமிழ்ச் சொல்லும் பிறந்தன. சற்று நாகரிகம் தோன்றிய பிறகு, ‘மகேசுவர பூசை’ என்ற சொல் தோன்றிற்று. ஆனால், இன்று இவைகள் பிரச்சார கர்த்தாக்களால் நிறுவனமாகிப் பெற்ற உடைமைகள் மூலம் செய்யப்படுகின்றன. உயிர்க்குல மக்கள் மூலம் செய்யப் பெறுவதில்லை. ஆக, நிறுவனத் தோற்றத்திற்குப் பிறகு மனித குல ஒருமைப்பாடு, உய்தி பெறுதல் ஆகியவை ‘முயற்கொம்பு’ ஆகிவிட்டன. ஏன்? ஒரே தத்துவத்தைச் சார்ந்த நிறுவனங்களுக்கிடையே கூடப் ‘பெருமை’, ‘புகழ்’ப் போட்டிகள் கால் கொண்டுவிட்டன. இந்த நெறி முறை தவறிய நிகழ்வுகளின் விளைவாக மதச் சண்டைகள் மலியத் தொடங்கின. அனுபவப் பொருளாகிய கடவுளைத் தொழுவதற்குப் பதில் ‘யாருடைய கடவுள் பெரியவர்?’ என்பது போன்ற வெறுக்கத் தக்க விவகாரங்கள் பெருகின. இந்தக் கலகத்தில் கடவுளையே மறந்துவிட்டனர். வள்ளற் பெருமான் நினைந்து நெஞ்சுருகி இவைகளைப் “பிள்ளை விளையாட்டு” என்று உணர்ச்சி கொப்பளிக்க விமர்சனம் செய்கிறார். வள்ளற் பெருமான்.

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளை யாட்டே”

என்றும்,

“குலத்திலே சமயக் குழியிலே நரகக்
குழியிலே விழுந்து வீண் பொழுது
நிலத்திலே போக்கி.......”

என்றும்,

“சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி”

என்றும்,

“மதித்த சமய மத வழக்கெல்லாம் மாய்ந்தது”

என்றும், உரைத்திடும் உரைகள் உணர்வுக்குரியன உய்தியைக் காட்டும் தகையன.

கடவுளைத் தொழுதல்-அனுபவித்தல் என்பது வேறு. கடவுளைப் பற்றிக் கற்ற அளவிலும் கேட்ட அளவிலும் அவற்றை ஒலிக்குப்பையாக்கி வாதப் பிரதிவாதங்கள் செய்து ‘சழக்காடுவது’ என்பது வேறு. முன்னையது ஞான வாழ்க்கை; பின்னையது அவ வாழ்க்கை. இன்று பெருகி வளர்ந்திருப்பது பின்னையதே தவிர, முன்னையது அல்ல. மண்ணால் அமைத்த சாலைகள் என்பதை வாழும் ஊர்களை இணைத்து வெற்றி பெற்றுவிட்டன. ஆனால், மனித உயிர்களை-நெஞ்சங்களை இணைத்து ஒருமைப்பாடுடையதாக்கக் கண்ட உயர்சமய நெறிகள் தமது நோக்கில் வெற்றி பெறவில்லை. அதற்குக் காரணம் கொள்கை குறையுடையதன்று. கொள்கைக்காகத் தோன்றிய நிறுவனங்கள் கொள்கையை மறைத்து மூடிவிட்டு ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டு விட்டதேயாகும். வள்ளற் பெருமான் சமய நெறிகளைக் கடந்த உயிர்க்குலப் பொதுமை நெறி நோக்கியே அவாவுகின்றார்.

“எவ்வுயிரும் பொதுவெனக் கண்டிங்கு
ஆதரித் திடுதல் வேண்டும்...”

என்று ஆணையிடுகின்றார். வள்ளற் பெருமான் ஆன்மநேய ஒருமைப்பாடு கண்டவர். வள்ளற் பெருமான்,

“எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி யுள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடமெனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ.”

என்று ஐயத்திற்கிடமின்றித் தமது கொள்கைக்கு விளக்கம் தருகின்றார்.

வள்ளற் பெருமான் மனித உலகத்தைப் பேதப்படுத்தி - பிரிவு படுத்தியிருந்த சாதி, சமய வேறுபாட்டுச் சுவர்களை இடித்துத் தகர்த்தார். வள்ளற் பெருமான் உயிர்க்குல ஒருமைப்பாடு கண்டார். வள்ளற் பெருமான் கண்ட பொதுமை நெறி கடவுள் நம்பிக்கையில் தோன்றிய பொதுமை நெறி. கடவுள் நம்பிக்கையில்லாத பொதுமை நெறி நம்மை ஆட்கொள்ளாதிருக்க வேண்டுமானால் நாம் வள்ளலாரின் பொதுமை நெறியை வாழ்க்கையின் சீலமாக்க வேண்டும். வள்ளற் பெருமான் வேற்றுமை வெப்பம் தணிக்கப் பெய்த கருணை மழை; இருளிடை இடறித் தடுமாறி அலைந்த மனித குலத்திற்கு அருளுடைச் சுடரைத் தந்த ஞானப் பேரொளி. வள்ளற் பெருமான் கண்ட பொதுமை நெறி வையகத்தில் மலர்க!